உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆலமரம்

விக்கிமூலம் இலிருந்து

ஆலமரம் மிகப்பெரிய மரம். 100 அடி உயரம் வளரும். கிளைகளிலிருந்து விழுதுகள் என்னும் ஒட்டு வேர்கள் மிகுதியாக உண்டாகி, கீழ்நோக்கி வளர்ந்து, நிலத்துள் புகுந்து, சாதாரண வேர்களைப்போலப் பிரிந்து படர்ந்து, நீர் முதலிய உணவுப் பொருள்களை உறிஞ்சிப் பருத்துத் தூண்போலக் கிளையைத் தாங்கி நிற்கும். மேலும் மேலும் பருத்து அடிமரம் போலவே ஆகிவிடும். ஆலங்கிளைகள் விழுதுகளின் உதவியால் நெடுந்தூரம் கிடைமட்டமாக வளர்ந்துகொண்டே செல்லும். மரம் இவ்வாறு பலதிசைகளிலும் பரந்து அகன்று ஆயிரக்கால் மண்டபம்போலக் காணும்.

கல்கத்தா தாவரவியல் தோட்டத்திலுள்ள ஆலமரம் 1782-ல் ஓர் ஈச்சமரத்தின் முடியில் விழுந்த வித்திலிருந்து முளைத்தது. அதன் மிக நீண்ட விட்டம் கிழக்குமேற்கில் 300 அடி, தெற்கு வடக்கில் 288 அடி, அடிமரத்தின் சுற்றளவு 51 அடி. முடியின் சுற்றளவு 938 அடி,உயரம் 85 அடி. நிலத்தில் வேரூன்றிய விழுதுகள் 464. அது நிற்கும் நிலப்பரப்பு 1½ ஏக்கர். சத்தாரா மாவட்டத்தில் வைசத்கர் கிராமத்தில் ஒரு மரம் கி- மே 442 அடி, தெ-வ 595 அடி, முடியின் சுற்றளவு 1587 அடி. இருந்தது என்றும், ஏழாயிரம் மக்கள் தங்கக்கூடிய ஒரு மரம் நருமதை யாற்றுத் திட்டு ஒன்றில் இருந்ததென்றும், இருபதினாயிரம்

ஆலமரம்
உதவி : பிரமஞான சபை, சென்னை.

மக்களுக்கு நிழல் தரக்கூடிய மரம் ஆந்திராப் பள்ளத் தாக்கில் இருந்தது என்றும் அறியப்படுகின்றன.

ஆலமரம் சாதாரணமாகப் பனை முதலிய வேறு மரங் களின் மேல் விழும் விதைகளிலிருந்து முளைக்கின்றது. கட்டடங்களின் மேலும் முளைத்து, அதனால் அவை இடிந்து விழுந்து பாழாவதையும் காணலாம். இப்படி முளைத்த ஆலங்கன்றின் வேர்கள் ஆதாரமாக இருக்கும் மரத்தைப் பாம்புபோல நெளிந்து சுற்றிக்கொண்டு பூமியை நோக்கி யிறங்கும். முதலில் வேர் நிலத்தில் ஊன்றினவுடன் விரைவில் பெரிதாக வளர்ந்து விடும். அதன் கனம் தாங்காமல் ஆதாரச்செடி பட்டுப் போகும். ஆலமரம் தரையிலிருந்து முளைத்தெழுந்தது போலவே தோன்றும். தொடக்கத்தில் தொற்றுச் செடியாக இருந்து, பிறகு நிலத்தின்மேல் வளரும் இதுபோன்ற தாவரங்கள் அரைத் தொற்றுச் செடிகள் (Hemi-epiphytes) எனப்படும். இளம் பருவத்தி லும் இவைகள் ஒட்டுண்ணிகளல்ல ; சுதந்திரமாக வாழ்பவையே.

ஆலமரம் அத்திச்சாதியைச் சேர்ந்தது. இதில் எந்தப் பாகத்தை முறித்தாலும் வெண்மையான பால் வடி யும். பாலில் ரப்பர் பொருளுண்டு. இலை தனியிலை; மாறி யமைந்தது; இலையடிச் செதில்களுள்ளது. இச்செதில்கள் நுனிக்குருத்தைப் போர்த்துக்கொண்டிருக்கும். விரை வில் உதிர்ந்துவிடும். இலையின் நீளம் 4-8 அங்குலம், அகலம் 2-5 அங்குலம். அலகு அண்டவடிவானது. நரம்பு கைவடிவில் அமைந்திருக்கும்; மேற்பாகம் வழு வழுப்பாகவும் அடிப்பாகம் நுண்மயிர் போர்த்ததாக வும் இருக்கும். தளிர் சிவப்பாக இருக்கும். பூக்கள் நுண்மையானவை. வெளியே தோன்றாமல் குடம் போன்ற மஞ்சரித்தண்டின் உட்சுவரில் ஒட்டியிருக்கும். அத்தி மஞ்சரியாக இருக்கும். ஓர் இலைக்கணுச் சந்துக்கு இரண்டு அத்திமஞ்சரிகள் இருக்கும். ஆண்பூ, பெண் பூ, மலட்டுப்பூ மூன்றும் எண்ணிறந்தவை மஞ் சரியிலிருக்கும். பழம் முதிர்ந்தபோது பவளம்போலச் சிவப்பாகும். பலவகைப் பறவைகளும், வௌவால், அணில், ஆடு, மாடு, பன்றி முதலிய விலங்குகளும் பழத்தைத் தின்னும். மனிதரும் உண்பதுண்டு.

ஆலமரப் போத்துக்களைச் சாலைகளில் நட்டு வளர்ப் பார்கள். பல நூற்றாண்டுகள் நல்ல நிழல் தரும். மரம் திறமான வேலைக்குப் பயன்படாது, விறகும் நன்றாக எரியாது. ஆனால் நீரில் எளிதில் மடிவதில்லை யாதலால் கிணற்றுக்குமேலே சட்டமாக உபயோகமாகிறது. பெட்டி, கதவு, நுகத்தடி, கூடாரக்கால் முதலியன செய்வார்கள். அடிமரத்தைவிட விழுதுகள் பலமாக இருக்கும். இலையைத் தைத்து உண்கலமாக உபயோகிப் பார்கள். இதை ஆடு விரும்பி உண்பதில்லை. யானைக்கு இதைத்தான் தீவனமாகப் போடுகின்றனர். பாலும் பட்டையும் மருந்துக்கு உதவும். விழுது மென்மை யான நாரும் துவர்ப்பான பாலும் உடையதாகையால் பல்லுக்கு உறுதியைத் தரும் குச்சியாகும். நார் சிலவிடங் களில் தீவட்டிச் சூட்டாக உதவுகிறது.

இம்மரத்திற்குப் பல பெயர்களுண்டு. கீழ்நோக்கி வளரும் வேராலான அடிமரமும், மேலே செல்லாமல் சற்றுக் கிடைமட்டமாக வளரும் கிளைகளும் உடைமை யின் நிக்குரோதம் (கீழ்நோக்கி வளர்வது) என்றும், தனிமரமே தோப்புப்போல வளர்வதால் கான்மரம் என்றும், பல நூற்றாண்டுகள் வாழ்வதால் தொன்மரம் என்றும், எண்ணிறந்த பழம் பழுப்பதால் பழுமரமென்றும், பால் உடைமையால் பாலி யென்றும், பூ வெளிக்குத் தோன்றாததால் கோளியென்றும் சொல்லப்படும். இன்னும் புனிதமானதாற் பூதவம், மங்களமானதாற் சிவம், பலவேர்களுள்ளதாற் பகுபதம், குழ்ந்துகவிந்திருப்பதால் வடம் என்றும் பெயர்பெறும். ஆங்கிலத்தில் இதற்குப் பனியன் என்று பெயர். பாரசீக வளை

ஆல்
1.கிளை, 2.ஆலங்கனி (அத்திமஞ்சரி) : உள்ளே பல பூக் களும் கண்ணருகே.ஓர் அத்திப்பூச்சியும் தெரிகின்றன. 3.4. 5,6.ஓர் ஆலங்கனியினுள்ளிருக்கும் தனித் தனிப் பெண் பூக்கள்.

குடாவில் பந்தர் அப்பாஸ் என்னும் துறைமுகத்துக்கு அருகில் வளர்ந்திருந்த ஆலமரத்தினடியில் பனியர் என்னும் சில இந்து வணிகர் கோயில் கட்டி வழிபாடு செய்து வந்தனர் என்றும், அதனால் அந்த மரம் பனியன் மரம் எனப்பட்டதென்றும் இப்பெயருக்குக் காரணம் கூறப்படுகிறது. இதன் விஞ்ஞானப் பெயர் பைகஸ் பெங்கலென்சிஸ் (Ficus bengalensis).

ஆலமரத்தை இந்துக்கள் புனிதமானதென்று கருதி வழிபடுகிறார்கள். இதன் சுள்ளி சமித்துக்களிலொன்று. இதன் வேர்த்துண்டுகளைச் சில சாதியார் காப்பாக அணிகின்றனர். பிரமா இம்மரமானார் என்றும், இதன் இலையில் விஷ்ணு பள்ளிகொண்டிருக்கின்றன ரென்றும், இது ஆண் என்றும், அரசமரம் பெண் என்றும், இம்மரத்தை வெட்டுவது பாவம் என்றும் சொல்வதுண்டு. ஆனி மாதத்துப் பௌர்ணமியன்று இம்மரத்துத்துக்குப் பூசை செய்வதுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆலமரம்&oldid=1457607" இலிருந்து மீள்விக்கப்பட்டது