கலைக்களஞ்சியம்/ஆல்கஹாலும் கைத்தொழிலும்
ஆல்கஹாலும் கைத்தொழிலும்: ரசாயனத் தொழிற்கும் மருந்துத் தொழிற்கும் ஆல்கஹால் ஒரு முக்கியமான மூலப்பொருள் என்பதைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அறிந்தார்கள். ஆல்கஹால் தயாரிப்பிற்கு அடிப்படையான நொதித்தல் என்னும் விளைவின் தன்மையைப் பாஸ்ட்டர் விளக்கினார். பின்பு தொடர்ச்சியாக ஆல்கஹாலைத் தயாரிக்கும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆல்கஹால் தயாரிப்பில் பயனாகும் பாணி (Molasses) சர்க்கரைத் தொழிலில் மலிவாகவும் ஏராளமாகவும் கிடைத்தது; இதிலிருந்து ஆல்கஹாலை மலிவாகத் தயாரிக்க முடிகிறது. பெட்ரோலியம் வாயுக்களிலிருந்து கூடச் செயற்கையில் ஆல்கஹாலைப் பெறும் முறைகள் வழக்கத்திற்கு வந்தன. இம் முறையில் ஏராளமாக ஆல்கஹாலைத் தயாரிக்க முடிகிறது. இக் காரணங்களால் இக்காலத்தில் ஆண்டிற்கு ஆண்டு அதிகமாகத் தேவையாகும் ஆல்கஹாலை வேண்டிய அளவு உற்பத்திசெய்ய முடிகிறது.
நான்கு வகைப் பொருள்களிலிருந்து ஆல்கஹால் பெறப்படுகிறது. 1.பாணி, 2. தானியங்கள், உருளைக் கிழங்கு போன்ற மாப்பொருள்கள், 3. மரம், விவசாயக் கழிவுகள் போன்ற செல்லுலோஸ் உள்ள பொருள்கள், 4. ஹைடிரோகார்பன் வாயுக்கள்.
முதல் மூன்று முறைகளில் ஆல்கஹாலைப் பெறுகையில் நொதித்த திரவத்தில் 6-8% ஆல்கஹால் இருக்கும். இதை வாலைவடித்து 96.4% ஆல்கஹால் உள்ள திரவத்தைப் பெறலாம். இது தொழிலில் திருத்தப்பட்ட சாராயம் (Rectified spirit) என்ற பெயரால் வழங்குகிறது. இத்திரவத்திலுள்ள நீரைப் பூரணமாக நீக்கித் தனி ஆல்கஹால் (Absolute alcohol) என்ற பொருளைப் பெறுகிறார்கள். பிராந்தி, விஸ்கி போன்ற மதுபானங்களைப்போல் ஆல்கஹாலை நீரோடு கலந்து குடிக்கலாம். இவ்வாறு செய்வதைத் தடுக்க ஒரு முறை கையாளப்படுகிறது. அதனுடன் மரநாப்தா (Wood naphtha), பிரிடீன் (Pyridene), நாப்தலீன்(Naptha - lene) போன்ற நச்சுப் பொருள்களையும் சாயங்களையும் கலந்தே தொழில்களுக்கு விற்கிறார்கள். தொழிலில் ஆல்கஹால் எவ்வாறு பயனாகிறது என்பதையொட்டி அதனுடன் சேர்க்கப்படும் பொருளும் அதன் அளவும் வேறுபடும். தனி ஆல்கஹாலைப் பெட்ரோலுடன் கலந்து மோட்டார்களில் பயன்படுத்துகிறார்கள். இதில் ஆல்கஹாலுடன் மண்ணெண்ணெய், பென்சீன், ஈதர், பெட்ரோல் ஆகிய பொருள்களில் ஒன்று கலந்திருக்கும். இந்தியாவில் இதற்கு மண்ணெண்ணெயை உபயோகிக்கிறார்கள். இது சக்தி ஆல்கஹால் (Power alcohol) எனப்படும்.
தொழில்களில் ஆல்கஹால் மிக முக்கியமாகக் கரைப்பானாகப் பயன்படுகிறது. தண்ணீருக்கு அடுத்தபடியாக மிக அதிகமாகப் பயன்படும் கரைப்பான் இதுதான். இதைத் தக்கபடி கலப்படம் செய்தபின் இது பல தொழில்களில் பயன்படுகிறது. ஆல்கஹால் பல பொருள்களைக் கரைக்கும் திறனுள்ளது. ஆகையால் டிங்சர்களையும் ஆல்கலாயிடுகள், பிசின்கள், ஆவியாகும் எண்ணெய்கள் முதலியவற்றின் கரைவுகளையும் பெற இது மிக முக்கியமானது. ஒரு பானமாகப் பயன்படுவதைத் தவிரக் காடி, ஈதர், குளோரோபாரம், சாயங்கள் ஆகிய ரசாயனப் பொருள்களின் தயாரிப்பிற்கு இது முக்கியமான மூலப்பொருளாகும். சுத்தமான ரசாயனப் பொருள்களைத் தயாரிக்கவும், துப்புரவாக்கும் பொருளாகவும் உபயோகப்படுகிறது. பல விஞ்ஞான வேலைகளுக்கு இது தேவை. பொருட்காட்சிச் சாலையிலும் ஆஸ்பத்திரியிலும் பிராணிகளின் உடல்களையும் உறுப்புக்களையும் ஆல்கஹாலில் பாதுகாத்து வைக்கிறார்கள். மெருகெண்ணெய்கள், கறையகற்றிகள், அரக்குச் சாயங்கள், வர்ணங்கள், சவர்க்காரம், அலங்காரப் பொருள்கள், செயற்கைத் தோல், மெழுகு துணி, வெடிமருந்துகள், தீக்குச்சி, சலனப்படங்கள், மை, சாயங்கள், அச்சு வேலை, மின்சார அச்சு, புகையிலை, மயக்க மருந்துகள், நச்சு நீக்கிகள் முதலிய பல பொருள்களின் தயாரிப்பில் ஆல்கஹால் இன்றியமையாதது.
பெட்ரோல் குறைவான இந்தியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் சக்தி ஆல்கஹால் ஏராளமாகப் பயன்படுகிறது. இதைக்கொண்டு மோட்டார் எஞ்சினை ஓட்டலாம். தற்கால எஞ்சின்கள் தாங்கக் கூடியதைவிட இதன் ஆவியை அதிகமாக அழுத்தினால் தான் இதைக்கொண்டு எஞ்சினைத் திறமையாக இயக்க முடியும். இதைக்கொண்டு குளிர்ந்த நிலையில் எஞ்சினை ஓடும்படி தொடக்கிவைக்க முடியாது. ஆகையால் இதைத் தனியே பயன்படுத்தாமல் பென்சால், பெட்ரோல், ஈதர் முதலிய பொருள்களோடு கலந்து பயன்படுத்துகிறார்கள். உலகத்தின் திரவ எரிபொருள் வசதிகளை ஆல்கஹால் அதிகமாக்குகிறது. இதன் அழுத்த விகிதமும், ஆக்டேன் எண்ணும் (Octane Number) பெட்ரோலைவிட அதிகமானதாலும், எஞ்சினில் படியும் கரி இதில் குறைவானதாலும், இதைத் தூய நிலையில் பெற முடிவதாலும் இது பெட்ரோலைவிடச் சிறந்தது. பெட்ரோல் 80 பகுதியும் ஆல்கஹால் 20 பகுதியும் கொண்ட பெட்ரோல்-ஆல்கஹால் கலவையைப் பயன்படுத்துவதால் ஆல்கஹாலைத் தனியே பயனாக்குவதால் நேரும் குறைகள் உண்டாவதில்லை. ஆகையால் இது தற்காலத்தில் எல்லாவகை மோட்டார் எஞ்சின்களிலும் உபயோகப்படுகிறது. இத்தகைய கலவையில் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கவேண்டும். கலவையிலுள்ள பொருள்கள் வெவ்வேறாகப் பிரிந்துவிடக் கூடாது. ஆதலால் இதில் பென்சாலைப்போன்ற பொருள்களைக் கலந்து அவை ஒன்றாக இணைந்திருக்குமாறு செய்கிறார்கள்.
சக்தி ஆல்கஹால் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதைப் பெட்ரோலுடன் கலந்து பயனாக்குவதால் பெட்ரோல் இறக்குமதி குறையும். ஆனால் பெட்ரோலை விட இதற்கு விலை அதிகம். இதனால் இது பெட்ரோலுடன் போட்டியிட முடிவதில்லை. இதனால் சக்தி ஆல்கஹால் தொழில், அரசாங்கத்தின் உதவிபெற்று அதன் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கிறது. பெட்ரோலையும் இதையும் கலந்தே உபயோகிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தும் சட்டம் இந்தியாவில் பல இராச்சியங்களில் உள்ளது. ஈ. என். பா.