கலைக்களஞ்சியம்/ஆல்கால்

விக்கிமூலம் இலிருந்து

ஆல்கால் (Algol) மாறும் நட்சத்திரங்களுள் பிரசித்திபெற்றது. ஐந்துமணி நேரத்தில் ஒளி குறைந்து வந்து, மங்கலாகிப் பின் அடுத்த ஐந்துமணி நேரத்தில் ஒளி பெருகிப் பிரகாசிக்கிறது. இரண்டு நாட்கள் பத்துமணி நேரமான பிறகு மறுபடியும் இதுபோல் நிகழ்கிறது. இது சமாகமமாகும் இரட்டை நட்சத்திரங்களுள் ஒன்று. பெரியது ஒளி குன்றியது. அது மற்றதை ஒரு தடவை சுற்றி முடியும்போது ஒளியுள்ள நட்சத்திரம் மறைந்துவிடுகிறது. இந்நிகழ்ச்சியை வெறுங் கண்ணால் பார்க்கலாம்.

இவ்வாறு விட்டுவிட்டு ஒளி விடுவதால் இதைப் பார்த்தால் கேடு நேரும் என்று எண்ணி, மேனாட்டுப் பண்டை வானசாஸ்திரிகள் இதைப் பூத நட்சத்திரம் (Demon Star) என்று அழைத்தனர். இது 100 ஒளி ஆண்டுத் தொலைவில் உள்ளது. இரண்டு நட்சத்திரங்களின் இடையிலுள்ள தொலைவு 60 இலட்சம் மைல்களாகும். பத்தாம் நூற்றாண்டிலிருந்த ஆல்சூபி என்பவர்-இதைச் சிவந்த நட்சத்திரமாகக் கூறியிருப்பினும், இப்போது வெண்மையாகவே இருக்கிறது.

இந்த மண்டலத்தில் இரண்டு அழகான நட்சத்திரத் திரள்கள் (Star clusters) உள்ளன. வெறுங்கண்ணால் பார்த்தால் ஒளிப்பட்டைகளாகவும், டெலிஸ்கோப் வழியாகப் பார்த்தால் ஒன்று குதிரைலாடம் போலவும், மற்றொன்று இரண்டு முக்கோணங்கள் போலவும் தோன்றும். ஆர். எல். கா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆல்கால்&oldid=1457477" இலிருந்து மீள்விக்கப்பட்டது