உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆல்ஜசிராஸ் மாநாடு

விக்கிமூலம் இலிருந்து

ஆல்ஜசிராஸ் மாநாடு (1906 ஆல்ஜசிராஸ் ஜிப்ரால்ட்டருக்கு அருகிலுள்ள ஒரு ஸ்பானிய ஊர். இங்கு மொராக்கோவின் ஆதிக்கத்தைப் பங்கு போட்டுக்கொள்வதற்கு ஐரோப்பிய நாடுகளின் மாநாடு நடந்தது. இம் மாநாட்டில் பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுகல், ஹாலந்து, பெல்ஜியம், ஸ்வீடன்,அ.ஐ. நாடுகள், மொராக்கோ ஆகியவை கலந்துகொண்டன. பிரான்ஸ் தனக்கு மொராக்கோவில் தனியுரிமை வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கு இங்கிலாந்தின் உதவியை நாடிற்று. அமெரிக்காவும் மறைமுகமாகப் பிரான்ஸை ஆதரித்தது. ஜெர்மனி தனக்கும் மொராக்கோவில் ஆதிக்கம் வேண்டுமென்று விரும்பிற்று மொராக்கோவைச் சுதந்திர நாடாகக் கருதுவதென்றும், அந்நாட்டில் வியாபாரத்தில் ஈடுபட எல்லா நாடுகளுக்கும் சமவுரிமை யுண்டு என்றும், மொராக்கோவின் நிதி நிலைமையை மேற்பார்க்க, டாஞ்சியரில் ஒரு பாங்கு ஏற்படுத்துவதென்றும், அதில் மற்ற நாடுகளைவிடப் பிரான்ஸு அதிக முதல் போடலாம் என்றும், ஒரு சுவிட்ஸர்லாந்து இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேற்பார்வையில் மொராக்கோ போலீஸ் இலாகா வேலை செய்யும் என்றும் ஏற்பட்டது.

இவ்வேற்பாட்டால் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய இரண்டு நாடுகளுக்கும் திருப்தி ஏற்பட்டதாயினும், மொராக்கோ பெயரளவிலேயே சுதந்திர நாடாயிற்று.