உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆளி

விக்கிமூலம் இலிருந்து

ஆளி (Oyster):

ஆளி


வலது ஓட்டை நீக்கியிருக்கிறது.
1. இடது ஓடு
2. கிளிஞ்சிலை உண்டாக்கும் போர்வையின் வலப்புற மடிப்பு
3. ஓடுகளை இறுக மூடும் உள்ளிழு தசை
4. ஆரிக்கிள்
5. வென்ட்ரிக்கிள்
6. நரம்பணுத் திரள்
7. ஓடுகளை இணைக்கும் கீல்
8. இரத்தக் குழாய்
9. சிறுநீரகம்
10. வலச் செவுள்கள்

11. இடச் செவுள்கள்

இது இரண்டு ஓடுகளுள்ள மெல்லுடலி. கரையை யடுத்த ஆழமில்லாத கடற்பிரதேசங்களில் வாழ்வது. அலை மிகுகியாக மோதாமல் நீர் அமைதியாக நின்றிருக்கும் குடாக்களிலும், கயவாய்களிலும் இது நன்றாக வாழ்ந்து பெருகுகிறது. முதிர் நிலையில் ஆளியானது பாறையின் மீதோ அல்லது நீருக்குள் கிடக்கும் வேறு கடினப் பொருளின் மீதோ தனது இடது சிப்பியோட்டினால் மிகவும் உறுதியாக ஒட்டிக்கொண்டு வளர்ந்திருக்கும். இது சத்தான உணவு. ஆதலால் இதைப் பல வெளிநாடுகளில் நிரம்ப வளர்க்கின்றனர். ஆஸ்திரியா (Ostrea) எடுலிஸ் என்பது ஐரோப்பிய ஆளி. ஆஸ்திரியா மதராசென்சிஸ் என்பது இந்தியக் கழியாளி. இது இந்திய ஆறுகளின் முகத்துவாரங்களிலும் கழிகளிலும் வளர்வது.

ஆளி வளர்த்தல்: 19ஆம் நூற்றாண்டின் நடுவில் ஆளிகளை விஞ்ஞான முறைகளின்படி வளர்ப்பதற்குப் பிரான்ஸ் வழிகாட்டிற்று. இக்காலத்தில் கடலையடுத்த எல்லா நாகரிக நாடுகளிலும் ஆளி வளர்த்தல் தொழில் நடந்து வருகிறது. வளர்க்கும் முறை நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. குடாக்களிலும் முகத்துவாரக் கால்வாய்களிலும் காணும் முதிர்ச்சி பெற்ற ஆளிச்சிப்பி பொதுவாக நீரிலுள்ள கட்டையிலோ, கல்லிலோ தன் இடது ஓட்டினால் கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும். பொதுவாக ஆளிகளுள் ஆண் வேறு, பெண் வேறு. ஆனால் சில இனங்களுள் ஒரே ஆளியில் விந்தணு, அண்டவணு இரண்டும் ஒரே காலத்தில் உண்டாவதுமுண்டு. பயன்படும் பருவத்திலுள்ள பெண் ஒன்றிலிருந்து 6 கோடிக்கு மேற்பட்ட அண்டவணுக்கள் வெளிவருகின்றன. இவை ஆளியின் விந்துடன் கலந்து கருவணுக்களாகின்றன. கருவணு வளர்ந்து நீரில் சுதந்திரமாக நீந்திச் செல்லும் லார்வாவாகிறது.

இந்த அளிக்குஞ்சுகள் சுறுசுறுப்பாக நீந்தி, நுண்ணுயிர்களைத் தின்று சற்றுப் பருக்கின்றன. பிறகு நீருக்குள் இருக்கும் சுத்தமான கடினமான பொருள்களின் மீது படிந்து தங்குகின்றன. உருமாறுதலடைந்து, முதிர்ந்து சிப்பி வடிவத்தை அடைகின்றன. நீந்திக் கொண்டிருக்கும் இளமைப் பருவத்தில் இவற்றில் எண்ணிறந்தவை அழிந்துபோகின்றன. இதற்குக் காரணம் பல : சூழ்நிலையில் ஏதாவது இவற்றிற்கு ஒத்துக் கொள்ளாத மாறுதல் ஏற்படலாம். இவற்றைத் தின்று வாழும் பகைகளுக்கு உணவாகலாம். இவை தங்கி யொட்டிக் கொள்வதற்குத் தகுதியான இடம் அகப்படாமற்போனாலும் இவை இறந்துபோம்.

ஆளி வளர்ப்போர் ஆளி லார்வாக்கள் தங்குவதற்காகக் கிளிஞ்சில், ஓடு, மரக்கிளைகள் முதலியவற்றை ஏற்ற காலத்தில் நீருக்குள் இடுவார்கள். பிரான்ஸில் மணலும் சுண்ணாம்பும் கலந்த காரை பூசின கூரையோடுகளை மரச்சட்டங்களால் செய்த அடுக்குக்களில் இட்டு ஆழமில்லாத இடங்களில் வைப்பார்கள். லார்வாக்கள் அவற்றில் படிந்து தங்கி வளரும். ஓரங்குல விட்டம் வளரும் வரைக்கும் விட்டிருந்து பிறகு இந்தச் சிறு சிப்பிகளைப் பெயர்த்தெடுப்பார்கள். சிப்பிகள் ஒட்டியிருக்கும் காரை படைப்படையாக எளிதில் பெயர்ந்து வந்துவிடும். அடுத்த பருவத்திற்கும் அதே ஓடுகளுக்குக் காரை பூசி, அவற்றைத் திரும்பப் பயன்படுத்தலாம். பிறகு சிப்பிகளைக் கால்வைத்த தட்டுக்களில் இட்டுத் தண்ணீரில் மேலும் வளரவிடுவார்கள். நல்ல அளவுக்கு வளர்ந்த பிறகு இன்னும் ஆழமில்லாத இடங்களுக்குக் கொண்டு போய், அங்குக் கடலின் அடித்தரையைக் கெட்டி செய்து, தரையின்மேல் இவற்றைப் பரப்பி வைப்பார்கள். நண்டு, கடல்விண்மீன் முதலிய பகைகள் வராமல் பாதுகாப்பார்கள். இரண்டு ஆண்டான பிறகு இன்னும் வேறு இடங்களுக்கு மாற்றி ஆளிகளைக் கொழுக்கச் செய்வார்கள். இந்த இடங்கள் கடலுக்குச் சம்பந்தப்பட்ட கழிகளாக இருக்கும். இங்குக் கடல்நீர் அலையாமல் அமைதியாக இருக்கும். நுண்ணுயிர்கள் செழிப்பாக வளரும். அவற்றைத் தின்று ஆளி கொழுக்கும். கடைசியாக ஆளிகளைச் சுத்தம்செய்து, சிப்பியுடனேயோ அல்லது சிப்பியை யெடுத்துவிட்டு வெறுஞ் சதையையோ கடைகளுக்கு அனுப்புவார்கள்.

ஆளிக்குஞ்சுகள் படிவதற்குப் பலவிதப் பொருள்களைப் பல தேசங்களில் பயன்படுத்துகின்றனர். பிரிட்டனில் உலர்ந்த ஆளிச் சிப்பிகளைத் தண்ணீருக்குள் சிதறி இறைத்திருப்பார்கள். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் சிப்பிகளையும், ஆஸ்திரேலியாவில் கற்களையும், ஜப்பானில் மூங்கிற் குச்சிகளையும் உபயோகிப்பார்கள். ஆளி வளர்த்தல் சீன தேசத்தில் மிகப் பழைய காலந்தொட்டு நடந்துவந்திருக்கிறது. இத்தாலியில் கி.மு.100 வாக்கில் இதைச் செய்யத் தொடங்கினர். கே. வீ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆளி&oldid=1459043" இலிருந்து மீள்விக்கப்பட்டது