கலைக்களஞ்சியம்/ஆழ்கடல் விலங்குகள்
ஆழ்கடல் விலங்குகள்: கடல் விலங்குகளை அவை வாழும் சூழ்நிலைக்கேற்ப மூன்று வகையாகப் பிரிப்பதுண்டு. அவை ஆழமில்லாக் கரையோர (Littoral) விலங்குகள், கடலின் மேற்பரப்பாகிய விரிகடல் (Pelagic) விலங்குகள், பேராழமான கடலில் உள்ள ஆழ்கடல் (Abyssal) விலங்குகள் என்பவை. எவ்வளவு பாதாளமான கடற்பகுதியிலும் விலங்குயிர்கள் வாழ்கின்றன. ஆழ்கடலிலும் சற்று மேலிடங்களில் உள்ள விலங்குகளின் தொகை மிகுதியாகவும் கீழே குறைவாகவும் இருக்கும். ஆழ்கடலில் மேலெல்லைக்கும் கீழெல்லைக்கும் இடைப்பட்ட ஒரு வலயத்தில்
சூரிய வெளிச்சம் புகும் எல்லையைத் தாண்டின பகுதியில் விலங்குத் தொகை மிகக் குறைந்திருக்கிறதெனத் தெரிகிறது. புரோட்டோசோவா என்னும் ஓரணு விலங்கு முதல் மீன்கள் வரையிலும் உள்ள பல வகை உயிர்கள் அழ்கடலில் வாழ்கின்றன. இங்கு வாழும் இனங்கள் உலகமெங்கும் பரவியிருக்கின்றன. ஏனெனில் ஆழ்கடலின் பௌதிகப் பண்புகள் எங்கும் சற்றேறக் குறைய ஒரே படியாக இருக்கின்றன.
ஆழ்கடல் விலங்குகளில் பொராமினிபெரா (Fora minifera), ரேடியோலேரியா என்னும் புரோட்டோசோவா வகைகளும், சக்கிமுக்கிச் சட்டகமுள்ள கடற்பஞ்சு வகைகளும், சில பவள வகைகளும், கடற்சாமந்திகளும், ஆல்சியோனேரியா என்னும் கொடிப் பவள வகைகளும், கிண்கிணிபோன்ற சில மெடுசாக்களும் இருக்கின்றன. அங்குள்ள செங்களிமண் என்னும் ஒருவகைச் சேற்றில் நாங்கூழ்போன்ற புழுவகைகள் இருக்கின்றன. எக்கைனோடெர்ம் என்னும் முள்தோலித் தொகுதியில் நட்சத்திர மீன், ஒடி நட்சத்திரம், கடல் முள்ளெலி, கடல் வெள்ளரி, இறகு நட்சத்திரம் என்னும் ஐந்து வகுப்பு விலங்குகளும் அங்கு உண்டு. கிரஸ்டேஷியா என்னும் இறால் போன்ற ஓட்டு விலங்குகள் மிகுதியாக வாழ்கின்றன. தங்கள் கூடுகள் செய்வதற்கு அவசியமான சுண்ணாம்பு இல்லாமையினால் மொலஸ்கா என்னும் இப்பி சங்கு போன்ற மெல்லுடல் விலங்குகள் மிகச்சிலவே உண்டு. வினோதமான மாறுதலடைந்த மீன்வகைகள் காணப்படுகின்றன. இவற்றுள் பல குருடு. சிலவற்றின் கண் மிகச் சிறியது. மற்றுஞ் சிலவற்றிற்கு மிகப்பெரிய கண்கள் உண்டு. அங்கு வாழும் விலங்குகளிற் சிலவற்றின் உடலில் மின்மினிக்கு உண்டாவதுபோல் வெளிச்சம் உண்டாகும். அந்தச் சிறு வெளிச்சத்தின் உதவி கொண்டு காண்பதற்கு இந்தப் பெருங்கண்கள் பயன் படுகின்றன. இந்த மீன் முதலிய பிராணிகளில் தொட்டுணர் பொறிகள் நன்றாக வளர்ச்சிபெற்றிருக்கின்றன.
ஆழ்கடற் சூழ்நிலையின் பௌதிக நிலைகளில் ஒன்று அங்குப் பேரிருள் நிறைந்திருப்பது; புகைப்படம் பிடிக்கும் தட்டைக் கடலுக்குள் 250-500 ஆளாழத்தில் (1,500-3,000 அடி)வெளியே காட்டினால் அத்தட்டு ஒரு மாறுபாடும் அடைவதில்லை. அந்தப் பாகம் மிகவும் குளிர்ந்திருக்கிறது; இந்த அழத்திலுள்ள நீர் நல்ல தண்ணீராயிருந்தால் பனிக்கட்டியாக உறைந்துவிடும். ஏனெனில் 150 ஆளாழத்திலேயே (900 அடி) சூரிய வெப்பம் தாக்குவதில்லை யென்று சொல்லலாம். அங்குள்ள அழுத்தம் மிகப்பெரியது. 2,500 ஆளாழத்தில் (15.000 அடி) ஒரு சதுர அங்குல இடத்தின்மேல் தாக்கும் அழுத்தம் 2 டன் அளவுள்ளது. ஆழ்கடலிலிருந்து மேலே விலங்குகளை கொண்டுவந்தால் அழுத்தம் குறைவதால், அவற்றின் உடல் வெடித்துச் சிதறுண்டு போகின்றது. துருவத்திலிருந்து கடற்பரப்புக்குக் கீழாகவே வந்து இந்த ஆழங்களுக்குள் பாயும் குளிர்ந்த நீரானது நிரம்ப ஆக்சிஜனைக் கொண்டு வருகின்றது. இந்தப் பாகம் முற்றிலும் அமைதியானது. ஏனெனில் பெரிய புயலும் கடலின் சிறிது மேற்பரப்பைத்தான் கலக்கும். பெரிய ஆழத்திலிருக்கும் நீரிலும் அசைவு உண்டாவதில்லை. இங்குத் தாவர உயிர்வகையே கிடையாது. சில பாசிகளின் ஸ்போர்கள் என்னும் வித்துப்போன்ற தூள்கள்தாம் அகப்படலாம். ஏனெனில் தாவர வாழ்க்கைக்கு வெளிச்சம் வேண்டும். எங்கெங்குமுள்ள பாக்டீரியா என்னும் தாவரங்களும் இங்குச் செழிப்பதாகக் காணோம். இங்குள்ள விலங்குகள் ஒன்றையொன்று தின்று வாழவேண்டும்; அல்லது மேலே இருந்து எந்நேரமும் விடாமழைபோலப் பெய்து கொண்டேயிருக்கும் செத்துச் சிதைந்து அழுந்தும் உயிர்களின் உடற்பகுதிகளின் குப்பையை யுண்டு வாழவேண்டும். அதற்கேற்ப இங்கு வாழும் மீன்களில் பலவற்றிற்கு வாயும் தாடையும் மிகவும் அகன்றவை.
ஆழ்கடல் சூழ்நிலை ஒரே படித்தாக இருக்கின்றது. விரிகடல் நிலையும் அவ்வாறே. ஆயினும் கடலின் மேற்பரப்பிற் காட்டிலும் ஆழத்திலே வாழ்க்கை மிகவும் கடுமையானது. தாவரமே இல்லாதிருப்பது விலங்குகளுக்குள்ளே வாழ்க்கைப் போராட்டத்தின் முனைப்பைப் பெருக்குகின்றது. கடற் சாமந்திபோன்ற உயிர்கள் ஒரேயிடத்தில் ஒட்டிக்கொண்டிருந்து, தம் வாய்க்குள் வந்துவிழும் பொருளை உண்டு வாழலாம். ஆயினும், அங்குள்ள பெரும்பாலானவைகளின் வாழ்க்கை அவ்வளவு எளிதான சுகவாழ்க்கை யன்று.
இந்த இருண்ட உலகத்தில் வாழும் உயிர்களும் பல நல்ல நிறங்களுடன் காணப்படுன்றன. சிவப்பு, ஊதா, கிச்சிலி, கருஞ்சிவப்பு ஆகியவைகளே முக்கியமாகக் காணும் நிறங்கள். நீல நிறம் அங்கில்லை.
ஆழ்கடல் உயிர்கள் சில மேலிருந்து விழும் பொருள்களினின்றும் அடித் தரையிலுள்ள மண்ணினின்றும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள நீண்ட காம்பு போன்ற தண்டுகள் (Stalks) பெற்றிருக்கும். இத் தண்டுகள் அவை தரைக்கு மேலே நிலைபெற்று வாழ உதவும். இன்னும் சில நீண்ட கால்களை யுடையவை. ஆழ்கடல் உயிர்கள், பொதுவாக மென்மையானவையாக இருப்பினும், உடல் பருத்துக் காண்கின்றன.
ஆழ்கடற் பிராணிகளைப்பற்றி நாம் அறிவதற்கு 1872-1876 நடந்த சாலெஞ்சர் என்னும் கப்பலிற் சென்ற ஆராய்ச்சியாளர் சர். ஜான் மரே, மோஸ்லி ஆகியவர் செய்த சோதனைகள் பெரிதும் உதவுகின்றன.