கலைக்களஞ்சியம்/ஆவியாகு வெப்பம்

விக்கிமூலம் இலிருந்து

ஆவியாகு வெப்பம் (Heat of Vaporiza-tion): பொருள்கள் ஆவியாக வெப்பம் தேவை. இது திரவத்தின் தன்மையையும், ஆவியாகும் வெப்பநிலையையும் பொறுத்திருக்கும். அலகு நிறையுள்ள ஒரு திரவம் வெப்பநிலை மாறாது ஆவியாகத் தேவையான வெப்பம் அதன் ஆவியாகு வெப்பம் எனப்படும். தண்ணீரின் கொதி நிலையில் இது 540 காலரிகள் (கிராம்). இது இவ்வளவு அதிகமாக இருக்கக் காரணம் மூலக்கூறுகளைப் பிணைக்கும் விசைகளுக்கு எதிராக மூலக்கூறுகளைப் பிரிக்க அதிகமான ஆற்றல் தேவையாக இருப்பதே. தாழ்ந்த வெப்பநிலைகளில் இவ்விசைகளின் அளவு இன்னும் அதிகமாகையால் பொருளின் ஆவியாகு வெப்பமும் அதிகமாக இருக்கும்.