கலைக்களஞ்சியம்/ஆஸ்திரிக் மொழி

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்திரிக் மொழி மேற்கு இமயமலை முதல் பசிபிக் சமுத்திரத்திலுள்ள ஈஸ்ட்டர் தீவுவரை பரவியுள்ள மொழிக்குடும்பமாகும். இது ஆஸ்திரேசியாட்டிக் மொழி என்றும், ஆஸ்திரோனீசியன் மொழி என்றும் இரண்டு பிரிவுகளை உடையது.


ஆஸ்திரேசியாட்டிக் மொழிகள் ஒரு காலத்தில் இந்தோசீனாவிலும் இந்தியாவின் வடகிழக்குப் பகுதியிலும் பரவியிருந்திருக்கும் என்று நம்பப்படுகின்றது. இந்தப் பிரிவில் முப்பதுக்கு மேற்பட்ட மொழிகள் காணப்படுகின்றன. அவற்றை அறிஞர்கள், மலாக்காவகை, தென்கிழக்குவகை, தென்கிழக்குக் கலப்புவகை, மத்திய வகை, வடமேற்குவகை என்று ஐந்து வகைகளாகப் பிரித்துளர்.


ஆஸ்திரோனீசியா மொழிகள்: இவை இந்தோனீசியன்வகை, மெலனீசியன்வகை, பாலினீசியன்வகை என மூன்று வகைப்படும். இவற்றுள் இந்தோனீசியன் வகையிலிருந்து மெலனீசியன்வகையும், மெலனீசியன் வகையிலிருந்து பாலினீசியன் வகையும் உண்டாயினவென்று அறிஞர்கள் கருதுகிறார்கள். சிறந்த மொழிகள் சிறப்பில்லாத மொழிகளாக மாறியதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.