உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆஸ்திரியா

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்திரியா மத்திய ஐரோப்பாவிலுள்ள ஒரு நாடு. இந்நாடு பெரும்பாலும் அரசியல் அடிப்படையில் அமைந்ததாதலின் பூகோள எல்லைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. ஒரு காலத்தில் 1,30,000 சதுர மைலாக இருந்த இந் நாட்டின் பரப்பு இப்போது (1952) 32,375 சதுர மைல். 1918-ல் முடிவுற்ற முதல் உலக யுத்தத்தில் ஆஸ்திரியா-ஹங்கேரி இராச்சியம் தோற்கடிக்கப்பட்டபின், அது ஆஸ்திரியா என்றும் ஹங்கேரி என்றும் இரு தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. ஆஸ்திரியா எல்லாப் புறங்களிலும் நாடுகளால் சூழப்பட்டது. ஆஸ்திரியர்களில் பெரும்பாலோர் ஜெர்மானியர்கள்; அவர்கள் பேசுவது ஜெர்மானிய மொழி. இந்நாட்டில் செக், சுலோவாக்மாகியார், குரோவாட், இத்தாலியர் முதலிய பல சாதியினர் வாழ்கின்றனர்.

ஆஸ்திரியாவில் மலைகள் அதிகம். ஆல்ப்ஸ் மலைகளில் பாதிக்குமேல் இந்நாட்டிலேயே அமைந்துள்ளன. தட்பவெப்பநிலை ஏறத்தாழச் சுவிட்ஸர்லாந்திலுள்ளதைப்போலவே இருக்கிறது. கோடைக்காலத்தில்மிகுந்த வெயிலும், குளிர் காலத்தில் அதிகக் குளிரும் மிகுதியான மழையும் உண்டு. முக்கியமான ஆறு டான்யூப். தலை நகரான வியன்னா, டான்யூப் கரையில் அமைந்துள்ளது.

டான்யூப் ஆறு
உதவி : ஆஸ்திரிய தூதுவர் மையம், புது டெல்லி.

வியன்னாவில் ஆண்டுதோறும் 68 செ. மீ. மழை பெய்கிறது. ஜனவரியில் 29° பா.வும், ஜூலையில் 67.3° பா.வும் வெப்பநிலை. இங்குச் சிற்சில சமயங்களில் 69° பா. வரை வெப்பநிலை உயர்கிறது.

ஆஸ்திரியாவில் இரும்புத்தாது மண்ணும் சிறிதளவு நிலக்கரியும் கிடைக்கின்றன. செம்பு, நாகம், மாக்னசைட்டு, உயர்தரமான பென்சில் கரி முதலியவை இங்குக் கிடைக்கும் மற்றத் தாதுப்பொருள்கள். நீர்வீழ்ச்சிகளின் உதவியைக்கொண்டு மின்சாரசக்தி உற்பத்தியாக்கப்படுகிறது. இந்நாட்டுக் காடுகளிலுள்ள மரங்களின் கூழ் காகிதம் செய்யப் பயன்படுகிறது. வேலைக்கான மரங்கள் இங்கு மிகுதியாக அகப்படுகின்றன.

ஆஸ்திரியா கைத்தொழிலில் முன்னேறிய நாடாயினும் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர்

வியன்னா நகர்
உதவி : ஆஸ்திரிய தூதுவர் நிலையம், புதுடெல்லி.

வேளாண்மை செய்பவர். கோதுமை, ரை, பார்லி, ஓட்ஸ், பீட்கிழங்கு, உருளைக்கிழங்கு முதலியவை முக்கிய விளைபொருள்கள். ஆடுமாடுகள், குதிரைகள், பன்றிகள் முதலியவை வளர்க்கப்படுகின்றன. ஜவுளியும், இரும்பு, எஃகு பொருள்களும், மோட்டார் கார்களும் இந்நாட்டு முக்கிய உற்பத்திப் பொருள்கள்.

இந்நாட்டிலுள்ள அழகுவாய்ந்த மலைவளங் காண வரும் பிரயாணிகளுக்கு வசதிகள் செய்து கொடுப்பதனால் மிகுந்த வருவாயுண்டு.

ரெயில்வே முழுவதும் அரசாங்கத்தாராலேயே நடத்தப்பெறுகிறது. சில பாகங்களில் ரெயில் மின்சாரத்தால் ஓடுகிறது ; நிலக்கரி மிகுதியாகக் கிடைக்காததே இதற்கு முக்கியக் காரணமாகும். டெலிபோன், தந்தி, ரேடியோ வசதிகளால் இந்நாடு மற்ற நாடுகளோடு இணைக்கப்பட்டுள்ளது. வியன்னா, கிராஸ், இன்ஸ்புருக் என்னும் மூன்று நகரங்களிலும் பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இந்நாட்டிலுள்ள பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்கர்கள் (88-27%). 1951-ல் இந் நாடு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, சோவியத் ரஷ்யா ஆகிய நான்கு வல்லரசுகளின் ஆதிக்கத்துள் இருப்பதால் இதற்கெனத் தனிப்படை இல்லை.

முக்கியமான நகரங்கள் (மக்: 1951-ல்) வியன்னா: 17,60.784; கிராஸ் : 2.26.271; லின்ட்ஸ்: 1,85,177; சால்ஸ்பர்க்: 1.00.096; இன்ஸ்புருக்: 94,599.

வரலாறு: டான்யூப் நதியின் மத்திய தீரத்தில் இருந்த ஜெர்மானியர்களை எதிர்த்துச் சார்லமேனும், ஹங்கேரியர்களை எதிர்த்து II-ம் ஆட்டோவும் செய்த போர்களின் பயனாக ஜெர்மனிக்குத் தென்கிழக்கே ஆஸ்ட்மார்க் என்னும் ராணுவக் குடியேற்றம் தோன்றிற்று. இதுவே பிற்காலத்திய ஆஸ்திரிய நாடு.

1273-ல் ஹாப்ஸ்பர்க் வமிசத்தை நிறுவிய ருடால்பு என்பவன் ரோமானியர்களுடைய மன்னனாகத் தேர்ந் தெடுக்கப்பட்டான். அவன் பொஹீமியர்களுடைய ஆதிக்கத்திலிருந்து ஆஸ்திரியாவை விடுவித்தான். 1278-ல் ருடால்பு ஆஸ்திரிய நாட்டை ஆளத்தொடங் கியதிலிருந்து 1437-ல் V-ம் ஆல்பர்ட் புனித ரோமானியப் பேரரசனானவரையில், ஹாப்ஸ்பர்க் வமிசம் பல அரசியல் ஏற்பாடுகளால் மத்திய ஐரோப்பாவில் பெரிய ஆதிக்கத்தை நிறுவிவந்தது. அப்பொழுதிலிருந்து 1918 வரையில் எவ்வளவோ இடையூறுகளையும் தாண்டி ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் சாம்ராச்சிய அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொண்டே வந்தனர்.

1453-ல் கான்ஸ்டான்டிநோபிளை வென்ற துருக்கர்கள் ஹங்கேரியின் பெரும்பகுதியை ஆக்ரமித்துக் கொண்டனர். ஆஸ்திரியா, முஸ்லிம்களை எதிர்த்துக் கிறிஸ்தவ மதத்தைக் காப்பாற்றும் வேலையில் ஈடுபட்டது. 1526-ல் மோஹாக் போரில் துருக்கர்கள் பெற்ற வெற்றி ஹங்கேரியர்களுடைய பலத்தை நன்றாக ஒடுக்கிவிட்டது. அப்போது ஹங்கேரியில் எஞ்சிய பகுதியையும் பொஹீமியாவையும் ஹாப்ஸ்பர்க்குகள் தங்கள் ஆதிக்கத்திற்கு உட்படுத்திக்கொண்டனர்.

16ஆம் நூற்றாண்டில் பிராட்டெஸ்டென்டுக் கொள்கை பரவியபோது ஆஸ்திரியாவும், பவேரியாவும், ரைன்லாந்தும் ரோமன் கத்தோலிக்கச் சமயத் திற்குத் துரோகம் செய்யவில்லை. இந்நிலையில் V-ம் சார்லஸ் (1519-1555) பேரரசனது ஆட்சி குறிப்பிடத் தக்கது. ஆவனது ஆட்சி மிகப் பரந்திருந்ததால் அவன் தற்காப்புக் கொள்கையையே மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆயினும் அவன் தனது இராச்சியத்தின் பலவேறு பகுதிகளையும் ஒருவாறாகப் பிணைத்து வைத்திருந்தான்.

1618-48 வரை நடந்த முப்பதாண்டு யுத்தத்தில் ஹாப்ஸ்பர்க்குகள் அடைந்த லாபத்தைவிட நஷ்டமே அதிகம். 1648-ல் உண்டான வெஸ்ட்பேலியா உடன்படிக்கைப்படி அவர்களுடைய ஆதிக்கம் ஆஸ்திரியா, பொஹீமியா, ஹங்கேரி ஆகிய இடங்களில் நன்கு நிறுவப்பட்டதாயினும், ஜெர்மனியும் பேரரசின் மற்றப்பகுதிகளும் அவர்கள் ஆதிக்கத்தினின்றும் போய்விட்டன. 17ஆம் நூற்றாண்டில் கூடத் துருக்கியின் ஆக்கிரமிப்புச் சக்தி குன்றாமலே இருந்தது. புனித ரோமானிய சாம்ராச்சியத் தலைவர் என்னும் முறையில் ஹாப்ஸ்பர்க்கு அரசரே அவர்களை எதிர்க்கும் பொறுப்பை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. 1683-ல் வியன்னா வரை வந்துவிட்ட துருக்கர்களைப் போலந்து மன்னனான ஜான்சோபீஸ்கியின் உதவியைக் கொண்டு ஹாப்ஸ்பர்க்குகள் விரட்டி யடித்தனர். இதன் பிறகு 1923-ல் ஏற்பட்ட லாசான் உடன்படிக்கைக் காலம்வரை துருக்கர்களுடைய ஐரோப்பிய ஆதிக்கம் குறைந்துகொண்டே வந்தது. 17ஆம் நூற்றாண்டினிறுதியில் ஆஸ்திரியப் படைத்தலைவனான யூஜீன் இளவரசனுடைய திறமையால் ஹங்கேரியும் டிரான்சில்வேனியாவும் ஆஸ்திரியாவின் வசமாயின.

ஹங்கேரியால் ஆஸ்திரியாவிற்கு நன்மையுண்டாயினும் பெருந் தொல்லையு முண்டாயிற்று. ஹங்கேரியர்களுடைய மொழி, மரபு, இனம் யாவையும் ஜெர்மானியர்களுடைய மொழி, மரபு, இனங்களினின்றும் வேறானவை. மாகியர் பிரபுக்கள் ஜெர்மானியக் கட்டுப்பாட்டிற்கு அடங்காதவர்கள். ஆஸ்திரிய அரசாங்கம் கத்தோலிக்க மதத்தை ஆதரவாகக் கொண்டிருந்தது. அவ் வாட்சி தனது சிறப்பில் தற்பெருமை கொண்டிருந்தது. வியன்னாவில் கல்வியும் கலைகளும் ஓங்கி வளர்ந்தன. அயர்லாந்தில் ஆங்கிலேயர்கள் கண்ட பிரச்சினைகளை யெல்லாம் ஆஸ்திரியர்கள் ஹங்கேரியில் கண்டனர். அன்றியும், ஹாப்ஸ்பர்க் பேரரசு பல்லினமும் பன்மொழியும் பயின்றுவந்த ஒரு பெரு நிலப்பரப்பு. செக், சுலோவாக், மாகியர், சுலோவீன்கள், இத்தாலியர்கள் ஆகிய பல வேறுபட்ட மக்களின் ஒவ்வாப் பண்பாடுகளையும் ஒன்றாக்கி ஆட்சி புரிய வேண்டி யிருந்தது. VI-ம் சார்லஸ் சக்கரவர்த்தியின் தனிக் கட்டளை (1739) ஹாப்ஸ்பர்க் ஆட்சியைத் தன் ஒரே மகளான மேரியா தெரிசா பெறுவதற்கென்றே பிறப்பிக்கப்பட்டது. இக் கட்டளையை இங்கிலாந்தும் பிரான்ஸும் ஏற்றுக்கொள்வதற்காக அந்நாடுகளுக்குச் சில சலுகைகளும் காட்டவேண்டி யிருந்தது. மேரியா தெரிசாவின் ஆட்சிக் காலத்தில் ஆஸ்திரிய வார்சுரிமைப் போரும் (1740-45), ஏழாண்டுப் போரும் (1756-63) நடைபெற்றன. அக் காலத்தில் பிரஷ்யாவின் மன்னனாயிருந்த மகா பிரடரிக் சைலீஷ்யாவை ஆஸ்திரிய ஆதிக்கத்தினின்றும் பிடுங்கிக் கொண்டான். அவன் மகனான II-ம் ஜோசப் (1780-90) திறமையுள்ளவனாயினும், நிருவாகத்தைச் சீர்ப்படுத்தவும், பேரரசில் இருந்த ஏனைய இனத்தவர்களை ஜெர்மன் மயமாக்கவும் முயன்றது பலிக்கவில்லை.

நெப்போலியன் ஹாப்ஸ்பர்க்குகளுடைய ராணுவ பலத்தை ஒடுக்கி, அவர்களுடைய பேரரசின் பரப்பையும் மிகக் குறைத்தான். 1804-ல் அவன் புனித ரோமானிய சாம்ராச்சியத்தை ஒழித்துப் புதியதோர் ஆஸ்திரிய வமிசத்தை நிறுவினான்; புது ஆஸ்திரிய இராச்சியம் உருவாயிற்று.

வியன்னா மாநாட்டின் முடிவாக ஆஸ்திரியா ஒரு பெரிய இராச்சியமாக மாறிற்று. 1815-48 வரை ஆஸ்திரிய கான்சலாயிருந்த மெட்டர்னிக் ஜெர்மன் மொழி பயிலும் நாடுகளின் தலைவனாக விளங்கினான். அவன் எவ்விதச் சுதந்திர இயக்கத்திற்கும் இடம் தர விரும்பவில்லை.

1848-ல் நடந்த புரட்சி ஆஸ்திரிய அரசைத் தகர்த்தது. இவ்வாறு தோன்றிய நாடுகளுக்குள் ஒற்றுமையில்லாததால் ஆஸ்திரியத் தனியாட்சி புத்துயிர் பெற்றது. பொஹீமியர்களும், ஹங்கேரியர்களும், யூகோஸ்லாவியர்களும் தனிப்பட விரும்பினராயினும் அது கைகூடவில்லை. பிரஷ்யாவும் முன்னேற வழியில்லாமல் இருந்தது. புதிதாக அமைக்கப்பட்ட ஜெர்மானியக் கூட்டாட்சியில் இது முக்கிய இடம் வகித்தது.

பிரஷ்யாவில் பிஸ்மார்க் மந்திரியாக வந்ததும் நிலைமை மாறிற்று. ஆஸ்திரியாவினிடமிருந்து. லாம்பர்டி பிரிந்து இத்தாலியைச் சேர்ந்தது. 1866-ல் நடந்த ஆஸ்திரிய - பிரஷ்ய யுத்தம் ஆஸ்திரியாவின் பெருமையைச் சிதைத்தது. அது முதல் பிரஷ்யா ஆஸ்திரியாவைவிட முக்கியமான நிலைமையை யடைந்தது. 1867-ல் ஏற்பட்ட ஆக்ஸ்லீக் ஏற்பாட்டின்படி ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் இணைக்கப்பட்டன ; ஆயினும் அவ்விரு நாடுகளிலும் தனித்தனிச் சட்டசபைகளும் நிருவாகமும் இருந்துவந்தன; போர், வெளிநாட்டு விவகாரங்கள் முதலியவற்றில் மட்டும் இவை ஒன்றாயிருந்தன. இவ்வைக்கியம் ஏறத்தாழ அரை நூற்றாண்டு அமலில் இருந்தது. இதை இருதலை ஆட்சி என்று அழைத்தனர். முதல் உலக யுத்தத்தில் மத்திய நாடுகள் தோல்வியுற்றதால் ஜெர்மனியைக் காட்டிலும் ஆஸ்திரியாவே அதிக நஷ்டமடைந்தது. ஆஸ்திரிய. வமிசம், சைனியம், பேரரசு எல்லாம் மறைந்தன. செக் மக்களும், சுலோவாக்குகளும், ஹங்கேரியர்களும் பிரிந்தனர். 1919-ல் நடந்த வெர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி ஆஸ்திரியாவின் ஆட்சிப் பரப்பு மிகவும் குன்றி நின்றது. மக்கள் தொகை மிகுந்த வியன்னா நகரம் பலவகையினும் குன்றிய ஆஸ்திரிய இராச்சியத்தின் தலைநகராக விளங்கிற்று.

1938-ல் ஆஸ்திரியா ஹிட்லரினால் ஜெர்மனியின் ஒரு பகுதியாக ஆக்கிரமித்துக்கொள்ளப்பட்டது. ஆஸ்திரியா, ஆஸ்ட்மார்க் என்னும் பழைய பெயரை மறுபடியும் ஏற்றது. இரண்டாம் உலக யுத்தம் தொடங்கிய பிறகு 1943-ல் பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் ஆஸ்திரியாவை ஜெர்மன் ஆதிக்கத்தினின்றும் விடுவித்துச் சுதந்திர நாடாக்கத் தீர்மானித்தன. 1945 மே மாதத்தில் ஆஸ்திரியப் பிரதேசம் முழுவதையும் நான்கு நேசநாடுகளும் கைப்பற்றின. 1945 ஜூலையில் ஆஸ்திரியாவை 4 பகுதிகளாகப் பிரித்து, அந்நான்கு நாடுகளையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக் கொண்டன. அவ்வாறே வியன்னா நகரமும் பங்கிடப்பட்டது. சி. எஸ். ஸ்ரீ.

அரசியலமைப்பு: முதல் உலக யுத்தம் முடியும்வரை ஆஸ்திரியாவும் ஹங்கேரியும் ஒரே இராச்சியமாக இருந்தன. பின்னர் வர்சேல்ஸ் உடன்படிக்கைப்படி இரண்டும் தனி நாடுகளாகப் பிரிக்கப்பட்டன. அவ்வாறு தோன்றிய புதிய சுதந்திர நாடுகளில் பார்லிமென்டுப் பொறுப்பாட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட அரசியல்களே அமைக்கப்பெற்றன. 1920-ல் ஆஸ்திரிய மக்கள் நிறுவிய அரசியல் நிர்ணய சபையால் அரசியல் திட்டம் ஒன்று அமைக்கப்பட்டது. அதன்படி ஆஸ்திரியா எட்டு மாகாணங்களடங்கிய கூட்டாட்சிக் குடியரசு (Federal Republic) ஆயிற்று. இதற்குத் தலைவர் ஜனாதிபதி. இவர் மேல்சபை, கீழ்ச்சபை இரண்டும் சேர்ந்த சபையால் நான்கு வருட காலத்திற்குப் பதவி வகிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்குச் சில முக்கிய நிருவாக அதிகாரங்கள் அரசியல் திட்டப்படி கொடுக்கப்பட்டிருந்தபோதிலும், பொதுவாக எல்லா நிருவாக அதிகாரங்களும் கீழ்ச்சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட மந்திரி சபைக்கே உண்டு. கீழ்ச்சபை மந்திரி சபைக்கு ஆதரவு கொடுக்காவிட்டாலும் அல்லது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றினாலும் மந்திரி சபை ராஜிநாமா செய்ய வேண்டும். சட்டங்களியற்றும் பொறுப்புள்ள இரண்டு சபைகளில் கூட்டாட்சி அரசியல் மரபை ஒட்டி மேல் சபை மாகாணங்களுடைய அங்கமாக விளங்கியது. கீழ்ச்சபையோ மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பொதுமக்களின் அங்கமாக விளங்கியது. மேல்சபைக்கு நாஷனல் ராட் (National Rat) என்றும், கீழ்ச்சபைக்கு புண்டஸ் ராட் (Bundes Rat) என்றும் பெயர். எல்லாக் கூட்டாட்சி அரசியல்களிலும் முக்கியமான இலாகா நீதி இலாகா. மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பாற்றுவதற்கும், மாகாணங்களுக்கு இடையேயோ அல்லது மாகாணங்களுக்கும் கூட்டாட்சி அரசாங்கத்திற்கும் இடையேயோ ஏற்படும் விவகாரங்களைத் தீர்ப்பதற்கும் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இவ்வாறு வகுக்கப்பட்ட அரசியல் திட்டம் உள்நாட்டுக் குழப்பம் அதிகரித்ததால் பிறகு அமலாகவில்லை. ஆஸ்திரியா இரண்டாவது உலக யுத்தத்தின்போது ஜெர்மானியர் வசமானதும் ஹிட்லருடைய நாஜி ஆட்சி முறை ஆஸ்திரியாவுக்கும் பரவிற்று. யுத்தத்திற்குப் பிறகு பெரும்பாலும் 1920ஆம் ஆண்டின் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்தது. வீ. வெ.