கலைக்களஞ்சியம்/ஆஸ்திரேலியா

விக்கிமூலம் இலிருந்து

ஆஸ்திரேலியா கண்டங்களுள் மிகச் சிறியது. பரப்பு: 29.74.581 ச. மைல் ; தெற்கு வடக்காக2.000 மைலும், கிழக்கு மேற்காக 2,400 மைலும் நீளமுள்ளது. கிழக்கே பசிபிக் சமுத்திரமும், தெற்கே தென் சமுத்திரமும், மேற்கே இந்திய சமுத்திரமும், வடக்கே ஆசியா வரையில் படர்ந்துள்ள கிழக்கிந்தியத் தீவுகளும் இதைச் சூழ்ந்திருக்கின்றன. சமுத்திரத்தினிடையே தனித்து ஒதுங்கியும், ஐரோப்பாவிலிருந்து மிகத் தொலைவிலும் இருந்ததால் இக்கண்டம் மிகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

இயற்கைப் பகுதிகள் : இத்தீவை மூன்று இயற்கைப் பகுதிகளாகப் பிரிக்கலாம். 1. கீழைப் பீடபூமிகள் அல்லது பெரும் பிரிவுத்தொடர்கள் (Great Dividing Range). இவை பசிபிக்கை நோக்கி அதிகச் செங்குத்தாக ஓங்கியுள்ளன. இப்பகுதி முதலில் மலைகளாயிருந்து, பிறகு அரிபட்டுத் தாழ்ந்து மறுபடியும் உயர்த்தப்பட்ட ஒரு பழைய பீடபூமி. இவை வடக்கே படர்ந்தும், அதிக உயரமில்லாமலும், தென் கிழக்குப் பகுதியில் மிக உயரமாகவும் உள்ளன. (காசியஸ்கோ மலை 7,328 அடி). 2. இடைப்பட்ட தாழ்நிலங்கள் முன்பு கடல் அடிநிலமாயிருந்து, பிறகு கீழைப்பீடபூமியிலிருந்து வந்த படிவுகளால் தூர்க்கப்பட்டவை. சராசரி உயரம் 600 அடி. பார்க்லி பீடபூமியும். பாரியர், கிரே தொடர்களும், வடக்கு வடிநிலம், ஏர் வடிநிலம், மரி-டார்லிங் வடிநிலம் ஆகிய மூன்று வடி நிலங்களையும் பிரிக்கின்றன. பெரிய ஊற்று நீர் வடி நிலம் (The Great Artesian Basin) வடக்கிலிருந்து. தெற்கே ஏர் (Eyre) எரிவரை பரந்திருக்கிறது. 3. மேற்குப் பீடபூமி பூமியின்புறணியினுடைய ஒரு பழைய பகுகி; இது நீண்ட காலமாக மாறாமல் இருந்து வந்திருக்கிறது; 1,500 அடி உயரமுள்ளது; 60-70 மைல் அக்லமேயுள்ள குறுகிய கடற்கரை வெளிகளை நோக்கிச் செங்குத்தாகத் தாழ்ந்திருக்கிறது.

ஆறுகள்: மரி, டார்லிங் ஆறுகளே முக்கியமானவை. கடல் மட்டத்திற்கும் தாழ்ந்துள்ள ஏர் ஏரியில் சில சிற்றாறுகள் பாய்கின்றன. வேறு சில வடக்கேயுள்ள கார்ப்பென்டேரியா வளைகுடாவில் வீழ்கின்றன.

தட்ப வெப்பநிலை: கோடைக் காலத்தில் (ஜனவரி மாதம்) இக்கண்டத்தின் பெரும் பகுதியில் வெப்பநிலை 80° பா.க்கு அதிகமாகவும், வடக்கில் இடையிலுள்ள பரந்த பிரதேசங்களில் 90° பா. க்கு அதிகமாகவும் இருக்கிறது. குளிர்காலத்தில் (ஜூலை மாதம்) பெரும்பாலான இடங்களில் 50°-70° பா. வெப்பநிலை இருக்கிறது. ஆயினும் வடகோடிப் பிரதேசத்தில் இக்காலத்திலும் அட்சரேகை நிலைமையைப் பொறுத்து வெப்பநிலை 70° பா. க்கு அதிகமாகவும் இருக்கிறது. 20" க்கு மேற்பட்ட மழையுள்ள பிரதேசங்கள் வடகிழக்குத் தென் கிழக்குக் கரையோரங்களும் தென்மேற்கேயுள்ள சில இடங்களுமேயாம்; ஏர் வடிநிலத்திலிருந்து மேல்கரை வரையுள்ள மற்றப் பிரதேசங்களில் 10" க்குக் குறைவாகவே மழை பெய்கிறது. இக்கண்டத்தின் பெரும் பகுதி இவ்வாறு வறண்டிருப்பதே தட்ப வெப்பநிலையில் முக்கியமாகக் கவனிக்கத் தக்கது.

மக்கள்: 84 இலட்சம் (1-50); ச.மைலுக்கு 2.83 மக்கள் அடர்த்தி; இது மற்றக் கண்டங்களிலுள்ளதைவிடக் குறைவு ; மக்களில் மிகப் பெரும்பாலோர் வெள்ளையர்கள். 55,000 ஆதிக்குடிகள் உள்ளனர் ; இவர்கள் தொகை குறைந்து வருகிறது; டாஸ்மேனியாவில் இவர்கள் முழுவதும் அழிக்கப்பட்டுவிட்டனர். 36,000 ஆசியர்களும் உள்ளனர். கிழக்கு, தென் கிழக்கு, தென் மேற்குக் கரைப் பிரதேசங்களிலேயே பெரும்பான்மை மக்கள் வசிக்கின்றனர். இராச்சியத் தலை நகரங்களில் மக்கள் தொகையின் பெரும்பகுதி அடர்ந்திருக்கின்றது. மக்களில் 64% நகரவாசிகள். 'வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கை' என்பது வெள்ளையரல்லாதாரை இக்கண்டத்தில் குடியேறாமல் தடுக்கிறது. ஆண்டுதோறும் 1 அல்லது 1 இலட்சம் வெள்ளையர்கள் குடியேறுகிறார்கள். ஆதிக்குடிகளும் ஆசியர்களும் தவிர மற்றவர்கள் கிறிஸ்தவர்கள்; 30 இலட்சம் பேர் இங்கிலாந்துத் திருச்சபை மதத்தைச் சேர்ந்தவர்கள். 16 இலட்சம் பேர் ரோமன் கத்தோலிக்கர்.

விவசாயம்: சாகுபடியாகின்ற பூமியின் மொத்தப் பரப்பு 202.1 இலட்சம் ஏக்கர்கள்; அதாவது நாட்டின் மொத்தப் பரப்பில் 1 சதவீதம்.

1949-ல்
(1,000 ஏக்கர்கள்)

கோதுமை 12,240
ஓட்ஸ் 1,748
பார்லி 1,040
மக்காச்சோளம் 194
கரும்பு 281
திராட்சை 195
பழத்தோட்டங்கள் 281
பெரும்பிரிவுத் தொடர்களுக்கு அடங்கிய தென்கிழக்குப் பிரதேசத்தில் கோதுமை விளைகிறது. இங்கு மழை

சு.25 அங்.; நியூ சவுத் வேல்ஸிலும், விக்டோரியாவிலுமுள்ள கீழ் மரி ஆற்றுப் பிரதேசத்திலும், தென் ஆஸ்திரேலியாவிலும் கூடக் கோதுமை பயிராகிறது; மேற்கு ஆஸ்திரேலியாவிலும் சிறிது கோதுமை விளைகிறது. கால்நடைகளுக்குத் தீவனத்திற்காக ஓட் பயிரிடப் படுகிறது. தென் குவீன்ஸ்லாந்தின் கரைப்பிரதேசத்திலும் வட நியூ சவுத்வேல்ஸிலும் மக்காச் சோளம் பயிராகிறது. தென் குவீன்ஸ்லாந்தின் குறுகிய கரைப் பிரதேசத்தில் கரும்பு சாகுபடியாகிறது: இங்கு மழை அதிகம்; வெப்பநிலை 70° பா.க்கு மேற்பட்டிருக்கிறது. வெள்ளைத் தொழிலாளிகளை நம்பியே பயிர்த்தொழில் நடைபெறுகிறது. கண்டத்திலுள்ள மொத்தத் திராட்சைத் தோட்டங்களில் பாதி தென் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. நீர் வசதி மிகுந்த ஆஸ்திரேலியாவில் பலவகைப் பழங்கள் உற்பத்தியாகின்றன. வடகுவீன்ஸ்லாந்தில் மாம்பழங்களும், தென் பகுதியில் ஆப்பிள், பேரிக்காய், எலுமிச்சைச் சாதிப் பழங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

கால்நடை வளர்ப்பு: ஆடுமாடு மேய்த்தல் ஆஸ்திரேலியாவின் மிகப் பழைய தொழில். விவசாய வருமானத்தைக் காட்டிலும் (1,510 இலட்சப் பவுன் மதிப்பு) மேய்ச்சல் நிலவருமானமே (3,350 இலட்சம் பவுன் மதிப்பு) மிகுதியாகவுள்ளது.

மாடுகள்
(10 இலட்சம்)

ஆடுகள்
(10 இலட்சம் )

நியூ சவுத் வேல்ஸ் 3.44 53.3
விக்டோரியா 2.23 19.2
குவீன்ஸ்லாந்து 6.31 17.2
தென் ஆஸ்திரேலியா .46 9.5
மேற்கு ஆஸ்திரேலியா .87 10.9
________ ________
மொத்தம் (வடஆஸ்திரே
லியாவும், டாஸ்மேனி
யாவும் உள்பட)
14.37 110.7
________ ________

தென்விக்டோரியாவிலும், நியூ சவுத்வேல்ஸ், குவீன்ஸ்லாந்து எல்லையிலும் மிக அதிகமாகக் கால்நடைகள் காணப்படுகின்றன. வடக்கேயுள்ள சவானா புல்வெளிகளில் மாமிசத்திற்காக வளர்க்கப்படும் கால்நடைகளே மிகுதியாக உள்ளன. நீர் வசதியுள்ள கீழைக்கரையிலும் பெரிய நகரங்களுக்கருகிலும் உள்ள புல்வெளிப் பிரதேசங்களில் பால் பண்ணைக்காக மாடுகள் வளர்க்கப்படுகின்றன. உலகத்திலேயே மிக அதிகமான ஆடுகள் இக் கண்டத்தில் உள்ளன ; இங்கு உற்பத்தி செய்யப்படுகிற ஆட்டு ரோமம் அளவிலும் தரத்திலும் உலகிலேயே முதலிடம் வகிக்கிறது. இவ்வாடுகள் பெரும்பாலும் தென்கிழக்கே நியூ சவுத் வேல்ஸிலும் விக்டோரியாவிலும் 20"-30" சம மாரிக் கோடுகளுக்கு இடையே காணப்படுகின்றன. மெரினோ வகை ஆடுகளே இங்கு அதிகம். விவசாயப் பண்ணைகளில் குதிரைகள் வளர்க்கப்படுகின்றன ; ஆயினும் இவற்றின் எண்ணிக்கை 1918-ல் 25 இலட்சமாயிருந்து, 1950-ல் 10 இலட்சமாகக் குறைந்துவிட்டது. இதற்கு விவசாயம் எந்திரங்களைக் கொண்டு நடைபெறுவதும், மோட்டார் போக்குவரத்து மிகுந்துவிட்டதுமே காரணங்கள். வெண்ணெய் உற்பத்தி 1,68,432 டன் ; பாலடைக் கட்டி 44,823 டன்; ஆட்டு ரோமம் 11,079 இலட்சம் டன்; மாமிசம் 10·5 இலட்சம் டன்.

மீன் பண்ணைகள் : மரி காட் (Murray Cod) என்னும் மீன் பிடித்தலும், அயன மண்டலக் கடல்களில் முத்துக் குளித்தலும் தவிர மீன் பண்ணைத் தொழில் அவ்வளவு முக்கியமானதன்று.

தாதுப் பொருள்கள்: மேற்குப் பீடபூமியின் பண்டைய பாறைகளிலும் தென் கிழக்கேயுள்ள மலைகளிலும் தாதுப் படிவங்கள் உள்ளன.

இலட்சம் பவுன்
பெறுமானம்

தங்கம் 108.11
வெள்ளியும் காரீயமும் 202.71
செம்பு 20.76
வெள்ளீயம் 10.81
நாகம் 53.93
நிலக்கரி 188.05

முன்பு தங்கம் ஒன்றே இங்குக் கிடைக்கும் முக்கியத் தாதுப் பொருளாயிருந்தது. இப்போது வெள்ளியும் காரீயமும் அதிக முக்கியமாகிவிட்டன. மேற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள கால்கூர்லி, கூல்கார்டி தங்கக் கனிகளில் தங்கத்திற் பெரும்பகுதி தற்பொழுது கிடைக்கிறது. உலகிலேயே தங்கம் கிடைக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா ஐந்தாவது. புரோக்கன் குன்று (Broken Hill) படிவுகளில் வெள்ளி, காரீயம், நாகம் ஆகியவை அதிகமாகக் கிடைக்கின்றன. கிளான்கரி, மார்கன் குன்றுக் கனிகளில் இன்றும் செம்பு கிடைக்கிறது. நியூ சவுத் வேல்ஸிலுள்ள நியூ இங்கிலாந்து பகுதியில் வெள்ளீயம் அதிகமாகக் கிடைக்கிறது. ஸ்பென்சர் வளைகுடாவிற்கு மேற்கேயுள்ள ஒரு குன்றில் நல்ல இரும்புத்தாது கிடைக்கிறது. தென் அர்த்த கோளத்தில் உள்ள மற்றெல்லா நாடுகளையும்விட ஆஸ்திரேலியாவிலேயே அதிகமாக நிலக்கரி கிடைக்கிறது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள சிட்னி நகரின் சுற்றுப்பிரதேசத்தில் பெரிய நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன ; இந்நாட்டு உற்பத்தியில் 80% இங்கேயே கிடைக்கிறது. குவீன்ஸ்லாந்திலுள்ள இப்ஸ்விச் பிரதேசம் அடுத்தபடியாக நிலக்கரி யளிக்கிறது. மட்டரகமான கரி மெல்போர்னருகில் ஏராளமாகக் கிடைக்கிறது. ஆண்டுதோறும் 141 இலட்சம் டன் நிலக்கரி உற்பத்தியாகிறது.

கைத்தொழில்கள்: கோதுமை, ஆட்டுரோமம், பழங்கள் முதலியவற்றுடன் தொடர்புள்ள கைத்தொழில்களும் மோட்டார் டயர்த் தொழிலும் நடைபெறுகின்றன. நியூ சவுத்வேல்ஸும் விக்டோரியாவும் முக்கியமான கைத்தொழில் இராச்சியங்கள். நியூ சவுத் வேல்ஸ் நிலக்கரிக் கனிகளைச் சுற்றிக் கனக் கைத்தொழில் நடைபெறுகிறது; நியூகாசில், கெம்பிலா துறைமுகம், லித்கோ ஆகியவை முக்கியமான கைத்தொழில் கேந்திரங்கள். தேனிரும்பு உற்பத்தி 10·01 இலட்சம் டன்; எஃகு 12.46 இலட்சம் டன். விக்டோரியா நெசவுத் தொழிலில் முதலிடம் வகிக்கிறது; பெரும்பாலும் கம்பளி நெசவு நடைபெறுகிறது.

போக்குவரத்து: மொத்தம் 5 இலட்சம் மைல் சாலைகளும், 27,053 மைல் ரெயில் பாதைகளும் உள்ளன. ஒவ்வோர் இராச்சியத்திலும் ரெயில் பாதைகள் தலை நகரத்தில் வந்து சேர்கின்றன. ரெயில் பாதைகளின் அகலம் வெவ்வேறிடங்களில் வேறுபட்டு இருப்பதால் ரெயில்வேக்களை ஒன்றுபடுத்த முடியவில்லை. ஆண்டிற்கு ஆறு மாதம் நீர் குறைந்துவிடுவதால் ஆறுகளில் உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்து அதிகம் நடைபெறுவதில்லை. முக்கியமான இடங்கள் கரையோரமாயிருப்பதால், கரையோரக் கப்பல் போக்குவரத்து அதிகம். கண்டம் மிகப் பெரிதாகவும் பல பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகவும் இருப்பதால் தூரப் பிரயாணங்களுக்கு விமானங்களே மிகுதியாக உபயோகப்படுகின்றன. முறையான விமானப் பாதைகளின் நீளம் 48.999 மைல்.

ஆஸ்திரேலியாவின் ஆடுமேய்த்தல்
உதவி : ஆஸ்திரேலியா ஹை கமிஷ்னர், புதுதில்லி.

வியாபாரம்: சாதாரணமாக எற்றுமதி (6.137 இலட்சம் பவுன் மதிப்பு) இறக்குமதியைவிட (5,881.2 இலட்சம் பவுன் மதிப்பு) அதிகம். ஏற்றுமதியில் பாதி ஆட்டுரோமம். கோதுமை, கோதுமை மாவு, வெண்ணெய், மாமிசம், தோல் ஆகியவை மற்ற ஏற்றுமதிகள். நூல் ஜவுளிகளும், மோட்டார் வண்டிகளும், பெட்ரோலியமும் முக்கியமான இறக்குமதிகள். ஆஸ்திரேனிய எற்றுமதியில் 40% பிரிட்டனுக்கே செல்லுகின்றது ; இறக்குமதியில் 50% அங்கிருந்தே வருகிறது.

முக்கியமான நகரங்கள் (மக்: 1950-ல்) : சிட்னி 15.84 இலட்சம், மெல்போர்ன் 13·26 இலட்சம். பிரிஸ்பேன் 4.40 இலட்சம், அடிலேடு 4.30 இலட்சம், பெர்த் 3.09 இலட்சம். இவை இராச்சியத் தரைநகரங்கள். கூட்டாட்சித் தலைநகர் கான்பர்ரா. ஏ.வ

தாவரங்கள் : ஆஸ்திரேலியாவில் பெருங்காடுகள் இருக்கின்றன. அங்கு முக்கியமான மரங்கள் யூக்கலிப்டஸ் என்னும் நீலக் குங்கிலிய மரங்கள். அவை ஆஸ்திரேலியாவிற்கே உரியவை. இப்போது பல நாடுகளில் வளர்க்கப்படுகின்றன. ஜரா என்னும் ஒரு வகை யூக்கலிப்படஸ் உலகத்து வெட்டு மரங்களில் சிறந்ததொன்று. நீரில்லாத பாலைவனங்களில் குள்ளமான பூதப் பிசின் மரம் (Ghost Gum) வளர்கிறது. இங்குள்ள பாலைநிலத்துச் செடிகளில் பூவிதழ்கள் வர்ணங்கொடுத்த தோல் போலத் தோன்றும். இயற்கையாகவே நீர் குறைவாகிச் செதில்போல உலர்ந்து இருப்பதால் இவைகளைக் கொய்து, காகிதத்தால் செய்த பூவை வைத்திருப்பது போல நெடுநாளைக்கு வைத்திருக்கலாம். இங்குள்ள இன்னொரு செடி உப்புப் புதர் (Salt Bush) என்பது. இதன் இலைகளின் மேல் சாம்பல் நிறமான உப்புப் பூத்திருக்கும். மழை பெய்யாத வறட்சிக் காலங்களில் ஆடுகள் பல மாத காலம் இதையே தின்று வாழும். நீரும் புல்லும் நிரம்ப அகப்படும் காலத்திலும் இந்த உப்புப் புதர் ஆட்டுக்கு நல்ல உணவு எனக் கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பலவகைப் புல் விளைகின்றன. குவீன்ஸ்லாந்திலுள்ள மிச்சல் புல் என்பது மாடுகளுக்கு மிக உயர்ந்த உணவு.

விலங்குகள் : உலகத்தின் மற்றப் பாகங்களிலிருக்கும் விலங்குகளுக்கும் இவற்றிற்கும் புவி இடைக் காலத்திலிருந்து (Mesozoic) வேறுபாடிருப்பதாகத் தெரிகிறது. அக்காலத்துக்குப் பிறகும் தென் ஆசியாவோடும் தென் அமெரிக்காவோடும் ஆஸ்திரேலியாவுக்கு நிலத் தொடர்பு இருந்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. ஆயினும் ஆஸ்திரேலிய விலங்குகள் இடைப் பிராணியுகத்தவைகளாகவே காண்கின்றன. உலகத்தில் மற்றெல்லாப் பாகங்களிலும் உள்ள பூனையும் பன்றியும் இங்கு முன்பு இருந்ததில்லை. நிலப்பாலூட்டிகளில் ஒருவகை நாய், சிலவகை எலிகள், வௌவால்கள் தவிர மற்றவையெல்லாம் பலவிதமான மிகுந்த சிறப்பியல்புகளுள்ள பைப் பாலூட்டிகளும் (Marsupials) இரண்டு வியக்கத்தக்க மானோட்டிரீம்களும் (Mono-treme) ஆகும். ஆர்னிதொரிங்கஸ் (Ornithorhynchus), எக்கிட்னா (Echidna) என்னும் இரண்டு மானோட்டிரீம்களும் இப்போதுள்ள பாலூட்டிகளிலெல்லாம் மிகப் பழமையானவை. பை விலங்குகளில் முக்கிய மானவை காங்கரு, வாலபி, லாம்பட், தாசியூரஸ் என்பவை. இங்குள்ள ஒப்போசங்களில் சில வகைகள் உடம்பின் இரு பக்கத்திலும் முன்பின் கால்களைச் சேர்த்துள்ள தோல் மடிப்புக்களின் உதவியால் மரத்துக்கு மரம் பறப்பதுபோலச் சறுக்கிச் செல்லும்.

மற்ற நிலப்பகுதிகளில் உள்ள பறவைகளேயன்றி, ஈமு, காசாவரி, கிண்ணாரப்பறவை (Lyre bird) என்பவைகளும் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றன. இவை மூன்றும் அங்குமாத்திரமே உண்டு. மேடுகட்டும் பறவைகள், லாரிகீட்டுகள், பலவகைக் கிளிகள் இங்கிருக்கின்றன. பெரிய மீன் கொத்தி அல்லது கூக்கபுரா (சிரிக்கும் பறவை) எனப்படுவதும் இங்குள்ளது.

ஊர்வனவற்றுள் பலவகை ஆமைகள் உண்டு. கிட்டத்தட்ட 400 வகைப் பல்லி, அரனை, ஓணான் உண்டு. பாம்புகளில் நூறுவகையுண்டு. சில, மலைப்பாம்பு மாதிரி 15 அடி நீளமுள்ளவை. நஞ்சுள்ளவை சிலவே. தவளைகளில் மரத்தவளைகள் அதிகம். ஒருவகைத் தவளை நிரம்பத் தண்ணீர் குடித்து உடம்பை ஊத வைத்துக்கொண்டு, சேற்றில் புதைந்து வறட்சிக் காலத்தைக் கழிக்கும். மீன்களில் சேற்றுமீன் சிராட்டொடஸ் (Ceratodus) என்பதற்கு நுரையீரல் உண்டு. நீர் வற்றிப்போனால் அல்லது கெட்டிருந்தால் இது காற்றைச் சுவாசிக்கும். வண்டு, எறும்பு முதலியவை நிரம்ப இருக்கின்றன.

இயற்கையாக அந்த நாட்டுக்கே உரிய விலங்குகள் பெரும்பாலும் அருகிப்போய்விட்டன. அவற்றுள் பல ஒழிந்தே போய்விட்டன. வெளிநாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டவை மிகவும் பெருகிவிட்டன முயல் போன்றவை பெருகுவதற்கு இடையூறான காட்டு விலங்குகள் இந்தக் கண்டத்தில் இல்லையாதலால் அவை நிரம்பப் பெருகிப்போய் உழவுக்குக் கேடு விளைவிக்கின்றன.

மானிடவியல்: மானிடவியல் சம்பந்தமாக ஆஸ்திரேலியா என்பதில் ஆஸ்திரேலியாமட்டும் ஒரு பிரிவும், நியூகினி. மெலனீசியா மற்றொரு பிரிவும் ஆக இரண்டு பிரிவுகள் உள்ளன. ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள் தோற்றத்திலும் பண்பாட்டிலும் மற்றப் பிரிவு ஆதிக் குடிகளிலிருந்தும் வேறுபட்டவராவர். அவர்கள் பழுப்பு நிறமும், நடுத்தர உயரமும், மெல்லிய உறுப்புக்களும், குறுகிய தலையும், பின்சாய்ந்த நெற்றியும், பருத்த புருவ எலும்பு முகடும், விரிந்த மூக்கும், பள்ளமான மூக்கடியும், முன்னுக்கு நீண்ட தாடையும், விரிந்த வாயும், கறுத்த மயிரும் உடையவர்கள். மயிர் சுருண்டும் இருக்கும், சுருளாமலும் இருக்கும்; முகத்திலும் உடலிலும் அடர்ந்திருக்கும். நாட்டின் வறண்ட பகுதிகளில் வசிப்பவர்களின் குழந்தைகளுக்கு மயிர் கருமை குறைந்திருக்கும். ஆஸ்திரேலியாவுக்கு வந்த காலத்திலேயே இந்த மக்கள் உணவு தேடுவோராகவும், வேட்டையாடுவோராகவும் இருந்துளர். அதை அடி நிலையாகக் கொண்டவையே அவர்களுடைய பண்பாடும் சமூக அமைப்பும்.

நியூகினியிலும் மெலனீசியாவிலும் உள்ள ஆதிக்குடிகள் 15 இலட்சமாவார். அவர்கள் மிகுந்த வேறுபாடுடையவர். மயிர் தவிர ஏனைய உடல் தோற்றங்களில் ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளைப் போன்ற மக்கள் பெரும்பாலும் மேற்குப் பப்புவா (Papua) விலும், சிறிதளவு மெலனீசியாவிலும் காணப்படுகின்றனர். நியூகினியின் மேட்டு நிலங்களில் குள்ளர்களும் கிட்டத்தட்டக்குள்ளமானவர்களும் மிகுதியாகக் காணப்படுகிறார்கள். அவர்களுள் மேற்குப் பகுதியிலுள்ளவர்கள் நிறம் அவ்வளவு கறுப்பாக இராது. பப்புவாவின் கிழக்குக் கோடியிலும் அதன் அருகிலுள்ள தீவுகளிலும் மலேகூலா (Malekula) விலும் உள்ள மக்களிடையே குள்ளர்களின் தொகை மிகுதியாகவே காணப்படுகிறது. இந்தக் குள்ளமான மக்கள் அகன்ற மூக்கும் நடுத்தரமான தலையும் உடையவர். பப்புவர் என்று சொல்லப்படுவோர், அதாவது மெலனீசிய மொழி பேசாத மக்கள், பழுப்பு நிறமும், சுருண்ட மயிரும், நடுத்தர உயரம் முதல் அதிக உயரம்வரையுள்ள உயரமும், உயர்ந்த மூக்கும், நீண்ட தலையும், நேரானது முதல் பின் சாய்ந்தது வரையுள்ள நெற்றியும் உடையவர்கள். நியூகினியின் கீழ்க்கோடியில் பலதிறப்பட்டவர்கள் காணப்படுகிறார்கள். அதன் காரணம் ஓரளவு மெலனீசிய மக்கட் கலப்பாகும். அவர்கள் குள்ளர் முதல் நெடியர்வரையுள்ள உயரமுடையவராயும், நடுத்தரமான தலைமுதல் நீண்ட தலைவரையுள்ளவராயும், அகன்ற நாசி முதல் ஓடுங்கிய நாசிவரையுள்ள நாசியுடையவராயும், இளம் பழுப்பு முதல் கறுப்புவரையுள்ள நிறமும் உடையவர்களாயும் இருக்கின்றனர்.

அதேபோல் மெலனீசிய மக்களிடையிலும் வேறுபாடு மிகுதியாகக் காணப்படுகிறது. உடம்பின் நிறம் பெரும்பாலும் செம்பு நிறமாயிருக்கும்; கறுப்பாக இருப்பதுமுண்டு. மயிர் சுருண்டிருந்தாலும் அறல் போல அலையலையாகவு மிருப்பதுண்டு. சராசரி உயரம் நடுத்தரத்திலும் குறைந்தது. ஆயினும் சிலர் ஆறு அடி உயரமாகக்கூட இருப்பர். தலை பெரும்பாலும் நீண்டிருக்குமாயினும் சில பகுதியிலுள்ளவர்கள் அகன்ற தலை உடையவராகவும் இருப்பர். சப்பை மூக்குமுதல் கூரிய மூக்குவரை யுடையவராகவு மிருப்பர்.

ஆஸ்திரேலியாவிலுள்ள ஆதிக்குடிகள் தென் இந்தியாவிலுள்ள திராவிடர்களுக்கு முற்பட்ட மலைச்சாதியாரையும், இலங்கையிலுள்ள வேடர்களையும், மலேயாசியாவிலுள்ள ஆஸ்திரலாயிடுகளைப் போன்ற சில குழுக்களையும் சேர்ந்தவர்கள் என்று கூறுவது வழக்கம். ஆஸ்திரலாயிடுகளைக் காக்கசாயிடு வகுப்பைச் சேர்ந்த ஆதிப் பிரிவினர் எனச் சிலர் எண்ணுகிறார்கள்.

நியூகினியிலும் மெலனீசியாவிலுமுள்ள மக்கள் நீக்ராயிடு மக்களினத்தைச் சேர்ந்தவராகவே கருதப்படுகிறார்கள். இவர்களும் நீக்ராயிடுகளைப் போலவே தோன்றி,ஆப்பிரிக்காவிலிருந்து இந்தப் பகுதிக்குக் குடியேறியவர்களா யிருக்கலாம் என்று கருதப்படுகிறார்கள். ஆனால், அண்மையில் கண்டெடுக்கப்பட்ட மண்டை யோடுகளிலிருந்தும், இக் காலத்துப் பாரம்பரிய இயல் ஆராய்ச்சிகளிலிருந்தும், பிதிகாந்திரபஸ் என்னும் குரங்குமனிதன் தோன்றிய பழைய அடிமரத்திலிருந்து இந்தப் பகுதிகளிலே இயற்கையிலேயே எழுந்த கிளைகளின் வேறுபாடுகளாயிருக்கலாம் இந்தச் சாதியினர் என்று தோன்றுகிறது. ஜாவாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பழைய கற்காலத்தில் வந்த வாட்ஜாக்குகள் (Wadjaks) இங்கு வந்தபின் தனித்து வாழ்ந்து பலவிதமான நிலைமைகளுக்கு உள்ளாகியபடியால் இந்த வேறுபாடுகள் உண்டாகி யிருக்கலாம்.

டாஸ்மானியர்கள் மெலனீசிய வகுப்பினரின் ஒரு கிளையாவர். அவர்கள் ஆஸ்திரேலியாவில் வசித்தார்கள் என்பதற்குப் போதுமான ஆதாரமில்லை. மெலனீசியரில் ஆன்டாங், ஜாவா, திக்கோபியா, ரென்னெல் போன்ற தீவுகளில் குடியேறிய பாலினீசியரும் அடங்குவர்.

ஆஸ்திரேலிய ஆதிக் குடிகளின் பண்பாடு உணவு சேகரித்தல், வேட்டையாடல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் மிகுந்த வேறுபாடுகள் இல்லாததாகும். ஆனால் நியூகினி, மெலனீசியாவின் பண்பாடுகள் பெரும்பாலும் தோட்டம் போடுதல்,பன்றி வளர்த்தல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் பல வேறுபாடுகள் உடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் அத் தொழில்கள் பலவிதமான நிலைமைகளில் செய்யப்பட்டமையும், வேறு மக்களின் குடியேற்றம், வியாபாரம், போர்

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் நடனம்
உதவி : ஆஸ்திரேலிய ஹை கமீஷனர், புதுடெல்லி.

இவை வாயிலாகத் தொடர்பு டஏற்பட்டமையுமாம். அதனால் நியூகினியும் மெலனீசியாவும் பலவிதமான பண்பாடுகள் சேர்ந்தவை என்பது புலனாகும்.

ஆதிக்குடிகள் கரிய பழுப்பு நிறமுடையவர்கள். தென் இந்திய திராவிடர்களுக்கு முற்பட்ட மலைச்சாதியாரைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். இவர்கள் அறிவு குறைந்தவர்கள் என்று எண்ணிவந்த கருத்துக்கு ஆதாரமில்லை. மூளையின் பருமனும் அறிவுத் திறனும் ஐரோப்பியர்களிடத்தில் காணும் வீச்சளவிலேயே காணப்படுகின்றன.

அவர்கள் வாழ்க்கை வசதிகளில் எளிமையான பண்பாடுடையவர்கள்; ஈட்டி, வேல், வளரித்தடி, கேடயம், கற்கோடரி, கற்கத்தி, வலை, கூடை முதலியவற்றைக் கொண்டு காட்டில் உணவு தேடியும் வேட்டையாடியும் பிழைத்து வருகிறார்கள். இயற்கையைப் பற்றி அவர்களுக்குள்ள அறிவு அதிகமாகும்.

அவர்களுடைய சமூக அமைப்பு அவர்களுடைய வாழ்க்கை முறைக்குத் தக்கதாக இருக்கிறது. சமூகத்தின் அடிநிலை வேட்டையாடும் சிறு குழுவாகும். அதில் உடன் பிறந்தார் குடும்பங்களும் அவர்களுடைய நில புலன்களும் அடங்கும். இத்தகைய சிறு குழுவினர் வாரிசு வாயிலாகவும் மணம் வாயிலாகவும் உறவு உடையவர்களாகிப் பெருங் குழுவாவர் (Tribe). ஒரு குழுவினரிடையே உள்ள பழக்க வழக்கங்களும் கருத்துக்களும் மொழியும் பொதுவாகக் காணப்படும். ஒவ்வொரு குழுவும் பல பிரிவுகள் சேர்ந்ததாயிருக்கும். ஒவ்வொரு ஆண்மகனும் தீட்சை பெறுவான். மக்கள் மூத்தவர்கள் சொற்படி கேட்பார்கள். அதற்குத் தீட்சை துணைசெய்யும்.

அவர்களுடைய மதத்தில் முற்பிறப்பு, நித்தியக் 'கனவு' என்னும் கொள்கைகள் காணப்படுகின்றன. மரணம் ஏற்படுவது மந்திரவாதத்தால் என்றும், அதை மந்திரவாதிகள் அல்லது உயர்ந்தோர் அறிவார் என்றும் கருதுகிறார்கள். மந்திரவாதிகள் மனோவசியம் முதலிய பல வித்தைகளை அறிந்தவர்கள் என்று நம்புகிறார்கள்.

ஐரோப்பியர்கள் 1788-ல் ஆஸ்திரேலியாவுக்கு வந்து குடியேறிய காலத்தில் இந்த ஆதிக்குடிகள் தொகை 3,50,000. 1952-ல் சுத்த ஆதிக்குடிகள் 60 ஆயிரம்; கலப்பு ஆதிக்குடிகள் 30 ஆயிரம். இனி அவர்கள் தொகை குறையாது என்பதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. ஏ.பி.எ.

வரலாறு: 17ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாக் கண்டம் என ஒன்று இருப்பதை அறிந்து, ஐரோப்பிய நாடுகள் அதைக் கண்டுபிடிக்க முயன்றன. மாலுமி டாரிஸ் (Torres) நியூகினிக்கும் ஆஸ்திரேலி -யாவுக்கும் இடையிலுள்ள ஜலசந்தியைக் கண்டுபிடித்தார். அதற்கு டாரிஸ் ஜலசந்தி என்று பெயர். 1642-ல் ஏபல் டாஸ்மன் (Abel Tasman) என்ற டச்சு மாலுமி ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரமாகச் சென்று, அவர் பெயரால் அழைக்கப்படுகின்ற டாஸ்மேனியாத் தீவைக் கண்டுபிடித்தார். ஆஸ்திரேலியா ஒரு தீவு என்று முதன் முதலில் கூறியவர் டாஸ்மன் ஆவார்.

வளரித்தடி
உதவி : ஆஸ்தி ரேலிய ஹை கமிஷனர், புதுடெல்லி.

முதன் முதலாக ஆஸ்திரேலியாவுக்குச் சென்ற ஆங்கில மாலுமி வில்லியம் டாம்பியர் (William Dampiar) 1689-ல் அங்குச் சென்றார். ஆனால் அவர் ஆஸ்திரேலியா ஆங்கிலக் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று கருதவில்லை.

ஆஸ்திரேலியா ஐரோப்பியர்கள் வாசஞ் செய்யத் தகுந்த இடம் என்று கண்டுபிடித்தவர் ஆங்கில மாலுமி காப்டன் குக் என்பவர். 1768 ல் இவர் ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கரையைச் சுற்றிப்பார்த்துப் பலவிதமான செடி கொடிகளைக் கண்டு மகிழ்ந்து, அந்த விரிகுடாவிற்குப் பாட்டனி பே (Botany Bay) என்று பெயரிட்டார். அக் கடற்கரை தென்வேல்ஸைப் போலத் தோற்றம் அளித்ததால் அதை நியூ சௌத் வேல்ஸ் என்று அழைத்தார்.

ஆஸ்திரேலியாவில் பிரிட்டிஷ் கொடியை நாட்டிப் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்துடன் சேர்த்தவர் காப்டன் பிலிப் என்னும் ஆங்கில மாலுமி. முதலில் ஆஸ்திரேலியாவுக்கு ஆங்கிலக் குற்றவாளிகள் அனுப்பப்பட்டனர்.

நாளடைவில் அக் கண்டம் குடியேற்றத்திற்கு ஏற்ற நாடு என்று புலப்பட்டது. தீவிரமுள்ள ஆங்கிலேயர் ஆஸ்திரேலியா சென்று, கண்டம் முழுவதும் ஆராய்ந்து பார்த்து, அங்கு ஆட்டுப் பண்ணைகள் அமைக்கலாமென்றும், வேளாண்மையும் செய்யலாமென்றும் ஆங்கில அரசாங்கத்திற்கு அறிவித்தனர். முக்கியமாகக் கிபன் வேக்பீல்டு 1833-ல் குடியேற்றச் சங்கமொன்றை அமைத்து, பிரிட்டிஷ் ஏழை மக்களை ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பவேண்டுமென்று பிரசாரஞ் செய்தார். ஆஸ்திரேலியாவிலுள்ள நிலங்களை ஏக்கருக்கு ஒரு ஷில்லிங்காக விலைக்குக் கொடுக்காமல், நியாயமான விலைக்குக் கொடுத்து, அத் தொகையை ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் குடியேறச் செலவிட வேண்டுமென்று கூறினார். அவரது முயற்சியினாலும், ஆங்கில அரசாங்கத்தின் ஊக்கத்தினாலும் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா, தென் ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து, டாஸ்மேனியா ஆகிய ஆறு குடியேற்ற நாடுகள் ஆஸ்திரேலியாவில் தோன்றின.

ஆங்கிலேயர் குடியேறினதும் ஆஸ்திரேலியாவிலுள்ள சுதேச மக்களில் ஒரு சிலரைப் பால் பண்ணைகளில் வேலைசெய்ய வைத்துக்கொண்டனர். மற்றவர்கள் வடக்குப் பிரதேசத்தின் உள்பாகத்தில் வசித்து வந்தனர். பல்லாயிர மைல்களைக் கடந்து அஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு ஆங்கிலேயர் முதலில் சற்றுத் தயங்கினர். ஆதலால், அங்கு மக்கள்தொகை பெருகவில்லை. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் தங்கச் சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படவே அக்கண்டத்திற்குப் பலர் சென்றனர். மக்கள்தொகை பெருகியது. தங்கம் வெட்டியெடுப்பது குறைந்ததும், பலர் ஆட்டுப் பண்ணைகளை அமைப்பதிலும் வேளாண்மையிலும் ஈடுபட்டனர். ரெயில்வேக்கள், சாலைகள் முதலிய போக்குவரத்துச் சாதனங்கள் அமைக்கப்பட்டன.

மக்கள்தொகை அதிகமாகவே, அரசியலும் திருத்தியமைக்கப்பட்டது. முதலில் ஆஸ்திரேலியக் குடியேற்ற நாடுகள் ஒவ்வொன்றிலும் ஆங்கில அரசரால் நியமிக்கப்பட்ட கவர்னர் ராணுவத்தின் உதவியால் ஆட்சி புரிந்து வந்தார். ஆனால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக்கு ஒன்றன்பின் ஒன்றாகப் பொறுப்பாட்சி அளித்தது. அந்நூற்றாண்டி னிறுதியில் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களை ஒரு கூட்டாட்சித் திட்டத்தில் கொண்டு வர வேண்டுமென்று ஒரு சிலர் முயன்றனர். ஆனால் அதற்குச் சில இடையூறுகளிருந்தன. ஆஸ்திரேலியாவில் மக்கள் சிற்சில இடங்களிலே தான் வசித்தனர். போக்குவரவு வசதிகள் நன்கமைக்கப்படவில்லை. மேலும் குடியேற்ற நாடுகள் ஒற்றுமையை விரும்பவில்லை; தனிப்பட்ட ஆட்சியையே விரும்பின.

நாளடைவில் இரண்டு காரணங்கள் அவை யொன்று சேரவும், ஒரு கூட்டாட்சித் திட்டத்தை வகுக்கவும் உதவின. ஒன்று அயலார் எதிர்ப்பர் என்னும் அச்சம்; மற்றொன்று நாட்டை முன்னேற்றமடையச் செய்யும் நோக்கம். பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகிய மூன்று வல்லரசுகள் 19ஆம் நூற்றாண்டினிறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு வடக்கேயுள்ள பசிபிக் தீவுகளை ஆக்கிரமித்துப் பங்கிட்டுக் கொண்டன. இது ஆஸ்திரேலியாவிற்கு அச்சத்தை உண்டு பண்ணிற்று. ஆகவே ஆஸ்திரேலியக் குடியேற்றங்கள் கூட்டாட்சியை விரும்பின.

மேலும் ஜப்பான் முன்னேற்றமடைந்துகொண்டு வந்தது. 19ஆம் நூற்றாண்டி னிறுதியில் ஜப்பானில் மக்கள்தொகை வளர்ந்து, அவர்கள் ஆஸ்திரேலியாவிற்குச் செல்லக்கூடும் என்ற நிலைமை இருந்தது. ஆஸ்திரேலியரோ ஜப்பானியர் தங்கள் கண்டத்திற்கு வருவதைத் தடுக்கக் கங்கணங் கட்டிக்கொண்டனர். ஜப்பானியர் அங்குச்சென்றால் குறைந்த கூலிக்கு வேலை செய்து வாழ்க்கைத் தரத்தைக் குறைத்துவிடுவார்கள் என்ற அச்சம் ஆஸ்திரேலியக் குடியேற்றங்களுக்கிருந்தது. வெள்ளையர்களே ஆஸ்திரேலியாவிலிருக்க வேண்டுமென்ற நோக்கத்தைக் கொண்டு (White Australia Policy) ஜப்பானின் முயற்சியைத் தடுப்பதற் குக் கூட்டாட்சி அவசியமென்று புலப்பட்டது. பிரிட்டிஷ் பார்லிமென்டு ஆஸ்திரேலியக் காமன்வெல்த் சட்டத்தை 1900-ல் பிறப்பித்தது. 1901-ல் அது அமலுக்கு வந்தது.

ஆஸ்திரேலியாவிலுள்ள தொழிற்கட்சியின் கிளர்ச்சியினால், காமன்வெல்த் அரசாங்க வேலை நேரம், சம்பளத்திட்டம். முதலியவைகளை நிருணயித்திருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் உள்ள தகராறுகளைத் தீர்ப்பதற்கு நீதிச்சபைகள் ஏற்படுத்தியிருக்கிறது. வயதான காலத்திலும், நோய்ப்பட்ட காலத்திலும், தொழிலாளிக்குப் பென்ஷன் கொடுக்கிறது. ஆஸ்திரேலியாவின் நிலத்தில் பாதி அரசாங்கத்திற்குச் சொந்தம். லைசென்சு அல்லது ஒற்றிக்கு நிலத்தை வாங்கி, மக்கள் வேளாண்மை செய்கின்றனர். நாட்டில் கட்டாய ஆரம்பக்கல்வித் திட்டம் அமலிலிருக்கிறது. எம். வீ. சு.

அரசியல் அமைப்பு : ஆஸ்திரேலியாவிற்கு ஆஸ்திரேலியக் காமன்வெல்த் என்று பெயர். இது மேற்கு ஆஸ்திரேலியா, வடபிரதேசம், தென் ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து, நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா என்னும் ஆறு இராச்சியங்கள் சேர்ந்த ஒரு கூட்டாட்சி. இதன் தலைநகரமாகிய கான்பர்ரா ஒரு தனி இராச்சியம். டாஸ்மானியா தீவும் இக்காமன்வெல்த்தைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும்.

ஆஸ்திரேலியா பிரிட்டிஷ் காமன்வெல்த்தில் அடங்கிய ஒரு சுதந்திர நாடு. அதற்கென்று கூட்டாட்சி முறையில் அமைக்கப்பட்ட தனி அரசியலமைப்பு உண்டு. இது எழுதியிடப்பட்ட ஓர் அமைப்பாகும். ஆஸ்திரேலிய இராச்சியங்கள் 1901-ல் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டாட்சி ஐக்கியம் ஏற்படுத்திக்கொண்டன. கூட்டாட்சிக்கும் இராச்சியங்களுக்கும் தனித்தனி அதிகாரங்களிருப்பினும், கூட்டாட்சிக்கென்று வெளிப்படையாகக் குறிக்கப்பெறாத அதிகாரங்களெல்லாம் இராச்சியங்களைச் சார்ந்தவை. ஆயினும் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மத்திய அரசாங்கத்திற்குள்ள அதிகாரங்களைவிட ஆஸ்திரேலிய மத்திய அரசாங்கம் அதிக அதிகாரங்களை உடையது. மத்திய அரசாங்கம் பாங்கு, இன்ஷுரன்சு, மணம் முதலியவற்றையும் கவனிக்கிறது அமெரிக்க ஐக்கிய நாடுகளில் இவை இராச்சிய நிருவாக வரம்பிற்குட்பட்டவை. ஆஸ்திரேலியத் தேர்தல் சட்டத்தின் ஒரு முக்கியமான ஷரத்துப்படி தேர்தலில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒவ்வொருவரும் கட்டாயமாக வாக்களித்தே தீரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார். இக் கட்டாயம் 1925லிருந்து அமலிலிருக்கிறது.

சட்டசபை : ஆஸ்திரேலிய சட்டசபைக்குப் பார்லிமென்டு என்ற பெயர். கூட்டாட்சிப் பார்லிமென்டு. செனட், பிரதிநிதிகள் சபை என இரு சபைகள் கொண்டது. பிரதிநிதிகள் சபையில் செனெட்டில் இருப்பதைப்போல இருமடங்கு அங்கத்தினர்கள் உண்டு. வடபிரதேசத்திலிருந்து தேர்ந்தனுப்பப்படும் ஓர் அங்கத்தினர் மட்டும் விவாதத்தில் கலந்துகொள்ள முடியுமேயன்றி வாக்களிக்க முடியாது. செனெட்டிற்கு ஒவ்வோர் இராச்சியமும் பத்து அங்கத்தினர்களை அனுப்புகிறது. இப் பார்லிமென்டு ஆண்டிற்கொருமுறை கூடியே தீரவேண்டும். ஒவ்வொரு சட்டசபை அங்கத்தினரும் பிரிட்டிஷ் குடியாகவும் ஆஸ்திரேலியாவில் 3 ஆண்டு வசித்தவராகவும் இருக்கவேண்டும். ஆஸ்திரேலிய அரசியல் தலைவர், பிரிட்டிஷ் மன்னரால் நியமிக்கப்படும் ஒரு கவர்னர் ஜெனரல். இவர் மன்னருடைய பிரதிநிதியாக இருப்பார். சட்டசபை நிறைவேற்றும் சட்டங்களை நிருவாகம் செய்வார். இவருக்கு முக்கியமான சில விஷயங்களில் ஆலோசனை சொல்ல ஒரு நிருவாக சபை உண்டு. பிரதிநிதிகள் சபையில் உள்ள பெரும்பான்மைக் கட்சியின் தலைவர் பிரதம மந்திரியாயிருந்து மந்திரிசபை அமைக்கிறார். பிரதம மந்திரியும் அவர் பொறுக்கும் மந்திரிகளும் கீழ்ச் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களாயிருக்கவேண்டும். மந்திரிகளுக்கு ஆலோசனை கூற அரசாங்கக் காரியதரிசிகளும், இலாகாத் தலைவர்களும் உளர். மந்திரி சபையிலுள்ள மந்திரிகள் எல்லோரும் கவர்னர் ஜெனரலின் நிருவாக சபை அங்கத்தினர்களாகவும் இருப்பர்.

ஆஸ்திரேலியத் தலைநகரான கான்பெர்ரா நகரம், தலைநகரப் பிரதேசமான 940 சதுர மைல் பரப்பின் மத்தியில் இருக்கிறது. இப்பிரதேசம் கூட்டாட்சியால் நிருவகிக்கப்படுகிறது. கான்பெர்ரா நியூ சவுத் வேல்ஸ் இராச்சியத்தின் மத்தியில் அமைந்துள்ளதாயினும் அவ்விராச்சிய ஆட்சிக்கு இந்நகர நிருவாகத்தில் எவ்வித அதிகாரமும் இல்லை.

கூட்டாட்சி அரசாங்கத்திற்கு நிதி, நாணயம், பாங்கு, பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தபால், தந்தி, மக்கள் தொகைக் கணக்கு, பதிப்புரிமை, ரெயில்வே, சமூக நலன்கள் முதலிய இலாகாக்களின் நிருவாகப் பொறுப்பு இருக்கிறது. பல மசோதாக்களைப் பிரேரேபிப்பதற்குப் பிரதிநிதிகள் சபைக்கே உரிமையுண்டு.

இராச்சியச் சட்டமும் கூட்டாட்சிச் சட்டமும் முரண்பட்டால் பிந்தியதே நிலைக்கும். இவ்வரசியல் சட்டத்தை மாற்றவும், புதிய இராச்சியங்கள் ஆக்கவும் வழியுண்டு. வாக்காளர் தொகுதியின் பெரும்பாலோர் சம்மதமின்றி அரசியல் சட்டத்தை மாற்ற முடியாது. லிபரல் கட்சி, ஆஸ்திரேலியத் தொழிலாளர் கட்சி ஆகியவை முக்கியமான கட்சிகள்.

இராச்சிய அரசாங்கம் : ஒவ்வோர் இராச்சியத்திற்கும் ஒரு தனி அரசியல் அமைப்பு உண்டு. இவை பெரும்பாலும் கூட்டாட்சி அரசாங்க முறையைப் பின்பற்றியே உள்ளன. இராச்சிய அரசியல் தலைவருக்குக் கவர்னர் என்பது பெயர். குவீன்ஸ்லாந்தில் தவிர ஏனைய இராச்சியங்களில் இரு சபைகளுள்ள சட்டசபை உண்டு. குவீன்ஸ்லாந்தில் மேல்சபை 1922-ல் நீக்கப்பட்டது. கல்வி, சுகாதாரம், மருத்துவச்சாலைகள், விவசாயம், காடுகள், சாலைகள் முதலிய விவகாரங்களை இராச்சிய அரசாங்கமே கவனிக்கிறது.

நீதி நிருவாகம்: ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் (Federal High Court) அமெரிக்க ஐக்கிய நாடுகளிலுள்ள உச்ச நீதிமன்றத்தின் (Supreme Court) அதிகாரங்கள் முழுவதையும் நிருவகிக்கிறது. இதில் தலைமை நீதிபதியும் ஆறு நீதிபதிகளும் உளர். இவ்வுயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்களே முடிவானவை. இம்மன்றமோ அல்லது பிரிட்டிஷ் அரசரோ அனுமதித்தால் இங்கிலாந்திலுள்ள பிரிவு கவுன்சிலுக்கு அப்பீல் உண்டு. கூட்டாட்சி இராச்சிய நீதிமன்றங்களைத் தவிர, மத்தியஸ்தக் கோர்ட்டுக்களும் சமாதானக் கோர்ட்டுக்களும் உள. இவை தொழிலாளிகள் தகராறுகளையும் வழக்குக்களையும் விசாரிக்கின்றன. ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்திற்கு உடன்படிக்கைகள், மத்திய அரசாங்கத்திற்கும் இராச்சியங்களுக்கும் இடையே ஏற்படும் வழக்குக்கள் முதலியவற்றைப்பற்றி விசாரிக்க அசல் அதிகாரமுண்டு. உயர் நீதிமன்றத்தின் அசல் அதிகாரத் தீர்ப்புக்களை அப்பீலில் ஏற்றுக்கொள்ளும் உரிமையும் அக் கோர்ட்டிற்கே உண்டு.

தல அரசாங்கம் : தல ஆட்சி சம்பந்தமான சட்டங்களை யியற்ற இராச்சிய சட்டசபைகளுக்கே அதிகாரம் உண்டு; ஆயினும் ஆஸ்திரேலியா முழுவதிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான தல ஆட்சி நடைபெறுகிறது. தல ஆட்சிகள் அதிகாரத்தில் சாலைகள், பாலங்கட்டுதல், தண்ணீர் வசதி, டிராம் வசதி, பஸ் வசதி, மருத்துவச்சாலைகள் முதலியவற்றின் நிருவாகம் அடங்கியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆல்டர்மன், அங்கத்தினர்கள் முதலியவர்களால் நகராட்சி நடத்தப்பெறுகிறது. சில இராச்சியங்களில் பல தல ஆட்சிகள் சேர்ந்து ஒரு வசதியை மக்களுக்குச் செய்ய முன்வருகின்றன.

ஆஸ்திரேலிய அரசியலமைப்புச் சட்டப்படி காமன்வெல்த் இராச்சிய சமயம் என்று ஒரு சமயத்தை ஏற்படுத்த முடியாது.