கலைக்களஞ்சியம்/ஆஸ்பிரின்
ஆஸ்பிரின்: அசிட்டைல் சாலிசிலிக அமிலம் என்ற ரசாயனப் பொருள் வாணிபத்தில் ஆஸ்ப்பிரின் என வழங்குகிறது. இது ஒரு வெண்மையான படிக வடிவுள்ள தூள். தலைவலிக்கும், வாத ஜுரத்திற்கும், ஜலதோஷத்திற்கும் இது மருந்தாக மிக அதிகமாகப்பயன்படுகிறது. வாத நோய்களுக்கு இதை மருந்தாக உட்கொண்டால் உடனடியாகச் சுரம் தணிவதுடன் மூட்டுக்களின் வீக்கம் குறைந்து வலி நீங்குகிறது. தலை வலிக்கும் மற்ற நரம்பு வலிகளுக்கும் இதை மருந்தாக உட்கொண்டால், வலி நிவாரணமடையுமே தவிர, வலிக்குக் காரணமான கோளாறு நீங்குவதில்லை. ஆகையால் இது தாற்காலிகமாகவே பயன் தருகிறது. இதை அதிகமாக உட்கொள்வதால் வயிற்றுக் குமட்டல், வாந்தி, காதிரைச்சல், சில சமயங்களில் பார்வை மங்குதல் முதலிய விபரீதங்கள் விளையலாம். இதைக் கொடுப்பதால் சுரத்தின் வெப்பநிலை குறையும்போது நிரம்ப வேர்வையுண்டாகும். அப்போது உடம்பில் குளிர் படாமற் பார்த்துக்கொள்ளவேண்டும்.