கலைக்களஞ்சியம்/இட்ரிசி
இட்ரிசி (1100 - சு. 1160) அரேபியாவைச் சேர்ந்த பூகோள அறிஞர்; இவர் தாம் முகம்மது நபியின் மரபில் வந்ததாகக் கூறிக்கொண்டார். ஸ்பெயின், பார்பரி, ஆசியாமைனர் முதலிய இடங்களில் பிரயாணம் செய்துவிட்டு வந்த இவர், சிசிலியில் அரசனாயிருந்த II-ம் ரோஜர் என்பவன் அவையில் தங்கினார். இவர் உலகப் படம் ஒன்றை வெள்ளியில் தயார்செய்து அவ்வரசனுக்கு அளித்தார். அவ்வரசன் பல நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி, அந்நாடுகளைப் பற்றிய விவரங்களைச் சேகரித்துக் கொண்டு வரச் செய்து, இட்ரிசியை ஒரு பூகோள நூல் எழுதும்படி கேட்டுக்கொண்டார். அவ்வேண்டுகோளின்படி இட்ரிசி இயற்றிய உலக விளக்கம் அல்லது ரோஜர் நூல் என்னும் நூல் 1154-ல் பூர்த்தி செய்யப்பட்டது. இடைக்கால பூகோள அறிஞர்கள் இயற்றிய பூகோள நூல்களில் இத்நுலே முதன்மைத்தானம் வசிக்கிறது. இட்ரிசி மருத்துவம், அறம் முதலிய பொருள்களைப் பற்றியும் எழுதினார். இவர் செய்யுளியற்றுவதிலும் வல்லவராயிருந்தார்.