கலைக்களஞ்சியம்/இட்ருரியா
Appearance
இட்ருரியா இத்தாலி நாட்டில் எட்ரஸ்கர்கள் வாழ்ந்த பகுதி. இவர்கள் வாழ்ந்த காலம் ஏறக்குறைய கி.மு. 1044 என்பர். ரோமாபுரி ஒரு சிற்றூராக இருந்த காலத்திலே இட்ருரியா பெரிய சாம்ராச்சியத் தலைநகராயிருந்தது. இட்ரூரியா என்பது இப்போது டஸ்கனி என்று வழங்குகிறது. எட்ரஸ்கர்களின் நாகரிகம் தனிப்பட்டதாகும். அவர்களுடைய மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்ததன்று. இவர்கள் கைத்தொழிலிலும் கனித் தொழிலிலும் சிறந்திருந்தார்கள். ரோம நாகரிகம் பல அமிசங்களை எட்ரஸ்கர்களிடமிருந்து பெற்றதாகக் கூறுவர்.