கலைக்களஞ்சியம்/இந்தி

விக்கிமூலம் இலிருந்து

இந்தி: இது இந்தோ-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இருக்குவேத மொழியான இலக்கிய மொழி எல்லா மக்களும் எளிய முறையில் கருத்துக்களை வெளியிடத் தக்கதாக நாளடைவில் உருப்பெறலாயிற்று. அப்படி உருப்பெற்ற மொழிதான் சமஸ்கிருதம். இம்மொழி நல்ல இலக்கிய இலக்கணங்களுடன் விளங்கிய போதிலும், பரந்த தேசியத் தன்மையிலிருந்து சிறிது சிறிதாக ஒரு சம்பிரதாயமயமான மொழியாக மாறி வந்தது. இந்த மொழியைச் சாதாரணமாக யாரும் எளிதாக உபயோகப்படுத்த முடியவில்லை. அதனுடன் மற்ற மொழிகளின் தொடர்பும் ஏற்படலாயிற்று, அதன் காரணமாக அது புதிய புதிய கருத்துக்களை வெளியிடக் கூடியதாக ஆயிற்று. இவ்வாறு உருப்பெற்ற சமஸ்கிருத மொழி நாட்டில் பல பகுதிகளில் வேறு வேறு உருவங்களை அடையத் தொடங்கியது. இவை பிராகிருதங்கள் (இயற்கையான அமைப்போடு கூடியவை) என வழங்கப்பட்டன. இப் பிராகிருத மொழிகளில் தான் மகா வீரரும் புத்தரும் தம் மதங்களை உபதேசித்து வந்தனர்.

இந்தப் பிராகிருதங்கள் நாளடைவில் இலக்கிய மொழிகளாக மாறி இலக்கணங்களைப் பெற்றன. அதனால் இவை பொது மக்களுடன் தொடர்பற்றவையாகிவிட்டன. பொதுமக்களின் மொழிகள் வேறாக வளர்ச்சியடையத் தொடங்கின. இலக்கியப் பிராகிருதங்களைப் போல், இந்த மக்களின் மொழிகள் சீராகக் கட்டுப்பாட்டுடன் இல்லாமையால், பண்டிதர்கள் இவைகளை அபப்ரம்சங்கள் (சிதைந்த மொழிகள்) என்ற பெயரால் அழைக்கலாயினர். இந்த அபப்ரம்சங்களின் வளர்ச்சி கி.பி.500 முதல் 1000 வரை நடந்துகொண்டே யிருந்தது. காலப்போக்கில் இந்த அபப்ரம்சங்களுக்கும் இலக்கிய மொழியின் நிலைமை உண்டாயிற்று.

மத்திய காலத்து இந்தோ ஆரிய மொழிகளிலிருந்து கடைசியாக உண்டான அபப்ரம்சங்களிலிருந்தே தற்காலத்து ஆரிய மொழிகள் தோன்றின என்று புலனா கின்றது. இந்த ஆரியமொழிகளுள் இந்தியும் ஒன்றாகும். ஆகவே பிராகிருதத்தின் கடைசி அபப்ரம்ச காலமாகிய சுமார் கி. பி. 1050லிருந்து தான் இந்தி இலக்கியத்தின் ஆரம்பகாலம் என்று கருதப்படுகிறது. மொகலாயர் படையெடுப்புத் தொடங்கிய பிறகு இந்தி இலக்கியத்தின் போக்குத் தனிப்பட்ட முறையில் முன்னேறி வந்ததாகக் காணப்படுகிறது. அச்சமயத்தில் டெல்லி, கன்னோஜ், மகோபா ஆகிய மூன்று இராச்சியங்களிலும் இந்தி பரவியிருந்தது. இந்த இராச்சியங்களின் அரசர்களது ஆதரவில் பல கவிகள் இலக்கியத் தொண்டு புரிந்து வந்தார்கள்.

ஏறக்குறைய கி. பி. 1206 முதல் 1536 வரை இந்தி மொழிப் பிரதேசத்தைத் தவிர மற்றப் பாகங்கள் முஸ்லிம் மன்னரின் ஆட்சியில் வந்து விட்டன. இந்தச் சரித்திர நிகழ்ச்சியினால் இந்தி மொழியின் வளர்ச்சி அல்லது இலக்கியங்களின் தோற்றத்தைப் பற்றி யாதொரு குறிப்பிடத்தக்க காரியமும் நடந்ததாகத் தெரியவில்லை. இக்காலத்தில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர் அமீர்குஸ்ரூ ஒருவர் தான். இவரது மொழிப்பற்றுதலால் மொழி வளர்ச்சியில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டது. இதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு கிழக்கு இந்துஸ்தானத்தில் மதக்கிளர்ச்சிகள் நடைபெற்றன. அவற்றின் காரணமாக மொழி வளர்ச்சி பெரிதும் முன்னேற்ற மடைந்தது.

இந்தி மொழியானது சாரணர்களின் கீதங்களாலும், மதப்பிரசாரர்களின் சொற்பொழிவுகளாலும், பண்டிதர்களின் காவியங்களாலும், அரசர்களின் ஆதரவாலும் வளர்ச்சி பெற்று வந்தது. 10ஆம் நூற்றாண்டிலிருந்து 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை இந்தியில், அபப்ரம்சம், பிராகிருதம் என்னும் இவைகளின் ஆதிக்கமே இருந்து வந்தது. இந்த அபப்ரம்சங்கள் தத்தம் எல்லைகளுக்குள் சுயேச்சையாக வளர்ச்சியடைந்து இலக்கியங்களில் இடம் பெறத்தக்கவையாக ஆகிவந்தன. கோரக நாதரின் வசனம் இம்மாதிரி வளர்ச்சியடைந்த ஓர் அபப்ரம்சத்தின் இலக்கிய வடிவமாகும். இது வ்ரஜ மண்டலப் பிரதேசத்தில் வழங்கி வந்தது. ஆகையால் கோரக நாதர் இந்தியின் முதல் வசன எழுத்தாளரெனக் கருதப்படுகிறார்.

15ஆம் நூற்றாண்டு முடிவடையும் தருணத்தில் நாட்டின் நிலைமையில் ஒரு பெரும் மாறுதல் ஏற்பட்டது. ஆட்சிக்கோல் துருக்கியர் கையிலிருந்து மொகலாயர் கைக்கு மாறியது. அவர்கள் பொதுமக்கள், இந்து அரசர்கள் ஆகியவர்களுடைய நாகரிகத்தையும் கலாசாரத்தையும் அறிந்துகொள்ளப் பெரிதும் முயன்றனர். இதனால் நாட்டில் அமைதி நிலவி வந்தது. கோரகநாதர் முதலிலேயே வ்ரஜ மொழியை இலக்கிய மொழியாக்கி விட்டிருந்தார். 15ஆம் நூற்றாண்டிற்கு முந்திய புராதன இந்தியின் அவதப்பிரதேசத்து மொழியான அவதியும் வழங்கிவந்தாலும், வ்ரஜ மொழிக்குத்தான் மத்தியப் பிரதேசம் முழுவதிலும் இலக்கிய மொழியின் அந்தஸ்து கிடைத்து வந்தது. இதே காலத்தில் கோஸ்வாமி துளசிதாசர் அவதரித்தார். அவர் அவதி மொழியில் ராமசரித மானஸ் என்ற இராமாயணம் இயற்றினார். இவருக்குச் சற்று முன்பு மலிக் முகம்மது ஜாயசி பத்மாவத் என்ற நூல் இயற்றினார். அவதீ மொழியில் இலக்கிய வடிவத்தில் இவ்விரண்டு காவியங்கள்தாம் புகழ் பெற்றுள்ளன. இதற்குப் பிறகு அவதீயில் இலக்கிய வளர்ச்சி ஏற்பட முடியவில்லை.

வ்ரஜ மொழி 15ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் 17, 18ஆம் நூற்றாண்டுகள்வரை இலக்கியத்தில் நன்கு கையாளப்பட்டு வந்தது. வல்லபாச்சாரியரின் அஷ்டசாப் கோஷ்டியின் கவிகளில் முக்கியமானவரான பெயர் பெற்ற கவி சூர்தாசர் இயற்றிய சூர சாகர் வ்ரஜ மொழியின் மிகச் சிறந்த களஞ்சியமாகும். இதோடு கோஸ்வாமி துளசிதாசரின் வினய பத்ரிகா, கீதாவளீ ஆகிய இரண்டும் வ்ரஜ மொழியிலேயே இயற்றப்பட்டவை. அஷ்டசாப் கவிகள் எட்டுப் பேர்களும் வ்ரஜ மொழியிலேயே கவிதைகள் இயற்றினர். இவ்வாறாக 17, 18ஆம் நூற்றாண்டுகளில் இந்தி இலக்கியம் முழுவதும் வ்ரஜ மொழியிலேயே இயற்றப்பட்டு வந்தது.

துருக்கியர், மொகலாயர் ஆகியோரின் நெருங்கிய தொடர்பால் நாட்டு மொழிகள் சில மாறுதல்கள் அடைந்தன. அதாவது இந்தியின் சொற் களஞ்சியத்தில் துருக்கி, பாரசீக மொழிகளின் சொற்களும் புகுந்துவிட்டன. இவ்விதம் தற்கால இந்தியின் 'கடீபோலீ' என்னும் உருவம் அக் காலத்திலேயே உண்டானதாகும். 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திற்குள் டெல்லி, ஆக்ராப் பக்கத்து நூலாசிரியர்கள் இந்தக் கடீபோலீயை இலக்கிய மொழியாக்கத் தொடங்கினர். 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்த ஐதராபாத்தைச் சேர்ந்த கவி வலீ என்பவரை இந்தக் கடீபோலீயின் முதல் கவியெனக் கொள்ளலாம். 18, 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியின் இந்தக் கடீபோலீ உருவத்தை நன்கு கையாண்டு, இன்ஷா அல்லாகான், மீர், சௌதா, தாக், காலிப், ஜௌக் முதலிய கவிகள் செய்திருக்கும் இலக்கியத் தொண்டுகள் குறிப்பிடத்தக்கவை.

கோரக நாதர் தம் வசனக் கிரந்தங்களுக்கு ஏற்றதாகக் கருதி உபயோகித்து வந்த உருவத்தை சௌராசீ வைஷ்ணவோங்கீ வார்த்தா என்ற நூலில் காணலாம். அந்த உருவம் செய்யுளில்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந் நிலையில் நாட்டின் ஆட்சி மொகலாயர்களின் கையிலிருந்து ஆங்கிலேயர் கைக்கு மாறிற்று. இதனால் நாட்டில் பெரிய மாறுதல்கள் தோன்றின. 18ஆம் நூற்றாண்டின் வ்ரஜ மொழியின் பிரசாரம் மந்தமடைந்து, கடீபோலீயின் வளர்ச்சி அதிகரித்து வந்தது. ஆங்கிலேயர் கடீபோலீ வசன நடையைப் பிரபலப்படுத்தத் தொடங்கினர். 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தியின் வசன இலக்கியத்தில் கடீபோலீயின் உபயோகம் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் பெருமை யாவும் ஸ்ரீபார தேந்து அரிச்சந்திரர், சுவாமி தயானந்தர் ஆகிய இருவரையுமே சாரும். அச்சியந்திர வசதி அதிகரித்ததினால் கடீபோலீ மேன்மேலும் வேகமாகப் பரவத் தொடங்கியது. கடீபோலீயின் வளர்ச்சி முக்கியமாக டெல்லி, மீரட் பிரதேசங்களில் அதிகம் ஏற்பட்டது. இதே பகுதியில்தான் மேற்கு இந்தி உருவாயிற்று. இதன் பிரிவுகள் இன்றும் காணப்படுகின்றன. ஒன்று தற்கால இலக்கிய இந்தி. இது வடக்கு, மத்திய பாரதத்தில் வழங்கி வருவது. மற்றொன்று உருது. இது படிக்கத் தெரிந்த சில முஸ்லிம்களிடையே வழங்கி வருவது. இந்தக் கடீபோலீ இந்திதான் இன்று பாரதத்தின் அரசாங்க மொழியாக இடம் பெற்றுள்ளது. இந்தி மொழியானது தன் ஆதிகாலத்திலிருந்தே முழுச் சக்தியுடன் பல்வேறு நிலைமைகளில் வெவ்வேறு உருவங்களோடு மக்களின் தேவையை பூர்த்தி செய்து வந்திருக்கிறது.

இது இந்தியாவின் வெவ்வேறு மாகாணங்களின் மொழிகளிலிருந்து சொற்களை ஏற்றுக் கொண்டும், அவைகளுக்குத் தம் சொற்களை வழங்கியும் வந்திருப்பது தெளிவாகப் புலப்படுகிறது. இது இம் மொழியின் ஒரு சிறந்த அமிசமாகும். இவ்வாறு இந்தி மொழியானது இந்தியாவின் அரசியல் மொழியாக இருக்கத் தக்கவாறு வளர்ச்சி பெற்று வருகிறது.

இலக்கியம் : சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் முதன்முதல் முஸ்லிம் படையெடுப்பு ஏற்பட்டபோது இந்தி இலக்கியம் தோன்றியது எனலாம். வடமொழியின் இரு திசைமொழிகளாக (Dialects) இருந்த பாலியும், அர்த்தமாகதியும் அக்காலத்தில் பெரு மாறுதல் அடைந்து இந்தி மொழியாக வளர்ந்தன.

இந்தி இலக்கியத்தின் வரலாற்றை நான்கு பகுதிகளாகப் பிரிக்கலாம். அவை: 1. வீரக்கதைக் காலம், 2. பக்திக் காலம், 3. ரீதிக் காலம், 4. தற்காலம்.

வீரக்கதைக் காலம் (993-1318): கஜினி சுல்தான்களின் படையெடுப்பு அக்காலத்தில் நிகழ்ந்தது. பிரிவினை மலிந்திருந்த அக்காலத்தில் ஒவ்வொரு சிற்றரச்னுடைய ஆஸ்தானக் கவிஞனும் அவனைப் புகழ்ந்தும், மற்றோரை இகழ்ந்தும் பாடி அப்பிரிவினை உணர்ச்சியை வளர்த்தான். வெளிநாட்டினர் படையெடுப்பை எதிர்த்துநின்ற பிருதிவிராஜனது அருஞ்செயல்களால் ஒருமை உணர்ச்சி தோன்றியது. இவனைப் புகழ்ந்து சந்தவரதாயி முதலிய புலவர்கள் கதைப்பாட்டுக்கள் பாடி இந்தி இலக்கியம் வளர உதவினர். நாட்டின் பெருமையையும், இந்து மதத்தின் உயர்வையும், இவற்றைக் காக்க முன்வந்த அரசர்களின் பெருமையையும் இப்பாட்டுக்கள் பொருளாகக்கொண்டன. பல திசை மொழிகளிலும் முதன்முதல் உருவாகிய இலக்கியம் இவ்வடிவினதே. இதன்பின்னர் இராமாயணத்தை மாதிரியாகக் கொண்ட காவியங்கள் இயற்றப்பட்டன. இவற்றுள் சந்தவரதாயி இயற்றிய பிருதிவிராஜ ராசோ, பட்டகேதார் இயற்றிய ஜயசந்திர பிரகாசம், ஐகனிகர் இயற்றிய அல்ஹா ஆகியவை முக்கியமானவை.

பக்திக் காலம் (1318-1643): துருக்கிச் சுல்தான்களைப் போலன்றி மொகலாயர்கள் நாட்டை வென்று இங்கேயே நிலையாக வசிக்கத் தொடங்கினார்கள். இவர்களது ஆட்சியில் நாட்டில் அமைதியும், திறமையான நிருவாகமும் ஏற்பட்டன. அக்காலத்தில் வாழ்ந்த சங்கரர், இராமானுசர், மத்துவர் ஆகிய ஆசாரியர்களின் கருத்துக்களும், ஒருவகைச் சித்த மதமும், நாத சம்பந்தம் என்ற மதமும் நாட்டில் நிலவின. இஸ்லாம் சமயமும் இங்குப் பரவத் தொடங்கியது. பலவேறு சமயக் கருத்துக்களில் ஒருமை காணும் முயற்சியைக் கபீர் மேற்கொண்டார். இவரைப் பின்பற்றிப் பாமர மக்களுக்கும் விளங்கும் வகையில் உள்ள கருத்துக்களைக் கொண்ட சர்வமத சம்மதமான சமயத்தைத் தோற்றுவிக்க முயற்சி நடைபெற்றது. இதன் விளைவாகச் சகுணம், நிர்க்குணம் என்னும் இரு சமயப்பிரிவுகள் தோன்றின. இப்பிரிவுகளுக்கேற்றவாறு இக்காலத்திய இலக்கியத்தையும் இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். நிர்க்குணத் துறையின் முக்கியப் பிரதிநிதி கபீர். இவர் கல்வியில் தேர்ந்தவர் அல்லர் எனினும், அசாதாரணமான உள்ளுணர்வு கொண்ட இவர் சொற்கள் அனைத்தும் கவிதையாயின. இவர் காலத்தில் வாழ்ந்த ராமதாஸ், தர்மதாஸ், நானக், தாது போன்ற பலரும் இவருடைய கருத்துக்களையொத்த கருத்துக்களை வெளியிட்டனர்.

இதன் பின்னர் இராம இராச்சியம் என்ற இலட்சிய சமூகத்தைத் துளசிதாசர் விவரித்தார். இவருடைய பெருநூலான இராமசரிதமானஸ் அக்காலத்திய சமூக, மத, அறவியற் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறது. இவரது நூலில் மானிட வாழ்க்கையின் ஆன்மார்த்த அமிசங்கள் இலௌகிக அமிசங்களுடன் அழகுபெற இழைந்துள்ளன. இத்தகைய ஒருமைப்பாட்டின் விளைவாக மக்களிடையே அருவமான சமயக் கருத்துக்கள் தெளிவாக உருப்பெற்றன.

சகுணப் பிரிவில் இரு பக்தி மார்க்கங்கள் தோன்றி வளர்ந்தன. இவற்றுள் முதலாவதான இராமபக்திக்குத் துளசிதாசரும், இரண்டாவதான கிருஷ்ண பக்திக்கு வல்லபாசாரியரும் காரணமாவர். கிருஷ்ண பக்தி மார்க்கப் புலவருள் புகழ்பெற்றவர் சூர்தாசர். இவர் இராமாயணத்தை யொத்த காவியத்தை இயற்றவில்லை. இவர் தியாகராஜர், புரந்தரதாசர் ஆகியோரைப் போன்ற இசைப்பாட்டாசிரியர். இவர் ஓர் இலட்சம் பாக்களை இயற்றினார் எனக் கூறப்படுகிறது. அவற்றுள் 40,000 பாக்கள் சூரசாகரம் என்ற நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. துளசிதாசரையும் சூர்தாசரையும் தவிரச் சுமார் நூறு கவிஞர்கள் பக்திமார்க்கப் பாடல்களைப் பாடினார்கள்.

தத்துவமும் இலக்கியமும் ஒன்றாக இணைந்ததே பக்திக் காலத்தின் சிறப்பான அமிசமாகும்.

ரீதிக் காலம் (1643-1843): இக்காலத்தில் அலங்காரம், ரசம் போன்ற துறைகளில் பல வடமொழி நூல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. சொந்தக் கற்பனையான நூல்கள் இக்காலத்தில் அவ்வளவாகத் தோன்றவில்லை. வடமொழி நூல்களுக்கும், பழங்கால இந்தி நூல்களுக்கும் உரைகள் வெளியிடப்பெற்றன. கேசவதாசர், பிகாரிலால், மதிராம், பூஷணர், தேவர், அலி முகீப்கான், மகாராஜா ஜஸ்வந்த் சிங் ஆகியோர் இக்காலத்து இலக்கியக் கர்த்தாக்களுள் முக்கியமானவர்கள். சாகித்திய சாஸ்திரத்தின் நுணுக்கத்திலேயே திளைத்துவிட்ட இக்காலத்தவர் சொந்தமாக இலக்கியச் செல்வங்களை ஆக்க முயலவில்லை.

தற்காலம் (1843க்குப் பின்) : இந்தியக் கிளர்ச்சிக்குப்பின் நிகழ்ந்த அரசியல், சமூக மாறுதல்களால் பழங்காலத் தத்துவநூற் கருத்துக்கள் மறைந்தொழிந்தன. இதுவரை இங்கு இல்லாத சடக்கொள்கை உருப்பெற்றது. கிறிஸ்தவப் பாதிரிகள் நிகழ்த்திய மதமாற்றத்தால் இந்துக்கள் விழிப்படைந்தனர். இந்து சமூகச் சீர்திருத்தத்தின் தேவை உணரப்பட்டது. சுவாமி தயானந்தர் ஆரிய சமாஜத்தை நிறுவினார். இவரது கருத்துக்களை நாடெங்கும் பரப்பப் புதியதோர் உரைநடை தேவையாயிற்று. இவரும் பாரதேந்து என்ற அறிஞரும் இந்தி மொழிக்குப் புத்துயிர் அளித்தனர். வடமொழி நாடகங்கள் மொழிபெயர்க்கப்பட்டன. கம்பெனியாரின் ஆதரவில் பள்ளிப்புத்தகங்கள் எழுதப்பெற்றன. ஆங்கிலம், வங்காளி, பாரசீகம் போன்ற மொழிகளிலிருந்து நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டன. இதுவரை எழுத்தாளர் கையாளத்தக்க நடையெதுவும் திட்டமான உருப்பெறவில்லை. ஆசார்ய பிரசாத துவிவேதி இக்குறையை நீக்கி இலக்கியச் சுவையை வளர்த்ததோடு விஞ்ஞானம் முதலிய அறிவியல் துறைகளிலும், திறனாய்வு, கட்டுரை முதலிய இலக்கியத் துறைகளிலும் நூல்கள் தோன்ற வழிகாட்டினார். அதுவரை வ்ரஜ பாஷையிலேயே கவிதை எழுதப்பெற்றது. உரைநடை எழுத்தாளர் பயன் படுத்திய புதுமொழியிலும் கவிதைகள் தோன்ற அவர் காரணமானார். இவ்வகையில் புது இலக்கிய வடிவங்கள் தோன்றின. பல மாத இதழ்கள் தோன்றி எழுத்தாளரை ஊக்குவித்தன.

தயானந்தரின் கருத்துக்களைப்போல ராஜா ராம் மோகன்ராயின் கருத்துக்களும் தற்கால இந்தி இலக்கியத்தின் வளர்ச்சியைச் சிறப்பான வகையில் பாதித்துள்ளன. சமூகச் சீர்திருத்தத்திற்காகப் பாடுபட்ட இவர்களுடைய முயற்சிகள் நாட்டிற்கு அரசியற் சுதந்திரமில்லாததால் முழுப் பயனையும் தராது போயின. திலகர் காலத்திற்குப் பின் சுதந்திரப் போராட்டம் தொடங்கியது. காந்தியடிகள் மக்களை விழிப்படையச் செய்து இப் போராட்டத்தில் ஈடுபடுத்தினார். அரசியல் அரங்கில் நிகழ்ந்த இச் சம்பவங்கள் அனைத்தையும் இக்கால இலக்கியம் பிரதிபலிக்கிறது. நாவல், சிறுகதை முதலிய புது இலக்கிய வடிவங்களிலும் சிறியவையும் பெரியவையுமான கவிதைகளிலும் புதுமைக் கருத்துக்களும் புதுவாழ்வும் விவரிக்கப்பட்டன. மைதிலிசரண் குப்தாவின் ஜயபாரத், சாகேதயம் போன்ற காவியங்கள், சம்பவங்களை விவரிக்கின்றன. ஜயசங்கர் பிரசாதின் காமாயனி போன்ற காவியங்கள் அனுபூதித்தன்மை கொண்டவை. சிறு கவிதைகளிலும் பலவேறு அரசியல் சமூகச் சமயக்கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. கம்யூனிசத்தையும் காந்தீயத்தையும் அடிப்படையாகக் கொண்ட சிறு கதைகள் பல தற்காலத்தில் தோன்றியுள்ளன. பிரேம்சந்து, ஐயனேந்திர குமார், விநோத சங்கரவியாஸ், ஜயசங்கர பிரசாத், சச்சிதாநந்த ஹீரானந்த வாத்ஸ்யாயனா, யஸ்பால், உபேந்திரநாத் அஷ்க் ஆகியோர் தற்காலச் சிறு கதை எழுத்தாளரில் குறிப்பிடத்தக்கவர். இவர்களுள் சிலர் நாவல்களும் எழுதியுள்ளார்கள்.

சுதந்திரம் வந்தபின் இலக்கியம் புதுவழியில் முன்னேறி வருகிறது. பண்டித தினகர், மகாதேவி வர்மா, ஹரிகிருஷ்ண பிரேமி போன்றோர் தற்காலப் பிரச்சினைகளைத் தம் நூல்களில் ஆராய்கின்றனர். மகாவீரப் பிரசாதின் காலத்தில் தோன்றிய திறனாய்வு இலக்கியம் ஸ்ரீராமச்சந்திர சுக்லா, அமரநாத ஜா, ராமகுமார்வர்மா போன்றவர்களது பணியால் வளர்ச்சியடைந்துள்ளது. நாட்டு மொழியாகிவிட்ட இந்தியில் பலவேறு துறைகளிலும் வழங்கும் கலைச் சொற்களை ஆக்கும் முயற்சியும் நடைபெறுகிறது. பி. வெ.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இந்தி&oldid=1463267" இலிருந்து மீள்விக்கப்பட்டது