கலைக்களஞ்சியம்/இந்தியக் கலைகள்

விக்கிமூலம் இலிருந்து

இந்தியக் கலைகள் வரலாற்று முற்காலத்திலிருந்து தொடர்ந்து வருவனவாகும். வட இந்தியாவின் நடுப்பகுதியிலுள்ள சில குகைகளில் காணப்படும் செங்காவி ஓவியங்களைச் சிலர் பழங்காலத்தின என்றும், சிலர் புதுக்கற்காலத்தின என்றும் கருதுகிறார்கள். விந்திய மலையில் மிர்ஜாப்பூர் மாவட்டத்தில் காணப்படும் ஓவியம் காண்டாமிருக வேட்டையைச் சித்திரிக்கிறது. ஹோஷாங்பாத் மாவட்டத்திலுள்ள குகை ஓவியங்கள் ஒட்டகைச்சிவிங்கியையும்,கெய்மூர் மலையிலுள்ளவை மான்வேட்டையையும் சித்திரிக்கின்றன. பஞ்சாபிலுள்ள ஹாரப்பாவிலும், சிந்திலுள்ள மொகஞ்சதாரோவிலும் காணப்படும் நாகரிகம் சு.கி.மு.மூவாயிரம் ஆண்டுகட்கு முந்தியதாம். அங்கு மனித உருவம் ஒன்று சலவைக்கல்லில் தீட்டப்பெற்றுள்ளது. மண்ணால் செய்த அழகான விலங்குகள் கிடைத்துள்ளன. தந்தத்தில் செய்த முத்திரைகளில் விலங்குகளின் உருவங்கள் காணப்படுகின்றன. ஒரு முத்திரை புலிவேட்டையைக் காட்டுகின்றது. மட்பாண்டங்களின் மீது மிருகங்கள், இலைகள் முதலியன கருநிறத்தில் தீட்டப்பட்டுள. இந்த நாகரிகக் கலையானது மெசபொட்டேமியாவின் சுமேரியக் கலையுடன் உறவுடையது என்பர்.

இக்கலைக்குப் பின்னர் வந்த கலை வேதகாலத்தியதாகும். இக்காலத்தைக் கி.மு. 1000 அளவில் என்று கூறுவர். இக்காலத்துக் கட்டடங்களும் சிற்பங்களும் இதுவரை கிடைத்தில.

ஆகவே இந்தியக் கலையின் இடையீடில்லா வரலாறு மௌரியர் காலம் முதலே தொடங்குகின்றது. உலகத்துக்குப் பெருநன்மை விளைவித்த இந்தியக் கலைகளாகிய சிற்பமும் கட்டடக் கலையும் சந்திரகுப்த மௌரியன் (கி.மு. 322 - கி. மு. 298) காலத்திலும், அவருடைய பேரரான அசோகர் (கி.மு.273 - கி. மு. 232) காலத்திலும் செழித்து வளர்ந்திருந்தன. அசோகர் கட்டிய ஸ்தூபங்களுள் மிகப் பெரியது போபாவிலுள்ள சாஞ்சியில் காணப்படுகிறது. அக்காலத்தில் மணற்கல்லால் செய்த மக்கள் தலைகளும், மண்ணால் செய்த மக்கள் உருவங்களும் கிடைத்துள்ளன.

இக்கலைகள் சுங்கர் காலத்திலும் கண்வர் காலத்திலும் (கி.மு.200 - கி. பி. 20) நடைபெற்று வந்தன. அதனுடன் ஓவியம் தீட்டுவதும் இருந்துவந்தது. அது பெரும்பாலும் சுவரை அலங்கரிக்கவே உதவிற்று. ஐதராபாத்தில் காண்டேஷ் மாவட்டத்திலுள்ள அஜந்தாக் குகையிலுள்ள ஓவியங்கள் இக்காலத்தவை. இந்த ஓவியங்கள் தீட்டப்பெற்ற காலம் கி.மு. 200 முதல் கி.பி.ஏழாம் நூற்றாண்டுவரையுள்ளதாகும். இந்த ஓவியங்கள் புத்த சரித்திரக்கதைகளைச் சித்திரிக்கின்றன. இவற்றின் தொகுதி உலகத்திலுள்ள மிகப் பெரிய கலைச் செல்வங்களுள் ஒன்றாகும்.

குஷான் அரசர் காலத்தில், அதிலும் முக்கியமாக அவ்வரசர்களில் ஒருவரான கனிஷ்கர் (120-162) காலத்தில்தான் இப்போது இந்தியக் கலையின் சிறப்பியல்புகளில் ஒன்று என்று கருதப்படும் புத்தர் சிலைகள் இயற்றப்பட்டன.

இக்காலத்தில் அதாவது கி.பி. 2ஆம் நூற்றாண்டளவில் தென்னிந்தியாவில், பண்டைத் தமிழ் நாட்டில் இசை, நாட்டியம், சிற்பம், ஓவியம் முதலிய கலைகள் சிறப்புடன் வளர்க்கப்பட்டன. தமிழருடைய இசை, நாட்டியங்களைப் பற்றிச் சிலப்பதிகாரத்தில் காணலாம். அக்காலத்துத் தமிழ் வினைஞர் கண்கவர் வனப்பிற் பைஞ்சேறு மெருகாம் பசும்பொன் மண்டபங்களும், அவற்றில் நிறுத்தப்பட்ட தூண்களில் உருவங்களும், வாயில்களின்கண் உயர்ந்த கோபுரங்களும் மாடங்களும், கோபுரங்களில் சுதையால் கண்கவர் ஓவியங்களும் இயற்றினர் என்று மணிமேகலை கூறுகின்றது. ஓவியங்களும் ஓவிய விதானங்களும் உண்டு என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. ஓவியச் சித்திரச் சாலைகள் இருந்தன என மணிமேகலை கூறுகிறது. அரசர் மாளிகைகளும் மாடங்களும் கோயில்களும் உலோகத் தகட்டினாலும் சாந்தினாலும் வேயப்பட்டிருந்தன. வாயில்களுக்குத் துருப்பிடியாதபடி சிவந்த நிறம் பூசப்பட்ட இருப்புக் கதவுகள் பொருத்தப்பட்டிருந்தன என்று கூறுகிறது நெடுநல்வாடை.

குஷான் காலத்துக்குப் பின் வந்தது குப்தர்காலம் (320-600). இக்காலமே வடஇந்தியச் சிற்பத்தின் பொற்காலம் என்று கூறுவர். இக்காலத்துச் சிற்பம் மிகுந்த அலங்காரமுடையது. இக்காலத்துச் சிற்பிகளே புத்தருடைய உருவத்தையும் இந்து தேவதைகளின் உருவத்தையும் மிகச் சிறந்த முறையில் உண்டாக்கியவர்கள். பெரிய கோயில்களையும் கட்டினார்கள். உலோகத்தை உருக்கி வார்க்கும் தொழில் உன்னத நிலையிலிருந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் செய்த பிரமாண்டமான புத்தர் சிலையைச் சுல்தானாகஞ்சு என்னும் இடத்திலிருந்து கொண்டுபோய்ப் பர்மிங்காம் பொருட்காட்சிச்சாலையில் வைத்திருக்கிறார்கள்.

இந்தக்காலத்தில் தென் இந்தியாவில் தட்டையான கூரையும், அரைவட்டமான வளைவுகளும், அழகு மிக்க தூண்களுமுடைய கட்டடங்கள் எழுந்தன. சாளுக்கியர் காலத்தில் பாறைகளில் மிகப் பெரிய கோவில்கள் குடையப்பட்டன. ஆனால் தென் இந்தியாவில் கட்டடக் கலை உச்சநிலை அடைந்தது பல்லவர் காலத்திலும் (4-8நூ.) சோழர் காலத்திலும் (10-13நூ) ஆகும். இக் காலங்களில் உண்டாக்கப்பட்ட வெண்கலச் சிலைகள் மிகச்சிறந்தவையாம். சோழர் கட்டிய கோயில்களின் சிறப்பியல்பு கோபுரங்களாகும். தஞ்சைக் கோயிலிலுள்ள கோபுரம் 190 அடி உயரமுள்ளது.

வட இந்தியாவில் குப்தர் ஆட்சியை ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஹுணர்கள் வந்து அழித்தனர். அதனால் வட இந்தியக் கலையானது ஹர்ஷர் காலத்தில்தான் (606-647) மீண்டும் தலைதூக்கியது. ஹர்ஷர் இறந்தபின் கலை வளர்த்தவர்கள் வங்காளத்தில் எட்டாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்த பால அரசர்களாவர். இவர்கள் காலத்தில் உலோகத்தில் செய்யும் வேலை மிகுந்த சிறப்புடையதாயிருந்தது. கறுப்பு ஸ்லேட் கல்லால் செய்த சிலைகள் உலோகத்தில் வார்த்தனபோலவே காணப்படுகின்றன.

ஹர்ஷர் இறந்தபின் முஸ்லிம் படையெடுப்புவரை கட்டடக்கலையே முக்கியமானதாக நடந்துவந்தது. பலவற்றை முஸ்லிம்கள் அழித்துவிட்டார்கள். 10-11ஆம் நூற்றாண்டுகளில் ராஜபுத்திரர்கள் பல பெரிய கட்டடங்கள் கட்டியுளர். இக்காலத்தில், நடுவில் புடைத்ததாகவும் உச்சியில் கூரியதாகவுமுள்ள கோபுரமே எழுந்தது.

முஸ்லிம்கள் டெல்லியை 1193-ல் கைப்பற்றினர். இங்குக் கட்டிய மசூதி இந்தியாவில் முதன்முதல் கட்டப்பெற்ற முஸ்லிம் கலைக் கட்டடமாகும். இதில் இந்துக் கலை அமிசங்களுடன், கும்மட்டமும் பக்கச் சிறு தூபிகளுமாகிய இஸ்லாமிய அமிசங்களும் காணப்படும். இக் காலத்திய மிகச் சிறந்த கட்டடம் டெல்லியில் 1332-ல் இல்தூமிஷ் கட்டிய 200 அடி உயரமுள்ள குதுப்மினாராகும். பெரோஸ் ஷா (1351-1388) என்னும் சுல்தான் தம்முடைய சிற்பி மலிக்காஜி பெகானா என்பவரைக் கொண்டு டெல்லியில் பல கட்டடங்களும் வேறு பல புதிய பட்டணங்களும் உண்டாக்குவித்தார்.

தென் இந்தியாவில் விஜயநகர சாம்ராச்சியம் 1336 முதல் 1565 வரை இருந்து வந்தது. இவ்வரசர் கட்டிய கோயில்கள் அலங்காரம் மிக்கவை. இவர்கள் காலத்தில் சிற்பமும் ஓவியமும் செழித்து வளர்ந்தன.

மொகலாய மன்னர்கள் காலத்தில் இந்து, இஸ்லாமிய, பாரசீக முறைகள் மூன்றும் கலந்து கட்டடச்சிற்பத்தையும் வளப்படுத்தின. கலைகள் அனைத்தும் வளர்ந்தோங்கின. பட்டேபூர் சீக்ரி என்னும் அழகிய நகரம் அக்பருடைய பெருஞ் சின்னமாகத் திகழ்கின்றது. ஷாஜகான் (1627-58) காலத்தில் எழுந்த லாகூர் அருகிலுள்ள ஐகாங்கீர் சமாதியும், ஆக்ராவிலுள்ள முத்து மசூதியும், தாஜ்மகாலும் முஸ்லிம் கட்டடச் சிற்பத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டுக்களாகும். இவை பாரசீக முறையைப் பெரிதும் தழுவியவை.

ஹுமாயூன், அக்பர், ஜகாங்கீர் ஆகிய மூன்று மொகலாய மன்னர்களும் ஓவியக் கலைக்கு மிகுந்த ஊக்கமளித்தனர். ஹுமாயூன் பாரசீகத்திலிருந்து ஓவியர்களைக் கொணர்ந்தார். அதனால் அம் முறை பரவலாயிற்று. மொகலாயர் காலத்துக்கு முன்னதாக ஓவியக்கலை இந்தியாவில் செழித்து வளர்ந்து வந்திருந்த போதிலும், அக் காலத்து ஓவியங்களுள் அஜந்தாச் சுவர் ஓவியங்களும், அஜந்தாவுக்கு வடக்கே 300 மைல் தொலைவிலுள்ள பாக் என்னுமிடத்திலுள்ள ஆறாம் நூற்றாண்டுச் சுவர் ஓவியங்களும், வங்காளம், நேபாளம், குஜராத் ஆகிய இடங்களிலுள்ள புத்த ஓவியங்களும், புதுக்கோட்டை அருகிலுள்ள சிற்றண்ணல்வாயில் சுவர் ஓவியங்களும் மட்டுமே எஞ்சியுள்ளன.

அக்பரிடம் பல ஓவியர்களும் வேலை பார்த்தனர். அவர்களுள் பெரும்பாலோர் இந்துக்கள். இவர்கள் அக் காலத்துப் பெருமக்களையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சித்திரித்தார்கள். ராஜபுத்திர ஓவியக்காரர்கள் பண்டைய சுவர் ஓவிய முறையைப் பின்பற்றிக் கதைகளையும் புராணங்களையும் சித்திரித்தார்கள். மொகலாய ஓவியமுறை ஒளரங்கசீப் காலத்தில் நலிந்தது. ஆனால் ராஜபுத்திர ஓவிய முறை 18, 19ஆம் நூற்றாண்டுகளிலும் நடைபெற்று வந்தது. அதன் நடுநிலை ஜெயப்பூராக இருந்தது. பிற்காலத்து ராஜபுத்திர ஓவியத்தில் சிறந்தவை பஞ்சாபிலுள்ள பகாரி என்னும் ஊரின் பெயரால் வழங்கும் கலையில் காணலாம். பஞ்சாபிலிருந்த சீக்கிய மன்னர்கள் மக்கள் உருவ ஓவியத்தை ஆதரித்த போதிலும், காங்கிரா ஓவிய முறை 19ஆம் நூற்றாண்டில் நலிவுற்றது. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மேனாட்டுக் கலைகளின் வரவால் இந்தியக் கலைகளின் தனிச் சிறப்பியல்புகள் மறையத் தொடங்கின. ஆயினும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பண்டை இந்திய முறையைப் புதுப்பிக்கும் இயக்கம் எழுந்தது. இதைத் தோற்றுவித்தவர்களுள் தலையாயவர் தாகூர் குடும்பத்தினர். டாக்டர் அபனேந்திரநாத தாகூர் அஜந்தா ஓவியங்களைப் பின்பற்றி வரைந்தவை மிகுந்த எழிலுடையன. இதே காலத்தில் பம்பாயில் எழுந்த இயக்கம் ஐரோப்பிய முறையை இந்திய முறையுடன் இணைக்க முயன்றது.

19ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் சிறந்த சிற்பம் எதுவும் உண்டாக்கப்படவில்லை. தென் இந்தியா பண்டை முறையை வழுவாது காத்து வருகிறது. இப்பொழுதும் முன்போல் செப்பு விக்கிரகங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதுபோல் கற் சிற்பிகளும் வேலை செய்து வருகிறார்கள். (இந்திய ஓவியம், இந்தியச் சிற்பம், இந்திய இசை, இந்திய நாட்டியம் முதலியவற்றைப்பற்றி ஓவியம், சிற்பம், இசை, நாட்டியம் முதலிய கட்டுரைகளைப் பார்க்க).