கலைக்களஞ்சியம்/இந்தியக் கலையும் மதமும்
இந்தியக் கலையும் மதமும்: இந்தியக் கலை முதலிலிருந்தே இந்து மதத்தொடர்புடனேயே வளர்ந்தது. அத்தொடர்பினாலே தானும் மேன்மைப்பட்டு, மத வழிப்பாட்டையும் வளர்த்து வந்ததாகப் புலனாகிறது. இந்திய இசையின் முதல் தோற்றத்தைச் சாமவேதத்தில் காண்கிறோம். வேள்விகளில் சாமகானம் நிகழ்ந்தது. சாமகானங்கள் ஆன்ம தரிசனத்திற்கு உதவும் யோக உபாயங்களாக உபநிடதங்களில் காணப்படுகின்றன. அறநூல் போதித்தவருள் மனுவிற்கு அடுத்தபடியான யாஞ்ஞவல்கியர், “பாடுவதும், வீணை வாசிப்பதும், சுருதி தாளப் பயிற்சியும் எளிதாக வீடு பெற வழியாகும்” என்கிறார். இதையே பல கிருதிகளில் தியாகராஜரும் விளக்கினார். இசைக் கலையின் முதல் நூலாகக் கருதப்படுவதும் பரதமுனிவர் எழுதியதுமான நாட்டிய சாஸ்திரம் ஓர் உபவேதமாகக் கருதப்படுகிறது. பாட்டினால் போற்றப்படும் பொருளும் பரம்பொருளே என்று உபநிடதமும் சங்கரருடைய பிரம சூத்திர பாஷியமும் (I. 1-20) சொல்லுகின்றன.
இலக்கியத்தை எடுத்துக் கொண்டால் முதன் முதலில் நமக்குக் கிடைத்துள்ள ரிக்வேதப் பாக்கள் அனைத்தும் கடவுள் வாழ்த்து வடிவமாகவே இருக்கின்றன, பிருகதாரண்யக உபநிடதத்தில் இலக்கியம் முழுதுமே, அறிவு அனைத்துமே, பெரும்பூதமான பரப்பிரமத்தினிடமிருந்தே அதன் உயிர்ப்பாய் எழுந்தன எனக் காணப்படுகிறது. இராமாயணமும் நன்னெறியை நடத்திக் காட்ட அவதரித்த கடவுளின் புகழையே பாடுகிறது. பின்பு வளர்ந்த காப்பிய நாடகக் கலைகள் முழுதும் பகவத் அவதாரங்களின் வரலாறுகளையோ, பகவானின் அமிசத்தை மிகையாகப் பெற்ற சான்றோர், ராஜரிஷிகள் முதலிய பெரியோரின் சரிதையையோ மக்களுக்கு எடுத்துரைக்கின்றன. வேறு இலக்கிய நூல்களும் மக்களுக்கு நல்லறிவை அறம் பொருள் இன்பம் வீடு என்ற துறைகளில் போதிக்கவே ஏற்பட்டன வென்றும், இந் நோக்கிற்குப் புறம்பான எழுத்தெல்லாம் அசத்துக்காவியம் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆகம புராணங்களை எடுத்துக்கொண்டால், சைவ ஆகமங்களில் சொல்லும் பொருளும் சிவனும் உமையும் ஆகும் என்றும், சீரிய இலக்கியம் அர்த்தநாரி யுருவமே யாகும் என்றும் சொல்லப்படுகின்றன. இதை ஆதரவாகக் கொண்டே காளிதாசன் இரகுவமிச காப்பியத்தைத் துவக்கும்போது இக்கொள்கையை முதல் சுலோகத்திலேயே சொன்னான். விஷ்ணு புராணத்தில் “காவியம், கீதங்கள், அனைத்தும் சப்த மூர்த்தியாயுள்ள விஷ்ணுவின் அமிசங்களே“ எனக் காணப்படுகிறது.
சிலை, கட்டடம் முதலிய வேலைப்பாடுகளின் தொடக்கத்தை நாம் வேதகாலத்தில் யாகங்களுக்காகக் கட்டிய வேதிகளிலும் குண்டங்களிலும் காணலாம். இதற்கெனவே எழுந்த கல்ப சூத்திரங்களிலேயே இந்தியச் சிற்ப, கணிதங்களின் தோற்றம் காணப் பெறும். பிற்காலத்தில் இந்தியச் சிற்பக் கலையின் உயர்வு கோயில்களிலும் மூர்த்திகளின் நிருமாணத்திலும் தெரிகிறது. சிற்ப நூல்கள் பெரும்பாலும் புராண, ஆகம, தந்திர நூல்களின் பகுதிகளாக இருக்கின்றன. ஒவ்வொரு மூர்த்திக்கும் மந்திர சாஸ்திரத்தை அனுசரித்த தியான சுலோகம் உண்டு. இதை மனத்தில் வாங்கி, அதன் நினைவிலேயே ஆழ்ந்து, சிற்பி பிம்பத்தை ஆக்குவதால் இவன் செய்யும் கலைக்கும் யோகத்திற்கும் வேறுபாடில்லை. சிற்பம் என்ற சொல், “சீலஸமாதௌ“ என்ற தாதுவிலிருந்து வந்ததாக வியாகரண சாஸ்திரத்தில் விளக்கப்பட்டிருப்பதால், மனத்தைச் சமாதி நிலையில் அழுத்தச் சிற்பம் தனித்ததோர் ஆற்றலைப் பெற்றிருக்கிறது என்பது தெரிகிறது.
பொதுவாகக் கலைகள் அழகு என்ற தத்துவத்தை வெவ்வேறு உருவ வாயிலாகத் தருகின்றன. இவ்வழகு என்ற தத்துவம் 'நன்மை' என்ற தத்துவத்திலிருந்தும் புண்ணியம் வினையிலிருந்தும் பிரிக்கமுடியாதென்பதும், அழகு பாவத்துடன் சேராதென்பதும் ரிக்வேத மொழிகளிலிருந்து இந்து இலக்கியம் முழுவதிலும் காணப்படும் உண்மையாகும். அழிந்து போவது எப்படி நன்றாயிருக்க முடியும் ? குறையுள்ளது எப்படி நன்றாயிருக்க முடியும்? ஆகையால், பேரழகு என்பது நிலையான நிறைவின் எல்லையான பரம்பொருளுக்கே உரியது. ஆனது பற்றியே அழகை இலட்சுமி என்ற தெய்வமாக இந்துக்கள் வழிபட்டு வருகிறார்கள். கீதையில் கிருஷ்ண பகவான் அழகு பொருந்தியதெல்லாம் தம்முடைய அமிசம் என்கிறார். “அழகு அருளுவது ஆனந்தம்; ஆனந்தமே பரப்பிரமத்தின் சொரூபம்” என்று உபநிடதங்கள் கூறுகின்றன. இதுவே வேதாந்தக் கொள்கையுமாகும். கடவுள் வெவ்வேறு உருவங்களில் வெவ்வேறு கலைகளைத் தாமே முதலாசிரியராக இருந்து உலகில் பரவச் செய்கிறார்; சிவனாய் நின்று தாண்டவத்தைச் செய்து, தம் ஐந்துமுகங்களிலிருந்து சுரங்களையும் தாளங்களையும் வெளியிடுகிறார். சரஸ்வதி வீணை வாசிக்கிறாள். கண்ணன் குழல் ஊதுகிறான். இவை மட்டுமல்ல, இவ்வுலகனைத்துமே கடவுளின் சிற்பமாகும். எப்படி வேறு நோக்கில்லாமல், தனக்கொன்று ஆகவேண்டு மென்றில்லாமல், தனக்குள்ளெழும் உணர்ச்சி காரணமாகத் தன் உள்ள மலர்ச்சியின் வடிவமாகக் கலைஞன் தன் கலையைக் கற்பிக்கிறானோ, அப்படியேதான் கடவுளும் இவ்வுலகம் யாவற்றையும் ஆக்குகிறார். இதனாலேயே படைப்பு அவருடைய விளையாட்டு எனப்படுகிறது. தமது சைதன்னியமாகிய சுவரில் மாயை என்ற வர்ணத்தைக் கொண்டு கடவுள் தீட்டும் ஓவியமே உலகம் என்று வேதாந்தம் சித்திரக் கலையைக் கொண்டு விளக்கம் கூறுகிறது. உலகைப்பற்றிய ஐந்தொழிலையும் கடவுளின் பரமானந்த தாண்டவம் குறிக்கிறதெனச் சைவம் கூறுகிறது. காச்மீரச் சைவம் ஆன்மாவையே கூத்தன் என்று கொள்ளுகிறது. தமிழில் ஒரு கவி, “பாரேழும் பண்ணாகப் பாடிய பரஞ்சோதி“ என்று கூறி, ஏழுலகும் கடவுள் தம் நித்தியானந்த நிலையில் பாடிக் களிக்கும்போது எழுந்த ஏழு சுரங்கள்போலும் என்ற அருங்கற்பனை செய்கிறார். கபடநாடக சூத்திரதாரன், உலக நாடகத்தை நடத்தும் சூத்திரதாரன் கடவுளென்று பொதுமக்களும் வழங்கி வருவதைக் காணலாம் உயிர்களை யெல்லாம் பொம்மையாய் வைத்துப் பொம்மலாட்டம்போல் ஆட்டி வைக்கிறான் ஈசுவரன் என்ற கருத்தும் உலக வழக்கில் இருப்பதைக் காணலாம்.
அழகாராய்ச்சியில் அதிகமாக ஈடுபட்ட அணி ஆசிரியர்கள், காவியத்தையும் நாடகத்தையும் துய்ப்பதிலிருந்து நமக்கு ஏற்படுவது இரசானுபவம் என்றும், இந்த இரசம் என்பது துன்பம் சற்றேனும் கலவாத இன்பநிலையென்றும், இதில் மனம் அமைதியாய் உலக வாழ்க்கையைக் கடந்ததோர் நிலையில் நிற்கிறதென்றும், இந்நிலை பரப்பிரமத்தைக் கண்டு களிக்கும் நிலைக்கு மிகவும் நெருங்கியதென்றும் சொல்லுகிறார்கள். இரசங்களுள் சாந்தரசமே சிறந்ததெனக் கருதுகிறார்கள். சாந்தம் தன் மட்டில் ஆன்ம சொரூபமான நிலையை வெளியாக்குவது மல்லாமல், மற்ற எந்த இரசமும் இரசமாய்த் துய்க்கும் வேளையில் சாந்த உருவாகவே துய்க்கப்படுகிறது. இந்த இரசமும் ஆன்மாவின் உண்மை இன்பமே. அதன் அனுபவத்திற்கு எதிராகச் சூழ்ந்திருக்கும் அஞ்ஞான மலச்சுவர் காவிய நாட்டிய கீதங்களின் வாயிலாக வீழ்த்தப்பட்டதும், உண்மை இன்ப வெளிச்சம் தானாய் ஒளிரத் தொடங்குகிறது. இதனாலேயே பரப்பிரமமும் இரசம் என்று தைத்திரீய உபநிடதத்திலும் கூறப்படுகிறது. கலை மூலம் இரசத்தைச் சுவைப்பது பேரின்பத்தின் சுவைக்கே வாயிலாகிற தென்பது முடிவு.
கலைகளுள் இந்த உயர்ந்த மனோநிலையை எளிதில் கொடுக்கக்கூடியது இசை என்பது எந்நாடுகளிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இதற்கும் மதத்திற்கும் வீட்டிற்குமுள்ள இணைப்பு முதலிலேயே கூறப்பட்டது. பிற்காலத்தில் இந்தியநாட்டில் இந்த இசையிலே சமய இணைப்புப் பெரும்பாலும் செய்யப்பட்டு வந்தது. இந்தியப் பெரும்பாவலரெல்லோரும் சமயாசாரியராயும், யோகிகளாயும், பக்தி சிரேட்டராயும், சீவன் முத்தராயும் இருந்து, பாட்டின் வழியாக மக்களை உய்விக்க வந்த பெரியோர்களாய் விளங்கி, இந்திய நாட்டை இன்றும் கடைத்தேறும் வழியில் அமைத்தருளி யிருக்கின்றனர். வடக்கே மீராபாய், கபீர்தாசர், துளசிதாசர், தெற்கே புரந்தரதாசர். தியாகராஜர் முதலியோர் இசை, மதம் இரண்டிற்கும் ஆசிரியராய் விளங்குகின்றனர். இப்படித் தமிழ் மொழியில் இசை வாயிலாகக் கடவுளை வழிபடவைத்து மக்களைக் காக்க வந்த பெரியோரில் ஆழ்வார்களும் நாயன்மார்களும் முதன்மை பெற்றவர்கள். இவர்கள் அரசர் முதற்கொண்டு, பொதுமக்கள் வரைக்கும் எல்லோர் மனத்தையும் மாற்றச் சைவவைஷ்ணவ தெய்வங்களைத் திருப்பதிதோறும் சென்று பாடிப் பக்தி வெள்ளத்தை நாடெங்கும் பெருக வைத்தனர். இவர்கள் இயற்றிய பிரபந்தங்களும் தேவாரங்களும் அக்காலத்து இசைக் கலைகளே. இவை ஏற்ற இராகக் குறிப்புக்களுடன் கூடியே காணப்படுகின் றன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் இசைக் கலைக்கும் ஈசன் வழிபாட்டிற்கும் உள்ள இணைப்பை நன்குணர்ந்தே தம் பாட்டுக்களைப் பாடினரென்பது அவர்களின் பாட்டுக்களிலேயே தெரியக்கிடக்கின்றது. உதாரணமாக நம் மாழ்வார், “நரம்பின் முதிர்சுவையே” என்று கடவுளை யாழின் சுவையாக அழைக்கிறார். மற்றொரு பிரபந்தப்பாவில், காலைப்பண், கடவுளின் கீர்த்தி ரூபமான கவிக்கனிக்குத் தேன்போலானது எனக் கூறப்பட்டிருக்கிறது. சுந்தரமூர்த்தி நாயனார் திருவாரூர்த் தியாகேசனை, “ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய்“ என்று வருணிக்கிறார். இந்தியாவில் தென்னாட்டு இசையில் முற்காலத்தில் காணப்பட்ட இவ்வுண்மைகளைத் தற்காலத்தில் மிகுதியாக வழங்கிவரும் தியாகராஜ கிருதிகளிலே அடிக்கடி காணலாம். சங்கீத ஞானம் பக்தியில்லாமல் நல்வழியைத் தாராது என்று தியாகராஜர் கூறுகிறார்; நாதரசமே இராமனென நரவுருவாய் உறைந்ததென வருணித்து, இராமனிடம் கீத உண்மையும் கீதையின் உண்மையும் ஒன்றாய் இருப்பதைச் சங்கீத, பக்தி மார்க்கங்கள் இரண்டிலும் ஆசானான ஆஞ்சனேயன் தெரிந்துகொண்டான் என்கிறார். இப்படிப்பட்ட மேன்மை வாய்ந்த இசையின்பமான பரமானந்த சாகரத்தில் மிதந்து கொண்டிராத தேகம் பூமிக்குப் பாரமாகும் என்றும் உறுதியாய்க் கூறுகிறார். இக்கொள்கையெல்லாம் முன் யாஞ்ஞவல்கியரும் வேத ரிஷிகளும் பறையறைந்த உண்மைகளே.
இந்தியக் கலை யோகசாதனமாகும்; ஆன்ம சாட்சாத்காரத்திற்கும், கடவுளை வழிபடுவதற்கும், கடவுளை அடைவதற்கும் உபாயமாகும். வே. ரா.