உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இந்தியக் குடியரசு

விக்கிமூலம் இலிருந்து

இந்தியக் குடியரசு: 1947 ஆகஸ்டு 15ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றது. அதற்கு முன்பே கூட்டுவித்த அரசிய லமைப்பு நிருணய சபை 2 ஆண்டு, 11 மாதம்,18 நாள் வேலைசெய்து குடியரசு சட்டத்தை உருவாக்கிற்று. 1950 ஜனவரி 26ஆம் நாளில் அமலுக்கு வந்த இச்சட்டத்தின்படி இந்தியா ஒரு சம்பூர்ண அதிகார ஜனநாயகக் குடியரசாக அமைந்தது. மக்கள் யாவருக்கும் வாக்குரிமை முதன்முதலாக இச்சட்டத்தின் மூலமாகக் கிடைத்தது. இந்தியக் குடியரசு 29 இராச்சியங்கள் இணைந்த ஒரு கூட்டாட்சி யாகும். அவற்றுள் பதினொன்று A வகுப்பு இராச்சியங்கள், எட்டு B வகுப்பு இராச்சியங்கள், பத்து C வகுப்பு இராச்சியங்கள். A வகுப்பில் பண்டைய இந்திய மாகாணங்களும், B யில் பண்டைய சுதேச இராச்சியங்களும் அவைகளின் இணைப்புகளும், C யில் சில சிறு நாட்டு அரசாங்கங்களும் அடங்கியுள்ளன. A, B வகுப்பு இராச்சியங்களில் பொறுப்பாட்சியும், c வகுப்பிலுள்ள ஆறு இராச்சியங்களில் மக்களின் பிரதிநிதிகளடங்கிய சட்டசபைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. உலகிலுள்ள மற்றக் கூட்டாட்சிகளில் காணப்படுவதுபோல் இங்கும் யூனியன் அரசியலுக்கும் இராச்சிய அரசியல்களுக்கும் முறையே உள்ள தனிப் பொறுப்புக்களும் கூட்டுப் பொறுப்புக்களும் வரையறுக்கப்பட்டுள்ளன. எஞ்சியிருக்கும் காரியங்களின் பொறுப்பு யூனியன் அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இவை பற்றி ஏதேனும் விவாதம் எழுமானால் அதை உச்சநீதி மன்றம் தீர்த்து வைக்கும்.

யூனியன் அரசியலின் நிருவாகத் தலைவர் ராஷ்டிரபதி எனப்படுவர். நாட்டின் சட்டசபைகளிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட அங்கத்தினர்களால் இவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இவர் யூனியன் கீழ்ச்சபைக்கு உத்தரவாதமுள்ள மந்திரி சபையுடன் கலந்தே அரசியலை நடத்துவார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்குப் பல அடிப்படை உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன. இது மதம், நிறம், இனம், வகுப்பு, ஆண், பெண் என ஒரு வேற்றுமையும் இல்லாது இந்திய மக்கள் யாவருக்கும் ஒரே குடிமை வகுத்துள்ளது; மத விஷயத்தில் நடுநிலைமையைத் தழுவியுள்ளது. அன்றியும், மக்களுக்குப் பேச்சுரிமை, பலர் ஒன்று சேர்ந்து சந்திக்குமுரிமை, நாட்டில் எங்கும் தடங்கலின்றிச் செல்லவும் தங்கவும் உரிமை, எத்தொழிலிலும் ஈடுபடுவதற்கு உரிமை ஆகிய யாவும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டில் உள்ள அமைதி, ஒழுங்கு, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றிற்குக் கேடு வராமலே மேற்கூறிய உரிமைகளைக் கையாள வேண்டும். இவ்வடிப்படை உரிமைகள் யாவும் நாட்டுநீதிமன்றங்களால் காப்பாற்றப்படக்கூடியவை.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தனிப்பெருமையுடைய ஒரு பகுதி இராச்சிய நிருவாகத்தின் நெறிமுறைக் கோட்பாடுகளை உடைமையாகும். இவை நாட்டுச் சட்டசபைகளும் குழுக்களும் வருங்காலத்தில் கையாளவேண்டிய இலட்சியங்களைக் குறிக்கின்றன. மக்கள் யாவருக்கும் வேண்டிய உணவுப்பொருள்கள், வேலைக்குத் தகுந்த ஊதியம், கட்டாயக்கல்வி, சமுதாய முன்னேற்றம் முதலிய உரிமைகள் கிடைக்குமாறு இராச்சிய ஆட்சி நடத்த இச்சட்டம் கோருகிறது. கே. க.