கலைக்களஞ்சியம்/இந்தியச் சிற்பிகள் நிலையம்

விக்கிமூலம் இலிருந்து

இந்தியச் சிற்பிகள் நிலையம் (Indian Institute of Architects): 1917-ல் சிற்ப மாணவர் சங்கமாகத் தொடங்கி, 1922-ல் பம்பாய்ச் சிற்பிகள் சங்கமாக மாறி, 1929-ல் இந்தியச் சிற்பிகள் நிலையமாக ஆகியது. அதே ஆண்டில் ராயல் பிரிட்டிஷ் சிற்பிகள் சங்கத்துடன் இணைக்கப்பட்டது. இதன் நோக்கம்சிற்பக் கல்வியை வளர்ப்பதும், பாரதத்தில் உள்ள சிற்பிகளின் நலத்தைக் காப்பதுமாகும். இது 'இந்தியச் சிற்பி நிலையத்தின் சஞ்சிகை' என்ற காலாண்டுப் பத்திரிகை ஒன்றை நடத்தி வருகிறது. 1927-28-ல் சங்கத்தின் தலைவராயிருந்த சோரப் எப். பரூச்சாவின் பெயரால் ஒரு சிற்பநூல் நிலையம் நிறுவப்பட்டுள்ளது. சிற்பக் கலையில் உற்சாகம் ஊட்டுவதற்காகப் பணப் பரிசுகளும் விருதுகளும் அமைத்திருக்கின்றது; அடிக்கடி சிற்பக்கலை பற்றிச் சொற்பொழிவுகளும் விவாதங்களும் நடத்துகின்றது. இந்நிலையத்தின் ஆதரவில் ராயல் பிரிட்டிஷ் சிற்பிகள் சங்கத்தின் பரீட்சைகள் நடந்து வருகின்றன. இந்நிலையத்தின் சந்தாதாரர்கள் மூன்று வகைப்படுவர். அவர்கள் உலகில் பல இடங்களிலும் இருக்கிறார்கள். இதன் அலுவலகம் பம்பாய் நகரத்தில் இருக்கிறது.