கலைக்களஞ்சியம்/இந்திய சமுத்திரமும் வாணிபமும்
இந்திய சமுத்திரமும் வாணிபமும்: இந்திய சமுத்திரம் உலகிலுள்ள மிகப் பெரிய வியாபார வழிகளுள் ஒன்று. பண்டைக் காலமுதல் இக்கடல் வழியாக இந்தியாவுக்கு எகிப்து, மெசப்பொட்டேமியா,கிழக்கு மத்தியதரைக்கடல் நாடுகள் ஆகியவற்றுடன் வியாபாரம் நடந்து வந்ததாகத் தெரிகிறது. தமிழ் நாட்டிலிருந்து மயில் தோகை, அகில் முதலிய பொருள்கள் பாபிலோனியா சென்றன என்று கிறிஸ்தவ வேதத்தால் தெரியவருகிறது. தமிழ்நாட்டுத் தேக்குமரம் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னிருந்த கல்தேயர் நகரமாகிய ஊர் (Ur) என்னுமிடத்தில் கண்டெடுக்கப்ட்டுள்ளது. தமிழ்கத்திலிருந்து பல பொருள்கள் ரோமபுரிக்குச் சென்றதாகத் தமிழ் நூல்களிலிருந்தும், ரோம ஆசிரியர் பிளினியின் நூல்களிலிருந்தும் தெரிகிறது. யவனர்களாகிய கிரேக்கர்கள் காவிரிப்பூம் பட்டினம் போன்ற தமிழ் நாட்டுத் துறைமுகங்களுக்கு வந்து வியாபாரம் செய்தனரென்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன. இவ்வாறு இந்திய சமுத்திரத்தின் மேற்குப் பகுதி வியாபார வழியாக இருந்ததுபோலவே, கிழக்குப் பகுதியும் இருந்து வந்திருக்கிறது. தென்னிந்தியாவுக்கும் கடாரம் என்னும் பர்மாவுக்கும் வியாபாரத் தொடர்பு இருந்ததாகப் பட்டினப்பாலை கூறுகிறது. கிறிஸ்தவ சகாப்தத்தின் ஆரம்பத்தில் மேனாட்டுக் கப்பல்கள் இந் திய சமுத்திரத்தின் வழியாகச் சீனாவுக்குச் சென்றன. சீனக் கப்பல்கள் அரேபியாவுக்குச் சென்றன. கி. பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து சுமார் ஆயிரம் ஆண்டுகள் சீனாவுக்கும் அரேபியாவுக்கும் வியாபாரம் சிறப்பாக நடந்துவந்தது. 15ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சீனக்கடற்படை அதிபர் செங்-ஹோஸ் என்பவருடன் கீழ்நாடுகட்குப் புறப்பட்டு வந்த கப்பற் கூட்டம் மிகப் பெரியதாகும். அவர் இந்தியாவிலும் அரேபியா போன்ற நாடுகளிலும் தம் அரசர்க்காக நவரத்தினங்கள் வாங்கவே புறப்பட்டு வந்தார். அவருக்குப் பின்னர், போர்ச்சுக்கேசியர் முதலிய மேனாட்டாரும் வியாபாரம் செய்வதற்காக இந்திய சமுத்திரம் வழியாக இந்தியாவிற்கு வந்தனர். இப்போது இந்திய சமுத்திரம் மிகப்பெரும் கடற்பிரயாண வழியாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவிலும் அதன் அருகிலுள்ள நாடுகளிலும் மிகப்பெரிய துறைமுகங்கள் உண்டாகியிருக்கின்றன.
இந்திய சமுத்திரத்தைச் சார்ந்த நாடுகளின் மக்களில் பெரும்பாலோர் விவசாயிகள். அதனால் இந்தியா தவிர மற்ற நாடுகளின் ஏற்றுமதிப் பொருள்கள் பெரும்பாலும் தாதுப்பொருள்களும், காட்டுவிளை பொருள்களும், மலைத்தோட்டப் பொருள்களுமேயாகும். இந்தியாவில் பலவிதமான இயற்கைச் செல்வங்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவிலிருந்து தானியங்கள், மலைத்தோட்ட விளைபொருள்கள், தாதுப்பொருள்கள், பருத்தி சணல்போன்ற கச்சாப் பொருள்கள் ஏற்றுமதியாவதோடு, பருத்தித் துணி, சணற் கோணி போன்ற எந்திரசாலை உற்பத்திப் பொருள்களும் ஏற்றுமதியாகின்றன. இந்திய மக்கள் சமுத்திரத்தை அடுத்த நாடுகளில் குடியேறி யிருப்பதால் இந்தியாவுக்கும் இந்த நாடுகளுக்கும் வியாபாரத் தொடர்பு இருந்து வருகிறது. இது நாளுக்கு நாள் மிகும் என்று எண்ண இடமிருக்கிறது. பீ. எம். தி.