கலைக்களஞ்சியம்/இந்திய சமுத்திரம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திய சமுத்திரம் உலகில் மூன்றாவது பெரிய சமுத்திரம்; பரப்பு: சு. 290 இலட்சம் சதுரமைல். மேற்கே ஆப்பிரிக்காவும், வடக்கே அரேபியா, இந்தியா, மலேயா ஆகிய தீபகற்பங்களும், கிழக்கே ஆஸ்திரேலியாவும் உள்ளன. இதன் தென்பகுதி அன்டார்க்டிக் சமுத்திரத்தோடு கலந்துவிடுகிறது. நன்னம்பிக்கை முனையின் தீர்க்கம் (20°கி.) இதை அட்லான்டிக் சமுத்திரத்திலிருந்து பிரிக்கின்றது. மிக அதிகமான ஆழம் (25,000 அடி), சூந்தா ஜலசந்தியினருகே அளவிடப்பட்டது. சராசரி ஆழம் 13,000 அடி. இந்தியாவின் மேற்கிலும் கிழக்கிலும் உள்ள அரபிக் கடலும், வங்காள விரிகுடாவும் இச்சமுத்திரத்தின் இரு கொம்புகள்போல் மேல் நோக்கி நீண்டிருக்கின்றன. சிந்து,பிரமபுத்திரா, கங்கை, ஐராவதி, டைகிரிஸ், சாம்பசி முதலிய பேராறுகள் இச்சமுத்திரத்தில் கலக்கின்றன. இந்த ஆறுகளைத்தவிர இச் சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் பெய்யும் பருவ மழையினால் ஏராளமான நீர் இதை அடைகிறது. இதனால் முக்கியமாக வங்காள விரிகுடாவில் இதன் மேற்பரப்பின் உப்புத்தன்மை குறைவு; அரபிக் கடலில் அதிகம்;மடகாஸ்கர், இலங்கை முதலியவை இச்சமுத்திரத்திலுள்ள தீவுகள்; அந்தமான், நக்கவாரம் (நிக்கோபார்), இலட்சத்தீவுகள் மால தீவுகள் (Maldives) முதலியவை முக்கியமான தீவுக் கூட்டங்கள். நீர்ப்பரப்பின் அடியில் நீளவாட்டில் இந்தியாவிலிருந்து அன்டார்டிகாவரையுள்ள மேடு ஒன்று உள்ளது. டாஸ்மேனியாவிற்கும் அன்டார்க்டிகாவிற்கும் இடையே இன்னொரு சிறு மேடும் உள்ளது. இந்த மேடுகளும் இவற்றினிடையே உள்ள பள்ளங்களும் இச்சமுத்திரத்தில் நிகழும் நீரோட்டங்களைப் பாதிக்கின்றன. இந்திய சமுத்திரத்தில் பூமத்திய ரேகைக்குத் தெற்கே ஓடும் தென் பூமத்திய நீரோட்டம் முதலில் கிழக்கு நோக்கிச் சென்று, பிறகு ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையோரமாக வடக்கே திரும்பி ஓடுகிறது. தென் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையோரமாக ஆகூல்யாஸ் (Agulhas) என்னும் நீரோட்டம் ஓடுகிறது. ஆண்டு முழுவதும் ஒரு பூமத்திய எதிர்-நீரோட்டம் பூமத்தியரேகைக்குத் தெற்கே, கிழக்குத்திக்கு நோக்கி யோடுகிறது. பூமத்தியரேகைக்கு வடக்கே உள்ள நீரோட்டங்கள் காலத்திற்கேற்றபடி பல திக்குக்களில் ஓடுகின்றன. இதன் தென்கோடியில் (அட்சம் 45° தெ. வரை) பனிக்கட்டிகளும் பனிப் பாறைகளும் எல்லாப் பருவங்களிலும் காணப்படும். சூயெஸைக் கடந்து ஏடன் வழியாகச் செல்லும் வியாபாரக் கப்பல்கள் இந்திய சமுத்திரத்தின் வழியே செல்ல வேண்டியிருப்பதால் ஐரோப்பாவிற்கும், இந்தியா, இந்தோனீசியா, ஆஸ்திரேலியா, கிழக்கு ஆசியா முதலிய இடங்களுக்கும் இடையே உள்ள வியாபார மார்க்கங்கள் முழுவதும் இந்திய சமுத்திரத்தில் அமைந்துள்ளன. சூயெஸ் கால்வாய், ஜலசந்தி, மோசம்பீக் ஜலசந்தி ஆகியவை ஐரோப்பாவிலிருந்து இந்திய சமுத்திரத்தை அடையும் வழியில் உள்ளன. தீவுக் கூட்டங்கள் ஏராளமாக இருப்பினும், கப்பல் போக்குவரத்திற்கு இச்சமுத்திரம் மிகவும் வசதியாக இருக்கிறது. இந்தியாவின் மேற்குக் கரையில் உள்ள பம்பாயும், மலேயாத் தீபகற்பத்தின் தென்கோடியில் உள்ள சிங்கப்பூரும், இலங்கைத் தீவின் மேற்குக் கரையில் உள்ள கொழும்பும் வியாபார மார்க்கத்திலுள்ள முக்கியமான துறைமுகப்பட்டினங்கள்.