கலைக்களஞ்சியம்/இந்தியத் தேசிய நூல்நிலையம்

விக்கிமூலம் இலிருந்து

இந்தியத் தேசிய நூல்நிலையம் (The National Library of India) : நூறு ஆண்டுகட்கு முன்னர் துவாரகாநாத் தாகூரும் வேறு சிலரும் சேர்ந்து 'கல்கத்தா பொது நூல்நிலையம்' என்பதை நிறுவினார்கள். 1903-ல் கர்சன் பிரபு அதை அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கிக் கிழக்கு இந்தியக் கல்லூரி நூல்நிலையத்துடன் இணைத்து, 'இம்பீரியல் நூல் நிலையம்' என்று பெயரிட்டார். பல பெரியோர்கள் தாங்கள் சேர்த்துள்ள நூல்களை இதற்குத் தந்திருக்கின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்றபின் இது 'இந்தியத் தேசிய நூல்நிலையம்' எனப் பெயரிடப்பெற்றுக் கல்கத்தாவில் 'பெல்விடியர்' என்னும் மாளிகையில் இருந்து வருகிறது. இதில் எல்லா மொழிகளிலும் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. இங்கே எல்லா நாட்களிலும் காலை ஏழு முதல் இரவு பத்து மணி வரை நூல்களை எடுத்துப் படிக்கலாம். ஆராய்ச்சி செய்யும் மாணவர்க்கு இந்த நிலையம் மிகவும் பயன்படுவது. இந்திய வரலாற்றைப் பற்றியுள்ள நூல்கள் இங்கிருப்பதுபோல் இந்தியாவில் வேறு எந்த நூல்நிலையத்திலும் இல்லை. இங்குச் சகலவித பண்டிதர்கட்கும் பயன்படக்கூடிய வங்காளி, சமஸ்கிருத, சீன, அமெரிக்க, ஐரோப்பிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. இதில் சுமார் 7 இலட்சம் நூல்கள் இருக்கின்றன (1952). இந்த நூல்நிலையத்தைக் காக்கும் பொறுப்பு மத்திய அரசாங்கக் கல்வி இலாகாவைச் சேர்ந்தது.