உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இந்தியத் தேசியக் காங்கிரசு

விக்கிமூலம் இலிருந்து

இந்தியத் தேசியக் காங்கிரசு : இந்தியத் தேசியக் காங்கிரசை ஏற்படுத்த முயன்றவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயரென்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசாங்க அலுவலிலிருந்து ஓய்வு பெற்றிருந்த இவர், இந்திய மக்களின் கருத்துக்களைத் துரைத்தனத்தாருக்கு அறிவிப்பதற்கு ஒரு சங்கம் தேவையென எண்ணினார். ரிப்பன் பிரபுவின் காலம் முதல் நாட்டில் தோன்றிய அரசியல் உணர்ச்சியின் விளைவால் சில அறிஞர்கள் இக்கருத்தை வரவேற்று, 1885 டிசம்பர் 28-ல் காங்கிரசை ஏற்படுத்தினர். முதல் காங்கிரசு பம்பாயிலே பானர்ஜியின் தலைமையில் கூடிற்று. அதற்கு ஹியூம், திலாங்கு, ஜீ. சுப்பிரமணிய ஐயர் உட்பட 72 அங்கத்தினர் வந்தனர். அது முதல் ஆண்டுதோறும் ஒரு தடவை இது கூடிவந்தது. அங்கத்தினர்களின் எண்ணிக்கை பெருவாரியாக மிகுந்து வந்தது. ஆதியில் சில திட்டங்களை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு அனுப்புவதில்தான் காங்கிரசு ஈடுபட்டது. சட்டசபைகளில் மக்களுடைய பிரதிநிதிகளுக்கு இடம் கிடைப்பது, சிவில் சர்வீஸ் தேர்வை இந்தியாவிலும் நடத்துவது, இந்தியப் படைச் செலவைக் குறைப்பது, இந்தியக் கவுன்சிலை நீக்குவது போன்ற தீர்மானங்களை இது நிறைவேற்றிற்று. 1905-ல் தலைமை வகித்த தாதாபாய் நௌரோஜி சுயராச்சியமே இலட்சியம் என்று கூறினார். ஆயினும், ஏறக்குறைய 1906வரை காங்கிரசு ஒரு மிதவாதக் கூட்டமாகவே நடந்து வந்தது. இதனால் பயனில்லையெனக் கண்ட சிலர் தீவிரக் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். இதற்கு ஊக்கமளித்தவர் பால கங்காதர திலகர். காங்கிரசில் தீவிரக் கொள்கையைப் பரவச் செய்தவர் இவர்தாமென்பதற்கு ஐயமில்லை. இவர் காங்கிரசின் செயலாளராகப் பல ஆண்டுகள் சேவை செய்தார். தாமே நடத்திவந்த 'கேசரி' என்னும் பத்திரிகையில் அரசாங்கக் கொள்கைகளையும் அடக்குமுறையையும் கண்டித்தார். இரு தடவை அரசியல் தண்டனைக்கு ஆளாயினார். இத்தண்டனைகள் பின்னும் நாட்டில் அரசியலுணர்ச்சியையும் கிளர்ச்சியையுமே வளர்த்தன.

ஆங்கில அரசாங்கம் ஒருபக்கம் அடக்குமுறையைக் கையாண்டது. மற்றொரு பக்கம் அரசியல் சீர்திருத்தச் சட்டங்களையும் வகுத்தது. 1892-ல் அமைத்த சட்டசபைகளைப் பின்னும் சீர்திருத்தி 1909-ல் மின்டோ மார்லி சட்டத்தைப் பிரசுரித்தது. இதன்படி சட்டசபைகளில் அங்கத்தினரின் எண்ணிக்கையும் உரிமைகளும் அதிகமாக்கப்பட்டபோதிலும், காங்கிரசு இச்சட்டத்தை ஆதரிக்கவில்லை. முகம்மதியர்களுக்குத் தனிப்பட்ட தொகுதி அளித்தது பிற்போக்கானதென வற்புறுத்தியது. கோகலே போன்ற மிதவாதிகள் கூட இச்சட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆயினும் காங்கிரசில் மிதவாதிகளுக்கு 1910 வரையில்தான் செல்வாக்கிருந்தது. அதற்குப்பின் மிதவாதிகள் தேசிய லிபரல் பெடரேஷன் என்று பெயர் வைத்துக்கொண்டு ஒரு தனி வகுப்பாக அமையவே, தீவிரவாதிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1918-ல் அரசாங்கம் ரௌலட் சட்டத்தை நிறைவேற்றத் துணிந்தது. இதன் நோக்கம் அரசியலுக்கு எதிராகச் சூழ்ச்சியோ, கிளர்ச்சியோ செய்பவர்களை விசாரணையின்றித் தண்டிக்க அரசாங்கத்திற்கு உரிமை கொடுப்பதேயாகும். நாடு முழுவதிலும் இதற்கு எதிர்ப்புக் கூட்டங்கள் நடைபெற்றன. இந்தச் சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் பெரிய சத்தியாக்கிரகப் போர் நடத்தி, இந்தியா திரும்பிய காந்தியடிகளும் இச்சட்டத்தைத் தீவிரமாகக் கண்டித்தார்.

1919-ல் காங்கிரசுக் கூட்டம் அமிர்தசரசில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் அவ்விடத்தில் அமைதிக் குறைவு இருப்பதால் கிளர்ச்சிக் கொள்கைகள் ஓங்கும் என்றும், மாநாடு அங்கு நடப்பது கலவரத்தை விளைக்குமென்றும், பஞ்சாப் கவர்னர் மைக்கேல் ஓடயர் அதைத் தடுக்க முன்வந்தார். காங்கிரசுத் தலைவர்களாகிய டாக்டர் கிச்சலுடாக்டர் சத்தியபால் இருவரையும் துரைத்தனத்தார் இரகசியமாக வெளியேற்றினர். உடனே கிளர்ச்சி பீறிட்டெழுந்தது. ஆங்கிலேயர் பலர் தாக்கப்பட்டனர்.

அரசாங்கத்தார் குஜரன்வாலாவிலுள்ள கிராமங்கள் மீது குண்டுகள் வீசினார்கள். ஜலியன்வாலாபாக்கில் நடைபெற்ற ஒரு கூட்டத்தைக் கலைக்கும்பொருட்டுத் துப்பாக்கியால் சுட்டார்கள். பெண்களும் குழந்தைகளுமுட்பட நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டனர். இதுபோன்ற கொடுமைகள் இன்னும் பல நடக்கவே, மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் படுகொலையைப் பற்றி ஆராய்ந்த காந்தியடிகளை உள்ளிட்ட ஒரு காங்கிரசுக் கமிட்டி பஞ்சாப் கவர்னரையும் இந்திய வைசிராயையும் வேலையிலிருந்து தள்ளும்படி வேண்டியது. இவைகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொள்ளாததால் அரசாங்கத்தாரின் 1919 அரசியல் சீர்திருத்தச் சட்டத்தைக் காங்கிரசு புறக்கணித்தது.

அன்றியும் காந்தியடிகளின் ஆதரவில் காங்கிரசு 1920-ல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியது. காங்கிரசுத் தொண்டர்கள் பலர் மும்முரமாக இயக்கத்தில் ஈடுபட்டனர். ஆனால் தம் கொள்கைக்கு முரணாகச் சில தொண்டர்கள் சௌரிச்சௌராவில் 21 போலிசாரைக் கொலை செய்ததால் அடிகள் மனம் நொந்து இயக்கத்தை ஒத்திப்போட்டார்.

1923-ல் சீ. ஆர். தாஸ், மோதிலால் நேரு முதலிய காங்கிரசுத் தலைவர்கள் சட்டசபைக்குச் சென்று அரசாங்கத்தை எதிர்ப்பதே மேலெனக் கருதினார்கள். காந்தியடிகள் இதை ஒப்பாவிடினும்,காங்கிரசில் பெரும் பான்மையோர் ஆதரித்ததால், இவர்கள் சட்டசபைக்குச் சென்று சுயராச்சியக் கட்சியென அமைத்துக் கொண்டனர்; வங்காளச் சட்டசபையிலும் மத்தியச் சட்டசபையிலும் மும்முரமாய் வேலை செய்தனர். 1925-ல் சீ. ஆர். தாஸ் காலமானது இக்கட்சியைப் பெரிதும் பாதித்தது.

பிரிட்டிஷ் அரசாங்கம் இந்திய அரசியல் சீர்திருத்தத்தைப்பற்றி ஆராயும் பொருட்டு 1928-ல் சைமன் கமிஷனை நியமித்தது. அதில் இந்தியர் ஒருவரேனும் சேர்க்கப்படாமையால் காங்கிரசு இக்கமிஷனைப் புறக்கணித்தது. 1930-ல் காந்தியடிகள் சட்ட மறுப்பு இயக்கத்தை ஆரம்பித்தார். பூரண சுயராச்சியம் இந்திய மக்களின் பிறப்புரிமையென்றும், அதை அடைவதற்குப் பாடுபட வேண்டுமென்றும் ஜனவரி 26-ல் காங்கிரசு தீர்மானித்தது. மார்ச்சு 12-ல் காந்தியடிகள் எழுபத்தொன்பது தொண்டர்களுடன் உப்புச் சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துத் தண்டி யெனுமிடத்திற்குக் கால்நடையாகச் சென்று உப்பெடுக்கத் தொடங்கினார். நாடெங்கும் காங்கிரசுத் தொண்டர்கள் இதைப் பின்பற்றவே, அடிகளையும் தொண்டர்களையும் அரசாங்கம் சிறையிலடைத்தது.

சைமன் கமிஷனுக்கு நாட்டில் ஆதரவில்லாததால், அரசாங்கத்தார் ஒரு வட்டமேஜை மாநாட்டை இங்கிலாந்தில் கூட்டி வைத்தனர். ஆனால் காங்கிரசு இதில் கலந்துகொள்ள மறுத்தது. வைசிராய் இர்வின் பிரபு அரும்பாடுபட்டுக் காந்தியடிகளோடு ஓர் ஒப்பந்தம் 1931-ல் செய்து கொண்டதன் பயனாக, அடிகள் காங்கிரசின் ஒரே பிரதிநிதியாக இரண்டாவது மாநாட்டிற்குச் சென்றார். ஆனால் பல பிரச்சினைகள் முடிவாகாமையால் நாட்டுக்குத் திரும்பினார். மற்ற அங்கத்தினர்கள் சேர்ந்து முடிவாக்கிய 1935 அரசியல் திட்டத்தின்படி 1937-ல் மாகாணங்களில் பொறுப்பாட்சி நிறுவப்பட்டது. ஏழு மாகாணங்களில் காங்கிரசுக்கு மந்திரி பதவி ஏற்பதற்கு வசதி உண்டாயிற்று. காங்கிரசு மந்திரி சபைகள் நன்மைகள் பல செய்தன வாயினும் முஸ்லிம்களுக்குப் பாதகமாக இருந்தனவென்று முஸ்லிம் லீகினரும் ஜின்னாவும் பெரும் புகார் செய்தனர். பாகிஸ்தான் கொள்கையும் தலையெடுத்தது. அன்றியும் காங்கிரசு மந்திரிசபைகள் அதன் மேலிடத்திற்கு அடிபணிந்து உரிமையற்ற நிலையிலிருந்தனவென்று ஒரு சாரார் பழித்தனர்.

1939-ல் உலகப்போர் தொடங்கவே மக்களின் சம்மதமின்றிப் போரில் இந்தியாவை ஈடுபடுத்திய காரணத்தால் காந்தியடிகளின் ஆலோசனையின் பேரில் காங்கிரசு மந்திரிகள் மாகாண அரசாங்கங்களிலிருந்து விலகினார்கள்.

போரில் ஜப்பானியரிடமிருந்து இந்தியாவிற்கும் விபத்து நெருங்கவே, 1942-ல் கிரிப்ஸ் மிஷன் பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் அனுப்பப்பட்டது. ஆனால் உடனடிப் பொறுப்பாட்சி அளிக்க ஒப்புக் கொள்ளாததால் அவர் அறிக்கையைக் காங்கிரசு ஆதரிக்கவில்லை. காந்தியடிகள் உடனே சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார். ஆங்கிலேயரை 'நாட்டைவிட்டகலுக' என்று எச்சரித்தார். நாடு முழுவதிலும் பெருங் கிளர்ச்சி பரவியது. அரசாங்கம் அடக்குமுறையைக் கையாண்டது.

1945-ல் பிரிட்டனில் தொழிற்கட்சி பதவிக்கு வந்ததும், அது மூன்று பேரடங்கிய காபினெட் மிஷனை இந்தியாவிற்கு அனுப்பி, இந்தியப் பிரச்சினையைத் தீர்க்க முயன்றது. இவர்கள் இந்திய அரசியல் தலைவர்களோடு சமரசப் பேச்சுக்கள் நடத்தினார்கள். ஆனால் லீகும் காங்கிரசும் ஒப்பந்தத்திற்கு வரவில்லை. பாகிஸ்தான் பிரச்சினை பற்றிய வேற்றுமை வளர்ந்தது. இறுதியாக ஆங்கில அரசாங்கமே 1947 ஆகஸ்டு 15-ல் இந்தியா, பாகிஸ்தான் என்ற இரு டொமினியன்களை அமைத்து ஓர் அறிக்கை வெளியிட்டது. இந்தியாவில் காங்கிரசு மந்திரிப் பொறுப்பு ஏற்று நடத்தியது. அதற்கென்று அமைக்கப்பட்ட ஓர் அரசியல் நிருணயசபை உருவாக்கிய அரசியல் திட்டம் 1950 ஜனவரி 26ஆம் நாள் ஆட்சிக்குக் கொண்டுவரப்பட்டது. அதன்படி நடந்த தேர்தலில் மத்தியச் சர்க்காரிலும் இராச்யங்களிலும் காங்கிரசு மந்திரிசபைகள் பதவியேற்றன. கே. க.