கலைக்களஞ்சியம்/இந்தியாவில் டச்சுக்காரர்

விக்கிமூலம் இலிருந்து

இந்தியாவில் டச்சுக்காரர் : டச்சுககாரர் முதன் முதலாக இந்தியாவில் 1605-ல் மசூலிப்பட்டினத்திலும், 1610-ல் பழவேற்காட்டிலும் (புலிக்கட்) வியாபார நிலையங்கள் ஏற்படுத்திக்கொண்டனர். 1612-ல் போர்ச்சுக்கேசியர் பழவேற்காடு வியாபார நிலையத்தை அழித்துவிட்டனர். ஆகையால் டச்சுக்காரர் மறுபடியும் கெல்டிரியா என்னுமிடத்தில் ஒரு கோட்டையைக் கட்டிக் கொண்டனர். 1617-ல் சூரத்தில் ஒரு வியாபார நிலையமும், வங்காளத்தில் சின்சூரா என்னுமிடத்தில் ஒரு நிலையமும் ஏற்படுத்திக்கொண்டனர். இவர்கள் 1658-ல் தூத்துக்குடியையும், 1659-ல் நாகபட்டினத்தையும், 1661-ல் கொல்லத்தையும், 1662-ல் கொடுங்கோளூரையும் (கிராங்கனூர்), 1663-ல் கண்ணனூரையும் கொச்சியையும் கைப்பற்றினர். டச்சுக்காரர்கள் இந்தியாவில் இவ்விடங்களில் நிலைத்துக் கொண்டதற்கு அவர்கள் கிழக்கிந்தியத் தீவுகளில் நடத்திவந்த வியாபாரமே காரணம். இந்தியாவில் அவர்களுக்கு வேறு வகையான நோக்கம் ஒன்றும் இல்லை. பிரெஞ்சிந்தியக் கவர்னரான டூப்ளேயும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பில் வங்காளத்தில் வெற்றி கண்ட ராபர்ட் கிளைவும் இந்தியாவில் அடைந்த வெற்றிகளால் டச்சுக்காரர் இந்தியாவை விட்டகல நேர்ந்தது. தே. வெ. ம.