கலைக்களஞ்சியம்/இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்
இந்தியாவில் பிரெஞ்சுக்காரர் : முதன் முதலாக 1664-ல் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி பிரெஞ்சு அரசர் XIV-ம் லூயியின் நிதி மந்திரியான கால்பெர்ட்டின் முயற்சியால் நிறுவப்பட்டது. அவர்கள் 1668-ல் சூரத்தில் பண்டகசாலையையும், அடுத்த ஆண்டில் மசூலிப்பட்டினத்தில் ஒரு பண்டகசாலையையும் ஏற்படுத்திக்கொண்டனர். 1672-ல் அவர்கள் சான் தோமைக் (San Thome) கைப்பற்றினர். 1674-ல் அது டச்சுக்காரர் வசமாயிற்று. அதே ஆண்டில் ஷெர்கான் லோடி என்பவனிடமிருந்து கிடைத்த ஓரிடத்தில் மார்ட்டின் என்னும் பிரெஞ்சுக் கவர்னர் நிறுவிய நகரமே பிறகு புதுச்சேரியாயிற்று. 1677-ல் சிவாஜி சோழமண்டலத்தின்மீது படையெடுத்து ஷெர்கானைத் தோற்கடித்தபோது பிரெஞ்சுக்காரர் நிலைமை மோசமாயிற்று. 1681-ல் சூரத்திற்குச் சென்ற மார்ட்டின் ஐந்தாண்டுகள் கழித்து மறுபடியும் புதுச்சேரிக்குத் திரும்பினான். அவன் வந்த பிறகு அந்த ஊரில் வியாபாரம் பெருகிற்று. 1690-ல் சந்திரநாகூரில் ஒரு பிரெஞ்சுப் பண்டகசாலை அமைக்கப்பட்டது. 1693-ல் புதுச்சேரி டச்சுக்காரர் வசமாயிற்று. இது மறுபடியும் 1699-ல்தான் பிரெஞ்சுக்காரருக்குத் திரும்பக் கிடைத்தது. புதுச்சேரியில் அவர்கள் கட்டிய கோட்டைக்குச் செயின்ட் லூயிக்கோட்டை என்பது பெயர். புதுச்சேரி மற்றப் பிரெஞ்சுப் பற்றிடங்களை விட விரைவாக வளர்ச்சியுற்றுப் பெரிய வியாபாரத் தலமாயிற்று.
1706-ல் மார்ட்டின் இறந்த பிறகு 1720 வரையில் பிரெஞ்சுக் கம்பெனியார் இந்தியாவில் முன்னிருந்த நிலையிலேயே இருந்தனர். 1720-35 வரையில் பிரெஞ்சிந்தியக் கவர்னராக வந்த லென்வார் கள்ளிக்கோட்டை, மாஹி, யானாம் என்னுமிடங்களில் பிரெஞ்சுக்காரரை நிலைப்படுத்தினார். அவர்காலத்தில் புதுச்சேரி அழகான நகரமாக மாறிற்று. லென்வாருக்குப்பின் கவர்னராக வந்த மோஸ் (1735-1742) கருநாடக நவாபுகளோடு நட்புப் பூண்டிருந்தார். 1739-ல் இவர் தஞ்சை மன்னர்களுக்கு உதவிபுரிந்து காரைக்காலைத் தம் வசப்படுத்திக் கொண்டார். இவருக்குப்பின் டூப்ளே பிரெஞ்சுக் கவர்னராக வந்தார். 1745-ல் ஆங்கிலேயர் பிரெஞ்சுக்காரரைக் கடல்வழியாக எதிர்க்கத் தொடங்கியபோது டூப்ளே லாபார்தனே என்னும் பிரெஞ்சுக் கடற் படைத் தளபதியைத் தமக்கு உதவியாக வரைவழைத்துக்கொண்டார். 1746-ல் நாகபட்டினத்திற்கருகே நடந்த கடற்போர் வெற்றி தோல்வியின்றி முடிந்ததாயினும் பிரிட்டிஷ்காரர் சிறிது அஞ்சியேயிருந்தனர். டூப்ளேயும் லாபார் தனேயும் சென்னையைத் தாக்கிப் பிடித்துக்கொண்டனர்; ஆயினும், அவ்விரு தலைவர்களுக்கிடையே பிணக்கு உண்டானதால் சென்னை பிரெஞ்சுக்காரர்களிடம் தங்கவில்லை. ஆர்க்காட்டு நவாபிற்கும் பிரெஞ்சுக்காரருக்கும் அடையாற்றுக்கருகில் நடந்த போரில் பிரெஞ்சுக்காரர் எளிதில் வெற்றி பெற்றனர். சென்னையைக் கைப்பற்றிய டூப்ளேயால் செயின்ட் டேவிட் கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை. 1748-ல் புதுச்சேரி ஆங்கிலேயரால் முற்றுகையிடப்பட்டபோது அதை டூப்ளே மிகுந்த திறமையோடு காத்தார். கருநாடகப் போர்களில் ஆங்கிலேயருக்கு எப்போதும் விரோதமாகப் பிரெஞ்சுக்காரர் இருந்து வந்தனர். டூப்ளேக்குப் பிறகு வந்த கவர்னர்களுடைய முயற்சியால் பிரெஞ்சு ஆதிக்கம் இந்தியாவில் ஓங்கவில்லை. 1761-ல் புதுச்சேரியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் அவ்வூரைப் பெரும்பாலும் அழித்தனர். பிரெஞ்சுக்காரரைவிட ஆங்கிலேயருக்குப் பண வசதி அதிகமாயிருந்தமையாலும், போர்த்திறமையில் அவர்கள் விஞ்சியிருந்தமையாலும் பிரெஞ்சுக்காரருடைய ஆதிக்கம் இந்தியாவில் குன்றியது. தே. வெ. ம.