உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இந்திரசாலம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திரசாலம்: தத்தாத்திரேய தந்திரம், நித்தியநாதர் எழுதிய இந்திரசாலம் என்ற பண்டைய வட மொழி நூல்கள் இந்திரசாலத்தைப் பற்றிக்கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: ‘இந்திரன்’ என்னும் சொல் திறமையைக் குறிப்பதாகும். ஒருவன் தன் திறமையால் காண்போர் கண்ணை மறைத்தல் இந்திரசாலம் எனப்படும். உள்ளதை உள்ளபடி பார்க்குஞ் சக்தியை மறைத்து, வேறு விதமாகப் பார்க்கும்படி பிறரைச் செய்தல் இந்திரசாலத்தின் நோக்கமாகும். இனி இந்திரசாலம் என்னும் சொல்லுக்கு இந்திரனின் வலை என்று பொருகொளலுமாம். இங்கு ‘இந்திர’ என்னும் சொல் கண்ணைக் குறிப்பதாகக் கொண்டு, கண்ணுக்கு வலை போட்டுச் சரியான பார்வையை மறைத்தல் இந்திரசாலம் என்று பொருள் கூறுவர். இந்திரசாலத்தின் துணையால் நோயையும் வறுமையையும் கொள்ளலும், பிறப்பிறப்புக்களினின்றும் விடுபடுதலும், பிறரை ஒறுத்தலும், அருளலும், விரும்பியதை விரும்பியவாறே பெறலும் முடியுமாம். இந்திரசாலக் கலையறிவிற்கு மற்ற எல்லா வகைக் கல்வியறிவும் வேண்டும். பச்சிலை (மூலிகை), மந்திரம் இவற்றை இந்திரசாலக் கலைஞன் பயன்படுத்துகிறான். சில இலைகளையும், மலர்களையும், விதைகளையும் அரைத்து மேலே பூசியும் விழுங்கியும் இந்திரசாலக்காரன் சில சக்திகளைப் பெறுகிறான். பகைவனை நண்பனாக்கிக் கோடலும், மங்கையர் உள்ளத்தைக் கவர்தலும், நீரின்மேல் நடத்தலும், நெருப்பில் ஊறின்றிக் கிடத்தலும், காற்றில் இயங்கலும், வேண்டிய மணமக்களைப் பெறலும் இந்திரசாலக்காரனால் எளிதில் செய்ய முடியுமாம். பிறரை மயக்கித் தம்மோடு வரும்படி செய்தலும், வாதத்திலும் போரிலும் வெற்றி பெறலும், புலி, நாகம் முதலிய கொடிய பிராணிகளை அசையவொட்டாமல் தடுத்தலும், மேகத்தை யீர்த்து மழை பெய்வித்தலும், தன் மேல் விழவரும் ஆயுதம் விழாமல் தடுத்தலும் இந்திரசாலக்காரன் மந்திரமோதிச் செய்யும் அரிய காரியங்களாம். பிறரை உணர்வும் செயலு மொழியச் செய்யவும், திருடர்கள் தப்பி ஓடாதபடி அவர்களை நிறுத்தவும், கருவை உண்டாக்கவும், தவிர்க்கவும், தடுக்கவும் இந்திரசாலக்காரன் உதவி செய்வானாம்.

இத்தகைய கருத்துக்கள் ஆதிகாலம் தொட்டு எல்லா நாடுகளிலும் இருந்து வந்திருக்கின்றன. இந்திரசாலக்காரன் இயற்கைக்கு அதீதமான ஆற்றல் உடையவன் என்றும், அதனால் அவன் இயற்கையை, அடக்கி ஆள வல்லவன் என்றும், அவனுடைய உதவியால் தீமை வரவொட்டாமல் தடுக்கவும் நன்மை வரும்படி செய்யவும் கூடும் என்றும் கருதினார்கள்.

இத்தகைய நம்பிக்கைகளைப் பாபிலோனியர், அசிரியர், எகிப்தியர் ஆகியோரும் கொண்டிருந்தனர். இக் கொள்கைகள் பின்னர் கிரீஸ், ரோம் சென்று, அங்கிருந்து ஐரோப்பா முழுவதும் பரவின. எகிப்தியர் மருந்து உண்ணவும், விதை விதைக்கவும், நல்ல நாட்கள் என்று சில நாட்களை வகுத்திருந்தனர். பாபிலோனிய அரசன் மந்திரவாதிகளைக் கலந்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.

மந்திரவாதி இறந்த ஆவிகளுடன் தொடர்புடையவன் என்றும், மந்திரங்களைக் கொண்டு அவர்களுடைய உதவியைப் பெறுவன் என்றும் பழங்காலத்து மக்கள் எண்ணிவந்தார்கள். மந்திரத்தால் நோயைக் குணப்படுத்துதலும் பேய் ஓட்டுதலும் நடந்துவந்தனவாம். இன்னும் இந் நம்பிக்கையுண்டு.

சில கிரியைகளைச் செய்து பகைவனைக் கொல்லவும் கெடுக்கவும் முடியும் என்னும் எண்ணம் இருந்து வந்தது. இந்த எண்ணம் இன்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் காணப்படுகிறதாம். இதனைப் பில்லி சூனியம் வைப்பு என்பர்.

தாயத்துக் கட்டும் வழக்கமும் இக்கொள்கையில் சேர்ந்தது. தாயத்து அபாயத்தைத் தவிர்க்கும், நோயை நீக்கும் என்று நம்புகின்றனர்.

இத்தகைய கருத்துக்கள் இப்போது மெலனீசியா போன்ற பசிபிக் தீவுகளிலும் பிறவிடங்களிலும் உள்ள ஆதிக்குடிகளிடத்திற் காணப்படுகின்றன. இப்போது நாகரிக மக்களிடம் காணப்படும் பல பழக்க வழக்கங்களையும் கொள்கைகளையும் விளக்குவதற்கும் பெரிதும் துணை செய்வனவாக இருக்கின்றன.

இக்காலத்தில் இந்திரசாலம் முன் போல் மிகுதியாக மக்கள் வாழ்க்கைக்குக் கெடுதிசெய்வதாயில்லை. பெரும்பாலும் பொழுதுபோக்கான செப்படிவித்தையாக இருந்து வருகிறது. பார்க்க: செப்படிவித்தை.