கலைக்களஞ்சியம்/இந்தோனீசியா

விக்கிமூலம் இலிருந்து

இந்தோனீசியா டச்சுக்காரர்களுக்கு முன்பு சொந்தமாயிருந்து, 1945லிருந்து சுதந்திர நாடக விளங்குகிற தீவுக்கூட்டம். இது மலேயாத் தீவுக்கூட்டத்தின் பகுதி. ஜாவா, சுமாத்ரா, மதுரை, போர்னியோ, டைமோர், பாப்புவா, செலிபீஸ், மோலக்கஸ், பாலி, பிளோரில் முதலிய பல சிறு தீவுகள் சேர்ந்து இத்தீவுக்கூட்டம் அமைந்தது. இதுவும் ஜப்பானியத் தீவுகளைப்போல எரி மலைகள் மிகுந்துள்ள பிரதேசம். இங்கு 95 எரிமலைகள் உள்ளன. பரப்பு (டச்சு, நியூகினி உட்பட): 7,35,267 ச. மைல். மக்: சு. 7,80,00,000 (1950).

இத்தீவுகள் பூமத்தியரேகைப் பிரதேசத்தில் வரிசையாக இருக்கின்றன. மலேயா தீபகற்பத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் பாதைபோல் இவை அமைந்துள்ளன.

தட்பவெப்ப நிலை: இத்தீவுகளில் வெப்பமிகுந்த பூமத்தியரேகைத் தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. கோடையில் தென்கிழக்கிலிருந்தும், குளிர்காலத்தில் வட, வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் காற்று வீசுகிறது. கடல்மட்ட உயரத்தில் உள்ள தீவுகளிலெல்லாம் ஆண்டுச் சராசரித் தட்பவெப்பம் 80° பா. இத்தீவுக் கூட்டம் முழுவதிலும் நல்ல மழை பெய்கிறது. சில இடங்களில் மட்டும் 40 அங். மழைக்குக் குறைவாகப் பெய்கிறது.

விளை பொருள்கள்: அயனமண்டலக் காடுகள் இங்கு மிக அடர்த்தியாக உள்ளன. பல தாதுப் பொருள்களும் கிடைக்கின்றன. மண்ணெண்ணெய், வெள்ளீயம் ஆகியவை அகப்படுகின்றன. ரப்பர், காப்பி, தேயிலை, சர்க்கரை, தென்னை ஏராளமாகப் பயிரிடப்படுகின்றன. உலகத்தில் கிடைக்கும் கொயினாவில் பெரும்பகுதி ஜாவாவில் விளைகிறது. பெரும்பான்மை மக்கள் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிற் பெரும்பாலோரின் மதம் இஸ்லாம். சுமாத்ரா, போர்னியோ, பாப்புவா முதலிய தீவுகள் பரப்பிலும் செழிப்பிலும் மிகுந்திருப்பினும், முன்னேற்றமடையாத பிரதேசங்களாகவே இருக்கின்றன.

இங்குள்ள மோலக்கஸ் தீவு, இலவங்கத் தீவு என்றும் பெயர் பெறும். இலவங்கம் முதலிய வாசனைப் பொருள்கள் உலகத்திலேயே இங்கேதான் மிக அதிகமாகக் கிடைக்கின்றன.

போக்குவரத்து: 1940-ல் இந்தோனீசியாவில் 4,700 மைல் நீளத்திற்குச் சாலைகள் இருந்தன. 1951-ல் 31,046 வாடகைக் கார்களும், 7,643 பஸ்களும், 7,663 மோட்டார் சைகிள்களும் இருந்தன. 1940 இறுதியிலும் 4,611 மைலுக்கு ரெயில் வசதி இருந்தது; ரெயில்வேக்கள் ஜாவாவிலும் சுமாத்ராவிலுமே அதிகம். ஏறத்தாழ 700 தபால் ஆபீசுகளும் 722 தந்தி ஆபீசுகளும் இருந்தன. ‘கருடா இந்தோனீசிய விமானப்போக்குவரத்துக்கள்’ விமான மார்க்கங்களை மிகுவித்திருக்கின்றன.

வர்த்தகம்: 1951-ல் இறக்குமதி 30,64,000 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும், ஏற்றுமதி 46,63,800 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும் ஆகும். தேயிலை, பெட்ரோலியம், ரப்பர், கொப்பரை, மிளகு, வெள்ளீயம் ஆகியவை முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள். துணிமணிகள், அரிசி எந்திரங்கள் முதலியவை முக்கியமான இறக்குமதிப் பொருள்கள்.

முக்கியமான நகரங்கள்: (மக். 1951-ம் ஆண்டு மதிப்பு) ஜகார்ட்டா (தலைநகரம்): 28,00,000; ஜோக்கிய கார்ட்டா : 18,48,886; சுரபாயா: 7,14,898; பாண்டுங்: 6,59,213.

இந்தோனீசியா

வரலாறு: இந்தோனீசியா சு.2,000 தீவுகளைக் கொண்டது. மனித இனத்தின் ஆதிமூதாதையர் ஜாவாத்தீவில் வசித்ததாக அங்கு அகப்பட்ட பாசில் (Fossil) எலும்புகளிலிருந்து தெரிகிறது. தற்காலத்திய இந்தோனீசிய மக்களின் மூதாதையர் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனீசியாவில் குடியேறினர். இவர்கள் சீன மக்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள். கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவிலிருந்து கப்பல்கள் இங்கு வரத் தொடங்கின. இந்தியர் ஜாவாவை யவத்வீபம் எனவும், சுமாத்ராவை சுவர்ணத்வீபம் எனவும் அழைத்தனர். இந்திய நாகரிகம் கி.பி. 1300 வரை இப் பிரதேசத்தில் நிலைத்திருந்தது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே சுமாத்ராவில் இந்துக்கள் குடியேறினர். இங்குக் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீவிஜயம் என்ற இராச்சியம் தோன்றியது. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஜயநாசன் காலத்தில் ஸ்ரீவிஜயம் பெரிய பௌத்த கலாசாலையாக விளங்கியது. ஸ்ரீவிஜயத்தின் ஆட்சி சுமாத்ரா முழுவதிலும் பரவி மலேயாவிலும் வியாபித்தது. 8ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைலேந்திர ராச்சியம் தோன்றிற்று. சிலர் இது ஸ்ரீவிஜய ராச்சியத்தினின்று உதித்ததென்பர். மற்றும் சிலர், இது மலேயாவிலுதித்து எல்லாத் தீவுகளையும் ஆக்கிரமித்தது என்பர். இதன் கல்வெட்டுக்கள் பாண்டிய அரசர்களின் சாசனங்களை யொத்திருப்பதால் இவ்வரசின் கர்த்தாக்கள் தென்இந்தியர் எனலாம். கம்போடியா, அனாம் போன்ற பிரதேசங்களும் இவ்வரசின்கீழ் வந்தன. இவ்வரசின் மதம் மகாயான பௌத்தம். மத்திய ஜாவாவிலுள்ள போராபுதூர் என்னுமிடத்தில் இவ்வரசினால் கட்டப்பட்ட பௌத்த ஆலயத்தின் சிதைவுகள் இன்னும் காண்போரைக் கவர்கின்றன. அதன் 9 மாடிகளிலும் லலிதவிஸ்தரமென்னும் நூலில் கண்ட விதமே புத்தர் வாழ்க்கை, சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்நாட்டிற்குத் தாய் நாட்டினுடன் நெருங்கிய தொடர்பு இருந்துவந்தது. 9ஆம் நூற்றாண்டில் சைலேந்திர அரசனான பலபுத்ரதேவன் வங்காளத்திலுள்ள நாலந்தாவில் பௌத்த விஹாரத்தைக் கட்டினான். ஆனால், இதன்பின் சோழ அரசர்களுக்கும் சைலேந்திரர்களுக்கும் சச்சரவு நிகழ்ந்தது. இராசேந்திர சோழன் ஒரு கப்பற்படையை அனுப்பிச் சங்கிராம விஜயோத்துங்க வர்மனை முறியடித்தான். இதன்பின், சைலேந்திர சாம்ராச்சியம் மெலிவடையத் தொடங்கிற்று. ஆனால் சீன வரலாறுகளிலிருந்து அது 14ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேற்கு ஜாவாவில், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தேவவர்மன் என்பவன் ஆண்டான். 5ஆம் நூற்றாண்டில் உண்டான சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பூர்ணவர்மன் என்னும் அரசன் ஒரு கால்வாயை வெட்டியதாகக் கூறுகின்றன. மத்திய ஜாவாவில் 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட சஞ்சயன் தன் கல்வெட்டுக்களில் பிரமன், விஷ்ணு, சிவன் என்னும் மூன்று மூர்த்திகளையும் துதிக்கிறான். சைலேந்திரர்கள் ஜாவாவைக் கைப்பற்றி 778லிருந்து 879 வரை ஆண்டனர். சஞ்சயனின் சந்ததியார் ஜாவாவில் கிழக்குப் பகுதியில் வசித்தனர். 879-ல் இவர்கள் சைலேந்திரரைத் துரத்திவிட்டு, 927 வரை மத்திய ஜாவாவையும் கிழக்கு ஜாவாவையும் ஆண்டனர். இவர்களின் தலைநகரான பிரம்பானன் என்னுமிடத்தில் பல ஆலயங்களைக் கட்டினர். மத்தியில் சிவாலயமும் சுற்றிலும் பிரமன், விஷ்ணு, துர்க்கை அகத்தியர் ஆலயங்களும் இருக்கின்றன. ஆலயச் சுவர்களில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளும் இராமாயணக் கதையும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் பக்கமுள்ள பௌத்தாலயத்தில் புத்தரைப்பற்றிய ஒரு சமஸ்கிருத பிரார்த்தனை ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஜாவா மொழியில் இலக்கியம் இக்காலத்தில்தான் ஆரம்பிக்கிறது. 927-ல் இவ்வமிசம் அழிந்தது. கிழக்கு ஜாவாவில் ஒரு புதிய அரச வமிசம் தோன்றியது. இவ்வமிசத்தைச் சேர்ந்த தரும வமிசனின் ஆட்சியில் மகாபாரதம் ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டது; சிவசாசனமென்னும் சட்டநூல் இயற்றப்பட்டது. தரும வமிசனின் இருபேரன்மார் காலத்தில் அவர்கள் இராச்சியத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். மேற்குப் பகுதியான கதிரி 12ஆம் நூற்றாண்டில் புகழ்பெறத் தொடங்கியது; அது ஒரு கடற்படைகொண்டு பாலித்தீவையும் போர்னியோவையும் வென்றது. ஜயவர்ஷனின் ஆட்சியில் திரிகுணன் என்னும் புலவர் கிருஷ்ணாயனம் என்னும் காவியத்தை எழுதினார் (1104). கிரதஜயனுடன் இவ்வமிசம் முடிந்தது (1222). பிறகு ராஜசன் என்பவனால் தொடங்கப்பட்ட ஒரு புதிய வமிசம் ஆள ஆரம்பித்தது. அவன் குமாரன் கிரதநகரன் (1268-1292) சாத்திரம் வல்லவன். இவன் மாப்பிள்ளையான கிரத ராஜஸன் (1294-1309) பல பௌத்தாலயங்களையும் சிவாலயங்களையும் கட்டினான். அவன் மகன் ஜயநகரன் (1309-1328) சுந்தர பாண்டிய விக்கிரமோத்துங்கதேவன் என்ற பட்டப்பெயர் பூண்டான். இது பாண்டிய அரசர்களுடன் தொடர்பைக் குறிக்கிறது. 15ஆம் நூற்றாண்டில் இந்த இராச்சியம் வலுக்குறைந்தது. இதே நூற்றாண்டில் முஸ்லிம் மதம் ஜாவாவில் பரவியது.

பாலித் தீவில் முதல் இந்து இராச்சியம் கி. பி. 6ஆம் நூற்றாண்டில் தோன்றிற்று. 10ஆம் நூற்றாண்டில் ஆண்ட உக்கிரசேனன் மிக்க புகழ் பெற்றவன். 15ஆம் நூற்றாண்டில் ஜாவாவில் முஸ்லிம் மதம் பரவியபின், அங்கிருந்து பலர் பாலித் தீவில் குடியேறினர். ஆகையால் இன்றும் பாலித் தீவு இந்து மதத்தைப் பின்பற்றுகிறது. போர்னியோவில் கி.பி. முதல் நூற்றாண்டிலேயே இந்துக்கள் குடியேறினர். 4ஆம் நூற்றாண்டிலாண்ட மூலவர்மன் ஒரு யாகம் புரிந்தான். அதைக் குறிக்கும் கல்வெட்டுத் தென்னிந்தியப் பல்லவ லிபியிலிருக்கிறது. போர்னியோவி லகப்பட்ட இந்துமதச் சிலைகளில் நான்கு கைகள் கொண்டு இரு மருங்கிலும் கருடன்களைக் கொண்ட ஒரு விஷ்ணு உருவம் குறிப்பிடத்தக்கது. செலிபீஸ் தீவில் அமராவதி சிற்பத்திற்கு ஒப்பான புத்தரின் வெண்கலச்சிலை கிடைத்திருக்கிறது.

போர்ச்சுச்கேசியர் 16ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசத்தில் தங்கள் வர்த்தகத்தையும் அதிகாரத்தையும் பரப்பினர். ஆனால், டச்சுக்காரர்முன் அவர்கள் பின் வாங்கினர். 1602-ல் ஏற்பட்ட டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி தன் ஆதிக்கத்தை இங்கு வளர்த்தது. 1619-ல் ஜாவாவிலுள்ள ஜகார்ட்டாவை டச்சுக்காரர் படேவியா எனப் பெயர் மாற்றித் தமது அரசின் தலைநகராக்கினார். ஆனால், சுதேச மக்களுடன் பல முறை போர் புரியவேண்டியிருந்தது. 1811-ல் ஒரு பிரிட்டிஷ் கடற்படை இந்தியாவினின்றும் சென்று ஜாவாவைக் கைப்பற்றியது. ஆனால், ஜாவா 1815-ல் டச்சுக்காரர்களுக்குத் திருப்பிக் கொடுக்கப்பட்டது. 1838-ல் வட மேற்கு போர்னியோ பிரிட்டிஷ் வசமாயிற்று. நியூகினியின் மேற்குப் பகுதி டச்சுக்காரரிடமிருக்கிறது. 1884-ல் நியூகினியின் கிழக்குப் பிரதேசத்தில் ஒரு பகுதி பிரிட்டிஷ் வசமாயிற்று.1839-ல் டச்சுக்காரர் பாலித் தீவில் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். கடைசி இந்து அரசன் சுத்த வீரனாகப் போரிட்டு மடிந்தான் (1908).

டச்சு ஆதிக்கத்தை எதிர்த்து உதயமான சுதந்திர இயக்கத்தை டச்சுக்காரர் பலத்த அடக்குமுறைகளால் அழிக்கப் பார்த்தனர். ஆனால் அது மறையவில்லை. இரண்டாம் உலக யுத்த காலத்தில், ஜப்பானியர் இந்தோனீசியாவைக் கைப்பற்றினர் (1942). 1945-ல் ஜப்பானியர் தோற்கடிக்கப்பட்டபின் இந்தோனீசிய மக்கள் ஒரு சுதந்திரக் குடியரசை நிறுவினர். 1927 ஆம் ஆண்டு முதல் சுதந்திர தலைவராயிருந்த டாக்டர் சுக்கர்னோ அதன் தலைமையை மேற்கொண்டார். யுத்த முடிவில் டச்சுப் படைகள் டச்சு ஆதிக்கத்தை மீண்டும் நிறுவ முயன்றன. இதன் விளைவாகப் போர் நிகழ்ந்தது. 1949-ல் ஆசிய நாட்டுப் பிரதிநிதிகள் டெல்லியில் கூடி இந்தோனீசியச் சுதந்திரத்தை ஆதரித்தனர். ஐக்கிய நாட்டுச் சபையும் இதை யாதரித்ததால், டச்சுக்காரர் இந்தோனீசியருடன் சமாதானப் பேச்சுத் தொடங்கவேண்டி வந்தது. 1950-ல் ஏற்பட்ட ஒப்பந்தப்படி இந்தோனீசியா ஒரு குடியரசாயிற்று. ஆனால், அது பெயரளவில் டச்சு அரச வமிசத்தினரின் தலைமையை ஏற்றுக்கொள்ளும். டச்சுக்காரர்கள் தாங்கள் ஆண்டுவரும் நியூகினிப் பிரதேசத்தை இந்தோனீசியர் வசம் கொடுக்க மறுப்பதால், இந்தோனீசியாவிற்கும் டச்சு நாட்டிற்கும் இன்னும் (1953) சமரசம் ஏற்படவில்லை. 1950 செப்டெம்பரில் ஐக்கிய நாடு ஸ்தாபனத்தில் உறுப்பாக ஆகியுள்ளது. டி.கே.வெ.

அரசியல் அமைப்பு: 1949 ஆகஸ்டு 23 லிருந்து நவம்பர் 2 வரையில் நடந்த வட்டமேஜை மாநாட்டின் முடிவாக முழு ஆட்சி அதிகாரம் இந்தோனீசிய ஐக்கிய நாடுகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆயினும், நியூகினி தீவின் டச்சுப் பகுதியின் அரசியல் நிலையை மேலும் பேச்சுவார்த்தைகள் மூலம் நிருணயிப்பது என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. 1952 மார்ச்சுவரை ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படவில்லை. அம் மாநாட்டில் டச்சுநாடுகளும் இந்தோனீசியக் குடியரசும் ஒத்துழைப்பது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது. இவ்விரு நாடுகளின் ஐக்கியத்திற்குத் தலைமை வகிப்பவர்கள் டச்சு அரசியான ஜூலியானாவும் அவளுடைய சந்ததியாரும்.

1946-48-ல் தயார் செய்யப்பட்ட கூட்டாட்சி ஏற்பாடு 1950-ல் கைவிடப்பட்டது. இந்தோனீசிய ஐக்கிய நாடுகள் என்னும் பெயர் இந்தோனீசியக் குடியரசு என்று மாற்றப்பட்டது. இந்தோனீசியாவில் ஓர் ஒற்றையாட்சிக் குடியரசு நிறுவப்பட்டது. இக்குடியரசில் நியூகினியிலுள்ள டச்சுப் பகுதியைத்தவிர சுமாத்ரா, ஜாவா, செலிபீஸ் முதலிய ஏனைய பிரதேசங்களெல்லாம் அடங்கியுள்ளன. 1950 ஆகஸ்ட் 14-ல் இந்தோனீசிய அசெம்பிளி அவ்வரசியல் அமைப்பை ஏற்றுக்கொண்டது. அதன்படி இந்தோனீசியக் குடியரசில்

இந்தியக் கலையை தழுவிய பழைய ஓவியம்
உதவி: இந்தோனீசியாச் செய்தி இலாகா, புது டெல்லி.

பத்து மாகாணங்கள் அடங்கியுள்ளன. 1950 செப்டம்பர் 28-ல் இந்தோனீசியா ஐ.நா.சங்கத்தின் உறுப்பு நாடாகச் சேர்ந்தது. இந்தோனீசியாவின் பத்து மாகாணங்கள் கிழக்கு, மத்திய, மேற்கு ஜாவா; வடமத்திய, தென்சுமாத்ரா; போர்னியோ; செலிபீஸ்; மோலக்கஸ்; சிறுசண்டாத் தீவுகள் என்பவைகளாம். பஹாசா இந்தோனீசியா என்பதே இக்குடியரசின் நாட்டு மொழியாகும்.

இங்குள்ள முக்கியமான அரசியல் கட்சிகள் முஸ்லிம் கட்சி, தேசியக் கட்சி என்பவை. சோஷலிஸ்டுக் கட்சியொன்றும் கம்யூனிஸ்டுக் கட்சியொன்றும் இங்கு உள்ளன. இவற்றிற்கு முக்கியமான கட்சிகளுக்கு உள்ள அளவு ஆதரவு இல்லை. ஆயினும் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்யலாகாது என்று 1951-ல் ஏற்பட்ட ஒரு சட்டத்தால் அரசாங்கத்திற்கு விரோதமாகச் சட்டசபையில் பலர் சேர்ந்து கொள்ளவே, பழைய அரசாங்கம் மறைந்து, சுகிமன் என்பவர் பிரதம மந்திரியாகி, ஒரு புது அரசாங்கத்தை நிறுவினார். 1952-ல் டாக்டர் அஹமிது சுக்கர்னோ என்பவர் ஜனாதிபதி, டாக்டர் வாலோபோபி பிரதம மந்திரி, சட்டமியற்றும் அதிகாரம் பிரதிநிதிகள் சபைக்குரியது. இக்குடியரசின் தலைவருக்கு ஜனாதிபதி என்பது பெயர். ஜனாதிபதி ராணுவத்தின் தலைமைச் சேனாதிபதி. இவருடைய மந்திரி சபைத்தலைவர் பிரதம மந்திரியெனப்படுவார். *

கலை: ஆதியில் இந்தோனீசியாவில் வாழ்ந்த மக்கள் நாகரிகமற்றவர்களல்லர். ஆயினும் அவர்களுடைய கட்டடங்களும் சிற்பங்களும் கலைத் திறமையுடன் ஆக்கப்படவில்லை. கிறிஸ்தவ சகாப்தத்தின் தொடக்கத்தில் இந்திய மக்கள் அங்குச் சென்ற பின்னரே கலையும் கலை வளர்ச்சியும் தோன்றலாயின. இந்தியர்கள் பண்டைக் காலத்திலேயே அங்குச் சென்றிருந்த போதிலும், அங்குள்ளவர்களுடைய பழைய நூல்களில் இந்தியாவைப்பற்றிய குறிப்பு எதுவுமில்லை. இந்திய நூல்களிலும் வான்மீகி இராமாயணத்தில் மட்டும் ஒரே ஒரு தடவை ஜாவாவின் பெயர் காணப்படுகிறது.

ஆனால் அங்குக் கி. பி. 414-ல் சென்ற சீன யாத்திரிகர் பாஹியானும் 671-ல் சென்ற இதிசிங்கும் அங்கு இந்து நாகரிகம் காணப்பட்டதாக எழுதியுளர். அங்குள்ள கல்வெட்டுக்கள் இவர்கள் கூற்றை வலியுறுத்துகின்றன. அங்கு வர்மன் என்று முடியும் பெயர்களுள்ள அரசர் வாழ்ந்திருந்ததாக அவைகளிலிருந்து அறிகிறோம். அந்தக் கல்வெட்டுக்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்து நாகரிகத்தை இந்தோனீசியாவில் பரப்பியவர்கள் தென்னிந்தியர்களே என்பதற்குப் பல சான்றுகள் உண்டு. பல்லவர் காலத்துத் தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களில் காணப்படும் கிரந்த எழுத்தே இந்தோனீசியக் கல்வெட்டுக்களிலும் காணப்படுகிறது. பல்லவ மன்னருடைய பெயர்களும் வர்மன் என்று முடியும். இந்தோனீசியக் கல்வெட்டுக்கள் குறிப்பிடும் சகம் என்னும் சாலிவாகன சகாப்தமே தென்னிந்தியாவில் வழங்கிவந்ததாகும். வட இந்தியாவில் வழங்கி வந்தது விக்கிரம சகாப்தம். ஒரு கல்வெட்டு குஞ்சரகுஞ்சம் என்னும் ஊரைச் சேர்ந்த அரச வமிசத்தானான சஞ்சயன் இலிங்கப் பிரதிட்டை செய்ததாகக் கூறுகிறது. வராகமிகிரரால் பிருகத் சங்கிதையில் குஞ்சர என்று குறிக்கப்பட்டுள்ள தென்னிந்திய ஊர் அதுவே என்று கருதப் படுகிறது. மற்றொரு கல்வெட்டு அகத்தியர் உருவம் பிரதிட்டை செய்யப்பெற்றதாகக் கூறுகிறது. அகத்தியர் வழிபாடு மிகுந்தது தென் இந்தியாவிலேயே. இவ்வாறு இந்தோனீசியாவுக்குத் தென் இந்தியாவிலிருந்து சென்றவை இந்து மதமும் நாகரிகமுமாகும்.

இந்தோனீசியாவில் காணப்படும் பௌத்த நாகரிகம் வடநாட்டிலிருந்து சென்றது என்பதற்கு மிகப் பழைய பௌத்தக் கல்வெட்டுக்கள் வட இந்திய நாகரி எழுத்தில் எழுதப்பட்டிருப்பது போதிய சான்றாகும்.

இந்து மதக் கோயில்கள் பெரும்பாலும் காணப்படுவது 6.500 அடி உயரமுள்ள தயாங் (Dieng) பீடபூமியிலாகும். அங்குள்ள ஐந்து கோயில்களும் மாமல்லபுரத்திலுள்ள கோயில்களைப் போலப் பஞ்ச பாண்டவர் பெயரால் காணப்படுகின்றன. ஆயினும் இவை அனைத்தும் சிவ வழிபாடுடையனவே. இங்குச் சிவனுடைய உருவம் தாடியும் தொப்பையும் உடைய பிராமணத் துறவி, செபமாலையும் கமண்டலமும் வைத்திருப்பது போல் செய்யப்பட்டிருக்கிறது. பௌத்தக் கோவில்கள் எழுந்த ஒன்பதாவது நூற்றாண்டிலேயே இந்த இந்துக் கோயில்கள் தோன்றினவாம். இக் கோயில்கள் திராவிடச் சிற்ப முறையைத் தழுவியவையாகும். இந்தியாவிலிருந்து சென்ற சிற்பிகள் இந்தோனீசியச் சிற்பிகட்குக் கற்றுக் கொடுத்தனர். மாணவர்கள் கலை நுட்பத்தில் ஆசிரியர்களைவிடச் சிறந்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

மரவேலைப்பாடு (கருடவாகனம்)
உதவி: இந்தோனீசியாச் செய்தி இலாகா, புது டெல்லி.

இந்தியாவில் எந்தக் கோயிலிலும் செதுக்கப்படாத முறையில் இந்தோனீசியக் கோயில்களில் இராமாயணக் கதை செதுக்கப்பட்டிருக்கிறது. விஜயநகரத்திலுள்ள ஹஜாரா ராமசாமிக் கோயிலில் செதுக்கப்பட்டிருப்பவற்றை மிகச் சிறந்தனவாகச் சொல்வதுண்டு. ஆனால், இவற்றைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவை ஜாவாவிலுள்ள பிரம்பானன் கோயிலில் உள்ளவை.

ஏழாம் நூற்றாண்டில் இதிசிங்கு சென்றபோது சைலேந்திர அரச வமிசம் ஸ்ரீவிஜய இராச்சியத்தை அரசாண்டுகொண்டிருந்தது. அந்த வமிசமே "போரா புதூர்" என்னுமிடத்தில் உள்ள தூபத்தைக் கட்டியது. அதுவே உலகத்திலுள்ள பௌத்தக் கோயில்களிலெல்லாம் தலைமையான சிறப்புடையதாகும். அதிலுள்ள சிற்பங்கள் இணையற்றவை. சாந்தி பொழிவதுபோலச் சித்திரிக்கப்பட்டுள்ள அவற்றின் அழகு சொல்லுந்தரமன்று. இக் கோயில் சதுர வடிவமான ஆறு தட்டுக்கள் உடையது. அடித்தட்டின் ஒவ்வொரு பக்கமும் 497 அடி நீளமானது. இக் கோயிலில் உள்ள புத்தர் சிலைகள் மொத்தம் 504 ஆகும். இதன் வாயிலில் கால-மகர வேலைப்பாடு இக் கோயில் இந்தியக் கலையுடன் தொடர்புடையது என்று காட்டுகின்றது. ஆயினும் இக் கோயிலின் கலை முழுவதையும் இந்தியக் கலை என்று சொல்லாமல் இந்தோ-ஜாவாக் கலை என்று சொல்வதே பொருந்தும். ஜாவாச் சிற்பிகள் விலங்கு, பறவை, வீடு, உடை முதலியவற்றை எல்லாம் தம் நாட்டு முறையிலேயே சித்திரித்துளர். இக் கோயிலில் காணப்படும் செதுக்குச் சித்திரங்கள் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறாகும். இவை புத்தர் ஞானோதயம் பெற்றது வரையுள்ள அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கின்றன. இக் கோயில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது என்று அறிஞர் கருதுகின்றனர்.

இதுவரை கூறிய இந்துக் கோயில்களும் பௌத்தக் கோயில்களும் காணப்படுமிடம் நடு ஜாவாவாகும். இவை எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையுள்ள இடைக்காலத்தில் ஆக்கப்பெற்றன.

பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் 14ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்தது கிழக்கு ஜாவாவிலாகும். இக்காலத்தில் ஜாவாக் கலை சிறிது சிறிதாக இந்தியக் கலைத் தொடர்பு அற்றதாக ஆயிற்று. இக்காலத்தில் கிழக்கு ஜாவாவில் எழுந்த சாண்டி ஜகோ (Chandi Djago) கோயிலும் சாண்டி பனாதரன் (Chandi Panataran) கோயிலும் முற்றிலும் ஜாவாக் கலைப் பொருள்களேயாகும். இங்குக் காணப்படும் இராம சரிதச் சித்திரங்கள் பிரம்பானனில் காணப்படும் இராம சரிதச் சித்திரங்களினின்றும் முற்றிலும் வேறுபட்டுத் தோன்றுவதைக் காணலாம். இக் கோயில்களின் புறத்தோற்றம் ஜாவாக் கலையினதாக இருப்பினும், அகத்தேயுள்ள சிலைகள் நடு ஜாவா முறையைத் தழுவினவாகவே காணப்படுகின்றன. இரண்டு கலை முறைகளும் இணைந்திருந்தன என்பதைப் பாலா என்னுமிடத்திலுள்ள கணேச விக்கிரகத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். அதன் முன்புறம் இந்திய முறையையும் பின்புறம் இந்தோனீசிய முறையையும் காட்டும். இந்தோனீசிய மக்கள் அரக்கர்களையும் அசுரர்களையும் சித்திரிப்பதில் மிகுந்த விருப்பமுடையவர்கள். அதுபோல் விஷ்ணுவின் வாகனமாகிய கருடனைச் சித்திரிப்பதிலும் மிகுந்த கருத்துடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இந்தோனீசியாவில் சைவமும் பௌத்தமுமே முதன்மையான சமயங்களாக இருந்தபடியால், அவர்கள் தங்கள் மன்னர்களை விஷ்ணுவைப்போலக் காட்டாமல் சிவன் போலவும் புத்தர் போலவுமே காட்டுகிறார்கள்.

இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களை இடித்துவிட்டு, அவையிருந்த இடங்களில் தங்கள் மசூதிகளையும் மாளிகைகளையும் எழுப்பினார்கள். ஆனால் இந்தோனீசியாவைக் கைப்பற்றிய முஸ்லிம் மன்னர்கள் அங்கே தங்கள் மதத்தை நிலை நிறுத்தியபோதிலும், அங்குள்ள மதங்களையும் கோயில்களையும் அழிக்காதிருந்தார்கள். அவர்கள் இந்தியாவில் ஒரு பெரிய கலை முறையை நிறுவியதுபோல் இந்தோனீசியாவில் நிறுவவில்லை. அதனால் இப்போது அங்குள்ள தொழிலாளிகள் தங்கள் கலைத்திறனைச் சிறு கலைகளிலேயே காட்டக் கூடியவர்களாயிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் கட்டிய பழைய மசூதி ஒன்று கடுவா என்னுமிடத்தில் இருக்கிறது. அது சிலைகள் இல்லாத இந்துக் கோயில் போலவே காணப்படுகிறது. ஆகவே இஸ்லாம் ஜாவாக் கலையைப் பயன்படுத்திக் கொண்டதேயன்றித் தானாக வேறு கலையை உண்டாக்கவில்லை.

ஜாவா, பாலி இவற்றின் பண்டைய பண்பாடு இக் காலத்தில் காணப்படுவது வயாங் (Wayang) என்னும் நாடகச் சாலையிலும், கேயின் (Kain) என்னும் துணிகளிலுமேயாம். இசையும் நடனமும் மிகச் சிறந்த முறையில் உள்ளன. வயாங் கோலக் (Wayang Golek) என்பது பொம்மலாட்டம். முகமூடியணிந்த நாடகத்தை வயாங் தோப்பெங் (Wayang Topeng) என்றும், சாதாரண நாடகத்தை வயாங் வோங் (Wayang Wong) என்றும் கூறுவர். வயாங் என்னும் நாடக வகை மிகச் சிறந்ததாகும். இகாத் (Ikat) என்னும் துணிவகை மிகுந்த கலைப்பண்புடையது. இதுவும் இந்தியக் கலைத்தொடர்புடையதாகும்.

ஜாவா மக்கள் வரைந்த ஓவியங்கள் கிடைக்கவில்லை. ஏட்டுச் சுவடிகளில் வரைந்துள்ள விளக்கப் படங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், நடு ஜாவாவினர் செய்துள்ள ஒரு செப்பு அரிச்சித்திரம் (Etching) கிடைத்துள்ளது. அதில் ஒரு பெண் குழந்தையுடன் காணப்படுகிறாள். இது அஜந்தா சித்திரத்தை நினைவூட்டுவதாக உள்ளது. பாலி என்னும் தீவில் சுவர் ஓவியங்களும் ஏட்டு விளக்கப் படங்களும் கிடைக்கின்றன. அவற்றுள் சில இதிகாசப் பொருளும், சில அகப்பொருளும் காட்டுவன.