கலைக்களஞ்சியம்/இந்தோ-சீனா
இந்தோ-சீனா: ஆசியாவின் தென்கிழக்குக் கோடியிலுள்ளது. 1946க்கு முன்பு பிரெஞ்சுக்காரர்களுக்குரித்தாய் ஒரே பிரதேசமாயிருந்த இந்த நாடு 1949லிருந்து பிரெஞ்சு ஐக்கியத்தில் அடங்கிய மூன்று உறுப்பு நாடுகளாகப் பிரிந்துள்ளது; வியட்நாம், கம்போடியா, லாவோஸ் என்னும் மூன்றும் இப்போது பிரெஞ்சு ஐக்கியத்தின் பகுதிகளாம்.
சீயமும் இந்தோ-சீனாவும் சேர்ந்து ஆசியாவின் தென்கிழக்கு மூலையில் ஒரு தீபகற்பமாகின்றன. பரப்பு : 2,85,794 ச.மைல். மக் : சு.2,70,30,000 (1949). மேகாங் ஆறும் செவ்வாறும் இங்குள்ள இரு முக்கியமான ஆறுகள். இங்கு வெப்பநிலை சாதாரணமாக மிகுதியாகவே இருக்கிறது; மழைகாலத்தில் விடாமழை பெய்கிறது. தங்கம், இரும்பு, நாகம், நிலக்கரி, வெள்ளி, வெள்ளீயம், மாங்கனீசு, டங்ஸ்டன், குரோமியம், அன்டிமனி முதலிய தாதுக்கள் மிகுதியாகக் கிடைக்கின்றன. நன்செய்ச் சாகுபடி ஏராளமாக நடைபெறுகிறது. இங்குள்ள ஆற்றுப்பெருக்கு இதற்குப் பயன்படுகிறது. இப்பிரதேசம் இயற்கை வளம் மிகுந்தது.
இந்நாட்டில் மங்கலான மஞ்சள் நிறமுள்ள மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் பேசும் மொழி ஏறத்தாழச் சீனமொழியை ஒத்திருக்கிறது. இவர்களுடைய பண்பாடு இந்தியர்களுடைய பண்பாட்டைப் பெரிதும் ஒத்திருக்கிறது; மிகப் பரவியுள்ள மதம் பௌத்தம். பெரும்பான்மை மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டவர்கள்.
அரிசி, ரப்பர், தேயிலை, காப்பி முதலியன முக்கிய விளைபொருள்கள். ஏற்றுமதியில் 2/3 பகுதி அரிசி. நெசவுத்தொழிலும் சிறிதளவு நடக்கிறது. பிரெஞ்சு ஆட்சி நாட்டின் கைத்தொழில் முன்னேற்றத்தை அதிகமாகக் கவனிக்கவில்லை.
2,400 மைல் நீளமுள்ள ரெயில்வேக்கள் இந்நாட்டில் போக்குவரத்திற்குதவுகின்றன. ஆறுகள் செல்லுமிடங்களில் படகுகளும், மலைப் பிரதேசங்களில் கோவேறு கழுதைகளும் சாமான்கள் ஏற்றிச் செல்லுகின்றன.
முக்கியமான நகரங்கள் : மக்: (1949ஆம் ஆண்டில்) சைகான் (வியட்நாம் தலைநகர்) :17,00.000; ஹானாய்: 2,17,000; ஹைபாங்: 92,000; நெம்பென் 1,28,950; (கம்போடியா தலைநகர்); வியன்டேன் (லாவோஸ் தலைநகரம்) : 13,700.
மானிடவியல் : இந்தோ-சீனாவிலுள்ள மக்கள் பல இனத்தார் சேர்ந்த குழுவினராவர். அதற்குக் காரணம் இந்த நாடு பலதடவை படையெடுப்புக்கு உள்ளாகியதேயாம். நாட்டிலுள்ள மக்களுள் ஐந்தில் நான்கு பகுதியினர் அனாமியர். அவர்கள் பெரும்பாலும் அனாம், டாங்கிங் கொச்சின் சீனா ஆகியவற்றில் வசிக்கிறார்கள். கம்போடியாவிலுள்ளவர்கள் கம்போடியர் அல்லது கெமர்கள். தென் அனாமிலுள்ளவர்கள் சாமியர் (Chamis). லாவோஸிலுள்ளவர்கள் லாவோஸர். நாட்டின் சுதேசிகள் காக்கள் (Khas) அல்லது மாயிகள் (Mois) என்று கூறப்படுவர். அச் சொற்களின் பொருள் அநாகரிகர் என்பதாம்.
இந்த மாயிகள் மற்றவர்களால் துரத்தப்பட்டு, நாட்டின் உட்பகுதிகளில் அங்குமிங்குமாகக் காணப்படுகின்றனர். செவ்வாற்றின் ஓரமாகவுள்ள மலைகளிலுள்ளவும் பலமாகவும் இருப்பர். அவர்கள் சதுரமான நெற்றி முவாங்குகள் (Moungs) அனாமியரைவிடப் பருமனாகயும், பெரிய முகமும், பலத்த தாடை எலும்புகளும் உடையவர்.
இந்தோ-சீனாவின் மலைத்தொடரின் நடுப்பகுதியிலும் தென் பகுதியிலும் மேற்கூறிய சாதியாருடன் மலேயா மக்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் காணப்படுகின்றனர். லாவோஸுப் பகுதியில் தாயிகளும், காக்களும், சீன மக்கள் இனத்தைச் சேர்ந்த மூக்களும் யாவோக்களும் காணப்படுகின்றனர்.
அனாமியர் மதம் பௌத்தமதத்தின் ஒரு சிதைவாகும். அது பெரும்பாலும் மூதாதையர் வணக்கமேயாகும். கம்போடியா மக்கள் செய்யும் சில கிரியைகள் இந்து மதத்தைச் சேர்ந்தனவாகத் தெரிகின்றன. கிறிஸ்தவப் பாதிரிகள் ரோமன் கத்தோலிக்க மதத்தை இங்குப் பரப்பினர்.
அனாமியர் கிறிஸ்தவச் சகாப்தத் தொடக்கத்தில் தென் சீனாவிலிருந்து வந்தவர்கள். மூன்றாம் நூற்றாண்டில் இந்தியர்கள் வந்து இந்து நாகரிகத்தை வளரச் செய்தனர். ஆனால் அனாமியர் பரவவே இந்த வளர்ச்சி தடைப்பட்டுப் போயிற்று. அனாமியரும் கம்போடியரும் கடற்கரை ஓரத்திலும் ஆற்றங்கரைகளிலும் வசிக்கின்றனர். ஏனையோர் மலைப் பிரதேசங்களில் வாழ்கிறார்கள்.
வரலாறு : அனாம் பிரதேசத்தை ஆண்ட முதல் அரச வமிசம் சீன அரச வமிசத்திலுதித்ததாக ஓர் ஐதிகம். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சீனர் இப்பிரதேசத்தை வென்றனர். கி.பி. 10ஆம் நூற்றாண்டு வரை சீனர் ஆதிக்கம் நிலைத்திருந்தது. கி.பி. 968-ல், தின்போலான் என்ற அரசன் சீனரை விரட்டித் தன் அதிகாரத்தை நாட்டினான். ஆனால், அவனுக்குப்பின் குழப்பம் விளையவே, 15ஆம் நாற்றாண்டில் சீன ஆதிக்கம் மறுபடியும் வந்தது. பிறகு சுதந்திரமடைந்த போதிலும், நாட்டின் நிலைமை சீர்திருந்தவில்லை. 18ஆம் நூற்றாண்டில் அரசர்கள் பிரபுக்களுக்கு அடங்கியிருந்தனர். ஜியாலான் என்னும் அரசன் பகைவர்களை வெல்லப் பிரெஞ்சுக்காரர் உதவியை நாடினான். பிரெஞ்சு அரசன் XIV-ம் லூயி காலம் முதல், பிரெஞ்சுக்காரர் இந்தோ-சீனாமீது கண் வைத்திருந்தனர். ஜியாலான் பிரெஞ்சு உதவி கொண்டு அனாம், டாங்கிங், கொச்சின்-சீனா ஆகிய பிரதேசங்களைக் கைப்பற்றினான். டாங்கிங் பிரதேசம் இந்தோ-சீனாவின் வட கிழக்கிலிருக்கிறது; இதுவரை அனாம் மன்னர்களுக்குப் பெயரளவில் பணிந்திருந்தது. ஜியாலான் அதை அனாமுடன் ஐக்கியப்படுத்தினான் (1801). கொச்சின்-சீனா மிகவும் சிறிய பிரதேசமாயினும் மிக்க வளம் பொருந்தியது. ஜியாலான் பிரெஞ்சு அரசரான XVI-ம் லூயியுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டான் (1787). அதிலிருந்து பிரெஞ்சு அதிகாரம் தோன்ற ஆரம்பித்தது. அரசர்கள் கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துகிறார்கள் என்ற ஒரு காரணங்காட்டி, 1858-ல் பிரெஞ்சுக்காரர் பலாத்காரமாய் அரசியலில் தலையிட்டனர். 1859-ல் அவர்கள் கொச்சின் - சீனாவை ஆக்கிரமித்தனர். 1862-ல் அதன் மூன்று கிழக்கு மாகாணங்களையும் கைப்பற்றிக் கொண்டனர். 1867-ல், எஞ்சிய மூன்று மேற்கு மாகாணங்களையும் வென்றனர். இதன்பின், கார்னியே (Garnier) என்னும் தளகர்த்தர் 188 சிப்பாய்கள் கொண்ட ஒரு படை கொண்டு டாங்கிங்கை வென்றார். 1883-ல் அனாம் அரசர் பிரெஞ்சுக்காரருக்கு இவற்றை விட்டுக் கொடுத்து ராஜி செய்து கொண்டார். அனாம் ஒன்றுதான் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குப் புறம்பாக இருந்தது.அனாம் அரசர் சீனாவுடன் சேர்ந்து பிரெஞ்சுக்காரர் மீது போர் தொடுத்துத் தோல்வியடைந்தார் (1887). எனவே, 1892-ல் அனாம் அரசர் பிரான்ஸின் ஆதிக்கத்திற்கு அடி பணிந்தார்.
லாவோஸ் பிரதேசம் இந்தோ-சீனாவின் வடமேற்குப் பகுதி. இதன் முதல் அரசன் கி.பி. 713-ல் ஆள ஆரம்பித்ததாகத் தெரிகிறது. பின்னர் இந்நாட்டைக் கம்போடியா தேசத்து அரசர்கள் ஆண்டனர். சாம் சேன்டாய் (Sam Santai 1356-1406) தம் நாட்டின் சுதந்திரத்தை மீட்டார். மனோரம் என்ற இடத்திலுள்ள பெரிய கோவிலைக் கட்டினார். 18ஆம் நூற்றாண்டின் கடைசியில் நாட்டின் பெரும்பகுதியைத் தாய்லாந்து கைப்பற்றியது. 1893-ல் ஒரு பிரெஞ்சுப் படை தாய்லாந்திடமிருந்து நாட்டைக் கைப்பற்றிக் கொண்டது.
இந்தோ-சீனாவின் மேற்குப் பகுதியான கம்போடியா இந்திய நாகரிகத்தின் செல்வாக்குக்குட்பட்டது. இங்கு, முதன் முதல் கி பி. முதல் நூற்றாண்டில் தென் இந்தியர்களால் பியூ-நான் (Fu-nan) என்னுமிடத்தில் ஓர் இராச்சியம் ஏற்படுத்தப்பட்டது. முதல் அரசன் கௌண்டின்யன் என்பவன். இந்த இராச்சியம் ஆறாம் நூற்றாண்டில் சிதைந்தது. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே கம்புஸ்வயம்புலன் என்னுமோர் இந்தியன் கம்போடியா பிரதேசத்தின் ஒரு பகுதியைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அதன்முன் கெமர் (Khmer) என்ற சாதியினர் இங்கு ஆண்டனர். கம்புஸ்வயம்புலன் கெமர் இராணியை மணந்து அரசனாயினான். அவன் பெயரை நாட்டிற்கும் ஆக்கி, அந்த நாட்டைக் காம்போஜமென்றனர். இதன்பின், இந்தியாவிலிருந்து பலர் குடியேறினர். நாட்டிலிருந்து கெமர் மக்கள் இந்திய நாகரிகத்தால் வளம் பெற்றனர். சிரேஷ்டவர்மன் என்னுமரசன் சிரேஷ்டபுரத்தைத் தன் தலை நகராக்கினான். 6 ஆம் நூற்றாண்டில் ஆண்ட ருத்ரவர்மன் சபையில், பிரமதத்தன், பிரமசிம்மன் என்னுமிரு ஆயுர்வேத வைத்தியர்கள் புகழுடன் விளங்கியதாகத் தெரிகிறது. கௌடிலியரின் அர்த்தசாஸ்திர முறைப்படி அரசு நடத்தப்பட்டது. ஆனால், பியூ-நான் அரசர்களின் ஆதிக்கம் நாட்டில் பரவலாயிற்று. 6ஆம் நூற்றாண்டின் இறுதியில், பவவர்மன் என்னும் வேந்தன் தன் நாட்டைச் சுதந்திரமாக்கி விட்டு, பியூ நானையும் கைப்பற்றினான்; பவபுரமென்னும் தலைநகரை நிருமாணித்தான். 8ஆம் நூற்றாண்டில் சைலேந்திர அரசர்கள் நாட்டை வென்றனர். ஆனால் இரண்டாவது ஜயவர்மன் (802-869) திரும்பவும் சுதந்திர மன்னனானான். 9ஆம் நூற்றாண்டில் ஆண்ட யசோவர்மன் நிருமித்த யசோதரபுரம் 12ஆம் நூற்றாண்டு வரை தலைநகராக இருந்தது. II-ம் சூரியவர்மன் (1113-1145) இங்கு ஒரு பெரிய விஷ்ணு கோயிலைக் கட்டினான். ஆங்கோர்வாட் (Angkorvat) என்றழைக்கப்படும் இந்த ஆலயம் தென் இந்திய ஆலயங்களை ஒத்தது. இராமாயணம், மகாபாரதம், ஹரிவமிசம் ஆகிய இவைகளின் கதைகள் சிற்பங்களாக ஆலயத்தில் செதுக்கப்பட்டிருக்கின்றன. VII-ம் ஜயவர்மன் (1182-1201) இந்தோ-சீனா முழுவதையும் வென்றான்.பாயோன் (Bayon) என்னும் பெரிய ஆலயம் இவன் கட்டியதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆலயச் சுவர்களில் புராணக் கதைகளும் கப்பற் சண்டைகளும் அரசர் ஊர்வலங்களும் மக்கள் தினசரி வாழ்க்கையும் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. காம்போஜ நாட்டின் அசோகன் என மதிக்கப்பட்ட இவ்வரசன் ஒரு பௌத்தன். பல மருத்துவச் சாலைகளைக் கட்டிக் குடிமக்களுக்குச் சேவை செய்தான். அவனுடைய ராஜ விஹாரத்தில் 439 ஆசிரியர்களும், 970 மாணவர்களும் இருந்தார்கள். மத விஷயத்தில் பொதுநோக்கு இருந்தது. வேதங்களில் விதிக்கப்பட்ட யாகங்கள் நடந்தன. பல ஆசிரமங்களில் சன்னியாசிகள் உபதேசம் செய்தனர். கோயில்களில் வணங்கப்பட்ட தெய்வங்களில் நடராஜரும் ஒருவர். இங்கு வடமொழியில் பல சாசனங்கள் கிடைத்திருக்கின்றன. இறந்த ராஜ வமிசத்தினர் தேவராஜன் என்ற பெயருடன் லிங்க ரூபமாகப் பூசிக்கப்பட்டனர். பல சிற்பங்களில் கோவர்த்தனம் தாங்கிய கிருஷ்ணனும், சிவனும் விஷ்ணுவும் கலந்த ஹரிஹரனும் காணப்படுகின்றனர். ஆனால், மேற்கே தாய்லாந்துடனும், கிழக்கே சம்பா இராச்சியத்துடனும் அடிக்கடி யுத்தம் செய்ய நேர்ந்ததால் 14ஆம் நூற்றாண்டின் பின் காம்போஜ இராச்சியம் சிதைந்தது. 15ஆம் நூற்றாண்டில், தாய்லாந்து அநநாட்டைக் கைப்பற்றியது. 1863-ல் பிரெஞ்சுக்காரரின் அதிகாரம் நாட்டில் பரவியது. 1876-ல் தாய்லாந்து கம்போடியா (காம்போஜம்) வைப் பிரான்ஸுக்கு விட்டுக்கொடுத்தது.
தெற்கு அனாம் பிரதேசத்தில் கி. பி. 2ஆம் நூற்றாண்டில் சம்பா என்னும் இந்து இராச்சியம் நிறுவப்பட்டது. இதை நிறுவியவர்கள் தென் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்று கருதப்படுகின்றனர். பன்னிரண்டு அரச வமிசங்கள் இங்கு ஆண்டன. முதல் முக்கிய அரசனான ஸ்ரீமாரன் இந்திரபுரத்திலிருந்து ஆண்டான். இப்பிரதேசத்தவர்களுக்குச் சிவனும் பகவதியும் முக்கியக் கடவுளர்கள். 14ஆம் நூற்றாண்டில் அனாம் அரசர்கள் இப் பிரதேசத்தைக் கைப்பற்றிக்கொண்டனர்.
பிரெஞ்சுக்காரர் நேர்முகமாகக் கொச்சின் - சீனாவை ஆண்டார்கள். 1926-ல் பட்டத்திற்கு வந்த பாவ்டாய் என்ற அரசர் அனாமை ஆண்டார். டாங்கிங், கம்போடியோ, லாவோஸ் என்பவை தனி இராச்சியங்கள். ஆனால் இவைகளும் பிரெஞ்சு ஆதிக்கத்திற்குட்பட்டவை. பிரெஞ்சு ஆட்சிக்கு எதிராக, 1930-ல் சுதந்திர இயக்கம் ஆரம்பமாயிற்று. அதன் தலைவராக ஹோ-சி-மின் என்பவர் தோன்றினார். பிரெஞ்சுக்காரர் அவ்வியக்கத்தை அடக்க முயன்றனர். இவ்விதமிருக்கையில், இரண்டாம் உலகயுத்தம் மூண்டது. 1941-ல் ஜப்பானியர் இந்தோ-சீனாவில் தம் ஆதிக்கத்தை ஏற்படுத்தினர். ஜப்பானிய ஆதிக்கத்தை எதிர்த்து ஹோ-சி-மின் போராடினார். இந் நிலைமையைச் சமாளிக்க ஜப்பானியர் அனாம் அரசர் பாவ்டாயின் கீழ் டாங்கிங்கையும், கொச்சின்-சீனாவையும் இணைத்தனர். 1945-ல் ஜப்பானியர் யுத்தத்தில் தோற்று வெளியேறினர். ஹோ-சி-மின் பிரெஞ்சு ஆதிக்கம் வேண்டுமென்று சுதந்திரப் பிரகடனம் செய்தார். பாவ்டாய் பட்டமிழந்தார். ஆனால், பிரெஞ்சுக்காரர் தங்கள் படைகளைத் திரும்ப இப்பிரதேசத்திற்குக் கொண்டுவந்து, தங்கள் ஆதிக்கத்தை நிறுவ முயன்றனர். தங்கள் படைபலம் கொண்டு ஹோ-சி-மின்னுடன் போர் தொடுத்தனர். 1949-ல் பாவ்டாய் பிரெஞ்சுக்காரர் உதவியால் வியட்நாம் அரச பதவி எய்தினார்; கொச்சின்-சீனாவையும் டாங்கிங்கையும் வியட்நாமுடன் இணைத்தார். கம்போடியா, லாவோஸ் பிரதேச அரசர்களுக்கும் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ்ச் சுதந்திரமளித்தனர். தற்போது வியட்நாம், கம்போடியா, லாவோஸ் இப்பிரதேசங்கள் உள்நாட்டுச் சுதந்திரத்துடன் பிரான்ஸோடு வெளி விஷயங்களில் பிணைந்திருக்கின்றன. ஆனால் ஹோ-சி-மின் சில பகுதிகளை வியட்மின் என்னும் பெயருள்ள சுதந்திரக் குடியரசாகப் பிரகடனம் செய்து பிரெஞ்சுக்காரருடன் போராடிக்கொண்டிருக்கிறார் (1953). டி. கே. வெ.
அரசியல் அமைப்பு : இரண்டாவது உலகயுத்தத்தின்போது உருப்பெற்ற வியட்மின் என்ற தேசிய இயக்கத்தினர் ஹோ-சி-மின் என்பவருடைய தலைமையின்கீழ் ஜப்பானியரை எதிர்த்து வந்தனர். ஜப்பான் தோல்வியுற்றதும் வியட்மின் கட்சி இராச்சிய அதிகாரத்தைக் (1945 ஆகஸ்டு 15) கைப்பற்றியது. அனாம் ‘சக்கரவர்த்தியாக’ இருந்த பாவ்டாய் என்ற அதிபர் முடி துறந்து, ஹோ-சி-மின் சர்க்காரில் சேர்ந்து அதைப் பலப்படுத்தினார். டாங்கிங், அனாம், கொச்சின்-சீனா என்ற மூன்று பகுதிகளும் சேர்ந்த வியட்மின் குடியரசு அதே ஆண்டு செப்டெம்பரில் நிறுவப்பட்டது.
பிறகு, பிரிட்டிஷ் படைகள் இந்தோ-சீனாவில் இறங்கிப் பின்னர் வந்த பிரெஞ்சுப் படைகளுக்கு ஊன்றுகால் கொடுத்துவிட்டுத் திரும்பின. மறுபடியும் பழைய படி இந்தோ-சீனா முழுவதும் தங்கள் ஆதிக்கத்துக்குத் திரும்பி விட வேண்டுமெனப் பிரெஞ்சுச் சர்க்கார் விரும்பினர். ஆனால், வியட்மின் குடியரசு நிலைத்துவிட்டது என்பதை உணர்ந்து, சண்டையை நிறுத்திச் சமாதான உடன்படிக்கை ஒன்றை 1946 மார்ச்சு 6ஆம் தேதி ஹோ-சி-மின்னுடன் செய்துகொண்டார்கள். வியட்மின் பகுதியிலிருந்து உடனடியாகவும், கம்போடியா, லாவோஸிலிருந்து சிறிது தாமதித்தும் விலகுவதாகப் பிரெஞ்சுக்காரர் ஒப்புக்கொண்டனர். ஆனால், பாரிஸில் பிரெஞ்சு அரசாங்கத்தில் ஏற்பட்ட மாறுதலின் விளைவாக, வியட்மினுக்குத் தந்த அங்கீகாரத்தை ரத்து செய்து, ஹோ-சி-மின்னுடன் சண்டை செய்வதென்று முடிவாயிற்று. 1946 டிசம்பர் 19-ல் ஆரம்பமான அந்தப் போராட்டம் இன்னும் (1953) நீடித்து வருகிறது. பாவ்டாயை ஹோ-சி-மின் கட்சியிலிருந்து பிரித்து, அவரைத் தங்கள் வசமுள்ள வியட்மின் பகுதியின் தலைவராகப் பிரெஞ்சுச் சர்க்கார் நியமித்துள்ளனர். அவருடைய ஆட்களையும், பிரெஞ்சுப் படைப் பலத்தையும் கொண்டு போரை நடத்திவருகிறார்கள். வியட்நாமின் வடபகுதியிலும், மற்றப் பகுதிகளில் திட்டுத் திட்டாகவும் பல பிரதேசங்கள் ஹோ-சி-மின் ஆதிக்கத்தில் இருந்து வருகின்றன. பிரான்ஸுக்குப் பாதகமான ராணுவ நிலைமை 1952 இறுதியில் இருந்தது.
ஹோ-சி-மின் சர்க்காருடைய செல்வாக்கைத் தகர்க்கும் நோக்கத்துடன் வியட்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய மூன்றையும் பிரெஞ்சு மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுதந்திர நாடுகள் என்று 1949 மார்ச்சு 8ஆம் தேதி பிரெஞ்சுச் சர்க்கார் பிரகடனம் செய்தார்கள். லாவோஸும் கம்போடியாவும் முடியரசு உள்ளவை. 1950 ஜனவரி 19ஆம் தேதியன்று சீனாவும், 31ஆம் தேதி சோவியத்தும் அதன் சார்பு நாடுகளும் ஹோ-சி-மின் சர்க்காரை அங்கீகரித்தன.
இந்தோ-சீனாவுக்கு சைகானில் பிரெஞ்சுச் சர்க்காரின் பிரதிநிதியாக ஒரு ஹை கமிஷனர் மேலாதிக்கம் வகிக்கிறார். அவருக்கு உதவிபுரிய எட்டுப்பேர் கொண்ட ஒரு மந்திராலோசனைச் சபை உண்டு. இந்த எட்டுப் பேரையும் ஹை கமிஷனரே நியமிக்கின்றார். ‘இணைப்பு இராச்சியங்கள்’ என்று சொல்லப்படும் வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரெஞ்சுக் கமிஷனர் உண்டு. இந்த மூன்று இராச்சியங்களின் சர்க்கார்களுக்கு உள்நாட்டு விவகாரங்களில் ஏறக்குறைய முழு அதிகாரம் உண்டு. ஆனால், அதன் பிரயோகம் பிரெஞ்சு ராணுவத்தின் தேவைகளுக்கு உட்பட்டது. ஒவ்வொன்றிலும் தலப் பாதுகாப்புப் படையுண்டு. இம் மூன்று பகுதிகளின் பாதுகாப்புக்கும் பிரான்ஸ் பொறுப்பாளி; எல்லாவற்றிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தல கவுன்சில்கள் உண்டு; ஆனால், இராச்சியாதிகாரம் ஜனநாயக அடிப்படையில் உருவாக்கப்படவில்லை.
ஹோ-சி-மின் சர்க்காரில் கம்யூனிஸ்ட் செல்வாக்கு மேலும் மேலும் அதிகரித்து வந்துள்ளது. நான்கு கட்சிகள் சர்க்காரில் சேர்ந்துள்ளன. யுத்தம் நீடித்து நடந்து வருவதால் அதன் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தல விவகாரங்களில் அதிகாரமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில்களின் மூலம் ஆட்சி நடக்கிறது. ஏ. ஜீ. வே.
இந்தோ-சீனக் கலைகள்: பழங்கால இந்தோசீனத்தில் வழங்கிய கலைமரபுகளான கெமர்க் கலையும் க்ஷாம் கலையும் இந்தியக் கலைகளிலிருந்து தோன்றியவை.கட்டடம் அமைக்கும் முறையும் சிலைகளையமைக்கும்
கெமர்க் கலைகள் (7-12ஆம் நூ.): வடிவ கணித முறைப்படி அமைந்திருப்பதும், மதக்கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதும் கெமெர்க் கலைகளின் முக்கிய அமிசங்களாகும். கெமர் நாட்டில் கட்டடம் அமைக்கும் முறை தொடர்ச்சியாக வளர்ச்சியுற்றதே இதற்கு ஒரு முதற் சான்று. ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிறுவப்பட்ட நினைவுச் சின்னங்கள் செங்கல்லினால் ஆங்காங்குக் கட்டப்பட்ட கோயில்களேயாம். I-ம் ஈசானவர்மன் தன் தலைநகரான சம்போர்பிரய்குக் என்னுமிடத்தில் கட்டிய கோயில் இதற்கு உதாரணமாகும். இது இந்தியாவில் சீர்ப்பூரிலுள்ள இலட்சமணர் கோயிலை ஒத்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜயவர்மன் கம்போடியாவை ஜாவா நாட்டினர் ஆதிக்கத்திலிருந்து மீட்டு, மகேந்திர பர்வதம் என்ற தலைநகரை நிறுவினான். இவ்விடத்தில் ஒரே பீடத்தில் கட்டப்பட்ட பல கோயில்கள் உள்ளன. 881ஆம் ஆண்டில் முதலாம் இந்திரவர்மனின் ஆட்சியில் ஹரிஹரர் ஆலயம் என்னுமிடத்தில் பாகாங் என்ற பிரமிடு கட்டப்பட்டது. இது மேரு மலையின் சின்னமாகவிருந்தது. இவனுக்குப்பின் வந்த முதலாம் யசோவர்மன் ஆங்கோர் என்னும் நகருக்கு அடிகோலினான். இதன் மத்தியில் உள்ள பினோம் பக்கேன் என்ற மேட்டின்மேல் மணற்பாறையிலான ஐந்து கோயில்கள் இக்காலத்தில் கட்டப்பட்டன. இதன்பின், பிராகாரங்கள் கோபுரத்தைச் சுற்றிலும் தொடர்ச்சியாக அமைக்கப்பட்டன. தாகாவ், பாபுவான் ஆகிய இடங்களில் உள்ள கோபுரங்கள் இதற்கு உதாரணங்களாகும். இதற்கு முன்னரே 967-ல் பண்டிசிரேய் என்னுமிடத்தில் அழகிய சிறு கோயிலொன்று கட்டப்பட்டது. இதற்குக் கோபுரமில்லை. ஆனால், கம்பீரக் குறைவாய் இருப்பினும், கிமெர்க் கோயில்களில் இதுவே மிக்க கவர்ச்சியும் வனப்பும் வாய்ந்தது. கோபுரங்கள் உள்ள கோயில்களைக் கட்டும் கலை 12ஆம் நூற்றாண்டில் ஆங்கோர்வாட் கோயிலில் உச்சநிலையை அடைந்தது எனலாம். அதன் நடைக்கும் கோயிலைச் சுற்றியுள்ள மூன்று உப்பரிகைகளுக்கும், கோபுரங்களுக்கும், மூலைகளிலுள்ள மேடைகளுக்கும், அவற்றை இணைக்கும் நடைகளுக்கும் மேல் ஐந்து தூபிகள் உயர்ந்து நிற்கின்றன. 12ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 13ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும் அரசாண்ட ஜயவர்மன் என்னும் பௌத்த மன்னனே கெமர்ப் பேரரசர்களுள் இறுதியானவன். ஆனால் இவன் மத சமுதாய ஸ்தாபனங்கள் பல அமைத்ததால் கட்டடக் கலை வீழ்ச்சியுறத் தொடங்கியது. இவன் காலத்தில் கலையழகில் மயங்கிய சிற்பிகள் கட்டட அமைப்பை மிகச் சிக்கலானதாக்க எங்கெங்கும் கூடங்களையும் உப்பரிகைகளையும் அமைத்துக் கட்டடத்தின் தோற்றத்தையே பாழாக்கிவிட்டனர். இருப்பினும் பயங்கரப் புன்னகையுள்ள முகங்களமைந்த 50 தூபிகள் உள்ள பாயோன் என்ற ஏழாம் ஜயவர்மனின் அரண்மனைக் கோயில் கெமர்க்கலை சாதித்த அற்புதங்களில் ஒன்று. சிறு தூண்களையும் அவற்றின் போதிகைகளையும் கட்டுமுறை வளர்ச்சியை ஆராய்ந்தே ஸ்டெர்ன் என்பாரும் ஜில்பெர்ட் டிகோரால் என்ற அவருடைய மாணவரும் கெமெர்க் கலைகளின் காலவரையறைகளை முடிவுசெய்தார்கள்.
7ஆம் நூற்றாண்டிலேயே சிற்பக் கலையின் அடிப்படையில் மதக் கோட்பாடுகள் அமைந்திருக்கக் காண்கிறோம். இந்தியச் சிற்பத்தில் காணப்படும் திரிபங்கம் என்னும் நிலை படிப்படியாக மறைந்தது. பெருமை உணர்ச்சியும் சிலையின் வடிவத்தைத் திருத்தமாக
அமைக்கும் கலையும் இக்காலத்தில் தோன்றின. பிரசாத் ஆள்தெட் என்னுமிடத்திலுள்ள ஹரிஹரரது அழகிய சிலை இக்காலத்தியது. பத்தாம் நூற்றாண்டின் முதற் பகுதியில் அமைக்கப்பட்ட சிலைகளின் முகங்கள் அழுத்தமாகவும் கூர்மையாகவும் அமைக்கப்பட்டன. ஆனால் பாந்தேயஸ்ராய் என்னுமிடத்தில் முகக் கலையின் மேன்மை காணப்படுகிறது. மேன்மையான இச்சிலைகளின் வடிவம் அழகு நிறைந்ததாக இருக்கிறதேயன்றிக் காம உணர்ச்சியைத் தூண்டுவதாக இல்லை. பாந்தேயஸ்ராய் ஆங்கோர்வாட் கோயில்களிலுள்ள அப்சரசின் சிலையில் புன்னகையுடன் பெண்மைக்கியல்பான நாணமும் கூடி நிற்கிறது. ஆங்கோர்வாட் கோயிலின் உப்பரிகைச் சுவர்களில் செதுக்கப்பட்டிருக்கும் குறைப்புடைப்புச் சித்திரங்கள் இவ்வகைச் சிற்பத்திற்குத் தலைசிறந்த உதாரணமாகும். இச்சித்திரங்கள் புராணக் கதைகளையும் வரலாற்று நிகழ்ச்சிகளையும் குறிக்கின்றன. உப்பரிகையின் தோற்றத்துடன் ஒத்திருக்குமாறு இச்சித்திரங்கள் அமைக்கப்பட்டன. VII-ம் ஜயவர்மன் காலத்துப் பௌத்த சிற்பங்களின் முகத்தோற்றத்தில் மென்மையையும் சாந்தத்தையும் ஒருங்கே காண முடிகிறது. எல்லையற்ற பரம்பொருளைக் காணும் அவா இந்தியக் கலை மரபிற்குரியது. இக் காலத்துக் கெமெர்ச் சிற்பங்களின் புன்சிரிப்புத் தவழும் முகத்தில் இதைக் காண்கிறோம். இவை மூடிய கண்களுடன் தியான நிலையில் உள்ளன.
க்ஷாம் கலைகள் (8-12ஆம் நூ.): சீனத்திற்கும் கெமர்ச் சாம்ராச்சியத்திற்கும் இடையில் க்ஷாம்பா என்னும் அரசு இருந்தது. இது இக்காலத்தில் அனாம் என வழங்குகிறது. இப்பகுதியில் மலேயா நாட்டவருடன் இனத் தொடர்புள்ள மாலுமிகள் வசித்து வந்தார்கள். இந்நாட்டுக் கலையைப் பல நாடுகள் மாறுபாடு அடையச்செய்தன. இந்நாட்டுக் கட்டடச் சிற்பத்திற்கு ஆங்காங்குக் காணப்படும் கோயில்கள் உதாரணமாகும். இவை இயற்கையழகு நிறைந்த இடங்களில் அமைக்கப்பெற்றன. மீசான் என்னுமிடத்திலுள்ள கோயில் வட்டவடிவமான பள்ளத்திலும், 'பின்தின்' என்னுமிடத்திலுள்ள கோயில் ஒரு குன்றின் மேலும் உள்ளன. இக்காலத்துச் சிற்பத்தில் கடினமும் மென்மையும் விந்தையான வகையில் கலந்துள்ளன.
7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் புதிதாகப் பிறந்த கலைமுறையின் இயற்கைத் தன்மை அக்காலத்து இந்தியச் சிற்பத்தின் இணைந்த தோற்றத்திற்கு உயிர் அளித்ததுபோல் காணப்படுகிறது.
டாங்-டுவாங் என்னுமிடத்திலுள்ள சிற்பங்கள் நாட்டு மக்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. அங்கு அமைக்கப்பட்ட புத்தர் சிலைகளுங்கூடத் தடித்த உதடுகளும், சப்பை மூக்கும் கொண்டு காணப்படுகின்றன. சிற்பத்தின் அலங்காரமும் அணியும் அநாகரிகமாகவும் மிகையாகவும் உள்ளன.
இதன்பின் 10ஆம் நூற்றாண்டில் இதற்கு எதிரான முறை வழக்கத்திற்கு வந்தது. இக்காலத்துக் கட்டடங்கள் க்ஷாம் கட்டடச் சிற்பத்திற்குச் சிறந்த உதாரணங்களாகும். படிப்படியான தோற்றமுள்ளவாறு அமைக்கப்பட்ட தூண்களும், அலங்காரத்தின் நேர்த்தியும் இக்கலைக்குத் தனிச்சிறப்புத் தருகின்றன. இக்காலத்து நடனச் சிற்பங்களில் தனிப்பட்டதொரு நெகிழ்வும் கண்ணைக் கவரும் நயமும் காணப்படுகின்றன.
11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வியட்நாம் அரசு தோன்றி, இந்நாட்டின் தலைநகரம் தெற்கே போனபின் க்ஷாம் கலை மங்கியது. அதன் விரிவான அலங்காரங்கள் மறைந்தன. சிலைகளின் முதுகுபுறத்தில் முட்டுக்கொடுத்து, அவற்றைத் தாங்கும் வழக்கம் தோன்றியது. சிற்பக் கலையின் வீழ்ச்சிக்கு இவை அறிகுறிகளாகும்.
கெமர்க் கலை உச்சநிலையை அடைந்து திடீரென மறைந்தது. க்ஷாம் கலை வலிமையிழந்து காலப்போக்கில் மெல்ல மறைந்தது. ஜீ. நொ. —வை. சா.