உள்ளடக்கத்துக்குச் செல்

கவிஞர் பேசுகிறார்/கலை என்றால் என்ன?

விக்கிமூலம் இலிருந்து

கலை என்றால் என்ன?


மிழுக்கு முன்னேற்றம் வேண்டுமா? என்பது சில புலவர்களின் சந்தேகம். ஏன்? சிவபெருமான் வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கேற்ப தென் மொழியை அகத்தியருக்கு அருளினார் என்று, சிவபிரானே தமிழை உண்டாக்கினதாகப் பாடியிருக்கிறது. இந்தச் சிவபெருமான் அந்தக் காலத்தில் தமிழை உண்டாக்கியபோதே இந்த வடமொழி தென்மொழிக் கலகத்தையும் உண்டாக்கி விட்டார். தமிழை உண்டாக்கிய சிவபெருமான் மறுபடியும் சங்கமமர்ந்து பண்ணுறத் தெரிந்த பசுந்தமிழ் என்று, தமிழை மறுபடியும் கற்றுக் கொண்டாராம். உண்டாக்கிய சிவபெருமானே தமிழை மறந்துவிட்டு மறுபடியும் சங்கத்தில் உட்கார்ந்து தமிழ் படித்துக் கொண்டாராம். ஒரு வேளை தாம் உண்டாக்கிய தமிழைத் தாமே மறந்து விட்டாரோ என்னவோ! இல்லை. ஒரு வேளை, தமிழ் தாழ்ந்து போச்சு என்று நினைத்து மறுபடியும் தாமே படிக்க ஆரம்பித்தாரோ என்னவோ! எது எப்படியோ? சிவபெருமான் உண்டாக்கியது தமிழ். அதற்கு மனிதர்களாகிய நாம் முன்னேற்றம் எப்படிச் செய்ய முடியும்? தமிழே சிவம் என்று இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டும் சொல்லிக் கொண்டும் நம் நாட்டுத் தமிழ்ப் புலவர்கள் பலர் இருக்கின்றார்கள்.

தமிழ் நூல்களை எடுத்துப் படிக்கலாமென்றால் ”தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டுக்கும் இறைவா போற்றி" என்ற இந்தச் சங்கதியில்லாமல் வேறொன்றையும் காணோமே. ஒரு கிறிஸ்தவரோ, ஒரு முஸ்லிமோ அல்லது வேறு எந்த மதத்தவரோ தமிழ்நூல் நிலையத்தில் நுழைந்து ஒரு தமிழ் நூலை எடுத்துப் படிக்கலாம் என்று விரித்தால் முதல் முதல் உள்பக்கத்தில் மேலே ஒரு குறி, அதற்குக் கீழே பிள்ளையார் பாட்டு. அதற்குக் கீழே சிவன் பாட்டு, இப்படி ஒரு 5 அல்லது 6 பாட்டுக்கள். பிறகு எழுதினவர் பெயர், இப்படியிருப்பதைப் பார்த்தால் ஓ; இது என்னவோ பிள்ளையாரைப் பற்றியும் சிவனைப்பற்றியும் எழுதியிருக்கிறது போலும் என்று மூடிவைத்துவிடுவான்.

மேனாட்டில் ஒரு வெள்ளையன் உட்கார்ந்து கொண்டிருக்கையில் ஒரு பழம் விழுந்தது. அதைப் பார்த்தான். அது ஏன் கீழே விழுந்தது என்று ஆராய்ந்தான்; புத்தகங்கள் எழுதினான். அவை மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படுகிறது. சப்தம் எப்படி உண்டாகிறது? ஒன்றை ஒன்று மோதினால் சப்தம் உண்டாகிறது. இந்த ஆராய்ச்சியில் விளக்கின் ஒளி சுவரில் மோதும் போதும் சப்தம் உண்டாகிறது. ஆனால் உனக்குக் கேட்பதில்லை. பலவற்றை இவ்வாறாகக் கண்டு பிடித்தான். புத்தகங்கள் எழுதினான். மக்கள் படித்து வாழ்க்கைக்குப் பயன் படுத்திக்கொண்டார்கள். ஆனால் நம் தமிழ்ப் புத்தகங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டிற்கும் இறைவா போற்றி என்பதைவிட வாழ்க்கைக்கும், அறிவிற்கும் பயன்படக் கூடியதாக ஒன்றும் காணோமே. தமிழ்ப் புலவர்களெல்லாம் எழுதட்டுமே.

ஒரு வாலிபன் அவனுக்கு ஒரு இளம் பெண்—பெண்டாட்டி. அவர்களுக்கு ஒரே குழந்தை. ஒரு பண்டாரம் வந்து குழந்தையை அறுத்துச் சமைத்துப் போடு என்று கேட்டானாம். இருவரும் குழந்தையை வெட்டிக் கறி சமைத்துப் போட்டார்களாம். இப்போது யாராவது வந்து கேட்டால் அப்படிப் போடுவார்களா? அல்லது கேட்டவன் தான் தப்பித்துக் கொண்டு போய் விடுவானா? மற்றொருவனிடம் பண்டாரம் போய் அவனுடைய பெண்டாட்டி வேண்டுமென்று கேட்டானாம். உடனே பெண்டாட்டியைக் கொடுத்தானாம். ஒருவனுக்கு இரண்டு பெண்டாட்டிகள். ஒரு பண்டாரம் வந்து, 'எனக்குப் பொம்பளை வேண்டும்" என்று கேட்டான். அவன் ஊரெல்லாம் தேடியும் பொம்பளை கிடைக்கவில்லை. கடைசியில் வருத்தத்துடன் தன் இரண்டு பக்கத்தில் நிற்கும் பெண்டாட்டிகளைப் பார்த்தான். அவர்கள் "நீங்கள் ஏன் வருத்தமாயிருக்கிறீர்கள்" என்று கேட்டார்கள். "அடியார் ஒரு பெண் கேட்கிறார். எங்கேயும் கிடைக்கவில்லை. ஆகையால் தான் வருத்தமாயிருக்கிறது" என்றார். ஒருத்தி சும்மா விருந்தாள். மற்றொருத்தி, "தங்கள் சித்தம்; நான் தயார். பண்டாரத்துடன் படுத்துக் கொள்ளுகிறேன்” என்றாள். உடனே அந்தப் புருஷனுக்குச் சந்தோஷமுண்டாகி அவளைப் பார்த்து ”நீ தான் பதிவிரதை” என்று அவள் காலில் விழுந்தானாம். இம்மாதிரியான கேவலமான ஒழுக்கங்களைத் தான் வாழ்க்கையில் கற்றுக் கொடுக்கக் கூடிய புத்தகங்களிருக்கின்றன.

இராமாயணம் ஆரியக் கதை. தமிழனை அரக்கனென்றும், குரங்குகளென்றும், கரடிகளென்றும் கூறும் கதை. ஆரியத்தை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிட்ட புலவர், ஆரியக் கதையாகிய இராமாயணத்தை எரிக்க வேண்டும் என்றால் எதிர்ப்பானேன்? எரிப்பது கொடுஞ் செயல்; இஃது அவ்வளவு நன்றாயில்லை யென்றால், குளிர்ந்த நீரில் கரைத்து விட்டால் போகிறது. இப்போது. ராமாயணத்தை எரிக்கக்கூடாது என்று எதிர்க்கும் புலவர்கள், அக்காலத்தில் தோழர் பூர்ணலிங்கம் பிள்ளை ”இராவணப் பெரியார்” என்ற புத்தகத்தை எழுதின போது ஏன் இம்மாதிரியான எதிர்ப்புகள் செய்யவில்லை? மறையடிகள் இராமாயணத்தைக் குறை கூறி எழுதினதற்கு ஏன் அப்போது எதிர்க்கவில்லை? சுயமரியாதைக்காரர் சொன்னால் அது தவறு. அதை எதிர்க்க வேண்டுமா? ’பெரியாரும் தோழர் அண்ணுத்துரையும்' இராமாயணம் படிக்கவில்லை என்று சொல்லி விட்டார்களாம் இப்புலவர்கள். ஆகையினால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்று இந்தப் புலவர்கள் கூறுகிறார்கள். பெரியார்களெல்லாம் அப்படித்தான் சொல்லிக் கொள்வார்கள். தமக்கு அதிகம் தெரிந்ததாகக் கூறிக்கொள்ள மாட்டார்கள். பெரியாருக்குக் கம்பராமாயணம் தெரியாது என்று சொன்ன பாரதியாருக்கு வால்மீகி இராமாயணம் தெரியுமா என்று கேட்கிறேன்.

கலை போய் விடும் என்று கதறுகிறீர்கள். கலையென்றால் என்னவென்றே உங்களுக்குத் தெரியவில்லை. தமிழ்க் கலை உயர்ந்ததாக இருக்க வேண்டுமானால் கலைக்குக் காரணமான எண்ணங்களும் உயர்ந்தவைகளாக இருக்க வேண்டும். இவ்விரண்டையும் பிரிக்க முடியாதே, இழிவான கதை, கலையானால் அக்கலை எப்படி உயர்ந்ததாகும்? கலை என்பது புலவன் உள்ளத்திலே தோன்றி மலரும் எழுச்சி (originality). அதைக் கற்பதுதான் கல்வி. கலை என்பது மூலம் உள்ள உணர்ச்சியை ஊட்டுவதுதான் கலை. இழிவான ஒழுக்கத்தைக் காட்டிடும் கதையுடைய கலையும் இழிவானதே. அதை ஒழிக்கத்தான் வேண்டும். இக்காலத்தில் ஐந்தாம் படைவேலை செய்பவர்களைக் கண்டிக்கிறோமே, ஏன்? அந்த 5ம் படை வேலை செய்து தன் அண்ணனைக் காட்டிக் கொடுத்த விபீஷணனுக்கு ஆழ்வார் பட்டமா? இது தவிர நிறையப் பொய்கள். இராமன் பாணம் ஒன்று இரண்டு, ஆயிரம் லட்சமாய் விட்டதாம். அவன் அம்பறாத் தோணியில் இத்தனை அம்புகளும் எப்படி வைத்திருந்தான்? அஃது எவ்வளவு பெரியது? இந்த மாதிரியான பொய்களையே புலவர்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.

இந்தக் கேவலம் எங்கேனும் உண்டா? பெரிய புராணத்தில் கண்ணப்பன் பன்றியைக் கொன்று அதன் மாமிசத்தை மென்று ருசி பார்த்துச் சிவபிரானுக்குக் கொடுத்தானாம். எவ்வளவு அசிங்கம்? ஏன் இப்படி எழுதினான்? எழுதினவனுக்கு அந்த ஒழுக்கந்தான்; அவனுக்கு அந்தப் புத்திதான் வரும். சேக்கிழார் அந்த இழிந்த செயலுக்கு ஏற்றவன். இந்த ஆபாசங்களை எரிக்க வேண்டும் என்று சுயமரியாதைக்காரர் சொன்னால், அதற்குப் பெரிய புலவர் என்று தன்னைச் சொல்லிக்கொண்டு எதிர்க்க வருகிறார்கள் சிலபுலவர்கள்.

ஐயா, ஒருவன் அசிங்கத்தில் கால் வைத்துக் கொண்டு நிற்கிறான், அதை மற்றொருவன் பார்த்துக் குறிப்பாகக்காட்டுகிறான். சீக்கிரம் போய்க்காலைக் கழுவிக் கொள்ளும்படி சொல்லுகிறான். ஆனால், அப்படியே அந்த அசிங்கம் பட்டு இருக்கிற தோற்றம் ஓர் அழகிய சித்திரம் போல் அமைந்து இருக்கிறது, அதைக்கழுவாதே என்றார் பாரதியார் முதலிய பண்டிதர்கள்.