உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/தெய்வ முகம்

விக்கிமூலம் இலிருந்து
தெய்வ முகம்

வாழ்க்கையிலே எத்தனையோ சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த வாழ்க்கையை ஒரு வறண்ட பாலை என்று கூடச் சொல்லுவார்கள். பாலையிலே ஆங்காங்கே தோன்றுகிற பசுமையைப்போல இன்பங்களும் இடையிடையே இருந்தாலும் துன்பங்கள்தாம் அதிகம் என்று பல பேர் சாதிப்பார்கள். வாழ்க்கை இன்பமயமானதுதான். ஆனால், மனிதன் தனது சுயநலத்தாலும், குறுகிய நோக்கத்தாலும் அதைத் துன்பம் நிறைந்ததாகச் செய்துவிட்டான் என்று வேறு சிலர் கூறுவார்கள்.


வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளும், இடர்ப் பாடுகளும் இல்லாவிட்டால் மனிதன் முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைத்துத் தன் வாழ்க்கையின் லட்சியத்தை அடையமாட்டான்; ஆதலால் இந்தத் துன்பங்கள் அவனுக்கு நல்லதே என்று சிலர் தத்துவ ஆராய்ச்சியில் இறங்குவார்கள். பற்றற்ற நிலையிலே மனிதன் தன் கடமைகளைச் செய்துகொண்டிருந்தால் அவனை எவ்விதமான துன்பமும் அணுகாது என்று உபதேசம் செய்பவர்களும் உண்டு. எளிய மக்களுக்குத் தங்கள் துன்பங்களை மறந்து மன அமைதி பெறுவதற்கு ஒரு நல்ல வழி தெரிந்திருக்கிறது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நம் நாட்டிலே தோன்றியிருக்கிறது. கோயில் மனிதனுக்குச் சாந்தியளிக்கும் புனிதமான நிலையம் என்று கண்டிருக்கிறார்கள்.

மக்கள் கோயிலுக்குச் சென்று இறைவன் மேல் தங்கள் வாழ்க்கைச் சுமையையெல்லாம் போட்டுவிட்டு ஆறுதல் பெறுகிறார்கள். இறைவன் கருணைக் கடலாக விளங்குகிறான் என்ற நம்பிக்கையிலே அவர்கள் அவனுடைய சந்நதியிலே புதியதோர் வலிமையும், உற்சாகமும் அடைகிறார்கள்.

இறைவன் எங்கும் நிறைந்தவன். இந்த உண்மையை எல்லோரும் பரிசோதித்து அறிந்து கொள்ளவில்லை. அது எல்லோராலும் முடியக்கூடியதல்ல. ஆனல், பல சான்றோர்கள் கூறிய மொழிகளிலிருந்து மக்கள் அதை நம்புகிறார்கள். அங்கு இங்கு என்று குறிப்பிட்டுக் கூற முடியாதபடி அவன் எங்கும் பிரகாசமாக இருக்கிறான். அவன் வெளியிலே இருக்கிறான்: உள்ளத்திலும் இருக்கிறான். ஆதலால் அவனுக்குத் தெரியாததொன்றுமில்லை. எனவே, அவனிடத்தில் எதையும் மறைக்க முடியாது.

உள்ளத்திலே மறைந்து கிடக்கின்ற எத்தனையோ உணர்ச்சிகளால் மக்கள் பாதிக்கப்பட்டு அல்லல்படுகிறார்கள். அந்த உணர்ச்சிகளைப்பற்றியெல்லாம் வெளிப்படையாக யாரிடத்திலாவது கூறிவிட்டால் ஒரளவு ஆறுதல் கிடைக்கும் என்று மனத் தத்துவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளத்திலே தோன்றுகிற உணர்ச்சிகளையெல்லாம் வெளியிலே சொல்ல முடிகிறதா? சொன்னால் இழிவு வந்து விடாதா? உள்ளத்தைத் திறந்து காண்பிப்பது என்பது அவ்வளவு எளிய காரியமல்ல.

இறைவனிடத்திலே உள்ளத்தைத் திறந்து காண்பிப்பது எளிது. அவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே! ஆதலால் அவனுக்கு முன்னால் நின்று ஆறுதல் பெறலாம். மன அமைதி பெறுவதற்கு அவனுடைய முக தரிசனத்தைவிடச் சிறந்தது வேறொன்றுமில்லை.


தெய்வ முகம் காணவேண்டும் என்று மக்கள் ஆசைப் படுவதை நாடோடிப் பாடலிலும் நாம் அறியலாம்.

கிராம தேவதைகளிலே மாரியம்மனுக்குத் தனிப்பட்ட திருவிழாக்கள் உண்டு. முத்துப் பல்லக்கிலே மாரியம்மன் பவனி வருவதைப் பார்த்து மக்கள் களிப்பெய்துவார்கள்.

மூன்று மலையிலே கல்லுருட்டி
முத்துக் குடத்திலே பால் காய்ச்சி
காய்ச்சின பாலும் கசக்கு தென்பாள்
கைவிட்ட தேனும் புளிக்கு தென்பாள்

நாலு மலையிலே கல்லுருட்டி
நாக சரத்திலே பால் காய்ச்சி
காய்ச்சின பாலும் கசக்கு தென்பாள்
கைவிட்ட தேனும் புளிக்கு தென்பாள்

தங்க முக்காலிபோட் டல்லவோ
தைலம் தேச்சுத் தலை முழுகி
தங்கத்து நம்மூர் மாரி யாத்தாள்
தங்கப் பல்லாக்குமேல் ஏறிவராள்

பொன்னு முக்காலி போட் டல்லவோ
புனுகு தேச்சுத் தலை முழுகி
பொன்னான நம்மூர் மாரி யாத்தாள்
பொன்னுப் பல்லாக்குமேல் ஏறிவராள்

ஒருத்திக்கு வாழ்க்கையே கசக்கிறது. காய்ச்சின பாலும், கையால் தொட்ட தேனும் பிடிக்கவில்லை. பாலும், தேனும் கசக்கும்படி அவளுக்கு வாழ்க்கையில் வெறுப்பு.

மாரியம்மன் பல்லக்கில் பவனி வருகிறாள் என்கிற சேதியை அவளிடம் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்கள். அந்தச் சேதி அவளுக்குப் புதிய உயிர் கொண்டு வருகிறது. பொன்னை மாரியம்மன் அவளுடைய துன்பத்தையெல்லாம் போக்காதிருப்பாளா?

மாரியாத்தாக்காரன் என்று ஒருவன் கிராமத்திலே காட்சியளிப்பான். தலையிலே ஒரு சிறு பெட்டியிலே மாரி யாத்தாளின் உருவமிருக்கும். பம்பை என்கிற ஒரு வாத்தி யத்தை பூம் பூம் என்று வாசித்துக்கொண்டு அவன் வருவான். பெட்டியை ஊர்ச்சாவடிக்குப் பக்கத்திலே வைத்துவிட்டு வாத்தியத்தை முழக்குவான்? மாரியம்மனின் பெருமையைப் பாட்டிலே தெரிவிப்பான்.

ஆதிபராபரியே ஆளவந்த ஈஸ்வரியே
ஆயிரங்கண்ணலே ஆளவந்த ஈஸ்வரியே
கூடத் துணையிருந்து ஈஸ்வரியே காருமம்மா
பக்கத் துணையிருந்து ஈஸ்வரியே காருமம்மா
ஆருகடன் நின்றாலும் மாரி கடனாகது
மாரி கடன் தீர்த்தவர்க்கு மனக் கவலை தீருமம்மா
தாய் படி தந்தவர்க்குச் சங்கடங்கள் தீருமம்மா
மாரி படி தந்தவர்க்கு மனக் கவலை தீருமம்மா

மாரியாத்தாக்காரனுடைய சிறிய பெட்டியிலேயும் தெய்வ முகம் கண்டு மக்கள் ஆறுதல் பெறுவார்கள்.