உள்ளடக்கத்துக்குச் செல்

காற்றில் வந்த கவிதை/வேலாயுதன்

விக்கிமூலம் இலிருந்து
வேலாயுதன்

ழநி மலைக்குச் சென்றவர்கள் அங்கே முருகனுக்கு நடக்கும் அலங்காரங்களைப் பார்த்து மெய்மறந்திருப்பார்கள். ஒவ்வொரு வகையான அலங்காரத்திலும் முருகன் ஒருவகையான தோற்றமளிக்கிருன். அபிஷேகங்கள் நடக்கின்ற காலத்திலும் அவ்வாறுதான். திருநீறு அபிஷேகம் என்ருல் அப்பொழுது முருகன் வடிவம் ஒருமாதிரி இருக்கும். சந்தன அபிஷேகத்தில் வேருெரு தோற்றம்.

வெவ்வேறு வேளைகளில் செய்யும்படியான அலங்காரங் களிலும் வெவ்வேறு வகையான தோற்றத்தைப் பக்தர்கள் காண்கிறார்கள். ஒரு வேளையிலே முருகன் குழந்தைபோலக் காட்சியளிக்கிருன். மற்ருெரு வேளையில் சந்நியாசிக் கோலத்தில் அவன் நிற்கிறான். அவன் எல்லா உயிர்களிலும் எல்லா நிலைகளிலும் இருப்பவனல்லவா? இந்த உண்மையை நாம் பழநிமலையிலேயே காண்கிருேம். இதை ஒரு நாடோடிப் பாடலும் கூறுகிறது.

காலே நல்ல பூசைகட்கு வேலாயுதன்
கைக்குழந்தை போலிருப்பார் வேலாயுதன்
பட்டப்பகல் பூசைகட்கு வேலாயுதன்
பண்டாரம் போலிருப்பார் வேலாயுதன்
சாயங்காலப் பூசைகட்கு வேலாயுதன்
தண்டபாணி போலிருப்பார் வேலாயுதன்
பொழுதோடப் பூசைகட்கு வேலாயுதன்
பொன்னுருவம் போலிருப்பார் வேலாயுதன்
மலைமேல் குடியிருப்பு வேலாயுதன்
மலையாளம் பார்த்திருப்பார் வேலாயுதன்
சிலைமேல் குடியிருப்பு வேலாயுதன்
தேசமெங்கும் பார்த்திருப்பார் வேலாயுதன்.

பழநியிலே காவடி எடுப்பவர்களின் கூட்டத்தை எந்த நாளிலும் பார்க்கலாம். மலையாளத்தார்கள் காவடி எடுத்து வரும்போது ஆநந்த பரவசர்களாகி ஆடிக்கொண்டு வருவார்கள். அவர்களுடைய நாட்டைப் பழநி வேலப்பன் பார்த்துச்கொண்டே பழநிமலையில் நிற்கிருராம். ஒரு நாடோடிப் பாடல் காவடிகளின் பெருமையை வருணிக்கிறது.

ஆர்க்காட்டு மூலையிலே-சுப்பையா உனக்கு
அஞ்சுலட்சங் காவடியாம்
காவடி வருகுதென்று-சுப்பையா நீ
கரடேறிப் பார்த்தாயோ?
பாலக்காட்டு மூலையிலே-சுப்பையா உனக்குப்
பத்து லட்சங் காவடியாம்
காவடி வருகுதென்று-சுப்பையா நீ
கரடேறிப் பார்த்தாயோ?

ஊசி படர்ந்த மலை-சுப்பையா உனக்கு
உத்தி ராட்சம் காய்க்கும் மலை
பாசி படர்ந்த மலை-சுப்பையா உனக்குப்
பங்குனித்தே ரோடும் மலை
காவடி தோன்றும் மலை-சுப்பையா நீ எனக்குக்
காட்சி தரும் நல்ல மலை
சேவடி வந்தடைந்தேன்-சுப்பையா நீ எனக்குத்
திருவருளே தந்திடுவாய்.