குருகுலப் போராட்டம்/காந்தியடிகள் தடம் புரண்டார்

விக்கிமூலம் இலிருந்து
காந்தியடிகள்
தடம்புரண்டார்

காந்தியடிகள் உலகம் போற்றும் உத்தமர். தம் வாழ்க்கையையே சத்திய சோதனையாக நடத்தியவர்.

உண்மைக்கு ஓர் இலக்கணமாக இருப்பவர். இந்திய நாட்டின் தந்தை என்று எல்லோராலும் போற்றப்படுபவர்.

சில நேரங்களில் தாம் சரியென்று நினைத்த ஒரு செயலை விடாப்பிடியாக நிறைவேற்றிக் காட்டுப வர்.

இப்படிப்பட்ட பெருஞ் சிறப்புக்களை யெல்லாம் உடைய காந்தியடிகள் ஒரு சில நேரங்களில் சபல மனம் உடையவராக மாறிவிடுவார்.

இவருடைய சபலங்களுக்கெல்லாம் காரணம் இவருடன் மிக நெருங்கிப் பழகிய பார்ப்பனர்கள் தான்!

தாழ்த்தப்பட்டவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற நல்ணெத்தில் காந்தியடிகள் அரிசன இயக்கத்தைத் தொடங்கினார். முழுமூச்சாக உழைத்து அரிசனங்கள் முன்னேற வழிகாட்டியாய் விளங்கினார்.

பிற்காலத்தில் அரிசன நலன்களுக்கு எதிராக காந்தி செயல்படுகிறார் என்று அரிசனங்களாலேயே நிந்திக்கப்படுகிறார்.

நன்றி பாராட்ட வேண்டியவர்கள் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றுவதேன்? நன்றாகச் சிந்திக்க வேண்டும்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக - வேதங்களாலும் சாஸ்திரங்களாலும் அடிமைப் படுத்தப்பட்டு - பரம்பரை பரம்பரையாக விலங்குகளினும் கீழாக நடத்தப்பட்டு வந்த பஞ்சமர்கள் முதலானோர் அடக்கப்படுவதையும் ஒடுக்கப்படுவதையும் கண்டு மனம் நொந்து அவர் தீண்டாமை யொழிப்பு முதலிய இயக்கங்களைத் தொடங்கினார் என்பது மறுக்க முடியாது.

ஆனால், மேலும் அவர்கள் முன்னேறுவதற்காக டாக்டர் அம்பேத்கார் போன்ற தலைவர்கள் புரட்சிகரமாகத் தொடங்கிய போராட்டங்களுக்கு அவர் பெரும் முட்டுக்கட்டையாக நின்றார் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

இதற்கெல்லாம் காரணம் என்ன? காந்தியிடம் காணப்பட்ட உறுதியில்லாத் தன்மையேயாகும்.

மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு போராட்டங்களைத் தொடங்குவார். போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது திடீரென்று அதை நிறுத்திவிட்டதாக அறிக்கை விடுவார். தொண்டர்களுக்கு மனம் கசந்து போகும்.

காரணம் கேட்டால் எங்கோ ஒரு சிலர் வன்முறையில் ஈடுபட்டார்கள். அதனால் போராட்டத்தை நிறுத்துகிறேன் என்பார்.

போராட்டம் என்றால் இலட்சக் கணக்கானவர்கள் ஈடுபடும் செயல். அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தவறுகள் ஏற்படுவது இயல்பு. அதை அவர் சிந்தித்துப் பார்க்க மாட்டார். மேலும் சில சமயம் அரசியல் எதிரிகளே களத்தில் புகுந்து கலகம் விளைவிப்பார்கள். இதெல்லாம் தவிர்க்க முடியாது என்று எண்ணிப் பார்க்கமாட்டார்.

நாம் இன்னும் போராட்டத்திற்குத் தகுதி பெற வில்லை என்று கூறி நிறுத்தி விடுவார். உண்மையான தொண்டர்களின் உற்சாகம் களைத்துப் போகும்.

இதெல்லாம்கூட ஒருவகையில் நியாயந்தான் என்று ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளலாம். சில சமயம் அநியாயங்களுக்கே துணைபோவார்.

குருகுலப் போராட்டத்தில் அவர் தடம் புரண்டது இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

குருகுலம் தொடர்பான காரசாரமான நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த காலத்தில் தமிழ் நாட்டுக்கு வந்த காந்தியடிகள் தமிழக காங்கிரஸ் தலைவர் டாக்டர் வரதராசுலு நாயுடுவையும் சந்தித்துப் பேசினார்; குருகுலம் நடத்திய வ.வே.சு ஐயரையும் அழைத்துப் பேசினார்.

பிரச்சினையை அதன் தன்மையைப் புரிந்து கொண்டு - அதன் நியாயத்தைத் தெளிந்து தீர்ப்புக் கூறுவதானால் அதில் அவர் ஓர் உறுதியான முடிவுக்கு வந்திருக்க முடியும், உறுதியான முடிவுக்கு வந்த நிலையில் அவர் தன் தீர்ப்பை ஒரு கட்டளையாக இட்டிருந்தால் கூட இருதரப்பாரும் கட்டுப்பட வேண்டிய நிலை உருவாகி யிருக்கும்.

ஆனால் காந்தியடிகள் பிரச்சினையை அதன் தன்மையை யொட்டி முடிவெடுக்கவில்லை. அதில் தொடர்புடையவர்கள் யார் என்ற நிலையை யொட்டி அணுகினார். அதனால் அவர் ஒரு பெரிய இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் ஒரு தீர்ப்பளித்து அதற்கு முடிவு காட்டத் தவறிவிட்டார்.

இயக்கத்தின் தலைவர் என்ற முறையில் நெறி முறையின் சார்பாக நின்று கட்டளை இடுவதற்குப் பதிலாக - தீர்ப்பு வழங்குவதற்குப் பதிலாக - காந்தி யடிகள் இருவரையும் சமாதானப்படுத்த முயன்றார்.

அவருடைய சமாதானத்தை இரு தரப்பாருமே ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவரோ, நியாயத்தை நிலை நிறுத்தாமல் விடமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். டாக்டர் வரதராசுலு நாயுடு ஈரோட்டாரைப் போல எதையும் வெட்டொன்று துண்டிரண்டு என்ற போக்கில் பேசுபவர் அல்லர். ஆனால், இந்தப் பிரச்சினை காங்கிரசின் உயிர் நாடியான பிரச்சினை. சாதி வேற்றுமையை ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற கொள்கைப் பிரச்சினை, எனவே அவர் இதில் கடைசிவரை உறுதியாக நின்றார்.

பெரும்பாலான பிரச்சினைகளில் அவர் ஈரோட்டாருடன் ஒத்துப் போவதே இல்லை. ஆனால் இயக்கத்தின் உயிர்நாடியான பிரச்சினை மட்டுமல்லாமல், கோடான கோடி மக்களின் எதிர்கால வாழ்வைத் தீர்மானிக்கின்ற பிரச்சினையாகவும் இது இருந்ததால் இதில் அவர் எள்ளளவும் விட்டுக் கொடுக்க விரும்பவில்லை.

பார்ப்பனர்களோடு உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதோடு பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. மனிதருக்குள் ஏற்றத் தாழ்வு ஏற்படுத்தும் மோசமான கேட்டுக்கு முடிவுகட்ட வேண்டிய பொறுப்பில் அவர் இருந்ததால், இதில் யாருடைய சமாதானத்திற்கும் அவர் இணங்குவதாக இல்லை.

வ.வே.சு ஐயரோ, அவருக்குப் பின்னணியில் நின்ற ராஜாஜி, சந்தானம், ராஜன் சுவாமிநாதன், ஆலாஸ்யம் போன்ற பார்ப்பனத் தலைவர்களோ, தொன்று தொட்டுத் தங்கள் இனத்தார் அனுபவித்து வரும் சாஸ்திரபூர்வமான மேலாதிக்கத்தை இழந்து விடத் தயாராக இல்லை.

மக்களுடைய ஆதரவைப் பெறுவதற்கும், தங்கள் தலைமைப் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்கும், தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கும் அவர்கள் சமத்துவம் பேசுவார்கள்; சமரசம் பேசுவார்கள்; சாதிவேற்றுமை ஒழிய வேண்டும் என்பார்கள். அது செயற்படத் தொடங்கிவிட்டால், இது அடுக்குமா? சாத்திரத்தை மீறலாமா? சனாதனத்தை எதிர்க்கலாமா? என்று கூப்பாடு போடத் தொடங்கி விடுவார்கள்.

அப்படிப்பட்டவர்கள் வலையில் காந்தியடிகள் சிக்கிக் கொண்டார். இந்தியா முழுவதும் யாரைத் தங்கள் விடிவு காலத்தை உருவாக்கத் தோன்றிய கதிரவன் என்று எதிர்பார்த்தார்களோ, அந்தத் கதிரவன் பார்ப்பனிய மூடுபனியால் மறைக்கப்பட்ட கதிரவனாகிவிட்டார்.

அவர் பார்ப்பனர்களுக்கு ஏற்றமாதிரி அறிக்கை விடத் தொடங்கினார்.

சாதி யொழிப்பு என்பது காந்தியக் கொள்கைகளிலே ஒன்றாக இருந்தது. சமபந்தி விருந்து என்பது அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த உதவும் ஒரு வழியாக அமைந்தது.

சமபந்தி உணவுபற்றி காந்தி தமது கருத்து விளக்கம் என்ற முறையில் 1925 ஏப்ரல் 15 ஆம் நாள், தாம் நடத்திய “யங் இந்தியா” வாரப் பத்திரிகையில் ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

குழப்பிக் குழப்பி அவர் எழுதிய விளக்கம் இது தான்:

“ஒரு உணவு விடுதியில் வசிப்பவர்களில் பல ஜாதிச் சிறுவர்கள் இருக்கிறார்கள். இவர்களை ஒரே அறையில் சமபந்தியாகச் சாப்பிடச் செய்ய வேண்டுமா” என்று என்று ஒரு அன்பர் கேட்கிறார். கேள்வி சரியாகக் கேட்கப்படவில்லை. ஆனால், கேட்கப்பட்டிருக்கும் கேள்விக்குப் பதில், அந்தக் குழந்தைகளைச் சமபந்தியில் உணவருந்தச் செய்யலாகாது என்பதேயாகும்.

“ஆனால், கேள்வி கேட்பவர், அந்த உணவு விடுதியில் சேருபவர்கள் சமபந்தியில் சாப்பிட்டாக வேண்டும் என்று விதி செய்ய விடுதிக்காரருக்கு உரிமை இல்லை என்று வாதிப்பாரானால், அது சமபந்தி பற்றிய நிபந்தனையின்றிச் சேர்க்கப்பட்ட சிறுவர்களைக் கட்டாயப்படுத்திப் பிற ஜாதியாருடன் உணவருந்தச் செய்வதாகும். ஆகையால் விதி ஏதும் முன்கூட்டியே அறிவிக்கப்படாத சந்தர்ப்பத்தில், வழக்கமான தனிப்பந்தி முறைகளே சரியாகும்.

“இந்தச் சமபந்திப் பிரச்சினை தொல்லை பிடித்தது. இதுபற்றிக் கண்டிப்பான விதிகள் ஏதும் செய்ய முடியாது என்பது என் கருத்து. இது அவசியமான சீர்திருத்தம் தானா என்றுகூட என்னால் சொல்ல முடியாது. அதே சமயம், இந்த பேதத்தை முற்றிலும் தகர்த்தெறிய விருப்பம் பெருகுவதை நான் உணருகிறேன். சமபந்திப் பாகுபாட்டுக்கு ஆதரவாகவும் சரி, எதிராகவும் சரி நான் காரணங்கள் கூற முடியும். இதில் வேகம் கூட்டுவதற்காக நான் வலுக்கட்டாயத்தை உபயோகிக்க மாட்டேன். ஒருவர் இன்னொருவருடன் சேர்ந்து சாப்பிட மறுப்பது பாவம் எனக் கருதமாட்டேன்; சமபந்தி போஜனம் செய்வது பாவம் என்பதையும் ஏற்க மாட்டேன். ஆனால், பிறரது உணர்ச்சிகளை மதிக்காமல் தனிப் பந்தி முறையை மாற்ற முயலும் எல்லா முயற்சிகளையும் நான் உறுதியாக எதிர்ப்பேன். மாறாகப், பிறரது உணர்ச்சிகளைப் புறக்கணிக்காமல், அவர்களது உணர்ச்சிகளை மதித்து நடப்பேன்.”

நான் நாயுடுவையும் நாயக்கரையும் சமாதானப் படுத்துகிறேன். நீங்கள் அடுத்த கல்வியாண்டு முதல் சமபந்தி நடத்த ஒப்புக் கொள்கிறீர்களா என்று ஐயரைக் கேட்ட காந்தியடிகள் தான் இதை எழுதினாரா? நம்ப முடியவில்லை.

சந்தானமோ ராஜகோபாலாச்சாரியோ எழுதிக் கொடுத்ததை அப்படியே கையெழுத்திட்டு பத்திரிகையில் வெளியிட்டாரா என்றும் எண்ண வேண்டியிருக்கிறது.

பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்ற காந்தியடிகள் ஆயிரக் கணக்காண ஆண்டுகளாக சாதிக் கொடுமையால் வெந்து நொந்து புழுங்கிச் செத்துக் கொண்டு வருகின்றவர்களுக்கு உணர்ச்சிகளே இல்லை என்று நினைத்து விட்டார் போலும்.

எப்படியாயினும் இந்த அறிக்கையின் மூலம்

“நான் பச்சையாகப் பார்ப்பனர்கள் பக்கம்தான் இருக்கிறேன்” என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் காந்தியடிகள்.

இப்படிப்பட்ட கருத்தை அவர் திருவாய் மலர்ந்து உதிர்த்த பிறகு அவரைப் பற்றி என்ன நினைப்பது?

“மகாத்மா காந்திக்கி ஜே!” என்ற முழக்கம் தமிழ் நாட்டில் தான் ஓங்கி ஒலித்தது.

ஆனால் காந்தியடிகள் தடம் புரண்ட பிறகு இந்த முழக்கத்தின் ஒலி மெல்ல மெல்ல மங்கி முற்றிலுமாக மறைந்தே போயிற்று!

காந்தி தடம்புரண்ட வரலாறுகள் ஒன்றா இரண்டா ?

ஏழைகள் முன்னேற வேண்டும் என்பார். பிர்லா மாளிகையில் தங்கிப் பிரார்த்தனைக் கூட்டம் நடத்துவார்.

அரிஜனங்கள் சீர்பெற வேண்டும் என்று கூறுவார்; ஆனால். அவர்களுக்குத் தனித் தொகுதி கூடாதென்பார்.

எல்லோரும் சரிநிகர் சமானமாக வாழவேண்டும் என்பார்; பொது உடைமைத் தத்துவம் இந்தியாவுக்கு ஏற்றதல்ல என்பார்.

சாந்தமான அஹிம்சை வழியே சாதனைக்கு உகந்த வழி என்பார்; போர்வெறியூட்டும் கீதையை எல்லோரும் பின்பற்ற வேண்டும் என்பார்.

சாதி வெறி கூடாதென்பார்; வருணாசிரம தருமத்தை மீறக்கூடா தென்றும் சொல்வார்.

இப்படி ஏறுக்கு மாறான கருத்துக்கள் பலவற்றைப் போட்டுக் குழப்பிக் கொண்டு எந்த வழி ஏற்ற வழி என்று தெரியாமல் திண்டாடும்படி வழிநடத்துவார்.

காந்தியடிகள் மிகச் சாதாரணமான ஒரு சராசரி மனிதனின் இயல்பையே பெற்றிருந்தார் என்பதற்கு இவை யெல்லாம் எடுத்துக்காட்டுகள்.

பொதுவாக இளமைப் பருவத்தில் தான் இலட்சியவாதிகள் உருவாகிறார்கள். முதுமையிலும் அதைக் கட்டிக் காப்பவர்கள் கால காலத்துக்கும் உலகுக்கு நல்ல வழிகாட்டிகளாக அமைந்து விடுகிறார்கள்.

பருவம் முதிர முதிர இலட்சியங்களில் ஈடுபாடு குறைந்து சூழ்நிலையை அனுசரித்து நடக்கத் தொடங்குகிறவர்கள் மதிக்கப்படுவதில்லை. அதனால் மறக்கப்படுகிறார்கள். இதற்கு காந்தியடிகள் நல்ல சான்றாகிறார்.

காங்கிரசில் செல்வாக்குடைய பார்ப்பனத் தலைவர்கள் காந்தியடிகளைத் தங்கள் கைப்பாவையாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதற்குப் பல எடுத்துக் காட்டுகளைக் கூறலாம்.

குருகுலம் பற்றி ஒரு குழப்பமான கருத்தை வெளியிட்டு அவர்களை ஆதரித்த காந்தியடிகள், பிற்காலத்திலும், தாம் வளர்த்த சம நீதிக் கொள்கைக்கு மாறுபட்டுப் பேசத் தொடங்கினார்.

1925ஆம் ஆண்டு இறுதியில் காங்கிரசிலிருந்து விலகிய பெரியார், சுயமரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்து நாடெங்கும் சுற்றிச் சுற்றி மிகத் தீவிரமாகக் கொள்கை பரப்புதலில் ஈடுபட்டார்.

குடியரசு இதழ் மூலமும் சாதி ஒழிப்பு விளக்கங்களை மக்களிடையே பேரளவில் பரப்பினார்.

இதைத் தாங்க முடியாத பார்ப்பனத் தலைவர்கள் காந்தியடிகளைத் தமிழகத்திற்கு அழைத்து வந்து வருணாசிரம தருமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேச வைத்தனர்.

பல கூட்டங்களில் காந்தியடிகள் வருணாசிரம தருமத்தை விளக்கிப் பேசினார்.

1927ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான “சுதேசமித்திரன்” நாளிதழ் ஒன்றில் இப்படி காந்தியடிகள் பேசிய பேச்சு - வருணாசிரம முறையை ஆதரித்துப் பேசிய பேச்சு வெளியிடப் பட்டிருக்கிறது.

அது இதுதான்;

“ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும் போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.

பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜன சேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.

எளியவர்களைப் பாதுகாப்பது க்ஷத்திரியனுடைய முக்கிய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும்போது அவன் மற்றெல்லோரிலும் மேம்பட்டவனாகிறான்.

இம்மாதிரியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களைக் - கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.

இப்படி யிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது? வருணாசிரம தர்மமானது சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல.”

காந்தியடிகள் மைசூரில் பேசிய இந்தப் பேச்சு சிறிதாவது அறிவுக்கும் அனுபவத்துக்கும் பொருத்தமானதாக இருக்கிறதா? இதைக் காந்தியடிகள்தான் பேசினாரா?

தென்னாப்பிரிக்காவில் இன வெறிக் கொள்கையால் பாதிக்கப்பட்ட காந்தியடிகள், அப்படிப்பட்ட ஒரு வெறிக் கொள்கையால் இந்தியாவில் ஆதிதிராவிடர்கள் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்துதான் அரிசன இயக்கம் தொடங்கினார். தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். அப்படிப்பட்ட காந்தியடிகள், இந்த வருணாசிரம தருமத்தால் தீண்டாமையை ஒழிக்க முடியும் என்று எப்படி நினைக்க முடியும். அது முடிந்த செயலா?

ஒரு பஞ்சமன் தனக்கு விதிக்கப்பட்ட மலம் அள்ளும் தொழிலைச் சிறப்பாகச் செய்தால், அவனை உயர்ந்தவன் என்று பாராட்டி, இந்தப் பார்ப்பனர்கள் கொண்டாடுவார்களா?

ஒரு தாய் தன் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமையை அவன் சமுதாயத்துக்குச் செய்கிறான் என்று பாராட்டுவார்களா? பாராட்டியிருக்கிறார்களா? அவன் தாங்கள் இருக்கும் அக்கிரகார வீதியிலேயே நுழையக் கூடாது என்றல்லவா ஒதுக்கி வைத்தார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்ட ஆதிதிரவிடனைத் தோள் மேல் கையோட்டு அக்கிரகாரத்துக்குள் அழைத்து வந்த பாரதியைச் சாதியிலிருந்து விலக்கி வைத்த அக்கிரகார வாசிகள் எப்படி உயர்வு கொடுப்பார்கள் என்று காந்தியடிகளால் கருத முடிந்தது.

கீழான ஒருவருணத்தைச் சேர்ந்தவன், மேலான வருணத்தைச் சேர்ந்தவனுக்கு என்று வைக்கப்பட்ட தண்ணீரைக் குடித்ததற்காக, அடிக்கப்பட்டான் என்றால், இந்த வருணாசிரமத்தை வைத்துக் கொண்டு எப்படி சமுதாய நலத்தைக் காப்பதென்று காந்தியடிகள் சிறிதாவது சிந்தித்து இந்தக் கருத்தை வெளியிட்டிருப்பாரா?

தென்னாப்பிரிக்காவிலிருந்து முழுக்க முழுக்கச் சமுதாய நல உணர்வோடு இந்தியாவுக்கு வந்த காந்தியடிகள், மக்களெல்லாராலும் தங்கள் வழி காட்டி என்று போற்றிப் புகழ்ந்து பாராட்டப்பட்ட காந்தியடிகள் எப்படி இந்த வலையில் சிக்கிக் கொண்டார்.

காந்தியடிகளிடம் தொண்டராயிருந்து பயிற்சி பெற்ற ஈரோட்டு இராமசாமி நாயக்கர், தெளிவான சிந்தனையாளராக விளங்கினார். அதனால் தான் அவர் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால் வருணாசிரம முறையை அடியோடு ஒழிக்க வேண்டும் என்று புரட்சி செய்தார்,

காந்தியடிகளின் இது போன்ற சொற்பொழிவுகளைக் கேட்டபிறகு, பெரியார், தோழர் எஸ். இராமநாதனை உடனழைத்துக் கொண்டு காந்தியடிகளைப் போய்ச் சந்தித்தார். காந்தியடிகளுடன் பேசியது பற்றி 28-8-1927 குடியரசு இதழில் கீழ்க் கண்டவாறு எழுதியிருக்கிறார்.

முக்கியமாக மூன்று விஷயங்களைப் பற்றியே தான் மகாத்மாவிடம், நாமும், நமது நண்பரான திரு எஸ். இராமநாதனும் சம்பாஷித்தோம். அதாவது என்னுடைய அபிப்பிராயமாக மகாத்மாவுக்கு எடுத்துச் சொன்னதெல்லாம், இந்தியாவின் விடுதலைக்கும், சுயமரியாதைக்கும் மூன்று முக்கியமான காரியங்கள் செய்து முடிக்க வேண்டுமென்றும், அது முடிவு பெறாமல் நமது நாட்டுக்கு விடுதலை இல்லை யென்றும் நாங்கள் முடிவு செய்திருக்கின்றோம் என்பதாகச் சொன்னோம்.

அதாவது, ஒன்று காங்கிரஸ் என்பதை ஒழிக்க வேண்டியது. இரண்டாவது ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். இதற்கு இந்து மதம் என்பதை ஒழிக்க வேண்டியது. மூன்றாவது பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டியது என்பதாகும்.

இம் மூன்று விஷயங்களைப் பற்றியும் மகாத்மா சொன்ன சமாதானங்கள் எம்முடைய அபிப்பிராயத்தை மாற்றக் கூடியதாய் இல்லையென்று சொல்லி மகாத்மாவிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு வந்து விட்டோம்.

காந்தியடிகள் சமுதாய முன்னேற்றத்துக்கு மாறுபாடான கருத்துக்களைச் சொல்லத் தொடங்கிய பிறகு, இந்திய மக்கள் மதிப்பிலே குறையத் தொடங்கிவிட்டார்.

சமுதாயத் தலைவராகிய அவர் எப்படி இந்தச் சதி வலையில் சிக்கினார் என்பது பெரிதும் வியப்புக்குரியதாகும்.