உள்ளடக்கத்துக்குச் செல்

குருகுலப் போராட்டம்/சமூக நீதியே சமநீதி

விக்கிமூலம் இலிருந்து

சமூக நீதியே
சமநீதி

குருகுலப் போராட்டத்திலிருந்து பெரியார் ஒரு பாடம் கற்றுக் கொண்டார்.

ஆசார சீலர்களாயுள்ள பார்ப்பனர்களிலிருந்து ஆசாரங் கெட்ட பார்ப்பனர்கள் வரை எல்லோருமே தருமம் நியாயம் என்பதை எப்போதும் அனுசரிப்பதில்லை.

தருமம் நியாயம் என்பதெல்லாம் அவர்கள் சாதியுயர்வைப் பாதிக்காத வரையில் தான் செல்லுபடி யாகும். தருமம் நியாயங்கள் எல்லாம் சாதி அடிப்படையில் கை வைக்கத் தொடங்குமானால் அவர்கள் அவற்றைக் குழிதோண்டிப் புதைத்துவிடத் தயங்க மாட்டார்கள்.

காந்தி பக்தர்கள் என்றும், காந்தியவாதிகள் என்றும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவர்கள், காந்தி கொள்கைகளான சத்தியம் அஹிம்சை சமாதானம் சமத்துவம் என்பவற்றை யெல்லாம் உதட்டளவிலே உச்சரித்து - மேடைகளிலே முழக்கி —அதற்காகவே உயிர் வாழ்வதாகக் கூறுவார்கள்.

அதை யாராவது ஒருவர் செயல் அளவில் நிறைவேற்றத் தொடங்கினால், அதனால் தங்கள் சாதி மேலாதிக்கம் வீழ்ந்துவிடும் நிலை ஏற்பட்டால், அவர்களை வீழ்த்துவதற்குப் பின்வாங்க மாட்டார்கள்.

அந்த உன்னதமான கொள்கைகளை நிறைவேற்றியே தீருவேன் என்று அந்தக் காந்தியே முனைந்தார் என்றால் அவரையும் விட்டுவைக்க மாட்டார்கள்.

காந்தியடிகளின் பிற்காலக் கொள்கைகள் எல்லாம் அவர்களுடைய கொள்கைகளாகவே - அவர்களுக்கு அனுசரணையான கொள்கைகளாகவே வெளிப்பட்டன.

இவற்றை யெல்லாம் பெரியார் நன்றாகத் தெரிந்து கொண்டார்.

சாதிவேற்றுமை கூடாது என்று சொல்லிக் கொண்டே அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை வளர்த்துக் கொள்வார்கள்.

திறமைசாலிகளுக்கே முதலிடம் என்று சொல்லி எல்லா இடத்திலும் அவர்களே இருந்து கொள்வார்கள். மற்ற சாதிக்காரர்கள் திறமையடையாதபடி விழிப்பாக இருந்து பார்த்துக் கொள்வார்கள்.

இவற்றை யெல்லாம் பெரியார் நன்றாக உணர்ந்து கொண்டார்.

சாதிவேறுபாடின்மை - திறமை என்ற சங்கிலியை வைத்துக் கொண்டு பார்ப்பனர்கள் மட்டுமே மேலிடத்தில் ஏறியமர்ந்து கொள்ளும் வித்தையை அறிந்து கொண்ட பெரியார்,

சாதிப் பெயரை வைத்துக் கொண்டே ஒவ்வொரு சாதியும் முன்னேறக்கூடிய ஒரு வழியைக் கண்டு பிடித்தார்.

ஒவ்வொரு வகுப்பும் முன்னேற வேண்டும்; அதற்கு அரசு வேலை வாய்ப்புக்களில் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற கொள்கையை அடிப்படையாக வைத்துக் காங்கிரசில் இருந்து கொண்டே போராடத் தொடங்கினார்.

இதுவே இன்று சமூகநீதி என்று எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு சாதிக்காரனும் தன் சாதி விகிதாசாரப்படி முன்னுக்கு வந்து விட்டால், எல்லாருக்கும் எல்லா நிலையிலும் உயர்வு கிடைக்க வழியேற்படும்.

வேத சாஸ்திரங்களின் குரல்வளையை முறிக்க அவை வளர்த்த சாதிகளின் பெயராலேயே ஒரு வழியைக் கண்டு பிடித்தார் பெரியார்.

இதைக் கண்ட பார்ப்பனர்சுள், வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தால் சாதிகள் ஒழிவதற்குப் பதிலாக வளர்ச்சியடையுமே என்று கண்ணீர் வடிக்கத் தொடங்கினார்கள். ஆடு நனையுதே என்று ஓநாய் கண்ணீர்விட்டதுபோல் உள்ளது இன்றைய நிலை.

ஆம்! சாதிகள் வளர்ச்சியடையும் தான். உண்மையில் ஒவ்வொரு சாதி மக்களும் வளர்ச்சியடைவார்கள்.

சமூகநீதி செயல்பட்டால் ஒவ்வொரு சாதிக்காரரும் உயர்ந்த பதவிக்குவர முடியும். அது மட்டுமல்ல அவரவர் எண்ணங்களுக்குத் தகுந்தபடி மேல் நிலைக்குவர முடியும்.

நீதிபதிப் பதவியோ, அமைச்சர் பதவியோ, கவர்னர் பதவியோ, கலெக்டர் பதவியோ எந்தப் பதவியாக இருந்தாலும் பூசாரிப் பதவியாக இருந்தாலும் கூட 100 இடம் இருந்தால், சாதி விகிதாசாரப்படி, அந்தப் பதவிகளில்,

தாழ்த்தப்பட்டோர் 19 பேர்
மிகப் பிற்படுத்தப்பட்டோர் 25 பேர்
பிற்பட்டோர் 37 பேர்
முற்பட்டோர் 5 பேர்
இசுலாமியர் 5 பேர்
கிறித்தவர் பிறமதம் 5 பேர்
பழங்குடியினர் 1 வர்
பார்ப்பனர் 3 பேர் என்று எல்லா வகுப்பாரும் இடம் பெறும்போது, எல்லா இனத்தவரும் முன்னேறும் நிலை ஏற்படும்.

கல்வி கற்பதிலும், இதே விழுக்காட்டில் ஒவ்வொரு சாதியாருக்கும் இடம் கிடைக்கும்.

பார்ப்பனர் தங்கள் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 பேர் மட்டுமே இடம் பெறுவர்.

இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பார்ப்பனர்கள் திறமைசாலிகள் ஒதுக்கப்படலாமா? என்று கூக்குரல் இடத் தொடங்கிவிட்டார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக திறமையடையாதபடி ஒதுக்கப்பட்ட இனத்தவர்கள் திறமை பெறவும், திறமை பெற்றவர்கள், பதவி பெறவும், பதவி பெற்றவர்கள் தங்கள் இனத்தாரை முன்னேற்றவுமான வாய்ப்புகள் சமூகநீதி முறையினால் எல்லாருக்கும் கிடைக்கின்றன. ஒழிக்க முடியாத சாதியை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு சாதியும் முன்னேறி மேல் நிலைக்கு வருவதற்கு உரிய அருமையான வழிதான் வகுப்பு விழுக்காட்டுநீதி— சமூகநீதி!

பெரியார், நம்முடைய முன்னோர்களைப் போலவே சாதிக் கொடுமையை அனுபவித்தவர். பார்ப்பனர்களால் நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொருவரைப் போலவும் அவமானப்படுத்தப்பட்டவர். நம் முன்னோர்கள், இதை விதியென்று பொறுத்துக் கொண்டார்கள். பெரியாரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை — போராடினார். தனக்காக மட்டுமல்லாமல் நமக்காக - நம் ஒவ்வொரு சாதியாருக்காகவும் போராடினார்.

நாயக்கர்களுக்காக என்றல்ல, நாயுடுமாருக்கும், முதலியாருக்கும், நாடாருக்கும், தேவருக்கும், வேளாளருக்கும், குலாலருக்கும், பள்ளருக்கும், பறையருக்கும், கள்ளருக்கும், கவுண்டருக்கும், வண்ணாருக்கும், முடிமழிப்போருக்கும், சக்கிலியருக்கும், முத்தரையருக்கும், இன்னும் எத்தனையோ பேருக்கும் எண்ணிறந்த பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட அத்தனை பேருக்குமாக அவர் போராடினார்.

சாண் ஏறினால் முழம் வழுக்கும் என்பார்களே அதுபோல சமூகநீதிப் பிரச்சினை எத்தனை தோல்விகளைத் தழுவியுள்ளது என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் குருதி கொப்பளிக்கும்!

தோற்றுத் தோற்று விழுந்த நம் தன்மான இயக்கத் தொண்டர்கள், திராவிடர் இயக்கத்தவர் தோல்வி கண்டு துவளாது - எதிர்ப்புக் கண்டு மலையாது - வீழ்ச்சிகண்டு சலியாது செய்த முயற்சியின் பயன் தான் இன்றைய வெற்றி! இது முழு வெற்றியல்ல, என்று இந்தியா முழுவதும் வகுப்பு விழுக்காட்டு வாய்ப்பு ஏற்படுகிறதோ அன்று தான் நாம் முழு வெற்றி அடைந்ததாகப் பொருள்!

இன்றும் பல துறைகளிலே பார்ப்பன ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. அவர்கள் மேல் நிலையில் இருப்பதால், நம் முயற்சிகளை எல்லாம் எளிதில் தட்டிவிட முடிகிறது. இதற்கு முத்தாய்ப்பு வைக்க நாம் சோர்வடையாது உழைக்க வேண்டும். ஒவ்வொரு தமிழ் மகனும் இதில் விழிப்பாக இருக்க வேண்டும்.

முன்னுக்கு வந்த ஒவ்வொரு தமிழ் மகனும் தன்னலமற்றவனாகத் தன் இனத்தாருக்கு உதவுபவனாக இருக்க வேண்டும். எந் நிலையிலும், தாழ்த்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டு இருக்கும் இனத்தவருக்கு, எந்தத் தமிழ்ச சாதியானும் இடையூறு செய்பவனாக இருக்கக் கூடாது.

தமிழ் மக்களுக்குள்ளே பேதங்கள் ஏற்றத் தாழ்வுகள் ஒழிவதற்காக வகுக்கப்பட்ட முறை தான் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் - சமூகநீதி என்பதை மறக்காமல் ஒவ்வொரு இனத்தாரும் முன்னேறுவோம்!

ஒவ்வொரு வகுப்பும் முன்னேறிவிட்ட நிலையில் தான்,

நாம் எல்லோரும்
சமம் என்பது
உறுதி யாகும்.