குருகுலப் போராட்டம்/போருக்குள் ஒரு போர்
போருக்குள்
ஒரு போர்
குருகுலப் போராட்டம் என்றவுடனே நம் கண் முன் பாண்டவர்களுக்கும் கவுரவர்களாகிய துரியோதனாதியர்களுக்கும் நடந்த பாரதப் போர் தான் தோன்றும்.
துரியோதனாதியர்க்கும் பாண்டவர்க்கும் நடந்த போர் வெறும் பங்காளிச் சண்டை.
கண்ணன் சூழ்ச்சியால் குருகுலமே அழிந்து போன கதை அது.
நம் தமிழ் நாட்டில் ஒரு குருகுலப் போர் நடந்தது.
1925ஆம் ஆண்டு நடந்த இந்தப் போராட்டம் தமிழ் இனத்தின் வாழ்வா சாவா என்ற அடிப்படை யில் நடந்த போராட்டம்.
இளந் தலைமுறையினர் இந்த வரலாற்றுச் செய்தியை அறிந்திருந்தால் தான், நாம் அடுத் தடுத்து வரும் தலை முறைகளில் மானத்தோடு - மதிப்போடு வாழ முடியும் என்பதால் தான் இந்த நிகழ்ச்சியை நினைவு கூர வேண்டியுள்ளது.
ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக - தாழ்த்தப் பட்டவர்கள்; பின்தங்கியவர்கள் என்ற பெரும் பட்டியலில் இடம் பெற்று வரும் இந்திய நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வரலாற்றுச் செய்தி இது.
இதுபோன்ற நிகழ்ச்சிகளை இளைஞர்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர்களுக்குள்ளே - நடந்த ஒரு விடுதலைப் போராட்டம் இது.
பாரதியார் இந்த நிலையை நன்கு உணர்ந்திருந்தார் என்று நினைக்க வேண்டியிருக்கிறது.
விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கி நடத்திய பெருந்தலைவர்கள் பலர் - எந்த ஆதிக்க மனப்பான்மையில் இருந்தார்கள் என்பதைப் பாரதியார் நன்கு தெரிந்து வைத்திருந்தார். பாரதியார் பாரத நாட்டின் விடுதலையைப்பற்றிப் பாடுகின்ற பாட்டைப் பார்த்தால் இது தெளிவாகப் புரிந்து விடும். {{block center|<poem> விடுதலை விடுதலை விடுதலை
பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை திறமை கொண்ட தீமையற்ற தொழில் புரிந்து யாவரும் தேர்ந்த கல்வி ஞானமெய்தி வாழ்வம் இந்த நாட்டிலே!
விடுதலை–
ஏழையென்றும் அடிமையென்றும் எவனும் இல்லை சாதியில் இழிவுகொண்ட மனிதர்என்ப திந்தியாவில் இல்லையே வாழிகல்வி செல்வம்எய்தி மனமகிழ்ந்து கூடியே மனிதர்யாரும் ஒருநிகர்ச மானமாக வாழ்வமே!
விடுதலை–
மாதர்தம்மை இழிவுசெய்பும் மடமையைக் கொளுத்துவோம் வையவாழ்வு தன்னில்எந்த வகையினும் நமக்குளே தாதர்என்ற நிலைமைமாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்தநாட்டிலே!
விடுதலை–
</poem>}} இந்தப் பாடலை மீண்டும் ஒரு முறை பாடிப் பாருங்கள்.
பாரதியார் எந்த உணர்வோடு பாடினார். இந்த நாட்டில் விடுதலை எப்படி இருக்க வேண்டும்?
விடுதலையை யார் யார் பெற வேண்டும்?
என்றெல்லாம் தூய மனத்தோடு சிந்திக்கிறார் பாதியார்.
விடுதலைப் போராட்டத்தைத் தலைமை யேற்று நடத்தியவர்கள் இந்தத் தூய்மையான மனத்தோடு இருந்தார்களா?
மக்கள் யாவரும் சரிநிகர் சமானமாக வாழ வேண்டும் என்ற மனப்பான்மை அவர்களிடம் இருந்ததா?
அவர்கள் எந்த மனப்பான்மையில் இருந்தார்கள் என்பதை இந்தக் குருகுலப் போராட்ட நிகழ்ச்சி வெளிக்காட்டி விட்டது.
மேலாதிக்க எண்ணமுடையவர்களின் முகத் திரையைக் கிழித்த தலைவர்களிலே பெரியாரின் பங்கு பெரும் பங்காகும்.
பெரியார் மட்டும் உறுதி படைத்தவராக இல்லாமல் இருந்திருந்தால், நாம் - தமிழ் மக்கள் எந்த அளவுக்குப் பின்தங்கி யிருந்திருப்போம் என்று சொல்லவே முடியாது.
எச்சரிக்கையும் விழிப்புணர்வும் உள்ளவர்களாக தமிழ்மக்கள் வாழ்வதற்கு வழிகாட்டியாக இருந்த இந்த நிகழ்ச்சியை நாம் இப்போது விரிவாக ஆராய்ந்து பார்க்கலாம். விடுதலைப் போராட்டத்தில் தம் உயிரையும் துச்சமென மதித்து, எத்தகைய சித்திரவதையையும் பொறுத்துக் கொண்டு, அன்னிய ஆதிக்கத்தின் கோரப் பிடிக்கு ஆட்பட்டு உயிர் துறந்த வீரப் பெரு மக்களின் இலட்சியக் கனவுகள் எல்லாம் பாழ்பட்டுப் போகாமல் காப்பாற்றிய பெருமை பெரியாருக்குத் தான் உண்டு.
சூது சூழ்ச்சி வஞ்சகம் பொறாமை ஆகியவற்றை எதிர்த்துப் பெரியார் தொடங்கிய பெரும் போராட்டம் தான் இந்தக் குருகுலப் போராட்டம்.
இதைத் தொடக்கத்திலிருந்து - ஆதியோடந்தமாக - இப்போது நாம் பார்க்கலாம்: