உள்ளடக்கத்துக்குச் செல்

குருகுலப் போராட்டம்/நாட்டுக் கல்வியின் தேவை

விக்கிமூலம் இலிருந்து

நாட்டுக் கல்வியின்
தேவை

இந்தியாவில் கல்வி நிலை எப்படி யிருந்த தென்று சிறிது நினைத்துப் பார்க்கலாம்.

குருகுலம் உருவான பின்னணி அப்போது தான் தெளிவாகத் தெரியும்.‌‌...

ஐம்பத்தாறு நாடுகள் இருந்த காலத்தில், சிற்றுார்களிலே சில திண்ணைப் பள்ளிக்கூடங்கள் இருந்தன. பெரும்பாலும் ஊருக்கு ஒரு பள்ளிக்கூடம் இருக்கும். சில ஊர்களில் பள்ளிக்கூடங்களே இருக்காது.

இந்தப் பள்ளிக்கூடங்களில் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுப்பார்கள். சில சிறிய நூல்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.

இலக்கியங்கள், பெரிய நூல்கள் கற்ப தென்றால் அதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் சென்று கற்க வேண்டும். ஆசிரியர்க்கு மாணவர்கள் அடிமைத் தொண்டு புரிந்துதான் இந்த உயர் கல்வியைப் பெற முடியும்.

தொழில் துறைகளிலும் அப்படித்தான்.

ஒரு மருத்துவரிடம் போய்ப் பயிற்சி பெற வேண்டும் என்றால், அவருக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்து அவர் மனமிரங்கிச் சொல்லித் தருவதைக் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும்.

தச்சு வேலை, உழவு வேலை இன்னும் பிற பிற தொழில் கல்விகளெல்லாம் கூட இப்படித்தான்.

எத்தனை அடிமைத் தொண்டு செய்தாலும், ஆசிரியர் மனம் வைத்தால்தான் மாணவனுக்குத் தொழில் நுட்பம் தெரிய வரும்.

பெரும்பாலும், தன் தொழிலைத் தன் குடும்பத்து வாரிசுக்குத்தான் சொல்லிக் கொடுப்பார்கள். வெளியிலிருந்து கற்க வருபவன் எவ்வளவு உண்மையாகத் தொண்டு செய்தாலும், ஆசிரியரால் வஞ்சிக்கப் படுவதுதான் பெரும்பாலான வழக்கம்.

ஆசிரியர் மனம் கனிந்து, கற்க வந்த மாணவன் மீது பரிவும் அன்பும் கொண்டு கற்றுக் கொடுத்தால் அவன் பயன் பெறுவான்.

நல்ல மனிதர்களும் இருந்ததால், தொழில் கல்வி தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தது என்று சொல்லலாம்.

ஓர் ஆசிரியரை யடுத்து, அவருக்கு மனம் மகிழத் தொண்டு செய்து அடிமைகளாக இருந்தவர்கள், அவருக்குப் பிறகு, சிறப்பெய்தித் தாமும் சில அடிமைகளை உண்டாக்கும் செயலில் சங்கிலித் தொடர்போல ஈடுபட்டார்கள்.

இதைத்தான் குருகுல முறை என்று குறிப்பிடுவார்கள்.

துரோணர் ஏகலைவன் கட்டை விரலைக் கேட்ட கதை ஆசிரியர்கள் எவ்வளவு வஞ்சகமாகச் செயல் பட்டார்கள் என்பதற்கு நல்ல எடுத்துக் காட்டாகும். ஆங்கிலேயர்கள் ஆட்சி இந்தியாவில் நிலைத்த பிறகு தான் கல்வி நிலையில் மாறுதல் ஏற்பட்டது.

ஆங்கில நாட்டிலிருந்து அரசாங்கப் பொறுப்புகளை ஏற்க வந்த அதிகாரிகள், பெரும் இடர்ப்பாட்டுக்குள்ளானார்கள். நாட்டு மக்களிடம் தொடர்பு கொள்வது இடர்ப்பாடாயிருந்தது.

ஓர் ஊருக்கு அதிகாரியாக வந்தவன் அந்த ஊர் மக்கள் பேசும் மொழியை அறிந்து கொள்ள வேண்டியவனாக இருந்தான்; அல்லது துபாஷ் என்று சொல்லப்பட்ட மொழிபெயர்ப்பாளர் உதவி தேவைப்பட்டது.

ஏதாவது ஒரு காரியத்தை முன்னிட்டு அவனை வேறு ஒரு பகுதிக்கு மாற்றுவதாயிருந்தால், அவன் ஏற்கனவே கற்ற மொழி பயனற்றதாய் இருந்தது. மீண்டும் அவன் வேறொரு மொழியைக் கற்றுக் கொண்டால்தான், அவன் சிறப்பாகப் பணிபுரிய முடிந்தது.

பல மொழிகள் கொண்ட இந்த நாட்டில், அதிகாரிகளாக வந்தவர்கள் இவ்வாறு இடர்ப்பட்டதை யெல்லாம் எண்ணி, இந்திய நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற லார்டு மெக்காலே என்பவர் ஒரு குறுக்கு வழியைக் கண்டுபிடித்தார்.

அரசாங்கத்தில் வேலைக்குச் சேரும் எல்லா இந்தியர்களும் ஆங்கில மொழி பயின்று கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்கினார். இதனால் இலண்டனிலிருந்து வரும் அதிகாரிகள் ஆங்கிலம் மட்டும் தெரிந்தவர்களாய் இருந்தால் போதும்.

அவர்களை எந்தப் பகுதிக்கும் நினைத்தவுடனே மாற்றலாம் என்ற நிலை ஏற்பட்டது.

இந்தியர்கள் ஆங்கிலம் கற்பதற்காகப் பல பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் உருவாக்கப்பட்டன.

அரசாங்க வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பல இந்தியர்கள் இந்தப் பள்ளிக்கூடங்களில் பயின்றார்கள்.

பயின்று தேர்ந்தவர்களுக்கு, அவர்கள் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி பல வேலைகள் கிடைத்தன.

ஆங்கிலப் படிப்பினால் பல நன்மைகள் ஏற்பட்டன.

லார்டு மெக்காலே கணக்கர்களை உருவாக்குவதற்காகத் தொடங்கிய இந்தப் பள்ளிகள் ஆங்கிலத்தையும் கணக்கையும் மட்டுமே சொல்லிக் கொடுக்க வில்லை. வரலாறு, புவியியல், விஞ்ஞானம், வானியல், ஆட்சியியல் போன்ற புதுமைக் கல்விகளையும் கற்றுத் தந்தன.

இதனால் புத்தறிவும், பொது நோக்கும் உலக யல் அறிவும் ஏற்பட்டன என்று கூறலாம்.

ஆங்கிலக் கல்வியினால் பல கேடுகளும் உண்டாயின.

ஆங்கிலம் படித்து அரசாங்க வேலை பெற்றவர்கள், தங்களை ஓர் உயர்ந்த சாதியாராக எண்ணிக் கொண்டார்கள். தங்களுக்குக் கிடைத்த சிறிய அதிகாரங்களை வைத்துக் கொண்டு, தங்கள் சொந்த நாட்டு மக்களுக்குப் பெரிய கொடுமைகளை இழைத்தார்கள்.

‘கருப்புத் துரைகள்’ என்ற பட்டத்தையும் பொதுமக்களிடமிருந்து வாங்கிக் கட்டிக் கொண்டார்கள்.

தாங்கள் செய்வது அடிமை வேலை என்பதை மறந்து விட்டு, தாய் நாட்டு மக்களை அடிமைகளாக நடத்திக் கொடுமைப் படுத்தினார்கள்.

வெள்ளைக்காரன் காலத்தில் ஏற்பட்ட இந்த மூடத்தனமான கொடுமை, இன்றைக்கும் இந்திய நாட்டின் அதிகார வர்க்கத்தாரிடம் குடி கொண்டிருப்பது மிக வேதனையளிப்பதாய் உள்ளது.

நாடு விடுதலை பெற்று மூன்று தலை முறை காலம் கடந்தும் அதிகாரிகளிடம் இந்த மனப்பான்மை ஒழியவில்லை என்பதை, நாட்டுத் தலைவர்கள் சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இந்தப் பொல்லாங்கை ஒழிக்க வல்ல திட்டங்களை வகுத்து உடனடியாகச் செயலாற்றவும் பின் வாங்கக் கூடாது.

ஆங்கிலம் படித்தவர்கள் மேலானவர்கள் என்ற எண்ணம் இன்னும் ஒழியவில்லை. ஆங்கில மொழியின் மீதுள்ள மோகம் இன்னும் தனியவில்லை. தங்கள் பிள்ளைகளை ஆங்கிலப் பயிற்சி மொழியில் தான் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய மக்களிடமிருந்து இன்னும் போகவில்லை.

ஆங்கிலம் போய் விட்டால் எல்லாம் முழுகிப் போய்விடும் என்ற தவறான எண்ணம் ஆட்சியாளர்களிடம் இருந்து இன்னும் போகவில்லை.

காமராசர், பெரியார் போன்ற ஒப்பற்ற தலைவர்கள், ஆங்கிலம் இல்லாமலே பெருஞ் சாதனைகளை நடத்திக் காட்ட முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டிய பிறகும், இந்த அதிகாரவர்க்கம் திருந்த வில்லை என்பது வேதனைக்குரியது.

இந்த அடிமை எண்ணம் மாறினால் தான் நாம் உண்மையான விடுதலையைக் காண முடியும்.

ஆங்கிலக் கல்வியால் இன்னொரு கேடு ஏற்பட் டது. அரசாங்கம் நடத்திய பள்ளிகள் சில வென்றால், பாதிரியார்கள் நடத்திய பள்ளிக்கூடங்கள் பத்து மடங்காய் இருந்தன.

இந்தப் பள்ளிகளில் படிக்கப் போனவர்கள், மதம் மாறினார்கள்; அல்லது மாற்றப்பட்டார்கள்.

பாதிரியார்கள் அஞ்ஞானிகளை யெல்லாம் மெய் ஞானிகள் ஆக்குகிறோம் என்று சொல்லி ஞானஸ் நானம் செய்து கிறித்தவ மதத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

கிறித்தவ மதத்தில் சேர்ந்தவர்கள், கிறித்தவப் பெண்ணை மணமுடித்துக் கொண்டு புது வாழ்க்கை வாழத் தொடங்கினார்கள்.

பாதிரிமார்கள் அஞ்ஞானிகளை மெய்ஞ்ஞானிகளாக்கினார்களோ இல்லையோ, மனிதர்களாக்கினார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஏனெனில், நாட்டு முதுகெலும்பு போன்ற ஏழை மக்கள் சாதிக் கொடுமையால் தாழ்த்தப்பட்டு ஒடுக்கப்பட்டு அடக்கப்பட்டு விலங்குகளினும் கேவலமாக நடத்தப்பட்டார்கள்.

மதம் மாறிய இந்த மக்களுக்கு இந்தக் கொடுமைகளிலிருந்து விடுதலை கிடைத்தது என்று உறுதியாகச் சொல்லலாம்.

இந்த நிலையில் நாட்டுத் தலைவர்கள் பலர் வெள்ளைக்காரனின் கல்வி முறையை மாற்றி நம் நாட்டுப் பண்போடு கூடிய கல்வியை வளர்க்க வேண்டு மென்று கருதினார்கள்.

நாட்டுத் தலைவர்கள் மனத்திலே இந்த எண்ணம் அரும்புவிட்டுக் கொண்டிருந்தது.

அடிமைக் கல்வியான ஆங்கில முறைக் கல்வியை மாற்றி, உரிமைக் கல்வியாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் நாட்டுத் தலைவர்கள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது.

அந்தக் கல்வி முறை காந்திய வழியில் அமைய வேண்டும் என்றே பலரும் கருதினார்கள்.

காந்திய வழி என்பது என்ன?

அதை யறிந்து கொள்ள நாம்

மகாத்மாகாந்தி என்றும் காந்தியடிகள் என்றும் போற்றப்பட்ட

நாட்டுத் தந்தையாக விளங்கிய

இந்திய மக்கள் அனைவருக்கும் இலட்சிய வழி காட்டியாக விளங்கிய காந்தி அண்ணலைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.