குருகுலப் போராட்டம்/வார்தா முனிவரும் ஈரோட்டண்ணலும்

விக்கிமூலம் இலிருந்து
வார்தா முனிவரும்
ஈரோட்டண்ணலும்

காந்தியடிகள் வழக்கறிஞர் தொழிலுக்காக தென்னாப்பிரிக்கா சென்றார் என்பது யாவருக்கும் தெரியும்.

அங்கு வெள்ளையர்கள் கருப்பு இனத்தவரை எவ்வளவு கேவலமாக நடத்தி வந்தார்கள் என்பதற்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறே தக்க சான்றாகும்.

ஒரு வெள்ளையன் அறைந்த அறையில் காந்தியடிகளின் பல் உதிர்ந்து விழுந்த தென்றும் அன்று முதல் அவர் பொக்கை வாயராகி விட்டார் என்பதும், அந்தப் பொக்கை வாய்ப் புன்சிரிப்பே மனங்கவரும் தோற்றத்தைக் காந்தியடிகளுக்கு அளித்தது என்பதும் நாம் அறிந்ததே!

காந்தி அடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து தாய் நாட்டுக்குத் திரும்பி வந்த பிறகுதான், தான் அதுவரை கவனிக்காத ஒன்றைக் கவனித்தார்.

வெள்ளையர்கள் கருப்பர்களிடம் காட்டும் அந்தக் கொடுமையான போக்கை இந்தியர்கள் தங்களுக்குள்ளேயே ஒரு பிரிவாரைப் பிரித்து வைத்துக் கொடுமைப்படுத்தி வாட்டிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

பள்ளர் என்றும் பறையர் என்றும் புலையர் என்றும் ஒதுக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் ஒரு பெரும் கூட்டத்தார் மேல்சாதிக்காரர்களால் இழிவாக நடத்தப்படும் கொடுமையை அந்நாள்வரை தான் கவனிக் காதிருந்துவிட்ட தவறை உணர்ந்தார். தாழ்த்தப் பட்ட மக்களுக்காக உழைக்க-போராட முன்வந்தார். இந்தியர்களிடையே உள்ள எல்லாப் பிரிவாரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று கருதி அன்று முதல் தாழ்ந்தப்பட்ட இனமக்களுக்காக உழைக்கத் தொடங்கினரர்.

தீண்டாமை ஒழிப்புக்காக கோயில் நுழைவுப் போராட்டங்களை அங்கங்கே நடத்த ஊக்க மூட்டினார்.

சாதி யொழிப்புக்காக கலப்பு மணங்களை ஆதரித்தார்.

சாதி ஒழிப்பு உணர்வு மக்களிடையே உண்டாவ தற்காக சமபந்தி விருந்துகள் நடைபெறச் செய்தார்.

காந்தியடிகளின் சீடர்கள் - காங்கிரசுக்காரர்கள் இந்தப் போராட்டங்களிலே ஈடுபட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்க முனைந்தனர்.

தமிழ் நாட்டிலே காங்கிரசுக் கட்சியின் துரண்களாகவும், மக்கள் போற்றும் தலைவர்களாகவும் விளங்கியவர்கள் மூன்று மணிகள் - ஒப்பற்ற பொன் மணிகள்.

சேலம் வரதராசுலு நாயுடு.

திருவாரூர் கலியாண சுந்தர முதலியார்.

ஈரோட்டு இராமசாமி நாயக்கர்.

இந்த மூன்று பேருடைய அயராத உழைப்பால் தான் தமிழ் நாட்டில் நாட்டுணர்வு வளர்ந்தது. மக்களிடையே விடுதலை உணர்வு மலர்ந்தது.

அடிமைத்தனத்தை யொழிக்கவும், மக்களி டையே நிலவிய வேற்றுமை யுணர்வுகளைக் களையவும், தன்னலம் பாராது அயராது உழைத்து வந்தவர்கள் இந்த மூன்று தலைவர்கள்.

மூன்று பேரும் காந்திய வாதிகள். காந்தியடிகள் என்ன சொன்னாலும் உடனே செயல் வடிவில் நடத்திக், காட்டும் செயல் வீரர்களாக விளங்கினார்கள்.

நாயுடு, நாயக்கர், முதலியார் நமது தலைவர்கள் என்ற எண்ணம் நாட்டு மக்களிடையே விளங்கியது.

தன்னுடைய செயல் திட்டங்கள் ஒவ்வொன்றும், உடனுக்குடன் நிறைவேறுவது தமிழகத்தில் தான் என்ற எண்ணம் காந்தியடிகளுக்கு உள்ளத்தில் ஊறிவிட்டது.

அதனால், தமிழ் நாட்டின்பால் அவருக்குத் தனி மதிப்பு ஏற்பட்ட தென்றே சொல்ல வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் தமிழர்கள் அவரைத் தெய்வமாகவே மதித்தார்கள்.

அவருடைய வாய்ச்சொல் ஒவ்வொன்றும் தெய்வ கட்டளையாகவே மதிக்கப்பட்டது.

தமிழ் நாட்டு மும்மணிகளிலே, தமிழ் மக்கள் பெரிதும் போற்றியது ஈரோட்டு அண்ணலைத்தான். அந்த ஈரோட்டாரோ வார்தா முனிவரின் வாய்ச் சொல் ஒவ்வொன்றுக்கும் செயல்வடிவம் கொடுத்த தீவிரவாதியாக விளங்கினார்.

கள்ளுக்குடிப்பதால் ஏழை மக்களின் குடும்பங்கள் சிதைந்து போகின்றனவே என்று வார்தா முனிவராகிய காந்தியடிகள் வருந்திப் பேசினால்,

கள்ளுக்கடை மறியல் நடத்தி - குடிப்பதை நிறுத்துங்கள் என்று போராட்டம் நடத்துவார் ஈரோட்டு ஏந்தல்.

கள்ளிறக்குவதைத் தடுப்பதற்காக தன்னுடைய தோப்பில் இருந்த 500 தென்னை மரங்களையும் வெட்டித் தள்ளிவிட்டார் ஈரோட்டார்.

கதர்த்துணி யணிவதால் இந்த நாட்டின் ஏழை மக்களைக் காப்பாற்ற முடியும் என்று காந்தி மகான் கூறினால், கதர்த்துணி மூட்டைகளைத் தோளிலே சுமந்து சென்று தெருத் தெருவாகக் கூவி விற்று வருவார் ஈரோட்டார்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று வார்தாவில் ஆணை பிறந்தால், கோவிலுக்குள்ளே ஆதிதிராவிடர்களைக் கூட்டிக் கொண்டு உள்ளே நுழைவார்.

வைக்கத்திலே தீண்டாமை யொழிப்புப் போராட் டம் நடக்கிறது; எங்களை உள்ளே தள்ளிவிட்டார்கள் என்று மலையாளத் தலைவர்கள் கடிதம் அனுப்பினால், காய்ச்சலையும் வயிற்று வலியையும் மறந்து பறந்து சென்று போராடி வெற்றியை நிலை நாட்டுவார். வைக்கம் வீரர் என்றும் பேரெடுப்பார்.

சாதியை யொழிக்க வேண்டும் என்று காங்கி ரசிலே தீர்மானம் போட்டால் சமபந்தி விருந்துகள் நடத்துவார்.

ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்று காந்தியடிகள் சொல்லிவிட்டால், இதோ என்று முன்னோடியாக விளங்குவார் ஈரோட்டார்.

இப்படி எள் என்று சொல்லும் முன்னாலே எண்ணெயாக நின்று செயலை முடித்து விடுவார்.

காந்தியடிகளின் சீடராகவும் - மக்கள் தொண்ட ராகவும் விளங்கிய ஈரோட்டுப் பெரியார், மனங் கொதித்துப் போராடும்படியான நிகழ்ச்சி யொன்று தமிழகத்திலே நடந்தது.

அதுதான் குருகுலப் போராட்டமாக வெடித்தது!