குறட்செல்வம்/கசடறக் கற்க
43. கசடறக் கற்க
உயிர் வாழ்க்கையின் இன்றியமையாத் தேவை இன்பம். இன்பம் நேரிடையாகக் கிடைப்பதன்று. பிறர் வாயிலாக வந்து அமைவதேயாம். இன்பத்தினை வழங்கும் ஆற்றல் நல்லறிவுக்கே உண்டு. நல்லறிவைப் பெறுதற்குச் சாதனம் கல்வி.
இன்று நம்மிடையில் கல்வி வேறு. அறிவு வேறு என்ற உணர்கூட வளரவிம்லை. கல்வி அறிவைப் பெறுதற்குரிய வாயிலேயாம். நம்முள் கற்றாரிலும் மூடர்கள் உண்டு. அவர்கள் எழுத்தெண்ணி ஒப்பிப்பர். எடுத்துக்காட்டுகள் ஏராளம் காட்டுவர். நமக்கே பிரமிப்பு ஏற்படும். ஆயினும் அண்டி நின்று பார்த்தால் கல்வியின்—கற்ற கல்வியின் அடையாளத்தைக்கூட அவர்தம் வாழ்க்கையில் பார்க்க முடியாது.
உண்ணும் உணவு செரித்துச் செங்குருதியாதல் வேண்டும். செங்குருதி வலிமையாகப் பயன்பட வேண்டும். இதுவே உணவின் பயன். அதுபோலவே கல்வி வாழ்க்கைப் பட்டறையில் அறிவாக மாறி ஒழுக்கமாகப் பயன் தரவேண்டும். இந்தப் பரிமாற்றங்கள் நடைபெறாது போனால் கல்வியாற் பயனில்லை.
கல்வி இருதரப்படும். ஒன்று பொதுக் கல்வி. மற்றொன்று சிறப்புக் கல்வி. பொதுக் கல்வி எல்லோருக்கும் தேவையான சில பொது அறிவு தரும் செய்திகளை கற்றுக் கொள்வதாகும். சிறப்புக் கல்வி என்பது தன் தகுதியினை மேலும் உயர்த்திக் கொள்ள கற்பதாகும்.
ஒருவர்க்கு உடலில் நலமில்லையானால் மருத்துவரிடம் உடலைக் காட்டிச் சோதனை செய்தல் வேண்டும். மருத்துவர் உடலைச் சோதனை செய்து நோயுற்ற உடம்பினில் இன்னின்ன உயிர்ச்சத்து இல்லையென்று குறிப்பிடுவர். இல்லாத உயிர்ச்சத்தைப் பெறக்கூடிய உணவை—மருந்தைத் தேடி உண்டு, இன்மையை ஈடு செய்து கொள்வது இயல்பு.
உடலைப் போலவே நம்முடைய உயிரியலில் சில தகுதிக் குறைபாடுகள் இயல்பிலேயே உண்டு. அந்தத் தகுதிக் குறைபாடுகள் என்ன என்பதை நாமே நம்முடைய நேற்றைய வாழ்க்கையின் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும்.
அல்லது நமது வாழ்க்கையில் நெருங்கிய தொடர்புடைய பெற்றோர். ஆசிரியர், நண்பர் ஆகியோர் மூலமாவது எந்த வகையில் நாம் தகுதிக் குறைபாடு உடையோர் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.
இங்ஙனம் தெரிந்துகொண்ட பிறகு நம்முடைய உயிர்த் தகுதிக் குறைபாட்டை நீக்கி நிறைநலத்தை வழங்கக்கூடிய இலக்கியங்களை—கருத்துக்களைக் கற்றுத் தகுதியுடையவராக ஆக்கிக்கொள்ள வேண்டும். இதனை,
கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
என்ற குறளால் அறியலாம். இந்தக் குறளை, “கசடறக் கற்பவை கற்க” என்றும் “கசடறக் கற்க” என்றும் “கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக” என்றும் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். நம்முடைய மனக்குற்றம் இன்னதென்பதை அறிந்துகொண்டு அதனை நீக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்து, கற்கவேண்டும்.
எகிப்திய நாட்டினில் பழமொழி ஒன்று உண்டு. "நல்ல நூல்கள் உயிர்க்கு மருந்து போல்வன” என்பது அது. குற்றம் நீங்குகிற வரையில் கற்கவேண்டும். குற்றம் நீங்கிய பிறகு பெற்ற புது நெறியில் நிலைத்து நின்ற ஒழுகவேண்டும் என்பதே குறளின் திரண்ட கருத்து.
இங்கனமின்றிக் “கசடறக் கற்க” என்பதற்கு ஐயந்திரிபறக் கற்க வேண்டுமென்று பொருள் கூறுவது பொருந்துமாயினும் சிறப்புடையதாகாது.
இந்தப் பார்வையில் வெகுளியுடையவர்கள், பொறையுடைமையை வற்புறுத்தும் நூல்களையும், கோழைமைத் தன்மையுடையவர்கள் ஆள்வினையாற்றலைத் தரும் நூல்களையும், இன்னமும் அவரவர் தம் தம் நிலை நோக்கிக் கற்க வேண்டும். இங்ஙனம் கற்றால் தவறுகள் தொடர்ந்து வாரா.
உலகில் தனிமனித வாழ்க்கையிலும், சமுதாயப் பொது வாழ்க்கையிலும் மாறுதல்கள் நிகழும். இத்தகு சிறந்த கல்வியை வழங்கும் கல்விக்கூடம் ஒன்று திறந்தால் ஒன்பது சிறைச்சாலையை மூடலாம் என்பது ஆன்றோர் கருத்து.
ஆனால் இன்றோ கல்வியும் பெருகி வளர்கிறது. சட்டப் புத்தகங்களும் மலைபோல் குவிகின்றன. சிறைச் சாலைகளும் மூடப்பட்டயாடில்லை. காரணம் கசடறக் கல்வி இல்லாமையே யாகும்.
பல நூறு ஆயிரம் ஆண்டுகளாகக் கவிஞர்களின் பாட்டுடைப் பொருளும் மாறாமலே இருந்து வருகிறது. எழுத்தாளருக்கும் அதே கதிதான். ஏன்? சொற்பொழிவாளர் பரம்பரையும்கூட ஓராயிரம் ஆண்டுகளாக ஒரே மையத்தைத்தான் சுற்றி வருகிறார்கள்.
கடவுள் அவதாரங்களில்கூட வடிவ மாறுதல்கள் ஏற்பட்டாலும், நோக்க மாறுதல் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
இந்த சமுதாயத்தில் சென்ற நூற்றாண்டில் குற்றமாகத் திகழ்ந்த ஒன்று, குற்றம் என்று கண்டு உணர்த்தப் பெற்ற ஒன்று இன்னமும் நீங்கினபாடில்லை. பலரறிய அதைக் குற்றம் என்று கற்றாலுங்கூடத் குற்றத்தை நீக்குவதில்லை. கற்றபடி நின்று ஒழுகுவதில்லை. இது ஒரு பாணி.
அதனால் கவிஞர் உலகக் கருத்துச் சிந்தனையும் வளரவில்லை. நாடும் நாளும் வளரவில்லை. ஆதலால் குற்றத்தை உணர்த்தி நீக்கும் கல்வியும் குற்றம் நீங்கி நின்றொழுகும் ஆற்றலைத் தரும் கல்வியும் வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது வள்ளுவத்தின் திரண்ட முடிபு.