கூடி விளையாடும் குழு விளையாட்டுக்கள்/வட்டமோ வட்டம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

38. வட்டமோ வட்டம்

அமைப்பு:

ஆடுகளத்தினுள் ஆங்காங்கே சிறு வட்டங்கள் போடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, 20 பேர் பங்கு கொள்கிறார்கள் என்றால், 19 வட்டங்கள் ஆடுதற்குத் தேவைப்படும் ஆகவே, இருக்கின்ற ஆள் எண்ணிக்கைக்கு ஒரு வட்டம் குறைவாகவே இருக்க வேண்டும்.

ஆடும் முறை:

ஆடுகளத்திற்கு அப்பால் சிறிது தூரத்திலிருந்து, எல்லோரையும் நிற்க வைத்து, ஓடவிட்டால், அவர்கள் வேகமாக ஓடிச்சென்று, இருக்கின்ற வட்டங்களுக்குள் நின்று கொள்வார்கள்.

வட்டம் கிடைக்காத ஒருவர்தான். ஆடுகளத்திற்கு வெளியே நின்று, ஆட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும்.

வட்டம் கிடைக்காதவர், யார் வட்டத்தை விட்டு வெளியே வருகின்றார் என்று வட்டம் போட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். வட்டத்தில் உள்ளவர்களோ, தாங்கள் வட்டத்திற்குள்ளேயே நிற்காமல், அடுத்தவர் வட்டங்களுக்குப் போக வர என்று இடம் மாறிக் கொண்டே இருக்கவேண்டும்.

வட்டத்தைவிட்டு வெளியே நிற்பவரைத் தொட்டாலும் சரி, அல்லது காலியாக இருக்கும் ஒரு வட்டத்திற்குள் சென்று நின்றுகொண்டாலும் சரி, வட்டம் கிடைக்காதவர் மீண்டும் வட்டம் போட்டு வட்டம் தேட ஆரம்பித்து விடவேண்டும்.

குறிப்பு:

தானே பிறர் வட்டத்திற்குப் போக முயல வேண்டும். பிறர் தன் வட்டத்திற்கு வந்தாலும், அவரது வட்டத்தை நோக்கி ஓட வேண்டுமே தவிர, போகமாட்டேன் என்று யாரும் பிடிவாதம் பிடிக்கக்கூடாது.

வட்டம் இல்லாதவர் சுற்றிச் சுற்றி வரவும், வட்டம் இருப்பவர் மாறி மாறி வரவும் என்ற விறுவிறுப்பான சூழ்நிலை இருக்கும்பொழுதுதான் ஆட்டத்தில் பரபரப்பு இருக்கும்.