கெடிலக் கரை நாகரிகம்/கெடிலக்கரை ஊர்கள்

விக்கிமூலம் இலிருந்து
22. கெடிலக்கரை ஊர்கள்

தென்னார்க்காடு மாவட்டம்

கெடிலம் ஆறு ஓடும் பகுதி இப்போது தென்னார்க்காடு மாவட்டம் என அழைக்கப்படுகிறது. இப்பெயர் ஆங்கிலேயர்களால் இடப்பட்டது. தமிழகத்தில் முதல் முதலாக ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மாவட்டம் இதுதான். பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டின் வடபகுதி ஆர்க்காட்டு நவாபுகளால் ஆளப்பட்டது. அவர்கள் வடார்க்காடு மாவட்டத்திலுள்ள ‘ஆர்க்காடு’ என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டனர். ஆர் என்றால் ஆத்தி, ஆத்தி மரங்கள் நிறைந்த காட்டுப் பகுதியாயிருந்ததால் ‘ஆர்க்காடு’ எனப்பட்டது. ஆர்க்காட்டைத் தலைநகராகக் கொண்டு ஆளப்பட்ட பகுதி ஆர்க்காட்டுச் சீமையாயிற்று. அப்பகுதி ஆங்கிலேயர் கைக்கு மாறியதும் அதன் வடபகுதி வடார்க்காடு மாவட்டம் எனவும், தென் பகுதி தென்னார்க்காடு மாவட்டம் எனவும் ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்டன. தென்னார்க்காடு மாவட்டத்தின் பரப்பு 10,770 சதுர கி.மீ. ஆகும்; தலைநகர் கடலூர்.

இம் மாவட்டத்தில் கெடிலம் ஒடும் கள்ளக்குறிச்சி, திருக்கோவலூர், கடலூர் ஆகிய மூன்று வட்டங்களிலும் கெடிலத்தின் அக்கரையிலும் இக்கரையிலும் கரைக்குப் பத்து கி.மீ. தொலைவிற்குள் உள்ள இன்றியமையாச் சிறப்புடைய சில ஊர்களைப் பற்றிய விவரங்களை வட்ட வாரியாக இப்பகுதியில்

கள்ளக்குறிச்சி வட்டம்

கள்ளக்குறிச்சி வட்டத்தில்தான் கெடிலம் தோன்றுகிறது. இந்த வட்டத்தின் பரப்பளவு 2,230 சதுர கி.மீ.; மக்கள் தொகை 3,83,500; தலைநகர் கள்ளக்குறிச்சி. தென்னார்க்காடு மாவட்டத்தின் மேற்கு எல்லை இவ் வட்டந்தான். மாவட்டத்திற்குள்ளேயே இந்த வட்டத்தில்தான் மலையும் காடும் மிகுதி. இதன் மேற்குக் கோடியில் கல்வராயன் மலை உள்ளது.

கள்ளக்குறிச்சி வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்தின் மேடான மேற்குப் பகுதியில் இருத்தலானும் மலையுங்காடும் செறிந்திருத்தலானும், தென்னார்க்காடு மாவட்டத்து ஆறுகளுள் பெரும்பாலான இவ் வட்டத்தில்தான் தோன்றுகின்றன; அவை: கெடிலம், மணிமுத்தாறு, கோமுகி முதலியன.

கள்ளக்குறிச்சி வட்டம் மலைப் பகுதியாயிருத்தலானும் புகைவண்டிப் போக்குவரவு பெற்றிராமையானும், மற்ற வட்டங்களில் உள்ளாங்கு தொழில் - வாணிகப் பெருக்கம் இங்கில்லை. மலைவளமும் காட்டுவளமும் உள்ள இவ்வட்டத்தில், மலையூற்று ஒடும் பள்ளத்தாக்குகளில் நெல், கரும்பு, மணிலா முதலியவை விளைகின்றன. மேற்கேயுள்ள கல்வராயன் மலைப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும், மற்றப் பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை முறைக்கும் மிக்க வேறுபாடு உண்டு.

இனி, இவ் வட்டத்தில் கெடிலக்கரையை ஒட்டிய இன்றியமையாத இரண்டு ஊர்களைப் பற்றிய விவரங்களைக் காண்பாம்:

மையனூர்

‘கெடிலத்தின் தோற்றம்’ என்ற தலைப்பில் மையனுரைப் பற்றிய விவரங்கள் ஒரளவு கூறப்பட்டுள்ளன. அவ்வூருக்குத் தெற்கேயுள்ள மையனூர் மலையடிவாரத்துப் பாறைச் சுனையிலிருந்து கெடிலம் தோன்றி மையனூர் ஏரியில் கலந்து அங்கிருந்து ஆற்றுருவம் பெற்றுவருஞ் செய்தி முன்பு விளக்கப்பட்டுள்ளது.

மலையடிவாரத்துப் பள்ளத்தாக்கில் இருப்பதால் மையனூர் மிக்க வளம் பெற்றுத் திகழ்கிறது. நூறு அல்லது நூற்றிருபத்தைந்து வீடுகள் இச் சிற்றூரில் உள்ளன. இவ்வூர் வயல்கள் மிக்க வளமுடையவை. நெல், கரும்பு முதலியவை விளைவிக்கப் படுகின்றன. தங்கள் ஊர் வயல்களின் தரத்தைப் பற்றி மையனுர் மக்கள் மிகவும் பெருமைப்பட்டுக் கொள்கின்றனர். கெடிலத் தாளைப் பெற்றளித்த மையனூர் நீடுழி வாழ்க!

ரிசிவந்தியம்

கள்ளக்குறிச்சி வட்டத்தில் கெடிலத்தின் நீளம் மிகக் குறைவு. கெடிலக் கரையை யொட்டியுள்ள இன்றியமையாத ஊர் இவ்வட்டத்தில் ரிசிவந்தியம் ஒன்றுதான். இவ்வூர் கள்ளக்குறிச்சிக்கு வடகிழக்கே 18 கி.மீ. தொலைவிலும் திருக்கோவலூர்க்குத் தென்மேற்கே 20 கி.மீ. தொலைவிலும் கெடிலம் ஆற்றிற்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவிலுமாக உள்ளது. வளர்ச்சிப் பணிகளுக்காகக் கள்ளக்குறிச்சி வட்டம் ஆறு ஊராட்சி மன்ற ஒன்றியங்களாகப் (பஞ்சாயத்து பூனியன்களாகப்) பகுக்கப்பட்டுள்ளது. அவ்வாறனுள் ரிசிவந்தியம் ஒன்றியமும் ஒன்றாகும். இந்த ஒன்றியத்தில் தான், கெடிலம் தோன்றும் மையனூர் உள்ளது. இந்த ஒன்றியத்தின் தலைநகர் ரிசிவந்தியம் ஆகும். திருக்கோவலூர் தியாக துருக்கம் மாவட்ட நெடும் பாதைக்கிடையே ரிசிவந்தியம் இருக்கிறது. 1760 ஆம் ஆண்டு இவ்வூர் ஆங்கிலேயர் கைக்கு மாறிற்று.

இவ்வூரில் ஆங்கிலேயரும் பிறரும் அடித்துப் பிடித்துப் போரிட்டுக் கொண்ட வரலாற்று நிகழ்ச்சிக்கு அப்பால், இவ்வூர்க்குச் சிறந்த பெருமை யளிப்பது, இங்கே உமையொருபாகரின் (அர்த்த நாரீசுவரரின்) பழமையான கோயில் இருப்பதாகும். மதுரைத் திருமலை நாயக்கரால் புதுப்பித்துக் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக்கோயிலில் சில சிறப்புகள் உள்ளன. கோயில் முதல் பெருவாயிலின் வலப்புறத்தில் சிற்ப வேலைப்பாடு மிக்க மண்டபம் உள்ளது. கருவறையிலுள்ள சிவலிங்கத்தின் மீது தேனை ஊற்றினால், இறைவன் அதில் உமையொருபாகராய் வீற்றிருப்பது தெரியும். தட்டினால் பண் இசைக்கும் தூண்கள் இங்கே உள்ளன. இந்தக் கோயிலின் சிற்ப வேலைப்பாட்டுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு உண்டு; அஃதாவது, இங்கே உள்ள ஒரு யாளிச் சிலையின் திறந்த வாய்க்குள் ஒரு கல் உருண்டை உள்ளது; பந்து போன்ற அவ் வுருண்டையை நம் கைவிரலால் எப் பக்கம் வேண்டுமானாலும் உருட்டலாம்; ஆனால், வெளியில் எடுக்க முடியாது; இது சிறந்த சிற்ப வேலைப்பாடாகும். இந்தக் கோயிலில் திருமலை நாயக்கரின் உருவச்சிலை யிருப்பது, வரலாற்றுக் குறிப்புக்கு உதவி செய்கிறது.

திருக்கோவலூர் வட்டம்

திருக்கோவலூர் வட்டம் தென்னார்க்காடு மாவட்டத்திற்கு நட்ட நடுவேயும் கெடிலம் ஒடும் வட்டங்களுக்குள் நடுவேயும் உள்ள வட்டமாகும். இதன் பரப்பளவு 1,500 சதுர கி.மீ., மக்கள் தொகை 4,00,150; தலைநகர் திருக்கோவலூர். இவ் வட்டம் ஆற்று வளமும் ஒரளவு மலைவளமும் காட்டுவளமும் உடையது. இஃது இப்போது ஐந்து ஊராட்சிமன்ற ஒன்றியங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

கெடிலம் ஆறு திருக்கோவலூர் வட்டத்தின் மேற்குக் கோடியிலிருந்து கிழக்குக் கோடிவரையும் வட்டத்தின் நடுவாக ஒடி வட்டத்தைக் கடக்கிறது. கெடிலத்தின் துணையாறாகிய தாழனோடை அல்லது சேஷ நதி எனப்படும் ஆறு தோன்றுவதும் கெடிலத்தோடு கலப்பதும் திருக்கோவலூர் வட்டத்திற்குள்ளேயே தான். இவ் வட்டத்தின் வழியாகத் தென்பெண்ணையாறும் அதிலிருந்து பிரியும் மலட்டாறுங்கூட ஒடுகின்றன. பாடல் பெற்ற திருப்பதிகள் பல இங்கே உள்ளன. பல்வேறு சமயப் பெரியார்கள் பலரின் தொடர்பும் புலவர் பெருமக்கள் பலரின் தொடர்பும் சங்ககாலந் தொட்டு இவ் வட்டத்திற்கு உண்டு. இங்கே கல்வெட்டுச் செல்வத்திற்குக் குறைவேயில்லை.

இப் பகுதிக்கு மலாடு, சேதிநாடு, மகதநாடு, சகந்நாத நாடு, சனநாத நாடு முதலிய பெயர்கள் வழங்கப் பட்டமையைக் ‘கெடிலநாடு’ என்னும் தலைப்பிலும், இப் பகுதியில் மலையமான்மரபு மன்னர்களும் வாணர் மரபு மன்னர்களும் பிற்காலப் பல்லவ மரபு மன்னர்களும் அரசோச்சிய வரலாற்றைக் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்ற தலைப்பிலும் விரிவாகக் காணலாம். கல்வெட்டுகளில்,

‘சயங்கொண்ட சோழ மண்டலத்து மலாடான ஜகந்நாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்துத் திருக் கோவலூர்’-

‘ஜநனாத வளநாட்டுக் குறுக்கைக் கூற்றத்து பிரம்ம தேயம் திருக்கோவலூர் ஆன பூர் மதுராந்தக சதுர் வேதி மங்கலத்து திருவிடை கழி ஆழ்வார்க்கு இவ் ஊர் சபையோம் விற்றுக் கொடுத்த நிலமாவது’-

என்றெல்லாம் இருக்கும் பகுதிகளைப் பார்க்குங்கால், அன்று, தாலுகா (வட்டம்) என்பது போல் கூற்றம் என்பதும், ஜில்லா (மாவட்டம்) என்பது போல் வளநாடு என்பதும், மாகாணம் (மாநிலம்) என்பதுபோல் மண்டலம் என்பதும் வழங்கப்பட்டமை புலனாகும். அன்று, சோழர் ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகள் ‘சயங்கொண்ட சோழ மண்டலம்’ என அழைக்கப் பட்டமையும், தென்னார்க்கரடு மாவட்டம் போன்றிருந்த ஒரு பெரும்பகுதி சகந்நாத வளநாடு அல்லது ‘சனனாத வளநாடு’ என வழங்கப்பட்டமையும், திருக்கோவலூர் வட்டம் போன்றிருந்த ஒரு சிறு பகுதி ‘குறுக்கைக் கூற்றம்’ என அழைக்கப்பட்டமையும், திருக்கோவலூருக்கு ‘மதுராந்தக சதுர்வேதி மங்கலம்’ என வேறொரு பெயர் இருந்தமையும் மேலுள்ள கல்வெட்டுப் பகுதிகளால் புலப்படும்.

இனி, பழைய குறுக்கைக் கூற்றமாகிய திருக்கோவலூர் வட்டத்தில் கெடிலக்கரையை ஒட்டியுள்ள இன்றியமையாத சில ஊர்கள் பற்றிய விவரங்கள் வருமாறு:

திருக்கோவலூர்

சங்க நூல்களில் கோவல் என வழங்கப்படும் திருக்கோலூர், அன்று மலையமான் மரபு மன்னர்கட்கும் மெய்ப்பொருள் வேந்தர் முதலியோர்க்கும் தலைநகராயிருந்ததன்றி, இன்று திருக்கோவலூர் வட்டத்திற்கும் திருக்கோவலூர் ஊராட்சிமன்ற ஒன்றியத்திற்கும் தலைநகராய்த் திகழ்கிறது. இவ்வூர், விழுப்புரம் காட்பாடி புகைவண்டிப்பாதை வழியிலும், கடலூர் - திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலையிலும், விழுப்புரத்திற்கு மேற்கே 32 கி.மீ. தொலைவிலுமாக உள்ளது. ஊர், புகைவண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே 3 கி.மீ. தொலைவிலுள்ளது. இதன் மக்கள் தொகை 16,700 ஆகும்.

திருக்கோவலூர் தென் பெண்ணையாற்றங்கரையில் இருப்பினும், கெடிலம் ஒடும் நடுநாயக இடமான திருக்கோவலூர் வட்டத்தின் தலைநகராக இருப்பதாலும், கெடிலம் ஆற்றுக்கு வடக்கே 8 கி.மீ. (5.மைல்) தொலைவிற்குள் இருப்பதாலும், ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் இந்நூலில் சிறப்பிடம் பெறுவதற்குரிய முழுத்தகுதியும் உடையதாகும்.

ஒளவையார் பாரிமகளிரைத் திருக்கோவலூர் மன்னர்க்கு மணமுடித்த வரலாறும், பாரியின் பிரிவாற்றாது கபிலர் வடக்கிருந்து தீப்பாய்ந்து உயிர் விட்ட ‘கபிலர் குன்று’ என்னும் பாறை திருக்கோவலூருக்கு அருகில் இருப்பதும், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் அடிகளாரின் தலைமையகமும் அவர்களால் உருவாக்கப்பட்ட கோவல் தமிழ்ச்சங்கமும் திருக்கோவலூரில் இருப்பதும் அவ்வூர்ப் பெருமைக்குத் தக்க சான்றுகளாம். வரலாற்றுப் பெருமைக்கு உரியதான இச்சிறு நகர் மேலூர், கீழுர் (கீழையூர்) என்னும் இரு பிரிவினதாயுள்ளது. இங்கே, ஒரு வட்டத்தின் (தாலுகாவின்) தலைநகரில் இருக்க வேண்டிய இன்றியமையா அலுவலகங்கள் அனைத்தும் உள்ளன.

மேலூர்

திருக்கோவலூரில் மேற்குப்பகுதி மேலுாராகும். இதுதான் நகரத்தின் இன்றியமையாப் பகுதி. இங்கே தான் திருவிக்கிரமப் பெருமாள் கோயில், கடைத்தெரு, உயர் நிலைப்பள்ளி முதலியவை உள்ளன. இங்கே உள்ள திருவிக்கிரமப் பெருமாள் கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்கது; முதலாழ்வார் மூவரும் சேர்ந்து வழிபட்டது. திருமங்கையாழ்வாரின் பாடல் (மங்களா சாசனம்) பெற்றது. இங்கு நின்ற கோலத்திலுள்ள திருமால்

பெயர்: திருவிக்கிரமசாமி, உலகளந்த பெருமாள் முதலியன: தாயார் பெயர் பூங்கோயிலாள் என்பது. திருவிக்கிரமப் பெருமாள் கோயிலின் எடுப்பான மிடுக்கான தோற்றத்தை மேலேயுள்ள படத்தில் காணலாம்.

முதலில் உயரமாய்த் தெரியும் கோபுரம் கிழக்குக் கோபுரம்; பின்னால் தெரிவது மேற்குக் கோபுரம், வட புறமும் கோபுரம் உண்டு. தெற்கில் கோபுரம் இல்லை. கிழக்குக் கோபுரவாயிலுக்கு முன்னால் திருக்குளம் தெரிவதையும் படத்தில் காணலாம். (இருகோபுரங்களும் திருக்குளமும் தெரியும்படி ஒரு வீட்டு மாடியில் இருந்து கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.) கிழக்குக் கோபுரத்திற்கும் கிழக்கே மற்றொரு கோபுரம் கோயிலோடு தொடர்பின்றிச் சிறிது தள்ளி இருக்கிறது.

இக்கோயிலில், திருமங்கைமன்னர், பாண்டிய மன்னர், விசயநகரமன்னர் முதலியோரின் திருப்பணிகள் நடை பெற்றிருப்பதாகத் தெரிகிறது. இங்கே பல கல்வெட்டுகள் உள்ளன. மற்றும் அம்மன் கோயிலுக்கு முன்னால் உள்ள மண்டபம் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கத் இம் மண்டபத்தின் நீளம் 55 1/2 அடி அகலம் 31 1/2 அடி. இது போன்ற அமைப்புள்ள மண்டபங்களுள் தமிழகத்திலேயே இதுதான் மிகப் பெரியது என்று சொல்லப்படுகிறது. சிற்ப வேலைப்பாடு கட்கும் இக்கோயிலில் குறைவில்லை. இங்குள்ள பெண்டிர் கோலாட்ட நடனச்சிற்பம் காணத்தக்கது. இங்கே ஏகாதசி விழா மிகச்சிறந்த முறையில் நடைபெறுகிறது. திருக்கோவலூர்ப் பெருமாள் மாசி மகத்தன்று கூடலூர்க் கடற்கரைக்கு வந்து நீராடிச் செல்வார். பெருமாள் கோயிலில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா நடத்தப்படுகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்க்கும் பிறர்க்கும் போர் நடந்தபோது, திருவிக்கிரமப்பெருமாள் கோயில் ஒரு போர்க்கோட்டையாகப் பயன்படுத்தப்பட்டது. 1758ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இதனை எடுத்துக் கொண்டனர். 1760 ஆம் ஆண்டு மைசூர் ஐதர் அலியின் படைகளின் தாக்குதல்களி லிருந்து இதனைக் காப்பாற்றவும் செய்தனர். திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மெய்ப்பொருள் (நாயனாரின்) வேந்தரின் கோட்டை இந்தக் கோயில் இருக்கும் பகுதியில்தான் இருந்தது என்றும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. முதல் கிழக்குக் கோபுரத்தை ஒட்டியுள்ள தெரு ‘கோட்டைத்தெரு’ என்று அழைக்கப்படுவது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இந்தக்கோயில் ஒரு காலத்தில் சமணக்கோயிலாக இருந்தது என்று ஒரு சிலராலும், சைவக்கோயிலாக இருந்தது என்று வேறு சிலராலும் கூறப்படுகிறது. இந்தப் பிணக்கு ஏன்? திருவிக்கிரமப் பெருமாள் கோயில் திருமால் கோயிலாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே! ஒருவனே தேவன்!

கீழுர்

திருக்கோவலுரரின் கிழக்குப்பகுதி கீழுர் ஆகும்; இது கீழையூர், கீழவூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு சிற்றுார் (கிராமம்) போன்ற இப்பகுதியில் சிவன் கோயில் இருக்கிறது. கோயில் பெயர் வீரட்டானம் என்பது. சிவன் பெயர் வீரட்டானேசுவரர்; அம்மன் பெயர் சிவாநந்தவல்லி. சிவபெருமான் வீரச் செயல்கள் நிகழ்த்திய எட்டுத் திருப்பதிகளுள் (அட்ட வீரட்டங்களுள்) இந்த ஊரும் ஒன்று. சிவன் இங்கே அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழித்து மறச்செயல் புரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்பதி, நாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகியோரின் தேவாரப் பதிகங்களும், அருணகிரியாரின் திருப்புகழும் பெற்ற பெருமையுடையது. சுந்தரரும் வேறு ஊர்ப்பதிகங்களில் திருக்கோவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவ்வூர்க்குப் புராணமும் உண்டு. கோவல் வீரட்டநாதரின் திருக்கோயிலைப் பின்வரும் படத்தில் காணலாம்.

படத்தில் நமது இடக்கைப் புறமாக இருக்கும் கோபுரம் கோயிலின் முதற்பெரு வாயிலாகும். இது கோயிலின் மேற்கே உள்ளது. எனவே, இக்கோயில் மேற்கு நோக்கியது என்பது புலனாகும். இஃது ஒரு புதுமையே. படத்தில் நமது வலக்கைப் புறமாகத் தெரியும் கோபுரம் அம்மன் கோயில் கோபுரமாகும். அதற்குப் பக்கத்தில் இடக்கைப் புறமாகத் தெரியும் மரம் வில்வமரம். அதற்கும் பக்கத்தில் சிறு கோபுரம் போல் தெரிவது. சிவலிங்கம் இருக்கும் கருவறைக்கு (கர்ப்பக் கிருகத்திற்கு) மேலுள்ள தூபி விமானம் ஆகும்.

(இந்தப்படம், கோயில் வெளிக்கோபுரம், கருவறை விமானம், வில்வமரம், அம்மன் கோயில் கோபுரம் முதலியன ஒருசேரத் தெரிவதற்காக ஒரு வீட்டுக் கூரையின்மேல் ஏறி நின்றுகொண்டு குறுக்கு வாட்டத்தில் எடுக்கப்பட்டது.)

இந்தக்கோயிலில் பல்லவர், சோழர், இராட்டிரகூடர், விசயநகர மன்னர் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன. 79 கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், முதலாம் இராசராசசோழன், அவன் மனைவி உலோகமாதேவி ஆகியோரின் அறக்கட்டளை பற்றிய கல்வெட்டுகள், விசயநகர மன்னரின் ஒர் அணை பற்றிய கல்வெட்டு முதலியவை குறிப்பிடத் தக்கன.

இந்தக் கோயிலின் வடக்குத் திருச்சுற்றில் அரசன் அரசியைக் குறிக்கும் மேலுள்ள சிற்பம் காணப்படுகிறது.

இந்தச் சிற்பம் பல்லவ அரசன் - அரசியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், எந்தப் பல்லவன் என்று குறிப்பிட முடியாது. உருவ அமைப்பைக் கொண்டு பல்லவர் என உய்த்துணர வேண்டியுள்ளது. எனவே, இந்தக் கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட பழைமையுடையது எனக் கொள்ளலாம்.

மலையமான் மரபினரின் அரண்மனை இந்தக் கீழுர்ப் பகுதியில்தான் இருந்தது எனச் சொல்லப்படுகிறது. திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடத்தின் முதல் ஆதீன மடம் கீழுர்ச் சிவன் கோயில் அருகில் உள்ளது. முதல் பட்டத்து அடிகளாரின் அடக்கம் (சமாதி) அம்மடத்தில் இருக்கிறது. முதல் பட்டத்து அடிகளார்க்குச் சிவபெருமான் ஆவணி மூலநாளில் அருள்புரிந்த திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. திருப்பாதிரிப் புலியூர் ஐந்தாம் பட்டத்து அடிகளார் கோவலூர் மடத்தில் அடிக்கடி வந்து தங்கி ஆற்றிய பணிகள் மிகப்பல. இந்த ஆதீனமேயன்றி பைந்தமிழ் பரப்பும் குன்றக்குடி அடிகளார் மடத்தின் முதல் தலைமையாதீனமும் திருக்கோவலூரிலேயே இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பல்வேறு கோணங்களில் திருக்கோவலூர் ஒளிவீசித் திகழ்கிறது.

திருநறுங்குன்றம்

இவ்வூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 19 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது. இது, திருநறுங்கொன்றை எனவும் திரு நறுங்கொண்டை எனவுங்கூட அழைக்கப்படுகிறது. இச் சிற்றுாரின் மக்கள் தொகை 500 ஆகும். இது திருக்கோவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்ததாகும்.

இவ்வூர்க்கு அருகே வடபுறம் அறுபது அடி உயரமுடைய கவின்மிகு சிறு குன்று ஒன்று உள்ளது. அக்குன்றின் உச்சியில் இரண்டு பெரிய உருளைக்கற்கள் உள்ளன. அவற்றுள் ஒன்றின் மீது பார்சுவநாதர் என்னும் சைனத்தீர்த்தங்கரரின் நான்கடி உயர உருவச்சிலை இருக்கிறது; மற்றொன்றில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது; மற்றும், குன்றுப் பகுதியில் ஒரு சிறிய சமணக்கோயில் இருக்கிறது. இக்கோயிலில் சோழர் காலக் கல்வெட்டுகள் சில உள்ளன.

இந்த சமணசமயக் கோயில் அப்பாண்டைநாத சுவாமி கோயில் என அழைக்கப்படுகிறது. அப்பாண்டைநாதன், அப்பாண்டைராசன் என்னும் பெயர்களைக் கொண்ட மக்கள் பலரைத் திருநறுங்குன்றத்தில் காணலாம். பண்டு இங்கே சமண சமயத்தைச் சார்ந்தவர் ஆயிரக்கணக்கில் வாழ்ந்தனர்; இப்போது நூற்றுக்கணக்கில்தான் இருக்கின்றனர். நாவுக்கரசரும் ஞானசம்பந்தரும் அப்பாண்டைநாதரைப் பாடியுள்ளனர் என்பதாகவும், கம்பர் இவ்வூர்ச் சமணர்களின் ஒப்புதலுக்குப் பிறகே தம் இராமாயண நூலை அரங்கேற்றினார் என்பதாகவும் பல செய்திகள் சமணர்களால் கூறப்படுகின்றன. இதைக்கொண்டு, ஒரு காலத்தில் இங்கே சமயப்பிணக்கு நிகழ்ந்திருக்க வேண்டும் என உய்த்துணரப்படுகிறது.

ஆற்றூர்

இவ்வூர், திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 22கி.மீ. தொலைவில் திருநறுங்குன்றத்திற்குக் கிழக்கே 3 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. ஆற்றங்கரையில் இருப்பதால் ஆற்றூர் எனப்பட்டது போலும். இது பேச்சு வழக்கில் ஆத்தூர் என மருவி வழங்கப்படுகிறது. இவ்வூர், மேட்டு ஆத்தூர், பள்ள ஆத்தூர் என இரு பிரிவினதாயுள்ளது. பள்ள ஆத்தூரில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது.

திருக்கோவலூர் நாட்டில் ஆற்றுார் என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு ஏகம்பவாணன் என்னும் சிற்றரசன் ஆண்ட வரலாறும், அவன் ஆறையர்கோன் ஆறை நகர்க் காவலன் என்றெல்லாம் இலக்கியங்களில் அழைக்கப் பட்டிருக்கும் செய்தியும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. (பக்கம் : 185 - 189). அந்த ஆற்றுார் இந்த ஊராகத்தான் இருக்கவேண்டும். வாணர் மரபு, ஒர் உழவர் பெருங்குடி மரபு என்பது ஈண்டு நினைவுகூரத் தக்கது. ஆற்றுாரும் திருக்கோவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

கிளியூர்

கிளியூர் மலையமான்களின் தலைநகராயிருந்த ஊர் இது. திருக்கோவலூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மலையமான் மரபினருள் ஒரு பிரிவினர், இந்தக் கிளியூரைத் தலைநகராகக் கொண்டு திருக்கோவலூர் வட்டத்தின் தென் பகுதியை ஆண்டதால் கிளியூர் மலையமான்கள் என அழைக்கப்பட்டனர். ஒரு காலத்தில் கிளியூர் ஒரு தலைநகராயிருந்தது என்பதை மெய்ப்பிக்கும் சுவடுகள் சில, அவ்வூர் வட்டாரத்தில் உள்ளன. கிளியூர் பற்றிய வரலாற்றுச் செய்திகள் பல அவ்வட்டாரத்து மக்களால் மிகவும் பெருமையாகப் பேசப்படுகின்றன.

கிளியூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவு அளவில் உள்ளது. இது பாதை வசதியற்ற குறுக்குவழித் தொலைவாகும். நல்ல பாதைகளின் வழியாகச் சுற்றிக்கொண்டு வரவேண்டுமானால் இன்னும் தொலைவு கூடுதலாகும். கிளியூருக்கு வடக்கே திருக்கோவலூர் - கடலூர் மாநில நெடுஞ்சாலையும், கிழக்கே சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையும், தெற்கே உளுந்துர்ப்பேட்டை - கள்ளக்குறிச்சி மாநில நெடுஞ்சாலையும், மேற்கே ஆசனூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையும் உள்ளன. இந்த நான்கு சாலைகட்கும் நடுவே கிளியூர் உள்ளது. ஒரு காலத்தில் ஒரு தலைநகராயிருந்த கிளியூருக்குக் கட்டை வண்டிப் பாதையைத் தவிர வேறு நல்ல பாதையில்லாமை இரங்கத்தக்கது!

திருநறுங்குன்றத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவிலும், பிள்ளையார் குப்பத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலும், களமருதூருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவிலும், இறையூருக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவிலுமாக - இந்த நான்கு ஊர்கட்கும் நடுவே கிளியூர் உள்ளது. மலையமான்களின் தலைநகராயிருந்ததாதலின், இவ்வூர் இருக்குமிடத்தைத் தெளிவாகச் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இஃதன்றி, வடமேற்கிலிருந்து தென்கிழக்காக ஒடிக் கொண்டிருக்கும் கெடிலக்கரைக்குத் தென்மேற்காக 4 கி.மீ. தொலைவில் கிளியூர் இருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். இந்தப் பகுதி ஒரு காலத்தில் மகத நாடு எனவும் அழைக்கப்பட்டது. இப்போது கிளியூர், உளுந்துர்ப்பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வூர் மக்கள் தொகை 2,800,

திருநெல்வெண்ணெய்

இவ்வூர் நெல் வெண்ணை, நெல் வணை, நெய்வெண்ணை, நெய் வணை என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இங்கே ஞானசம்பந்தரின் தேவாரப்பதிகம் பெற்ற சிவன் கோயில் உள்ளது. தேவாரத்தில் நெல்வெண்ணெய் என்ற பெயர் உருவமே காணப்படுகிறது. இறைவன் பெயர் வெண்ணெயப்பர்; இறைவி பெயர் நீலமர்க்கண் நாயகி. கோயிலில் கல்வெட்டுகள் உண்டு. கோயில் பழுதடைந்திருக்கிறது.

இவ்வூர் உளுந்துர்ப்பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தது; உளுந்துார்ப்பேட்டை புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூருக்குச் செல்ல நல்ல பாதை இல்லை. மழைக்காலத்தில் மாட்டு வண்டியில் செல்வதும் அரிது. உளுந்துர்ட் பேட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவிலுள்ள நெமலி என்னும் ஊர்வரைக்கும் பேருந்து (பஸ்) வண்டியில் செல்லலாம்; பிறகு நடை வண்டி கட்ட வேண்டியதுதான்.

இவ்வூர் கெடிலக்கரைக்கு 8 கி.மீ. தொலைவில் இருந்தாலும், கெடிலத்தோடு கலக்கும் துணை ஆறாகிய தாழனோடை என்னும் சேஷநதிக்கு அண்மையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

உளுந்தூர்ப்பேட்டை

இது, சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையிலும் விழுப்புரம் விருத்தாசலம் புகைவண்டிப் பாதையிலுமாகக் கெடிலத்தின் தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது. கெடிலத்துடன் கலக்கும் துணையாறாகிய தாழனோடை என்னும் சேஷநதிக்குத் தெற்கே 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது. மக்கள் தொகை 7,100,

இவ்வூரில் புகைவண்டி நிலையமும் விண்ணுார்தி நிலையமும் உள்ளன. உளுந்துக்குப் பேர் போன ஊர் இது. சந்தையும் இங்கே கூடும். இவ்வூரிலிருந்து விருத்தாசலம், திருச்சி கள்ளக்குறிச்சி, திருவெண்ணெய் நல்லூர், விழுப்புரம் ஆகிய ஐந்து பகுதிகளை நோக்கி, பெருநாட்டு நெடுஞ்சாலையும், மாநில நெடுஞ்சாலையும், மாவட்ட நெடும்பாதையும், மாவட்டக் குறும்பாதையுமாக ஐந்து சாலைகள் பிரிந்து செல்வதைக் கொண்டு, போக்குவரவுத் துறையில் இவ்வூர் பெற்றிருக்கும் இன்றியமையாமையைப் புரிந்து கொள்ளலாம். இச்சாலைகளேயன்றி, நெய்வேலிக்கும் இவ்வூர்க்குமாக ஒரு பெரிய நெடுஞ்சாலை அமைக்கும் முயற்சி இப்போது நடைபெற்று வருகிறது. இவ்வூரில் விண்ணுர்தி நிலையம் இருப்பதாலும், அண்மையில் நெய்வேலி நிலக்கரித் திட்டம் நடைபெறுவதாலும், எதிர்காலத்தில் இவ்வூரின் வளர்ச்சி மிகப் பெரியது என்பது புலனாகும்.

ஒரு வணிக நிலையமுமாக இருக்கிற இவ்வூர் வழியாக இப்போது நடைபெறும் பேருந்து வண்டி (பஸ்), பேருந்து சுமை வண்டி (லாரி) ஆகியவற்றின் போக்குவரவுக்கு அளவேயில்லை.

உலகியல் துறையிலன்றிச் சமயத்துறையிலும் உளுந்துர்ப் பேட்டை பின்வாங்கிவிடவில்லை. இங்கே சிவன் கோயில் ஒன்றும் இருக்கிறது. ‘முன்னொரு காலத்தில் ஒரு மிளகு வணிகன் மிளகு மூட்டையுடன் இங்கு வந்தான். இஃது என்ன முட்டை என்று ஒருவன் கேட்டான். உளுந்து மூட்டை என்று வேடிக்கையாக வணிகன் பொய் சொன்னான். ‘அஃது அப்படியே யாகுக’ என்று மற்றவன் கூறினான். அவ்வாறே மிளகு முட்டை உளுந்து மூட்டையாயிற்று. அப்படி ஆக்கிய பேர்வழி சிவன்தான். இது சிவனது திருவிளையாடல் என உணர்ந்த வணிகன் அங்கே சிவனுக்குக் கோயில் கட்டி வழிபாடு செய்தான்.’ இப்படியொரு கதை சொல்லப்படுகிறது. உளுந்துார்ப்பேட்டை என்னும் பெயருக்கு ஏதேனும் காரணம் வேண்டுமல்லவா?

இவ்வளவு சிறப்பிற்குரிய உளுந்துர்ப்பேட்டை, உளுந்துர்ப் பேட்டை ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராயிருப்பதில் வியப்பில்லை. இந்த ஒன்றியம் வடக்கே கெடிலக்கரை வரைக்கும் பரந்துள்ளது; எனவே, கெடிலக்கரை நாகரிகத்தில் உளுந்துர்ப் பேட்டைக்கும் தக்க பங்கு உண்டு.

மலட்டாற்றங்கரை ஊர்கள்

திருக்கோவலூர் வட்டத்தில் பெண்ணையாற்றின் தென்கரையிலிருந்து பிரியும் மலட்டாற்றின் தென்கரையில் அடுத்தடுத்தாற்போல் மேற்கு - கிழக்காக இடையாறு. திருவெண்ணெய் நல்லூர், முண்டீச்சுரம் (கிராமம்) என்னும் மூன்று சைவத்திருப்பதிகள் உள்ளன. இம் மூன்றுமே திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தவை.

இம்மூன்று ஊர்களும் மலட்டாற்றின் கரையில் இருந்தாலும், இவற்றிற்குத் தென்மேற்கே முறையே 6, 8, 10 கி.மீ. தொலைவிற்குள் கெடிலம் ஆறு ஓடுதலாலும், இவ்வூர்களின் பக்கத்தே ஒடும் மலட்டாறு ஒரு துணை ஆறாய்க் கெடிலத்தில் போய் விழுந்து கலப்பதால் மலட்டாறு கெடிலத்தின் ஒர் உறுப்பாய்க் கருதப்படுதலானும், மலட்டாற்றங் கரையிலுள்ள இவ்வூர்கள் ‘கெடிலக்கரை நாகரிகம்’ என்னும் இந்நூலில் இடம்பெறுவதற்கு முழு உரிமையும் உடையனவாகும். இனி முறையே ஒவ்வொன்றினையும் பற்றிய விவரங்கள் வருமாறு:

இடையாறு

இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகைவண்டி நிலையத்திற்கு வடமேற்கே 1 கி.மீ. தொலைவில் திருவெண்ணெய் நல்லூர் ஊருக்கு வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் தென்கரையில் இருக்கிறது. இவ்வூருக்குத் தென்மேற்கே 6 கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதை வழியே செல்லும் பேருந்து வண்டியில் பயணம் செய்தால், இவ்வூர்ச் சிவன் கோயிலின் வடக்கு மதிற்புறமாக இறங்கலாம். இவ்வூருக்கு ஏனாதிமங்கலம் என்னும் பெயரும் உண்டு. ஏனாதிப் பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசரால் அளிக்கப்பட்ட ஊராக இருக்க வேண்டும். இங்கே மலட்டாற்றின் குறக்கே சிறு அணை ஒன்று உளளது.

இடையாறு சுந்தரரின் பாடல் பெற்ற பதியாகும். இறைவன் பெயர்: இடையற்றீசன்; அம்மன் பெயர்; சிற்றிடைநாயகி. இங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. கல்வெட்டில், கோயிலின் பெயர் மருதந்துறை எனச் சொல்லப்பட்டுள்ளது.

திருவெண்ணெய் நல்லூர்

இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகை வண்டி நிலையத்திற்கு மேற்கே 6 கி.மீ. தொலைவில் மலட்டாற்றின் தென்கரையில் இருக்கிறது. இவ்வூருக்குத் தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. திருவெண்ணெய் நல்லூர், திருக்கோவலூருக்குத் தென் கிழக்கே 22 கி.மீ. தொலைவிலும் விழுப்புரத்திற்குத் தென்மேற்கே 19 கி.மீ. தொலைவிலும் பண்ணுருட்டிக்கு வடமேற்கே 24 கி.மீ. தொலைவிலுமாக உள்ளது. கடலுர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் செல்லும் பேருந்து வண்டியில் பயணஞ்செய்தால், இவ்வூர்ச் சிவன் கோயில் அருகே இறங்கலாம். மக்கள் தொகை 4,350. இவ்வூரை 1760இல் ஆங்கிலேயர் கைப்பற்றினர்.

இவ்வூர்ச் சிவன் கோயிலின் பெயர் ‘அருள் துறை என்பது.’ *[1] ‘வெண்ணெய் நல்லூர் ‘அருள் துறையுள் அத்தா’ என்னும் சுந்தரர் தேவாரப்பாடற் பகுதியால் இதனை அறியலாம். இஃதன்றி, கிருபாபுரீசுரர் கோயில், தடுத்தாட்கொண்ட நாதர் கோயில் என்ற பெயர்களும் உண்டு. சிவன் பெயர்: தடுத்தாட்கொண்ட நாதர்; அம்மன் பெயர் வேற்கண்ணம்மை இவ்வூர்க்கு மேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ள மணம் தவிர்ந்த புத்துரில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுந்தரர் திருமணத்தை, சிவன் ஒரு கிழ அந்தணனாய் வழக்கிட்டுத் தடுத்து இவ்வூர் அறமன்றத்திற்கு அழைத்து வந்து வழக்கில் வென்று சுந்தரரை ஆட்கொண்டதாகச் சொல்லப்படும் வரலாறு அறிந்ததே. இதற்குச் சான்றாக, இவ்வூருக்குத் தென்கிழக்கே 3 கி.மீ. தொலைவில் ‘தடுத்தாட்கொண்ட ஊர்’ என்னும் ஒர் ஊர் இருப்பதும், இவ்வூர்க் கோயிலில் ‘வழக்கு வென்ற திரு அம்பலம்’ என்னும் பெயருடைய நூற்றுக்கால் மண்டபம் இருப்பதும் குறிப்பிடத்தக்கவை. சுந்தரர்’ பித்தா பிறை சூடி’ என்று தொடங்கும் தமது முதல் பதிகத்தைப் பாடியது இவ்வூரில் தான். சிவன் கோயிலுக்குள் சுந்தரர்க்கு ஒரு சிறு கோயில் உள்ளது. இவ்வூருக்கு அருணகிரிநாதரின் திருப்புகழும் உண்டு.

முதல் சந்தான குரவராகிய மெய்கண்ட தேவர் வளர்ந்து உருவாகி, சைவ சித்தாந்தத் தலைநூலாகிய ‘சிவஞான போதம்’ என்னும் உயரிய நூலைப் பாடியருளியதும் இவ்வூரிலேதான். மெய்கண்ட தேவரின் அடக்கத்தின் (சமாதியின்) மேல் ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. ஊரில் மெய்கண்டார் பெயரில் மடம் ஒன்றும் உள்ளது. திருவாவடுதுறை ஆதீன அடிகளார் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் விசயதசமியில் இங்கே சைவ சித்தாந்த மாநாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

‘கம்பரை வளர்த்து உருவாக்கிய வள்ளல் சடையப்ப முதலியார் வாழ்ந்ததும், கம்பர் கல்வியறிவிற் பெரியவராய் உருவாகிப் பாடல் இயற்றத் தொடங்கியதும் திருவெண்ணெய் நல்லூரில்தான்’ என்பது உலகறிந்த செய்தி. ஆம், திருவெண்ணெய் நல்லூர் என்பது உண்மைதான்! ஆனால், எந்தத் திருவெண்ணெய் நல்லூர் என்பதிலே கருத்து வேற்றுமை உண்டு. சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு திருவெண்ணெய் நல்லூர் உண்டு. கம்பர் சோழ நாட்டில் பிறந்தவராதலால், அவரை ஆதரித்த சடையப்ப வள்ளல் வாழ்ந்தது சோழ நாட்டுத் திருவெண்ணெய் நல்லூர்தான் என்று ஆராய்ச்சியாளர் சிலர் அறிவித்துள்ளனர். கேட்பதற்கு இச்செய்தி பொருத்தமாகவும் சுவையாகவும் இருப்பினும், தொன்று தொட்டுப் பல்லாண்டுகளாய் ஆராய்ச்சியாளர் பலர் கூறி வருவது திருக்கோவலூர் வட்டத்திலுள்ள திருவெண்ணெய் நல்லூரைத்தான்! இக்கருத்து வேற்றுமைக்குத் திட்ட வட்டமான ஒரு முடிவு இன்னும் கிடைத்தபாடில்லை. ஆயினும், திருக்கோவலூர் வட்டத்துத் திருவெண்ணெய் நல்லூர்தான் சடையப்ப வள்ளலின் ஊர் என்பவர்கட்கும் சான்றுகள் கிடைக்காமலில்லை; இந்தத் திருவெண்ணெய் நல்லூரில் இப்போது சத்திரம் இருக்கும் இடத்தில்தான், அன்று சடையப்ப வள்ளல் வாழ்ந்த இல்லம் இருந்தது என்று மக்களால் சொல்லப்படுகிறது. மற்றும், இப்போது ஏரிக்கரையில் இருக்கும் பிள்ளையார் கோயிலில்தான், அப்போது கம்பர் முதல் முதலாகப் பாடல் எழுதினார் என்றும் சொல்கின்றனர்.

இங்கே, பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர மன்னர் முதலிய பேரரசர் காலத்துக் கல்வெட்டுகளும் மற்றுஞ் சில சிற்றரசர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. இவ்வூர், இறைவன்மேல் உள்ளூர்ப் புலவராகிய இராசப்ப நாவலர் என்பார் திருவெண்ணெய்க் கலம்பகம் என்னும் நூல் இயற்றியுள்ளார். அம்பிகை வெண்ணெய்க் கோட்டை கட்டி நோன்பியற்றி இறைவனது அருள் பெற்ற ஊர் ஆதலின் வெண்ணெய் நல்லூர் எனப் பெயர் பெற்றதாக நூல்கள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் அர்ச்சுனன் (தீர்த்தயாத்திரை) தெய்வ நீராடல் மேற்கொண்டு தென்னாடு வந்தபோது திருவெண்ணெய் நல்லூருக்கும் வந்து வழிபட்டானாம். இதனை வில்லி பாரதம் - ஆதி பருவம் அருச்சுனன் தீர்த்தயாத்திரைச் சருக்கத்திலுள்ள,

"ஐயானனன் இயல்வாணனை அடிமைக்கொள மெய்யே

பொய்யாவணம் எழுதும்பதி பொற்போடு வணங்கா “

என்னும் பாடல் (17) பகுதியால் அறியலாம். ஐயானனன் என்றால் சிவன், இயல்வாணன் என்றால் சுந்தரர்; சிவன் சுந்தரரை ஆட்கொள்வதற்காகப் பொய் ஆவணம் எழுதிய பதி திருவெண்ணெய் நல்லூர். இந்தப் பதியையும் அர்ச்சுனன் வணங்கியதாகப் பாரதப்பாடலில் வில்லிபுத்துரார் தெரிவித்துள்ளார். இவ்வாறு பல்வேறு பெருமைகட்கு உரியதாயுள்ள இவ்வூர், திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராய் இப்போது விளங்குவதில் வியப்பில்லை. சுந்தரர் காலத்தில் உயர்நீதி மன்றம் இருந்த ஊராயிற்றே!

மலட்டாறா? பெண்ணையாறா?

சுந்தரரின் திருவெண்ணெய் நல்லூர்த் தேவாரப்பதிகத்தைப் படிப்பவர்க்குக் கட்டாயம் ஒர் ஐயம் எழும். சுந்தரர் அப்பதிகத்தில்,

வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்

நல்லூர் அருள்துறை....."

என்று, திருவெண்ணெய் நல்லூர் பெண்ணையாற்றின் தென்கரையில் இருப்பதாகப் பாடியுள்ளார். ஆனால் ஊர் இப்போது இருப்பதோ மலட்டாற்றின் தென்கரையில் இதற்கு என்ன பதில் சொல்லுவது?

திருவெண்ணெய் நல்லூருக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் பெண்ணையாறு ஒடுகிறது. இடையிலே ஊரையொட்டி மலட்டாறு ஒடுகிறது. பெண்ணையாற்றுக்கும் ஊருக்கும் இடையே 5 கி.மீ. தொலைவு இருப்பினும், பெண்ணை யாற்றுக்குத் தென்திசையில் ஊர் இருப்பதால் சுந்தரர் பாடியிருப்பது பொருத்தம் என்று சொல்ல முடியாது. பெண்ணையின் தென்கரைக்கு மிக அண்மையில் ஊர் இருந்தால்தான், சுந்தரர் பாடியிருப்பது பொருத்தமாகும். 5 கி.மீ. தொலைவுக்கு அப்பால் இருப்பதை ஆற்றங்கரையில் இருப்பதாகப் பாடமுடியாது. மேலும், மலட்டாறு என்னும் ஆற்றின் கரையில் இருப்பதைப் பெண்ணையாற்றின் கரையில் இருப்பதாக எவ்வாறு பாடமுடியும்?

மலட்டாறு பெண்ணையாற்றிலிருந்து பிரிவதால் மலட்டாற்றையும் பெண்ணையாறாகவே கருதி, மலட்டாற்றங் கரையில் இருக்கும் ஊரைப் பெண்ணையாற்றங்கரையில் இருப்பதாகச் சுந்தரர் பாடி விட்டார் என்று கூறுவதும் பொருந்தாது. அங்ங்னமெனில், எதுதான் பொருந்தும்? இப்போது மலட்டாறு இருக்கிறதே, அதுதான் பெண்ணை யாற்றின் பழைய பாதை என்று சொல்வதே பொருந்தும்.

பண்டு பெண்ணையாறு திருவெண்ணெய் நல்லூரை ஒட்டி ஒடிக்கொண்டிருந்தது. இடையிலே ஒரு பெருவெள்ளத்தின் போது, இப்போதுள்ள மலட்டாறு பெண்ணையிலிருந்து பிரியும் இடத்திற்கு அண்மையில் பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப்பின், பெண்ணை வடக்கு நோக்கி வளைந்து வேறு புதிய பாதை வகுத்துக் கொண்டது. அதிலிருந்து தொடர்ந்து புதிய பாதையிலேயே இன்றுவரையும் ஒடிக் கொண்டிருக்கிறது. பெண்ணைக்குத் தெற்கே இப்போதுள்ள மலட்டாறு என்பது பெண்ணையின் பழைய பாதையாகும். பெண்ணை தன் பழைய பாதையில் ஒடிக் கொண்டிருந்த போது அதனையொட்டிய தென்கரையில் இடையாறு, திருவெண்ணெய் நல்லூர், முண்டீச்சுரம் முதலிய ஊர்கள் இருந்ததால், ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்’ எனச் சுந்தரர் பாடினார். இப்போது பெண்ணையின் பழைய பாதை, மலட்டாறு என்னும் பெயரில் தண்ணிர் வளமின்றிக் காட்சியளிக்கிறது. இந்தக் கருத்துதான் பொருத்தமானதாகும். இதற்கு மறுக்க முடியாத சான்று ஒன்று உள்ளது.

சுந்தரர் திருத்துறையூரில் இறைவனை வழிபட்டு, அங்கிருந்து தெற்கேயுள்ள,திருவதிகைக்குப் பெண்ணை யாற்றைக் கடந்து சென்றார் என்று பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். [2]


திருத்துறையூர் தனைப்பணிந்து.......
...பெண்ணையாறு கடந்தேறியபின்........

.......திருவதிகைப் புறத்தணைந்தார்"

என்பது பெரியபுராணப் பாடற் பகுதி. இதிலிருந்து, திருத்துறையூருக்குத் தெற்கே பெண்ணையாறு இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகும். ஆனால், இப்போது திருத் துறையூருக்கு வடக்கே பெண்ணை ஒடுகிறது. எனவே, இப்போது திருத்துறையூருக்குத் தெற்கேயுள்ள மலட்டாற்றுப் படுகைதான் பெண்ணையின் பழைய பாதை என்பது புலனாகும். இந்தக் கருத்தை மலட்டாற்றங்கரை மக்களும் ஒத்துக் கொள்கின்றனர். ஆகவே, அன்றிருந்த சூழ்நிலையில் சுந்தரர் ‘பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்’ எனப் பாடியிருப்பது பொருத்தமானதே. பெண்ணையின் பழைய பாதையாகிய மலட்டாற்றுப் படுகை கிழக்கு நோக்கி செல்லச் செல்லத் தேய்ந்து மறைகிறது. அந்தப் படுகையிலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் பகுதி திருவாமூருக்கு அண்மையில் கெடிலத்தோடு கலக்கிறது.

முண்டீச்சுரம் (கிராமம்)

முண்டீச்சுரம் எனத் தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இவ்வூர் இப்போது கிராமம் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. மக்கள் தொகை 1,650. திருவெண்ணெய் நல்லூர் (ரோடு) புகைவண்டி நிலையத்திற்கு மேற்கே ஒரு கி.மீ. தொலைவிலும் - திருவெண்ணெய் நல்லூர் ஊருக்குக் கிழக்கே மூன்று கி.மீ. தொலைவிலுமாக மலட்டாற்றின் தென்கரையில் இக்கிராமம் இருக்கிறது. இவ்வூர்க்குத் தென் மேற்கே பத்து கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதை வழியே போகும் பேருந்து வண்டியில் பயணம் செய்யின் இவ்வூர்ச் சிவன் கோயிலின் வடக்கு மதிற்புறமாக இறங்கலாம். கோயில் ஆற்றங்கரையை ஒட்டி உள்ளது.

முண்டீச்சுரம் எனப்படும் கிராமம் நாவுக்கரசரின் பாடல் பெற்ற பழம்பதி. சிவன் பெயர்: முண்டீசுரர், சிவலோகநாதர், அம்மன் பெயர். கானார் குழலி. இங்கே முதற் பராந்தகனது கல்வெட்டு உட்படப் பல கல்வெட்டுகள் உள்ளன. முண்டிச்சுரம் கோயில் முதல் இராசாதித்த சோழனால் பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் திருத்திக் கட்டப்பட்டது.

சேந்தமங்கலம்

அன்று மன்னர் சிலரின் தலைநகராக இருந்ததும் இன்று திருநாவலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் உள்ளதும் ஆகிய சேந்தமங்கலம், சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையில் சென்னைக்கு 183 ஆம் கி.மீட்டரில் (114 ஆம் மைலில்) கெடிலத்தின் தென்கரைக்கு அண்மையில் உள்ளது. இவ்வூர் திருக்கோவலூருக்குத் தென்கிழக்கே 30 கி.மீ தொலைவிலும் - விழுப்புரத்திற்கு (மேற்கு சாய்ந்த) தெற்கே 25 கி.மீ தொலைவிலும் பண்ணுருட்டிக்கு (தெற்கு சாய்ந்த) மேற்கே 20 கி.மீ தொலைவிலும் - உளுந்தூர்ப் பேட்டைக்கு வடகிழக்கே 10 கி.மீ தொலைவிலுமாக இருக்கிறது. சேந்தமங்கலத்திற்கும் திருநாவலூருக்கும் நடுவே கெடிலம் ஒடுகிறது. ஆற்றின் தென்கரையில் சேந்தமங்கலமும் வடகரையில் திருநாவலூரும் உள்ளன. குறுக்கு வழியாக நடந்து வந்தால் இரண்டு ஊர்கட்கும் இடையேயுள்ள தொலைவு 2 கி.மீ. ஆகும்; நல்ல சாலை வழியாக வந்தால் 4 கி.மீ ஆகும். சேந்தமங்கலமும் திருநாவலூரும் ஒன்றுக்கொன்று முறையே வடகிழக்கும் தென்மேற்குமாகச் சாய்ந்து கெடிலத்தின் எதிர் - எதிர்க் கரைகளில் உள்ளன. சேந்தமங்கலத்தின் மக்கள் தொகை 5,600.

ஒருகாலத்தில் செங்கோல் வேந்தரின் தலைநகராய்ச் செழித்துச் சிறப்புற்றிருந்த சேந்தமங்கலத்தை அடைய வேண்டு மெனில், ஊருக்கு அண்மையில் ஒரு கி.மீ. தொலைவுக்கு நல்ல பாதை இல்லாதது பெருவியப்பிற்கும் பேரிரக்கத்திற்கும் உரியது. வடக்கு, கிழக்குப் பகுதிகளிலிருந்து சேந்தமங்கலம் செல்லவேண்டுமெனில், சென்னை - திருச்சி பெருநாட்டு (National Highways) நெடுஞ்சாலையில் - சென்னைக்குத் தென்மேற்கே 183ஆம் கி.மீட்டரில் (114 ஆம் மைலில்) - கெடிலம் ஆற்றின்மேல் உள்ள பாலத்திற்குத் தென்புறமாக இறங்க வேண்டும். கெடிலம் பாலத்திற்கு வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் பண்ணுருட்டியிலிருந்து திருநாவலூர் - பரிக்கல் வழியாகத் திருவெண்ணெய் நல்லூர் செல்லும் மாவட்டக் குறும்பாதை யொன்று சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையைக் குறுக்கிட்டுக் கடப்பதும், கெடிலம் பாலத்திற்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலை சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ்சாலையைக் குறுக்கிட்டுக் கடப்பதும், பயணம் செய்வோர்க்கு உதவக்கூடிய அடையாளக்குறிப்புக்களாகும். இதற்கு, மேற்குப் பகுதிகளிலிருந்து சேந்தமங்கலத்தைச் சேர வேண்டுமாயின், உளுந்துார்ப்பேட்டைக்கு வடகிழக்கே 10 கி.மீ. தொலைவில் கெடிலம் பாலத்திற்குத் தென்புறமாகப் பெருநாட்டு நெடுஞ்சாலையில் இறங்க வேண்டும்.

பெருநாட்டு நெடுஞ்சாலையில் இறங்கியதும், அங்கிருந்து கிழக்கு நோக்கிச் செல்லும் மண்பாதை வழியே ஒரு கி.மீ. தொலைவு சென்றால் சேந்தமங்கலம் கோட்டையையும் கோயிலையும் கண்டுகளிக்கலாம். அல்ல கண்டு கடுந்துயர் எய்தலாம் நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குப் பேருந்து வண்டி (பஸ்) கிடையாது; கால்நடையாகவோ, கட்டை வண்டியிலோ செல்ல வேண்டும். அங்கே கட்டை வண்டி கிடைக்காதாதலின் கால்களைத்தான் நம்பவேண்டும். கோடைக்காலத்தில் வேண்டுமானால் சிற்றுந்து வண்டியில் (பிளழ்சர் காரில்) செல்லலாம். மழைக்காலத்தில் வழியில் உளைகள் ஏற்பட்டு விடுவதால் சிற்றுந்து வண்டியில் செல்வது அரிது. இங்கே இது குறித்து இவ்வளவு எழுதுவதன் காரணம், இதைப் படிப்பவர்கள், சேந்தமங்கலம் சென்று கோட்டையையும் கோயிலையும் கட்டாயம் காண வேண்டும் என்னும் நோக்கமேயாகும்.

சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு முனையரையர் மரபு மன்னர்களும், பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர் மரபு மன்னர்களும் அரசோச்சியுள்ளனர். இங்கே எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டளவில் நரசிங்க முனையரையர் என்னும் மன்னர் ஆட்சி புரிந்த வரலாறு பற்றியும், பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப் பெருஞ்சிங்கக் காடவராயன் அரசோச்சிய வரலாறு குறித்தும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம். கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் இராசராச சோழனைச் சிறை வைத்தது இவ்வூர்க் கோட்டையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சேந்தமங்கலத்தில் கோட்டையும் கோயிலும் இணைப்பாக உள்ளன. கோட்டை மதிலுக்குள் கோயில் இருக்கிறது என்றே சொல்லலாம். அந்தக் காலத்தில் பலவிடங்களில் கோயில்கள் கோட்டைகளாகப் பயன்படுத்தப்பட்டமை வரலாறு கண்ட உண்மை ‘பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்’ என்றார் பாரதியார் அன்று! இன்று, கோட்டைத்தலம் அனைத்தும் கோயில் செய்தார்களா அல்லது கோயில் தலம் அனைத்தும் கோட்டை செய்தார்களா என்று தெரியவில்லை. கோயில் கோட்டையைச் சுற்றி அகழி உண்டு. இப்போது அகழியின் மேற்குப்பகுதி ஒரு கால்வாயுடன் இணைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையிலிருந்து வருபவர்கள் இந்தப் பாலத்தைக் கடந்துதான் கோட்டைக்குச் செல்ல வேண்டும். இந்தப் பாலத்தைக் கடந்ததும், மண்பாதை போகப்போக உயரமாகிச் சில அடிதொலைவில் வடக்கு நோக்கித் திரும்புகிறது.

அந்தத் திருப்புமுனையில் 20 அடி உயரத்தில் ஒரு மண்மேடு உள்ளது. அம்மேட்டின் உச்சியில் ஒரு பிள்ளையார் (கருங்கல் சிலை) அமர்ந்திருக்கிறார்; அவர் ‘உச்சிப் பிள்ளையார்’ என அழைக்கப்படுகிறார். முனை திரும்பி உச்சிப் பிள்ளையாரைக் கண்டு வணங்கிக் கடந்ததும் (அவரை வணங்காவிடின் என்ன செய்வாரோ? தம்மை வணங்கிச் செல்லாததற்காக தந்தை சிவனது தேரின் அச்சையே முறித்துவிட்டவராயிற்றே!), மிக அண்மையிலேயே கோட்டையையும் கோயிலையும் பார்க்கலாம். இவை இப்போது இடிந்து மிகவும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. கோட்டைக் கோயிலின் பாழடைந்த உட்புறத் தோற்றத்தை மேலுள்ள படத்தில் காணலாம்.

சேந்தமங்கலம் கோயில், வடக்கு நோக்கிக் கெடிலம் ஆற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தப் படம், முதல் பெருவாயிலைத் தாண்டி உள்ளே சென்று அவ்வாயிலின் அருகில் நின்று எடுத்ததாகும். இந்தப் படத்தின் நடுவில் தொலைவில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறாரே - அந்த இடம் கோயிலின் இரண்டாவது வாயிலாகும். எனவே இந்தப் படத்தில் தெரிவது, கோயிலின் முதல் வாயிலுக்கும் இரண்டாவது வாயிலுக்கும் இடையேயுள்ள வடக்குச் சுற்றின் (வடக்குச் சுற்றுப் பிரகாரத்தின்) தோற்றம் என்பது புலனாகும். எழில் மிக்க பெருமாடம் ஒன்று தன் நுண்ணிய சிற்பங்களுடன் இவ்வாறு இடிந்து அழிந்து கிடப்பதைக் காணுங்கால் கண்களில் நீர் கலங்குகிறது. நமது வலக்கைப் புறமாக நூற்றுக்கால் மண்டபம் சிதைந்த நிலையில் உள்ளடங்கியிருக்கிறது; இடக்கைப் புற மூலையில் ஒரு கிணறு உள்ளது; அதில் தண்ணிர் தரை மட்டத்திற்கு - மேலே இருக்கிறது; கயிறு தேவைப்படாமல் கையாலேயே தண்ணிர் மொள்ளலாம் (நாங்கள் பார்த்தது மார்கழி - சனவரித்திங்களில்). இந்தக் கோட்டைக் கோயிலின் முழுத் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்.

இந்தப் படம், கோட்டைக் கோயிலின் தென்கிழக்கு மூலையில் இடிபாடுகட்கிடையே அரிதின் முயன்று கோட்டைச் சுவர் உச்சியில் ஏறி நின்று கொண்டு, கூடிய வரையும் கோயில் உட்பரப்பின் முழுத் தோற்றமும் தெரியும்படி எடுத்ததாகும். இப் படத்தின் நடுவில் உயரமாகக் கோபுரம்போல் தெரிவது கருவறைக்கு (கர்ப்பக் கிருகத்திற்கு) மேலேயுள்ள விமானத் துரபியாகும். கருவறையைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் உள்ள திருச்சுற்று மண்டபங்கள் கால்கள் கலகலத்துச் சிதைந்த நிலையில் நின்ற கொண்டிருப்பதைக் காணலாம். கோயில் முழுதும் கருங்கல் வேலையே. சிற்ப வேலைப்பாடுகளும் மிகுதி. திருச்சுற்றுச் சுவர்களில் காணப்படும் கருங்கல் பலகணிகள் (சன்னல்கள்) கவர்ச்சியான வேலைப்பாட்டுடன் கூடியவை. மேற்குச் சுற்றில் உள்ள குறிப்பிடப்பட்ட ஒரு பகுதி திருடன் கோயில் எனப் பெயர் சொல்லப்படுகிறது. இடிபாடுகளையும் செடி, கொடி புதர்களையும் ஊடுருவிக் கொண்டு சென்று திருடன் கோயிலை அடையவோ தெளிவாகக் காணவோ முடிய வில்லை. திருடன் கோயில் எனப் பெயர் வந்ததன் காரணத்தை அங்கிருந்தவர்களால் தெளிவுபடுத்த முடியவில்லை. கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருடர்கள் வழிபடும் பகுதியோ என்னவோ! மொத்தத்தில் கோட்டையும் கோயிலும் பாழடைந்த நிலையிலும் ஒருவகைக் கவர்ச்சியுடன் காணப்படுகின்றன;

பாழடைந்து விட்டதால் வரலாற்றுப் பெருமைக்கு உரியனவாய் விட்டன. இடிபாடுகளின் பாழ்த்தோற்றம், கவனிப்பாரற்ற நிலையினால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை; போரில் பகை மன்னரால் இடியுண்டு பாழ்படுத்தப்பட்டதாகவே தேர்ன்றுகிறது. எலியுடன் சேர்ந்த தவளையைப்போலக் கோட்டையுடன் சேர்ந்ததால் கோயிலுக்கும் கேடு நேர்ந்தது. பாழ்பட்டுக் கிடக்கும் கோட்டையையும் கோயிலையும் பிரிய மனம் வரவில்லை. கோட்டைக் கோயிலைச் சுற்றிக் கோட்டை வெளிமதில்கள் சிதைந்த நிலையில் இன்றும் நிமிர்ந்து நின்று கொண்டிருக்கின்றன. இக் கோட்டை மதிலின் படத்தையும் உரிய விவரங்களையும், இந்நூலில் கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பிலுள்ள ‘கோப்பெருஞ்சிங்கன்’ என்னும் உட்பிரிவில் (பக்கம் : 156) காணலாம்.

இந்தக் கோட்டைக் கோயிலுக்குள் பல்லவர், பாண்டியர், விசயநகரக் கிருஷ்ண தேவராயர் முதலியோரின் கல்வெட்டுகள் பலவற்றைக் காணலாம். கோயிலின் இரண்டாவது வாயிற் சுவர்களில் உள்ள கல்வெட்டுகள் ஒரளவு படிக்கக் கூடிய நிலையில் உள்ளன.

சேந்தமங்கலம் வட்டாரத்தில் நிலத்தைத் தோண்டினால், எத்தனையோ கட்டடங்களும் பல்வேறு பொருள்களும் கிடைக்குமென அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். சேந்த மங்கலத்தைச் சுற்றி 10 கி.மீ. வட்டாரத்தில் நிலத்தைத் தோண்டினால் கட்டடங்களின் இடிபாட்டுக் கற்கள் கிடைப்பதால், கோட்டை - அரண்மனை உட்படத் தலைநகரம் 10 கி.மீ. சுற்று வட்டாரத்திற்குப் பரவியிருந்திருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. இந்தப் பரப்பெல்லைக்குள் திருநாவலூரும் அடங்கியிருக்க வேண்டும். இதற்குச் சான்று, திருநாவலூரில் உள்ள கச்சேரி மேடு என்னும் பகுதியாகும். கச்சேரி மேடு என்பது, அரசன் கொலுவீற்றிருந்து நாட்டு நடப்புக்களைக் கவனிக்கும் திருவோலக்க மாளிகை இருந்த இடமாகும்.

சேந்தமங்கலம் கோட்டைக்கு மேற்கே சிறிது தொலைவில் ஒரு தோப்பும் ‘நீராழிக்குளம்’ என்னும் பெயருடைய ஒரு குளமும் உள்ளன; அங்கிருந்து மேற்கே பாதுர்ப் பக்கம் ஒரு சுரங்கம் செல்வது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. கோட்டைக்கு எதிரில் வடபுறமாக ஒரு குளம் இருக்கிறது. அக் குளத்தங்கரையில் குதிரைச் சிலைகள் இருப்பதாகவும் போய்ப் பார்க்கும்படியாகவும் மக்கள் கூறினர். போய்ப் பார்த்தபோது, இரண்டு கருங்கற் குதிரைகள் இருப்பது தெரிந்தது. அவற்றுள், ஒன்று கால் உடைபட்டுப் படுத்துக் கிடக்கிறது; மற்றொன்று நான்கு கால் பாய்ச்சலில் பறப்பது போல் தோற்ற மளிக்கிறது. இப்படியாகச் சேந்தமங்கலத்தை ஆராய்ந்தால் வரலாற்றுச் சுவடுகள் பல கிடைக்கும். ஒரு காலத்தில் பேரொளிiசித் திகழ்ந்த கோட்டைக்கு எதிரில் இப்போது குடிசை வீடுகள் இருப்பது இரங்கத்தக்க காட்சியாகும்.

சேந்தமங்கலம் என்னும் பெயரில் பல்வேறு பகுதிகளில் பல ஊர்கள் உள்ளன. அவற்றினின்றும் இந்தச் சேந்த மங்கலத்தை வேறு பிரித்துணர வேண்டியது இன்றியமையாததாகும். ஒரு காலத்தில் சேந்தன் என்னும் பெயருடைய சிற்றரசனுக்கு உரியதாயிருந்ததால் இது சேந்தமங்கலம் என்னும் பெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. அங்ங்னமெனில், எல்லாச் சேந்தமங்கலத்தின் பெயர்க் காரணமும் இதுதானோ?

திருநாவலூர்

ஒரு காலத்தில் முனையரையர் மரபு மன்னர்களின் தலைநகராயிருந்ததும், இப்போது திருநாவலுர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராயிருப்பதும் ஆகிய திருநாவலூர், பண்ணுருட்டிக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. கடலூரிலிருந்து திருக்கோவலூருக்குச் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்கள். பண்ணுருட்டிக்கு மேற்கே 11 கி.மீ. தொலைவில், அந்நெடுஞ்சாலையிலிருந்து தென்புறமாக ஒரு மாவட்டக் குறும்பாதை பிரிவதைக் காணலாம். அங்கிருந்து அப்பாதை வழியே 3 கி.மீ. தொலைவு சென்றால் திருநாவலூரை அடையலாம். இந்த மாவட்டக் குறும்பாதை வடமேற்கு நோக்கி வளைந்து, சென்னை - திருச்சி பெருநாட்டு நெடுஞ் சாலையைக் கடந்து பரிக்கல் வழியாகத் திருவெண்ணெய் நல்லூர் செல்கிறது. சென்னை - திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து அம் மாவட்டக் குறும்பாதையில் கிழக்கு நோக்கி 3 கி.மீ. தொலைவு சென்றால் திருநாவலூரை அடையலாம். இவ்வூர் சேந்தமங்கலத்திற்கு அண்மையில் உள்ளது. முன் சேந்தமங்கலம் என்னும் தலைப்பில் சேந்தமங்கலத்தை அடைவதற்குக் கூறப்பட்டுள்ள வழி விவரங்களைத் திருநாவலூரை அடைவதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில நெடுஞ் சாலைக்கும் பெருநாட்டு நெடுஞ்சாலைக்கும் இடையே திருநாவலூர் வழியாகப் பேருந்து வண்டிகள் செல்கின்றன. பேருந்துப் பாதையை ஒட்டினாற்போலவே ஊரும் சிவன் கோயிலும் உள்ளன. புகைவண்டியில் வருபவர்கள், விழுப்புரம் - திருச்சி குறுக்குப் பாதையில் உள்ள பரிக்கல் நிலையத்தில் இறங்கித் தென்கிழக்காக 3 கி.மீ. சென்றால் நாவலூரை அடையலாம்.

பண்டு நாவல் மரம் நிறைந்திருந்ததால் நாவலூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், பேச்சு வழக்கில் திருநாம நல்லூர் என்னும் பெயரே பெருவாரியாக அடிபடுகிறது.

சைவ உலகில் திருநாவலூர் மிகவும் இன்றியமையாத இடத்தைப் பெற்றுள்ளது. சைவ நாயன்மார் அறுபத்து மூவருள் நால்வர் பிறந்து வாழ்ந்த ஊர் திருநாவலூர். அந் நால்வர்: சுந்தரமூர்த்தி நாயனார், அந்தச் சுந்தரரின் தந்தை சடைய நாயனார், தாய் இசை ஞானியார், சுந்தரரை எடுத்து வளர்த்தவரும் அப் பகுதியை ஆண்டவருமாகிய நரசிங்க முனையரைய நாயனார் என்பவராவர். நாவலூரில் பிறந்ததால் 'நாவலூரர்’ என அழைக்கப்படும் சுந்தரர் தமது திருநாவலூர்த் தேவாரப் பதிகத்தின் இறுதிப் பாடலில்,

"நாதனுக்கு ஊர்நமக்கு ஊர்நரசிங்க முனையரையன்

ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர்..."

எனக் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

நரசிங்க முனையரையர் திருநாவலூரைத் தலைநகராகக் கொண்டு திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட வரலாறும், அதற்கொரு சான்றாகத் திருநாவலூர்க் கோயிலுக்கு எதிரே ‘கச்சேரி மேடு’ இருப்பதும், நரசிங்க முனையரையர் நாவலூரில் செய்த சிவப்பணியும் இன்ன பிறவும், இந்நூலில் ‘கெடிலக்கரை அரசுகள்’ என்னும் தலைப்பில் ‘நரசிங்க முனையரையர்’ என்னும் பிரிவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. முனையரையர் மரபு மன்னர்கள் நரசிங்க முனையரையர் - இராமன் முனையரையர் என மாறி மாறிப் பட்டப் பெயர்கள் வைத்துக் கொண்டார்கள் என்பதற்குச் சான்று, திருநாவலூர் வட்டாரத்து மக்கள் நரசிங்கன், இராமன் என்னும் பெயர்களை மிகுதியாக வைத்துக் கொண்டிருப்பதாகும். திருநாவலூரோடு நரசிங்க முனையரையர்க்கு இருந்த தொடர்பினை, திருநாவலூர்க் கோயிலில் அவருக்குச் சிலை இருப்பதைக் கொண்டும் அறியலாம். இச்சிலை மிகவும் அழகியது. இதன் படத்தை இந்நூலில் ‘கல்வி - கலைத்துறை” என்னும் தலைப்பில் காணலாம்.

திருநாவலூர்ச் சிவன் கோயிலின் பெயர்கள்: பக்த சனேசுவரர் கோயில், திருத்தொண்டீச்சுரம் என்பன. இறைவன் பெயர்: நாவலேசுரர்; அம்மன் பெயர், சுந்தரநாயகி, மனோன்மணி, மரம்; நாவல். இக் கோயில் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்றது, அருணகிரியாரின் திருப்புகழும் உண்டு. நாவுக்கரசர் இவ்வூரின் மேல் தனிப் பதிகம் பாடாவிடினும், தமது தேவாரத்தில் - பூவனூர்த் திருக்குறுந்தொகை எட்டாம் பாடலில்,

“'பூவனூர் தண்புறம் பயம் பூம்பொழில்
நாவலூர் நள்ளாறொடு நன்னிலம்
கோவ லூர்குட வாயில் கொடுமுடி

மூவ லூருமுக் கண்ணனூர் காண்மினே’’
எனத் திருநாவலூரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். இவ்வூர் மேல் இராசப்ப நாவலர் ஒரு புராணம் பாடியுள்ளார். இவ்வூர்க் கோயிலின் வெளித் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:


கிழக்கு நோக்கியுள்ள இக் கோபுர வாயில் கோயிலின் முதற்பெரு வாயிலாகும். இக் கோபுரத்திற்கு எதிரேயுள்ள மேட்டுப் பகுதி ‘கச்சேரி மேடு ‘ எனப்படுகிறது. பத்தாம் நூற்றாண்டின் நடுவில் (கி.பி. 935), முதல் பராந்தக சோழன் ஆண்டு கொண்டிருந்தபோதே அவன் மூத்த மகன் இராசாதித்த சோழன் திருநாவலூர்க் கோயிலின் உட்பகுதியைக் கருங்கல்லால் கட்டுவித்தான். அவனது திருப்பணியைப் பெற்றதனால் இக் கோயிலுக்கு ‘இராசாதித் தேசுரம்’ என்னும் பெயரும் சூட்டப்பட்டது. அன்று திருநாவலூர் இராசாதித்தனது மேற்பார்வையில் இருந்ததால் ‘இராசாதித்த புரம்’ எனவும் அழைக்கப்பட்டது. இராசாதித்தனது திருப்பணியால் உருவான கோயிலின் உள் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:

இராசாதித்தன் 949ஆம் ஆண்டில், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் கிருட்ணதேவனைத் தக்கோலம் என்னுமிடத்தில் பொருது முறியடித்தான். ஆனால், முறியடித்த அன்றிரவே, இராட்டிரகூட மன்னனின் மைத்துனனாகிய கங்க குலத்துப் பூதுகன் என்னும் பூதராசன், சூழ்ச்சியினால் இராசாதித்தனைக் கொன்று விட்டான். இந்தச் செய்தி [3] கல்வெட்டுகளால் அறியப்படுகிறது. இராசாதித்தனுடன் தக்கோலம் வரை போர் புரியச் சென்ற படை மறவர்களும் - தலைவர்களும் மன்னனையிழந்து திரும்பி வருகையில் இராசாதித்தனால் கட்டப்பட்ட திருநாவலூர்க் கோயிலில் இறந்துபோன அவன் பெயரால் பல திருவிளக்குகள் ஏற்றுவதற்கு அறக்கட்டளைகள் ஏற்படுத்திச் சென்றதாகப் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்தோ! மன்னனையிழந்த மாமறவர்கள் மனம் நெகிழ்ந்துருகி மன்னனது உயிர் நற்பேறு பெறவேண்டுமென அவன் பெயரால் திருவிளக்குகள் ஏற்றியிருப்பதாகத் தெரிகிறதே!

திருநாவலூர்ப் பெரிய கோயிலுக்குள் சிவன் கோயிலுக்கும் அம்மன் கோயிலுக்கும் நடுவில் வரதராசப் பெருமாள் கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய கோயிலின் தென்கிழக்கு மூலையில் சுந்தரர் - பரவையார் - சங்கிலியார் ஆகியோர்க்கு ஒரு தனிக்கோயில் உள்ளது. கோயிலிலுள்ள இம்மூவரின் உலோக உருவச் சிலைகள் மிக மிக அழகானவை. இங்கே சுந்தரர் பிறந்த நாள் (ஆவணி உத்திரம்) விழாவும், வீடுபேறுற்ற நாள் (ஆடி - சுவாதி) விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. கோயிலின் வடபால் சுந்தரர் பிறந்த மனையில் அவரது நினைவுக் குறியாக ஒரு மாளிகை கட்டப்பட்டு வருகிறது. அதன் படத்தைக் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - சுந்தரர்’ என்னும் தலைப்பில் காணலாம்.

திருநாவலூர்க் கோயிலில் பல்லவர் காலச் சிற்பங்களும் பலர் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. தட்சணாமூர்த்தி இங்கே.நின்ற கோலத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் வட்டம்

கடலூர் வட்டம், தென்னார்க்காடு மாவட்டத்துக் கடலோர வட்டங்கட்கு நட்ட நடுவே உள்ளது. திருக்கோவலூர் வட்டத்திலிருந்து இவ் வட்டத்திற்குள் புகும் கெடிலம், இவ் வட்டத்தின் வடபுறமாகக் கிழக்கு நோக்கி ஒடிக் கடலூருக்கு அருகில் கடலில் கலக்கிறது. இதன் பரப்பளவு - 1060 சதுர கி.மீ, மக்கள் தொகை 5,11,400. தலைநகர் கடலூர் (கூடலூர்). இவ் வட்டம் ஆற்று வளமும், கடல் வளமும், நிலக்கரி வளமும் இவை காரணமாகத் தொழில் - வாணிக வளமும், உடையது. பெண்ணையாறு ஓடுவதன்றி, பெண்ணையாற்றிலிருந்து பிரியும் மலட்டாறு கெடிலத்தோடு கலப்பதும் இவ் வட்டத்தில்தான் கேப்பர் மலையும் முந்திரிக்காடும் இவ் வட்டத்தில் உள்ளன.

கடலூர் வட்டத்தில், பாடல் பெற்ற பல பதிகளும், அப்பர் பிறந்த திருவாமூரும், சிவப்பிரகாச சுவாமிகள் அடக்கம் செய்யப்பட்ட நல்லாற்றுரும் இராமலிங்க அடிகளார் அருட்பணி புரிந்த வடலூரும், ஞானியாரடிகள் வாழ்ந்த திருப்பாதிரிப் புலியூரும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகிய கடலூரும் ஒரு துறைமுகமும் ஒரு புகைவண்டி நிலையச் சந்திப்புமுடைய கூடலூரும், சர்க்கரை ஆலை உள்ள நெல்லிக் குப்பமும், நிலக்கரி வளமும், இடையிடையே புதுச்சேரி மாநிலப் பகுதிகளும், இன்ன பிறவும் இருப்பது இவ் வட்டத்திற்கு மிக்க பெருமையாகும். அப்பர் சமணராக மாறி வாழ்ந்த பாடலிபுத்திரமும் (திருப்பாதிரிப்புலியூரை யொட்டிய பகுதி) ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் பெருந் தலைவலி தந்த கடற்கரையிலுள்ள செயின்ட் டேவிட் கோட்டையும் இவ் வட்டத்தின் வரலாற்று இன்றியமையாமைக்குத் தக்க சான்றுகளாம். இவ் வட்டம் இப்போது நான்கு ஊராட்சி மன்ற ஒன்றியங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது.

இனி, கடலூர் வட்டத்தில் கெடிலக்கரையை யடுத்துள்ள இன்றியமையா இடங்களைப் பற்றிய விவரங்கள் வருமாறு:

திருவாமூர்

திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்த பெருஞ் சிறப்பிற்குரிய திருவாமூர், கடலூருக்க மேற்கே 35 கி.மீ. தொலைவில் பண்ணுருட்டிக்கு மேற்கே 9 கி.மீ தொலைவில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. இவ்வூருக்கு மேற்கே சிறிது தொலைவில் மலட்டாறு கெடிலத்தின் வடகரையில் கெடிலத்தோடு கலக்கிறது; சிறிது தொலைவில் ‘நரியின் ஒடை’ என்னும் பெரிய ஒடை தென்கரையில் கெடிலத்தோடு கலக்கிறது. திருவாமூரை அடைய வேண்டுமெனில், கடலூர் - திருக்கோவலூர் மாநில நெடுஞ் சாலையில் கடலூருக்கு மேற்கே 34 ஆவது கி. மீட்டரில் பண்ணுருட்டிக்கு மேற்கே 8 ஆவது கி.மீட்டரில் இறங்க வேண்டும். பின்னர், அவ்விடத்திலிருந்து தெற்கே ஒரு கி.மீ. தொலைவு அளவுக்கு மண் பாதை வழியே சென்றால் திருவாமூரை அடையலாம். மாநில நெடுஞ்சாலையில் திருவாமூரை நோக்கி திருவாமூர்’ என்னும் கைகாட்டி நீட்டிக் கொண்டிருக்கும் நெடுஞ்சாலையிலிருந்து திருவாமூருக்குச் செல்லும் மண் பாதை, சிற்றுந்து வண்டி (பிளழ்சர் கார்) செல்லும் அளவுக்கு ஒரளவு வசதியாகவே இருக்கிறது.

திருவாமூர் (திரு+ஆம்+ஊர்) என்றால், எல்லா வளங்களும் நலங்களும் ஆகின்ற ஊர் - வளர்ச்சி பெறுகின்ற ஊர் என்று ஒருவகைப் பொருள் சொல்லப்படுகிறது. அதற்கேற்றாற் போலவே இவ்வூர் நீர் வளமும் நிலவளமும் செறிந்து திகழ்கிறது. அப்பர் அடிகளின் காலத்தைத் தொடர்ந்து அறங்கள் பல நிகழ்ந்த ஊர் அல்லவா இது? இவ்வூர் பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தில் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வூர்ச் சிவன் கோயிலின் பெயர் பசுபதீச்சுரம், சிவன் பெயர் பசுபதீசுரர்; அம்மன் பெயர்: திரிபுர சுந்தரி, சில ஊர்க் கோயில்களில் சிவன் ‘திருமுன்பு ‘(சந்நிதி) கிழக்கு நோக்கியும், அம்மன் ‘திருமுன்பு’ தெற்கு நோக்கியும் இருக்கும்; அவற்றுள் இவ்வூரும் ஒன்று. கோயில் சிறியது. இவ்வூரில் பிறந்த நாவுக்கரசர் இவ்வூர் இறைவன்மேல் தேவாரப் பதிகம் பாடித்தான் இருக்க வேண்டும். ஆனால் அது கிடைக்கவில்லை. அவருடைய பதிகங்கள் சில கிடைக்கவில்லை என்னும் செய்தி வேறிடத்திலும் கூறப்பட்டுள்ளது. இவ்வூர் முருகன்மேல் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ளார். பசுபதீசுரர் கோயிலைப் பின்வரும் படத்தல் காணலாம்:

படத்தில் தெரியும் வாயில் கோயிலின் மேற்குப் புறவாயில், கோயிலின் மேல் திசையில் திருவாமூர் இருத்தலாலும், மற்ற மூன்று திசைகளிலும் குளமும் வயலும் சூழ்ந்திருத்தலாலும், மேல்திசை வாயிலே பயன்படுத்தப்படுகிறது இக் கோயிலுக்குக் கோபுரம் ஒன்றுமில்லை. கோயிலின் தென்பால் ஒடை போன்ற பெரிய குளம் இருக்கிறது. கோயிலுக்குள் உள்ள கிணற்றில் தண்ணிர் தரை மட்டத்திற்கு உயர்ந்திருக்கிறது (நாங்கள் பார்த்தது: 4-1-1967 மார்கழித் திங்களில்). கோயில் சிறியதாயிருப்பினும் நன்கு அழகுபடுத்தப்பட்டுக் கவர்ச்சியாயிருக்கிறது. கருவறையில் இறைவன் திருமுன்புக்கு நேரே கிழக்குப் புறமாக வாயில் இல்லை; தென்புறமே வாயில் உள்ளது.

திருவாமூர் கோயிலால் சிறப்புப் பெற்றது என்று சொல்வதனினும், திலகவதியாரும் திருநாவுக்கரசரும் பிறந்ததாலேயே சிறப்புற்றது என்று சொல்வதே பொருந்தும். நாவுக்கரசர் பிறந்த மனையில் அவருக்குத் தனிக்கோயில் கட்டப்பட்டிருக்கும் செய்தியினையும் அக் கோயிலின் படத்தையும் அது சார்பான விவரங்களையும் இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - திருநாவுக்கரசர்’ என்னும் தலைப்பில் காணலாம். திருவாமூரில் அப்பர் பிறந்த பங்குனி உரோகிணி நாளிலும் அவர் வீடுபேறுற்ற சித்திரைச் சதய நாளிலும் சிறப்பாக விழாக்கள் நடைபெறுகின்றன. திங்கள்தோறும் வரும் சதயத்திலும் விழா உண்டு. திருமணம் உறுதி செய்த பின்னர்த் திருமணம் நிகழ்வதற்குள்ளாகவே மணமகள் திலகவதியார் மணமகன் கலிப்பகையாரைப் போரில் இழந்துவிட்டதால், அவர் மரபினராகிய வேளாளர்கள், திருமணம் உறுதி செய்த நாளிலேயே திருமணமும் நடத்திவிடுவதைத் திருவாமூர் வட்டாரத்தில் காணலாம்.

திருவாமூர்க் கோயிலில் கல்வெட்டுகளும் உள்ளன. இங்குள்ள முதற் குலோத்துங்க சோழன் காலத்துக் கல்வெட்டு ஒன்று குறிப்பிடத்தக்கது. அக் கல்வெட்டு முதற் குலோத்துங்க சோழனது 21ஆம் ஆட்சியாண்டில் (கி.பி. 1090) வெட்டப்பட்டது. திருவாமூர் மக்கள் கோயிலில் திருநாவுக்கரசருக்குப் பூசனை தொடர்ந்து நடைபெறுவதற்காக நிலம் விற்றுக் கொடுத்ததைப் பற்றி அக் கல்வெட்டு பேசுகிறது. அதன் இடையேயுள்ள,

"கங்கைகொண்ட சோழவள நாட்டுத் திருமுனைப்

பாடிக்கீழாமூர் நாட்டுத்திருவாமூர் ஊரோம்.’’

என்னும் பகுதி மிகவும் குறிப்பிடத்தக்கது. இப் பகுதியால், திருவாமூர் இருக்கும் பேரரசுப் பெருநாட்டின் பெயர் ‘கங்கை கொண்ட சோழவள நாடு’ என்பதும், அதன் உட்பிரிவு ‘திருமுனைப்பாடிக் கீழாமூர் நாடு’ என்பதும் பெறப்படும். இங்கே ‘கீழாமூர்’ என்பதைப் பார்க்கும் போது, ‘மேலாமூர்’ ஒன்று உண்டு என்பதும் புலனாகிறது. பொதுவாகத் திருக் கோவலூர் வட்டமும் கடலூர் வட்டமும் திருமுனைப்பாடி நாடு என்று சொல்லப்படும். இவற்றுள், மேற்கே உள்ள திருக்கோவலூர் வட்டத்தில் ஒர் ஆமூர் இருக்கிறது; இது மேலாமூராகக் கருதப்பட்டிருக்க வேண்டும். அடுத்துக் கிழக்கேயுள்ள கடலூர் வட்டத்தில் ஒர் ஆமூர் இருக்கிறது; இதுதான் அப்பர் பிறந்த ஆமூர்; இதைக் கீழாமூராகக் கொள்ள வேண்டும். எனவே, திருமுனைப்பாடி நாட்டில் கீழாமூர் உள்ள பகுதி, ‘திருமுனைப்பாடிக் கீழாமூர் நாடு’ என அழைக்கப் பட்டிருக்க வேண்டும். இதைச் சேர்ந்தது அப்பர் பிறந்த திருவாமூர் என்பது கல்வெட்டுப் பகுதியால் உய்த்துணரப் படுகிறது. இந்தக் கல்வெட்டு, திருவாமூர்ச் சிவன் கோயில் கருவறையின் மேற்குச் சுவரில் தொடங்கித் தெற்குச் சுவர்ப்பக்கம் சென்று முடிவதைக் காணலாம்.

திருத்துறையூர்

திருத்துறையூர், விழுப்புரம் - கூடலூர் புகைவண்டிப் பாதையிலுள்ளது. திருத்துறையூரில் புகைவண்டி நிலையம் இருக்கிறது. ஊருக்கும் நிலையத்திற்கும் 3 கி.மீ. இடை வெளி இருக்கும். பண்ணுருட்டிக்கு வடக்கே 7 கி.மீ. தொலைவில் இவ்வூர் இருக்கிறது. திருத்துறையூர் பெண்ணையாற்றின் தென்கரைக்குச் சில கி.மீ. தொலைவிலிருப்பினும், கெடிலத்தின் வடகரைக்கு 8 கி.மீ. தொலைவில் இருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இவ்வூர் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்ற பதியாகும். சிவன் பெயர் : பசுபதீசுரர் : அம்மன் பெயர்: பூங்கோதை நாயகி. இங்கே சுந்தரர் இறைவனிடம் தவநெறி வேண்டியதாகப் பெரிய புராணம் கூறுகிறது. இரண்டாம் சந்தானாசாரியாரும் சைவசித்தாந்த நூல்களுள் சிறந்ததான சிவஞான சித்தியாரை இயற்றியவரும் ஆகிய அருணந்தி சிவாசாரியார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடிந்த ஊர் இது. சிவன் கோயிலுக்குள் அருணந்தி சிவாசாரியாருக்கு ஒரு சிறு கோயில் உண்டு. இங்கும் பல கல்வெட்டுகள் உள்ளன. இவ்வூருக்கு அருணகிரிநாதரின் திருப்புகழ் உண்டு.

பண்ணுருட்டி

பண்ணுருட்டி, கடலூருக்கு மேற்கே 25 கி.மீ. தொலைவிலும் விழுப்புரத்திற்குத் தென்கிழக்கே 20 கி.மீ. தொலைவிலும் - நெய்வேலிக்கு வடக்கே 26 கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. ஆற்றுக்கும் ஊருக்கும் ஒரு கி.மீ. இடைவெளி இருக்கும். கடலூரிலிருந்து திருக்கோவலூர்ப் பக்கம் செல்லும் மாநில (State Highways) நெடுஞ்சாலையும், மாவட்ட (Major District Road) நெடும்பாதையும் பண்ணுருட்டி வழியாகவே செல்கின்றன. பண்ணுருட்டியிலிருந்து தெற்கே நெய்வேலிப் பக்கம் ஒரு மாவட்ட நெடும்பாதையும், வடக்கே விக்கிரவாண்டி பக்கம் ஒரு மாவட்டக் குறும்பாதையும் செல்கின்றன. விழுப்புரம் - கடலூர்ப் புகைவண்டிப் பாதையும் பண்ணுருட்டி வழியாகத்தான் செல்கிறது; பண்ணுருட்டியில் புகைவண்டி நிலையம் உண்டு. இவ்வகையில் பண்ணுருட்டி போக்குவரவு நெருக்கடியுள்ள ஒரு நகரமாகும். தொழில் வாணிகச் சிறப்பேயன்றித் திருவதிகை மிக அண்மையில் இருப்பதும் இவ்வூருக்குத் தனிப் பெருமையாகும். பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகராகிய பண்ணுருட்டியின் மக்கள் தொகை: 28,760. இவ்வூர் இப்போது நகராட்சியாகியுள்ளது.

பண் உருட்டி இசைபாடும் பாணர்கள் வாழ்ந்த ஊர் ஆதலின் பண்ணுருட்டி என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

செங்கல் சூளை, மண்பாண்டத் தொழில், பொம்மைகள் செய்தல், இசைக் கருவியாகிய கடம் செய்தல், பாக்குகளுக்குச் சாயம் ஏற்றுதல், ஆலைகளில் மணிலா எண்ணெய் ஆடுதல், முந்திரி எண்ணெய் ஆடுதல் முதலிய தொழில்களுக்குப் பண்ணுருட்டி பேர்போனது. மற்றும், முந்திரி, பலாப்பழம், மாம்பழம் ஆகியவற்றிற்கும் பண்ணுருட்டி பேர்போனது. பண்ணுருட்டிக்குப் பக்கத்தில் காடாம்புலியூர்ப் பகுதியில் கிடைக்கும் வெள்ளை மண் சிமிட்டி செய்ய டால்மியாபுரம் அனுப்பப்படுகிறது.

பண்ணுருட்டி ஒரு தொழில் நிலையமாயிருப்பதையொட்டி ஒரு பெரிய வணிக நிலையமாகவும் விளங்குகிறது. வியாழன் தோறும் இங்கே பெரிய சந்தை கூடுகிறது. பாக்கு, புகையிலை, முந்திரிக் கொட்டை, வெல்லம் முதலியவற்றின் வாணிகம் இங்கே மிகுதி. பண்ணுருட்டிப் பலாப் பழமும் பண்ணுருட்டித் தலையாட்டிப் பொம்மையும் நாடறிந்தவை.

இத்துணை, தொழில் - வாணிக வளமுடைய பண்ணுருட்டியில் உயர்நிலைப் பள்ளி, தொழிற் பள்ளி, சிறு நீதிமன்றம், சிறைச்சாலை, துணைத் தாசில்தார் அலுவலகம் முதலியனவும் உள்ளன. நெய்வேலி நிலக்கரிப் பகுதி பண்ணுருட்டியை நெருங்கி வந்து கொண்டிருப்பதால் முன்னிலும் இவ்வூர் இப்போது மிகவும் இன்றியமையா இடம் பெற்றுள்ளது. இவ்வூர்க்கு அருகே கெடிலத்தில் பாலம் கட்டியிருப்பது நெய்வேலித் திட்டத்திற்கு மிகவும் உதவியாயிருக்கிறது.

இவ்வூரை யொட்டி மேற்கேயுள்ள புதுப்பேட்டை - சித்தவட மடத்தில் தங்கியிருந்த சுந்தரமூர்த்தி நாயனாரின் முடிமேல் சிவன் தன் திருவடிகளைச் சூட்டியதாகச் சொல்லப்படும் [4] பெரிய புராண வரலாறு குறிப்பிடத்தக்கது.

திருவதிகை

திருவதிகை, பண்ணுருட்டி நகருக்குக் கிழக்கே பண்ணுருட்டி புகைவண்டி நிலையத்திற்குத் தென்கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. திருவதிகையின் மேற்கு எல்லையில் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட (Major District Road) நெடும் பாதையும் கடலூர் திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலையும் ஒன்று கூடி, பண்ணுருட்டியின் மேற்கு எல்லையில் மீண்டும் தனித்தனியே பிரிந்துவிடுகின்றன. கடலூருக்கு மேற்கே 24 கி.மீ. தொலைவில் திருவதிகை இருக்கிறது. பண்ணுருட்டி ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் திருவதிகையில்தான் இருக்கிறது.

திலகவதியாரும் திருநாவுக்கரசரும் திருக்தொண்டுபுரிந்த இடம் திருவதிகை, பாடலிபுத்திரத்தில் சமணத் தலைவராய் விளங்கிய நாவுக்கரசர் மீண்டும் வந்து சைவராக மாறி, ‘கூற்றாயினவாறு’ என்று தொடங்கும் முதல் தேவாரப் பதிகம் பாடிச் சூலை நோய் நீங்கப் பெற்ற இடம் திருவதிகை; நாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்ட மகேந்திரவர்ம பல்லவன், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக் கோயிலை இடித்துக் கொண்டுவந்து ‘குணபரேச்சரம்’ என்னும் பெயரில் ஒரு சைவக்கோயில் கட்டிய இடம் திருவதிகை, சிவபெருமான் தனது புன்னகையால் முப்புர அரக்கர்களை எரித்ததாகச் சொல்லப்படும் இடம் திருவதிகை, வீரட்டானங்களுள் ஒன்றாகப் போற்றப்படும் இடம் திருவதிகை தமிழகத்திலேயே முதல் முதலாகத் தேவாரப் பாடல் பெற்ற பெருமைக்கு உரிய பதி திருவதிகை, திருநாவுக்கரசரின் தேவாரப் பதிகங்கள் பதினாறும், திருஞானசம்பந்தரின் பதிகம் ஒன்றும், சுந்தரரின் பதிகம் ஒன்றும், அருணகிரியாரின் திருப்புகழ் இரண்டும், பிற்காலப் புராணம் ஒன்றும், மான்மியம் ஒன்றும், உலா ஒன்றும், தொண்ணுற்றாறு கல்வெட்டுகளும் பெற்றுத் திகழும் இடம் திருவதிகை, சிறந்த சைவசித்தாந்த நூலாகிய ‘உண்மை விளக்கம்’ இயற்றிய ‘திருவதிகை மனவாசகங் கடந்தார்’ என்னும் பெரியார் பிறந்த இடம் திருவதிகை அருகிலுள்ள அணையால் செழிப்புற்றுத் திகழும் இடம் திருவதிகை.

வீரட்டானம்

திருவதிகைக் கோயிலின் பெயர் வீரட்டானம்; இறைவன் பெயர் வீரட்டானேசுரர்; இறைவி பெயர் திரிபுர சுந்தரி, பெரியநாயகி. மரம் கொன்றை கருவறையிலுள்ள இலிங்கம் பதினாறு பட்டைகள் கொண்டது. இலிங்கத்திற்குப் பின்னால் சுவரில் இறைவன் உருவமும் இறைவி உருவமும் உள்ளன. சுதையால் செய்யப் பெற்ற இந்த அம்மையப்பர் உருவத் தோற்றம் மிகவும் கவர்ச்சியாயிருக்கிறது. இந்த உருவங்கள் மேல் நோக்கிற்குப் புலப்படா விளக்கொளியை மிகுத்துக் கூர்ந்து நோக்கினாலேயே புலப்படும். திருவதிகையில் சிவபெருமான் உமையம்மையைத் திருமணம் செய்து கொண்டாராம்; அதன் அறிகுறியாகத்தான், சிவலிங்கத்திற்குப் பின்னால் அம்மையப்பர் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவாம்; இறைவனுக்கும் இறைவிக்கும் திருமணம் நடந்ததாகச் சொல்லப்படும் திருப்பதிகளில் இப்படி அமைந்திருப்பது மரபாம். தேவ தேவியின் திருமணம் நடைபெற்ற இடம் திருவதிகையாதலால், வெளியூர் மக்கள் பலர் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டு செல்கின்றனர். இங்கே திருமணம் செய்து கொண்டால் நன்கு வாழலாம் என்பது ஒரு தெய்வ நம்பிக்கை. திருவதிகையில் இறைவி தவமிருக்க, இறைவன் இங்கு வந்து திருமணம் செய்து கொண்டு போனதால், இறைவியின் சிறப்பை அறிவிக்குமுகத்தான், திருவதிகைப் பெரிய கோயிலில் சிவன் கோயிலுக்கு வலப்புறம் அம்மன் கோயில் அமைக்கப் பட்டிருக்கிறது; மற்ற ஊர்களில் இறைவன் கோயிலின் இடப் புறத்திலேயே இறைவி கோயில் இருக்கும். இத்துணை சிறப்பிற்குரிய திருவதிகைக் கோயிலின் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:

இது கோயிலின் உள் தோற்றம். இந்தப் படம், கோயிலுக்கு உள்ளே வடமேற்கு மூலையில் இருந்து கொண்டு, வெளிக் கோபுரம், இடைக் கோபுரம், கருவறை விமானம் ஆகிய மூன்றும் தெரியும்படி எடுத்தது. படத்தில் நாம் பார்ப்பது, கோபுரங்களின் மேற்குப் புற அஃதாவது பின்புறத்

தோற்றத்தைத்தான் கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. படத்தில் நமக்கு இடக்கைப் புறமாகத் தொலைவில் தெரிவது கோயிலின் வெளிக் கோபுரம். அஃதாவது, முதற் பெருவாயிற் கோபுரமாகும். படத்தில் நடுவில் தெரிவது, கோயிலின் நடுவிலுள்ள இரண்டாவது கோபுரமாகும். படத்தில் நமக்கு வலக்கைப் புறமாகப் பாதி தெரிந்தும் தெரியாமலுமாக இருப்பது, கருவறையின் மேலுள்ள மிக அழகிய விமானமாகும்.

கோயிலின் முதல் கோபுரம் நாயக்க அரசரால் பதினாறாம் நூற்றாண்டளவில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது; அதற்குச் சான்று, கோபுர வாயிலில் நாயக்க மன்னரின் உருவச் சிற்பம் இருப்பதாகும். இரண்டாவது கோபுரம் பாண்டிய வேந்தரால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது; சான்று, அக் கோபுர வாயிலில் ‘மீன் இலச்சினை அமைக்கப்பட்டிருப்பதாகும். இந்தக் கோபுரம் கட்டிய பாண்டியன், கி.பி. 1251 - 1270 கால அளவில் தமிழ் நாட்டின் பெரும்பகுதியை ஆண்ட சடையவர்மன் சுந்தர பாண்டியனாகத்தான் இருக்க வேண்டும். எனவே, இரண்டாம் கோபுரம் கட்டப்பட்ட காலம், பதின்மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்பது புலனாகும்.

இந்த அடிப்படையில் பார்த்தால், திருவதிகைக் கோயில் பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது கோபுரமாகிய உள் கோபுரம் கட்டப்பட்டிருக்க, பதினாறாம் நூற்றாண்டு வரையும் வெளிக் கோபுரம் (முதல் கோபுரம்) இல்லாதிருந்தது என்று கொள்ள வேண்டியதாயுள்ளது. உள் கோபுரம் இல்லாவிடினும் வெளிக் கோபுரம் கட்டுவதுதான் எங்கும் வழக்கம். பெரும்பாலான ஊர்களில் வெளிக் கோபுரம் மட்டுமே இருக்கக் காணலாம். எனவே, திருவதிகைக் கோயிலின் முதற் கோபுரம் நாயக்க மன்னரால் பதினாறாம் நூற்றாண்டில்தான் முதல், முதலாகக் கட்டப்பட்டது என்னும் கருத்தை முழு மனத்துடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிக் கோபுரமும் முற்காலத்திலேயே கட்டப்பட்டிருந்து போர்க் காலத்தில் அழிந்தோ - சிதைந்தோ போயிருக்கலாம்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் கோப்பெருஞ்சிங்கனது ஆட்சியின்கீழ்த் திருவதிகை இருந்தபோது, போசள மன்னன் வீரநரசிம்ம தேவன், கோப்பெருஞ் சிங்கனால் சிறை செய்யப்பட்ட மூன்றாம் இராசராசச் சோழனுக்குப் பரிந்துகொண்டு திருவதிகை முதலிய இடங்களைக் கடுமையாய்த் தாக்கி அழித்ததாகத் திருவயிந்திரபுரத்திலுள்ள கல்வெட்டொன்று கூறும் செய்தி ஈண்டு நினைவு கூரத்தக்கது. இப்படி இன்னும் எத்தனையோ அழிவுகள் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு அழிந்துபோன கோபுரத்தைப் பதினாறாம் நூற்றாண்டில் நாயக்க மன்னர் புதுப்பித்தோ - திருத்தியோ கட்டியிருக்கலாம்; அதனால், அவரது உருவச் சிற்பம் அக் கோபுர வாயிலில் இடம் பெற்றிருக்கலாம். இந்த வெளிக் கோபுரத்தின் கிழக்குப் புறத் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:

இந்த முதல் கோபுரம் போலவே இரண்டாவது கோபுரமும் சுந்தர பாண்டியன் காலத்திற்கு முன்னமேயே கட்டப்பட்டிருக்க, சுந்தர பாண்டியன் தன் காலத்தில் அதனைப் புதுப்பித்தோ திருத்தியோ கட்டியிருக்கலாம். இரண்டு கோபுரமுமே பாண்டியப் பேரரசாலோ அல்லது அவர்கட்கு முன் ஆண்ட சோழப் பேரரசாலோ அல்லது அவர்கட்கும் முன் ஆண்ட பல்லவப் பேரரசாலோ கட்டப்பட்டும் இருக்கலாம்; பின்னால் - பின்னால் வந்தவர்கள் திருத்தியும் புதுப்பித்தும் திருப்பணிகள் செய்து தங்கள் நினைவுக் குறியை நிறுத்திச் சென்றிருக்கலாம். பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுந்தர பாண்டியனால் கட்டப் பட்டதாகக் கருதப்படும் இரண்டாம் கோபுர வாயிலில், கி.பி. 730 - 731ஆம் ஆண்டில் அரசாண்ட இரண்டாம் பரமேசுரவர்மப் பல்லவ மன்னனின் கல்வெட்டு இருக்கிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஆனால், பரமேசுரவர்மப் பல்லவன் காலத்தில் கோபுரமின்றி வாயில் மட்டுங்கூட இருந்திருக்கலாம்! இரண்டாம் கோபுரத்தின் காலம் எதுவாயிருப்பினும், முதல் கோபுரம் பதினாறாம் நூற்றாண்டுக்கு முன்பே கட்டப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில், திருவதிகைக் கோயில் மிகவும் பழைமையானது; பல்லவர், சோழர், பாண்டியர் முதலியோரின் கல்வெட்டுகள் இதில் உள்ளன; அப்பர் வாழ்ந்த ஏழாம் நூற்றாண்டிலேயே மிகவும் புகழ்பெற்றிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக, கோயில் கருவறைமேல் உள்ள விமானம் பல்லவர் காலத்து வேலைப்பாடு உடையதாகத் தெரிகிறது; ஆதலின், அது பல்லவ மன்னரால் அமைக்கப்பட்டது என்று கொள்ளலாம். இதற்குத் தக்க சான்று உள்ளது. இந்த விமானம் நிருபதுங்கவர்மப் பல்லவ மன்னனது பதினாறாம் ஆட்சியாண்டில் அஃதாவது, கி.பி. 870 ஆம் ஆண்டளவில் - திருத்திப் புதுப்பிக்கப்பட்டதாக, கருவறையின் முன் மண்டப வாயில் கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விமானத்தின் அடிப்பகுதி கருங்கல்லால் ஆனது. கருங்கல் நிலையின் மேல் விமானம் தேர் போன்ற தோற்றத்தில் செங்கல்லாலும் சுதையாலும் கட்டப்பட்டுள்ளது. விமானத்தைச் சுற்றி அடி தொட்டு முடிவரை சுதையாலான உருவங்கள் செறிந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். இத்தகைய சுதை வேலைப் பாட்டை, இதேபோல் பல்லவர் படைப்பாகிய காஞ்சிபுரத்துக் கைலாசநாதர் கோயிலில் கண்டுகளிக்கலாம். இந்த விமானத்தின் மிக அழகிய தோற்றத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:

இந்த விமானத்தின் உச்சி நிழல் நிலத்தில் விழுவதில்லை என்று சொல்லப்படுகிறது. அடிப்படை அகன்றிருத்தலின் நிழல் அதற்குள்ளேயே அடங்கிவிடுகின்றது போலும். கோயிலின் இரண்டாம் திருச்சுற்றில் - விமானத்தின் மேற்கே பல இலிங்கங்கள், உள்ளன; எல்லாம் பல்லவர் காலத்தவை; அவற்றுள், ஐந்து முகங்களையுடைய இலிங்கம் ஒன்றுள்ளது; ‘முகலிங்கம்’ என அழைக்கப்படும் இது காணத்தக்கது. கோயிலில் சிற்பச் சிறப்பிற்குக் குறைவில்லை.

வீரட்டானர் கோயிலுக்குள், திலகவதியார்க்கும் திருநாவுக் கரசர்க்கும் தனித்தனிச் சிறு கோயில்கள் உள்ளன. வெளிக் கோபுரத்தைத் தாண்டிக் கோயிலுக்குள் நுழைந்தவுடனேயே வலக்கைப் புறமாக ஒரு சமணச் சிலை தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் இருப்பதைக் காணலாம். அதன் தோற்றத்தைப் பின்வரும் படத்தில் பார்க்கலாம்:

இந்தச் சிலை, ஒரு மன்னனது தோற்றத்தையும் சமண சமயக் குறிகளையும் குறிக்கிறது; எனவே, அப்பர் காலத்தில் சமண சமயத்தைத் தழுவியிருந்த பல்லவ மன்னனைக் குறிக்கும் சிலையாக இருக்கலாம் என உய்த்துணரப்படுகிறது. இதற்குச் சான்று பகரும் முறையில் கோயில் பெருவிழாவில் ஒரு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது; அஃதாவது, சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதற்காக நாவுக்கரசரைப் பல்லவன் யானையைக் கொண்டு இடறச் செய்தான் அல்லவா? அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பதிலடி கொடுக்குமுறையில் ஆண்டுதோறும் பெருவிழாக் காலத்தில் ஒருநாள் யானை கொண்டுவரப்பட்டு இந்தச் சமண மன்னனது சிலையை மோதுவதுபோல் ஒரு காட்சி (ஐதீகம்) நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சிலை, ஊருக்கருகில் நிலத்தின் அடியிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

குணபரேச்சரம்

திருவதிகை வீரட்டானேசுரர் கோயிலுக்குத் தென்கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், மாநில நெடுஞ்சாலையிலிருந்து புறப்படும் ஒரு சிறு குறுக்குப் பாதை மாவட்ட நெடும் பாதையுடன் வந்து சேருமிடத்தில் குணபரேச்சரம் என்னும் கோயில் இருக்கிறது. இது, குணபர வீச்சரம், குணபரேசுரம், குணதரேச்சரம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. மகேந்திர வர்ம பல்லவனுக்குக் குணபரன்’ என்றும் ஒரு பெயர் உண்டு அந்தக் குணபரனால் கட்டப்பட்டதால் குணபரேச்சரம் என்னும் பெயர் பெற்றது. இது. இது தொடர்பான ஒரு சிறு ஆராய்ச்சியை இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் ‘திருநாவுக்கரசர்’ என்னும் தலைப்பில் காணலாம். பல்லவன் அப்பரால் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறிய பின், பாடலிபுத்திரத்திலிருந்த சமண கோயிலை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் இந்தக் கோயிலைக் கட்டினான் எனப் பெரிய புராணம் கூறுகிறது.

குணபரேச்சரம் மிகச் சிறியது; திருவதிகையில் இருக்கு மிடம் தெரியாமல் இருக்கிறது. இடிந்துபோன ஒரு சிறு வீடு போல் இருக்கிறது என்று சொல்ல மனம் வராவிடினும், சிதைந்துபோன ஒரு சிறு ஐயனார் கோயில் போல் இருக்கிறது என்று சொல்லலாம். கிழக்கு நோக்கிய கோயிலின் முன்பகுதியில், ஒரு வீட்டுத் தோட்டத்தில் இருப்பதுபோல் மரஞ்செடி கொடிகள் காணப்படுகின்றன. அவற்றைக் கடந்து உள்ளே போனால் இடிந்து பாழடைந்துள்ள மண்டபப் பகுதிகளில் பிள்ளையார், திருமால், நந்தி, சூரியன் முதலியோரின் சிலைகள் உள்ளன. ஒரு சுவரின் அடியில் மாடக்குழிபோல் உள்ள ஒரு பதிவில் தெற்கு நோக்கியிருக்கும் அம்மன் சிலை பார்ப்பதற்கு மிகவும் இரங்கத்தக்கதாயிருக்கிறது. கருவறையிலிருக்கும் இலிங்கம், வீரட்டானேசுரர் கோயிலில் உள்ள இலிங்கம் போலவே பதினாறு பட்டைகள் கொண்டதாய்க் காண்பதற்குக் கவர்ச்சியாய்க் களிப்பூட்டுகிறது. இலிங்கத்தைப் பின்வரும் படத்தில் காணலாம்:

குணபரேச்சரத்தில் ஆதி சைவ அந்தணக் குருக்கள் பூசனை புரியவில்லை; ஐயனார் கோயில் போல் - காளி கோயில் போல் பூசாரியாரே பூசனை புரிகிறார். பூசாரியார் திருநீறு வைத்துச் சூடம் கொளுத்தும் பித்தளைத் தட்டில் ‘குணதர ஈசன் என்னும் பெயர் பொறிக்கப் பட்டிருக்கிறதே தவிர ‘குணபர ஈசன்’ என்ற பெயர் காணப்படவில்லை. ஆனால், சேக்கிழார் பெரிய புராணத்தில் ‘குணபர வீச்சரம்’ என்றே பெயர் கூறியுள்ளார். குணபர ஈச்சரம் = குணபரேச்சரம் என்றாகும். கோயில் தட்டில் உள்ள பெயரைக் கொண்டு பார்த்தால் ‘குணதரேச்சரம்’ என்றே பெயர் சொல்ல வேண்டும். எனவே, குணபரேச்சரம், குணதரேச்சரம் என்னும் இரண்டு பெயர்களும் அக்கோயிலுக்கு வழங்கப்பட்டன எனக் கொள்ள வேண்டும்.

குணபரேச்சரம் போற்றுவாரற்று இடிந்து பாழடைந்ததற்குக் காரணம் என்ன? அண்மையில் பெரும் புகழுடைய வீரட்டநாதர் கோயில் இருப்பதால், குணபரேச்சரம் மக்களிடையே எடுபடாமல் போயிருக்கலாம்; மற்றும், சமணக் கோயிலை இடித்துக்கொண்டு வந்து அந்தக் கோயிற் பொருள்களைக் கொண்டு இது கட்டப்பட்டதாதலின், இந்தக் கோயிலைச் சமண் கோயிலின் மாற்றுருவம் எனக் கொண்டு இங்கே சமண் வாடை வீசுவதாக எண்ணி மக்கள் புறக்கணித்திருக்கலாம்; மேலும், சமணக் கடவுள் சினந்து ஏதாவது பண்ணிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்தினாலும் மக்கள் இந்தப் பக்கம் தலைகாட்டாது விட்டிருக்கலாம்; அல்லது, பல ஊர்களில் பாடல் பெற்ற சிவன் கோயில்களே பாழடைந்து கிடப்பதுபோல், இயற்கையாவும் இந்தக் கோயில் பாழடைந்து போயிருக்கலாம். சிலர், வீரட்டானேசுரர் கோயிலையும் குணபரேச்சரத்தையும் ஒன்று எனக் கருதுகின்றனர்; அது தவறு.

பல்லவன் சமணனாய் இருந்த காலத்தில் திருவதிகையில் சமணக் கோயில்களும் பெளத்தக் கோயில்களும் இருந்தன. நரலோக வீரன் என்னும் குறுநில மன்னன் திருவதிகையில் புத்த பிரானுக்குக் கோயில் ஒன்று கட்டியதாகக் கல்வெட்டு ஒன்றால் அறியப்படுகிறது.

திலகவதியாரும் திருநாவுக்கரசரும் தங்கியிருந்த மடமும், அவர்கள் வளர்த்த மலர் வனமும் இன்றும் திருவதிகையில் உள்ளன. இவர்கள் தெருவையும் திருக்கோயிலையும் மிகவும் தூய்மையாகச் செய்து வந்தனர். திருவிழாக் காலங்களில் தெருக்களைத் திருவதிகையைப் போல் தூய்மை செய்ய வேண்டுமெனப் பல ஊர்களிலும் திருவீதி ஆண்டார்கட்கு அந்தக் காலத்தில் ஆணையிடப்பட்டிருந்ததாகப் பல ஊர்க் கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. பாண்டிய நாட்டுப் பக்கத்தில் பெருவிழாக் காலங்களில் கொடியேற்று விழாவிற்கு முதல் நாள் திருநாவுக்கரசர் திருவீதி காணும் திருவிழா நடைபெறுவது மரபு. இச் செய்திகளிலிருந்து, அப்பர் பெருமானது அரிய உழவாரப் பணியின் மாண்பும், திருவதிகைமேல் பாண்டியர்க்கு இருந்த ஈடுபாடும் நன்கு புலனாகும்.

திருநாவுக்கரசர் திருப்பணி செய்த இடமாதலால் திருவதிகையைக் காலால் மிதிக்கக் கூடாது என்று கருதி, சுந்தரர் முதலில் திருவதிகைக்குள் வராமல் தொலைவிலேயே சித்தவட மடத்தில் தங்கியிருந்தார் என்னும் [5]பெரிய புராண வரலாறு ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

பாரத காலத்தில், நீர்ச் செலவு (தீர்த்த யாத்திரை) மேற் கொண்ட அர்ச்சுனன் தென்னாடு வந்தபோது திருவதி கையையும் வழிபட்டான் என்னும் செய்தி, வில்லிபாரதம் ஆதிபருவம் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலுள்ள 17 ஆம் பாடலால் தெரிகிறது; அப்பாடல் வருமாறு:

"ஐயானன னியல்வாணனை அடிமைக்கொள மெய்யே

பொய்யாவண மெழுதும்பதி பொற்போடு வணங்கா

மெய்யாகம அதிகைத்திரு விரட்டமும் நேமிக்

கையான கீந்திரபுர முங்கண்டுகை தொழுதான்.”

இந்தச் செய்தியினால் திருவதிகையின் சிறப்பு மேலும் புலனாகிறது.

திருவதிகையில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) நடைபெறும். அப்பர் வீடுபேறுற்ற சதய நாளுடன் விழா நிறைவுறும் தேரோடும் நாளில், சிவன் முப்புரம் எரித்த விழா நடைபெறும். இவ் விழாக்காட்சி ஆற்று மணலில் நடைபெறும். பத்துநாள் விழாவில் இஃது ஒருநாள் விழா. சித்திரைச் சதயத்தன்று பெருந்திரளான மக்கட் கூட்டத்தைத் திருவதிகையில் காணலாம். கார்த்திகைத் திங்களில் சோமவார விழா இங்கே சிறப்பாக நடைபெறும்.

அரசர்களிடையே அதிகை

திருவதிகை, கல்வெட்டிலும் தேவாரத்திலும் ‘அதியரை மங்கை’ எனவும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் பெயரின் அடித்தளத்தில் என்ன வரலாறு அடங்கியிருக்கிறதோ தெரியவில்லை. அதிகமான் (அதியமான்) மரபினர் இவ்வூரை ஒரு காலத்தில் ஆண்டதாலோ அல்லது கோயிலுக்குத் திருப்பணி செய்ததாலோ திரு அதிகை எனப் பெயர் பெற்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. அதிகைமான் என்னும் பட்டப் பெயருடைய சமணச் சிற்றரசர் சிலர் எட்டாம் நூற்றாண்டில் திருவதிகையைத் தலைநகராகக் கொண்டு சுற்றுப்புற வட்டாரத்தை ஆண்டதாகவும் ஒரு செய்தி சொல்லப்படுகிறது. இந்த அடிப்படையில் ‘அதிகை என்னும் பெயர் உருவானதாகக் கருதப்படுகிறது.

இஃதிருக்க, நிருபதுங்கவர்மப் பல்லவ மன்னன் (855 - 896) காலத்துக் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘அதிராஜ மங்கலியபுரம்’ எனப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அதிராஜ மங்கிலியபுரம்’ என்னும் பெயருக்கும் முன்பு சொன்ன ‘அதியரை மங்கை’ என்னும் பெயருக்கும் தொடர்பு இருப்பதாக உய்த்துணர முடிகிறது. அதிராஜன் என்றாலும் அதியரையன் என்றாலும் ஒன்றுதான் அரையன் - அரசன் - ராஜன். மங்கலியத்திற்கும் மங்கைக்கும் தொடர்பு உண்டு. சிவபெருமான் இங்கே வந்து மங்கை உமையம்மையை மணந்து சென்றதாகவும், அதனால் அம்மன்கோயில் வலப்பக்கம் இருப்பதாகவும் முன்னரே கூறப்பட்டுள்ளது. உமையம்மைக்கு மங்கலி என்ற பெயரும் உண்டு. எனவே, இப்படியொரு புராணக் கதையை அடிப்படையாகக் கொண்டு அதியரை மங்கை, அதிராஜ மங்கலியபுரம் என்னும் பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம். மலையமானாடு மலாடு எனவும் புதுச்சேரி புதுவை எனவும் மருவிச் சுருங்கியது போல, அதியரை மங்கை அதிகை என மருவிச் சுருங்கியும் இருக்கலாம்.

இன்று ஒரு சிற்றூராகத் தோற்றமளிக்கும் திருவதிகை பண்டு ஒரு பெரிய நகராகத் திகழ்ந்தது. பல காலங்களில் - பல ஆட்சிகளில் இவ்வூர் ‘திருவதிகை நாடு’ என்னும் சிறு பகுதிக்குத் தலைநகராக இருந்திருக்கிறது. பல்லவர் - சோழர் முதலியோர் காலங்களில் மட்டுமன்று; விசய நகரப் பேரரசர் காலத்திலும் - அஃதாவது பதினேழாவது நூற்றாண்டு வரையிலுங் கூடத் திருவதிகைக்குத் தலைநகர்த் தகுதி இருந்தது. அதனால்தான் சயங்கொண்டார் என்னும் புலவர் பெருமான் தமது கலிங்கத்துப் பரணி என்னும் நூலில் ‘அதிகை மாநகர்’ எனச் சிறப்பித்துக் கூறியுள்ளார். அவர் திருவதிகையை மாநகர் என்று கூறியுள்ள சூழ்நிலையை ஆராயின் திருவதிகையின் சிறப்பு இன்னும் நன்கு விளங்கும்.

முதற் குலோத்துங்கன் ஒரு சமயம் தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் தன் பெரும் படைகளுடன் சென்று கொண்டிருந்தான். இந்தப் பயணத்தில்தான் அவன் படைகள் கலிங்கத்தை வெற்றி கொண்டன, குலோத்துங்கன் தில்லையைக் கடந்து காஞ்சியை நோக்கிச் செல்லும் வழியில் திருவதிகையில் தன் படைகளைத் தங்கவிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டான் என்று புலவர் பாடியுள்ளார்:

[6]"தென்றிசையினின்றுவட திக்கின் முகம் வைத்தருளி
முக்கணுடை வெள்ளி மலையோன்
மன்றினட மாடியருள் கொண்டு விடை கொண்டதிகை
மாநகருள் விட்ட ருளியே"
"விட்ட அதி கைப்பதியி னின்றுபய ணம்பயணம்
விட்டுவிளை யாடி யபயன்
வட்டமதி யொத்த குடை மன்னர் தொழ நண்ணினன்
வளங்கெழுவு கச்சி நகரே"

என்பன பாடல்கள். குலோத்துங்கன் அதிகை மாநகருள் படைகளை விட்டிருந்தானாம். படைகளை விட்டிருக்கும் இடம் படைவீடு அல்லது பாடிவீடு எனப்படும். ஒரு பேரரசன் படைகளைத் தங்க விடுவதென்றால் அவ்வூரில் எத்துணையோ வசதிகள் இருக்கவேண்டும். வீரர்களும் யானைகளும் குதிரைகளும் தங்குவதற்கு இடமும் உண்ண உணவும் அளிக்கும் வசதி அவ்வூரில் இருந்திருக்கவேண்டும். சோழப் பேரரசின் மேலாட்சியின் கீழ் ஒரு சிற்றரசன் திருவதிகையைத் தலைநகராகக்கொண்டு அந்தவட்டாரத்தை ஆண்டிருப்பான். அதனால்தான் குலோத்துங்கன் அங்கே பெரும் படைகளுடன் தங்க வசதி கிடைத்தது. இதைக் கொண்டு, அன்றைய திருவதிகை நகரின் தரத்தை அறியலாம். முதற் குலோத்துங்கனது ஆட்சிக் காலம் கி.பி. 1070 தொட்டு 1120வரை ஆகும். அவனது கலிங்க வெற்றியைக் கலிங்கத்துப் பரணி என்னும் நூலாகப் பாடிய புலவர் சயங்கொண்டார், அவனுடைய அவைக்களப் புலவராவார். எனவே, திருவதிகை பதினொன்று - பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் மிகச் சிறப்புற்றிருந்தது என்பது புலனாகும்.

அன்று என்பது என்ன! பதினெட்டாம் நூற்றாண்டில் கூட, திருவதிகை அரசியல் அரங்கில் இன்றியமையா இடம் பெற்றிருந்தது. ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் தென்னாட்டில் நடந்த போரின்போது திருவதிகைக் கோயில் படாதபாடு பட்டது. இதில் ஆர்க்காட்டு நவாப் முகமது அலி, மராத்தியர்கள் ஆகியோரின் திருவிளையாடல்களும் சேர்ந்துகொண்டன. இந் நான்கு தரத்தார் கைகளிலும் மாறி மாறிப் புக்கது திருவதிகைக் கோயில். அவர்கள் இதனைப் படைகளைத் தங்கவிடும் பாசறைக் கோட்டையாகப் பயன்படுத்தினர். படை மறவர்கள் இங்கே தங்கியிருந்தது கொண்டு சுற்று வட்டாரங்களில் சென்று கொள்ளையடித்துக் கொண்டு வந்ததும் உண்டு. அந்தோ! திலகவதியாரும் திருநாவுக்கரசரும் போற்றிக் காத்த திருவதிகைக் கோயில் இப்படியா தூய்மையிழக்க வேண்டும்?

ஆர்க்காடு நவாப் முகமது அலி 1748 முதுல் 1795வரை தமிழகத்தின் வடபகுதியை ஆண்டார். அவர் பால் இருந்த திருவதிகையை 1750இல் டுப்ளே என்னும் பிரெஞ்சுக்காரர் தாக்கிக் கோட்டைக்கோயிலை எளிதில் கைப்பற்றிக் கொண்டு, எதிர்த்த அந் நவாப்பை ஆர்க்காட்டுக்கு விரட்டி விட்டார். 1752இல் முகமதுஅலி லாரென்சு என்னும் ஆங்கிலேயரின் துணையுடன் மீண்டும் கோட்டைக் கோயிலைப் பிடித்துக் கொண்டார். 1752இல் தோல்வியுற்ற பிரெஞ்சுக்காரரும் மராத்தியரும் 1753இல் மீண்டும் தாக்கிக் கோயிலைப் பிடித்துக் கொண்டனர். 1760இல் ஆங்கிலேயர்கள் பிடித்துக்கொண்டு 1947வரை நிலைப்படுத்திக்கொண்டனர். இந்தப் போராட்டங்களின் போது சிதைந்துபோன கோயில் கோபுரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பழுதுபார்க்கப்பட்டது. கோயில்கள் சுற்றிப் பெரிய உயரிய மதில்களுடன் அகன்று விரிந்திருப்பதால், எளிதில் போர்க் கோட்டைகளாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. இது மிக மிகக் கொடுமை! கோயில்கள் கட்டியதின் நோக்கத்திற்கே எதிர்மாறான தீச் செயலாகும் இது.

அன்று மாநகராய்த் திகழ்ந்த திருவதிகை அத் தகுதியை இன்று அண்மையிலுள்ள பண்ணுருட்டிக்கு அளித்துவிட்டு, தான் ஒரு சிற்றுாராய் அமைதி பெற்றுள்ளது. அன்று திருவதிகை மாநகருள் பண்ணுருட்டியும் அடங்கியிருந்திருக்கும்.

வேகாக் கொல்லை

இவ்வூர் திருவதிகைக்குத் தெற்கே - கெடிலத்தின் தென்கரைக்குப் பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. வேகாக் கொல்லை தனக்கு வடக்கே 11 கி.மீ. தொலைவிலுள்ள திருவதிகையோடு தொடர்புபடுத்திப் பேசப்படுகிறது. சிவபெருமான் முப்புர அரக்கர்களைப் புன்னகையால் எரித்த திருவதிகைப் பகுதியில் உள்ள மண் எரியுண்டு வெந்த மண்ணாம்; அதனால் அம் மண் சிவப்பான செம்மண்ணா யிருக்கிறதாம் - செம்மண்ணாயிருப்பது உண்மைதான். திருவதிகைப் பகுதிதான் எரியுண்டு வெந்ததே தவிர, வேகாக் கொல்லைப் பகுதி எரியுண்ணவோ - வேகவோ இல்லையாதலின் இங்குள்ள மண் வெள்ளை மண்ணாயிருக்கிறதாம். வெண் மண்ணாயிருப்பதும் உண்மைதான். இந்த ஊரில் மண்ணெடுத்துச் சூளைபோட்டால் பாதிக் கல்லே வேகும் - பாதி வேகாது. இந்த இயற்கை அமைப்பு, சிவன் முப்புரம் எரித்த புராணக் கதையோடு முடிச்சு போடப் பட்டுள்ளது. சூளைக்கு வேகாத மண் உள்ள பகுதி வேகாக்கொல்லைதானே!

இங்கே சிவன்கோயில் உள்ளது. திருவதிகையில் முப்புர அரக்கர்களை எரித்த இறைவன் இங்கே வந்து களைப்பாறினாராம். களைப்பாறிய இடம் ‘களைப்பாறிய குழி’ என அழைக்கப்பட்டது. இது களப்பாக் குழி என இப்போது கொச்சையாக மருவி வழங்கப்படுகிறது. இங்கே எழுந்தருளியுள்ள சிவன் பெயர் களப்பானிசன், இப்பெயர், களைப்பாறிய ஈசன் என்னும் பெயரின் மரூஉ எனச் சொல்லப்படுகிறது. உண்மை யாதோ? சுற்றிலும் மலைப் பாங்காயுள்ள வேகாக் கொல்லை பார்க்க வேண்டிய பகுதியே! இங்கே பலாப்பழம் மிகுதியாய்க் கிடைக்கும். ஊர் மக்கள் தொகை: 1560.

வேங்கடம் பேட்டை

இவ்வூர் பாலூர் - குறிஞ்சிப்பாடி மாவட்டக் குறும் பாதையில் கெடிலத்தின் தென்கரைக்குப் பத்து கி.மீ. தொலைவில் உள்ளது. பாலூருக்குத் தெற்கே 11 கி.மீ. தொலைவிலும் - குறிஞ்சிப் பாடிக்கு வடக்கே 6 கி.மீ. தொலைவிலுமாக இவ்வூர் அமைந்திருக்கிறது. மக்கள் தொகை 2,700. இவ்வூரில் ஒரு பழைய பெருமாள்கோயில் இருக்கிறது; இது, பதின்மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இது, தமிழகத்தில் ஒரு சிறந்த கோயிலாக மதிக்கப்படுகிறது. பெருமாள் பெயர் வேணுகோபாலசாமி, வைகாசி விசாக நாளில் இங்கே விழா நடைபெறும்.

பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் புதுச்சேரியில் டுப்ளேயின் மொழிபெயர்ப்பாளராயும் சிறப்பு அலுவலாளராயும் இருந்த ஆனந்தரங்கப் பிள்ளை வேங்கடம் பேட்டையோடு மிக்க தொடர்பு கொண்டிருந்தார். இவ்வூர் வேணுகோபாலசாமி கோயிலோடு அவர் மிக்க ஈடுபாடு கொண்டிருந்ததன்றி, தனியாகக் கண்ணன் கோயில் ஒன்றும் கட்டினார். ஆனந்தரங்கப் பிள்ளை இருக்கட்டும்; இராமரே தென்னாடு வந்தபோது இவ்வூரில் பள்ளிகொண்டதாகச் சொல்லப்படுகிறது.

வேங்கடம் பேட்டை, வேணுகோபால சாமி கோயிலால் சிறப்புற்றிருப்பதல்லாமல், தன்னிடமுள்ள இரண்டு அழகிய மண்டபங்களாலும் பெரும் புகழ் பெற்றுள்ளது. அவற்றுள் ஒரு மண்டபம் கோயிலின் வெளி முற்றத்திலுள்ளது. இது 50அடி சதுரப் பரப்புள்ளது. மண்டபத்தில் உள்ள தூண்கள் சிற்ப வேலைப்பாடு மிக்கவை. இம் மண்டபம் முடிவு பெறாத நிலையில் விடப்பட்டுள்ளது. இம்மண்டபத்தில், அரங்கநாதர் ஆதிசேடன்மேல் பள்ளி கொண்டிருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள சிற்பம் காணத்தக்கது.

இரண்டாவது மண்டபம் வேணுகோபால சாமி கோயிலின் எதிரே - கோயிலைப் பார்த்தாற்போல் உள்ளது. இது மிகமிக அழகிய மண்டபமாகும். 60 அடி சதுர வடிவில் உள்ள இம்மண்டபத்தின் இரு பக்கங்களிலும் நுழைவாயில் உண்டு. ஏழடி உயரம் கட்டப்பட்டுள்ள ஒரு மேடையின்மேல் இம்மண்டபம் மிடுக்கான தோற்றத்துடன் நிற்கிறது. ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு தூண்கள் வீதம் நான்கு பக்கங்களிலுமாக மொத்தம் பதினாறு தூண்கள் இதன் மேல் நிறுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு தூணும் அடிப்பாகத்தில் 6 அடி சதுரம் கொண்டது. உயரமோ 34 அடி. இதில் ஒரு வியப்பு என்னவென்றால், அத்தனை தூண்களும் ஒற்றைக்கல் தூண்களே. தூண்களின் உச்சியில் கருங்கல் உத்தரங்கள் போடப்பட்டுள்ளன; அவற்றின்மேல் கருங்கல் தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. மண்டபம் முழுவதுமே சிற்ப வேலைப்பாடு மிக்கிருப்பினும், மண்டபத்தின் நான்கு நடுத்துரண்களும் மிகமிகச் சிறந்த சிற்ப வேலைப்பாடு களுடன் மிளிர்கின்றன. தென்னார்க்காடு மாவட்டத்திற் குள்ளேயே மிகவும் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் மண்டபம் இதுதான். இந்த மண்டபமும் முடிவு பெறாத நிலையிலேயே உள்ளது. இருப்பதும் இப்போது அழிந்து கொண்டு வருகிறது. ஆனால், இதன் உச்சி ‘கோணவியல்’ ஆராய்ச்சி நிலையமாகப் (Trigonametrical Station) Lucăru()āpg|.

இந்த இரண்டு மண்டபங்களும் கட்டி முடிக்கப் பெறாத நிலையில் அரைகுறைத் தோற்றத்துடன் இருப்பதற்குக் காரணம், கட்டிக்கொண்டிருந்தபோது போர் ஏற்பட்டமையா யிருக்கலாம். இந்த மண்டபங்கள் இரண்டும் வேங்கடம்மா என்னும் அம்மையாரால் கட்டப்பட்டன என ஊரார் உரைக்கின்றனர். இந்த அம்மையாரால் மண்டபம் கட்டப்பட்ட பின் ஊர் வேங்கடம்மா பேட்டை என அழைக்கப்பட்ட தாகவும், பின்னர் அப்பெயர் சுருங்கி வேங்கடம் பேட்டை என்றாகி விட்டதாகவும் சொல்லப்படுகிறது. சிறந்த நாட்குறிப்பு ஆசிரியர் (Diaryist) ஆகிய புதுவை ஆனந்தரங்கப் பிள்ளை தமது நாட் குறிப்பில் இவ்வூரை ‘வேங்கடம்மாள் பேட்டை’ என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த வேங்கடம்மா என்பவர், செஞ்சியையாண்ட மன்னர் ஒருவரின் உடன் பிறந்தவராவார்.

[7]வரலாற்றுக் குறிப்பு ஒன்று, வேங்கடம் பேட்டை என்னும் பெயர்க் காரணத்தோடு தொடர்பு படுத்திப் பின்வருமாறு ஒரு செய்தி தெரிவிக்கிறது:- வேங்கடபதி என்னும் தலைவர் ஒருவர் வேங்கடம் பேட்டையில் இருந்து கொண்டு 1478இல் செஞ்சிநாட்டின் மேல் ஆட்சி செலுத்தியதாகவும், அவர் சுற்று வட்டாரத்தில் இருந்த சமணர்களைக் கொடுமைப்படுத்திய தாகவும் அந்தக் குறிப்பு கூறுகிறது. வேங்கடபதி என்னும் இவர் பெயராலும் வேங்கடம் பேட்டை என்னும் ஊர்ப் பெயர் உருவாகியிருக்கலாம் என்பது ஒரு கொள்கை.

வேங்கடம் பேட்டையில் வேங்கடம்மா கட்டிய மண்டபங்களைப் போலவே ஒரு பெரிய கருங்கல்லும் வியப்பிற்குரிய பொருளாயுள்ளது. இந்தக் கல், கோயிலுக்கும் மண்டபத்திற்கும் இடையே உள்ளது. இதன் சுற்றளவு : 3 மீட்டர் உயரம் : 18 மீட்டர். இக் கருங்கல்லில் அமைந்திருக்கும் வியப்பு யாதெனில், இதன் அடிப் பகுதி சதுரமாயும் மேல் பகுதி எட்டுப் பட்டைகள் கொண்டதாயும் இருப்பதுதான்! இவ்வாறு காணவேண்டிய காட்சிகள் நம் நாட்டில் எத்தனையோ இருந்தும் காண்பவர் எத்தனை பேர்?

சென்னப்பநாயக்கன் பாளையம்

இவ்வூர் கடலூருக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் தென்கரையில் உள்ளது. இவ்வூருக்குச் செல்ல வேண்டுமெனில், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையில் - கடலூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலுள்ள பாலூரில் இறங்கவேண்டும்; பின்னர், பாலூரிலிருந்து குறிஞ்சிப் பாடிக்குச் செல்லும் மாவட்டக் குறும்பாதை வழியே செல்ல வேண்டும், பாலூருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. இங்கே ஆற்றில் 1965இல் பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் வாயிலாக ஆற்றைக் கடந்து தென்கரைக்கு ஒரு கி.மீ. தொலைவு சென்றால் ஊரை அடையலாம். கிழக்கேயுள்ள கடலூரிலிருந்தும் தெற்கேயுள்ள குறிஞ்சிப் பாடியிலிருந்தும் இவ்வூருக்குப் பேருந்துவண்டி வசதி உண்டு. ஆற்றில் பாலம் கட்டுவதற்குமுன், கடலூர் திருக்கோவலூர் சாலையில் பேருந்து வண்டியில் வருபவர்கள் பாலூரிலே இறங்கி நடந்து வரவேண்டும். வெள்ளக் காலத்தில் மக்கள் பெரிதும் தொல்லைப்பட்டனர். பாலம் கட்டாதபோதும், குறிஞ்சிப் பாடியிலிருந்து இவ்வூருக்குப் பேருந்து வண்டியில் வந்து செல்ல வசதி இருந்தது.

இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்தது. மக்கள் தொகை: 7,500. காவல் (போலீசு) நிலையம், மருத்துவமனை, உயர்நிலைப்பள்ளி முதலிய வசதிகள் அண்மையில் சில ஆண்டுகளாக ஏற்பட்டுள்ளன. இவ்வூர் பாளையம், நடுவீரப்பட்டு என்னும் இரு பெரும் பிரிவாக உள்ளது. மேலண்டைப் பகுதியாகிய பாளையத்தையும் கீழண்டைப் பகுதியாகிய நடுவீரப்பட்டையும் நடுவே ஒடும் ஒரு வாய்க்கால் பிரிக்கிறது. இவ்வூர் இப்போது செ. பாளையம் எனவும், பாளையம் எனவும் சுருக்கமாகவும் அழைக்கப்படுகிறது.

நாயக்க மன்னர் காலத்தில் சென்னப்பநாயக்கன் பாளையம் 8 பேட்டை 16 குப்பங்கள் அடங்கிய ஒரு பாளையப்பட்டாக (மிட்டாவாக), சென்னப்ப நாயக்கர் என்பவருக்கு உரியதாக இருந்தது. ஆர்க்காடு நவாப் முகமது அலியின் ஆட்சிக் காலத்தில் 1762 ஆம் ஆண்டு முகமது அலியால் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு ‘மிட்டா’வாக அளிக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியார் இங்கே ஒரு பேராளரை (பிரதிநிதியை) இருத்தித் தொழிற்சாலையும் நிறுவித் துணி வாணிகத்திற்கு வழி செய்தனர். இன்றும் இங்கே நெசவுத் தொழில் மிகுதியாக நடைபெறுகிறது. 1807இல் இப் பகுதி அப்பு முதலியார் என்பவர்க்குக் கம்பெனியாரால் குத்தகைக்கு விடப்பட்டது; அவர் 1809இல் சங்கர நாயக்கர் என்பவருக்கு மாற்றினார். நாடு உரிமைபெறும் வரையும் இப் பகுதி சங்கர நாயக்கர் மரபினரின் பாளையப் பட்டாகவே இருந்து வந்தது. ஆவணப் பதிவுகளிலும் ‘மிட்டா கிராமம்’ என்றே குறிக்கப்பட்டு வந்தது. பாளையக்காரர்கள் மாசி மகத்தன்று பல்லக்கில் கடலூர்க் கடற்கரைக்குச் செல்வது மரபாயிருந்தது.

பாளையம் பகுதியில் சொக்கநாதர் கோயிலும், நடுவீரப் பட்டுப் பகுதியில் கைலாசநாதர் கோயிலும் பச்சைக்கந்த தேசிகர் ஆதீனமடமும் உள்ளன. இப்போது ஆதீனம் மறைந்து விட்டது. நடுவீரப்பட்டில் ஐப்பசி சஷ்டியில் சூரசம்மார விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். பாளையத்தின் தெற்கு எல்லையில் உயரமான குன்று ஒன்று உள்ளது. இது கேப்பர் மலைத் தொடர்ச்சியைச் சார்ந்திருப்பினும் தான் தனித்து உயர்ந்துள்ளது. இதன் உச்சிமேல் பிள்ளையார் கோயில் இருக்கிறது. இதற்கு ‘மலைப் பிள்ளையார் கோயில்’ என்பது பெயர். உச்சிக்குச் சென்று வரப் படிக்கட்டு வசதி உண்டு. மலையடிவாரத்தில் கிழக்குப் புறம் இரண்டு குளங்கள் உள்ளன. தைத்திங்கள் மூன்றாம் நாளாகிய கரிநாள் அன்று இம்மலைப் பிள்ளையார் கோயிலில் மிகச் சிறப்பான திருவிழா நடைபெறும். அன்று இறையுருவம் கீழே இறங்கி ஊருக்குள்ளே வலம் வரும். வடக்கே கெடிலமும் மற்ற மூன்று பக்கங்களிலும் மலைகளும் அமையப் பெற்றுள்ள மலைப் பிள்ளையார் கோயிலில் நின்றுகொண்டு, இனிய குளிர்ந்த காற்றை நுகர்ந்துகொண்டு சுற்றிக் கட்புலனை மேயவிட்டால் கிடைக்கக் கூடிய இன்பத்திற்கு அளவேது?

வடலூர் இராமலிங்க வள்ளலார்க்குச் சென்னப்ப நாயக்கன் பாளையத்தோடு மிகுந்த தொடர்பு சொல்லப்படுகிறது. வள்ளலார் இவ்வூர்க்கு அடிக்கடி வந்து தங்கியிருந் தார்களாம்; இவ்வூர் இறைமேல் பாடல்களும் பாடியிருக்கிறார்களாம். (என் தாயைப் பெற்ற பாட்டனார் ஊர் சென்னப்ப நாயக்கன் பாளையம் தான். என் தாய்ப் பாட்டனார் மருத்துவம் சபாபதி முதலியார் குடும்பத்திற்கு வள்ளலார் மிகவும் வேண்டியவர் என்பதாகவும், என் பாட்டனார் வீட்டிற்கு வள்ளலார் பல முறை வந்துள்ளார் என்பதாகவும் என் தாயார் பலமுறை என்னிடம் தெரிவித்துள்ளார்கள்) பாளையத்திற்குத் தெற்கே 16கி.மீ. (10 மைல்) தொலைவில் தான் வடலூர் இருக்கிறது.

கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த சென்னப்ப நாயக்கன் பாளையத்து மக்கள் கிழக்கேயுள்ள கடலூருக்குப் பல வேலைகளை முன்னிட்டு அடிக்கடி வருவர். அவர்கள், கடலூருக்குப் போவதாகச் சொல்லமாட்டார்கள்; ‘கிழக்கே போகிறேன்’, ‘கிழக்கேபோய் வருகிறேன்’, ‘கிழக்கே போயிருக்கிறார்’ என்றெல்லாம் கூறிக் கடலூரைக் ‘கிழக்கு’ என்னும் சொல்லாலேயே குறிப்பிடுவார்கள். இஃது தமிழிலக்கணத்தில் ‘ஆகுபெயர்’ எனப்படும்.

இவ்வூர், சென்னப்ப நாயக்கன் பாளையத்திற்குக் கிழக்கே 2 கி.மீ. தெலைவில் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. இப் பகுதியில் கெடிலத்தின் தென்கரையைத் தொடர்ந்து கேப்பர் மலைத்தொடர்ச்சியைக் காணலாம். இத்தொடர்ச்சியில் விலங்கல்பட்டு என்னும் ஊருக்கு அருகில் உள்ள ஒரு மலைமேல் ஒரு துறவியின் மடமும் முருகன்கோயிலும் உள்ளன. இக்கோயிலில் பங்குனி உத்தர விழா சிறப்பாக நடைபெறும். இக்கோயில் உள்ள மலை ‘விலங்கல் பட்டு மலை’ என்றழைக்கப்படும்.

வானமாதேவி

இவ்வூர், விலங்கல்பட்டுக்கு கிழக்கே 2கி.மீ. தொலைவிலும் - கடலூருக்கு மேற்கே 12 கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் தென்கரைக்கு 2.கி. மீட்டரில் இருக்கிறது. இந்தப் பகுதியில் கெடிலத்தின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை வானமாதேவி அணை எனப்படும். அணைக்கு அருகிலேயே அருங்குணம், பல்லவராய நத்தம் ஆகிய ஊர்கள் இருக்கவும் 3 கி.மீ. தொலைவு எட்டியுள்ள வாணமா தேவியின் பெயரால் அணை அழைக்கப்படுவதிலிருந்து, இவ்வூரின் பழைய பெருமை புலப்படும். வாண மாதேவி என்னும் பெயர், சோழ மாதேவி, சேர மாதேவி, பாண்டி மாதேவி என்பனபோல் ஒர் அரசியின் பெயராகத் தெரிகிறது. பாணர் அல்லது வாணர் என்னும் மரபைச் சேர்ந்த அரசியை இப் பெயர் குறிக்கலாம். அவ்வரசியின் பேரால் இவ்வூர் அழைக்கப்பட்டு வரலாம். இப் பகுதியைப் பல்வேறு காலங்களில் பல்வேறு சிற்றரச மரபினர் ஆண்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.

திருமாணிகுழி

கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்த இவ்வூர், கடலூருக்கு மேற்கே 10 கி.மீ. தொலைவிலும் நெல்லிக்குப் பத்திற்குத் தெற்கே 6 கி.மீ. தொலைவிலுமாக, கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையை ஒட்டிக் கெடிலத்தின் தென்கரையில் இருக்கிறது. மாவட்ட நெடும் பாதையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் மண் பாதையில் ஒன்றரை கி.மீ. நடந்து - ஆற்றைக் கடந்து இவ்வூரை அடைய வேண்டும். வடக்கே கெடிலத்தையும் தெற்கே கேப்பர் மலைத்தொடர்ச்சியையும் உடைத்தாகி வாணமாதேவி அணையிலிருந்து நீர்ப் பாசனத்தைப் பெற்று வளங்கொழிக்கும் ஊர் திருமாணிகுழி.

இவ்வூரின் நீர்வள - நிலவளச் செழிப்பைத் திருஞான சம்பந்தர் இவ்வூர்மேல் பாடியுள்ள தமது தேவாரப் பதிகத்தில் மிகவும் சிறப்பித்துக் கூறியுள்ளார். நாவுக்கரசரும் இவ்வூருக்கு வந்து வழிபட்டுப் பாடலும் பாடியதாகச் சேக்கிழார் பெரிய புராணத்தில் தெரிவித்துள்ளார். ஆனால், அவரது பதிகம் கிடைக்கவில்லை. அருணகிரியாரின் திருப்புகழ் இவ்வூருக்கு உண்டு. புராணமும் உண்டு. இவ்வூர்ச் சிவன் பெயர்: மாணிக்க வரதர்; அம்மன் பெயர்: மாணிக்கவல்லி; மரம்: கொன்றை.

மாணி என்பது திருமாலின் வாமன அவதாரத்தைக் குறிக்கும். திருமால் மாணி வடிவங்கொண்டு மாவலியை அழித்த பின்னர் இவ்வூருக்கு வந்து சிவனை வழிபட்டார் என்பது

புராணவரலாறு. மாணி வழிபட்ட இடமாதலின் மாணி குழி எனப் பெயர் பெற்றது. கோயிலில் இலிங்கம் இருக்கும் கருவறைப் பகுதி சிறிது பள்ளமாக குழியாக இருக்கும். அங்கே எப்போதும் தண்ணீர் சுரந்து கொண்டிருக்கும். எனவே, மாணி வழிபட்ட குழி மாணி குழியாயிற்று என்று பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இந்தப் பெயர்க் காரணம் முதிர்ந்த வைணவப் பற்று உடையவர்க்கு எரிச்சலை ஊட்டலாம். மற்றும், சிவனது மாண்பைக் குலைக்கும் முறையில் மற்றொரு பெயர்க்காரணம் சொல்லப் படுகிறது. எழுதக் கூடாத அந்தப் பெயர்க்காரணத்தை விட்டுத் தள்ளுவோம். திருமாணி குழிக்கோயிலின் முன்புறத் தோற்றத்தை முன்னுள்ள படத்தில் காணலாம்.

இது, கோயிலின் முதற்பெருவாயிற் கோபுரமாகும். கிழக்கு நோக்கியுள்ளது. பின்வரும் படத்தில் ஓரளவு கோயிலின் விரிவான தோற்றத்தைக் காணலாம்:

இந்தப் படம் கோயிலின் வடக்குப் புறத்தில் இருந்து கொண்டு எடுத்தது. படத்தில் தெரிவது கோயிலின் வடக்குப் புறத் தோற்றமாகும். கோபுரத்தின் மேற்குப்புற - அஃதாவது பின்புறத் தோற்றம் இப்படத்தில் காணப்படுகிறது. கோபுரத்தின் கிழக்குப் புறத்திற்கு எதிரே ஒரு சிறு மலை இருப்பதைக் காணலாம். படத்தில் மலையைக் கோபுரம் மறைத்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும் மலை ஓரளவு படத்தில் தெரிகிறது. திருவண்ணாமலை போலவே இம்மலையிலும் கார்த்திகைத் திங்களில் கார்த்திகையன்று தீபத் திருவிளக்கேற்றித் திருவிழா நடத்தப்படுகிறது. சுற்று வட்டாரத்தில் வெகு தொலைவிலிருந்து மக்கள் இவ் விழாவிற்கு வருவர்.

இவ்வூர்க் கோயிலில் மூலத்தானம் எனப்படும் கருவறை, எப்போதும் திரையிடப் பட்டேயிருக்கும்; அதனால் மூலவராகிய இலிங்கத்தைக் காணமுடியாது. திரையில், ஒருவகைத் தெய்வ இனத்தவர் என்று சொல்லப்படும் உருத்திரர்கள் பதினொருவருள் ஒருவராகிய பீம ருத்திரர் என்பவரின் உருவம் தீட்டப்பட்டிருக்கும். இவர் உள்ளேயிருக்கும் இறைவனுக்குக் காவலாக இருப்பதாகக் கதை. திரையில் இருக்கும் இந்தப் பீமருத்திரர்க்கே முதலில் எல்லாவகையான பூசனைகளும் நடத்தப்பெறும்; பின்னரே திரை விலக்கிச் சிவலிங்கத்திற்குப் பூசனை நடத்தப்பெறும். இந்த நேரத்தில் மட்டுந்தான் இலிங்கத்தைக் காணமுடியும். இது மற்ற ஊர்களில் இல்லாத ஒரு தனி முறையாகும். இவ்வூர் இறைவன் மாசி மகத்தன்று கடலூர்க் கடற்கரைக்குச் சென்று நீராடி வண்டிப் பாளையத்தின் அருகிலுள்ள மண்டபத்தில் தங்கி ‘மண்டபபடி விழா நடத்திக்கொண்டு விடிவதற்குள் ஊர் திரும்பிவிடுவார். வண்டிப் பாளையத்தார்க்கு இஃது ஒரு பெருவிழாவாகும்.

திருமாணி குழியில் சோழர், பாண்டியர், இராட்டிரகூடர் முதலியோர் காலத்துக் கல்வெட்டுகள் பல உள்ளன. இரண்டாம் குலோத்துங்க சோழன் (கி.பி 1136 - 1150) இவ்வூரில் முடி சூட்டிக்கொண்டதாக ஒரு கல்வெட்டு கூறுகிறது. சோழன் தஞ்சாவூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய தலை நகரங்களை விட்டுவிட்டு இங்கே வந்து முடி சூட்டிக் கொண்டது ஏன்? இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் பகைவர் எவரும் சோழ நாட்டின்மேல் படையெடுக்கவில்லை. பரந்து விரிந்து கிடந்த சோழப் பேரரசில் அன்று அமைதி நிலவியது. ஆயினும், சோழப் பேரரசால் ஆங்காங்கே அமர்த்தப் பட்டிருந்த ஆட்சிப் பேராளர்கள் (பிரதிநிதிகள்) சிலர், தமது மேற்பார்வையில் இருந்த பகுதிகளைத் தமக்கு உரிமையாக்கிக் கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில், திருமாணி குழிப்பகுதிக்குப் பொறுப்பேற்றிருந்த ஆளுநரும் (கவர்னரும்) சோழப் பேரரசுக்கு அடங்காது அப் பகுதியைத் தமதாக்கிக் கொண்டிருக்கலாம். செய்தியறிந்த குலோத்துங்கன் ஆங்குச் சென்று அவரையடக்கி, அப் பகுதிக்குத் தானே தலைவன் என்பதை உறுதிப் படுத்தும் முறையில் திருமாணி குழியில் முடி சூட்டிக்கொண்டிருக்கலாம்.

இந்த முடிசூட்டைப் பற்றி வேறு விதமாகவும் கருத்து கூறக்கூடும்: மக்கள் சிலர் திருக்கோயில் சிறப்புள்ள திருப்பதிகள் சிலவற்றில் சென்று திருமணம் செய்து கொள்வதுபோல, தேவாரப் பாடல் பெற்ற சிறப்புடைய திருமாணி குழியில் சென்று இரண்டாங் குலோத்துங்க சோழன் முதல் முதலாக முடிசூட்டிக் கொண்டிருக்கலாம். எதற்கும் திட்டவட்டமான காரணம் கூறமுடியாது. இந்த இரண்டாங் காரணத்தைவிட முதலில் சொன்ன காரணமே பொருத்த மானதாய்த் தோன்றுகிறது.

சோழன் தனக்கு அடங்காதவரை அடக்கித் திருமாணி குழியில் முடி சூட்டிக்கொண்டான் என்ற அடிப்படையைக் கொண்டு ஆராயுங்கால், அன்று திருமாணி குழி சுற்றுப்புற வட்டாரத்திற்குத் தலைநகரா யிருந்திருக்கிறது என்பது புலப்படும். அன்று திருமாணி குழி அரசியல் அரங்கில் இன்றியமையாத ஒரு மையமாகப் (கேந்திரமாகப்) பயன்படுத்தப்பட்டதற்குக் காரணம், அதைச் சுற்றியுள்ள இயற்கையரண்களேயாகும். எந்தப் பக்கத்திலிருந்து பகைவர் வருவதாயிருப்பினும், கெடிலம் ஆற்றையோ அல்லது கேப்பர் மலையையோ கடந்து வந்தால்தான் திருமாணி குழியை அடையமுடியும். திருமாணி குழியின் வடபுறம் உள்ள கெடிலம் ஆறும் தென்புறம் உள்ள கேப்பர் மலைத் தொடர்ச்சியும் திருமாணி குழிக்குக் கிழக்கே சிறிது தொலைவில் பக்கத்தில் - பக்கத்தில் நெருங்கியுள்ளன. இப்படியாக, நீர் அரணும், மலை அரணும், மிக்க உணவுப் பொருள் விளைக்கும் நிலவளமும் ஒருசேரப்பெற்றுத் திகழும் திருமாணிகுழி அரசியல் மையம் பெற்றிருந்ததில் வியப்பில்லை.

பிற்காலப் பல்லவர் எனப்படும் காடவராயர் மரபின் தலைவரான வளந்தானார் என்பவர் சோழரது மேலாட்சியின் கீழ் ஒரு தலைவராய்ப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருமாணிகுழிப் பகுதியை அரசாண்டார் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. சேந்தமங்கலத்தைத் தலைநகராகக் கொண்டு 13 ஆம் நூற்றாண்டில் அரசோச்சிய கோப்பெருஞ்சிங்கன் இந்த வளந்தானாரது மரபுவழி வந்தவனே. முதற் குலோத்துங்கன் கி.பி. 1070 தொடங்கி 1120 வரையும், அவர் மகன் விக்கிரம சோழன் 1120 தொட்டு 1135 வரையும் செங்கோல் செலுத்தினர். இவ்விருவருள் ஒருவரது காலத்திலோ அல்லது இருவர் காலத்திலுமோ வளந்தானார் திருமாணிகுழிப் பகுதியை ஆண்டிருக்கலாம். அவருக்குப்பின் அவர் வழியினரான மோகன் ஆட்கொல்லி, அரச நாராயணன், கச்சிராயன், வீரசேகரன், சீயன் என்பவர்கள் பரவலாகப் பலவிடங்களில் பொறுப் பேற்றிருந்தனர்.

இவர்களுள் மோகன் ஆட்கொல்லி என்பவன் இரண்டாம் குலோத்துங்கன் காலத்தில் அவனது மேலாட்சியின் கீழ்த் திருமாணிகுழிப் பகுதியை ஆண்டு வந்தான். இவன் பல ஊர்க் கோயில்கட்கு அறம் பல புரிந்துள்ளான். இவன் தனக்குப் பல பட்டப் பெயர்களைச் சூட்டிக் கொண்டான் என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது. இதைக் கொண்டு இவன் தன்னைச் சிறுகச் சிறுக வளர்த்துக் கொண்டான் என்பது புலனாகும். இவனைப் பற்றிய கல்வெட்டுகளும் இவனது வளர்ச்சிக்குச் சான்று பகர்கின்றன. இந்த நிலையில் இவர் திருமாணிகுழியைத் தனதெனச் சொல்லிக் கொண்டு சோழனுக்கு அடங்காதிருந்திருக்கலாம்; இவனையடக்கிச் சோழன் இரண்டாம் குலோத்துங்கன் திருமாணிகுழியில் முடிசூட்டிக் கொண்டிருக்கலாம். திருமாணிகுழியில் தொடர்ந்து அரசப் பேராளர் பலர் இருந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சோழர் காலக் கல்வெட்டுகளில் திருமாணிகுழி பின்வருமாறு குறிக்கப்பட்டிருக்கிறது:

‘விருதராச பயங்கர வளநாட்டு மேற்கா நாட்டு உதவித் திருமாணிகுழி’

‘இராசராச வளநாட்டு மேற்கா நாட்டுஉதவித் திருமாணிகுழி’

‘சயங்கொண்ட சோழவள நாட்டு உதவித் திருமாணிகுழி’

கல்வெட்டுப் பகுதிகளிலுள்ள விருதராச பயங்கர வளநாடு, இராசராச வளநாடு, சயங்கொண்ட சோழவள நாடு என்பன, சோழப் பேரரசைக் (சோழ சாம்ராஜ்யத்தைக்) குறிக்கின்றன; அடுத்துள்ள ‘மேற்கா நாடு’ என்பது திருமாணிகுழி வட்டாரத்தின் பெயராயிருக்க வேண்டும். மேற்காநாடு என்னும் பெயர் ஏற்பட்டதற்கு யாதேனும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும். அடுத்து, ‘உதவித் திருமாணிகுழி’ என ஊரின் முன் உதவி என்னும் சொல் இருப்பதைக் கூர்ந்து நோக்கின், திருமாணிகுழி பல வகையிலும் உதவியாயிருந்தமை புலனாகும். அரசியல் அரங்கில் சோழப் பேரரசர்க்குத் திருமாணிகுழிப் பகுதி பெரிதும் உதவியாய் இருந்திருக்கலாம். திருமாணிகுழி இறைவன் வணிகருக்கு உதவி செய்ததாகச் சொல்லப்படும் புராணக் கதையின் அடிப்படையிலும் ‘உதவித் திருமாணிகுழி’ என்னும் பெயர் பொருத்தமாயிருக்கிறது. திருமாணிகுழி கோயிலில் ‘உதவி நாயகர்’ என்னும் பெயரில் இறையுருவம் உண்டு என்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது.

இவ்வூர், வீரபாண்டியன் (பதினான்காம் நூற்றாண்டு) காலத்துக் கல்வெட்டில் ‘நடுவில் மண்டலத்துத் திருமாணிகுழி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவில் மண்டலம் என்பது, சோழ மண்டலத்திற்கும் தொண்டை மண்டலத்திற்கும் நடுவில் இருப்பது அஃதாவது, ‘நடுநாடு’ என்னும் பொருளைக் குறிப்பதாயிருக்கலாம்.

ஓட்டேரி

கடலூருக்கு மேற்கே 9 கி.மீ. தொலைவிலும் திருமாணிகுழிக்குக் கிழக்கே ஒரு கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலத்தின் தென்கரையில் ஓட்டேரி என்னும் சிற்றுார் இருக்கிறது. இங்கே ஆற்றின் தென்கரையை ஒட்டி ஒரு பிள்ளையார் கோயில் இருக்கிறது. இந்தப் பிள்ளையாருக்கு ‘ஓட்டேரிப் பிள்ளையார்’ என்பது பெயர். இவருக்குத் திறந்தவெளி அரங்கில்தான் விருப்பம் மிகுதி. கோயிலுக்கு உள்ளே இவர் இருக்க மாட்டேன் என்கிறார்; கோயிலின் வடக்கு மதிலையொட்டியுள்ள ஒரு திறந்தவெளி மேடையில் நிலையாக அமர்ந்துவிட்டார். கோயில் இறையுருவம் இன்றி வறிதே கிடக்கிறதே என்று கருதி மக்கள் பலமுறை இவரை உள்ளே கொண்டுபோய் வைத்தார்களாம். ஆனால், ஒவ்வொரு முறையும் இவர் வெளி மேடைக்கே வந்துவிட்டாராம். இப்படிப் பலமுறை முயன்று பார்த்த பின்னர் யாரும் இவர் வம்புக்குப் போகாமல், வெளிமேடையிலே இருந்து போகட்டும் என்று விட்டுவிட்டார்களாம். இவருக்கு நாடோறும் பூசனை உண்டு. ஆனால், காயும் வெயில், பெய்யும் பனி மழை, அடிக்கும் புயல் எல்லாம் இவர் தலைமேல்தான். என்ன செய்வது!

ஏதோ பித்தம் பிடித்தவர்போல் வெளியே உட்கார்ந்து கொண்டு கிடக்கிறாரே என்று இவரை எளிதாக எண்ணிவிடக் கூடாது. சுற்றுப்புற வட்டாரத்து மக்களிடையே இவருக்குப் பெரிய செல்வாக்குண்டு. இங்கே கெடிலத்தின் தென்கரையாக இப் பிள்ளையார் கோயிலும், வடகரையாகக் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும் பாதையும் உள்ளன. அப்பாதை வழியே நடந்து ஊர்ப் பயணம் செய்பவர்கள் பலர் ஆற்றைக் கடந்து பிள்ளையாரை அடைந்து வழிபட்டுச் செல்வது வழக்கம். வெய்யில், வெள்ளம், இயலாமை, சோம்பல் முதலிய காரணங்களால் ஆற்றைக் கடக்க முடியாதவர்கள் சிலர் ஆற்றின் வடகரையில் நின்றபடியே, தென்கரையில் இருக்கும் பிள்ளையாரை நோக்கித் தேங்காய் உடைத்துச் சூடம் கொளுத்திக் கும்பிடு போட்டுச் செல்வர். இப் பிள்ளையாருக்கு இருக்கும் செல்வாக்கு இப்போது புரியுமே!

இம்மட்டுமா? இந்தப் பிள்ளையார் கோயில் பெரிய ‘பிக்னிக் சென்டர்’ (Picnic Centre) ஆகவும் திகழ்கிறது. சுற்றுப்புற ஊர் மக்கள் ஊரோடு திரண்டு வந்து பிள்ளையாருக்குப் பூசனை புரிந்து வழிபாடு செய்து, இங்கேயே உணவு சமைத்து உண்டு களித்துச் செல்வர்.

பாலூர்

பாலை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் இவ்வூர் கடலூருக்கு மேற்கே 15 கி.மீ. தொலைவிலும் - பண்ணுருட்டிக்குக் கிழக்கே 11 கி.மீ. தொலைவிலும் - நெல்லிக் குப்பம் புகைவண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே 7 கி.மீ. தொலைவிலுமாக, கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. ஊருக்குத் தெற்கே ஒரு கி.மீ. தொலைவில் கெடிலம் ஒடுகிறது. ஆற்றில் பாலம் உண்டு. பாலூரிலிருந்து தெற்கேயுள்ள குறிஞ்சிப்பாடிக்கு மாவட்டக் குறும்பாதையொன்று செல்கிறது. பாலூரோடு தொடர்புடைய பாதைகளிலெல்லாம் பேருந்து வண்டிப் போக்குவரவு உண்டு. இவ்வூரில் புகழ் வாய்ந்த திரெளபதை அம்மன் கோயில் இருக்கிறது.

தன்னிடம் உள்ள வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணையினால் பாலூர் வெளியுலகிற்கு விளம்பரமாகி யிருக்கிறது. தமிழகத்தில் முதல் முதலாக ஏற்படுத்தப்பட்ட வேளாண்மை ஆராய்ச்சிப் பண்ணை பாலூர்ப் பண்ணைதான். 1905 ஆம் ஆண்டு இது தோற்றுவிக்கப்பட்டது. பாலூருக்குக் கிழக்கே ஒன்றரை கி.மீ. தொலைவில் கெடிலத்தின் வடகரையில் 16 ஏக்கர்ப் பரப்பில் தொடங்கப் பெற்ற இப் பண்ணை இப்போது 56 ஏக்கர் பரப்புக்கு விரிந்து வளர்ச்சி பெற்றுள்ளது. ஆங்கிலத்தில் பண்ணை என்பதற்குப் ‘ஃபாரம்’ (FARM) என்பது பெயர் அல்லவா? அந்தப் ‘பாரம்’ என்னும் பெயராலேயே இன்றும் இது சுற்று வட்டாரத்து மக்களால் அழைக்கப்படுகிறது. ‘பாலூர்ப் பாரம்’ என்பது மக்கள் வாயில் அடிபடும் பெயர். ஆங்கிலேயர்கள் - அல்ல அல்ல.ஆங்கிலம் படித்தவர்கள் அன்று கற்றுக் கொடுத்த பெயரை இன்றும் பொது மக்கள் விடமாட்டோம் என்கிறார்கள். பண்ணை யிருக்கும் பகுதி பாரம்’ என்ற பெயரில் ஒரு தனிக் குடியிருப்பு போல் வளர்ந்துள்ளது.

இந்தப் பண்ணையில் தொடக்கத்தில் மணிலாக் கொட்டை ஆராய்ச்சி மிக விரிவாக நடைபெற்றது; இப்போது நெல், கரும்பு, கம்பு, கேழ்வரகு, வரகு, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு முதலியவை பற்றிய ஆராய்ச்சி நடைபெறுகிறது. மற்றும், முட்டைக் கோசு, தக்காளிப் பழம், சப்போட்டா பழம் முதலியனவும் விளைத்துப் பார்க்கப்படுகின்றன. மாடு வளர்ப்பு - கோழி வளர்ப்பு பற்றிய முறைகளும் செயல் வாயிலாகக் கண்டறிந்து அறிவிக்கப்படுகின்றன. நெல் முதலிய தானிய விதைகள் உழவர்கட்கு அளிக்கப்படுகின்றன. உரம்போடும் முறையும் மற்ற மற்றப் பயிர் முறைகளும் ஆராய்ந்து தெரிவிக்கப்படுகின்றன. இந்த வகையில், கெடிலக்கரையின் பெருமையில் இந்தப் பண்ணைக்கும் பங்கு உண்டு.

பல்லவராய நத்தம்

இவ்வூர் பாலூருக்குக் கிழக்கே 2 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் கெடிலத்தின் வடகரையை ஒட்டியுள்ளது. ஊரின் பெயர் பல்லவ மன்னரை நினைவுபடுத்துவதால், பல்லவர் காலத்தில் இவ்வூர் குறிப்பிடத்தக்க வரலாற்று நிகழ்ச்சி நடைபெற்ற இடமாய் இருந்திருக்க வேண்டும். பாலூர்ப் பண்ணை பாலூருக்கு அருகில் இல்லை - இந்த ஊருக்கு அருகில்தான் உள்ளது; அதே போல், வானமாதேவி அணை வாணமாதேவிக்கு அருகிலில்லை. இவ்வூருக்கு அருகில்தான் உள்ளது; அப்படியிருந்தும் பண்ணையின் பெயரும் அணையின் பெயரும், அந்தோ, இந்த ‘அப்பாவி’ ஊருக்குக் கிடைக்கவில்லை. பொது மக்கள் சிலர் மட்டும், ‘பல்லவ ராயநத்தம் அணை - பல்லா நத்தம் அணை’ என இவ்வூரின் பெயரால் அணையை அழைக்கின்றனர். இது கொடுத்து வைத்தது அவ்வளவுதான்! ‘ஏதோ கிடைத்த வரையிலும் இலாபம்’.

நெல்லிக்குப்பம்

நெல்லிக்குப்பம் கடலூருக்கு மேற்கே 11 கி.மீ. தொலைவில் கடலூர் - திருக்கோவலூர் மாநில (State Highways) நெடுஞ்சாலையில் உள்ளது. இந்நெடுஞ்சாலை நெல்லிக் குப்பம் கடைத்தெரு வழியாகச் செல்கிறது. ஊருக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் கெடிலம் ஓடுகிறது. இவ்வூரில் புகைவண்டி நிலையமும் உண்டு. நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் பாதையில் இருக்கிறது. விரைவுப் புகைவண்டிகள் (Express) இந் நிலையத்தில் நிற்பதைக் கொண்டு இதன் இன்றியமையாமை உணரலாம்.

நெல்லிக்குப்பம் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகர் நெல்லிக் குப்பமாகும். ஊர் மக்கள் தொகை 23,000. இவ்வூரில் முசுலீம்கள் மிகுதி. கிறித்தவர்களும் ஒரளவு உள்ளனர். 1893ஆம் ஆண்டு ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ஆட்சி) பெற்ற இவ்வூர், வளர்ந்து 1967 ஆம் ஆண்டு நகராட்சி மன்றம் (முனிசிபல் ஆட்சி) பெற்றுள்ளது. கரும்பு, வெற்றிலை, அகத்திக்கீரை ஆகிவற்றிற்கு நெல்லிக்குப்பம் பேர் போனது.

ஒரு நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக நெல்லிக் குப்பத்தைத் திக்கெட்டிலும் விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பவை, அங்கிருக்கும் பாரி கம்பெனியின் சர்க்கரை ஆலையும் இனிப்புப் பண்டத் (மிட்டாய்) தொழிற்சாலையும் ஆகும். ‘ஸ்பிரிட்’ (Spirits), ‘கார்பானிக் ஆசிட் காஸ் (Carbonic Acid Gas) ஆகியவையும் சர்க்கரை ஆலையில் செய்யப்படுகின்றன. இங்கு உண்டாக்கப் படும் பொருள்கள் வெளிநாடுகட்கும் அனுப்பப்படுகின்றன.

நெல்லிக் குப்பம் சர்க்கரை ஆலை 1848 ஆம் ஆண்டு பாரி கம்பெனியாரால் அமைக்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஆண்டுக்கு 1,60,000 காலன் வீதம் சாராயமும் உண்டாக்கியது. நாளடைவில் சாராயத்தை நிறுத்திவிட்டுச் சர்க்கரையில் முழுக் கவனம் செலுத்தி வருகிறது. மிகப் பெரிய முதலீட்டில் இந்த ஆலை நடைபெறுகிறது. மூவாயிரவர்க்கும் மேற்பட்டவர் தொழில் புரிகின்றனர். பாரி கம்பெனியார் 1811இல் சிதம்பரத்திலும், 1843இல் வண்டிப் பாளையத்திலும், 1848இல் நெல்லிக் குப்பத்திலும், கள்ளக்குறிச்சியிலும், 1855இல் திருவெண்ணெய் நல்லூரிலும் சர்க்கரை ஆலைகள் நிறுவினர். இவற்றுள், நெல்லிக் குப்பம் ஆலை ஒன்று மட்டுமே இப்போது நடைபெறுவதைக் கொண்டு இந்த ஆலையின் சிறப்பை உணரலாம். இந்தியாவின் மிகச் சிறந்த சர்க்கரை ஆலையாக இது மதிக்கப்படுகிறது. நெல்லிக் குப்பம் புகைவண்டி நிலையத்தி லிருந்து இந்த ஆலைப் பகுதிக்குப் புகைவண்டிப் பாதைத் தொடர்பு உண்டு.

இஃதன்றி, பாரி கம்பெனியார் நெல்லிக்குப்பத்தில் பெரிய முதலீட்டில் இனிப்புப் பண்டத் தொழிற்சாலை ஒன்றும் (Confectionary) நடத்தி வருகின்றனர். இத் தொழிற்சாலை இனிப்பு (மிட்டாய்) வகைகளுடன் குளுகோஸ் (Glucose), எசன்ஸ் (Essences) முதலியனவும் செய்து வருகிறது. இங்கே செய்யப்படும் பொருள்கள் இந்தியா முழுவதிலும் விற்பனையாகின்றன.

காராமணிக் குப்பம்

இவ்வூர் கடலூருக்கு மேற்கே 8 கி.மீ. தொலைவில் கடலூர் திருக்கோவலூர் மாநில நெடுஞ்சாலையில் கெடிலத்தின் வடகரையில் உள்ளது. இவ்வூருடன் இணைந்தாற்போல் தென்பகுதியில் குணமங்கலம் என்னும் ஊர் உள்ளது. இப்பகுதியில் நெசவுத் தொழில் மிகுதி. இங்கே திங்கட்கிழமை தோறும் சந்தை கூடும். இப் பகுதிக்கும் நெல்லிக்குப்பத்திற்கும் இடையே ‘பூலோக நாதர் கோயில்’ என்னும் பழைமையான சிவன் கோயில் ஒன்றும் அதே பெயரில் சிற்றூர் ஒன்றும் உள்ளன.

காராமணிக் குப்பத்தில் நெடுஞ்சாலையை ஒட்டி ஒரு தோப்பு இருக்கிறது; அதில் ஓர் அழகிய மண்டபம் கட்டப்பட்டுள்ளது; அதையொட்டி ஒரு தாமரைத் தடாகம் இருக்கிறது. திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலிலிருந்து பாடலே சுரர் ஆனிப் பருவந்தோறும் இம் மண்டபத்திற்கு எழுந்தருளுவார். இறையுருவம் கெடிலம் ஆற்றிற்குச் சென்று நீராடும் விழா நடைபெறும். இந்த விழாவிற்குத் ‘தோப்புத் திருவிழா’ என்பது பெயர். இந்தப் பகுதி கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்ததாகும்.

பாகூர்

பாகூர் கெடிலத்திற்கு நேர் வடக்கே 4 கி.மீ. தொலைவிலும் பெண்ணையாற்றுக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவிலுமாகப் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டத்தின் தெற்கு எல்லை பாகூர்ப் பகுதிதான், புதுச்சேரி நகரிலிருந்து தெற்கே 18 கி.மீ. தொலைவிலுள்ள பாகூர் வரையும் புதுச்சேரி மாநிலப் பகுதி தொடர்ந்து ஒரு சேர அமைந்திருக்கவில்லை; நடுநடுவே தமிழகத் தென்னார்க்காடு மாவட்டத்தின் பகுதிகளும் உள்ளன. இவ்வாறு சொல்வதைவிட, தென்னார்க்காடு மாவட்டத்தில் கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய வட்டங்களின் இடையிடையே விட்டு விட்டுப் புதுச்சேரி மாநிலத் திட்டுப் பகுதிகள் உள்ளன என்று சொல்லலாம்.

புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி மாவட்டத்தில் எட்டு வட்டங்கள் உள்ளன; அவற்றுள், பாகூர் வட்டம் ஒன்றாகும். வட்டம் என்பது பிரெஞ்சு மொழியில் ‘கொம்மின்’ (Commune) எனப்படும். புதுச்சேரி மக்கள் ‘பாகூர் கொம்மின்’ என்றே சொல்லுவார்கள். இங்கே ஒவ்வொரு கொம்மினும் ஒரு நகராட்சி (முனிசிபாலிடி) போல ஆளப்படுகிறது, இந்த முறையில் பாகூர்ப் பகுதி ஒரு நகராட்சியாகவே நடத்தப்படுகிறது. தென்னார்க்காடு மாவட்டத்தில் கெடிலம் நடுவே ஓடும் கடலூர் ஒரு பெரிய நகராட்சியாகும். கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையும் பாகூர் நகராட்சியின் தெற்கு எல்லையும் ஒன்றோடொன்று முட்டிக் கொள்கின்றன. இதிலிருந்து, கெடிலக்கரைக் கடலூருக்கும் பாகூருக்கும் உள்ள நெருக்கத்தை அறியலாம். பாகூர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்ததாயினும் அதற்கு அண்மையிலுள்ள பெரு நகரம் கடலூர்தான். எனவே, பாகூர்ப் பகுதி மக்கள் நகர்ப்புறத் தேவைகளைக் கடலூருக்கு வந்தே முடித்துக் கொள்கின்றனர்.

பாகூர் பெண்ணையாற்றங்கரைக்கு அண்மையில் இருப்பினும் கெடிலக்கரைக்கும் உரியதேயாம். எங்கேயோ தோன்றி ஓடிவரும் பெண்ணையாறு கடலூரை நெருங்க நெருங்கக் கெடிலத்திற்கு மிக அண்மையில் வந்து விடுகிறது. எனவே, பெண்ணையாற்றங்கரை நாகரிகமெல்லாம் கெடிலக்கரை நாகரிகமுமாகும். இந் நிலையில் இந்நூலில் இடம் பெறுவதற்குப் பாகூருக்கு முழு உரிமையும் உண்டு.

கடலூர் - புதுச்சேரி மாவட்ட நெடுஞ்சாலையில் கடலூருக்கு வடக்கே 4 ஆவது கி. மீட்டரில் மேற்கு நோக்கி ஒரு பாதை பிரிந்து பாகூருக்குப் போகிறது. அந்தப் பாதையில் 3 கி.மீ. தொலைவு சென்றால் பாகூரை அடையலாம். புதுச்சேரி மாநிலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க இன்றியமையா இடங்களுள் பாகூரும் ஒன்றாகும். ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே பாகூரிலும் போர் நடக்கத் தவறவில்லை. 1752 இல் லாரென்ஸ் என்னும் ஆங்கிலேயர் பாகூரில் பிரெஞ்சுக்காரர்களைக் கடுமையாகத் தாக்கினார்.

அரசியல் துறையைவிட, கல்வித் துறையிலும் சமயத் துறையிலும் ஒரு காலத்தில் பாகூர் மிகமிகப் புகழ்பெற்றிருந்தது. இவ்வூரில் எட்டாம் நூற்றாண்டில் ஒரு பெரிய வடமொழி பல்கலைக்கழகம் இருந்தது. இது பாகூர் வட்டாரத்து அறிஞர்களாலேயே நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. மாணாக்கர்கள் இங்கேயே உண்டு உறைந்து கல்வி கற்றனர். அந்தக் காலத்தில் அரசோச்சிய நிருபதுங்க வர்மப் பல்லவப் பேரரசன் (855 - 896) பாகூர்ப் பல்கலைக்கழகத்திற்கு மூன்று சிற்றூர்களை முற்றூட்டாக அளித்ததாகச் செப்பேடுகளால் அறியப்படுகிறது. அவ்வூர்களாவன: சேத்துப் பாக்கம், விளங்காட்டங் காடவனூர், இறைப்புனச்சேரி ஆகியவை. பாகூரில் ஒரு பல்கலைக்கழகம் இருந்ததிலிருந்து, இவ்வூர் அந்தக் காலத்தில் பெற்றிருந்த இன்றியமையாத்தன்மை இனிது புலனாகும்.

பாகூரில் சிவன் கோயில் உள்ளது. இது பல்லவ மன்னர் காலத்தது எனச் சொல்லப்படுகிறது. சிவன் கோயிலில் உள்ள நாட்டியச் சிற்பங்கள் மிகவும் காணத்தக்கவை. அவற்றுள் - சிலவற்றின் படங்களை, இந்நூலில் ‘கல்வி - கலைத்துறைகள்’ என்னும் தலைப்பில் காணலாம். கல்வெட்டுகளும் உள்ளன. கோயிலின் பெயர் மூலட்டானம். சிவன் பெயர்: மூலட்டர், மூலட்ட நாதர்.

இந்தக் கோயில், இராட்டிரகூட மன்னன் மூன்றாம் அமோக வர்ஷன் மகனாகிய மூன்றாம் கிருஷ்ண தேவன் என்னும் கன்னர தேவனால் திருப்பணி செய்யப் பெற்றதாகும். கன்னர தேவன் கி.பி. 939இல் பட்டம் சூட்டிச் கொண்டான். இவன் சோழர்களோடு பொருது வென்று, அவர்தம் ஆட்சியின் கீழ் இருந்த பல பகுதிகளைச் சிறிது காலம் அரசாண்டான். சோழரைத் தான் வென்றதைக் குறிக்கு முகத்தான், ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட கன்னர தேவன்’ என்னும் வெற்றித் தொடரைத் தன் பெயருக்கு முன்னால் சேர்த்துப் பெருமையடித்துக் கொண்டான். முதலாம் பராந்தகன், அவன் மக்கள் இராசாதித்தன், கண்டராதித்தன் முதலியோரிடம் முரணிய கன்னர தேவனது கொட்டத்தை இரண்டாம் பராந்தக சோழன் ஒடுக்கிவிட்டான்.

கன்னர தேவன் தன் ஆட்சிக் காலத்தில் பல ஊர்க் கோயில்களில் திருப்பணி செய்துள்ளான். அவற்றுள், பாகூர்க் கோயிலும் ஒன்று. பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சில்லாண்டுகள் பாகூர்ப் பகுதி கன்னர தேவனது ஆட்சியின்கீழ் இருந்ததற்குச் சான்று பகரும் முறையில் பாகூர் மூலட்டானத்துக் கோயிலில் உள்ள கல்வெட்டொன்று வருமாறு:

(கன்னர தேவன், 8 கி.பி. 962)
“ஸ்வஸ்தி ஸ்ரீ கன்னர தேவர்க்கு யாண்டு இருபத்திரண்டு, வேசாலிப்பாடி வடகரை வாகூர் நாட்டு மன்றாடிகளே, வாகூர் ஸ்ரீ மூலட்டானத்துப் பெருமானுக்கு நாங்கள் வைத்த தன்மம் - கட்டிலேறப் போம்போது ஒரு. ஆடு குடுத்துக் கட்டிலேறுவோமாகவும், புறநாட்டி நின்று வந்து இஞ்ஞாட்டிற் கட்டிலேறு மன்றாடி வசம் ஒரு ஆடு குடுப்பதாகவும், குடாது திறம்பினோமைக் கணப் பெருமக்களும் தேவரடியாரும் இரண்டு ஆடு பிடித்துக் கொள்ளப் பெறுவதாகவும், ஒட்டிக் குடுத்தோம் இஞ்ஞாட்டு மன்றாடிகளோம். இத்தன்மம் சந்திராதித்தவல் நிற்பதாக நிறுத்திக் குடுப்போமானோம். இஞ்ஞாடு மதகு செய்கின்ற மதகரோம் - ஸ்ரீ.”
இந்தக் கல்வெட்டு, கன்னர தேவன் பட்டம் ஏற்றுக் கொண்ட இருபத்திரண்டாம் ஆண்டில் வெட்டப்பட்டதாகக்

கூறப்பட்டுள்ளது. கன்னர தேவன் அவனது நாட்டில் பட்டம் ஏற்றது 939 ஆம் ஆண்டிலாகும். அதனோடு 22 ஆண்டுகள் சேர்த்தால் 962 ஆகிறது. ஆகவே, இக்கல்வெட்டு 962இல் வெட்டப்பட்டது என்பது தெளிவு. எனவே, 962ஆம் ஆண்டளவில் பாகூர்ப் பகுதி கன்னர தேவனது ஆட்சியில் அடங்கியிருந்தது என்பது புலனாகிறது. இவன் திருப்பணி செய்துள்ளான் என்பதை அறிவிக்கும் சான்றாகப் பாகூர்க் கோயிலில் இவனது உருவச் சிற்பம் உள்ளது. (மேலேயுள்ளது)

இது கன்னர தேவனது உருவச் சிற்பமாகத்தான் இருக்கக் கூடும் என்று உய்த்துணரப்படுகிறது. சிவன் கோயிலுக்குச் செய்யப்பட்டுள்ள அறக்கட்டளையைக் கூறும் மேலுள்ள கல்வெட்டில், ‘வாகூர் நாட்டு மன்றாடிகளே, வாகூர் ஸ்ரீ மூலட்டானத்துப் பெருமானுக்கு’ என்றிருக்கும் பகுதி கவனிக்கத்தக்கது. பாகூர் கல்வெட்டில் ‘வாகூர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று மக்கள் பேச்சு வழக்கில் வாவூர்’ என்கின்றனர். இது நிற்க, ‘வாகூர் நாட்டு மன்றாடிகளே’ என்னும் தொடரைக் கொண்டு, அன்று பாகூரைச் சூழ்ந்த பகுதி ‘பாகூர் நாடு’ என அழைக்கப்பட்டதாகவும், அப் பகுதியின் தலைநகராகப் பாகூர் விளங்கியதாகவும் அறியலாம். பாகூர் நாடு இன்று புதுச்சேரி மாநிலத்தில் ‘பாகூர் கொம்மின்’ எனப்படுகிறது; தலைநகர் பாகூரேதான். இன்று பாகூரில் உயர்நிலைப் பள்ளி உள்ளது.

திருவயிந்திரபும்

கெடிலக்கரையை ஒட்டியுள்ள ஒரே ஒரு வைணவத் திருப்பதியான திருவயிந்திரபுரம், கடலூர்த் தலைநகரப் பகுதிக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் - கடலூர்த் திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில், கடலூர் - திருக் கோவலூர் மாவட்ட நெடும்பாதையில், கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது. ஊரின் வடக்கு எல்லையில் - அணையின் கீழ்பால் நெடும்பாதை ஆற்றைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. நெடும்பாதையில் பேருந்து வண்டி போக்குவரவு உண்டு. வெள்ளக் காலத்தில் மட்டும் பேருந்து வண்டிகள் இவ்வழியே செல்லாமல் மஞ்சக் குப்பம் வழியாகச் செல்லும். கடலூருக்கும் - திருவயிந்திர புரத்திற்குமாக உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) போக்குவரவு உண்டு. புகைவண்டியில் வருபவர்கள், திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி மேற்கே 5 கி.மீ. செல்ல வேண்டும். இங்கிருந்து பேருந்து வண்டி வசதியிருப்பதன்றி, மிகுதியாகக் குதிரை வண்டி வசதியும் உண்டு. திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தைவிட, அதனையடுத்து மேற்கேயுள்ள வரகால்பட்டுப் புகைவண்டி நிலையம் திருவயிந்திரபுத்திற்கு மிகவும் அணித்தாகும். இந்த நிலையத்திற்கும் திருவயிந்திரபுரத்திற்கும் இடையே கெடிலம் ஆறு வடக்கும் - கிழக்குமாக வளைந்து செல்கிறது. இந்த நிலையத்திலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை கி.மீ. தொலைவு தெற்கு நோக்கி நடந்து ஆற்றின் வளைவைக் கடந்து திருவயிந்திரபுரத்தை அடையவேண்டும். நடக்க முடியாதவர்கள் திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி வண்டி பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் பாதையில் இருக்கிறது.

திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கேப்பர் மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தையொட்டிக் கிழக்கு நோக்கி வந்து கொண்டிருக்கும் கெடிலம் ஆறு, திருவயிந்திரபுரம் வந்ததும் ᒪஇந்தச் செங்கோணத்தில் நேர் வடக்காக வளைந்து திரும்புகிறது. இந்த இடத்தில், மேற்கும் கிழக்குமாக நீண்டு கிடக்கும் கேப்பர் மலையிலிருந்து ஒரு குன்று வடக்கு நோக்கிப் பிதுங்கிக் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கேப்பர் மலையில் வடக்கு நோக்கி ஒரு பிதுக்கம் வளைந்து நீட்டிக் கொண்டிருப்பதாலேயே அம் மலையின் அடிவாரத்தைத் தொடர்ந்து ஒடி வந்து கொண்டிருக்கும் கெடிலம் ஆறும் இவ்விடத்தில் வடக்கு நோக்கி வளைந்து செல்கிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஒரு கி.மீ. தொலைவு ஓடி மீண்டும் கிழக்கு நோக்கி வளைந்து விடுகிறது.

கிழக்கு நோக்கி ஓடிவரும் கெடிலம் வடக்கு நோக்கி திரும்புகிற முனையில் (ட) ஆற்றின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் உள்ளது. இங்கே ஆறு தெற்கு - வடக்காக ஒடுகிறது. வடக்கு நோக்கியோடும் ஆற்றிற்கும் வடக்கு நோக்கியுள்ள மலைப் பிதுக்கத்திற்கும் நடுவே திருவயிந்திரபுரம் பெருமாள் கோயில் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயிலிலிருந்து மலைக்குப் படிக்கட்டு மேல்நோக்கிச் செல்கிறது; கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து ஆற்றிற்குப் படிக்கட்டு கீழ் நோக்கிச் செல்கிறது. இதிலிருந்து, ஆற்றிற்கும் மலைக் குன்றுக்கும் நடுவே கோயில் நெருக்குண்டு கிடத்தல் புலனாகும். ஆறு கோயிலின் மேற்கு வாயிலை முட்டி மோதிக்கொண்டு செல்கிறது எனலாம். கோயிலின் கோபுரம், மதில் முதலியவற்றின் தோற்றம் தலைகீழாய்த் தண்ணீரில் தெரிவதைக் காணலாம். திருவயிந்திர புரத்தில் வடக்கு நோக்கிப் பிதுங்கியுள்ள குன்றின் படத்தையும், வடக்கு நோக்கித் திரும்பி ஓடும் ஆற்றின் படத்தையும், தண்ணிரில் கோயிலின் தோற்றம் தெரியும் படத்தையும் இந்நூலில் ‘வரலாறு கண்ட திசை மாற்றம்’ என்னும் தலைப்பில் (பக்கம் : 48 - 50) காணலாம். மற்றும், கோயிலின் மிக அண்மையில் வடபுறம் இருக்கும் அணை பற்றியும், அந்த இடத்தின் இயற்கைக் காட்சிச் சிறப்புப் பற்றியுங்கூட அந்தத் தலைப்பில் விரிவாகக் காணலாம்.

திருவயிந்திரபுரம் கோயில் தேவநாதசாமி கோயில் எனவும் தெய்வநாயகப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படும். பெருமாள் பெயர்: தேவநாதர், தெய்வநாயகப் பெருமாள்; தாயார் பெயர்: வைகுந்த நாயகி, செங்கமலத் தாயார். ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் ‘திருவயிந்திரபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இப் பெயர் இன்று ‘திருவந்திபுரம்’ எனச் சுருங்கி விட்டது. இதனையே மக்கள் தமது திருந்தாத கொச்சை வழக்கில் ‘திருந்திபுரம்’ எனக் கூறுகின்றனர். இவ்வூர் புராணங்களில் ‘திருவகீந்திரபுரம்’ எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. அயிந்திரன் அகீந்திரன் என்றால் ஆதிசேடன் என்று பொருளாம்; ஆதிசேடன் வழிபட்ட ஊராதலின் அயிந்திரபுரம் - அகீந்திரபுரம் என அழைக்கப்பட்டதாம். அயிந்திரபுரம் என்னும் பெயர் சுருங்கி மருவி ‘அயிந்தை’ என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது சில கல்வெட்டுகளில் திருவேந்திபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதாந்த தேசிகர் முதலிய வைணவப் பெருமக்கள், திருவயிந்திரபுரத்தருகில் ஒடும் கெடிலத்திற்கு ஒரு பெருமை கற்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுகின்றன; இவ்வாறே மேற்கு - கிழக்காக ஓடிவரும் கெடிலம் திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கித் திரும்பித் தெற்கு வடக்காக ஒடுகிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஓடுவது ஒரு புதுமையாம் - அற்புதமாம். இங்கே வடக்கு நோக்கி ஒடுவதால் கெடிலத்திற்கு ‘உத்தர வாகினி’ என்னும் சிறப்புப் பெயர் ஈந்து போற்றியுள்ளனர் பெருமக்கள். உத்தரம் என்றால் வடக்கு. வடக்கு நோக்கி ஒடும் ஒர் ஆற்றோட்டத்தின் கரையில் ஒரு தெய்வத் திருப்பதி அமைந்திருப்பது மிகவும் சிறப்பாம். இந்தச் சிறப்பு திருவயிந்திரபுரத்திற்குக் கிடைத்திருக்கிறது. வடக்கு நோக்கி ஓடும் உத்தர வாகினியாகிய கெடிலத்தின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் அமைந்திருப்பதால், இவ்வூர் மிகவும் பெருமைக்கு உரியதெனப் பெருமக்களால் போற்றப்படுகிறது.

இந்த அடிப்படையில், திருவயிந்திரபுரம் என்னும் பெயர் வந்ததற்கு ஒரு புதுக் காரணம் கற்பித்துக் கூற விரும்புகிறேன் அடியேன். அயிந்திரம் என்னும் சொல்லுக்குக் கிழக்கு என்னும் பொருளும் உண்டு. கெடிலத்தின் கிழக்குக் கரையில் இருக்கும் ஊர் ஆதலின் ‘அயிந்திரபுரம்’ என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அடியேன் கற்பித்துக் கூறும் காரணம். தமிழகத்தில் மற்ற ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுவதால், ஆற்றங்கரைத் திருப்பதிகள் ஆற்றின் வடகரையிலோ அல்லது தென்கரையிலோதான் இருக்கும்; ஆற்றின் கிழக்குக் கரையில் திருப்பதிகள் அமைவதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இந்த நிலையில் திருவயிந்திரபுரம் கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருப்பது ஒரு புதுமை - அற்புதம்! எனவே, அயிந்திரக் (கிழக்குக்) கரையில் அமைந்திருக்கும் இவ்வூரை ‘அயிந்திரபுரம்’ என அக்காலத்தில் பெரியவர்கள் அழைத்திருக்கலாம் என்பது அடியேனது புதிய கற்பனை. ஆறு வடக்கு நோக்கி ஒடுவது அற்புதம் என்றால், ஆற்றின் கிழக்குக் கரையில் தெய்வத் திருப்பதி அமைந்திருப்பதும் அற்புதம் என்பது சொல்லாமலே விளங்குமே! இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வர்,ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற முறையில் முடிந்த முடிபாக இங்கே அடியேன் கூறவில்லை - கூறவும் முடியாது; சிந்தனையைக் கிளறித் துண்டும் முறையிலேயே ஆராய்ச்சியாளர் முன் இந்தக் கருத்தை அடியேன் வைத்துள்ளேன். சிறப்பு கருதித் திசையின் பெயரால் கெடிலம் ‘உத்தர வாகினி’ என அழைக்கப்படுவதைப் போல, ஊரும் சிறப்பு கருதித் திசையின் பெயரால் அயிந்திரபுரம் என அழைக்கப்படலா மல்லவா? திருவயிந்திரபுரத்துக் கோயிலின் தோற்றம் முன்பக்கமுள்ளது.

இந்தப் படம் கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரேயுள்ள மலைமேல் நின்றுகொண்டு எடுத்தது. படத்தில் முகப்பில் மலைப் படிக்கட்டு தெரிவதைக் காணலாம். படிக்கட்டின் அடியில் - நடுவில் ஒருவர் நின்று கொண்டிருக்கிறாரே - அங்கேதான் கோயிலின் கிழக்கு வாயில் இருக்கிறது; அவ்வாயிலின்மேல் கோபுரம் இல்லை. மேற்கு வாயிலின்மேல் கோபுரம் இருக்கிறது; அது படத்தில் தொலைவில் தெரிகிறது. ஆற்றுப் பக்கமாக இருக்கும் மேற்குக் கோபுரவாயில் தான் கோயிலின் சிறப்பு (முக்கிய) வாயிலாகக் கருதப்படுகிறது. இறையுருவங்கள் விழாக்காலங்களில் வெளியில் செல்வது வருவது எல்லாம் இந்த மேற்குக்கோபுர வாயிலால் தான். மேற்குவாயிலே சிறப்பிடம் பெற்றிருப்பினும், கருவறையில் திருமால் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பது கிழக்கு நோக்கியே யாம். கோயிலின் நடுவிலும் ஒரு சிறுகோபுரம் உள்ளது. நடுக்கோபுரத்தையும் மேற்குக் கோபுரத்தையும் படத்தில் காணலாம். கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரே மலையிருக்கிறது; இம் மலையின்மேலும் கோயில் உண்டு; அம் மலைக்கோயில் அடுத்த பக்கமுள்ளது.

இந்த மலைக் கோயிலும் கிழக்கு நோக்கியே அமைந்துள்ளது. ‘அயக்கிரீவன் கோயில்’ என்பது இதன் பெயர் அயக்கிரீவன் என்பது திருமாலின் பெயர்களுள் ஒன்று. திருமாலின் தோற்றங்களுள் அயக்கிரீவன் தோற்றமும் ஒன்று. கெ.23. அயம் (ஹயம்) என்றால் குதிரை; கிரீவம் என்றால் கழுத்து; அயக்கிரீவன் என்றால் குதிரைக் கழுத்து உடையவன் என்பது பொருளாம்; திருமாலின் அயக்கிரீவத் தோற்றத்தில் ஒரு புராணக் கதை அடங்கியுள்ளது. அயக்கிரீவன் கோயில் முகப்பில் இருக்கும் மண்டபத்தின் மேல் உள்ள விமானம் காணத்தக்கது. மலைமேலும் ஒரு கிணறு உண்டு.


அயக்கிரீவன் கோயில் உள்ள மலைக்கு ‘ஒளஷத கிரி’ என்னும் பெயர் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒளஷதம் = மருந்து; கிரி = மலை; ஒளஷதகிரி = மருந்து மலை, இந்த மலையில் மருத்துவ மூலிகைகள் பல உள்ளன. இந்த மலைக் காற்றும் மலையடிவாரத் தண்ணீரும் நோய் தீர்க்கும் மருந்துகளாம்; அதனால் இம்மலை மருத்துவமலை என அழைக்கப்படுகிறது.

“முன்னொரு காலம் விண்வழியே உலாச் சென்ற திருமால் மருத்துவமலையில் தங்கி இளைப்பாறினார். அப்போது அவர்க்குத் தாகவிடாய் தோன்ற, ஆதிசேடனும் கருடனும் நீர்கொண்டுவரச் சென்றனர். ஆதிசேடன் மலையின்கீழ்த் தரையை வாலால் அடித்துப் பிளந்து கிணறு உண்டாக்கி நீர் கொணர்ந்து தந்தார். அந்தக் கிணற்றுக்குச் ‘சேஷ தீர்த்தம்’ என்பது பெயர். கருடன் தன் அலகால் தரையைக் கிழித்து நீர் ஆறாகப் பெருகச் செய்து அதிலிருந்து நீர் கொணர்ந்தார்; அந்த ஆற்றிற்குக் ‘கருட தீர்த்தம்’ அல்லது ‘கருடநதி’ என்பது பெயர் அதுதான் கெடிலம் ஆறு” - இது புராணங்களை ஒட்டிய கதை. ஆதிசேடன் வாலால் அடித்துத் தோண்டியதாகச் சொல்லப்படும் சேஷதீர்த்தம் என்னும் கிணறு திருவயிந்திரபுரம் கீழ்க்கோயிலில் உள்ளது. அந்தக் கிணற்றின் கைப்பிடிச் சுவரில் ஆதிசேடன் (பாம்பு) உரு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுத் தண்ணீரின் நிறமும் வாடையும் இயற்கைக்கு மாறாய் உள்ளன - அதாவது, நன்றாயில்லை. காரணம், வேண்டி நேர்ந்து கொண்ட (பிரார்த்தித்துக் கொண்ட) அன்பர்கள் பால், மிளகு, வெல்லம், குடம் முதலியவற்றை அக் கிணற்றில் கொட்டுகின்றனர்; காணிக்கையாகக் காசும் போடுகின்றனர்; இதனால் தண்ணீரின் தன்மை மாறுதலாயுள்ளது. ஆனால், இந்தக் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டுதான் கோயிலில் உணவுப் பொருட்கள் ஆக்கப்படுகின்றன; இந்தத் தண்ணீரில் ஆக்கப்படுவதால், உணவுப் பொருட்கள் மிகவும் சுவை உடையனவாகவும் நெடுநேரம் கெடாதனவாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

வைணவர்களால் ‘நடுநாட்டுத் திருப்பதி’ எனச் சிறப்பித்துக் கூறப்படும் ‘திருவயிந்திரபுரம்’ திருக்கோயில், திருமங்கை யாழ்வாரின் மங்களாசாசனப் பாடல் பெற்றுள்ளது. இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்த மிகச் சிறந்த வைணவ ஆசாரியரான வேதாந்த தேசிகர் இவ்வூர் இறைவன்மேல் தமிழிலும் வடமொழியிலும் பல பாடல்கள் பாடியுள்ளார். இவ்வூரைப் பற்றி வடமொழியில் பிரம்மாண்ட புராணம், கந்த புராணம் (சைவக் கந்த புராணம் வேறு), பிருகந் நாரதிய புராணம் முதலிய நூல்கள் உள்ளன. கருட நதியாகிய கெடிலம் கங்கைக்கு ஒப்பானது எனத் திருமாலால் பாராட்டிப் புகழப் பட்டிருப்பதாகக் கந்த புராணம் (வைணவ புராணம்) முதல் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழிலே, மும்மணிக் கோவை, நவரத்தினமாலை முதலிய சிற்றிலக்கியங்களும் இவ்வூரின் மேல் இயற்றப் பட்டுள்ளன. “வெற்புடன் ஒன்றி அயிந்தையில் வெவ்வினை தீர் மருந்தொன்று அற்புதமாக அமர்ந்தமை” என மும்மணிக் கோவையில் அயிந்தை (அயிந்திரபுரம்) பாராட்டப் பெற்றுள்ளது.

திருவயிந்திரபுரத்தில் சித்திரைத் திங்களில் பத்து நாள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் திருவிழா நாளான சித்திரைப் பருவத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும். அன்று மிகப் பெருந்திரளான மக்கள் இங்கே கூடுவர். எட்டாம் திருவிழா அன்று இரவே ஆயிரக் கணக்கான மக்கள்வந்து கூடி ஆற்று மணலில் படுத்து உறங்கியும் உரையாடியும் இரவுப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பர். வைகறையில் எழுந்து ஆற்றில் நீராடித் தேர்த் திருவிழாவைக் கண்டுகளிப்பர். இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்களையியற்றிய வேதாந்த தேசிகரின் நினைவாக ஒரு மண்டபம் உள்ளது. அம் மண்டபத்திற்கு விழா நாளில் இறையுருவம் கொண்டு செல்லப்படும். இது தேசிகரின் சிறப்பிற்குச் சான்று. தேசிகருக்குக் கருடாழ்வார் அருளுரை வழங்கிய விழா புரட்டாசித் திருவோணத்தில் நடைபெறும். கார்த்திகைத் திங்களில் ‘தாலாட்டு விழா’ என்னும் ஒருவகை விழா இனிது நடைபெறும். மாசி மகத்தன்று தேவநாதப் பெருமாள் கடலூர்க் கடற்கரைக்கு எழுந்தருளி நீராடுவார்; அன்றிரவு வண்டிப் பாளையத்திலுள்ள மண்டபத்தில் தங்கி விழா வயர்ந்து செல்வார்.

மக்கள் பலர் திருவயிந்திரபுரம் வந்து முடியெடுத்துக் கொள்வர். குடும்பப் பழக்கமாகக் குழந்தைகட்கு முடியெடுப்பதல்லாமல், நேர்ந்து வேண்டிக்கொண்ட பெரியவர்களும் வந்து முடியெடுத்துக் கொள்வதுண்டு. திருவயிந்திரபுரம் தெற்குத் திருப்பதி எனப் புராணங்களாலும் மக்களாலும் போற்றப்படும் பெருமையுடையதாதலால், திருப்பதிக்குப் போக முடியாதவர்கள் அங்கே செலுத்துவதாய் நேர்ந்துகொண்ட கடனை இங்கே வந்து செலுத்துவதும் உண்டு. திருப்பதி வேங்கடத்தான் கோயில் முன் காலத்தில் முருகன் கோயிலாய் இருந்தது என்று சிலர் சொல்வதுபோல், திருவயிந்திரபுரம் கோயிலும் முன்காலத்தில் சைவக் கோயிலா யிருந்தது எனச் சிலர் சொல்வதுண்டு; அவர்கள் தம் கூற்றுக்குச் சான்றாக, இக்கோயிலுக்குள் விநாயகர் உருவமும் சிவனது தட்சணாமூர்த்தி உருவமும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். சிலர் ஊர்ச் சிவன் கோயில்களுக்குள்ளே கூடத்தான் திருமால் கோயில் இருக்கிறது. சிதம்பரத்தில் இரண்டும் அருகருகே இல்லையா? எனவே, இதுசார்பாக எதையும் திட்டவட்டமாகக் கூறமுடியாது. பழமுதிர்சோலை என்னும் கள்ளழகர் கோயில் பற்றியும் இதுபோன்ற கருத்து வேறுபாடு காணப்படுவது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

நீராடு செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்ட அர்ச்சுனன் திருவயிந்திரபுத்திற்கும் வந்து நீராடி வழிபாடு நடத்தினானாம். இதனை வில்லிபாரதம் - ஆதிபருவம் அருச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலுள்ள,

"மெய்யாகம வதிகைத்திரு வீரட்டமு நேமிக்
கையாளான் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான்.”

என்னும் பாடல் (17) பகுதியால் அறியலாம். வெளியூரார் சிலர் திருவயிந்திரபுரம் கோயிலில் வந்து திருமணம் செய்து கொண்டு போவதும் உண்டு.

திருவயிந்திரபுரத்தில் சோழர், பாண்டியர் முதலியோர் காலத்தைச் சேர்ந்தனவாய் ஐம்பதிற்கு மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் மூன்றாம் இராச ராசச் சோழனது கல்வெட்டொன்று மிகவும் குறிப்பிடத்தக்கது. பாண்டியர்க்குத் தோற்றோடிய அச்சோழனைக் கோப்பெருஞ் சிங்கன் சேந்தமங்கலத்தில் சிறை வைத்த செய்தியும், சோழனுக்கு நண்பனான போசள (மைசூர்) மன்னன் வீரநரசிம்ம தேவன் கோப்பெருஞ்சிங்களை முறியடித்துச் சோழனைச் சிறை மீட்ட செய்தியும் இந்நூலில்'கெடிலக்கரை அரசுகள் - கோப்பெருஞ் சிங்கன்’ என்னும் தலைப்பில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை விவரிக்கும் மூன்றாம் இராசராசனது கல்வெட்டு திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது; அது வருமாறு:-

“ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ ராஜ ராஜ
தேவர்க்கு யாண்டு பதினைந்தாவதில் எதிராமாண்டு,
ப்ரதாபச் சக்கரவர்த்தி ஹொய்சண ஸ்ரீவீர
நரசிம்மதேவன் சோழ சக்கரவர்த்தியைக் கோப்பெருஞ்
சிங்கன் சேந்த மங்கலத்தே பிடித்து கொடுவந்து
தன்படையை இட்டு ராஜ்யத்தை அழித்து
தேவாலையங்களும் விஷ்ணஸ்தானங்களும்
அழிகையாலே இப்படி தேவன் கேட்டருளி, சோழ
மண்டல ப்ரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி
நிலைநிறுத்தி அல்லது இக்காளம் ஊதுவதில்லை
என்று தோர சமுத்திரத்தினின்றும் எடுத்து வந்து மகத
ராஜ்ய நிர்ம்மூலமாடி, இவனையும் இவன் பெண்டு
பண்டாரமும் கைக்கொடு பாச்சூரிலே விட்டு கோப்
பெருஞ் சிங்கன் தேசமும் அழித்து சோழ
சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக் கொடு என்று
தேவன் திருவுள்ளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த
ஸ்வஸ்தி ஸ்ரீமனு மஹாப்ரதானி பரம விச்வாஸி
தண்டிந கோபன் ஜகதொப்ப கண்டன் அப்பண
தண்ணாக்கனும் சமுத்திர கோப்பய தண்ணாக்கனும்
கோப்பெருஞ் சிங்கன் இருந்த எள்ளேரியும் கல்லியூர்
மூலையும் சோழர்கோன் இருந்த தொழுதகையூரும்
அழித்து, வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாழ்வான்
சீனத் தரையன், ஈழத்து ராஜா பராக்கிரம பாஹு

உள்ளிட்ட முதலி நான்கு பேரையும்....கொன்று
இவர்கள் குதிரையும் கைகொண்டு, கொள்ளிச்
சோழகோன் குதிரைகளையும் கைக்கொண்டு,
பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எடுத்து வந்து
தொண்டை மானல்லூர் உள்ளிட தமுக்குர்களும்
அழித்து அழி.......க்காடும் வெட்டிவித்து,
திறாப்பாதிரிப் புலியூரிலே விட்டு இருந்து, திருவதிகைத்
திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து,
வாரணவாசி ஆற்றுக்குத் தெற்கு சேந்த மங்கலத்துக்கும்
கிழக்கு கடலிலே அழி ஊர்களும் குடிக்கால்களும்
சுட்டும் அழித்தும் பெண்டுகளை பிடித்தும் கொள்ளை
கொண்டும் சேந்த மங்கலத்திலே எடுத்துவிடப்போகிற
அளவிலே, கோப்பெருஞ் சிங்கன் குலைந்து சோழச்
சக்கரவர்த்தியை எழுந்தருளிவிக்கக் கடவதாக
தேவனுக்கு விண்ணப்பம் செய, இவர் விட்டு நமக்கும்
ஆள் வரக் காட்டு கையாலே சோழச் சக்கரவர்த்தியை
எழுந்தருளிவித்துக் கொடு போந்து ராஜ்யத்தே புகவிட்டது."

இந்தக் கல்வெட்டு வாயிலாக, போசன மன்னன் வீர நரசிம்மன் சோழனுக்குப் பரிந்து கொண்டு, கோப்பெருஞ் சிங்கனது ஆட்சியின் கீழ் இருந்த பல பகுதிகளைக் கண்டபடி தாக்கித் தீயிட்டு அழித்திருக்கிறான் என அறியலாம். இந்தக் கல்வெட்டின் இடையே ‘மகத ராஜ்ய நிர்ம்மூலமாடி’ என்றிருக்கும் பகுதியைக் கொண்டு, திருமுனைப்பாடி நாட்டின் ஒரு பகுதிக்கு ‘மகத நாடு’ என்னும் பெயர் அன்றிருந்தமை புலனாகும்.

தொண்டையர் கோமான் அடையவளைந்தான் என்னும் குறுநில மன்னனுடைய படை மறவரின் பெருமையை அறிவிக்கும் கல்வெட்டுச் செய்யுள் ஒன்று, தேவநாயகப் பெருமாள் கோவில் மேலைக் கோபுர வாயிலின் இடப்புறச் சுவரில் உள்ள விவரமும் அச் செய்யுளும், இந்நூலில் ‘கெடில நாட்டுக் கல்வெட்டுக்கள்’ என்னும் தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்தச் செய்திகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு பார்க்குங்கால் அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் அரசியல் அரங்கில் பெற்றிருந்த சிறப்பிடம் புலப்படும். கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராசராசச் சோழனைச் சேந்தமங்கலத்தில் சிறை வைத்திருந்ததன்றித் திருவயிந்திரபுரத்திலும் சில நாள் சிறை வைத்திருந்ததாகச் சிலர் கூறுவதும் ஈண்டு கருதத்தக்கது. வேதாந்ததேசிகர் தம் பாடல்களில்,

“மகிழ்ந்து வாழும் போதிவை நாம் பொன்னயிந்தை
நகரில் முன்னாள்”

"அயிந்தை மாநகரில் அமர்ந்தனை எமக்காய்”

எனத் திருவயிந்திரபுரத்தை நகர் - மாநகர் எனச் சிறப்பித்துக் கூறியிருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு, அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் ஒரு சிறந்த நகராய் விளங்கியதென அறியலாம்.

திருவயிந்திரபுரச் சீமையை ஆங்கிலேயர்கள் 1749ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப்பிடமிருந்து 28,000 ரூபாய்க்கு வாங்கினர். வடமொழியும் தென்மொழியும் பயின்று வந்த திருவயிந்திரபுரம் வைணவ அந்தணர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமும் பயிலத் தொடங்கினர். அதன் பயனாய்ப் பல குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறிடங்களில் இன்று அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கு அன்று இருந்த பொலிவு இன்று இல்லையென்றே சொல்லலாம். இந்த ஊரில் வடகலை வைணவர்களும் தென் கலை வைணவர்களும் பிணங்கி நீதிமன்றம் வரையும் சென்று வழக்கிட்டுக் கொண்டதுண்டு. சென்னப்ப நாயக்கன் பாளையத்தைப் போலவே இவ்வூரிலும், கிழக்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள கடலூர்ப் பகுதியைக் ‘கிழக்கு’ என்னும் திசைப் பெயரால் சுட்டும் வழக்கம் உள்ளது; அதாவது, ‘கிழக்கே போகிறேன்', ‘கிழக்கே போயிருக்கிறார்’ என்னும் வழக்கை இவ்வூரிலும் காணலாம். இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்துள்ளது.

இவ்வூரில் கெடிலத்தில் அணை கட்டப்பட்டிருப்பதால் வளத்திற்கும் குறைவில்லை. இவ்வூர் மலையிலும் மலையடிவாரத்திலும் வெள்ளைக் களிமண் படிவம் இரண்டறக் கலந்துள்ளது. வெள்ளைக் களிமண் வெட்டியெடுக்கப்பட்டு, உரம் செய்வதற்காகக் கூடலூரிலுள்ள தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் திருவயிந்திரபுரம் புகழ் பெற்றுத் திகழ்கிறது.

கடலூர்ப் பெருநகரம்

சென்னைக்கு நேர் தெற்கே 160 கி.மீ. (100 கல்) தொலைவிலுள்ள கடலூர் முதல் தரமான ஒரு பெரிய நகரமாகும். கெடிலம் ஆறு கடலுர் நகரைச் சுற்றி வளைத்து ஒடுகிறது. கடலூர் நகருக்கு நடுவே ஒடுகிறது; கடலூர் நகருக்கு அருகில் (கடலூர்க்) கடலில் கலக்கிறது. கடலூர் நகர எல்லைக்குள் கெடிலத்தின் கரையிலே பாடல் பெற்ற பதி, புகைவண்டி சந்திப்பு நிலையம், உயர்நிலைப் பள்ளிகள். தொழிற் பள்ளிகள், கலைக் கல்லூரிகள், மாவட்ட மருத்துவ நிலையம், திரைப்பட மாளிகைகள், தலைநகர்த் தலைமை அலுவலகங்கள், பெரிய உணவு விடுதிகள், பெருவெளித் திடல் (மைதானம்), தொழிற்கூடங்கள், வணிக நிலையங்கள், பெரிய கடைத் தெரு, தலைநகர்க் கோட்டை, துறைமுகம் முதலியவை அமைந்துள்ளன. இவையனைத்தும் தன் கரைக்கு அருகில் அகப்படும் அளவில் கெடிலம் ஆறு கடலூர் நகர எல்லைக்குள் பல வளைவும் பிரிவும் பெற்றுச் செல்கிறது.

நகராட்சி

கடலூர் முதல் தரமான நகராண்மைக் கழகம் (முனிசிபாலிடி) உள்ள பெருநகர். இந் நகராண்மைக் கழகம் 1866 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது; 1954ஆம் ஆண்டு முதல் தர நகராண்மைக் கழகம் என்னும் தகுதி பெற்றது. இதன் நூற்றாண்டு விழா 1967 சனவரி முதல் வாரத்தில் மிகச் சிறப்புடன் கொண்டாடப் பெற்றது; விழாவின் நினைவாக ஒரு சிறப்பு மலரும் வெளியிடப் பெற்றுள்ளது.

கடலூர் நகராட்சிப் பகுதியின் பரப்பளவு 30 சதுர கி.மீ.; மக்கள் தொகை 80,000. இந் நகராட்சியில் 32 உட்பிரிவுத் தொகுதிகள் (Wards) உள்ளன. திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம், புதுப்பாளையம், கூடலூர் என்னும் நகரப் பகுதிகளும், முட்டு குடிசை, கம்மியன் (கம்மிங்ஸ்) பேட்டை, கிஞ்சன் பேட்டை, சூரப்ப நாய்க்கன் சாவடி, வண்டிப் பாளையம், நத்தைவெளி, வடுகு பாளையம், புருகேஸ் (புரூக்ஸ்) பேட்டை, மஞ்சினி நாய்க்கன் குப்பம், வசந்தராயன் பாளையம், செல்லன் குப்பம், சிவானந்தபுரம், பணிக்கன் குப்பம், மாலுமியார் பேட்டை, குட்டகரை, ஏணிக்காரன் தோட்டம், அக்கரைகோரி சிங்காரத் தோப்பு - சோணங்குப்பம், சான்றோர் பாளையம், வன்னியர் பாளையம், தேவனாம் பட்டினம், கருமார்பேட்டை, லாதம்ஸ்பேட்டை, சொரக்கல்பட்டு, வேணுகோபாலபுரம், வில்வராய நத்தம் முதலிய நகர்ப்புறப் பகுதிகளும் சேர்ந்தது கடலூர் நகராட்சி.

தமிழகத்தில் கடலூருக்கெனத் தனிப் பெரும் பெருமைகள் சில உள; அவையாவன:

1. தமிழகத்தின் முதல் தலைநகர்

இப்பொழுது தமிழகத்தின் தலைநகராயிருப்பது சென்னை. ஆங்கிலேயரின் ஆட்சித் தொடக்கத்தில் தமிழகத்தின் தலைநகராயிருந்தது சென்னை அன்று கடலூர்தான்! கடலூரில் கெடிலம் கடலோடு கலக்கும் இடத்திற்கு அருகிலுள்ள “செயின்ட் டேவிட் கோட்டை'யை (St. David Fort) மையமாகக் கொண்டே அன்று ஆங்கிலேயர் தமிழகத்தில் ஆட்சி தொடங்கினர். இந்தக் கோட்டையைப் பிரெஞ்சுக்காரர்கள் பலமுறை தாக்கி அழித்ததால் தமிழகத்தின் தலைநகராய்த் தொடர்ந்து விளங்கும் தகுதியைக் கடலூர் இழந்து விட்டது. கடலூர்க் கோட்டைக்குப் பிரெஞ்சுக்காரரால் ஊறு நேராதிருக்குமாயின், கடலூர் நகரம் கல்கத்தா நகரம் போல் மிகப் பெரிய நகரமாக விரிவு பெற்றிருக்கும்; சென்னை எடுத்துக் கொண்ட தலைநகர்த் தகுதி கடலூர்க்கே தொடர்ந்து இருந்திருக்கும். தமிழகத்தின் வடக்குக் கோடியிலுள்ள சென்னையினும், தமிழகத்தின் நடுவேயுள்ள கடலூர் தலைநகராயிருப்பது நாடு முழுவதற்கும் வசதியல்லவா? அன்று கடலூர் தலைநகர்த் தகுதியைப் பெற்றிருந்ததற்குக் காரணமாயிருந்தது கெடிலம் ஆற்றுச் சூழ்நிலையே. கெடிலம் கடலோடு கலக்கும் இடத்தில் ஆற்றில் துறைமுகம் அமைந்திருந்ததால், வாணிகத்தின் பெயரில் கப்பல் ஒட்டிக் கொண்டு வந்த ஆங்கிலேயர்கள் அங்கே கப்பலை நிறுத்தி இறங்கி வந்து ஆணியடித்துக் கொண்டு அமர்ந்து விட்டனர்.

2. மூன்று கழிமுகங்கள்

கடலூரின் வடக்கு எல்லையில் தென்பெண்ணையாறும், தெற்கு எல்லையில் பரவனாறும், நடுவே கெடிலம் ஆறும் கடலில் கலக்கின்றன. இது, எந்த நகரிலும் இல்லாத ஒர் அமைப்பு. ஒரு நகராட்சி எல்லைக்குள் மூன்று ஆறுகள் ஒடி வந்து கடலில் கலப்பது ஒரு தனியமைப்பே. இது, துறைமுகமும் கோட்டையும் உருவாவதற்கு ஏற்ற சூழ்நிலையைத் தந்தது.

3. சிறிய பெரிய துறைமுகம்

இந்தியாவின் கிழக்குக் கரையில் கல்கத்தா (வங்காளம்), பாராதிப் (ஒரிசா), விசாகப்பட்டணம் (ஆந்திரம்), சென்னை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள துறைமுகங்கள் பெரியவை; இப் பெரிய துறைமுகங்களுக்குள் சிறியது தூத்துக்குடி, இவை போக, பல சிறிய துறைமுகங்களும் உள்ளன. கிழக்குக் கடற்கரையிலுள்ள சிறிய துறைமுகங்களுக்குள் பெரிய துறைமுகம் கடலூர்த் துறைமுகந்தான். சென்னை, புதுச்சேரி, தூத்துக்குடி போன்ற செயற்கைத் துறைமுகமாயில்லாமல், ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் இயற்கைத் துறைமுகச் சிறப்பும் கடலூர்த் துறைமுகத்திற்கு உண்டு.

4. இரண்டாவது பெரிய நகர்ப் பரப்பு

நகராட்சிப் பரப்பளவில் சென்னை போகத் தமிழகத்தில் இரண்டாம் இடத்தைக் கடலூரே பெற்றிருக்கிறது.

5. முதல் பெரிய திடல்

தமிழகத்தில் நகர் நடுவேயுள்ள பெருவெளித் திடல்களுள் (மைதானங்களுள்) கடலூர்த் திடலே மிகப் பெரியது. தமிழகத்திற்கு மட்டுமன்று - தென்னிந்தியாவிற்கே இதுதான் பெரிய திடல் என்று சொல்லப்படுகிறது. இத் திடலின் நீளம் 800 மீட்டர்; அகலம் 600 மீட்டர்; பரப்பளவு 15 ஏக்கர். பல ஊர்களில் இதனினும் பெரிய திடல் இருக்கலாம்; ஆனால் அவை ஊருக்கு வெளியே ஒருபுறமாக ஒதுங்கியிருக்கக் கூடும்; போதிய காப்பும் அழகும் பொலிவும் மக்கள் புழக்கமும் பெற்றில்லாதிருக்கக் கூடும்; ஆனால் கடலூர்த் திடல் நகர் நடுவேயுள்ளது. திடலைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் பெரிய மாளிகைகள் உள்ளன. திடலிலே சொற்பொழிவு மேடை, மணிக்கூண்டு, பூங்கா முதலிய வசதிகள் உண்டு. காண்பதற்குக் கவர்ச்சியாய், மணிக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டும் என்னும் ஆவலைத் தூண்டுவது கடலூர்த் திடல்.

6. முதல் முதலமைச்சர்

1947 ஆம் நாடு விடுதலை பெற்றதும் தமிழகத்தின் முதல் முதலமைச்சராயிருந்த உயர்திரு ஓமந்துார் இராமசாமி ரெட்டியார், கடலூரைத் தலைநகராகக் கொண்ட தென்னார்க்காடு மாவட்டத்தினராவார்; இந்த முதல் முதலமைச்சரை இங்கே குறிப்பிடவில்லை. நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே, மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்தினால் சென்னை மாநிலத்தில் முதல் முதலாக அமைச்சரவை ஏற்பட்ட போது 1920 - 21 ஆம் ஆண்டில் முதல் அமைச்சராய்ப் பணிபுரிந்தவர் கடலூர்ப் பெரியார் அ. சுப்பராயலு ரெட்டியார் என்பவராவர். இப் பெரியார் 1906 தொடங்கி 1920 வரை கடலூர் நகராண்மைக் கழகத்தின் தலைவராயும் (சேர்மன்) தொண்டாற்றியுள்ளார்.

1917 ஆம் ஆண்டிற்கு முன் மாவட்டக் கழகங்கள் (District Boards) கலெக்டர்களின் தலைமையிலேயே ஆளப்பட்டு வந்தன. 1917 ஆம் ஆண்டு தான் தமிழகத்திலேயே முதல்முதலாக மக்கள் தலைவர் ஒருவர் ஒரு மாவட்டக் கழகத்தின் தலைவராக அமர்த்தப் பெற்றார். அவர் சுப்பராயலு ரெட்டியார்தான். அந்த மாவட்டக் கழகம் தென்னார்க்காடு மாவட்டக் கழகம்தான். இந்த வகையிலும் கடலூர் தமிழகத்தில் முதலிடம் பெற்றுள்ளது. முதல் முதலாக வட்டக் கழகங்கள் (Taluk Boards) ஏற்படுத்தப்பட்டதும் இம் மாவட்டத்தில்தான் என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

7. தலை ஞாயிறு

தமிழக முழுவதும் அறிவொளி பரப்பிய தலை ஞாயிறாகிய ஞானியார் அடிகளார் வாழ்ந்த இடம் கடலூர்தான்.

8. கூட்டுத் தகுதி

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகப் பல்வேறு தகுதிகளும் ஒருங்கிணைந்திருக்கும் நகரம் கடலூர் ஒன்றுதான். ஒர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தின் தலைநகர்த் தகுதி, ஒரு வட்டத்தின் தலைநகர்த் தகுதி, ஒரு மாவட்டத்தின் தலைநகர்த் தகுதி, மிகப் பெரிய நகர்ப் பரப்பு, பாடல் பெற்ற பழம்பதிப் பெருமை, கோட்டைச் சிறப்பு, புகைவண்டிச் சந்திப்பு நிலையம் (Junction), மூன்று ஆறுகள், கடற்கரை, துறைமுகம், வரலாற்றுச் சிறப்பு முதலிய பல்வேறு தகுதிகளையும் கூட்டாகப் பெற்றிருப்பதில் தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாகக் கடலூரைத் தவிர வேறு எந்த ஊரையும் குறிப்பிட முடியாது. மற்ற ஊர்களில் ஒன்று இருந்தால் மற்றொன்று இராது

வசதிகள்

கடலூர் நகராட்சி எல்லைக்குள் இரண்டு கலைக் கல்லூரிகள், ஒன்பது உயர்நிலைப் பள்ளிகள். ஒரு தொழிற் பயிற்சி நிலையம், மூன்று ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், ஒரு தச்சுவேலை - கொல்ல வேலைப் பயிற்சி நிலையம், ஒரு கரும்பு ஆராய்ச்சி நிலையம், இரண்டு சவ்வரிசித் தொழிற்சாலைகள், மூன்று உரத் தொழிற்சாலைகள், ஐந்து எண்ணெய் ஆலைகள், ஒரு படகு கட்டும் தொழிற்சாலை, பல நெசவுத் தொழிற்சாலைகள், சாயம் போடும் தொழிற் சாலைகள், ஐந்து திரைப்பட மாளிகைகள் முதலியவை உள்ளன. நகராட்சியின் பல்வேறு பகுதிகட்கும் உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி உண்டு. கடலூரிலிருந்து தென்னார்க்காடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகட்கும் வெளி மாவட்டங்கட்கும் பேருந்து வண்டிகள் செல்கின்றன. கடலூரிலிருந்து புதுச்சேரிக்குக் கால்மணி - அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து வண்டி செல்கிறது.

இவ்வசதிகளேயன்றி, ஒரு மாவட்டத்தின் தலைநகரில் இருக்க வேண்டிய அரசு அலுவலகங்கள் - நிலையங்கள் அத்தனையும் கடலூரில் அமைந்துள்ளன. கடலூர் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகர் என்பது நினைவு கூரத்தக்கது.

வரலாறு

பொதுவாகத் தமிழகத்தின் - சிறப்பாகத் தென்னார்க்காடு மாவட்டத்தின் வரலாற்றில் கடலூருக்குப் பெரும்பங்கு உண்டு. தமிழ்நாடு, தமிழருக்கு அல்ல - ஆங்கிலேயர்க்கா அல்லது பிரெஞ்சுக்காரர்க்கா என்பதைத் தீர்மானிக்கும் போராட்டம், பதினெட்டாம் நூற்றாண்டில் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தை - சிறப்பாகக் கடலூரை மையமாகக் கொண்டு ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் இடையே நடைபெற்றது. இவ்விரு தரத்தாருக்கிடையே கடலூர்ப் பகுதிகளும் புதுச்சேரிப் பகுதிகளும் பலமுறை கைம்மாறின. இன்றும் கடலூர் வட்டத்தின் இடையிடையே புதுச்சேரி மாநிலத் திட்டுப் பகுதிகள் சிற்சில இருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. 1746 தொட்டு 1749 வரை சென்னை பிரெஞ்சுக்காரர் கையில் இருந்தது; அப்போது ஆங்கிலேயர்கள் கடலூரையே தம் தலைநகராகக் கொண்டு செயலாற்றினர். டூப்ளே முதலிய பிரெஞ்சுக்காரர்கள் கடலூரைக் கைப்பற்ற அரும்பாடு பட்டனர்; நடக்கவில்லை. ராபர்ட் கிளைவ் முதலிய ஆங்கிலேயர்கள் உறுதியுடன் கடலூரைக் காத்தனர்.

கடலூர் முதுநகர்ப் பகுதியிலுள்ள கிளைவ் தெரு, இம்பீரியல் ரோடு, வில்லிங்கடன் தெரு, சோனகர் தெரு, பாரீஸ் கார்னர், கொத்த வால் சாவடி முதலியவையும், கடலூரின் ஆட்சிப் பொறுப்பை ஒருவர் பின் ஒருவராய் ஏற்றிருந்த புரூக், லாதம், கம்மிங், கிஞ்சன் ஆகிய ஆங்கிலேயர்களின் பெயர்களைத் தாங்கிக் கடலூர் நகராட்சிக்குள் இருக்கும் புரூக்ஸ் பேட்டை (புருகேஸ் பேட்டை), கம்மிங்ஸ் பேட்டை (கம்மியம் பேட்டை), லாதம்ஸ் பேட்டை (லதாம் பேட்டை), கிஞ்சன் பேட்டை முதலியவையும், செயின்ட் டேவிட் கோட்டையும் கடலூரின் வரலாற்றுக்குச் சான்று பகரும்.

மற்றும், உரிமைப் போராட்டக் காலத்தில் 1921 செப்டம்பரில் ஒரு முறையும் 1927 செப்டம்பரில் ஒரு முறையும் காந்தியடிகளாரவர்கள் கடலூருக்கு வந்திருப்பது மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்பாகும். 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளை விட்டு ஏழாம் நூற்றாண்டிற்குச் செல்வோமானால், மிகப் பெரும் புகழ் பெற்றிருந்த ‘பாடலிபுத்திரம்’ என்னும் சமணர்களின் தலைமையிருப்பிடத்தைக் கடலூர்ப் பகுதியில் மனக்கண் முன் காணலாம். திருநாவுக்கரசர் ’தரும சேனர்’ என்னும் தலைமைப் பட்டத்துடன் சமணர்களின் தலைவராய்த் திகழ்ந்ததும் இந்தக் கடலூர்ப் பகுதியில்தான்! சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதால் கல்லிலே கட்டிக் கடலிலே போட அவர் தப்பிப் பிழைத்துக் கரையேறியதும் இந்தக் கடலூர்ப் பகுதியில்தான்! மற்றும், தன் துறைமுகத்தின் வழியாய் நடந்த வாணிகத்தின் வாயிலாகப் பல்லாயிரம் ஆண்டு காலமாக உலகின் பல்வேறு நாடுகட்கும் கடலூர் அறிமுகமாகியிருந்தது என்று சொன்னால் மிகையாகாது.

பெயர்ச் சிறப்பு

பெயரமைப்பும் கடலூரின் பெருமையைப் பறைசாற்றி அறிவிக்கிறது. கடலூர் என்பது குறிப்பிட்ட ஏதோ ஒர் ஊரின் பெயரன்று; பல ஊர்கள் சேர்ந்த ஒரு பெரு நகராட்சித் தொகுப்பிற்குச் சென்னை என்னும் பெயர் சூட்டப்பட்டிருப்பது போல, பல ஊர்கள் சேர்ந்த ஒரு நகராட்சித் தொகுப்பிற்குக் கடலூர் என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இந்தக் கடலூர்த் தொகுப்பில் மிகப் பழைமையும் பெருமையும் உடைய பெரிய பகுதிகளாகக் கருதப்படுபவை திருப்பாதிரிப் புலியூர், கூடலூர் என்னும் இரண்டுமேயாகும். இவற்றுள், திருப்பாதிரிப் புலியூர் திருக்கோயிற் சிறப்பால் பெயர் பெற்றது; கூடலூர் தொழில் - வாணிகத் - துறைமுகச் சிறப்பால் பெயர் பெற்றது. இந்நிலையில், பன்னெடுங்காலமாக இப் பகுதிக்கு வந்துபோன வெளிநாட்டாரை, கோயில் சிறப்புடைய திருப்பாதிரிப்புலியூர் கவர்ந்திருக்க முடியாது; தொழில் வாணிகத் துறைமுகச் சிறப்புடைய கூடலூரே கவர்ந்திருக்க முடியும்; எனவே, அவர்கள் இந்த வட்டாரத்தைக் கூடலூர் என்னும் பெயராலேயே அழைத்திருப்பார்கள் - கூடலூர் என்னும் பெயர்தான் அவர்கட்குத் தெரிந்திருக்கும்.

இந் நிலையில் கூடலூர் என்னும் பெயர் ஐரோப்பியர்களின் வாய்களில் புகுந்து கடலூர் என மறுபிறவி எடுத்திருக்கக்கூடும். கடலூர் என்னும் பெயர் ஆங்கிலத்தில் Caddalore’ என, ‘க’ என்னும் முதலெழுத்தைக் குறிக்க Ca’ போட்டு எழுதப்படாமல், ‘Cuddalore” என, “க” என்னும் முதலெழுத்தைக் குறிக்க Cu’ போட்டு எழுதப்படுவது ஈண்டு ஆராய்ச்சிக்குரியது. Cu’ போட்டு கூடலூர் என்று எழுதியிருந்ததைக் கடலூர்’ என்று படித்து விட்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் ‘cut என்னும் சொல்லைக் ‘குட்’ என்று சொல்லாமல் ‘கட் என்று சொல்வது போல் இது நடந்து விட்டிருக்கிறது. ‘புதுச்சேரி என்பது பாண்டிச்சேரி” என்று ஐரோப்பியர்களால் அழைக்கப்பட்ட கதையும் இது போன்ற எழுத்து மாற்றத்தால் ஏற்பட்ட வினையேயாகும். கூடலூர் என்னும் பெயர்தான் பழைய பெயர்: கடலூர் என்பது பிற்காலத்தில் ஏற்பட்ட புதிய பெயரே.

கடலூர் நகராட்சி மூன்று பெரும் பிரிவுகளை உடையது; அவை; திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப் பாளையம், கூடலூர் என்பன. கடற்கரையிலுள்ள செயின்ட் டேவிட் கோட்டைப் பகுதியை ஒரு தனிப் பிரிவாகக் கொண்டு கடலூர் நகராட்சியை நான்கு பிரிவாகக் கூறுவதும் உண்டு. இவற்றுள் திருப்பாதிரிப் புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், கோட்டைப் பகுதி ஆகிய மூன்றும் நகராட்சியின் வடபகுதியில் உள்ளன; இப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் நகராட்சியின் தென்பகுதியில் கூடலூர் உள்ளது. தெற்கேயுள்ள கூடலூர்ப் பகுதியைக் கடலூர் முதுநகர் - Cuddalore Old Town என்றும், வடக்கேயுள்ள திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம், கோட்டைப்பகுதி ஆகியவற்றை இணைத்துக் கடலூர்ப் புதுநகர் - Cuddalore New Town என்றும் அழைக்கின்றனர். Old Town என்பதைச் சுருக்கி O.T. என்றும், New Town என்பதைச் சுருக்கி N.T. என்றும் மக்கள் அழைக்கின்றனர். ஓ.டி. என்.டி. என்று குறிப்பிடுவதுதான் இப்போது பெருவாரியான வழக்காக இருக்கிறது.

முதுநகரில் கூடலூரைத் தவிர வேறு சிறப்புப் பிரிவு கிடையாது. புதுநகரில், திருப்பாதிரிப் புலியூர் நகராட்சியின் மேற்கே இருக்கிறது; செயின்ட் டேவிட் கோட்டைப் பகுதி நகராட்சியின் கிழக்கே கடற்கரையோரமாக இருக்கிறது; இடையிலே மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதி உள்ளது. திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதிக்கும் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்கும் நடுவே கெடிலம் ஆறு ஒடுகிறது. கெடிலத்தின் குறுக்கே ஒரு நல்ல பாலம் இருக்கிறது. அதன் பக்கத்திலேயே 30 இலட்சம் ரூபாய் செலவில் இப்போது மற்றொரு பாலம் கட்டப்படுகிறது. மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியில், மஞ்சக் குப்பம் வடக்கிலும் புதுப்பாளையம் தெற்கிலுமாக உள்ளன. மஞ்சக் குப்பத்திற்கும் புதுப்பாளையத்திற்கும் நடுவே பெருவெளித்திடல் (கடலூர் மைதானம்) இருந்து கொண்டு இரண்டையும் பிரிக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமையலுவலகங்கள் பெரும்பாலன மஞ்சக் குப்பத்தில்தான் உள்ளன; அதனால், தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மஞ்சக் குப்பம் ஜில்லா’ எனப் பொது மக்கள் அழைப்பதுண்டு. கடலூரின் பெரிய கடைத் தெருவும் நகர்ப் புகை வண்டி நிலையமும் பேருந்து வண்டி (பஸ்) நிலையமும் திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியில் உள்ளன; பாடல் பெற்ற சிவன் கோயிலும் ஞானியார் மடமும் இங்கேதான் உள்ளன. எனவே, முதுநகர்ப் பகுதியைக் காட்டிலும் புதுநகர்ப் பகுதிகள்தாம் பொது மக்களின் கவனத்தை மிகவும் ஈர்க்கின்றன.

கடலூர் என்னும் பெயரைப் போலவே முதுநகர் - புதுநகர் என்னும் வழக்கும் கூடலூரை மையமாகக் கொண்டே எழுந்துள்ளது. துறைமுகத்தாலும் தொழில் வாணிகத்தாலும் வெளிநாட்டாரின் உள்ளங்களைக் கவர்ந்த பழைய நகரம் கூடலூர்தான் என்பது ஒரு புறம் இருக்க, தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமையலுவலகங்கள் பெரும்பாலன தொடக்கத்தில் கூடலூரில்தான் இருந்தன; 1866 ஆம் ஆண்டிற்குப் பின்னரே புது நகராகிய மஞ்சக் குப்பம் பகுதிக்குச் சென்றன. மாவட்ட முதல்வரின் (கலெக்டரின்) அலுவலகங்கூட 1802 ஆம் ஆண்டு வரைக்கும் கூடலூரில்தான் இருந்தது; பின்னரே மஞ்சக்குப்பத்திற்கு மாற்றப்பட்டது. இப்போது மஞ்சக்குப்பம் பகுதியில் தலைமையலுவலகங்கள் வைத்திருக்கும் கடலூர் நகராண்மைக் கழகம் 1866 ஆம் ஆண்டு கூடலூரில் தான் தொடங்கப் பெற்றது. இதைக் கொண்டு, தொடக்கத்தில் கூடலூர்தான் விரிவும் விளம்பரமும் பெற்றிருந்தது என அறியலாம். இதனால்தான், கடலூர் என்னும் பெயரும் முதுநகர் - புதுநகர் என்னும் வழக்கும் கூடலூரை மையமாகக் கொண்டு எழுந்தன.

தொடக்கத்தில் கூடலூர் மையம் பெற்றிருந்ததற்குக் காரணம், அது துறைமுக நகரமாயிருந்ததுதான். பின்னர்ப் புதுநகர்ப் பகுதி உருவாகிப் பெருமை பெற்றதற்குக் காரணம், ஆங்கிலேயர்கள் புதுநகர்ப் பகுதியில் செயின்ட் டேவிட் கோட்டை கட்டி அதைத் தங்கள் தலைநகராகக் கொண்டிருந்தமைதான்! இந்தக் கோட்டையை மையமாகக் கொண்டே மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதி உருவாகிப் பெருவளர்ச்சி பெற்றுத் திகழ்கிறது. ஆனால், திருப்பாதிரிப் புலியூரும் புதுநகர்ப் பகுதியில் இன்று சேர்க்கப்பட்டிருந்தாலும், அது கூடலூரைப் போலவே பழைய நகர்தான். இருப்பினும், முதலில் தலைநகர்த் தகுதி பெற்றிருந்த பழைய நகராகிய கூடலூருக்கு எதிர்த்திசையில் - 4 கி.மீ. தொலைவில் புதிய புதுநகராகிய மஞ்சக்குப்பம் - புதுப் பாளையம் பகுதியோடு இணைந்திருத்தலின் திருப்பாதிரிப் புலியூரும் நடைமுறை வசதிக்காகப் புதுநகர் என அழைக்கப்பட்டு வருகிறது. நாம் திருப்பாதிரிப் புலியூரைப் பழைய புதுநகர் எனக் கூறலாம். கடலூரின் பெரிய கடைத்தெரு திருப்பாதிரிப் புலியூரில் உருவாகியிருப்பதற்குக் காரணம், இங்கே பாடல் பெற்ற பழம்பெருஞ் சிவன் கோயிலும், புதுப்பெரும் புகைவண்டி நிலையமும் பேருந்து வண்டி நிலையமும் இருப்பதுதான்! இதிலிருந்து, பழம்புது நகராகிய திருப்பாதிரிப் புலியூரின் பழைமையினையும் புதுமையினையும் ஒருசேர உணரலாம்.

இதுகாறுங் கூறிய விரிவான விளக்கத்திலிருந்து, கடலூர் என்னும் பெயர் கூடலூர் என்னும் பெயரிலிருந்து பிறந்ததே என்பது தெற்றென விளங்கும். ஆனால், கடலை அடுத்துள்ள ஊர் கடலூர் எனக் காரண இடுகுறிப் பெயராக இப்பெயர் ஏற்பட்டது என ஒருவகைப் பெயர்க் காரணம் சொல்லப் படலாம் - சொல்லப்படலாம் என்ன - சிலர் சொல்லவுஞ் செய்கின்றனர். கடலூர் என்னும் பெயர் மிகவும் பிற்பட்ட அண்மைக் காலத்தில் ஏற்பட்ட பெயராதலின் இக் காரணம் பொருந்தாது. அங்ங்னமே பொருந்தினும், கடலை அடுத்துள்ள ஊர் கூடலூர்தான்; திருப்பாதிரிப் புலியூரும் மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதியும் கடற்கரைக்கு மேற்கே இரண்டு - மூன்று கி.மீ. தொலைவு தள்ளியிருத்தலின், கடலூர் என்னும் பெயர் கூடலூருக்கே மிகவும் பொருந்தும். மற்றும் சிலர், ‘கெடிலம்’ என்னும் ஆற்றுப் பெயரை ‘கடிலம்’ என்றாக்கிக் கடிலத்திற்கும் கடலூருக்கம் ஒருவகை முடிச்சுப்போட முயல்கின்றனர். இந்தப் பெயர்க் காரணம், நூற்றுக்கு ஒரு விழுக்காடுகூடப் பொருந்தாது. எனவே, கடலூர் என்னும் சேயின் தாய் கூடலூரே என்பது முற்ற முடிந்த முடிபு. அங்ஙனமாயின், கூடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதன் காரணம் என்ன?

கூடலூர் என்னும் பெயர் ஏற்பட்டதன் காரணம், இந்நூலில் ‘கெடிலத்தின் முடிவு’ என்னும் தலைப்பில் படத்துடன் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. கூடலூரில் நான்கு கூடல்கள் நிகழ்கின்றன; அவை: (1) கெடிலத்தின் தென் கிளையாகிய உப்பனாறு கடலோடு கூடும் கடல்; (2) சிதம்பரம் வட்டத்திலிருந்து பரவனாறு என்னும் ஒர் உப்பாறு வந்து கடலோடு கூடும் கூடல்; (3) கெடிலத்தின் கிளையாகிய உப்பனாறும் பரவனாறும் தமக்குள் கூடிக் கொள்ளும் கூடல்; (4) உப்பனாறும் பரவனாறும் இணைந்தபடியே கடலோடு கூடும் கடல் என நான்கு கூடல்கள் இங்கே நடைபெறுகின்றன. சுருங்கக் கூறின், இந் நான்கு கூடல்களும் ஒரே கூடலாகி விடுகின்றன. அஃதாவது, உப்பனாறும் பரவனாறும் கூடலூருக்கு அருகில் ஒரே இடத்தில் தமக்குள் இணைந்தபடியே கடலோடு கூடுகின்றன. வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் இரண்டு ஆறுகள் குறிப்பிட்ட ஒரே இடத்தில் தமக்குள் இணைந்தபடியே கடலோடு கூடுவது உலக வியப்புகளுள் ஒன்றல்லவா? இதனால்தான், இந்த வியத்தகு கூடல், கூடலூர் என்னும் பெயர் ஏற்படுவதற்குக் காணமாயிருந்தது. இப்போது கூடலூர் மறைந்து கடலூராகியுள்ளது. முன்பு ‘கூடலூர் தாலுகா என்று குறிப்பிடப்பட்டது இப்போது ‘கடலூர் தாலுகா எனப்படுகிறது. கால வெள்ளத்தில் ஏற்படும் மாற்றத்தை யாரே தடுக்க முடியும்?

இனி, கடலூர் நகராட்சி எல்லைக்குள் இருக்கும் பகுதிகளுள் இன்றியமையாத சிலவற்றைப் பற்றிய விவரங்களைத் தனித்தனியாகக் காண்பாம்:-

தேயமெல்லாம் நின்றிறைஞ்சும்
திருப்பாதிரிப் புலியூர்

[8]'தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர்” என ஏழாம் நூற்றாண்டிலேயே திருநாவுக்கரசரால் புகழ்ந்து பாடப்பெற்ற திருப்பாதிரிப் புலியூர், இன்றும் தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூராகவே திகழ்கிறது. திருப்பாதிரிப் புலியூர்க் கோயிலுக்கும் புகைவண்டி நிலையத்திற்கும் உள்ள இடைவெளி ஒரு ‘பர்லாங்கு’ தொலைவு இருக்கலாம். கோயில் கிழக்கு நோக்கியுள்ளது. கோயில் (சந்நிதி) தெருவின் முடிவில் புகைவண்டி நிலையம் இருக்கிறது. நிலையத்தில் நிற்கும் புகைவண்டிகளில் இருந்தபடி மேற்கே பார்த்தால் கோபுர வாயில் தெரியும். வண்டியில் இருந்தபடியே மக்கள் கோயிலை நோக்கி வழிபடுவது வழக்கம். தேயத்து மக்களை ஏற்றிக் கொண்டு வரும் புகைவண்டிகள் அங்கே நிற்கின்றன; வழிபாடு நடக்கிறது. இவ்வகையிலும் ‘தேயமெல்லாம் நின்று இறைஞ்சும் திருப்பாதிரிப்புலியூர்” என்னும் புகழ்ச்சி பொருந்துகிறது. எனினும், திருநாவுக்கரசர் குறிப்பிட்டிருப்பது, பண்டைக் காலத்தில் பல தேயத்து மக்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்து வழிபட்ட மையையேயாம்! இதிலிருந்து, ஏழாம் நூற்றாண்டிலேயே திருப்பாதிரிப் புலியூர் பல தேயத்து மக்களும் வந்து வணங்கும் அளவுக்குப்பேரும் புகழும் பெற்றிருந்தமை புலனாகும்.

இவ்வூர்ப் புகைவண்டி நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் புகைவண்டிப் பாதையில் உள்ளது. கூடலூரில் புகை வண்டிச் சந்திப்பு நிலையம் (Junction) இருந்தாலும், இவ்வூர் நிலையத்திற்கும் சந்திப்பு நிலையத்தின் தகுதி உண்டு. கூடலூரிலிருந்து புறப்படும் வண்டியும் கூடலூரோடு முடியும் வண்டியும் இவ்வூர் நிலையம்வரை வந்துதான் பின்னர்க் கூடலூருக்குச் செல்லும்.

திருப்பாதிரிப் புலியூர் கெடிலம் ஆற்றின் தெற்குக் கரையில் இருக்கிறதா? - வடக்குக் கரையில் இருக்கிறதா? - கிழக்குக் கரையில் இருக்கிறதா? - மேற்குக் கரையில் இருக்கிறதா? என்று சொல்வது அரிது; நான்கு கரைகளிலும் இருப்பதாகச் சொல்லலாம். பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு கெடிலம் இவ்வூரின் தெற்கே ஓடியது; அப்போது ஆற்றின் வடகரையில் ஊர் இருந்தது; அதனால்தான், அப்போது திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் என்னும் நூல் பாடிய தொல்காப்பியத் தேவர்,

‘கடிலமா நதியதன் வடபால்’ (45)
‘மெத்தி வருகின்ற கெடிலத்து வடபாலே’ (100)

என்று கூறியுள்ளார். கிழக்கு நோக்கி ஓடிய கெடிலம் பத்தாம் நூற்றாண்டளவில் திருவயிந்திரபுரம் அருகில் வடக்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர்த் தெற்கு நோக்கித் திரும்பிச் சிறிது தொலைவு ஓடி, பின்னர் மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிச் சிறிதுதொலைவு ஓடிக் கடலில் கலக்கிறது. கெடிலத்தின் -ᑨ தலைகீழ்ப் ‘ப’ போன்ற அடைப்புக்கு நடுவில் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. இவ்வகையில் பார்க்குங்கால், ஊரின் மேற்கே மூன்று கி.மீ. தொலைவிலும், வடக்கே அரை கி.மீ. தொலைவிலும், கிழக்கே கால் கி.மீ. தொலைவிலுமாகக் கெடிலம் ஊரை ஒரு சுற்று சுற்றிக் கொண்டு ஓடுகிறது எனலாம்.

இப்பகுதியில் அந்தக் காலத்தில் பாதிரிக்காடு நிறைந திருந்ததாலும், புலிக்கால் உடைய புலி முனிவர் (வியாக்ர பாதர்) வழிபாடு செய்ததாலும் ஊருக்குப் பாதிரிப் புலியூர் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. புலிக்கால் முனிவர் வழிபட்டது ஒரு புறமிருக்க, பாதிரிக் காட்டில் புலிகளும் இருந்திருக்கலாமல்லவா? இவ்வூர்க் கோயில் மரம் (தல விருட்சம்) பாதிரி என்பது குறிப்பிடத் தக்கது. கோயிலுக்குள் பழங்காலத்தில் இருந்த பாதிரி மரம் ஒன்று பட்டுப்போய் இன்று தகட்டு உறை (கவசம்) போடப்பட்டுப் போற்றிக் காக்கப்பட்டு வருகிறது. கோயிலின் மேற்புற வெளித் திருச்சுற்றில் சில பாதிரி மரங்களை இன்றும் காணலாம். வடமொழியில் பாடலம் என்றால் பாதிரி என்பது பொருள்; எனவே, இவ்வூர் பாடலிபுரம், பாடலி நகர் என அழைக்கப்படுவதும் உண்டு. இவ்வூர் இறைவன் பெயர் பாடலேசுரர் (பாடல+ஈசுரர்) என்பதும் குறிப்பிடற்பாலது.

திருப்பாதிரிப் புலியூர் என்னும் பெயர் ஒரளவு சுருங்கித் திருப்பாப்புலியூர் என்றே இன்று பலராலும் எழுதப்படுகிறது; பேச்சு வழக்கிலோ, திருப்பாப்புலியூர் என்பது மேலும் மேலும் சுருங்கிச் சுருங்கி, திருப்பாலியூர், திருப்பார், திப்பார் என்ற அளவுக்குக் கொச்சையாய் இறங்கி வந்துவிட்டது.

இலக்கியங்களில் இவ்வூருக்குக் கடை ஞாழல், கன்னி வனம், கன்னி காப்பு முதலிய பெயர்களும் வழங்கப்படுகின்றன. புலிநகக் கொன்றை என்னும் ஞாழல் மரமும் நிறைந்திருந்ததால் கடைஞாழல் எனவும், இறைவி இவ்வூர் வனத்தில் கன்னியாய் நோன்பியற்றியதால் கன்னி வனம் எனவும் இவ்வூருக்குப் பெயர்கள் ஏற்பட்டனவாம். மற்றும், திருப்பாதிரிப் புலியூர் பாதிரிப் புலியூர் எனவும், புலியூர் எனவும், அதன் மரூஉவாகப் புலிசை எனவும் வழங்கப்படுவதும் உண்டு ‘பாதிராப் புலியூர்’ என்னும் பெயரில் வேறிடங்களிலுள்ள சில ஊர்களினின்றும் திருப்பாதிரிப் புலியூரை வேறு பிரித்துணர வேண்டியது இன்றியமையாததாகும்.

மிக அழகான திருப்பாதிரிப் புலியூர்ச் சிவன் கோயிலின் பெயர் பாடலேசுரர் கோயில், இறைவன் பெயர்கள்; தோன்றாத் துணைநாதர், பாடலேசுரர்; இறைவியின் பெயர்கள்; தோகாம்பிகை, பெரிய நாயகி என்பன. இக்கோயிலின் தோற்றத்தை முன்னுள்ள படத்தில் காணலாம்.

கோயிலின் முகப்பிலுள்ள கோபுரமும், கோயிலை ஒட்டியுள்ள திருக்குளமும் படத்தில் தெரிவதைக் காணலாம். சிவன் கோயிலும் அம்மன் கோயிலும் தனித்தனியாக உள்ளன. சிவன் கோயிலின் இடப்புறத்தே அஃதாவது வடபுறம் அம்மன் - கோயில் உள்ளது. அம்மன் கோயிலுக்குத் தனிக்கோபுரவாயில் உண்டு. இரண்டு கோயில்கட்கும் இடையிலும் வழி உண்டு. அம்மன் கோயிலை ஒட்டினாற்போல் அதன் வடபுறத்தே வடக்கு நோக்கியிருக்கும் பிடாரி கோயில் காணத்தக்கது. அம்மன் கோயிலுக்குச் செல்பவர் பிடாரி கோயிலுக்கும் தவறாது செல்வது மரபு.

திருப்பாதிரிப் புலியூர் நாவுக்கரசரின் தேவாரப் பதிகமும் ஞானசம்பந்தரின் தேவாரப் பதிகமும் அருணகிரியாரின் திருப்புகழும் பெற்றது. பட்டினத்தாரும் இவ்வூரைப் பாடியுள்ளார். இங்கே சோழர் - பாண்டியர் காலக் கல்வெட்டுகள் பல உள்ளன. தொல்காப்பியத் தேவர் இவ்வூர்மேல் கலம்பகமும், இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இவ்வூர்மேல் புராணமும் பாடியுள்ளனர். வடமொழியிலும் இவ்வூருக்குப் புராணம் உண்டு. முயலுருப்பெற்றிருந்த மங்கணமுனிவர் நற்பேறு பெற்றது முதலான செய்திகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளன.

இவ்வூரைச் சார்ந்திருந்த பாடலி புத்திரம் என்னும் இடம் பண்டு சமணர்களின் தலைமையகமாய் விளங்கியது; நாவுக்கரசர் தொடக்கத்தில் ‘தருமசேனர்’ என்னும் பட்டப் பெயருடன் சமணர் தலைவராய் விளங்கியது இந்தப் பகுதியில்தான். சைவராக மாறிய அவரைச் சமணர்கள் கல்லிலே கட்டிக் கடலிலே போட, அவர் கரையேறி வந்து திருப்பாதிரிப் புலியூர் இறைவன்மேல் ‘ஈன்றாளுமாய் என்னும் பதிகம் பாடி வழிபட்டார். மிகச் சிறந்த இப்பதிகத்தின் நான்காம் பாடலில்தான், ‘தேயமெல்லாம் நின்றிறைஞ்சும் திருப்பாதிரிப் புலியூர் மேய நல்லான்’ என அவர் பாடியுள்ளார். நாவுக்கரசர் சைவத்திலிருந்து சமணத்திற்கு வந்தது. மீண்டும் சைவராக மாறியது, அதனால் அவருக்குச் சமணர்கள் இழைத்த கொடுமைகள், அவர் அவற்றினின்றும் தப்பிப் பல்லவ மன்னனையும் சைவராக மாற்றியது முதலிய நிகழ்ச்சிகளை மையமாகக் கொண்ட ‘பூம்புலியூர்’ என்னும் பெயருடைய நாடகம் ஒன்று இற்றைக்கு ஏழு அல்லது எட்டு நூற்றாண்டு கட்கு முன்பே நடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

திருப்பாதிரிப் புலியூரின் மேற்கு எல்லையிலுள்ள பெருமாள் கோயிலும், கிழக்கு எல்லையில் கெடிலக் கரையிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலும் குறிப்பிடத் தக்கவை. ஆஞ்சநேயர் கோயிலில், இலங்கைக்குத் தாவுவது போன்ற மிடுக்கான தோற்றத்தில் மிக்கவேலைப்பாட்டுடன் வடிக்கப்பட்டிருக்கும் ஆஞ்சநேயர் சிலை மிகவும் காணத்தக்கது. இற்றைக்குக் கால் நூற்றாண்டுக்குமுன் மிகப் பெரும் புகழ் பெற்று விளங்கிய ஞானியார் அடிகளாரின் மடம் சிவன் கோயில் தெருவில் உள்ளது.

திருப்பாதிரிப் புலியூரில் வைகாசித் திங்களில் பன்னிரண்டு நாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) நடைபெறும். திருவிழாவின் ஒன்பதாம் நாளாகிய வைகாசிப் பருவத்தில் தேரோடும் விழா நடைபெறும். பல ஆண்டுகட்குமுன் இவ்வூரில் இருந்த மிகப் பெரிய தேர் யாராலோ கொளுத்தப்பட்டுவிட்டது. திருவிழாவின் ஆறாம் நாள் இரவு வெள்ளித் தேர் விழா நடைபெறும். முழுதும் வெள்ளித் தகடு இட்ட தேரில் மின்விளக்கு ஒப்பனையுடன் இறையுருவம் உலாவருவது கண்கொள்ளாக் காட்சியாகும். இவ்விழாவிற்குப் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வருவர். கார்த்திகைத் திங்களில் நடைபெறும் வெள்ளி விமான விழாவும் காணத்தக்கது.

கடலூரில் மாசி மகவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். திருப்பாதிரிப் புலியூர், வண்டிப் பாளையம், திருமாணி குழி, திருவயிந்திரபுரம், திருக்கோவலூர் முதலிய ஊர்களிலிருந்து இறையுருவங்கள் கடலூர்க் கடற்கரைக்குச் சென்று நீராடும். இந்தப் பக்கத்தில் இவ்விழா மிகப் பெரிய விழாவாகும். இவ்விழாவிற்கு நூறாயிரக் கணக்கில் மக்கள் வருவர். இவ்விழாவின் உறுப்பாகப் பலவகைக் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ஆண்டு தோறும் தைத் திங்கள் ஐந்தாம் நாளில் பெண்ணையாற்றுத் திருவிழா நடைபெறும் இவ்வூர் இறையுருவமும் இன்னும் பல ஊர் இறையுருவங்களும் பாகூருக்கு நேரேயுள்ள பெண்ணையாற்றங் கரைக்கு எழுந்தருளும். தைத் திங்களிலேயே இரதசப்தமியன்று ஒரு முறை வில்வராய நத்தத்திற்கு அடுத்தாற் போலுள்ள பெண்ணை யாற்றங்கரைக்கு இறையுருவங்கள் செல்லும், தைத் திங்களிலேயே அமாவாசை நாளன்று இறையுருவங்கள் கடலுக்குச் சென்று வரும். ஆனிப் பருவத்தில் பாடலேசுரர் காராமணிக்குப்பம் அருகிலுள்ள மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கிருந்து கெடிலத்திற்குச் சென்று நீராடும் விழா நடைபெறும்.

பாடலேசுரர் ஆண்டிற்கு இருமுறை கரையேற விட்ட நகர் என்னும் வண்டிப்பாளையத்திற்கு எழுந்தருளுவார்; அந்நாட்கள். அப்பர் கரையேறிய சித்திரை அனுடம், வண்டிப்பாளையம் பங்குனிப் பெருவிழாவின் ஆறாம் நாள் ஆகியவை. பாடலேசுரர் கோயிலுக்கு நாட்டுக்கோட்டை செட்டிமார்கள் புரிந்துள்ள அரும்பெரும் பணிகள் மிகவும் பாராட்டத்தக்கன.

திருப்பாதிரிப் புலியூர் திருக்கோயிலால் மட்டுமன்றிக் கடைத் தெருவாலும் கடலூரில் இன்றியமையாமை பெற்றுள்ளது. மஞ்சக்குப்பம் - புதுப்பாளையம் பகுதியில் உள்ளவர்களும் பிற பகுதியினரும் இன்றியமையாப் பொருள் வாங்குவதற்கு இங்கேதான் வருவர். கடைத்தெரு, புகைவண்டி நிலையம், பேருந்து வண்டி நிலையம் ஆகியவை அடுப்புக் கூட்டியதுபோல் அண்மையில் உள்ளன. இத்தகு சூழ்நிலையால் கடைத்தெரு எப்போதும் மிகவும் நெருக்கமாக இருக்கும்.

இவ்வூரில் மருத்துவமனைகள் இரண்டும், பெண்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஒன்றும், பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றும், ஆண்கள் உயர்நிலைப்பள்ளி ஒன்றும் திரைப்படக் கொட்டகைகள் இரண்டும் உள்ளன. இவ்வூரில் உள்ள ‘முத்தையா ஹால்’ என்னும் திரைப்படக் கொட்டகை முன்பு நாடக அரங்காக இருந்தது. அன்று தமிழகத்திலேயே முத்தையா ஹால்தான் மிகப் பெரிய நாடக மாளிகை என்று முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் கேள்விட்டிருக்கிறேன்.

கம்மியன் பேட்டை

1778ஆம் ஆண்டு கடலூரில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த ‘வில்லியம் கம்மிங்’ (Wills cuming) என்பவர் பெயரால் ஏற்பட்டது கமிங்ஸ்பேட்டை. இஃது இப்போது கம்மியன் பேட்டை என வழங்கப்படுகிறது. இவ்வூர் 1798 ஆம் ஆண்டில் திப்பு சுல்தானால் அழிக்கப்பட்டது, அப்போது அங்கிருந்த நெசவாளர் குடும்பங்கள் வெளியேறிவிட்டனவாம். கம்மியன் பேட்டை திருப்பாதிரிப் புலியூரை ஒட்டி வடபால் உள்ளது: இரண்டிற்கும் இடையே புகைவண்டிப் பாதை செல்கிறது. திருப்பாதிரிப் புலியூர் நகருக்குள் இருந்த அர்ச்சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி அண்மையில் சில ஆண்டுகட்குமுன் கம்மியன் பேட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. கம்மியன் பேட்டையின் வடக்கு எல்லையில் கெடிலம் ஓடுகிறது,

பாடலி புத்திரம்

பாடலி புத்திரம் என்னும் ஊர் ஒன்று இருந்ததாகப் பெரிய புராணத்தால் தெரிய வருகிறது. ‘பாடலம் என்றால் பாதிரி, பாடலி புத்திரம் என்றால் பாதிரி மரம் நிறைந்த இடம்; எனவே, திருப்பாதிரிப் புலியூரைக் குறிக்கும் வட மொழிப் பெயர்தான் ‘பாடலி புத்திரம்’ எனப் பலரும் கூறுகின்றனர். பாடலி புத்திரமும் திருப்பாதிரிப் புலியூரும் ஒன்றா? அல்லது வெவ்வேறா? இந்த ஐய வினாவிற்குப் பெரிய புராணத்திலேயே விடை இருக்கிறது. இந்த இரண்டு இடப் பெயர்களையும் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் தனித்தனிச் சூழ்நிலையில் தனித்தனியாகக் கூறியுள்ளார். இதைக் கொண்டே இரண்டையும் வெவ்வேறாகத் துணியலாம்.

திருவாமூரில் திலகவதியாரின் தம்பியாகப் பிறந்த திருநாவுக்கரசர் இளமையில் பெற்றோரை இழந்தபின், பாடலிபுத்திரம் என்னும் ஊரை யடைந்து சமண மதத்தில் சேர்ந்து பெரிய தலைவராகத் திகழ்ந்தார். இதனைச் சேக்கிழார் பெரிய புராணத்தில் பின்வருமாறு விவரிக்கிறார்:

[9]“பாடலிபுத் திரமென்னும் பதிஅணைந்து சமண்பள்ளி
மாடணைந்தார் வல்லமணர் மருங்கணைந்து மற்றவர்க்கு
வீடறியும் நெறிஇதுவே எனமெய்போல் தங்களுடன்
கூடவரும் உணர்வுகொளக் குறிபலவும் கொளுவினார்”
“அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லானவெலாம்
பொங்குமுணர் வுறப்பயின்றே அந்நெறியிற் புலன்சிறப்பத்
துங்கமுழு உடற்சமணர் சூழ்ந்துமகிழ் வாரவர்க்குத்
தங்களின்மே லாந்தரும சேனர்எனும் பெயர்கொடுத்தார்”
‘அத்துறையின் மீக்கூரும் அமைதியினால் அகலிடத்தில்
சித்தநிலை அறியாத தேரரையும் வாதின்கண்
உய்த்தஉணர் வினில்வென்றே உலகின்கண் ஒளியுடைய
வித்தகராய் அமண்சமயத் தலைமையினில் மேம்பட்டார்.”

மேலே முதல் பாடலின் தொடக்கத்திலுள்ள ‘பாடலி புத்திரம் என்னும் பதி’ என்னும் தொடரைக் காணுங்கால், பாடலிபுத்திரம் ஒரு தனி ஊராக இருந்தமை புலனாகும். மற்றும், அங்கே சமணமதத் தலைமையகம் இருந்தமையும், அங்கே சமணமதக் கலைகள் பல பயிற்றப் பட்டமையும், திருநாவுக்கரசர் தருமசேனர் என்னும் தலைமைப் பட்டப் பெயருடன் தலைமை தாங்கியிருந்தமையும் பாடல்களால் அறியப்படுகின்றன. பாடலிபுத்திரத்தில் சமணமதத்தின் தலைமையகம் ஒன்று இருந்ததென்றால், அங்கே பல கலைகள் பயிற்றப்பட்டன என்றால், அங்கே பெருந்தலைவர் ஒருவர் தலைமை தாங்கியிருந்தார் என்றால், அப்பாடலிபுத்திரம் ஒரு சிற்றூராக இருந்திருக்க முடியாது; ஒரு பேரூராகவே இருந்திருக்க வேண்டும்.

சமண நூல்களைக் கொண்டு பார்க்கும் போதும், பாடலி புத்திரம் அன்று பெற்றிந்த பெருமை புலனாகிறது. இவ்வூர் மூன்றாம் நூற்றாண்டிலேயே சமணர்களின் சிறப்பிடமாய்த் திகழ்ந்தது. ஐந்தாம் நூற்றாண்டில் சிம்மசூரி, சரவ நந்தி முதலிய சமணப் பெரியார்கள் இங்கே தங்கியிருந்தனர். சரவ நந்தியானவர் சிம்ம நந்தியின் உலோக விபாகத்தைப் புகழ்ந்து நூல் எழுதியது பாடலிபுத்திரத்தில்தான்! ஏழாம் நூற்றாண்டு வரையும் பாடலி புத்திரம் மிகச் சிறப்புற்றிருந்தது.

இங்கே சமணர்க்குத் தலைமை தாங்கியிருந்த நாவுக்கரசருக்குச் சூலைநோய் உண்டாக, அவர் தம் தமக்கை திலகவதியாரின் துண்டுதலால் சமணர்க்குத் தெரியாமல் இரவோடிரவாகப் பாடலிபுத்திரத்தினின்றும் புறப்பட்டுத் திருவதிகை போய்ச் சேர்ந்தார். இதனைச் சேக்கிழார்,

[10]பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 61.“பொய் தருமால் உள்ளத்துப்
புன்சமணர் இடங்கழிந்து
மெய் தருவான் நெறியடைவார்
வெண் புடைவை மெய்சூழ்ந்து
கைதருவார் தமையூன்றிக்
காணாமே இரவின்கண்
செய்தமா தவர்வாழுந்
திருவதிகை சென்றடைவார்”

என்னும் பாடலில் தெரிவித்துள்ளார். இப்பாடலில் ‘சமணர் இடம்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பது பாடலிபுத்திரமாகும். பாடலிபுத்திரத்திலிருந்து சமணர்க்குத் தெரியாமல் நாவுக்கரசர் ஒரே இரவில் திருவதிகை சென்று விட்டார் என்பது இப் பாடலால் புலனாகிறது. யாருக்கும் தெரியாமல் இரவில் புறப்படுபவர் முன்னிரவில் புறப்பட்டிருக்க முடியாது. எல்லாரும் படுத்த பிறகு இரபு பத்து அல்லது பதினொரு மணிக்கு மேல்தான் புறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு புறப்பட்டவர் விடிவதற்குள் திருவதிகையை அடைந்திருக்க வேண்டும். தெரியாமல் செல்பவர்கள் விரைவாக நடப்பது இயற்கையென்றாலும் சூலைநோய் (வயிற்றுநோய்) கொண்டிருந்ததால் நாவுக்கரசர் ஒரளவு மெதுவாக நடந்து சென்றிருப்பார். எனவே, ஒரு வயிற்று நோய்க்காரன் நள்ளிரவில் புறப்பட்டு விடிவதற்குள் சென்றடையக் கூடிய தொலைவிலேயே திருவதிகை இருந்தது என்பதும் இப் பாட்டிலிருந்து உய்த்துணரப்படலாம். அங்ங்னமெனில், திருவதிகையிலிருந்து ஏறக்குறைய 20 கி.மீ. (12 மைல்) தொலைவில் பாடலிபுத்திரம் இருந்திருக்கலாம் என்று கொள்ளலாம். இந்தக் கருத்தை நினைவில் இருத்தி அடுத்த கருத்துக்குச் செல்வாம். நாவுக்கரசர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறியதையறிந்த சமணர்கள் பொறாது துடிப்பதைச் சேக்கிழார் பின்வரும் பாடலால் தெரிவிக்கிறார்:


[11]“இன்ன தன்மையில் இவர்சிவ நெறியினை எய்தி
மன்னு பேரருள் பெற்றிடர் நீங்கிய வண்ணம்
பன்னு தொன்மையிற் பாடலி புத்திர நகரில்
புன்மை யேபுரி அமணர்தாம் கேட்டது பொறாராய்”

இப்பாடலிலுள்ள “தொன்மையின் பாடலிபுத்திரநகர்” என்னும் பகுதியால், பாடலிபுத்திரம் மிகவும் தொன்மை வாய்ந்தது எனவும், ஒரு நகரம் எனவும் அறியலாம்.

‘நாவுக்கரசருக்குப் பல தொல்லைகள் தந்த சமணர்கள் இறுதியாக அவரைக் கல்லிலே கட்டிக் கடலிலே போட்டனர். அவர் தப்பித்துக் கொண்டு திருப்பாதிரிப் புலியூர்ப் பக்கத்தில் கரையேறினார்; பின்னர்த் திருப்பாதிரிப் புலியூரை அடைந்து சிவபெருமானை வழிபட்டார்’ என்று சேக்கிழார் பாடியுள்ளார்; பாடல்கள்;

[12]“வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கலே சிவிகை ஆயிட

ஏந்தியே கொண்டெழுந்த தருளு வித்தனன்
பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்"
தொழுந்தகை நாவினுக் கரசுந் தொண்டர்முன்
செழுந்திருப் பாதிரிப் புலியூர்த் திங்கள்வெண்
கொழுந்தணி சடையனைக் கும்பிட் டன்புற
விழுந்தெழுந் தருள்நெறி விளங்கப் பாடுவார்."

இப் பாடல்களில், நாவுக்கரசர் திருப்பாதிரிப் புலியூர்ப் பக்கத்தில் கரையேறியதாகவும், திருப்பாதிரிப் புலியூரில் சிவனை வழிபட்டதாகவும் சேக்கிழார் கூறியிருக்கிறாரேயொழிய, பாடலிபுத்திரத்தின் பக்கத்தில் கரையேறியதாகவோ பாடலி புத்திரத்தில் சிவனை வழிபட்டதாகவோ கூறவில்லை. இதைக் கொண்டு, பாடலிபுத்திரமும் திருப்பாதிரிப் புலியூரும் வெவ்வே றானவை என்பது சேக்கிழார் கருத்து என உய்த்துணரலாம்.

அடுத்தபடியாக, சமணரைவென்ற நாவுக்கரசரால் சைவனாக மாற்றப்பட்ட மகேந்திரவர்மப் பல்லவன், பாடலிபுத்திரத்தில் இருந்த சமணக் கோயில், மடம் முதலியவற்றை இடித்துக் கொண்டு வந்து திருவதிகையில் ‘குணபரேச் சரம்’ என்னும் சிவன்கோயில் கட்டியதாகச் சேக்கிழார் பாடியுள்ளார்:

[13]"வீடறியாச் சமணர்மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த
காடவனும் திருவதிகை நகரின் கண் கண்ணுதற்குப்
பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித் துக்கொணர்ந்து குணபரஈச் சரம்எடுத்தான்

என்பது பாடல். இப் பாடலால் பாடலிபுத்திரம் பல்லவ மன்னனால் அழிக்கப்பட்டது என்பது புலனாகும். முற்காலப் பல்லவர்கள் ஆட்சி தொடங்கிய மூன்றாம் நாற்றாண்டிலிருந்து சிறப்புற்று விளங்கிய பாடலிபுத்திரம், ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மகேந்திரவர்மப் பல்வன் ஆட்சியில் வீழ்ச்சியுற்றது.

இதுகாறுங் கூறி வந்த பெரிய புராண இலக்கியச் சான்றுகளைக் கொண்டு, ‘சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் கொண்டிருந்த பாடலிபுத்திரம் வேறு; சிவன் கோயிலைக் கொண்ட திருப்பாதிரிப் புலியூர் வேறு; இக் காலத்தில் ஆராய்ச்சியாளர் பலரும் தெரிவிப்பதுபோல் இரண்டும் ஒன்றல்ல’ - என்னுங் கருத்து தெள்ளத் தெளிய உறுதிப்படும். அப்படி இரண்டும் வெவ்வேறானவை என்றால், பாடலிபுத்திரம் அன்று எங்கே யிருந்தது? என்ற வினா எழும். இதற்கு விடை காணவேண்டும்.

சூலைநோய் கொண்டிருந்த நாவுக்கரசர் நள்ளிரவு அளவில் பாடலிபுத்திரத்தில் புறப்பட்டு விடிவதற்குள் திருவதிகை அடைந்ததாகத் தெரிவதால், திருவதிகையிலிருந்து பாடலி புத்திரம் 20 கி.மீ (12 மைல்) தொலைவில் இருந்திருக்கலாம் என்று முன்பு (பக்கம் - 377} கணித்தோம். மற்றும், மகேந்திர வர்மப் பல்லவன் பாடலிபுத்திரத்துப் பாழிகளையும் பள்ளி களையும் இடித்துக் கொண்டுபோய்த் திருவதிகையில் குணபரேச்சரம் என்னும் கோயில் கட்டினானென்றால், கருங்கற் பொருள்ளை நெடுங் தொலைவு இழுத்துக் கொண்டு போகாமல், 20 அல்லது 25 கி.மீ. தொலைவிலேயே சிவன் கோயில் கட்டினான் என்று கொள்ளலாம். இவ்வாறெல்லாம் தொலவைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது, திருவதிகைக்கு 20 அல்லது 25 கி.மீ தொலைவில் சிறப்புற்றிருந்த இடமாகவும், பாடலம் என்னும் பாதிரி மரம் நிறைந்திருந்த இடமாகவும் அறியக் கிடப்பது, கிழக்கேயுள்ள திருப்பாதிரிப் புலியூர்ப் பகுதியைத் தவிர, வேறு எந்தத் திக்கிலும் வேறு எந்த இடமும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்படியென்றால் பாடலி புத்திரமும் பாதிரிப் புலியூரும் ஒன்றா என்றால் இல்லையில்லை; பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் பாடலி புத்திரம் ஒரு தனிப் பகுதியாக இருந்தது என்பதுதான் உண்மை. இவ்விரண்டையும் தனித்தனி நகராகச் சேக்கிழார் குறிப்பிட்டிருப்பதை ஈண்டு நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

ஐரோப்பாவிலிருந்து தமிழகத்திற்குக் கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்தவர்கள், புகழ்பெற்ற இந்துக் கோயில்கள் இருக்கும் இடத்திற்குப் பக்கத்தில் கிறித்துவக் கோயில் (சர்ச்) எழுப்ப முயன்றதும், அம்முயற்சியில் சில இடங்களில் வெற்றி பெற்றதும் சில இடங்களில் தோல்வியடைந்ததும் நாடறிந்த உண்மை. எடுத்தக்காட்டாக, - தென்னார்க்காடு மாவட்டத்தில் மயிலம் மலைமேல் உள்ள முருகன் கோயில் மிகவும் புகழ் பெற்றது. கோயில் உள்ள குன்றுக்குப் பக்கத்தில் இணைப்பாக மற்றொரு குன்று உள்ளது; அந்த வெற்றுக் குன்றில் மாதாகோயில் (சர்ச்) ஒன்று கட்டுவதற்காக ஐரோப்பியர் ஆட்சியில் கிறித்துவ மதத் தலைவர்கள் எவ்வளவோ முயன்றனராம்; முடியவில்லை. மதம் பரப்ப முயல்வோருக்கு இது வழக்கம் என்பதை அறிவிப்பதற்காக இங்கே இஃது எடுத்துக் காட்டப்பட்டது.

இதுபோலவே, பண்டு சமண சமயத்தைப் பரப்ப முயன்ற சமணர்கள், சைவசமயத்திற்குச் சிறப்பிடமாய்த் (முக்கிய கேந்திரமாய்த் திகழ்ந்த திருப்பாதிரிப் புலியூருக்குப் பக்கத்தில் சமணசமயத்திற்குச் சிறப்பிடம் அமைக்க முனைந்தனர்; அதன் பயனாய் உருவானதே பாடலிபுத்திரம். அங்ஙனமெனில், திருப் பாதிரிப் புலியூருக்கு நேர் வடக்கே 5 கி.மீ தொலைவிலுள்ளதும் பண்டு பெரிய வடமொழிப் பல்கலைக்கழகம் திகழ்ந்ததுமான பாகூர் பாடலிபுத்திரமாக இருந்திருக்கலாமோ எனில், இல்லை, பாகூருக்குப் பாதிரிமரத் தொடர்பு இல்லை; மற்றும், ஏழாம் நூற்றாண்டில் பாடலிபுத்திரம் மகேந்திரவர்மப் பல்லவனால் கலைக்கப்பட்டுவிட்டது; பாகூரோ ஒன்பதாம் நூற்றாண்டிலும் சிறப்புற்றிருந்ததாகத் தெரிகிறது. பாகூர் வட மொழிப் பல்கலைக்கழகத்திற்கு ஒன்பதாம் நூற்றாண்டில் நிருபதுங்க வர்மப் பல்லவன் மூன்று சிற்றார்களை அளித்த செய்தி அறியப்பட்டுள்ளது. எனவே, ஏழாம் நூற்றாண்டிலேயே வீழ்ச்சியடைந்துவிட்ட பாடலிபுத்திரம் பாகூர் அன்று.

திருப்பாதிரிப்புலியூரினும் வேறாகச் சேக்கிழாரால் குறிப்பிடப்பட்டுள்ள பாடலிபுத்திர நகரம், திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் தனியாக இருந்தது என்று உய்த்துணர வாய்ப்பிருக்கிறது. திருப்பாதிரிப் புலியூருக்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் ‘பாதிரிக்குப்பம்’ என்னும் சிற்றூர் ஒன்று இப்போதும் உள்ளது. இவ்வூர், கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் திருப்பாதிரிப் புலியூருக்கும் திருவயிந்திரபுரத்திற்கும் நடுவில் உள்ளது. இந்தப் பாதிரிக்குப்பம் இருக்கும் பகுதியில்தான் பழைய பாடலிபுத்திரம் இருந்திருக்கக் கூடும். இதற்குச் சான்றுகள் இல்லாமற் போகவில்லை; அவையாவன:

{1} பாதிரிக்குப்பத்திற்கும் திருவதிகைக்கும் ஏறக்குறைய 20 கி.மீ. தொலவுதான் இருக்கும். சூலை நோய் கொண்டிருந்த நாவுக்கரசர் இந்தப் பகுதியில் நள்ளிரவில் புறப்பட்டுப் பையப் பைய நடந்திருப்பினும் விடிவதற்குள் திருவதிகை சென்றடைந்து விட்டிருக்க முடியும். இந்த இரண்டு ஊர்களும் கடலூர் - திருக்கோவலூர் மாவட்ட நெடும்பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

(2) அந்தக் காலத்தில் பாதிரி மரங்கள் நிறைந்திருந்ததால் பாதிரிக்குப்பம் என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப் படுகிறது. பாடலிபுத்தரம் என்றாலும் பாதிரி மரங்கள் நிறைந்த இடம் என்பதுதான் பொருள்; எனவே, பெயர்க்காரணத்தாலும் இந்தக் கருத்து பொருத்தமானது என்பது புலப்படும்.

(3) இந்த நூலில் கெடிலத்தின் திசை மாற்றம், கெடிலத்தின் தொன்மை என்னும் தலைப்புகளில் பாதிரிக் குப்பம் முத்தால் நாயடு என்னும் முதியவர் குறிப்பிடப்பட்டிருக்கிறார். கெடிலம் முற்காலத்தில் வண்டிப் பாளையம் அருகே ஓடியதாகவும், அந்தப் பகுதியில் நிலத்தைத் தோண்டிய போது அடியில் கல்மரத் துண்டுகள் (Wood Fossil) அகப்பட்டதாகவும் முதியவர் முத்தால் நாயடு கூறியதாக அத் தலைப்புகளில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. முதியவர் முத்தால் நாயடுவிடம் நான் மேலும் சில வினவினேன்.

நான் : இந்த ஊருக்குப் பாதிரிக் குப்பம் என்று ஏன்
பெயர்வந்தது? -
முதியவர் : அந்தக் காலத்தில் பாதிரி மரங்கள் அடர்ந்
திருந்ததால் பாதிரிக்குப்பம் என்று பெயர் ஏற்பட்டதாகச் :::சொல்லுகிறார்கள்.
நான் : பழைய காலத்தில் இந்த ஊருக்கு என்ன
பெருமை இருந்தது?
முதியவர் : என்ன பெருமை - ஒன்றும் தெரியவில்லையே!
நான் : கோயில் குளம் - அப்படி - இப்படி என்று
ஒன்றும் பெருமை இருக்கவில்லையா?
முதியவர் : ஒ, அதுவா! ஏதோ கோயில் குடிக்காடு ஒரு
காலத்தில் இருந்ததாகவும், அப்புறம் அழிந்து போய் :::விட்டதாகவும் சொல்கேள்வி.
நான் : என்ன கோயில் என்று தெரியுமா?
முதியவர் : தெரியாது.
நான் : சிவன் கோயிலா? பெருமாள் கோயிலா?
முதியவர் : நம்ம சாமி கோயில் இல்லை; வேறு சாமி
கோயிலாம்.
நான் : வேறு சாமி கோயில் என்றால்...?
முதியவர் : ஏதாவது கிறித்தவர் கோயிலாயிருக்கும்.
நான் : கிறித்தவர் கோயில் என்றால், இங்கே யாராவது
கிறித்தவப் பாதிரிமார்கள் இருந்திருப்பார்களா? அதனால்தான் இவ்வூருக்குப் பாதிரிக் குப்பம் என்னும் பெயர் ஏற்பட்டதா? அல்லது நீங்கள் முதலில் சொன்னவாறு பாதிரிமரம் இருந்ததால் இப் பெயர் ஏற்பட்டதா?
முதியவர்: ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. இஃது எனக்கும் முதியவருக்கும் இடையே நடந்த வினாவிடை உரையாடல், முதியவர் கிறித்தவக் கோயிலா யிருக்கும் என்று சொன்னது சரியன்று. சமண பௌத்த மதங்களைப் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாதாதலின் கிறித்தவக் கோயிலாயிருக்கலாம் என்று சொன்னார். மேலும், அங்கே கிறித்தவர்கள் இல்லையாதலின் கிறித்தவக் கோயில் எழக்காரணம் இல்லை. அப்படியே இருந்தாலும் ஆங்கிலேயர் ஆட்சியில் அஃது அழிவதற்குக் காரணம் இல்லை. அன்றியும் பழைய காலத்தில் அங்கே கிறித்தவக் கோயில் ஏற்பட வாய்ப்பில்லை. நான் கேட்டதற்காக, அவர் அறிந்த வேறு மதத்தை அம்முதியவர் குறிப்பிட்டார். சமணத்தைப் பற்றி அவருக்குத் தெரியாது. அழிந்து போன கோயில் குடிக்காடு இந்தப் பகுதியில் எங்கேயிருந்தது என்று நான் கேட்டதற்கு, முதியவர் நெடும் பாதையின் வடக்குப் புறமாகக் கையை நீட்டிக் காட்டினார். இந்த உரையாடல் நமது கருத்துக்கு ஓரளவு துணைபுரிகிறது.

(4) பாதிரிக் குப்பத்திற்கு மேற்கே ஒரு கி.மீ. தொலைவில் நெடும்பாதையில் குமரப்ப நாய்க்கன் பேட்டை என்னும் சிற்றூர் உள்ளது. இவ்வூரின் முகப்பில் பாதையோரம் வடபுறமுள்ள ஒரு சத்திரத் தோட்டத்தில் ஒரு சமணச்சிலை மேற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதனை மேலேயுள்ள படத்தில் காணலாம்.

இந்தப் படம் காலைவேளையில் எடுத்தது. சிலை மேற்கு நோக்கியது; பின்னால் கிழக்குப்புறம் ஞாயிற்றின் ஒளி; அதனால் சிலையின் முகம் தெளிவாக விழவில்லை. சிலையில் முகம் தெளிவாகத்தான் இருக்கிறது. இது குமரப்ப நாய்க்கன் பேட்டையில் இருப்பதால் இதனைப் ‘பேட்டைக் கல்’ என்று சுற்றுவட்டாரத்து மக்கள் அழைக்கின்றனர். மேற்கே சில கி.மீ. தொலைவில் வயலைக் கொத்தி உழுதபோது இந்தச் சிலை கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இது சமணச் சிலையேதான் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இந்தச் சூழ்நிலையை வைத்துக் காணுங்கால்; இந்த வட்டாரத்தில் ஒரு காலத்தில் சமண சமயம் தழைத்துச் செழித்திருந்தமை புலனாகும். .. மேற்கூறிய சான்றுகளைக் கொண்டு, பாதிரிக்குப்பம் இருக்கும் பகுதியில் பழைய பாடலிபுத்திரம் இருந்திருக்கக் கூடும் என்றும், பாடலிபுத்திரம் வேறு - பாதிரிப்புலியூர் வேறு என்றும் உய்த்துணரலாம். உண்மை இங்ஙனமிருக்க, இரண்டையும் ஒன்றென ஆராய்ச்சியாளர்கள் கொண்டதற்குக் காரணம், இரண்டும் பக்கத்தில் - பக்கத்தில் இருந்தமையே! மற்றும், பாடலிபுத்திரம் ஒரு பெரு நகரமாக இலக்கியங்களில் படைத்துக் காட்டப்பட்டிருப்பதாலும் - திருப்பாதிரிப் புலியூர் இன்று ஒரு பெருநகரமாகத் திகழ்வதாலும் - அந்த நகரம் இந்த நகரமாகத்தான் இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் மயங்கிவிட்டனர். இன்றைய ஆராய்ச்சியாளரையும் அணைத்துக் கொள்ளும் முறையில் இந்தச் சிக்கலுக்குப் பின்வருமாறு கூறித் தீர்வு காணலாம். ‘பண்டு பாடலிபுத்திரமும் பாதிரிப்புலியூரும் இரட்டை நகரங்களாகத் திகழ்ந்தன’ என்பதுதான் அந்தத் தீர்வு!

பாட்னா - பாடலி புத்திரம்

பாடலிபுத்திரம் என்றதும், ஆராய்ச்சியாளர் பலர்க்கும் மற்றும் ஓர் ஊர் நினைவிற்கு வரும். இன்று பீகார் மாநிலத்தின் தலைநகராயிருக்கும் பாட்னா அன்று பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டது. பாட்னா அகழ்வாராய்ச்சிகளிலிருந்து. பழைய பாட்னா - பாடலிபுரத்தின் சிறப்புகள் புலனாகியுள்ளன. அப் பாடலிபுத்திரம், கி.மு. முதல் மூன்று நூற்றாண்டுகளிலும் கி.பி. முதல் ஆறு நூற்றாண்டுகளிலுமாக 900 ஆண்டுகாலம் மிகவும் சீரும் சிறப்பும் பெற்றுத் திகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. கி.மு. 320 தொட்டு கி.மு. 185 வரை மௌரியர் ஆட்சியிலும், கி.மு. 185 தொட்டு கி.மு. 73 வரை சுங்கர் ஆட்சியிலும், கி.பி. 320 முதல் கி.பி. 600 வரை குப்தர் ஆட்சியிலும் பெரும் புகழ்பெற்று விளங்கியது.

இந்தப் பாடலி புத்திரம் ‘பாடலி’ என்னும் பெயரில் தமிழ் நூல்களிலும் புகழப்பட்டுள்ளது. படுமரத்து மோசி கீரனார் குறுந்தொகைப் (75) பாடலில்,

"வெண்கோட் டியானை சோணை படியும்
பொன்மலி பாடலி பெறீஇயல்”

எனவும், மாமூலனார் அகநானூற்றுப் (265) பாடலில்,

"பல்புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர்மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதற் கரந்த நிதியங் கொல்லோ"

எனவும், கொங்கவேளிர் பெருங்கதைப் (1-58 - 42) பாடலில்,

'பாடலிப் பிறந்த பசும்பொன் வினைஞர்’

எனவும் பாடலியைப் புகழ்ந்து பாடியுள்ளனர். இப்புலவர்கள் பாடலி என்று வடநாட்டுப் பாடலிபுத்திரத்தையே குறிப்பிட்டுள்ளனர். பாடலி சோணையாற்றங் கரையில் இருப்பதாகப் படுமரத்து மோசி கீரனாரும், கங்கைக் கரையில் இருப்பதாக மாமூலனாரும் கூறியுள்ளனர். இவ்வூருக்கு அருகில் சோணையும் கங்கையும் ஒன்று கூடுகின்றன. ஆதலின் இவ்வாறு இருவேறு விதமாகக் கூறப்பட்டுள்ளது. இது பாடலிபுரம் எனவும் அழைக்கப்படும். பழைய மகத நாட்டின் தலைநகராகப் பாடலிபுத்திரம் விளங்கியது. இப்போதிருக்கும் பாட்னாவுக்கு அருகில் இஃது இருந்திருக்கக் கூடும் என உய்த்துணரப்படுகிறது.

வடக்கே பாட்னா பாடலிபுத்திரம் சிறப்புற்றுத் திகழ்ந்ததைப் போலத் தெற்கே திருப்பாதிரிப் புலியூர் சிறப்புற்றுத் திகழ்ந்ததால், இவ்வூரும் முகமனாகப் பாடலிபுத்திரம் என அழைக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர் சிலர் அறிவிக்கின்றனர். வடக்கே வட மதுரை இருப்பதுபோலத் தெற்கேயும் மதுரை இருக்கிறது. வடக்கே காசி இருப்பது போலத் தெற்கேயும் தென்காசி இருக்கிறது. அங்கே வட கைலாசம் போல இங்கே தென் கைலாசம் இருக்கிறது. இவ்வாறே அங்கும் இங்கும் பாடலிபுத்திரங்கள் இருந்தன என்பது அவ்வாராய்ச்சியர்களின் கருத்து. மற்றும், சமண சமயம் வடக்கேயிருந்து தெற்குக்கு வந்தது என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. வடக்கேயிருந்து வந்த சமணர்கள் அங்கேயிருந்து பாடலிபுத்திரத்தையும் இங்கே கொண்டுவந்து விட்டார்கள். இந்தப் பெயர் வழக்கு, சப்பான் நாட்டை ‘ஆசியாவின் பிரிட்டன்’ என்றும், பம்பாயைக் ‘கிழக்கத்திய இலண்டன்’ என்றும், கோயமுத்துரைத் ‘தென்னகத்தின் மான்செஸ்டர்’ என்றும் இந்தக் காலத்தில் அழைப்பது போன்றதாகும் இது.

இன்னும் கேட்டால், ‘பாடலிபுத்திரம் என்னும் பெயர் பாட்னா - பாடலிபுத்திரத்தைக் காட்டிலும் கடலூர்ப் பாடலி புத்தரத்திற்கே மிகவும் பொருந்தும்’ என்று பன்மொழிப் புலவர் டாக்டர் சுநீதி குமார் சாட்டர்ஜி என்னும் வங்காளப் பெரியார் அழுத்தம் திருத்தமாக சான்றுகள் காட்டி அடித்துக் கூறியிருப்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

இஃதன்றி, பாடலிபுத்திரம் என்னும் பெயர் வடக்கேயிருந்து தெற்கே இறக்குமதியானதைப் போலவே, அப்பாடலி புத்திரத்தைத் தலைநகராகக் கொண்டிருந்த ‘மகத தேசம்’ என்னும் நாட்டின் பெயரும் தெற்கே இறக்குமதியாகி யிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அஃதாவது கடலூர்ப் - பாடலிபுத்திரம் இருந்த திருமுனைப்பாடி நாடும் மகதநாடு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டதை ஈண்டு நினைவுகூர வேண்டும். இச் செய்தியை இந்நூலில் ‘கெடில நாடு’ என்னும் தலைப்பில் காணலாம்.

வடக்கே பாலிபுத்திரம் அழிந்துவிட்டதைப் போலவே தெற்கேயும் பாடலிபுத்திரம் அழிந்து விட்டது. வடக்கே பாட்னா பகுதியை அகழ்ந்து ஆராய்ந்தது போலவே, தெற்கே கடலூர்ப் பாதிரிக்குப்பம் பகுதியை அகழ்ந்து ஆராய்ந்து பார்த்தால் எத்தனையோ உண்மைகள் தெரிய வரலாம்.

இதுகாறும் கூறியவாற்றால் பாடலிபுத்திரம் என்னும் பெயர் ஏற்பட்டதற்குக் காரணம் எதுவாயிருப்பினும், பெரிய புராணச் சான்றின்படி, பாடலிபுத்திரமும் பாதிரிப்புலியூரும் பக்கத்தில் பக்கத்தில் இருந்த தனித்தனி நகரங்கள் - இரட்டை நகரங்கள் என்பது தெளிவு.

வண்டிப் பாளையம் என்னும்
கரையேற விட்ட குப்பம்

வண்டிப்பாளையம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஒன்றரை கி.மீ. தொலைவில், கேப்பர் மலைக்குப் போகும் சாலையில் உள்ளது. நகரிலிருந்து இவ்வூருக்கு உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி உண்டு. வண்டி போகும் சாலை கண்கட்கு விருந்தாகும். சாலையின் இருமருங்கும் தென்னை மரங்கள் வரிசையாக வானளாவி நிற்கும். தென்னை மர வரிசைக்குப் பின்னால் நன்செய் வயல்களும் தென்னந் தோப்புகளும் பின்னிப் பிணைந்திருக்கும். கெடிலம் ஆற்றிலிருந்து பிரியும் பெரிய கால்வாயிலிருந்து பல சிறு கால்வாய்கள் பிரிந்து வண்டிப் பாளையத்தைச் சுற்றிலும் ஊடுருவிச் செல்கின்றன. நகரிலிருந்து வண்டிப் பாளையம் செல்லும் ஒன்றரை கி.மீ. (ஒரு மைல்) நீளச்சாலையில் ஏழு வாய்க்கால் பாலங்களைக் கடக்க வேண்டுமென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

வண்டிப் பாளையம் ஊரைச் சுற்றிலும் பல தென்னந் தோப்புகள் இருப்பதல்லாமல், ஊருக்கு நடுவிலும் ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்திலும் பல தென்னை மரங்கள் இருக்கும். ஒவ்வொரு வீட்டுத் தோட்டத்தையும் ஒரு சிறு தோப்பு என்று சொல்லலாம். கோடைக்காலத்தில் குன்னூர் - குற்றாலம் - கோடைக்கானல் செல்ல வேண்டியதில்லை. வீட்டுத் தோட்டத்தில் போய் நின்றால் போதும். வீட்டுத் தோட்டத்தை யடுத்து நன்செய் வயல் இருக்கும். வயலோர வாய்க்கால்களில் கெடிலம் ஆற்றுத் தண்ணிரைக் காணலாம். ஒருமுறை பாவேந்தர் பாரதிதாசனார் வண்டிப் பாளையம் வந்திருந்த போது, தோப்புக்கு நடுவில் இவ்வூர் இருப்பதால்தான் இவ்வளவு குளிர்ச்சியாயிருக்கிறது என்று வியந்து புகழ்ந்தார். கடலூர் நகராட்சி எல்லைக்குள் மிகவும் நீர்வளம் நிலவளம் செறிந்தது வண்டிப் பாளையம் பகுதிதான்.

பெயர்க் காரணம்

திருவயிந்திரபுரத்தருகில் வடக்கு நோக்கி வளைந்து ஒடும் கெடிலம், பத்தாம் நூற்றாண்டுக்குமுன் அவ்வாறு வளையாமல் நேர் கிழக்காகவே வந்து வண்டிப் பாளையத்தின் தெற்கு எல்லையில் ஒடி இவ்வூருக்குக் கிழக்கே கடலில் கலந்தது. சமணர்கள் நாவுக்கரசரைக் கல்லிலே கட்டிக் கடலில் போட, அவர் தப்பித்துக் கொண்டு, கடலிலிருந்து கெடிலத்தின் வழியாக எதிரேறி வந்து வண்டிப் பாளையத்தருகில் கரையேறினார். அதனால் வண்டிப் பாளையம் அந்தக் காலத்தில் கரையேற விட்ட குப்பம்’ என அழைக்கப்பட்டது. இச் செய்தி, தக்க சான்றுகளுடனும் படத்துடனும் இந்நூலில் வரலாறு கண்ட திசைமாற்றம்’ என்னும் தலைப்பில் மிக விரிவாக விளக்கப் பட்டுள்ளது. இவ்வூருக்கு மாணிக்கவாசகர் வந்தபோது அவருக்கு வழி விடுவதற்காக ஆறு திசை மாறியதாகப் புராணம் கூறுகிறது.

மேற்கூறிய செய்தியிலிருந்து, வண்டிப் பாளையத்தின் பழைய பெயர் கரையேறவிட்ட குப்பம் என்பது புலனாகும். இன்றும் ஆவணப் (ரிஜிஸ்டர்) பதிவுகளில் கரையேற விட்டவர் குப்பம் மதுரா என்பது பொறிக்கப்படுகிறது. எடுத்துக் காட்டாக எங்கள் வீட்டு ஆவணப் பதிவு ஒன்றிலுள்ள பகுதி அதிலிருக்கிறபடியே வருமாறு:

"1963 ஜூலை மீ2 உ கூடலூர் தாலுக்கா கரையேற
விட்டவர் குப்பம் மதுறா புதுவண்டி பாளையம் - 33.
வினாயகர் கோவில் தெருவிலிருக்கும்....”

இது 1963 ஆம் ஆண்டு பதிந்தது. இந்தப் பதிவில் கரையேற விட்டவர் குப்பம் என்றிருக்கிறது. ஆனால், வழக்கில் கரையேற விட்ட குப்பம் என்றே இருக்கிறது. ஒரு வேளை, மற்ற எழுத்துப் பிழைகளைப்போல 'விட்டவர்” என்பதும் எழுத்துப் பிழையாயிருக்கலாமோ எனக் கருதி வேறு சில ஆண்டுப் (1947, 1956) பதிவுகளையும் பார்த்தேன் நான்; அவற்றிலும் கரையேற விட்டவர் குப்பம்” என்றே உள்ளது. கரையேற விட்டவர் என்பது, அப்பர் பெருமானைக் கரையேற்றிக் காப்பாற்றிய சிவனைக் குறிக்கும் பெயராகும்; எனவே, கரையேறவிட்டவர் குப்பம் என்றால், கரையேறவிட்ட சிவன் எழுந்தருளியுள்ள குப்பம் என்பது பொருளாம். இதிலிருந்து, வண்டிப் பாளையத்தில் ஒரு சிவன் கோயில் அன்று இருந்தது. அந்தக் கோயில் இறைவன் பெயர்தான் கரையேறவிட்டவர் என்பது புலனாகும்.

இதற்கு, கரையேறவிட்ட நகர்ப் புராணம் என்னும் நூற்பதிப்பின் பிற்சேர்க்கையிலும் சான்று உள்ளது. அந்நூலை 1896 ஆம் ஆண்டில் பதிப்பித்த இராசப்ப ஆசிரியரும் அவர் தம்பி பொன்னுசாமி என்பாரும் உரைநடையில் எழுதியுள்ள பிற்சேர்க்கையிலுள்ள சில பகுதிகள் வருமாறு:

“அப்பர் சுவாமிகள் சமணர்கள் கட்டிவிட்ட கற்றுரண் மிதப்பிற் கடல் கடந்து கரையேறிய காரணத்தால் விளங்கிய திருக்கோயில் கிலமாய்விட்டபடியால் இயன்ற மட்டில் இதைப் புதுப்பித்து அவ் வுற்சவத்தை நடத்தி அன்பர் குழாங்களை ஆனந்திக்கச் செய்ய விரும்பி. அச் சிறு தலத்துச் சிவாலயத் திருப்பணியை மேற்கொண்டார்....... அப்பர் சுவாமிகள் கரையேறிய ஸ்தானத்தில் சிதைந்த திருக்கோயிலை அமைக்க வேண்டுமென்றாலோ “கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டது”” போலாமெனத் துணிந்து எங்கள் சொந்த மனையில் தட்டோட்டுக் கட்டட மொன்றமைப்பித்து..... கரையேற விட்டவர் குப்பம் கிராமத்தில் சுவாமியிருந்த கட்டடத்தில் காலையில் கொண்டுவந்து வைத்து.

மேலுள்ள பகுதியைக் கொண்டு, அப்பர் கரையேறிய இடத்தில் ஒரு சிவன் கோயில் இருந்து அழிந்துபோனமை புலனாகும்; அக் கோயிலைப் புதுப்பிக்க முயன்றவர்கள் அது முடியாது எனக் கைவிட்டமையும் புலப்படும், ஆவணப் பதிவுகளிலேயன்றி இவ்வுரைநடைப் பகுதியிலும் கரையேற விட்டவர் குப்பம் என இருப்பது காணலாம்.

இந்தக் ‘கரையேற விட்டவர் குப்பம்’ என்னும் பெயர் சிறிது சுருங்கிக் ‘கரையேறவிட்ட குப்பம்’ என வழங்கப்படுகிறது; இலக்கியங்களில் ‘கரையேறவிட்ட நகர்’ என்னும் பெயர் காணப்படுகிறது. அப்பர் இங்கே கரையேறியதற்குச் சான்று பகரும் முறையில் இவ்வூரில் அவர் பெயரால் மடம் ஒன்று உள்ளது. மற்றும், அவர் கரையேறிய இடத்தில் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அப்பர் இங்கே கரையேறிய தால் கரையேற விட்டவர்) குப்பம் என்னும் பெயர் இவ்வூருக்கு ஏற்பட்டதென்றால், அப்பர் கரையேறுவதற்குமுன் இவ்வூருக்கு என்ன பெயர் இருந்திருக்கக்கூடும்? இவ்வினாவுக்கு விடையிறுப்பது கடினம், இருப்பினும் ஒருவாறு பதில் கூறலாம். அப்பர் கரையேறுவதற்கு முன் இவ்வூருக்கு வறிதே ‘குப்பம்’ என்னும் பெயர் இருந்திருக்கலாம்.

வண்டிப்பாளையம்

அடுத்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க கரையேற விட்ட குப்பத்திற்கு வண்டிப்பாளையம் என்னும் பெயர் ஏன் எப்போது ஏற்பட்டது? என்ற வினாவிற்கு விடை காண வேண்டும், பாதிரி மரம் மிகுதியாக இருந்த ஊர் பாதிரிப் புலியூர் ஆனது போல, வண்டிகள் மிகுதியாக இருந்த ஊர் வண்டிப்பாளையம் எனப் பெயர் பெற்றது என்று எளிதில் சொல்லத் தோன்றும். இப்படி நோக்கின், அப்படியொன்றும் வண்டிப் பாளையத்தில் வண்டிகள் இல்லை . உழவர் மிக்க ஊரிலாவது உழவுத் தொழிலுக்காக வண்டிமாடுகள் இருக்கும். இந்த ஊரோ நெசவாளர் மிக்க ஊர். இங்கே வண்டிகள் மிகுதியாக இருக்க வாய்ப்பே இல்லை. இவ்வூர்க்காரனாகிய நான் சிறுவனாயிருந்த போது ஒருநாள் என் தந்தையை நோக்கி, ‘நம்மூரில் அவ்ளளவாக வண்டிகள் இல்லையே - ஏன் வண்டிப் பாளையம் என்னும் பெயர் வந்தது?’ என்று வினவினேன், அதற்கு என் தந்தையார் சொன்ன பதில் இன்னும் நினைவில் இருக்கிறது:- “நூறு இருநூறு ஆண்டுகளுக்குமுன் வெள்ளைக்காரர்களும் துலுக்கர்களும் ஒருவரோடொருவர் கட்சிசேர்ந்து கொண்டு இந்த வட்டாரத்தில் சண்டை போட்டார்களாம். அப்போது அவர்களுடைய தளவாடங்களை ஏற்றிக்கொண்டு வந்த வண்டிகள் நம்மூர்ப் பகுதியில் ஏராளமாக விடப்பட்டிருந்தனவாம். தொடர்ந்து பலமுறை சண்டை நடந்ததால், நம்மூர்ப்பக்கத்தில் தொடர்ந்து வண்டிகள் விடப்பட்டிருந்தனவாம். அவ்வாறு வண்டிகள் விடப்பட்டிருந்த இடம் ‘வண்டிப் பாளையம்’ எனக் குறிப்பிடப்பட்டதாம். இப்படி எனக்குப் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.” இஃது என் தந்தையாரின் பதில். இப் பெயர்க் காரணம் உண்மையானால், ஐரோப்பியர் போர்புரிந்து கொண்ட பதினெட்டாம் நூற்றாண்டில் வண்டிப்பாளையம் என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும், எதையும் உறுதியாகச் சொல்லமுடியாது.

வண்டு நகர் - வண்டுபுரம்

இவ்வூருக்குக் கரையேறவிட்ட நகர், கரையேற விட்டவர் குப்பம் என்னும் பெயர்களேயன்றி, வண்டு நகர் வண்டுபுரம் - சித்திபுரம், என்னும் பெயர்களும் வழங்கப் பட்டதாகக் கரையேற விட்ட நகர்ப் புராணம் கூறுகிறது. சிவபெருமான் ஒருமுனிவர் உருக்கொண்டு வந்து கரையேற விட்ட நகர்ச் சோலையில் யாழ் மீட்டி வண்டு போல இன்னிசை எழுப்பினாராம்; அதனால் வண்டுநகர் எனப் பெயர் ஏற்பட்டதாம் - எனக் கூறகிறது அந்நூல், இதற்காக அந்நூலில் ‘வண்டு நகர்ப் படலம்’ என ஒரு படலமே உள்ளது. அப் படலத்தில் இப் பெயரையும் பெயர்க் காரணத்தையும் அறிவிக்கும் பாடல் வருமாறு:

"மலர்க்கண் ரீங்காரம் செய்யும்
வண்டதின் முழக்க மேபோல்
அலர்க்கண் வார்சோலை யின்கண்
டவமுனி முழக்கும் ஓசை
புலப்பட எழுந்த தாலே
பொருந்தும் அந் நகர்க்கு நாமம்
வலப்படச் சார்ந்த தொண்சீர்
வண்டுமா நகர மென்றே.” (27)

நீர்வளம் நிலவளம் மிக்க ஊராதலின் சோலைகள் பூத்துக் குலுங்கித் தேன் பிலிற்றுகின்றன; வண்டுகள் மலர்களைச் சூழ்ந்து ஊதுவதால் ‘வண்டுபுரம்’ என்னும் பெயர் ஏற்பட்டது என்னும் குறிப்பில்,

"அந்தண் போது சார்ந்து ஊதும் வண்டுபுரம்” (37)

எனவும் அதே படலத்தில் கூறப்பட்டுள்ளது. புராண ஆசிரியர், வண்டுநகர் - வண்டு புரம் என்னும் பெயர்களிலிருந்து வண்டுப் பாளையம் என்னும் பெயர் உருவாகிப் பின் வண்டிப் பாளையம் என்னும் பெயர் உருவாகிப் பின் வண்டிப் பாளைய மாயிற்று என்னும் கருத்தைக் கற்பிப்பதற்காக, இப் பெயர்க் காரணங்களைப் புனைந்து கூறியிருப்பாரோ - என்னவோ!

சித்திபுரம்

இவ்வூருக்குச் சித்திபுரம் என்னும் பெயரும் ஏற்பட்டிருந்ததாகப் புராணம் கூறுகிறது. சிவபெருமான் சித்தராய் வந்து, மாணிக்க வாசகருக்காகக் கெடிலத்தை வடக்கு நோக்கி ஏகச் செய்து சித்தி பல புரிந்ததனால் சித்திபுரம் என்னும் பெயர் ஏற்பட்டதாம். இதனை, கரையேறவிட்ட நகர்ப்புராணம் - சித்தர் திருவிளையாடற் படலத்திலுள்ள

"அத்தகுதென் திசைக்கங்கை யிருபுறமுஞ் சித்தேசன்
அமலப் பூந்தாள்
வைத்துவிளை யாடியமா வியத்தான மன்னதனால்
வாய்ந்த தந்தச்
சுத்தமுறுங் கரையேற விட்டநகர் சித்தபுரத்
தூவார் நாமம்
சித்திபுரம் எனநலோர் செப்பிடுவார் அருந்தவத்திற்
சிறந்த சான்றீர்”

என்னும் (45) பாடலால் அறியலாம்.

இவ்வூரில் முன்பு இருந்து இப்போது சிதைந்து போனதாகக் கருதப்படும் சிவன் கோயில் இறைவன் பெயர் காட்சிநாதர், திருக்காட்சிபிரான் என்பதாகவும். இறைவி பெயர் காட்சி நாயகி, தெரிசனாம்பிகை என்பதாகவும் கரையேறவிட்ட நகர்ப் புராணத்தால் அறியப்படும் செய்தி ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.

வண்டிப் பாளையம் பழைய வண்டிப் பாளையம் எனவும் புதுவண்டிப் பாளையம் எனவும் இரு பிரிவாக அமைந்துள்ளது. திருப்பாதிரிப் புலியூரிலிருந்து கேப்பர் மலைக்குப் போகும் சாலையின் கீழ்பால் இருப்பது பழைய வண்டிப் பாளையம், மேல்பால் இருப்பது புதுவண்டிப் பாளையம் இரண்டும் இணைந்தே உள்ளன.

பழைய வண்டிப்பாளையம்

இங்கே திருநாவுக்கரசர் திருமடமும் அதனையொட்டிக் கற்பக விநாயகர் கோயிலும் உள்ளன. கோயிலில் திருநாவுக்கரசர் சிலையும் உண்டு. அப்பர் கரையேறிய இடம் என்பதற்கு இது போதிய சான்று. சிதம்பரம் ஈசானிய மடம் இராமலிங்க சுவாமிகள் ‘கரையேறவிட்ட நகர் திருநாவுக்கரசு சுவாமிகள் சரித்திர நவமணி மாலை கற்பக விநாயகர் இரட்டை மணிமாலை என்னும் நூல்கள் இயற்றியுள்ளார். பழைய வண்டிப் பாளையத்தில் ‘சிறுத் தொண்டர் அமுது படையல் விழா சிறப்பாக நடைபெறும். இங்கே, பாரி கம்பெனியார் 1843 ஆம் ஆண்டு ஒரு கரும்பாலை நிறுவினர். அது தொடர்ந்து வெற்றியுடன் நடைபெறவில்லை. ஊரின் கிழக்கெல்லையிலுள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்றும் கரும்பாலையின் புகைபோக்கியைக் காணலாம்.

புதுவண்டிப்பாளையம்

இங்கே ஒரு முருகன் கோயில் உள்ளது. இந்த வட்டாரத்தில் இது மிகவும் பெயர் பெற்றது. ஞாயிறு தோறும், ஒவ்வொரு திங்களிலும் (மாதத்திலும்) - கார்த்திகை (கிருத்திகை) நாள்தோறும் இக்கோயிலில் பேய்ப் பெண்கள் பெண்களாக்கப்படுகின்றனர்; அதாவது, பேய் - பிசாசு பிடித்த பெண்கள் இங்கே வந்து பேயோட்டிக் கொண்டு செல்கின்றனர்; பில்லி - சூனியங்களாலும் தீராப் பிணிகளாலும் தாக்கப் பட்டவர்களும் இங்கே வந்து வழிபட்டு ஆறுதலும் மாறுதலும் பெற்றுச் செல்கின்றனர். இக்கோயிலின் தென்மேற்குத் திருச்சுற்றுப் பகுதியில் பேயோட்டல் நடைபெறுகிறது. வேல் ஒன்று உள்ளது; அந்த வேலின் முன்னால் இது நடைபெறும். பேயோட்டுவதற்கு என்று ஒரு ‘சாமியார் உள்ளார்; அவர், ஆடிப் பாடி அங்கலாய்க்கும் பெண்களை அமைதி பெறச் செய்கிறார்; இதைக் கொண்டு, அந்தப் பெண்களைப் பிடித்திருந்த பேய்ப் பீடை தொலைந்துவிட்டதாகப் பொருள் பண்ணிக் கொள்ள வேண்டும். பேயாட்டம் ஆடும் பெண்கள் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் இவரைப்போல் ஒருவர் சாமியாராக மாறினால், புது வண்டிப்பாளையம் கோயிலில் கூட்டம் சேராது. இங்கே சாமியாடிக் குறி சொல்வதும் உண்டு.

புதுவண்டிப் பாளையம் கோயில் ஐப்பசித் திங்களில் கந்தர் சஷ்டிப் பெருவிழா ஆறுநாள் நடைபெறும். சஷ்டியன்று நடைபெறும் சூரசம்மார விழா காணத்தக்கது. மற்றும், பங்குனித் திங்களில் பத்து நாள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் உத்தரத்தன்று தேர் ஒடும். ஆறாம் நாளில் திருப்பாதிரிப் புலியூர்க் கோயிலிலிருந்து பாடலேசுரர் இக் கோயிலுக்கு எழுந்தருளி, மைந்தன் முருகனுடன் ஒரு நாள் மகிழ்ச்சியாய்ப் பொழுது போக்கி விழா வயர்ந்து செல்வார்; இது மிகவும் சிறப்பாக இருக்கும். இந்தப் பங்குனி உத்தரப் பெருவிழா சில ஆண்டுகளாக நடைபெறவில்லை குளக்கரையில் நிறுத்தப்பட்டிருக்கும் தேர் மக்கிக் பாழடைந்து வருகிறது.

அப்பர் கரையேறிய சித்திரை அனுட நாளிலும் அது சார்பாகப் பெரிய விழா நடைபெறும். அன்று திருப்பாதிரிப் புலியூர்ப் பாடலேசுரரும் வண்டிப் பாளையம் முருகனும் அப்பர் கரையேறிய இடத்திற்குச் சென்று கரையேற்றுவிழா நடத்துவர். இவ்விழா பற்றிய விரிவான விளக்கத்தை, இந்நூலில் ‘வரலாறு கண்ட திசைமாற்றம்’ என்னும் தலைப்பில் காணலாம்.

வண்டிப் பாளையம் முருகன், தைத்திங்களில் ஐந்தாம் நாளிலும் இரதசப்தமியன்றும் பெண்ணையாற்றிற்கும், தை அமாவாசையன்றும் மாசி மகத்தன்றும் கடற்கரைக்குச் சென்று நீராடி வருவார். மாசி மகப் பெருவிழாவன்று நூற்றுக் கணக்கான இறையுருவங்கள் கடற்கரைக்கும் செல்லும். அவற்றுள், திருப்பாதிரிப் புலியூர் இறையுருவம் முதலாவ தாகவும், திருமாணி குழி இறையுருவம் இரண்டாவதாகவும், வண்டிப் பாளையம் இறையுருவம் மூன்றாவதாகவும் செல்வது தொன்றுதொட்ட மரபு. இம் மரபை மாற்ற முடியாது. இதைக் கொண்டு, வண்டிப் பாளையம் முருகன் கோயிலின் சிறப்பை உணரலாம். இக் கோயில் முருகன்மேல், திருப்பாதிரிப் புலியூர் ஞானியார் மடம் - இரண்டாம் பட்டத்து அடிகளார், ‘முருகர் அந்தாதி’ என்னும் நூல் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வண்டிப் பாளையத்தில் நகர் மன்றம் நடத்தும் உயர்நிலைப் பள்ளி ஒன்றுள்ளது. ஞானியார் அடிகளார் அடக்கம் செய்யப்பட்டுள்ள ‘சாமியார் தோட்டம்’ என்னும் பகுதி ஊருக்கு அருகில் இருப்பதும் ஒரு சிறப்பு.

தொழில் துறையிலும் வண்டிப் பாளையம் சிறப்புற்றுத் திகழ்கிறது. வண்டிப் பாளையம் தென்னங் கீற்றுகளுக்குச் செல்வாக்கு மிகுதி. பொம்மை செய்யும் தொழிலும் இங்கே நடைபெறுகிறது; இந்த வட்டாரத்துக் களிமண் அதற்கேற்ற நயப்பு உடையது.

வண்டிப் பாளையத்தைத் தலைசிறந்த ஒரு நெசவுத் தொழிற் பேட்டையாகச் சொல்லலாம். இங்கே நெசவாளர் குடும்பங்களே மிகுதி. இவ்வூரில் கைலிகளே நெய்யப்படுகின்றன. இவ்வூர்க் கைலிகள் மிகவும் தரம் உள்ளவை என வெளி நாடுகளில் புகழ் பெற்றுள்ளன. இவ்வூரில் கைலி வாணிக நிலையங்கள் (கைலி கம்பெனிகள்) பலவும், சாயத் தொழிற் சாலைகள் பலவும் உள்ளன. இவ்வூர்க் கைலிகள் வணிக நிலையங்களின் வாயிலாக, சிலோன், சிங்கப்பூர், சரவாக், போர்னியோ, மலேயா, தாய்லாந்து, ஹாங்காங், இந்தோனேசியா, பர்மா, பாகிஸ்தான், மோரிசு, ஏடன், அமெரிக்கா முதலிய நாடுகட்குச் சென்றன - செல்கின்றன. இவ்வூர்க் கைலி வணிகர் சிலர்க்கு, இந்தோனேசியா ஏடன் முதலிய வெளிநாடுகளிலும் கிளை வணிக நிலையங்கள் உண்டு. வெளிநாட்டுப் பணத்தை இந்தியாவிற்கு இழுத்துத் தரும் இன்றியமையா நிலைகளுள் (முக்கியக் கேந்திரங்களுள்) வண்டிப் பாளையமும் ஒன்று. அமெரிக்க டாலரை வாங்கித் தரும் ‘வண்ணம் மாறும் சென்னைத் துணிகள்’ எனப்படுபவை வண்டிப் பாளையத்திலிருந்தும் செல்கின்றன. கைலி ஏற்றுமதி முன்பு கூடலூர்த் துறைமுகத்தின் வாயிலாகவும் நடந்தது; இப்போது சென்னைத் துறைமுகத்தின் வாயிலாகவே நடைபெறுகிறது.

புருகேசு பேட்டை

இவ்வூர் வண்டிப் பாளையத்திற்குத் தெற்கே அரை கி.மீ. தொலைவில் கேப்பர் மலை அடிவாரத்தில் கொண்டங்கி ஏரிக்கரையில் உள்ளது. 1767 முதல் 1769 வரை கடலூரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த ஹென்றி புரூக் (Henry Brooke) என்பவர் பெயரால் இது ‘புரூக்ஸ் பேட்டை’ என அழைக்கப்பட்டது. மக்கள் இப்போது ‘புருகேசு பேட்டை” என்கின்றனர். இவ்வூரில் ஒரு முருகன் கோயில் உண்டு. அதை மையமாகக் கொண்டு ஞானியார் அடிகளார் இவ்வூருக்கு ‘முருகேச நகர்’ எனப்பெயர் சூட்டினார்கள். இந்தக் கோயில் கரையேறவிட்ட நகர்ப் புராணத்தில் ‘சண்முகக் கோட்டம்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்போது ‘புருகேசு’ ‘முருகேசு’ ஆயிற்று! இந்த ஊரும் ஒரு நெசவுத் தொழிற் பேட்டைதான்!

இந்தப் பகுதிக்குக் கிழக்கேயுள்ள ‘வசந்தராயன் பாளையம்’ என்னும் சிற்றுாரும் ஒரு நெசவுத் தொழிற் பேட்டையே. அங்கே பட்டு நெசவு மிகுதியாய் நடைபெறுகிறது. இதற்கு அணித்தேயுள்ள ‘மண(ல்) வெளி’ என்னும் இடத்தில் கோரைப் பாய் நெசவு பெரிய அளவில் நடைபெறுகிறது.

புதுப்பாளையம்

இது கடலூர்ப் புதுநகரைச் சேர்ந்த பகுதி, திருப்பாதிரிப் புலியூருக்குக் கிழக்கே கெடிலத்தின் கிழக்குக் கரையிலும் வடக்குக்கரையிலும் உள்ளது. கெடிலம் ட போல் வளைந்து புதுப்பாளையத்தைச் சுற்றிக் கொண்டு செல்கிறது. இதன் மேற்கு எல்லையும் தெற்கு எல்லையும் கெடிலம்; வடக்கு எல்லை மஞ்சக் குப்பம் பெருவெளித்திடம் (மைதானம்); கிழக்கு எல்லை செயின் டேவிட் கோட்டைப் பகுதி. இந்த நான்கு எல்லைக்கு உட்பட்ட பகுதியில், அரசினர் கலைக்கல்லூரி, நகராட்சி உயர்நிலைப்பள்ளி, பெண்கள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, இரண்டு பெண்கள் உயர்நிலைப் பள்ளிகள், நகராட்சித் தலைமையலுவலகம், மாவட்ட மைய நூலகம், அரசுக் கருவூல அலுவலகம், சிறு நீதி மன்றம், ஒரு திரைப்பட மாளிகை, சிறந்த உணவு விடுதிகள், சில அலுவலகங்கள் முதலியவை உள்ளன. கெடிலக்கரையில் பகவந்த தயானந்த சுவாமிகள் மடம் உள்ளது. கோவா கத்தோலிக்க சபையினரால் 1884இல் கட்டப்பட்ட ‘ரோசரி சர்ச்’ என்னும் மாதா கோயில் இப்பகுதியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுப்பாளையம் பகுதியில் கெடிலத்தின் பாலத்துக்கு வடபுறம் ஆற்றின் கிழக்குக் கரையில் ‘பிருந்தாவனம்’ என்னும் பெரிய உணவு விடுதி ஒன்று இருப்பதைக் காணலாம். இப்போது இந்த இடத்தில் ‘கிளி கொஞ்சுகிறது’. சில்லாண்டுகட்கு முன் இந்த இடம் ஒதுக்குப் புறமாகப் பாழடைந்து கிடந்தது. அதற்கும் பல்லாண்டுகட்கு முன் இந்த இடம் மிகவும் சிறப்புற்றுத திகழ்ந்தது. இந்த இடத்தில் ஓர் அரசரின் அரண்மனை இருந்தது. ‘நவாப் உத்தவுலா’ பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கடலூரை ஒரு முக்கிய நிலையாகக் (கேந்திரமாகக்) கொண்டிருந்தார்; கெடிலக் கீழ்க்கரையில் மூன்றடுக்கு அரண்மனை கட்டிக் கொண்டார். அதற்குக் ‘கெடிலம் கேசில்’ (Gadilam castle) என்பது பெயர். அந்த அரண்மனையை யொட்டி எதிரில் ஒரு சிறு திடல் (மைதானம்) இருந்தது. அது ‘கேசில் மைதானம்’ என்று அழைக்கப்பட்டது. ஐரோப்பியர்களின் போராட்டத்திற்கிடையே அரண்மனை அகப்பட்டுச் சீரழிந்தது. 1940ஆம் ஆண்டளவில் கூட அந்த அரண்மனை பாழடைந்த நிலையில் தோற்றமளித்துக் கொண்டிருந்தது. இந்த அரண்மனைத் திடலில் ‘இடம் பெயரும் திரைப்படக் கொட்டகைகள்’ (டூரிங் சினிமா) இருந்து வந்தன. 1930 - 35 ஆம் ஆண்டளவில் பேசாத படங்கள் இங்கே திரையிடப்பட்டன; பின்னர்ப் பேசும் படங்கள் திரையிடப் பட்டன. இடையிடையே பாழடைந்து கிடந்த நிலைமைக்குப் பின் இப்போது ‘பிருந்தாவனம்’ உணவு விடுதி இந்த இடத்தை அணி செய்துகொண்டிருக்கிறது.

இவ்வாறு வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இடத்தையொட்டிப் புதுப்பாளையம் அமைக்கப்பட்டுள்ளது. பெயரிலிருந்தே, இந்தப் பகுதி பிற்காலத்தது என்பதை உணரலாம். கடலூர்ப் புதுநகர், நியூ டவுன் (New Town), என்.டி. (N.T.) என்னும் பெயர்களின் தோற்றமே புதுப் பாளையத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததுதான். இந்தப் பகுதியில், அலுவலகங்களில் பணிபுரிவோரும் வழக்கறிஞர்கள் பலரும் வாழ்கின்றனர்.

புதுப்பாளையத்தின் வடமேற்கு மூலையில் பெருவெளித் திடலை (மைதானத்தை) ஒட்டினாற்போல் நகராட்சி உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. இந்தப் பள்ளி பல ‘அவதாரங்கள்’ எடுத்து இப்போது இந்த நிலையில் உள்ளது இது 1879ஆம் ஆண்டில் இரண்டாந்தரக் கலைக் கல்லூரியாக உயர்த்தப்பட்டு ‘டவுன் காலேஜ்’ (Town College) என்னும் பெயரில் கூடலூரில் நடைபெற்று வந்தது. பின் 1877இல் கல்லூரி வகுப்புகள் எடுபட்டு விட்டன, அடுத்த ஆண்டே - 1888இல் - மீண்டும் கல்லூரி வகுப்புகள் நடைபெற்றன. பின்னர் 1902இல் மீண்டும் கல்லூரி வகுப்புகள் எடுபட்டு விட்டன. உயர் நிலைப் பள்ளிப் பிரிவு ஸ்கூல் கமிட்டி (School committee) என்னும் குழுவால் நடத்தப் பெற்று வந்தது. 1920 ஆம் ஆண்டில் அந்தக் குழுவினிடமிருந்து உயர்நிலைப் பள்ளியை நகராட்சி ஏற்று இங்கே நடத்தி வருகிறது.

இந்த உயர்நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில், 1967இல் பச்சையப்பன் உதவி நிதியைக் கொண்டு தனியார் பெண்கள் கல்லூரி ஒன்று தொடங்கப்பட்டது. இப்போது இது, மஞ்சக் குப்பத்திலிருந்து நெல்லிக் குப்பம் பக்கம் போகும் நெடுஞ் சாலை தொடங்கும் சிறிது தொலைவில், ‘கந்தசாமி நாயடு பெண்கள் கல்லூரி’ என்னும் பெயரில் தனிக்கட்டடத்தில் நடைபெற்று வருகிறது. புதுப் பாளையத்தின் கிழக்குக் கோடியில் அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி இருக்கிறது.

1963இல் தொடங்கப் பெற்ற இந்தக் கல்லூரி, புதுப் பாளையத்தின் வடக்கு எல்லைப் பாதையும் தெற்கு எல்லைப் பாதையும் கிழக்கே குவிந்து ஒன்று கூடும் இடத்தில் தேவனாம் பேட்டைக்குப் போகும் வழியில் அமைக்கப் பெற்றது. இப்போது இது விரிவான கட்டடத்தில் இயங்கி வருகிறது.

மற்றும், புதுப்பாளையம் பகுதியிலுள்ள தென்னார்க்காடு மாவட்ட மைய நூலகம் மிகவும் குறிப்பிடத்தக்கது. இது 1952இல் தொடங்கப் பெற்றது. தென்னார்க்காடு மாவட்ட நூலக ஆணைக்குழு (Local Library Authority) இந்நூலகத்தைச் சிறந்த முறையில் இயக்கி வருகிறது. இதில் ஏறத்தாழத் தரமான பத்தாயிரம் நூல்கள் இருக்கலாம். இந்த மைய நூலகத்தின் கீழ், பல ஊர்களில் கிளை நூலகங்களும் (Branch Libraries) நூல் அளிக்கும் நிலைகளும் (Delivery Stations) உள்ளன. மற்றும், தென்னார்க்காடு மாவட்டத்தில் ஒரு நூறு அளவிற்கு ஊராட்சி மன்ற நூலகங்கள் உள்ளன. அண்மையில் பாடலிபுத்திரத்திலும் பாகூரிலும் அந்தக் காலத்தில் இருந்த சிறந்த நூல் நிலையங்களை நினைவூட்டும் முறையில், தென்னார்க்காடு மாவட்ட மைய நூலகம், மக்களின் பல்துறை அறிவை வளர்ப்பதற்கு அரும்பாடுபட்டு வருகிறது.

மஞ்சக் குப்பம்

மஞ்சக் குப்பம் புதுப்பாளையத்திற்கு வடக்கே இருக்கிறது. இந்த இரண்டு பகுதிகளையும் பெருவெளித்திடல் (மைதானம்) பிரிக்கிறது. தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமை உறுப்புகளும் தலைமை அலுவலகங்களும் மஞ்சக் குப்பத்தில் தான் உள்ளன. இதனால், தென்னார்க்காடு மாவட்டத்தை ‘மஞ்சக் குப்பம் ஜில்லா’ என அழைக்கும் வழக்கம் இருக்கிறது. இங்கே முன்பு மஞ்சள் நிரம்பப் பயிரிடப்பட்டதால் இந்தப் பகுதி மஞ்சள் குப்பம் - மஞ்சக் குப்பம் என வழங்கப்பட்டது. வெளிநாடுகளுடன் மஞ்சள் வாணிகம் மிகுதியாய் நடைபெற்றது. புதுப்பாளையம் போலவே மஞ்சக் குப்பம் நகர்ப் பகுதியும் ஐரோப்பியர்களின் காலத்தில் - பதினேழாம் நூற்றாண்டளவில் உருவானதே.

தென்னகத்திற்கே மிகப் பெரியதான ‘நகர் நடுப் பெருவெளித்திடல்’ (மைதானம்) மஞ்சக் குப்பத்தில்தான் உள்ளது. இது, ‘மஞ்சக் குப்பம் மைதானம்’ ‘கடலூர் மைதானம்’ என அழைக்கப்படும். இதன் தரையில் பசும்புல் படர்ந்து ஒட்ட நறுக்கப்பட்டதுபோல் காணப்படும். இந்தத் திடல் பழைய அரசு குறிப்புகளில், ‘The lawn’ (இன்பப் புல்வெளிப் பூங்கா) எனவும், ‘The green’ (பச்சைப் பசும்புல் திடல்) எனவும், ‘The Esplanade’ (கோட்டைக்கும் நகருக்கும் நடுவிலுள்ள அகலிடம்) எனவும் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் திடலின்கண் மாலை வேளையில் மக்கள் கூட்டங்கூட்டமாக வந்தமர்ந்து இன்பப் பொழுது போக்குவர். இதில் மணிக்கூண்டு, பூங்கா, சொற்பொழிவு மேடை ஆகியவை உள்ளன. இங்கே நூறாயிரக் (இலட்சக்) கணக்கான மக்கள் அமர்ந்து சொற்பொழிவு கேட்கலாம் கேட்கின்றனர். இத் திடலின் நான்கு பக்கங்களிலும் நல்ல சாலைகள் உள்ளன. இதைச் சுற்றிலும் பெரிய அலுவலகக் கட்டடங்கள் உள்ளன.

இதன் தென் கிழக்குக் கோடியில் உள்ள ‘லேடி ஆவ் மவுன்ட் கார்மல் சர்ச்’ என்னும் மாதாகோயில் காணத்தக்கது. திடலின் வடக்கே, மாவட்ட நீதிமன்றம், சிறைச்சாலை, காவல்துறைத் தலைமை அலுவலகம், மாவட்டத் தலைவர் (கலெக்டர்) அலுவலகம், நகர மண்டபம், மாவட்ட மைய நூல் நிலையம் முதலிய இன்றியமையா நிலையங்கள் உள்ளன.

திடலைச் சுற்றியுள்ள நிலையங்களுள் மாவட்டத் தலைவர் (கலெக்டர்) அலுவலகக் கட்டடம் மிகவும் குறிப்பிடத்தக்கது இதற்குக் ‘கார்டன் ஹவுஸ்’ (Garden House) என்பது பெயர். கவர்னராகக் கடலூரை ஆட்சி புரிந்த ராபர்ட் கிளைவ் என்னும் ஆங்கிலப் படைத்தலைவர் இந்தக் கார்டன் ஹவுஸ் மாளிகையில் தான் வாழ்ந்து வந்தார். இந்த மாளிகையையும் எதிரேயுள்ள பெருந்திடலையும் ஆங்கிலேயர்கள் 1705ஆம் ஆண்டளவில் நிறுவினர். மாளிகையினையும் திடலின் ஒரு பகுதியினையும் கீழேயுள்ள படத்தில் காணலாம்.

இதுதான் கார்டன் ஹவுஸ் மாளிகை. இது 1733இல் கட்டி முடிக்கப்பட்டது. கவர்னர் கிளைவ் வாழ்ந்த இந்த மாளிகை, 1758இல், ‘லாலி’ என்னும் பிரெஞ்சுக்காரரால், செயின்ட் டேவிட் கோட்டையுடன் சேர்த்துத் தாக்கிச் சிதைக்கப்பட்டது, பிறகு இது பழுது பார்த்துத் திருத்தியும் புதுக்கியும் கட்டப்பட்டு ஆங்கில வணிகப் பேராளர்களின் (Commercial Residents) வாழ் விடமாகச் சில காலம் இருந்து வந்து, பின்னர்க் கலெக்டர்களின் உறைவிடமாகவும் அலுவலகமாகவும் மாறியது.

அடுத்தபடியாக, மாவட்ட நீதி மன்ற மாளிகை குறிப்பிடத்தக்கது. இது 1866இல் கட்டி முடிக்கப்பட்டது. இம் மாளிகையின் பின்புறம் ஒரு குளம் இருக்கிறது. குளத்தின் நடுவில் உருக்குலைந்த ஒரு தூபி உள்ளது. கோபுர உச்சி போன்ற இந்தப் பகுதி, எங்கோ ஒரு கோயிலிலிருந்து ‘அடித்துக் கொண்டு’ வரப்பட்டதாக இருக்க வேண்டும்.

அடுத்து, மஞ்சக்குப்பம் பகுதியில் வடகிழக்கில் உள்ள ‘கர்னல் தோட்டம்’ என்னும் பகுதி குறிப்பிடத்தக்கது. ஆங்கிலப் படைத்தலைவர் (Colonel) ஒருவர் தங்கியிருந்ததால் இது இப்பெயர் பெற்றது. ‘கர்னப் பிள்ளை தோட்டம்’ என்றும் மக்கள் இதனை அழைக்கின்றனர். இந்த இடத்தை 1852ஆம் ஆண்டில் புதுச்சேரி ரோமன் கத்தோலிக்க சபைத் துறவி பொன்னாந்த் (Mgr. Bonnand) என்பவர் விலைக்கு வாங்கினார். இதில் 1884ஆம் ஆண்டு ஓர் உயர்நிலைப்பள்ளி நிறுவப்பட்டது. இது, 1886ஆம் ஆண்டு இரண்டாந்தரக் கலைக்கல்லூரியாக உயர்த்தப் பட்டது. இதற்கு ‘செயின்ட் ஜோசப் காலேஜ்’ என்பது பெயர். இது புதுச்சேரி கடலூர் ரோமன் கத்தோலிக்கத் தலைமையகத்தால் நடத்தப்பட்டு வந்தது. 1909 ஆம் ஆண்டளவில் கல்லூரி வகுப்புக்கள் எடுபட்டு உயர்நிலைப் பள்ளி அளவில் நின்றுவிட்டது. இன்றும் இந்த உயர்நிலைப் பள்ளி நடைப்பெற்று வருகிறது. இந்தப் பகுதியில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மிகுதியாய் வாழ்கின்றனர். மஞ்சக் குப்பம் பகுதியில் அரசினர் ஆண்கள் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி ஒன்றும் உள்ளது.

மஞ்சக்குப்பத்திற்கு மேற்கே சிறிது தொலைவில் செம்மண்டலம் என்னும் இடத்தில், தொழிற் பயிற்சிப்பள்ளி (Industrial Institute), ஒன்று அரசினரால் நடத்தப் பெறுகிறது. இதையடுத்து இங்கே ‘பாலிடெக்னிக்’ - பல் தொழிற்கூடம் ஒன்று உருவாகி வருகிறது.

வில்வராய நத்தம்

இது, மஞ்சக்குப்பத்திற்கு வடக்சே - கடலூர் நகராட்சியின் வடக்கு எல்லையாக உள்ளது. வில்வராய நத்தம் என்னும் ஊர்ப் பெயர், பல்லவராயநத்தம் என்பது போல் அரசர் தொடர்பால் ஏற்பட்டதாகத் தெரிகிறது. பல்லவர் காலத்தது எனக் கருதப்படும் பழைய சிவன் கோயில் ஒன்று இங்கே உள்ளது. மத்திய அரசினரின் கரும்பு ஆராய்ச்சிப் பண்ணை இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேவனாம் பட்டினம்

பட்டினம் என முடிந்திருப்பதிலிருந்தே இவ்வூர் கடற்கரையில் உள்ள சிற்றுார் என்பது புலனாகும். தேவநாதன் பட்டினம் அல்லது தெய்வநாயகன் பட்டினம் என்பதுதான் தேவனாம்பட்டினம் என்றாகியிருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. இந்தப் பெயருடைய பெரியார் ஒருவர் முன்பு இங்கே வாழ்ந்திருப்பார் அல்லது - இந்த ஊரோடு சிறப்புத் தொடர்பு கொண்டிருந்திருப்பார்.

தேவனாம் பட்டினம், மஞ்சக் குப்பம் - புதுப்பாளையம் பகுதிக்குக் கிழக்கே கடற்கரையில் உள்ளது. இதனை ஒரு சிறு தீவு என்று சொல்லலாம். கெடிலம் கடலோடு கலக்கும் இடத்திற்கு மேற்கே சிறிது தொலைவில், கெடிலத்திலிருந்து ஒரு கிளை பிரிந்து வடக்கே சிறிது தொலைவு சென்று பிறகு மீண்டும் கிழக்கு நோக்கித் திரும்பிக் கடலோடு கலக்கிறது. கெடிலத்தின் இந்த வடகிளைப் பிரிவுக்குள் தேவனாம் பட்டினம் இருக்கிறது. அதாவது, இதன் கிழக்குப் பக்கம் கடலும், தெற்குப் பக்கம் கெடிலமும், மேற்குப் பக்கமும் வடக்குப் பக்கமும் கெடிலத்தின் வடகிளைப் பிரிவும் உள்ளன. இவ்வாறு நான்கு பக்கமும் நீர் சூழ்ந்திருப்பதால் இது ஒரு சிறு தீவு எனப்படுகிறது. இங்கே மீனவர்கள் தாம் மிகுதியாக வாழ்கின்றனர். மாசி மகத்தன்று நூற்றுக் கணக்கான இறையுருவங்கள் வந்து கடல் நீராடுவது இப்பகுதியில்தான்.

தேவனாம் பட்டினம் கடற்கரைக்குச் செல்லத் ‘தார்’ போட்ட நல்ல சாலைகள் உண்டு; கடற்கரையிலும் தார்ப் பாதை உண்டு. மாலையில் காற்று வாங்குவதற்கு ஏற்ற இடம் இது. இங்கிலாந்து நாட்டிலுள்ள “கவுண்டி பீச்” போன்ற அமைப்பு இங்கே இருப்பதாக அறிந்தவர்களால் புகழப்படுகிறது. அழகும் வசதியும் செய்து மக்களைக் கவர்ந்து இங்கே மாலைவேளைகளில் பெருங்கூட்டம் சேரும்படிச் செய்யவேண்டும் என்னும் பரந்த நோக்குடன், கடலூர் நகர் மன்றம் இங்கே 1938ஆம் ஆண்டில் மின் விளக்குகள் பொருத்திப் பூங்காவும் வைத்து அணி செய்தது. இருப்பினும் இந்தக் கடற்கரை, சென்னைக் கடற்கரையைப் போல் வளர்ச்சி பெறவில்லை. கோடையில் ஓரளவு மக்களே வந்து போகின்றனர். போதிய அளவு உள்நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) வசதி செய்யப்பட்டால் பெருங்கூட்டம் சேரக்கூடும்.

தேவனாம் பட்டினம் இயற்கைச் சூழ்நிலைச் சிறப்புடன், செயின்ட் டேவிட் கோட்டையை மையமாகக் கொண்ட வரலாற்றுச் சிறப்பும் உடையதாகும்.

செயின்ட் டேவிட் கோட்டை

கப்பல் வழியாக வாணிகம் புரிய வந்த ஐரோப்பியர்களைத் தேவனாம் பட்டினம் தீவு கவர்ந்தது. இத்தீவிற்குள் பதினாறாம் நூற்றாண்டிலேயே ஐரோப்பியர்கள் புகத் தொடங்கிவிட்டனர்; இந்நூற்றாண்டின் பிற்பகுதியில் டச்சுக்காரர் தேவனாம் பட்டினத் தீவின் வடபகுதியில் ஒரு தொழில் நிலையம் நிறுவினர். இவர்கள் சரக்கு விற்பனை புரிந்ததன்றி, அடிமை வாணிகமும் செய்தார்களாம். இங்கிருந்தபடி இந்திய ஏழை மக்களை இந்தோனேசியாவுக்கு அடிமைகளாக விற்றார்களாம். என்னே கொடுமை! அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் உரிமை கொண்டிருந்த மராத்தியர்கள் 1678இல் டச்சுக்காரர்களைத் தேவனாம்பட்டினத் தொழிற் கூடத்திலிருந்து மஞ்சக் குப்பத்திற்கு விரட்டினார்கள்; பின்னர் அங்கிருந்தும் 1745ஆம் ஆண்டளவில் பரங்கிப் பேட்டைக்கு விரட்டினார்கள்.

டச்சுக்காரர் நிலை இவ்வாறு இருக்க, ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் தேவனாம் பட்டினத் தீவின் தெற்கு எல்லையில் கெடிலத்தின் வடகரையில் “செயின்ட் டேவிட்” என்னும் கோட்டை கட்டினர். முதலில் ‘எலிகு யேல் என்னும் ஆங்கிலேயர், சரக்குகள் வைப்பதற்காக ராமராஜா’ என்பவரிடமிருந்து ஒரு கிடங்கை விலை பேசி வாங்கினார். அதற்கு அண்மையில் “செயின்ட் டேவிட் கோட்டை (Fort St. David) கட்டப்பட்டது. 1683ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, 1693, 1698, 1702, 1725, 1740, 1745 ஆகிய ஆண்டுகளில் மேலும் மேலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டதோடு வலுப்படுத்தவும் பட்டு வந்தது. 1745இல் ராபர்ட் கிளைவ் இதன் காவலில் நன்கு கவனம் செலுத்தினார்.

1745 தொட்டு 1750வரை ஆங்கிலேயர்கள் இந்தக் கோட்டையைத் தங்கள் ஆட்சியின் தலைநகராகப் பயன்படுத்தினார்கள். அப்போது சென்னை பிரெஞ்சுக்காரர் கையில் இருந்தது. பின்னர் ஆங்கிலேயர்கள் சென்னையைக் கைப்பற்றி, செயின்ட் டேவிட் கோட்டைக்கு இருந்த தலைநகர்த் தகுதியைச் சென்னையில் இருக்கும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றினார்கள்.

ஆங்கிலேயர்கள் செயின்ட் டேவிட் கோட்டையை எவ்வளவு விழிப்புடன் காத்துங்கூட, அது பகைவர்களால் பலமுறை தாக்கப்பட்டது. செஞ்சியை யாண்ட தேசிங்கு மன்னன் தந்தையான சாரூப்சிங் என்பவர் 1712ஆம் ஆண்டளவில் இந்தக் கோட்டையை ஒரு கை பார்த்தார். பிரெஞ்சு படைத் தலைவரும் கவர்னருமான டுப்ளே (Dupleix) என்பவர் மட்டும் இந்தக் கோட்டையை நான்கு முறை தாக்கியிருக்கிறார். அவர் முதல்முறையாக 1746 டிசம்பர் தொடக்கத்தில் தாக்கினார்; தாக்குதல் பயனளிக்கவில்லை. அதே டிசம்பரில் இரண்டாம் முறையாகக் கடல் பக்கத்திலிருந்து தாக்கினார். அப்போதும் பயனின்றி, புயலால் அலைக்கழிக்கப் பட்டுப் புதுச்சேரிக்கு ஓடிவிட்டார். மூன்றாம் முறையாக 1747 மார்ச்சில் தாக்கிப் பார்த்தார். நான்காம் முறையாக 1748 சூனில் தாக்கினார்; ஆனால், லாரென்ஸ் என்னும் ஆங்கிலப் படைத்தலைவரால் விரட்டப்பட்டார்.

செயின்ட் டேவிட் கோட்டையின் தலையெழுத்து இம்மட்டோடு நின்றுவிடவில்லை. 1756இல் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் ஐரோப்பாவில் போர் நடைபெற்றதால் இங்கேயும் ஆங்கிலேயர்க்கும் பிரெஞ்சுக்காரர்க்கும் போர் மூண்டது. பிரெஞ்சுக்காரர் செயின்ட் டேவிட் கோட்டையைக் கடுமையாய்த் தாக்கி இடித்துக் கேடு சூழ்ந்தனர். லாலி (Lally) என்னும் பிரெஞ்சுப் படைத்தலைவர் இக் கோட்டையைக் கடுமையாய்த் தாக்கி 1758 சூன் 2 ஆம் நாள் கைப்பற்றிக் கொண்டே விட்டார். 1760இல் ‘சர் அயர் கூட்’ (Sir Eyre Coote) என்னும் ஆங்கிலப் படைத் தலைவர் மீண்டும் பிரெஞ்சுக் காரரிடமிருந்து கோட்டையைக் கைப்பற்றினார்; அவர் 1761இல் புதுச்சேரியையும் பிடித்துக் கொண்டார். 1782இல் பிரெஞ்சுக்காரரும் திப்பு சுல்தானுமாகச் சேர்ந்து கொண்டு ஆங்கிலேயரிடமிருந்து மீண்டும் செயின்ட் டேவிட் கோட்டையைப் பிடித்துக் கொண்டனர். 1783 ஏப்ரலில் ஸ்டுவர்ட் (General Stuart) என்னும் ஆங்கிலப் படைத்தலைவர் செயின் டேவிட் கோட்டையைப் பிரெஞ்சுக்காரரிடமிருந்து மீட்பதற்காக முற்றுகையிட்டுத் தாக்கினார். இந்த நிலையில், ஐரோப்பாவில் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் அமைதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக 1783 சூன் 30 ஆம் நாள் செய்தி வரவே, கடலூர்ப்பகுதி ஆங்கிலேயர்க்கும் புதுச்சேரிப் பகுதி பிரெஞ்சுக்காரர்க்குமாக மீண்டும் கைம்மாறின. பிறகு நடந்த போரில் மீண்டும் புதுச்சேரி ஆங்கிலேயர் கைக்கு மாறி, மறுபடியும் பிரெஞ்சுக்காரர் கைக்கு வந்தது. இப்படியாகக் கடலூரும் புதுச்சேரியும் பலமுறை கைம்மாறிக் கைம்மாறி உலக நிலையாமையை உலகிற்கு எடுத்துக் காட்டின.

செயின்ட் டேவிட் கோட்டை பலமுறை பிரெஞ்சுக் காரர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்படாமல் இருந்திருந்தால், கடலூர் கல்கத்தா போல் பெருநகராக உருவாகிச் சென்னையின் இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும். ஒரு காலத்தில் தமிழகத்தின் தலைநகராய்த் திகழ்ந்த செயின்ட் டேவிட் கோட்டை இன்றிருக்கும் நிலை மிகவும் இரங்கத் தக்கது. இடிந்துபோன இந்தக் கோட்டையின் எளிய நிலையைப் பின்வரும் படத்தில் காணலாம்:

இந்தப் படத்தில் உள்ளது, இடிந்து போன கோட்டையின் நடுவிலிருக்கும் ஒரு சிறு பகுதி, ஒரு சிறு அறை போன்று உள்ள இந்தப் பகுதியைக் கொண்டு பழைய செயின்ட் டேவிட் கோட்டையின் அளவையும் தரத்தையும் கணிக்கக் கூடாது. மிகப் பெரிய பரப்பளவில் கோட்டை இருந்தது. கோட்டையின் இடிபாடுகளும் அடிப்படைகளும் பரந்துபட்டுக் காணப்படுகின்றன. இப்போது இந்தக் கோட்டைப் பரப்பின் எல்லைக்குள் தனித்தனியாகச் சில கட்டடங்கள் உள்ளன. அவற்றுள், மாவட்ட மருத்துவமனைத் தலைவர் வாழும் கட்டடமும் பாரி கம்பெனியாரின் புதிய விருந்தினர் மாளிகையும் குறிப்பிடத்தக்கன. தென்மேற்கு மூலையில் கெடிலத்தின் ஓரத்தில் இருக்கும் கட்டடப் பகுதி மிகவும் பழமையாய்க் காணப்படுகிறது.

கடலும் கழியும் கெடிலமும் சுற்றியுள்ள சூழ்நிலையில் இருக்கும் கோட்டைப் பகுதி, இப்போது காண்பவர்க்கு, ஒரு காலத்தில் தலைநகராயும் போர்க்களமாயும் இருந்த பகுதியாகத் தோன்றாமல், முனிவர்கள் தவம் செய்வதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலை உடையதாகவே தோற்றமளிக்கும். காலம் செய்யும் கோலம் என்னே!

கூடலூர்

கடலூர் என்னும் பெயர் கூடலூர் என்னும் பெயரிலிருந்து தான் வந்தது என்னும் செய்தியும், கடலூர் நகராட்சியின் தலைமையகமும் தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைமை யகங்களும் தொடக்கத்தில் கூடலூரில்தான் இருந்தன என்னும் செய்தியும், கூடலூர்தான் மிகப் பழைய நகர் என்னும் செய்தியும், கூடலூரின் பெயர்க்காரணமும் முன் பக்கங்களில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

கடலூர்ப் புதுநகர்ப் பகுதிக்குத் தெற்கே 4 கி.மீ. தொலைவில் - கடலூரின் தெற்கு எல்லையாகக் கூடலூர் முதுநகர் அமைந்துள்ளது. கடலூர்ப் புதுநகர்ப் பகுதியிலிருந்து புறப்பட்டுச் சிதம்பரம் செல்லும் மாவட்ட நெடும்பாதையும் நெய்வேலி வழியாக விருத்தாசலம் செல்லும் மாவட்ட நெடும்பாதையும் கூடலூர் வரை ஒரே பாதையாகச் சென்று கூடலூர்க்குத் தெற்கே தனித்தனியாகப் பிரிகின்றன. கூடலூரில் புகைவண்டிச் சந்திப்பு நிலையம் உள்ளது. இச் சந்திப்பிலிருந்து, விழுப்புரம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், மாயவரம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், விருத்தாசலம் சந்திப்பு நிலையத்திற்கு ஒரு பாதையும், கூடலூர்த் துறைமுகத்திற்கு ஒரு பாதையுமாக நான்கு புகைவண்டித் தொடர்ப்பாதைகள் பிரிந்து செல்கின்றன. துறைமுகம் இருப்பது, கூடலூரின் பழம் பெருந்தொழில் வாணிகப் பெருமைக்குத் தக்க சான்று பகரும். இத் துறைமுகத்தைப் பற்றி இந்நூலில் ‘கூடலூர்த் துறைமுகம்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம்.

கூடலூர் 1803 வரை அரண்மிக்க அரச நகரமாகவே இருந்தது; பின்னர் அரண்கள் பலவும் அழிந்துபட்டன. கூடலூரின் பழைய அரண் மிகு பெருமைக்குச் சான்றாக இப்போது எஞ்சி நிற்பவை இரண்டே யிரண்டு கட்டிடங்களே, அவற்றுள் ஒன்று; ‘கிறைஸ்ட் சர்ச்’ (Christ Church) என்னும் கிறித்துவக் கோயில்; மற்றொன்று; ‘பாக்டறி ஹவுஸ்’ (Factory House) என்னும் தொழிற்சாலை மாளிகை, கிறைஸ்ட் சர்ச் தொடக்கத்தில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவக் குழுவினரிடம் (Jesuits) இருந்தது. அவர்கள் அப்போது நடந்து கொண்டிருந்த ஆங்கிலோ - பிரெஞ்சுப் போரில் பிரெஞ்சுக்காரர்கட்கு உதவியாயிருந்து கொண்டிருந்ததால், அவர்களிடமிருந்து கிறைஸ்ட் சர்ச் 1749 இல் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டு, கிறித்துவம் பரப்பும் வேறொரு (Society for the Propagation of Christian Knowledge) ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ‘பிராடெஸ்டன்ட்’ (Protestant) என்னும் கிறித்தவப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது ஈண்டு நினைவு கூரத்தக்கது. இந்தக் கோயிலின் கல்லறையில் ஆங்கிலேயர் பலரின் அடக்கக் குழிகள் உள்ளன; இவர்கள், எங்கேயோ பிறந்து எங்கேயோ வந்து யார் மண்ணுக்காகவோ தாங்கள் போரிட்டு மாய்ந்து போனார்களே - அந்தோ!

அடுத்து, நில அறைகளுடன் கூடிய ‘பாக்டரி ஹவுஸ்’ மாளிகை, 1764 வரை அதன் குறிப்பிட்ட நோக்கத்திற்குப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்பு மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (Collectors), வாணிகப் பேராளர்கள் (Commercial Residents) முதலியோரால் பயன்படுத்தப்பட்டன. 1707 ஆம் ஆண்டளவில், இது, செயின்ட் டேவிட் கோட்டையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கவர்னரின் மாளிகையாகவும் பயன்பட்டது. ஒரு சமயம் ராபர்ட் கிளைவ், தோற்றுப் போன பிரெஞ்சுக்காரர்களை இங்கே சிறைவைத்திருந்ததும் உண்டு. நாளடைவில் இம்மாளிகை மாவட்ட நீதி மன்றமாகவும் சிறைச்சாலையாகவும் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக இம் மாளிகை 1886இல், பாரி கம்பெனிக்கு 10,000 (பத்தாயிரம்) ரூபாய்க்கு விற்கப்பட்டது. இன்றும் இது பாரி கம்பெனியாரின் உடைமையாகவே இருந்து வருகிறது. இங்கே நிலத்தடியிலிருந்து ஒரு பழைய துப்பாக்கி தற்செயலாய்த் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மேடைமேல் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.

கிழக்கிந்தியக் கம்பெனி அலுவலர்களின் பிள்ளைகள் படிப்பதற்காகக் கூடலூரில் 1717இல் ஒரு பள்ளி தொடங்கப் பெற்றது. அது நாளடைவில் வளர்ந்து உயர்நிலைப் பள்ளியாயிற்று. 1951 ஆம் ஆண்டுக்கு முன் பள்ளியின் பெயர்: எஸ்.பி.ஜி. உயர்நிலைப் பள்ளி; அதன் பின் இப்போது பள்ளியின் பெயர்: தூய தாவீது (St. David) உயர்நிலைப்பள்ளி. ஊர் முதுநகராயிருப்பது போலவே இப்பள்ளியும் முதுபள்ளியாயிருக்கிறது. இவ்வூரில் பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்நகரில் 1879ஆம் ஆண்டில் ‘டவுன் காலேஜ்’ என்னும் பெயரில் ஒரு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டுச் சில்லாண்டுகள் நடைபெற்றுப் பின்னர் மறைந்துவிட்டது.

கூடலூரில் பழைய தொழில் - வாணிக வாடை இன்றும் ஓரளவு வீசிக் கொண்டுள்ளது இங்குள்ள பாரி கம்பெனியால் பல்லாயிரவர் தொழில் பெற்றுப் பிழைக்கின்றனர். பாரி கம்பெனியார் பல்வேறு துறைகளில் வாணிகம் புரிவதன்றி, படகு கட்டும் தொழிற்சாலையும் உரத் தொழிற்சாலையுங்கூட நடத்துகின்றனர். கூடலூரில் மணிலா ஆலைகள், கால்நடை உணவுத் தொழிற்சாலை, சோப்புத் தொழிற்சாலை, வனஸ்பதி தொழிற்சாலை, பிரிமியர் பெர்டிலைசர்ஸ் உரத் தொழிற்சாலை முதலியவை உள்ளன. நெசவுத் தொழில் இங்கே மிகுதி, தேங்காய் நாரிலிருந்து கயிறு திரித்தலும் கோரைப் பாய் முடைதலும் இங்கே மிகுதியாய் நடைபெறுகின்றன. உப்பளங்கள் மறைந்து வருகின்றன. இங்கே முன்பு ஊசி ஆலை, பருத்தி ஆலை முதலியனவும் இருந்து மறைந்து போயின. மொத்தத்தில் கூடலூரை ‘மொத்த வாணிகம்’ (Whole Sale) நடைபெறும் நகரம் என்று சொல்லலாம்.

கூடலூரில் துறைமுகம் இருப்பதால், அது சார்பான அலுவலகங்களும் இங்கே உள்ளன. துறைமுகத்திற்கருகில் உரத் தொழிற்சாலைகளும் உள்ளன. துறைமுகப் பகுதியை ஒட்டியுள்ள சோனகர் தெரு, வில்லிங்டன் தெரு, கிளைவ் தெரு, இம்பீரியல் ரோடு, சராங்கு தெரு, சமண வேளாளர் தெரு முதலியவை கூடலூரின் வரலாற்றுப் பெருமைக்கும் வாணிகப் பெருமைக்கும் சான்றுகளாய் உள்ளன. துறைமுகப் பகுதியில் பிராடெஸ்டன்ட் கிறித்துவர்களும், உள்நகர்ப் பகுதியில் முசுலீம் மக்களும் மிகுதியாய் வாழ்கின்றனர். இந்து கோயில்களுள், காமாட்சியம்மன் கோயிலில் நடைபெறும் ‘கிண்ணித் தேர்விழா’ குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பழம் பெருஞ் சிறப்புகள் பலவற்றிற்கு உரியதான கூடலூர் முதுநகர், இன்று சுருக்கமாகவும் எளிதாகவும் ‘ஒட்டி’ ஒட்டி (O.T. = Old Town) என்று பலராலும் அழைக்கப்படுகிறது. இதுவே, பீஜப்பூர் சுல்தானது ஆட்சிக் காலத்தில் 1640 தொட்டு 1677 வரை ‘இஸ்லாமா பாத்’ எனப் பெயர் கொடுக்கப்பட்டிருந்தது என்பதை அறியும் போது வியப்பாயிருக்கிறது. மற்றும், இந்தக் கூடலூரேயன்றி, மதுரை மாவட்டத்தில் ஒரு கூடலூரும், நீலகிரி மாவட்டத்தில் ஒரு கூடலூரும், உள்ளன. அவற்றினின்றும், பழம்பெரு நகரமாகிய இந்தக் கடலூர்க் கூடலூரை வேறு பிரித்துணர வேண்டும். கூடலூர் கிழார், கூடலூர்ப் பல்கண்ணனார் என்னும் சங்கப் புலவர்கள் எந்த எந்தக் கூடலூரைச் சேர்ந்தவர்களோ?

அக்கரை

கூடலூருக்கு வடக்கே 4 கி.மீ. தொலைவில் கெடிலத்தின் முக்கியப் பகுதி இருக்கிறது. அதிலிருந்து ஒரு கிளை பிரிந்து தெற்கு நோக்கி வந்து கூடலூரின் தெற்கு எல்லையில் கடலோடு கலக்கிறது. கெடிலத்தின் இந்தத் தென் கிளைக்கு ‘உப்பனாறு’ என்பது பெயர். உப்பனாற்றின் மேற்குக் கரையில் கூடலூர் இருக்கிறது கிழக்குக் கரையில் ‘அக்கரை’ என்னும் தீவு இருக்கிறது. அக்கரைக்கும் கூடலூருக்கும் நடுவே உள்ள உப்பனாற்றுப் பகுதிதான் துறைமுகம் எனப்படுவது.

உப்பனாற்றின் இக்கரையில் (மேற்கில்) இருக்கும் கூடலூர் மக்கள், உப்பனாற்றின் அக்கரையில் (கிழக்கில்) இருக்கும் பகுதியை ‘அக்கரை’ என்னும் பெயராலேயே அழைக்கின்றனர். இது நான்கு பக்கமும் நீரால் சூழப்பட்ட ஒரு தீவாகும். இதன் கிழக்கே கடலும், வடக்கே கெடிலமும், மேற்கிலும் தெற்கிலும் கெடிலத்திலிருந்து பிரியும் உப்பனாறும் உள்ளன. இத்தீவு ஒரே மணற் பகுதியாக உள்ளது. இத்தீவிலிருந்து கூடலூர்ப் பகுதிக்குப் போகவும் வரவும் உப்பனாற்றில் படகுகள் விடப்படுகின்றன. பள்ளிச் சிறார்கட்கும் நகராண்மைக் கழக ஊழியர்க்கும் படகுக் கட்டணம் இலவசம், தீவு நகராட்சியைச் சேர்ந்ததால், இச்செலவு நகராட்சியால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதன் மக்கள் தொகை: 1,500

இத்தீவு மக்கள் துறைமுக வேலை, மீன் பிடித்தல், படகுசெய்தல், படகு ஓட்டுதல், கயிறு திரித்தல், பல்வகைக் கயிற்றுப் பொருள்கள் செய்தல் முதலிய தொழில்கள் செய்து வாழ்கின்றனர். படகுகளில் சரக்குகளை ஏற்றிக் கொண்டு இலங்கை வரை சென்று மீளும் ஆற்றல் படைத்த படகோட்டிகள் இங்கு உள்ளனர்.

இத் தீவில் சோணங்குப்பம், சிங்காரத் தோப்பு, கோரி முதலிய சிற்றுார்கள் உள்ளன. ஒர் ஊருக்கும் மற்றோர் ஊருக்கும் உள்ள இடைவெளி ஒரு பர்லாங்கு அளவு இருக்கலாம். ஒவ்வோர் ஊரும் ஒரு மணல் திட்டுபோல் காட்சியளிக்கிறது.

சோனங் குப்பம்

அயல் நாட்டாரைச் சோனகர் எனக் கூறுவது தமிழ் மரபு. இந்த ஊரில் சோனகர் வாணிகம் புரிவதற்காக வந்து தங்கியிருக்கலாம்; அதனால் இது சோனகர் குப்பம் எனப் பெயர் பெற்று, பின்னர் சோணாங்குப்பம் எனத் திரிந்து விட்டிருக்கலாம். கூடலூருக்குள்ளேயும் ‘சோனகர் தெரு’ என ஒரு தெரு இருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

சிங்காரத் தோப்பு

சிங்காரத் தோப்பு என்றால் இது சிங்காரமான தோப்புதான். தொலைவில் இருந்து பார்ப்பவர்க்கு இஃது ஒரு தோப்பாகத்தான் தெரியும்; உள்ளே வீடுகள் உள்ளன. தீவின் நடுப்பகுதியாகிய இங்கே கலங்கரை விளக்கம் (Light House) இருக்கிறது. இவ்விளக்கு 20 அல்லது 25 கி.மீ. தொலைவில் செல்லும் கப்பல்களுக்கும் ஒளி காட்டும். இப் பகுதியில் படகு கட்டும் தொழில் நடைபெறுகிறது.

கோரி

இங்கே சேர்க்கானவதியானுடைய கோரி இருப்பதால் இப்பகுதி கோரி என அழைக்கப்படுகிறது. இது பதினைந்தாம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. ஆர்க்காட்டு நவாப்புகள் இந்தக் கோரிக்குப் பல உடைமைகளை அறக்கட்டளையாக அளித்துள்ளனர்.

உப்பனாற்றைக் கடந்து சென்று இயற்கைக் காட்சிமிக்க அக்கரைத்தீவு ஊர்களைச் சுற்றிப் பார்ப்பது கண்கட்கும் கருத்துக்கும் ஒரு பெரு விருந்தாகும்.

வெளிப்புற ஊர்கள்

இதுகாறும், ‘கெடிலக்கரை ஊர்கள்’ என்னும் தலைப்பில் கெடிலம் ஆற்றின் தென்கரையிலிருந்தோ அல்லது வட கரையிலிருந்தோ 10 கி.மீ. தொலைவிற்குள் இருக்கும் இன்றியமையா ஊர்களைப் பற்றிய விவரங்கள் ஆராய்ந்து விளக்கப்பட்டன. இனி, ஒருசார் தொடர்பு பற்றிக் கெடிலக் கரைக்குப் பத்து கி.மீ. தொலைவிற்கு அப்பாலும் கடலூர் வட்டத்திற்குள் உள்ள இன்றியமையா ஊர்கள் சிலவற்றைப் பற்றிய சிறு குறிப்புகள் வருமாறு:-

நல்லாற்றூர்

இது கடலூர்த் தொகுதியில் - கடலூர் ஊராட்சிமன்ற ஒன்றியத்தில் - கடலூருக்கு வட கிழக்கே 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்வூர்ச் சிவன் கோயில் திருநாவுக்கரசரின் அடைவுத் திருத்தொண்டகத் தேவாரத்தில் பாடப் பெற்றுள்ளது. இறைவன் பெயர் சொர்ண புரீசுரர்; இறைவி பெயர்: திருவழகி. இவ்வூரில் ‘நல்லாற்றுார் சிவப்பிரகாச சுவாமிகள்’ எனப்படும் பெரியாரின் அடக்கமும் கோயிலும் உள்ளன. இக்கோயிலை வலம் வந்து வழிபடும் ஊமைகள் பேசுவர் என்னும் நம்பிக்கை இருந்து வருகிறது. மயிலம் - பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலைய சுவாமிகளின் கிளைமடம் ஒன்றும் இங்கே உள்ளது.

புதுச்சேரியிலிருந்து நல்லாற்றுாருக்குப் பேருந்து வண்டிகள் மிகுதியாகச் செல்கின்றன. விழுப்புரம் - புதுச்சேரிப் புகைவண்டிப் பாதையில், கண்டமங்கலம் என்னும் சின்னபாபு சமுத்திரம் புகைவண்டி நிலையத்திற்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் நல்லாற்றுார் உள்ளது.

திருச்சோபுரம் (தியாகவல்லி)

இவ்வூர் கடலூருக்குத் தெற்கே 17 கி.மீ. தொலைவில் கடற்கரையில் உள்ளது. பரவனாறு என்னும் உப்பங்கழியைப் படகு ஏறிக் கடந்து இவ்வூருக்குச் செல்ல வேண்டும். கூடலூர் - மாயவரம் புகைவண்டிப் பாதையிலுள்ள ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்கு வட கிழக்கே 3 கி.மீ. தொலைவில் இவ்வூர் உள்ளது; கடலூர் - சிதம்பரம் பேருந்து வண்டிப் பாதையிலும் ஆலப்பாக்கம் அகப்படும்.

இவ்வூர்ச் சிவன்கோயில் திருஞான சம்பந்தரின் தேவாரப் பதிகம் பெற்றது. இறைவன்: சோபுரநாதர்; இறைவி: சோபுரநாயகி. திருச்சோபுரத்திற்குத் தியாக வல்லி என்னும் பெயரும் உண்டு; இந்தப் பெயர்தான் வழக்கில் உள்ளது. திருச்சோபுரம் என்னும் பெயர் தேவார வழக்கு. தியாகவல்லி என்னும் அரசியின் பெயரோடு இவ்வூர் தொடர்புபடுத்தப் பட்டிருக்கிறது. அந்த அரசியின் உருவத்தைச் சிவன் கோயிலில் காணலாம்.

திருச்சோபுரம் கோயில், இருக்குமிடம் தெரியாமல் பல காலம் மணலால் மூடப்பட்டிருந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மாடு மேய்த்த சிறுவர்கள் ஒரு மணல்மேட்டில் ஒரு கலசம் தெரிவதைத் தற்செயலாய்க் கண்டு சொல்ல, பின்னர்க் கோயில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ தம்பிரான் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தேவாரத்தில் இந்தக் கோயில் குறிப்பிடப்பட்டிருப்பதைக் கொண்டு, இந்தப் பகுதியில் ஒரு கோயில் இருக்க வேண்டும் என அவர் கூறியிருப்பார்; பின்னர்க் கோயில் தோண்டிக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம். சென்னப்ப நாய்க்கன் பாளையத்தின் உடைமையாளர்களாயிருந்த குமரப்ப நாய்க்கரும் அவர் மகன் சங்கர நாய்க்கரும் கோயிலை முடியிருந்த மணலைத் தோண்டி அப்புறப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இக்கோயிலில் சோழர்-பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள் சில உள்ளன. இவ்வூர் மக்கள் தொகை: 2250.

திருத்தினை நகர்

தேவாரத்தில் திருத்தினைநகர் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இவ்வூர், பேச்சு வழக்கில் ‘தீர்த்தன கிரி’ என்று அழைக்கப்படுகிறது. இது, கடலூருக்குத் தென்மேற்கே 19 கி.மீ. தொலைவில் ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையத்திற்குத்

தென்மேற்கே 8 கி.மீ. தொலைவில் உள்ளது. கடலூர் - சிதம்பரம் பாதையில் ஆலப்பாக்கத்திற்கு அருகிலுள்ள மேட்டுப் பாளையத்தில் இறங்கி மேற்கே 5 கி.மீ. தொலைவு சென்றால் இவ்வூரை அடையலாம். கடலூர் - குண்டியமல்லூர் பேருந்து வண்டிப் பாதையில் பெருமாள் ஏரிக்கரையில் ஆயத்துறையில் இறங்கினால் அரை கி.மீ. தொலைவில் திருத்தினை நகர்ச் சிவன்கோயில் தென்படும். இவ்வூர் மக்கள் தொகை: 2,170.

இவ்வூர்ச் சிவன்கோயில் சுந்தரரின் தேவாரப் பதிகம் பெற்றது. நாவுக்கரசரும் ஞானசம்பந்தருங்கூட இவ்வூருக்கு வந்து வழிபட்டுப் பாடியதாகப் பெரிய புராணம் கூறுகிறது; ஆனால், அவர்களின் பதிகங்கள் கிடைக்கவில்லை. இறைவன் பெயர்: திருந்தீசுரர்; இறைவி பெயர்; ஒப்பிலாநாயகி, மரம்: கொன்றை.

இவ்வூர்த் தொடர்பாகச் சுவையான ஒரு வரலாறு கூறப்படுகிறது. பெரியான் என்னும் பள்ளன் தன் நிலத்தை உழுது கொண்டிருந்தான். சிவன் ஒரு துறவியாய் அங்கே வந்து அவனிடம் உணவு கேட்டார். அவன் வீட்டிற்குச் சென்று உணவு ஆக்கிக் கொண்டு மனைவியுடன் வந்தான். அதற்குள் வெற்று நிலத்தில் தினை விளைந்து முற்றியிருந்தது. இஃது இறைவன் செயல் என அறிந்து வியந்து மனைவியுடன் இறைவனை வழிபட்டான். இதனால் ஊருக்குத் ‘தினைநகர்’ என்னும் பெயர் ஏற்பட்டதாம். இன்றும் இவ்வூர்க் கோயில் இறைவனுக்குத் தினையமுது படைக்கப்படுகிறது. இந்தவரலாறு கோயிலின் தென்புறச் சுவரில் சிற்பமாகச் செதுக்கிக் காட்டப்பட்டுள்ளது. இக் கோயிலில் இன்னும் பல சிற்பங்கள் உள்ளன.

இங்கே, பல்லவர், சோழர், பாண்டியர், விசயநகர மன்னர் ஆகியோர் காலத்துக் கல்வெட்டுகள் பல உள்ளன. 1517இல் வெட்டப்பட்ட விசயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டொன்று, அவர் அளித்த அறக்கட்டளை பற்றியும், அவர் தென்னாட்டில் பெற்ற வெற்றிகள் பற்றியும், விவரிக்கிறது. அந்தக் காலத்தில் பெருவிழாக்களின் முதல் நாட்களில், தெருக்கள் துப்புரவாயுள்ளனவா எனக் காணும் முறையில் ‘திருநாவுக்கரசர் திருவீதி உலாவரும் திருவிழா நடைபெற்றதாக இந்த ஊர்க் கல்வெட்டொன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இவ்வூரில் பெரிய நாகசுரக் கலைஞர் ஒருவர் பல்லாண்டுகட்கு முன் வாழ்ந்தார்; அவர் தீர்த்தனகிரி சின்னசாமி என மக்களால் அழைக்கப்பட்டு வந்தார்.

வடலூர்

வடலூரை அறியாத தமிழர் இருக்க முடியாது. இவ்வூர், அரசுக் குறிப்புகளில் பார்வதிபுரம் எனப் பெயர் சுட்டப்பட்டுள்ளது. கடலூர் - விருத்தாசலம் பாதையிலுள்ள இவ்வூரில் புகைவண்டி நிலையமும் உண்டு. இந் நிலையம் குறிஞ்சிப்பாடி நிலையத்திற்கும் நெய்வேலி நிலையத்திற்கும் இடையில் உள்ளது. ஊர் மக்கள் தொகை: 1750.

வடலூர் வள்ளலார் எனப்படும் இராமலிங்க அடிகளார் இங்கே சமரச சன்மார்க்க சங்கம், சத்திய ஞான சபை, அறநெறிச்சாலை ஆகியவை நிறுவியதால் இவ்வூர் உலகப் பெரும் புகழ்பெற்றுத் திகழ்கிறது. இந்நிறுவனங்களின் நூற்றாண்டு விழா 1967 இல் நடைபெற்றது. வடலூர் சபை பற்றியும் வள்ளலார் பற்றியும் இந்நூலில் ‘கெடிலக்கரைப் பெருமக்கள் - வடலூர் வள்ளலார்’ என்னும் தலைப்பில் விரிவாகக் காணலாம்.

வடலூரில் ஏராளமான சத்திரங்கள் இருப்பதுடன், தைப்பூச நாளில் சத்திரங்களில் பலர் வந்து இலவசமாக உணவு இடுதலும் குறிப்பிடத்தக்கது. இங்கே, அரசினர் ஆதார ஆசிரியர் பயிற்சிப் பள்ளி, அரசு அம்பர் சர்க்கா நிலையம், சேஷசாயி குழுவின் மின்சார இன்சுலேட்டர் தொழில்நிலையம், ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் நிறுவிய வள்ளலார் குருகுலம் - வள்ளலார் குருகுல உயர்நிலைப்பள்ளி - அப்பர் அனாதை மாணவர் இல்லம் - அப்பர் சான்றோர் இல்லம், சேலம் பெருமாள் செட்டியார் அருட்பா பாடசாலை முதலியவை இருப்பது, வடலூரின் இன்றியமையாமையை மேலும் மிகுதிப்படுத்துகிறது. இங்கே முந்திரி எண்ணெய்த் தொழிற்சாலையும் உள்ளது. இவ்வூர் கெடிலத்தின் தென்கரைக்கு 19 கி.மீ. (12 மைல்) தொலைவில் உள்ளது.

மேட்டுக் குப்பம்

இது, வடலூருக்குத் தெற்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இராமலிங்க அடிகளார் வடலூரில் ‘சத்திய ஞான சபை’ அமைத்தாலும், அவர் தங்கியிருந்தது இந்த மேட்டுக்குப்பம் ஊரில்தான். இங்கே அவர் குடில் வடிவிலுள்ள ‘சித்திவிளாகம்’ என்னும் பெயருடைய மனையில் தங்கியிருந்தார். அன்பர்கள் இந்தக் குடிலைச் சித்தி விளாக மாளிகை’ எனச் சிறப்புடன் அழைப்பர். வள்ளலார் தம் வாணாளின் இறுதியில் சித்திவிளாகத்திலுள்ள ஓர் அறைக்குள் புகுந்து தாளிட்டுக் கொண்டதாகவும் பிறகு வெளி வரவேயில்லை என்பதாகவும் கூறப்படுகிறது. இன்றும் பூட்டிய நிலையில் அந்த அறை காட்சியளிக்கிறது. சித்திவிளாகத்தில் அணையாத நந்தா விளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டிேயிருக்கிறது; அடிகளார் சுடரொளியில் (சோதியில்) கலந்துவிட்டார் என்பதை அறிவிக்கும் முறையில் இந்தச் சூழ்நிலை அமைந்துள்ளது.

வள்ளலார் நீராடியதாகச் சொல்லப்படும் ‘தீஞ்சுவை ஒடை’ மேட்டுக் குப்பத்தில்தான் இருக்கிறது. ஒடையும் ஓடையைச் சுற்றியுள்ள சூழ்நிலையும் காண்பதற்கு இன்பமாயுள்ளன. இந்த இடத்தில் இனந்தெரியாத ஒரு புத்துணர்வு தோன்ற்கிறது. “கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த குளிர்தருவே...'ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே...” என்னும் அடிகளாரின் அருட்பாவை இங்கே திரும்பத்திரும்பப் பாடவேண்டும் போல் தோன்றுகிறது.

மேட்டுக் குப்பம் ‘கருங்குழி’ என்னும் ஊரைச் சார்ந்த பகுதியாகும். வள்ளலார் கருங்குழியிலும் தங்கிப் பல பாடல்கள் அருளியுள்ளார். கருங்குழியின் மக்கள் தொகை: 3020.

நெய்வேலி

தன்னிடமுள்ள பழுப்பு நிலக்கரிப் படிவத்தால் உலகப் பெரும் புகழ்பெற்றுள்ள நெய்வேலி கடலூர் - விருத்தாசலம் பாதையில் உள்ளது. 1931ஆம் ஆண்டில் கூடலூர் - விருத்தாசலம் புகைவண்டிப் பாதை அமைக்கப்பட்டபோது நெய்வேலியில் நிலையம் இல்லை. 1950இல்தான் இங்கே புகைவண்டிகள் நிற்கத் தொடங்கின. அப்போதும் இங்கே நிலையம் கட்டப்பட வில்லை; ஒரு பழைய ஓட்டைப் புகைவண்டிப் பெட்டி நிலையமாக நிறுத்தப்பட்டு, பயணச் சீட்டு கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருந்தது; இந்த நிலைமை 1958 வரையுங் கூட நீடித்திருந்ததாக நினைவிருக்கிறது. பின்னர்ப் பெரிய அளவில் - ஆறு நூறாயிரம் (6 இலட்சம்) ரூபாய் செலவில் நிலையக் கட்டடங்கள் தொடங்கப்பட்டு 1961இல் கட்டி முடிக்கப்பட்டன.

நெய்வேலி கடலூருக்குத் தென்மேற்கே 35 கி.மீ. தொலைவில் இருந்தாலும், பண்ணுருட்டிப் பக்கமாகக் கெடிலத்தின் தென்கரைக்கு நேர் தெற்கே 20 கி.மீ. தொலைவில் இருப்பது குறிப்பிடத்தக்கது; மற்றும், நெய்வேலி நிலக்கரி உள்ள பகுதி, கெடிலக்கரை வரையும் பரந்திருக்கிறது. நிலக்கரியை வெட்டிக்கொண்டு போகப் போக எதிர்காலத்தில் கெடிலத்தை நெருங்க வேண்டியது வந்தாலும் வரலாம். இந்த முறையில், நெய்வேலி நிலக்கரித் திட்டத்துடன் நெருங்கிய தொடர்பும் உரிமையும் கெடிலக்கரைக்கு உள்ளமை புலனாகும்.

சில ஆண்டுகட்குமுன் பொட்டல் வெளியாய்க் கிடந்த நெய்வேலிப் பகுதியில் ஓரிடத்தில் நீர் இறைப்பதற்காக நிலத்தில் குழாய் இறக்கப்பட்டது (தென்னார்க்காடு மாவட்டக் கழகத்தின் தலைவராகவும் கடலூர் நகராட்சித் தலைவராகவும் பணிபுரிந்த சம்புலிங்க முதலியார் என்பவரின் நிலம் என்பதாக நினைவு). உடனே நிலத்திலிருந்து நீர் பீறிட்டுக்கொண்டு வெளியாகிப் பெருக்கெடுத்தோடியது. கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு நீரின் அளவும் விரைவும் இருந்தன. ஒயா அரக்கனைப்போல நிற்காமல் நீர் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்தது. இதைப் பெரிதுபடுத்திப் பெரியவர்கள் பேசிக்கொண்டிருந்ததைச் சிறு வயதில் கேட்ட நினைவு இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், நெய்வேலியில் நிலக்கரி இருப்பது பின்னர் 1948இல் கண்டுபிடிக்கப்பட்டது.

எளிய நிலையில் பொட்டல் வெளியாகக் கிடந்த நெய்வேலி இப்போது பெற்றிருக்கும் மாபெருஞ் செல்வ நிலையை விளக்கத் தேவையில்லை. ஏறக்குறைய நூறாயிரம் (இலட்சம்) மக்கள் வாழும் பெருநகராக நெய்வேலிப் பகுதி இன்று திகழ்கிறது. நெய்வேலிப் பகுதி இன்று தமிழக அரசின் ஆட்சிக்கு உட்படாமல், மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு’வின் நேரடி ஆட்சியின்கீழ் உள்ளது. இங்கே சிறந்த குடியிருப்புகள், உயர்நிலைப் பள்ளி, திரைப்பட மாளிகை, மருத்துவமனை முதலியனவாக வசதியளிக்கும் பல்வேறு நகர் உறுப்புகளும் உள்ளன.

நெய்வேலிப் பகுதியில் இருநூறு கோடி டன் பழுப்பு நிலக்கரி இருப்பதாக 1951இல் ஆராய்ச்சி வல்லுநர்களால் அறிவிக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் நிலக்கரி எடுக்கும் பொறுப்பை மேற்கொண்டு ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரிக் குழு’ (நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட்) என்னும் குழுவை ஏற்படுத்தி வேலையைத் தொடங்குவித்தது. இப்போது ஆண்டு தோறும் பல இலட்சம் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது. இதன் விளைவாக, அனல் மின்சார நிலையம், அடுப்புக் கரிக்கட்டித் தொழிற்சாலை, யூரியா உரத் தொழிற்சாலை முதலியனவும் நிறுவப்பட்டுச் செயல்படுகின்றன. இன்னும் இவை தொடர்பாகப் பல்வேறு வகைத் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுப் பல்வேறு வகைப் பொருள்கள் உண்டாக்கப்பட விருக்கின்றன. நிலக்கரித் திட்டத்தை மையமாகக் கொண்டு இங்கே ஏற்பட்டிருக்கும் 110 ஏக்கர் பரப்பளவுடைய நீர்த் தேக்கம் மிகவும் காணத்தக்கது. பல்லாயிரவர் இங்கே பணி செய்து பிழைக்கின்றனர்.

மாபெருஞ் செல்வச் செழிப்பிற்குக் காரணமாயுள்ள நெய்வேலி நிலக்கரித் திட்டம், பொதுவாகத் தமிழகத்தின் தென்னார்க்காடு மாவட்டத்தின் - பெருமைக்கு உரியதாயினும், சிறப்பாகக் கெடிலக்கரை நாகரிகத்தின் ஏற்றத்திற்கு உரியதாகும்.


  1. *சுந்தரர் தேவாரம் - திருவெண்ணெய் நல்லூர்ப் பதிகம்.
  2. *பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம்: 81, 82.
  3. *இந்திய சாசனங்கள் தொகுதி 5 - பக்கம் 167 தொகுதி 6 பக்கம் 51 தொகுதி 7 - பக்கம் 195.
  4. *பெரிய புராணம் - தடுத்தாட் கொண்ட புராணம்: 85 - 87.
  5. *பெரிய புராணம் - தடுத்தாட்கொண்ட புராணம் : 83.
  6. கலிங்கத்துப் பரணி - அவதாரம் - 68, 69.
  7. Mackenzie Manuscripts.
  8. *திநாவுக்கரசர் தேவாரம் - திருப்பாதிரிப் புலியூர்ப் பதிகம் பாடல் 4 கெ.24.
  9. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 38, 39, 40,
  10. பெரிய புராணம் - திருநாவுகரசர்- 61
  11. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 79.
  12. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 131, 133.
  13. பெரிய புராணம் - திருநாவுக்கரசர் - 146.