கெடிலக் கரை நாகரிகம்/மக்களும் வாழ்க்கை முறையும்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search23. மக்களும் வாழ்க்கை முறையும்

மக்கள் தொகை

தென்னார்க்காடு மாவட்டத்தின் மக்கள் தொகை ஏறக்குறைய 28,00,000 (28 இலட்சம்) ஆகும். இதில் கெடிலம் ஓடும் கள்ளக்குறிச்சி வட்டத்தின் தொகை 3,83,500; திருக்கோவலூர் வட்டத்தின் தொகை 4,00,150; கடலூர் வட்டத்தின் தொகை 5,11,400 ஆகும். கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்த மக்கள் தொகை ஏறக்குறைய 13,00,000 (13 இலட்சம்) எனலாம். தமிழகத்தில் மக்கள் நெருக்கமுள்ள மாவட்டங்களுள் தென்னார்க்காடு மாவட்டமும் ஒன்று. இம்மாவட்டத்தின் எட்டு வட்டங்களுள் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்த மக்கள் தொகை (13 இலட்சம்). இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் (28 இலட்சத்தில்) ஏறத்தாழப் பாதி இருக்கிறது. இதிலிருந்து, கெடிலக்கரைப் பகுதியில் மக்கள் நெருக்கம் மிகுதி என அறியலாம்.

மற்றும் தென்னார்க்காடு மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 10,770 சதுர கி.மீ. ஆகும். இவற்றுள் கள்ளக்குறிச்சி வட்டத்தின் பரப்பளவு 2,230 சதுர கி.மீ. ஆகும்; திருக்கோவலூர் வட்டத்தின் பரப்பளவு 1,500 சதுர கி.மீ. ஆகும்; கடலூர் வட்டத்தின் பரப்பளவு 1,060 சதுர கி.மீ. ஆகும். ஆகக் கெடிலம் ஓடும் மூன்று வட்டங்களின் மொத்தப் பரப்பளவு 4,790 சதுர கி.மீ ஆகும். பரப்பளவு வகையில் பார்த்தாலும், கெடிலக்கரை வட்டங்களின் குறைந்த பரப்பளவில் நிறைந்த மக்கள் வாழ்வது புலனாகும். கெடிலக்கரை வட்டங்களுக்குள்ளும், 2,230 சதுர கி.மீ பரப்பளவுள்ள கள்ளக்குறிச்சி வட்டத்தில் 3,83,500 மக்களே வாழ்கின்றனர்; 1,500 சதுர கி.மீ. பரப்பளவுள்ள திருக்கோவலூர் வட்டத்திலோ 4,00,150 மக்கள் வாழ்கின்றனர். இவை யிரண்டினும் குறைந்த அளவான 1060 சதுர கி.மீ. பரப்பளவே உடைய கடலூர் வட்டத்தில், இவையிரண்டினும் மிக்க அளவில் 5,11,400 மக்கள் வாழ்கின்றனர்.

இன்னும் தெளிவாகச் சொல்லவேண்டுமானால், ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் 172 மக்கள் கள்ளக்குறிச்சி வட்டத்திலும், 267 மக்கள் திருக்கோவலூர் வட்டத்திலும், 483 மக்கள் கடலூர் வட்டத்திலும் வாழ்கின்றனர் எனலாம். இம்மூன்று வட்டங்களுள் இவ்வளவு ஏற்றத் தாழ்விற்குரிய காரணமாவது:கெடிலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்தான் தோன்றுகிறது; அதனால் அங்கே பயன் ஒன்றும் இல்லை; மேலும் அவ்வட்டம் மலையும் காடும் மிக்கது. அடுத்து, கெடிலம் திருக்கோவலூர் வட்டத்தில் வளர்ச்சி பெற்று ஒரளவு பயன் அளிக்கிறது. அதனால் அங்கே முந்திய வட்டத்தினும் மக்கள் மிகுதியாக வாழ்கின்றனர். மேற்கொண்டு கெடிலம் கடலூர் வட்டத்தில் பெருவளர்ச்சியடைந்து பெரும் பயன் தருகிறது; மற்றும் கடலூரில் கடலிலே கலக்குமிடத்தில் துறைமுகத்தையும் பெற்றுள்ளது; இந்த வசதியால், கடலூரை ஒரு காலத்தில் தமிழகத்தின் தலைநகராகவும், இப்போது தென்னார்க்காடு மாவட்டத்தின் தலைநகராகவும் கெடிலம் ஆக்கியுள்ளது; இதனால் முந்திய இரண்டு வட்டங்களினும் கடலூர் வட்டத்தில் மக்கள் மிகப் பெருகியுள்ளனர். இதிலிருந்து, ஆற்றங்கரைப் பகுதிகளில் மக்கள் மிகுதியாக வாழ்வர் என்னும் உண்மை மெய்ப்பிக்கப்படுகிறது; இந்த உண்மை, கெடிலக்கரை வளத்திற்கும் நாகரிகத்திற்கும் சிறந்த சான்றாகிறது.

மதங்கள்

இந்த நாட்டின் மதம், இந்துமதம் எனப்படுகின்ற சிவநெறியாம் சைவமும், திருமால் திருநெறியாம் வைணவமுமே. மற்ற பெளத்தம், சமணம், சீக்கியம், இசுலாம், கிறித்துவம் முதலிய மதங்கள் எல்லாம் இந்த நாட்டிற்கு ஒன்றன்பின் ஒன்றாக வந்த புது மதங்களேயாம். வந்த மதங்களுள் பெளத்தமும் சமணமும் பழமையானவை. சங்க காலந்தொட்டு இடைக்காலம் வரை - அஃதாவது கி.மீ. 600 முதல் கி.பி.1300 வரை பெளத்தமும் சமணமும் திருமுனைப்பாடி நாட்டில் மாறிமாறி வளர்ந்தும் குறைந்தும் கால் கொண்டிருந்தன. பிற்காலத்தில் வளர்ச்சி அறவே நின்று வரவரத் தேயத் தொடங்கி விட்டது. புத்த மதத்தினர் இல்லையென்று சொல்லுமளவிற்கு மிகமிகக் குறைந்து விட்டனர். சமணத்தில் 6000 அல்லது 7000 மக்கள் தென்னார்க்காடு மாவட்டத்தில் இருந்தால் பெரிய செய்தியாம். இவர்கள், திருக்கோவலூர், செஞ்சி, திண்டிவனம், விழுப்புரம் ஆகிய வட்டங்களில் உள்ளனர்; மற்ற வட்டங்களில் அவ்வளவாக இல்லை எனலாம். கெடிலக்கரை வட்டங்கள் மூன்றனுள் திருக்கோவலூர் வட்டத்தில் திருநறுங்குன்றம், மருதூர் முதலிய இடங்களில் சமணர்கள் குழுவினராக வாழ்கின்றனர்.

இந்துக்களுக்கு அடுத்தபடி இசுலாமியரே மிகுதியாயுள்ளனர். இம்மாவட்டத்தில் 90,000 இசுலாமியர் உளர் எனலாம். இசுலாம் 14ஆம் நூற்றாண்டிலேயே தமிழ் நாட்டிற்குள் புக்கு வேரூன்றத் தொடங்கிவிட்டது. 14ஆம் நூற்றாண்டில் மதுரையில் இருந்த வீரபாண்டியன் என்னும் பாண்டிய மன்னன் தன் பங்காளிப் பாண்டியனை வெல்வதற்காக டில்லியிலிருந்த முசுலீம் மன்னனின் உதவியை நாடினான்; அம்முசுலீம் மன்னனுடன் மதமும் வந்தது. மேற்கொண்டும் பீஜப்பூர் சுல்தான், கோல்கொண்டா சுல்தான், ஐதராபாத் நிசாம், ஆர்க்காடு நவாப் முதலியோரின் ஆட்சி தென்னாட்டில் ஏற்பட்டபோதெல்லாம் முசுலீம் மதமும் வேரூன்றி வளரத் தொடங்கியது. பீஜப்பூர் சுல்தானது ஆட்சிக் காலத்தில் 1640ஆம் ஆண்டு தொடங்கி 1677 வரை கூடலூர் இசுலாமாபாத் என்று அழைக்கப்பட்டமை ஈண்டு நினைவு கூரத்தக்கது. முசுலீம் மக்களுள் சிலர் அரசு அலுவல், வாணிகம், மருத்துவம் முதலிய உயர்தொழில்கள் புரிகின்றனர்; ஒரு சிலர் தறி நெய்தற்கு வேண்டிய அச்சு கட்டுதல், பஞ்சடித்தல், இலாடம் அடித்தல், ஈயம் பூசுதல், பாய் நெசவு, வெற்றிலை பயிரிடல், வெற்றிலை விற்பனை முதலிய சிறுதொழில்கள் புரிகின்றனர். கெடிலக்கரைப் பகுதியில் கூடலூர், நெல்லிக்குப்பம் முதலிய இடங்களில் முசுலீம்கள் தொகுப்பாக வாழ்கின்றனர். இவர்களுள்ளும் பட்டாணியர், லப்பை, பஞ்சுகொட்டி, மரைக்காயர் எனப் பலவகையினர் உளர்.

இசுலாமியருக்கு அடுத்தபடியாகக் கிறித்தவர்களைச் சொல்லலாம். தென்னார்க்காடு மாவட்டத்தில் ஏறக்குறைய 65,000 கிறித்தவர்கள் உளர் எனலாம். கிறித்தவம் 17ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலேயே தமிழகத்துள் புகுந்துவிட்டது. இவர்களுள் கத்தோலிக்கர், பிராடஸ்டன்ட் என்னும் இரு பிரிவினர் உளர். கிறித்தவம் மேலை நாடுகளிலிருந்து கிறித்தவச் சபைகளின் வாயிலாக இங்கே நுழைந்தது. ஏழை எளியவர்களுட் சிலரும் தாழ்த்தப்பட்ட மக்களுட் சிலரும் எளிதில் கிறித்தவ மதத்திற்கு மாறினர். கெடிலக்கரப் பகுதியில் திருக்கோவலூர், பண்ணுருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், (இப்போது) நெய்வேலி முதலிய ஊர்களில் கிறித்தவர்கள் மிகுதியாக வாழ்கின்றனர். மற்ற ஊர்களிலும் கடலூரில் மிகுதி எனலாம். கடலூர்ப் புதுநகர்ப் பகுதியில் கத்தோலிக்கரும் முதுநகர்ப் பகுதியில் பிராடஸ்டன்ட் கிறித்தவரும் மிக்குள்ளனர்.

தமிழகத்திற்கு வந்த பிற மதங்களுள் பெளத்தம், சமணம், இசுலாம், கிறித்தவம் என்னும் நான்கும் குறிப்பிடத்தக்கவை. இவற்றுள் பெளத்தமும் சமணமும் இந்திய நாட்டு மதங்கள்; இசுலாமும் கிறித்தவமும் வெளிநாட்டு மதங்கள்; அப்படியிருந்தும் தென்னார்க்காடு மாவட்டத்தில் பெளத்தம் இருக்கும் இடம் தெரியவில்லை; சமணர்கள் ஏழாயிரவரே உள்ளனர்; ஆனால் இசுலாமியத்தில் 90,000 மக்களும் கிறித்தவத்தில் 65,000 மக்களும் உள்ளனர். இதற்குக் காரணம் என்ன? பெளத்தமும் சமணமும் சைவ நாயன்மார்களாலும் வைணவ ஆழ்வார்களாலும் மற்ற சைவ வைணவப் பெருமக்களாலும் முறியடிக்கப்பட்டன; இந்தச் சூழ்நிலையில் தமிழ் மன்னர்களும் அம்மதங்களை ஆதரிக்காது விட்டனர். ஆனால், இசுலாமும் கிறித்தவமும் தமிழகத்திற்கு வெளியிலிருந்து வந்த பிற மன்னர்களின் ஆட்சியின் துணை கொண்டு புகுந்ததால், இப்பகுதியில் நன்கு வேரூன்றி ஆணியடித்துக்கொண்டன. அந்த அயல் ஆட்சியாளர்கள் தத்தம் ஆட்சிக் காலங்களில் தத்தம் மதங்களை நன்கு எருவும் நீரம் இட்டு ஆதரித்து வளர்த்தனர்.

இசுலாமியருள் பெரும்பாலானவர் வடக்கேயிருந்து வந்த மரபினர்; சிறுபான்மையினர் இசுலாமியராக மாறிய தமிழர்கள். ஏறத்தாழக் கிறித்தவர் எல்லாருமே மத மாறிய தமிழர்களே. வெளிக் கிறித்துவர் ஒரு சிலர் இருக்காம்.

இந்நாட்டில் பெரும்பான்மை மக்களான இந்துக்களும் பல்வேறு வகையினராயுள்ளனர். சைவர், சைவத்திலேயே வீர சைவர், வைணவர், வைணவத்திலேயே வடகலையார் - தென்கலையார், சங்கரர் - இராமாநுசர் - மாத்துவாசாரியார் முதலியோரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர், சிறு தெய்வங்களை வழிபடுவோர் முதலிய பல்வேறு வகையினர் இந்துக்கள் எனப்படுகின்றனர். இவர்கள் சிவன், பிள்ளையார், முருகன், தேவி, திருமால், திருமகள், கலைமகள், ஆஞ்சநேயர், மாரியம்மன், காளி, அங்காளியம்மன், துரோபதையம்மன், பிடாரி, அய்யனார், வீரர், மாடசாமி, மன்னார்சாமி, காத்தவராயன் முதலிய பல்வேறு பெயர்களையுடைய தெய்வங்களை வழிபடுகின்றனர். இத் தெய்வங்கட்குக் கூட்டாகவும் தனித்தனியாகவும் கோயில்கள் உள்ளன. சில தெய்வங்கள் சில இனத்தவர்களால் குலதெய்வங்களாகக் கொண்டு வழிபடப்படுகின்றன்; அந்த இனத்தவர் இருக்கும் ஊர்களில் அந்தத் தெய்வங்கட்குக் கட்டாயம் கோயில் இருக்கும். எடுத்துக்காட்டாக, செங்குந்த இனத்தவரின் குலதெய்வம் முருகன்; செங்குந்தர் இருக்கும் ஊர்களில் முருகன் கோயில் இருக்கும்.

இனங்கள் (சாதிகள்)

தமிழகத்தில் எங்கும் உள்ள இனங்கள் (சாதிகள்) இங்கும் உள்ளன. கெடில நாட்டில் மிகுந்த எண்ணிக்கையில் உள்ள இனத்தவர் வன்னியரே. இவர்கள் ‘வன்னிய குல க்ஷத்திரியர்’ என்றும் சொல்லப்படுவர். இந்த இனத்தவர் பெயருக்குப் பின்னால் படையாட்சி, நாயகர், கவுண்டர், பிள்ளை, இராயர், பூசாரி, உடையார், தேவர் முதலிய பட்டப் பெயர்களைச் சேர்த்துக் கொள்கின்றனர். இவர்கள் உடல் உரமும் உழைக்கும் ஆற்றலும் உதவி செய்யும் உயர்ந்த உளப்பான்மையும் உடையவர்கள், உழவுத் தொழில் புரிபவர்கள். இந்த நாட்டின் உழைப்பாளிப் பெருங்குடி மக்களாகிய இவர்கள், இவ்வளவு நாள் அடக்கப்பட்டும் அடங்கியும் பின்தங்கியிருந்தனர். இந்த இருபதாம் நூற்றாண்டில் விழிப்பெய்தி முன்னேறி வருகின்றனர். இவர்களைக் குறிக்கும் பல்வேறு பட்டப் பெயர்கள், இவர்கள் பண்டு படைஞராகவும் படைத்தலைவராகவும் இருந்ததைப் புலப்படுத்தும். இவ்வினத்தவர் பெரும்பாலான ஊர்களில் பெரும்பாலராகக் குழுவாக வசிக்கின்றனர்.

வன்னியருக்கு அடுத்தபடியாக மிக்க எண்ணிக்கையில் இருப்பவர்கள், அரிசனர் என்றும் ஆதித் திராவிடர் என்றும் சொல்லப்படும் தாழ்த்தப்பட்ட மக்களாவர். இவர்கள் தாழ்ந்த மக்கள் அல்லர், பிறரால் தாழ்த்தப்பட்ட மக்களே. இப்பகுதியில் இவர்கள் பறையர் என்னும் பெயரால் சுட்டப்படுகின்றனர். ஒவ்வோர் ஊருக்கும் அப்பால் ‘சேரி’ என்னும் பெயருடைய குடியிருப்புகளில் இவர்கள் தங்களுக்குள் குழுவாகவும், பிற இனத்தவரினின்றும் தனியாகவும் வாழ்கின்றனர். இவர்கள் கடுமையான உழைப்பாளிகள், உழவுத் தொழிலும் கூலி வேலைகளும் செய்து பிழைக்கின்றனர். தீண்டாதவர்கள் என ஒதுக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று அவ்விழிவு நீங்கி மற்றவர்போலவே பல துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.

அடுத்தபடி மிகுந்த எண்ணிக்கையினர் கைக்கோளர் எனப்படும் செங்குந்த முதலியாராவர். இவர்களும் பல ஊர்களில் குழுகுழுவாக வாழ்கின்றனர். இவர்களின் குலத்தொழில் நெசவு, நெசவு செய்பவர்கள் ஏழையர்களாகவும், வெளிநாடுகளுடன் கைலி வாணிகம் செய்பவர்கள் பெருஞ் செல்வர்களாகவும் இருக்கின்றனர். அடுத்து உடையார், நாயடு, ரெட்டியார் முதலிய இனத்தவர்கள், சிற்சில ஊர்களில் ஓரளவு குழுவாக வசிக்கின்றனர். மற்றபடி, வேறிடங்களில் வாழ்கின்ற பல்வேறு வகை வேளாளர், பிராமணர், பல்வேறு தமிழ்ச் செட்டிமார்கள். இலிங்க தாரிகள், கம்மாளர், அகமுடையார், இடையர், வாணியர், நாடார், குயவர், செம்படவர், கம்மவார், சேடர், சாலியர், சேணியர், தேவாங்கர், சாத்தானியர், வண்ணார், நாவிதர், குறும்பர், ஒட்டர், இருளர், வள்ளுவர்,

சக்கிலியர், குறவர் முதலிய பல்வேறு இனத்தவர்களும் இங்கே வாழ்கின்றனர்.

பெயருக்குப் பின்னால் முதலியார், பிள்ளை, செட்டியார், ஐயர் போன்ற பட்டங்கள் போட்டுக் கொள்பவர்கட்கு இடையே பல்வேறு பிரிவினர் உளர். வேளாளர்களும் அகம்படியர்களும் முதலியார், பிள்ளை என்றும், செங்குந்தர் முதலியார் என்றும், பிரமாணர் ஐயர், சாஸ்திரி, சர்மா, ராவ், ஐயங்கார், ஆச்சாரி என்றும், இலிங்கதாரிகள் ஐயர், பத்தர், என்றும், ஆயிரவர் பேரி வடக்கத்தியார் - அச்சிறு பாக்கத்தார் - சோழியர் முதலியோரும் வாணியர், கோமுட்டியர், சேடர், சேணியர், தேவாங்கர், சாலியர் முதலியோரும் செட்டியர் எனவும், கம்மாளர்கள் ஆசாரி, பத்தர் எனவும், இடையர்கள் கோனார், பிள்ளை, யாதவர் என்றும், கம்மவார்கள் நாயடு, நாய்க்கர் என்றும், சாணார் எனப்படுபவர் கிராமணி, நாடார், பிள்ளை என்றும், குயவர்கள் உடையார், பிள்ளை, பத்தர் என்றும், செம்படவர் செட்டியார், கரையாளர் என்றும் பட்டங்கள் போட்டுக் கொள்கின்றனர். கம்மாளர்களும் செட்டியார் என்னும் பட்டம் உடையவர்களும் பூணுால் அணிந்து கொள்கின்றனர். ‘க்ஷத்திரியர்’ என்ற முறையில் வன்னியருள்ளும் ஒரு சிலர் பூணூல் போட்டுக் கொள்கின்றனர். கள்ளக் குறிச்சி வட்டத்தில் கல்வராயன் மலைப் பகுதியில் மலையாளிகள் என்பவர்கள் வாழ்கின்றனர். இவர்கள் கேரள மலையாளிகள் அல்லர், தமிழக மலையாளிகள். கவுண்டர் எனவும் இவர்கள் தங்களைக் குறிப்பிட்டுக் கொள்கின்றனர். மேற்சொன்னவர்களேயன்றி, இன்னும் தமிழகத்தின் வேறு மாவட்டங்களில் உள்ள தமிழ் இனத்தவரும் தமிழக மல்லாத வேறு மாநில மக்களும் ஓரளவு வாழ்கின்றனர்.

வன்னியர் உழவும் சிறு தொளழில்களும், அரிசனர் உழவும் கூலி வேலைகளும், செங்குந்தர், சேடர், சேணியர், தேவாங்கர் நெசவும், வேளாளர், அகம்படியர், உடையார், ரெட்டியார் போன்றவர்கள் உழவும் உழுவித்தலும், பல்வேறு தமிழ்ச் செட்டிமார்கள் வாணிகமும், வாணியர் எண்ணெய் ஆடுதலும், கம்மாளர்கள் தச்சு வேலையும், நகை வேலையும் உலோகப் பொருள் வேலையும் சிறப்பாகச் செய்கின்றனர். மற்ற இனத்தவர்கள் செய்யும் தொழில்கள் அவர்களுடைய பெயர்களிலிருந்தே தெரிகின்றன; அவர்கள் மற்ற இடங்களில் போலவே இங்கேயும் அத்தொழில்களைச் செய்து வாழ்கின்றனர். பொதுவாக இந்தக் காலத்தில் எல்லாருமே எல்லாத் தொழில்களும் கலந்து செய்து வருகின்றனர் எனலாம். முற்றிலும் இனவேற்றுமையும் தொழில் வேற்றுமையும் ஒழிவது எந்நாளோ?

மொழி(கள்)

மதங்கள், இனங்கள் என்று பன்மையில் தலைப்பு இட்டதைப் போல ‘மொழிகள்’ எனப் பன்மையில் தெளிவாகத் தலைப்பு இட உள்ளம் ஒருப்பட வில்லை. மொழிகள் என்று பன்மையில் தலைப்பு இட்டாலும் பொருந்தக் கூடிய நிலைமை இன்று உள்ளது. கெடில நாட்டின் பெரும்பான்மையானமொழி இந்தக் காலத்திலும் தமிழ் மொழிதான் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. இங்கே தமிழ் மொழியேயன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளும் செளராஷ்டிரம், மராத்தி, இந்தி, உருது ஆகிய வடஇந்திய மொழிகளும் ஒரு சில பிரிவினரால் பேசப்படுகின்றன. கெடிலநாடு முழுதும் பரவலாக ஆங்கில மொழியும், கடலூர் வட்டத்தின் வடக்குப் பகுதியை ஒட்டிய பழைய பிரெஞ்சுப் பகுதியில் பிரெஞ்சு மொழியும் நடமாட்டத்தில் உள்ளன.

பிற மாநிலங்களிலிருந்தும் பிற நாடுகளிலிருந்தும் வந்து குடியேறாமல் தொன்றுதொட்டு இங்கேயே வழி வழியாக வாழ்ந்துவரும் மக்கள் நாட்டு மொழியாகிய தமிழ் மொழி பேசுகின்றனர். தமிழர்க்கு அடுத்தபடியாக எண்ணிக்கையில் தெலுங்கர்களைக் குறிப்பிடலாம். ஆந்திரத்திலிருந்து விசயநகர மன்னர்களும் அவர்களின் மேலாட்சியின் கீழ் நாயக்கர்களும் வந்து இந்நாட்டையாண்ட போது தெலுங்கர்கள் மிகுதியாக இங்கே வந்து குடியேறினர்; தெலுங்கு மொழியின் மேலாட்சி அப்போது ஓங்கியிருந்தது. இப் பகுதியில், ரெட்டியார், நாயடு எனப்படும் நாயக்கர், சேடர், சாலியர், சேணியர், தேவாங்கர், சாத்தாணியர், ஆரிய வைசியர் எனப்படும் கோமுட்டி செட்டிமார், ஒட்டர், சக்கிலியர், குறும்பர் முதலிய இனத்தவர் தெலுங்கு பேசுகின்றனர். பிராமணர், கம்மாளர், இடையர், வண்ணார், இருளர் முதலிய இனங்களிலும் தெலுங்கு பேசும் பிரிவினர் உளர். தமிழர்களும் தெலுங்கர்களும் ஏறத்தாழ ஒரு மொழியினர் போலவே ஒன்றி வாழ்கின்றனர். தேவாங்கருள் தெலுங்கு பேசுபவரேயன்றி கன்னடம் பேசுபவரும் உள்ளனர். மைசூர்ப் பகுதியிலிருந்து வந்து வாழும் இலிங்கதாரிகள் எனப்படும் வீரசைவர் கன்னடம் பேசுகின்றனர். தமிழ்நாட்டு வீர சைவர்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். கேரளத்திலிருந்து மலையாளிகள் பலர் வந்து குடியேறியுள்ளனர்.

வடக்கேயிருந்து முகமதிய மன்னர்கள் இங்கே வந்து ஆண்டபோது அவர்களுடன் உருது, அரபு ஆகிய மொழிகளும் வந்தன. முகமதியர்களும் நிரம்ப வந்து குடியேறினர்; அவர்கள் உருதுமொழி பேசுகின்றனர். தமிழக முசுலீம்கள் தமிழ்மொழி பேசுகின்றனர். இங்கே மராத்தியரின் ஆட்சி நடந்தபோது மராத்தியர் சிலர் வந்து குடியேறினர்; இவர்கள் மராத்திமொழி பேசுகின்றனர். ராவ், ராஜா என்னும் பட்டப் பெயர்கள் இவர்கட்கு உண்டு. பட்டுநூல்காரர் எனப்படும் செளராஷ்டிரரும் இவண் ஒரு சிலர் உளர். இவர்கள் பாகவதர் எனச் சாதிப்பட்டம் போட்டுக் கொள்கின்றனர்; பேசும் மொழி செளராஷ்டிரம். இன்றுள்ள இந்தி மொழியின் நிலையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. கிறித்தவருள் பல்வேறு இனத்தவரும் உள்ளனர்; அவ்வவ் வினத்தவர் தத்தம் தாய் மொழி பேசுகின்றனர். இதுகாறுங் கூறி வந்த மதத்தவர், சாதியினர், மொழியினர் அனைவருமே பொதுவாகத் தமிழ் மொழி பேசுகின்றனர்.

இத்தனை மொழிகள் இருக்கவும், ஆரியம் சமசுகிரும் எனப்படும் வடமொழியும் நின்று நிலைத்துள்ளது. பிராமணர் சிலர். இம்மொழியைப் படித்து வருகின்றனர். நாடு முழுவதும் திருக்கோயில் பூசனை, பிறப்பு - திருமணம் - இறப்பு முதலியவை தொடர்பான சடங்குள் முதலிய பல்வேறு துறைகளில் பெரும்பாலும் வடமொழியின் ஆட்சியே இன்றும் (1967) காணப்படுகிறது. இது போலவே, கல்வித்துறை, வணிகத்துறை, ஆட்சித்துறை முதலியவற்றில் ஆங்கில மொழியின் உடும்புப் பிடி இன்றும் (1967) உறுதியாகவே உள்ளது. இசையரங்குகளில் தெலுங்கும் வடமொழியும் பேராட்சி புரிகின்றன.

ஆனால், எல்லாத் துறைகளிலும் தமிழே தலைமை தாங்கி ஆட்சி புரிய வேண்டும் என்னும் ஒருவகை இயக்கம் இப்போது உருவாகி நடைபெற்று வருகிறது; இதில் வெற்றி முகமும் தெரிகிறது. இடையில் எத்தனையோ மொழிகள் வரக்கூடும். அவ்வாறே போகவுங் கூடும். பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராகிருதமொழி எப்போதோ மறைந்து போயிற்று. பின்னர் வடமொழிக்கும் தென்மொழிக்கும் இடையே பாலமாக அமைக்கப்பட்ட கிரந்தம் என்னும் மொழி மறைந்து கொண்டே வருகிறது. அல்லது மறைந்த நிலையில் இருக்கிறது எனலாம். வந்த மொழி எந்த மொழியும் அழிந்துபோக வேண்டியதில்லை. ஆட்சி செலுத்தாமல் இருந்தால் போதும்! ஆனால் சொந்த மொழி தமிழ் எவ்வளவோ அழிந்துபோய்விட்டது என்பதை மறைக்கவோ மறுக்கவோ மறக்கவோ முடியாது!

வாழ்க்கை முறைகள்

தமிழக முழுதும் பெரும்பாலும் வாழ்க்கை முறைகள் ஒத்திருப்பினும், சிறுபான்மை இடத்திற்கு இடம் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபட்டிருப்பதும் உண்டு. இந்த அடிப்படையில், பிற பகுதிகளினும் திருமுனைப்பாடி நாட்டின் வாழ்க்கை முறையில் சில வேறுபாடுகள் இருக்கக் கூடும். இந்த நாட்டிலேயே மதத்திற்கு மதம், இனத்திற்கு இனம் வேறுபாடு உண்டு. இசுலாமியர், கிறித்தவர், பிராமணர், ஆரிய வைசியர் எனப்படும் கோமுட்டி செட்டிமார் முதலிய இனத்தவரின் வாழ்க்கை முறைகளும் பழக்க வழக்கங்களும் பெரும்பாலும் தமிழகம் முழுதும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே, இத்தகு இனத்தவர்களை விட்டுவிட்டு. இடத்திற்கு இடம் மாறுபடும் பிற இனத்தவர்கள் திருமுனைப்பாடி நாட்டுப் பகுதியில் பின்பற்றும் வாழ்க்கை முறைகளையும் கையாளும் பழக்க வழக்கங்களையும் இங்கே ஆராய்வாம். இவர்களுள்ளும் இனவாரியாக நோக்காமல், ஏறக்குறைய எல்லா இனத்தவர்க்கும் பொதுவாகக் கருதப்படக்கூடிய முறைகளைக் காண்பாம். திருமுனைப்பாடி நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறைகளையே அந்நாட்டின் பொதுவான வாழ்க்கை முறைகளாகக் கொள்ள வேண்டும் என்பதும் ஈண்டு நினைவு கூரத்தக்கது. பின் கூறப்படும் வாழ்க்கை முறைகளுள்ளும் பழக்க வழக்கங்களுள்ளும் ஒரு சில, இனத்திற்கு இனம் வேறுபட்டி ருப்பினும், மிகப்பல, எல்லா இனத்தவர்க்கும் ஒத்தே இருக்கும்.

பிறப்பு வளர்ப்பு

முதல் பிள்ளைக்குத் தலைச்சன் என்றும் இரண்டாம் பிள்ளைக்கு இடைச்சன் என்றும் கடைசிப் பிள்ளைக்குக் கடைக்குட்டி என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன. இந்த மூன்றோடு நிறுத்திக் கொள்வது நல்லது என இந்தக் காலத்தில் அறிஞர்களாலும் அரசியலாராலும் பரிந்துரைக்கப்படுகிறது; கேட்டால் தானே? தலைச்சனைத் தலைப்பிள்ளை என்றும் சீமந்த புத்திரன் என்றும் சொல்லுவதும் உண்டு. முன் பிள்ளையையும் பின் பிள்ளையையும் ‘முன்னனை’ ‘பின்னணை’ என்று குறிப்பிடும் வழக்கமும் உளது. நிற்காமல் வரிசையாகத் தொடர்ந்து பிறந்து கொண்டேயிருக்கும் பிள்ளைகளைத் தலைச்சன் பேறு, இடைச்சன் பேறு, மூன்றாம் பேறு, நான்காம் பேறு, ஏழாம் பேறு, பத்தாம் பேறு, பன்னிரண்டாம் பேறு என்று எண் பெயரால் அடுக்கிக் கொண்டே போகும் பெயர் வழக்காறும் உண்டு.

முதல் பிள்ளை பெண்ணின் தாய் வீட்டில் பிறக்க வேண்டும். மூன்றாம் பிள்ளை பெண்ணின் தாய் வீட்டில் பிறந்தால் தாய் வீடு உருப்படாதாம்; அதனால் கணவன் வீட்டில்தான் பிறக்க வேண்டுமாம். எத்தனையாவது பிள்ளையானாலும் எத்தனை பிள்ளையானாலும் மருத்துவ மனையில் பிறப்பதற்குத் தடையில்லை - இன்று அதுதான் பெரும்பாலும் நடைபெறுகிறது. முதல் பிள்ளை சித்திரைத் திங்களிலும் புரட்டாசித் திங்களிலும் பிறப்பது கெடுதி என்று சொல்லப்படுகிறது. பிறக்கும்போது பிள்ளை கழுத்தில் குடலாகிய மாலை போட்டுக் கொண்டு பிறந்தால் மாமனுக்கு ஆகாது என்றும், குடலாகிய கொடி சுற்றிக் கொண்டு பிறந்தால் குடிக்கு ஆகாது என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு மாலைபோட்டுக் கொண்டும் கொடி சுற்றிக் கொண்டும் பிறந்து விட்டால், முறையே தாய் மாமனும் தந்தையும் வாயில் தண்ணிர் ஊற்றிக் கொண்டு பிறந்த குழந்தையின்மேல் கொப்பளித்துத் துப்ப வேண்டும்; துப்பினால் துன்பம் விலகிவிடுமாம். இதற்கு இன்னும் ஏதாவது ‘சாந்தி’ செய்வதும் உண்டு.

பொதுவாக ஆண்கள் இரட்டைப்படைப்பேறாக அஃதாவது, இரண்டாவது - நான்காவது குழந்தையாகப் பிறக்க வேண்டுமாம்; பெண்கள் ஒற்றைப் படைப்பேறாக - அதாவது, மூன்றாவது ஐந்தாவது குழந்தையாகப் பிறக்க வேண்டுமாம். இவ்வாறு பிறந்தால்தான் வளமாக வாழ்வார்களாம். இது சார்பான பழமொழிகள் வருமாறு:

‘நான்காம் பேறு ஆணுக்கு நாதங்கி (தாழ்ப்பாள்) எல்லாம் பொன்னு.’
‘அஞ்சாம் பேறு பெண்ணு கெஞ்சினாலும் கிடைக்காது.’
‘ஆறாம் பேறு பெண்ணு ஆறாக்கினாலும் ஆக்கும் - நீறாக்கினாலும் ஆக்கும்’
‘ஆறாம் பேறு ஆணு ஆனை கட்டி வாழும்’.
‘ஏழாம் பேறு பெண்ணு இறவானம் எல்லாம் பொன்னு’
‘எட்டாம் பேறு பெண்ணு எட்டிப் பார்த்த இடம் குட்டிச்சு வரு’
‘எட்டாம்பேறு ஆணு வெட்டி அரசாளும்’.

பேறுக் கணக்குப் போலவே பிறந்த நாளும் (நட்சத்திரமும்) கருதப்படுகின்றது. இது சார்பான பழமொழிகளாவன:

‘அகவணியில் பிறந்தவர் அசுவம் (குதிரை) ஏறுவர்’
‘பரணியில் பிறந்தவர் தரணியை ஆள்வர்’
‘அவிட்டத்தில் பிறந்தவர்க்குத் தவிட்டுப் பானை யெல்லாம் காசு’
‘பூராடத்தில் பிறந்தவர் போராடுவர்’

‘கேட்டையில் பிறந்தவர் கோட்டையை இழப்பர்’.

இப்படி இன்னும் எத்தனையோ நம்பிக்கைகள் உள்ளன.

கருவுற்றிருக்கும் பெண்ணை நல்லபடியாக வைத்திருக்க வேண்டும்; துன்புறுத்தலோ புண்படுத்தலோ இன்றி மகிழ்ச்சியான சூழ்நிலையில் வைத்திருக்க வேண்டும்; கேட்டதை வாங்கித் தரவேண்டும்; விரும்பிய உணவை ஆக்கிப் படைக்க வேண்டும் - இந்த நடைமுறை நம்பிக்கை உள்ளது. முதல் முதலாகக் கருவுற்ற ஐந்தாம் திங்களில் (மாதத்தில்) ‘ஐந்திற்கு இடுதல்’ என்னும் மங்கல வினையும், ஏழாம் திங்களில் ‘சூல்’ என்னும் மங்கல நிகழ்ச்சியும் நடத்தப் பெறுகின்றன. சூல் விழாவைச் ‘சூல் பண்டம்’ என்றும், சீமந்தம் என்றும், பூ முடித்தல் என்றும் இங்கே சொல்கின்றனர்; இதுதான் பிராமணர்களால் ‘வளைகாப்பு’ என அழைக்கப்படுகிறது; இதனையே எளிய மக்கள் பேச்சு வழக்கில் ‘நல்ல சோறு ஆக்கிப் போடுதல்’, ‘நல்ல கஞ்சி காய்ச்சி ஊற்றுதல்’ என வேடிக்கையாகக் கூறுவர். இந்த விழா பெண் வீட்டார் செலவில் பிள்ளை வீட்டில் நடைபெறும். பெண் வீட்டார் தத்தம் வசதிக்கேற்பப் பல்வேறு வரிசைகளுடன் வந்து விழாவை நடத்துவர்; மிடுக்கான விருந்து நடைபெறும். சூல்விழா முடிந்ததும் பெண்ணைத் தாய்வீட்டார் தம் இல்லத்திற்கு அழைத்தேகுவர்; அப்போது தவறினால் ஒன்பதாம் திங்களில் அழைத்துச் செல்வர். குழந்தை பிறந்த மூன்று அல்லது ஐந்தாம் திங்களில் பிள்ளை வீட்டார் காப்பரிசியுடனும் அணிகலன் முதலியவற்றுடனும் வந்து சிறப்புச் செய்து தாயையும் சேயையும் தம் வீட்டிற்கு அழைத்துப் போவர்; இந் நிகழ்ச்சிக்குக் காப்பிடுதல்’ என்று பெயராம்.

பொதுவாக எத்தனையாவது பிள்ளை பிறந்தாலும் பிறந்த ஒன்பதாம் நாள் ‘தீட்டுக் கழித்தல்’ என்னும் நிகழ்ச்சி நடைபெறும்; அன்று எருக்கம் நாரினால் ஆன அரைஞாண். கயிறு குழந்தைக்குக் கட்டப்படும். பெயர் சூட்டு விழாவும் உணவு ஊட்டும் விழாவும் சிலரால் சிறப்பாகச் செய்யப்படுகின்றன. பலர் செய்வதில்லை. முதலாண்டு அல்லது மூன்றாம் ஆண்டு அல்லது ஐந்தாம் ஆண்டு அஃதாவது ஒற்றைப்படை ஆண்டில் குழந்தைக்கு முடி எடுக்கின்றனர். பின்னர்க் காதணி விழா நடைபெறும். இவ்விரண்டும் குடும்ப வசதிக்கேற்ப நடைபெறும். விழா நடத்திக் காது குத்தாமல் வீட்டோடு காது குத்திக் கொண்டால் அதற்குத் ‘திருட்டுக் காது குத்துதல்’ என்று பெயர் சொல்லப்படுகிறது. ஐந்தாம் வயதில் எழுத்தறிவித்தல் (அட்சராப்பியாசம்) நடத்தப் பெறுகிறது. சிலர் இதனை ஒரு விழாப்போல் விரிவாக நடத்துகின்றனர். இந்தக் காலத்தில் பெரும்பாலார் விழா ஒன்றும் செய்யாது, ஆடுமாடுகளை மந்தைக்கு ஒட்டியனுப்புவதுபோல் பிள்ளைகளைப் பள்ளிக் கூடத்திற்கு அனுப்பிவிடுகின்றனர். ஆனால், அந்தக் காலத்தில் ஆசிரியரிடம் அனுப்பும் முதல் நாள் ஒரு சிறப்பு நாளாகவே கொண்டாடப்பட்டது.

பெண் பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளையே பெரும்பேறாகக் கருதும் வழக்கம் இங்கும் உள்ளது. ஆனால் பத்து வயது நிறைந்ததுமே, ஆண் பிள்ளைகளினும் பெண் பிள்ளைகளை மிகவும் கவனமாக வளர்க்கின்றனர்; அவர்தம் கற்புடைமையைக் காப்பதில் பெற்றோர் பெரிதும் அக்கறை காட்டுகின்றனர். பெண்பிள்ளைகள் பருவம் எய்தியதை ஒரு விழாவாகக் கொண்டாடுகின்றனர். இதற்கு ‘மஞ்சள் நீராட்டு விழா’, ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்றெல்லாம் பெயர் கூறுகின்றனர். எளிய பேச்சு வழக்கில் ‘மஞ்சள் தண்ணீர் சுற்றுதல்’ என்று சொல்வர். பெண்கள் எய்தும் இந்த நிலை, வயதுக்கு வருதல், பருவம் அடைதல், நன்மையாதல், பெரிசாதல், பெரிய மனுவியாதல், பூப்பு எய்துதல் என்றெல்லாம் பெயர் சுட்டப்படுகிறது. பூப்பு எய்திய பெண்ணைத் தனியிடத்தில் வைப்பர். சடங்கு முடிந்ததும் உள்ளே அழைத்துக் கொள்வர். ஒன்பதாம் நாளுக்குமேல் குறிப்பிட்ட வசதியான ஒரு நாளில் மாலை வேளையில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும். பெற்றோர்கள் பருவம் எய்திய பெண்ணை முன்போல் வெளியில் அனுப்பமாட்டார்கள்; ஆடவருடன் பேச விடமாட்டார்கள்; கணவன் கையில் ஒப்படைக்கும் வரையும் கண்ணைபோல் காத்து வருவர். சில குடும்பங்களில், சிறைச்சாலைக் கைதிகளைப் போல வயதுக்கு வந்த பெண்களை உள்ளே அடைத்துப் பூட்டாமல் பூட்டி வைப்பதும் உண்டு. அந்தோ! இந்தக் கொடுமை இப்போது கொஞ்சங் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.


“சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை”

என்பது வள்ளுவனாரின் வாய்மொழி யன்றோ?

திருமணம்

இந்தப் பகுதியில் தமிழ்ப் பெருங்குடி மக்களுள் மாப்பிள்ளை வீட்டார்தாம் பெண்தேடுவது வழக்கம். பெண்வீட்டாராகச் சென்று மாப்பிள்ளை தேடும் வழக்கம் இல்லை. பெண்வீட்டார் தாமாகச் சென்று மாப்பிள்ளை தேடுவது இழிவாகக் கருதப்படுகிறது. உறவினர் குடும்பங்களுக்குள்ளுங்கூட மாப்பிள்ளை வீட்டார்தாம் முதலில் பெண் கேட்பர். எவ்வளவு நெருக்கமான உறவாயிருந்தாலும் எங்கள் பெண்ணை உங்கள் பிள்ளைக்குக் கட்டிக் கொள்ளுங்கள் என்று பெண் வீட்டாராகக் கேட்கமாட்டார்கள். முதலில் மாப்பிள்ளை வீட்டார் பெண் கேட்டாலும் உடனே பெண் வீட்டார் ஒப்புதல் கொடுத்துவிட மாட்டார்கள் பொய்யாகவாவது ஒரு ‘பிகுவு’ காட்டிப் பிறகே பெண் தருவதாக உடன் படுவார்கள். இந்த நிலைமை கால்நூற்றாண்டுக்கு முன்பு வரையுங்கூட இந்தப் பகுதியில் கட்டுக் குலையாமல் இருந்தது. இப்போதும் பலரிடத்தில் இருக்கிறது. ஆனால், செல்வராக உள்ள ஒரு சிலர் படித்த மாப்பிள்ளை தேடித் தாமாகப் பெண்கொடுக்கப் போகும் வழக்கம் இப்போது சில்லாண்டுகளாகத் தோன்றிவருகிறது.

மாப்பிள்ளைக்குப் பணமும் (வரதட்சணை) கொடுத்துப் பெண்ணையும் அளிக்கும் ‘கன்னிகாதான முறை’ இந்நாட்டு மக்களிடம் இல்லை. அதற்கு மாறாக பெண்ணுக்குப் பரியப் பணம் கொடுத்துக் கட்டிக் கொள்வதே இந்நாட்டு வழக்கம். வரதட்சினை கொடுக்கும் இனத்தார்களிடையே, மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் தரவேண்டும் - பத்தாயிரம் தரவேண்டும் என்று பேரம் நடப்பதுபோல், இங்கே பெண்ணுக்குப் பரியப் பணம் கொடுக்கும் இனத்தார்களுள் ஐயாயிரம் - பத்தாயிரம் என்ற பேச்சு அடிபடாது; இருநூறு - முந்நூறு - ஏறினால் ஐந்நூறு - இந்த அளவில்தான் பேச்சு நடக்கும். மாப்பிள்ளைக்கு ஐயாயிரம் பத்தாயிரம் கேட்பது பணக்காரர் ஆவதற்காக! ஆனால், பெண்ணுக்கு இருநூறு - முந்நூறு கேட்பது வெறுந்திருமணச் செலவிற்காகத்தான்! மற்றும், ‘முலைப்பால்கூலி’ என்னும் பெயரில் தாய்வீட்டார் பெண்ணுக்கென ஏதேனும் வாங்குவது ஒரு பெருமையாகக் கருதப்படுகிறது.

இந்நாட்டுப் பெருங்குடி மக்களுள்ளும் பெண்ணுக்குப் பரியப் பணம் கேட்கும் வழக்கம் இப்போது குறைந்து வருகிறது. முன்பெல்லாம் பரியம் (பரிசப்பணம்) எவ்வளவு கொடுத்தார்கள் என்று கேட்பது வழக்கம். இப்போது அவ்வாறு கேட்பதில்லை. பெரும் பணம் கொடுத்து மாப்பிள்ளை தேடும் பெருநோய் இன்று இம்மக்களிடத்தும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. பெண்ணுக்கோ ஆணுக்கோ பணம் கொடுக்கும் மாட்டுச் சந்தை பேரம் இப்போது அரச ஆணைக்கு அஞ்சி மறைமுகமாக நடப்பதாகத் தெரிகிறது. இந்நாட்டில் பெண் வீட்டார் எவ்வளவு பெருஞ் செல்வராயினும் திருமணம் மாப்பிள்ளை வீட்டில்தான் நடைபெறும். பெண் வீட்டில் திருமண்ம் நடைபெறுவது இருதரத்தார்க்கும் இழிவு எனக் கருதப்பட்டது. இப்போது இந்த முறையும் மாறி வருகிறது. மாப்பிள்ளை வீட்டார் சிலர், மாப்பிள்ளையைப் பெண் வீட்டிற்கு அழைத்துச் சென்று ‘கட்டிக் கொடுக்கத்’ தொடங்கி விட்டனர்; மாப்பிள்ளைகள் சிலர் பெண் வீட்டிற்குச் சென்று ‘வாழ்க்கைப்படத்’ தொடங்கிவிட்டனர்.

இப் பகுதியில் அம்மான் மக்கள் - அத்தை மக்களுக்குள் திருமணம் நடைபெறும். மணமகன் தன் தமக்கை (அக்காள்) மகளைக் கட்டிக்கொள்ளும் வழக்கமும் உண்டு; தங்கை மகளைக் கட்டுவதில்லை. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகளில் தாய்மாமன் (அம்மான்) மிகவும் இன்றியமையாதவர். தொடக்கத்திலிருந்து இறுதிவரை அம்மானைக் கேட்காமல் எதுவும் செய்யக்கூடாது. அம்மான் தன் மகனுக்குப் பெண் கேட்டால் கொடுத்தாகவேண்டும். அவர் கேட்கும் நிலையில் இல்லையென்றால்தான் வேறிடத்தில் பெண் கொடுக்கலாம் அம்மான் விருப்பப்படி நடக்காவிட்டால் அவர் மிஞ்சுவார்; பிறகு அவரைக் கெஞ்சவேண்டும். பரிய விழாவிலோ திருமண விழாவிலோ அம்மான்தான் வரிசை எடுத்து வைக்கவேண்டும். அன்பளிப்பிலும் அம்மானது அன்பளிப்புதான் முதலில் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறு முன்பு சர்வாதிகாரிகள் ஆக இருந்துவந்த அம்மான்கள் இப்போது ‘சனநாயகவாதிகள்’ ஆக மாற்றப்பட்டு வருகிறார்கள்; அந்தோ அளியர்!

முன்பு உறவினருக்குள் திருமணம் மிகுதியாக நடைபெற்று வந்தது. இப்போது வெளியாருக்குள் மிகுதியாக நடை பெறுகிறது. தலைச்சன் பெண்ணுக்கும் தலைச்சன் மாப்பிள்ளைக்கும் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படி நடந்தால் வளர்ச்சி இல்லையாம். கடையும் கடையும் கட்டினாலும் கடைத்தேறாதாம். கடையும் தலையும் கட்டினால் கடலாக வாழுமாம் அஃதாவது, மணமக்கள் இருவருள், யாராவது ஒருவர் கடைசிப் பிள்ளையாகவும், மற்றொருவர் தலைப் பிள்ளையாகவும் இருந்தால் குடும்பம் நன்கு செழிக்குமாம். பிள்ளையைவிடப் பெண்ணுக்கு ஒரீராண்டு வயது குறையாயிருந்தால் போதாது; ஐந்து அல்லது ஆறு ஆண்டு வயது வேறுபாடாவது இருக்கவேண்டும். ஒரீராண்டு வயது குறைவான பெண்ணைக் கட்டிவைத்தால், கிழவியைக் கட்டி வைத்துவிட்டதாகக் கூறுவார்கள். பெண்ணுக்கு இருபது வயது ஆகிவிட்டாலோ - பிள்ளைக்கு முப்பது வயது ஆகிவிட்டாலோ கிழவி கிழவன் என்று முன்பு கிண்டல் செய்தார்கள். இப்போது அப்படியில்லை. உண்மையாகவே கிழவன் - கிழவிகளுக்குள் திருமணம் நடைபெறுகிறது. பண்டைக் காலத்தில் கூட, தமிழ்ப் பெருங்குடி மக்களிடையே குழந்தைத் திருமணம் நடைபெற்றதில்லை:

திருமணம் தொடர்பாக மூன்றுவகை நிகழ்ச்சிகள் நடைபெறும். பெண் முடிவானதும் பிள்ளைவீட்டாரும் பெண்வீட்டாரும் ஊரார் ஒரு சிலரும் சேர்ந்து பெண் வீட்டில் ‘தாம்பூலம் மாற்றுதல்’ என்னும் நிகழ்ச்சி நடத்துவர். பெண் அமர்த்தியாயிற்று என்பதை அறிவிக்கும் முதல் விழா இது. பின்னர்ச் சின்னாட் கழித்து, உற்றார் உறவின் முறையார் ஊரார் பலரும் அறிய விரிவான முறையில் ‘பரியம் போடுதல்’ என்னும் நிகழ்ச்சி பெண் வீட்டில் நடைபெறும். நிச்சயதார்த்தம், திருமண உறுதி என்றெல்லாம் சொல்வது இந்த இரண்டாவது விழாவினைத்தான். இறுதியாக, மணமகன் இல்லத்தில் திருமணவிழா நடைபெறும்.

திருமணம் தை, சித்திரை, வைகாசி, ஆணி, ஆவணி ஆகிய ஐந்து திங்கள்களிலேயே நடைபெறும். தெலுங்கர் புரட்டாசியிலும் நடத்துவர். இப்போது எல்லா இனத்தவரிலுமே ஒரு சிலர் எல்லாத் திங்கள்களிலும் திருமணம் நடத்தத் தொடங்கிவிட்டனர். பழைமை விரும்பிகள் இதனை ஏற்றுக் கொள்வதில்லை. திருமண வீட்டார், ஊரார் - உறவினர்க்கு வெற்றிலை பாக்குத் தாம்பூலம் வைத்துத் திருமணத்திற்கு அழைப்பர். கொண்டான் கொடுத்தார்கட்குச் (சம்பந்திகட்கு) சிறப்புத் தாம்பூலம் வைக்க வேண்டும். இதற்குச் ‘சம்பந்தி தாம்பூலம்’ என்பது பெயர்.

திருமணப் பந்தல் போடுவதற்காக நல்ல நாள் பார்த்துக் ‘கால் நடுதல்’ என்னும் நிகழ்ச்சி நடத்துவர். திருமங்கலிகள் ஐவர் கூடிக் கால்நடுவர். பின்னர் வீட்டிலும் வெளியிலும் பந்தல் போடப்படும். பந்தல் முகப்பில் குலை உடைய வாழைமரங்கள், தென்னங்குலைகள், ஓலை - இலைக் கொடிகள் முதலிய மங்கலப் பொருள்கள் கட்டப்படும். தரையில் புதுமணல் பரப்பப்பெறும். திருமண முதல்நாள் மாலை, பெண்வீட்டார் பெண்ணை அழைத்து வந்து சேர்வர். ஊர்க் கோயிலிலோ, அல்லது பிள்ளை வீட்டாருக்கு வழக்கமாக ஆகிவந்த ஓரிடத்திலோ பெண்ணைத் தங்கச் செய்வர். பிள்ளை வீட்டார் வரிசையுடன் சென்று பெண்ணையும் பெண் வீட்டாரையும் வரவேற்பர். அப்போது நீர்மோர், பானகம் (வெல்லத் தண்ணிர்) முதலியன வழங்குதல் மரபு. பின்னர் மணப்பெண் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டுப் பிள்ளை வீட்டை அஃதாவது திருமண வீட்டை அடைவாள். பெண் முதல் முதலில் வீட்டு வாயிற்படியில் வலக்காலை வைத்து ஏற வேண்டும். அப்போது நாத்திமார்கள் (மாப்பிள்ளையுடன் பிறந்த பெண்கள்) பெண்ணின் வாயில் சர்க்கரை கொட்டுவர். வீட்டிற்குள் சென்றதும், பெண்ணையும் பிள்ளையையும் ஒருசேர வைத்துக் கொண்டு ‘தாலி படைத்தல்’ என்னும் நிகழ்ச்சி நடத்தப்பெறும்; அஃதாவது மாங்கலியத்தை இறையுருவத்தின் முன் வைத்து, வடை, சர்க்கரைப் பொங்கல் முதலியன செய்து படைப்பர். தாலி ஒவ்வொரு குடும்பத்திற்கு ஒவ்வொரு விதமாக இருக்கும்.

திருமணம் விடிவதற்கு முன் வைகறையிலோ அல்லது விடிந்தபின் முற்பகலிலோ குறிப்பிட்ட நல்ல நேரத்தில் நடைபெறும். நண்பகலிலோ, மாலையிலோ திருமணம் நடைபெறுவது இப் பகுதியில் வழக்கம் இல்லை. திருமணத்தில் பெண்ணுக்குப் பெண் தோழியும், பிள்ளைக்கு மாப்பிள்ளைத் தோழனும் துணையாக இருப்பர்; இந்தத் தோழன் - தோழியர், மைத்துன மைத்துனி முறையுடையவராயிருப்பர். தாலி கட்டும்போது கெட்டிமேளம் கொட்டப்பெறும்; மங்கல அரிசி போட்டு வாழ்த்தப்பெறும். தாலி கட்டியதும், அம்மான்கள், மாமிமார்கள், நாத்திமார்கள் ஆகிய பட்டாளங்களால் பெண்ணின் நெற்றியில் பல்வகைப் பட்டங்கள் கட்டப்பெறும். மணமக்கள் திருமண அரங்கைச் சுற்றி வரும்போது மணமகளின் உடன்பிறந்தாள் முன்னால் மங்கல விளக்கு ஏந்திச் செல்வாள். உற்றார் உறவினர் முதலியோர் மணமக்கட்கு அன்பளிப்பு வழங்குவர். அம்மான் அன்பளிப்பு முதலில் நடைபெற வேண்டும். பின்னர்க் கொண்டான் கொடுத்தான் சம்பந்திகளுள் முதல் சம்பந்தி, இரண்டாம் சம்பந்தி வாரியாக அன்பளிப்பு நடைபெறும். இந்த முறையில் தப்பித் தவறி ஏதேனும் மாறுதல் ஏற்பட்டுவிட்டால் திருமண அரங்கம் பெரிய போர்க்களமாக மாறிவிடும். கடைக்குட்டிப் பிள்ளையின் திருமணமாயின் விருந்தில் கடலை போடப்படும். மாலையில் ‘காப்புக் களைதல்’ என்னும் சடங்கு நடைபெறும். அப்போது மணமகளின் உடன் பிறந்தாள் மங்கல விளக்கு ஏந்துவாள்.

புது சம்பந்திகள் முதல்முதலாக வியாழக்கிழமையில் கை நனைக்க (விருந்துண்ண) மாட்டார்கள். ‘சம்பந்தங் கொண்டாடுதல்’ என்னும் சடங்கு நிகழ்த்திய பின்னரே ஒருவர் வீட்டில் இன்னொருவர் உணவு கொள்வர். திருமண நாளின் மாலையிலோ அல்லது மறுநாளோ பெண்வீட்டார் மணமக்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்று மருவூட்டுவர்; இதற்கு ‘மாப்பிள்ளை மருவுண்ணுதல்’ என்பது பெயர். பின்னர்ச் சின்னாட் கழித்துப் பிள்ளை வீட்டார் மணமக்களைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்து மருவூட்டுவர். இதற்குப் ‘பெண் மருவுண்ணுதல்’ என்பது பெயர். மணமக்களை அழைக்கும் போது நடக்கும் சடங்கிற்கு ‘அம்போகம் செய்தல்’ என்பது பெயர்.

மாப்பிள்ளை வீட்டில் பெண் மருவுண்டு அம்போகம் செய்தபின், பெண் வீட்டார் பெண்ணை மட்டும் தனியே தங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். புதன்கிழமையில் மட்டும் மாப்பிள்ளையை விட்டுப் பிரித்துப் பெண்ணைத் தனியே அழைத்துச் செல்லமாட்டார்கள். ‘புதன் கால் பிரியக்கூடாது’ என்பது நம்பிக்கை. இந்த அம்போகச் சடங்குகளைத் திருமணமான திங்களிலேயே (மாதத்திலேயே) நடத்திவிடுவர்; மறுதிங்கள் வரையும் இழுத்துக் கொண்டு போகமாட்டார்கள். ஏனெனில், ‘இரட்டிப்பு மாதத்தில் எதுவும் செய்யக்கூடாது’ என்பது கொள்கை. திங்கள் இறுதியில் திருமணம் நடந்தால், தள்ள முடியாமல் வேறு வழியின்றி இரட்டிப்பு மாதத்தில் அம்போகம் செய்வதும் உண்டு. பெண்வீட்டார் பெண்ணைத் தனியே அழைத்துச் சென்று சின்னாட்கள் வைத்திருந்த பின்னர் மாப்பிள்ளை வீட்டார் சென்று அழைத்து வருவர். அதிலிருந்து மணப் பெண் மாப்பிள்ளை வீட்டாரின் உரிமையாகிவிடுகிறாள்.

பெண் வீட்டார் முதல் ஒரீராண்டுக்குப் பொங்கலின் போதும் தீபாவளியின் போதும் வரிசை வைத்து மண மக்களைத் தம் வீட்டிற்கு அழைத்துச் செல்வர். இதற்குப் ‘பொங்கல் வரிசை’ - ‘தீபாவளி வரிசை’ என்று பெயராம். சிலர் ஆடித் திங்களில் ‘ஆடி வரிசை’ வைப்பதும் உண்டு. முதல் பிள்ளை பிறக்கும் வரையிலும் பெண்ணை ஆடித் திங்கள்களில் கணவன் வீட்டில் விட்டு வைக்கமாட்டார்கள். சிலர் மார்கழித் திங்கள்களிலும் விட்டு வைப்பதில்லை. ஆடியில் கரு ஏற்படின் சித்திரையிலும், மார்கழியில் கரு ஏற்படின் புரட்டாசியிலும் குழந்தை பிறக்கும்; ஆனால் சித்திரையிலும் புரட்டாசியிலும் தலைச்சன் குழந்தை பிறக்கக் கூடாது என்ற நம்பிக்கையிருக்கிறது; எனவே, ஆடியிலும் மார்கழியிலும் பெண்ணைப் பிள்ளை வீட்டில் பெரியவர்கள் விட்டு வைப்பதில்லை. ஆனால் சில குடும்பங்களில் பெரியவர்களுக்குத் தெரியாமல் ஆடியில் கரு ஏற்பட்டுவிடுகிறது; அதற்குப் பெரியவர்கள் என்ன செய்ய முடியும்!

ஆயிரமாயிரம் ஆண்டுகட்கு முன் இந்த நாட்டில் இப்போது உள்ள ‘புரோகிதத் திருமண முறை’ இல்லை. இஃது இடைக்காலத்தில் ஏற்பட்டது. இந்தக் காலத்தில் ஐயரை வைத்துச் செய்யும் புரோகிதத் திருமண முறை குறைந்து வருகிறது. ‘தமிழ்த் திருமணம்’ என்ற பெயரில், ஐயரும் புரோகித வடமொழி மந்திரமும் இன்றித் தமிழிலேயே நிகழ்ச்சிகள் நடத்தப் பெற்றுத் திருமணம் நிறைவேறுகிறது. இருப்பினும், இன்றும் (1967) புரோகிதத் திருமணமும் நடைபெற்று வருகிறது.

மனைவி இறந்துவிடின் கணவன் எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம் என்ற உரிமை தொன்று தொட்டு இருந்துவருகிறது. இஃதன்றி, மனைவியிருக்கவும் மேலும் திருமணம் செய்து கொள்ளும் உரிமையும் ஆடவர்க்கு இருந்து வந்தது; இப்போது இந்த உரிமை அரசு ஆணையால் தடுக்கப்பட்டுள்ளது. கணவன் இறந்தால் இன்னொருவனை மணந்து கொள்ளும் உரிமை பெரும்பாலும் பெண்களுக்கு இருந்ததில்லை. இப்போது சீர்திருத்தம் மறுமலர்ச்சி என்னும் பெயரால் மறுமணம் என்னும் விதவா விவாகம் சமூகத்தில் நடைபெறுகிறது. ஆனால், நெடுநாளாய்த் திருமுனைப்பாடி நாட்டில், கணவன் இறந்தால் பெண் மறுமணம் செய்துகொள்ளும் வழக்கம் சில இனத்தவரிடையே உள்ளது. இந்தப் பெண் ‘கட்டு பெண்’ என்று சொல்லப்படுவாள். இத்திருமணம் வீட்டோடு சுருக்கமாக நடைபெறும்; இதற்கு ‘நடு வீட்டுத் தாலிகட்டுதல்’ என்று பெயராம். ஆனால், கணவன் இருக்கும்போது மணவிலக்கு என்பது கிடையாது.

காதல் மணம் பண்டைக் காலத்தில் நடைபெற்றதாக இலக்கியங்களால் அறியப்படுகிறது. ஆனால், இடைக்காலத்தில் பெற்றோர் அறியாத காதல் மணம் களவொழுக்கமாகவே ஏன் - கற்புகெட்ட செயலாகவே கருதப்பட்டது; எல்லாரும் அதனை ஏற்றுக் கொள்வதில்லை. பெற்றோரால் மணமக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடைபெறும் திருமணமே உயர்ந்த திருமணமாகக் கருதப்பட்டது. ஏற்ற மணமக்களைத் தேர்ந்தெடுக்கும் திறமை பெரியோர்க்கே இருப்பதாக நம்பப்பட்டது. கலப்பு மணமும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனால், இப்போது காதல் மணமும் கலப்பு மணமும் தாராளமாகத் தலைகாட்டுகின்றன.

இறப்பு

எப்பேர்ப்பட்டவர்களுடைய வரலாற்றைப் படித்தாலும், இறுதியில் இறந்து போனதாகவே வரலாறு முடிகிறது. இதற்கு வேறு வழியில்லை போலும்! எந்த ஊருக்குச் சென்றாலும் இடுகாடுகளும் சுடுகாடுகளும் காணப்படுகின்றன. எவர் அழிந்தாலும் - எது அழிந்தாலும் இவற்றிற்கு அழிவேயில்லை போலும் பிணங்களை இடும் (புதைக்கும்) காடு இடுகாடு; சுடும் (எரிக்கும்) காடு சுடுகாடு. இந்த இடுகாடு - சுடுகாடுகள் ஆறு உள்ள ஊர்களில் ஆற்றங்கரையிலும், மற்ற ஊர்களில் ஊர் கடந்த எல்லையில் ஓர் ஒதுக்கிடத்திலும் உள்ளன.

திருமுனைப்பாடி நாட்டில் பெரும்பாலான மக்கள் பிணங்களைச் சுடவே செய்கின்றனர். கழுத்தில் இலிங்கம் கட்டிக் கொண்டிருக்கும் இலிங்கதாரிகள் எனப்படும் வீர சைவர்கள் பிணத்தைப் புதைக்கின்றனர். இவர்கள் அமர்ந்த நிலையிலேயே புதைக்கின்றனர். சுடுபவர்கள் சுட்ட மறுநாளே பால் தெளிக்கும் சடங்கு நடத்துகின்றனர். இடுபவர்கள் (புதைப்பவர்கள்) மூன்றாம் நாள் அஃதாவது புதைத்த மறுநாளுக்கு மறுநாள் ‘பால் தெளி’ நடத்துகின்றனர்; இதற்கு ‘மூன்றாங் கிரியை’ என்று பெயர் சொல்லப்படுகிறது. எட்டாம் நாள் துக்கம் கொண்டாடும் நிகழ்ச்சியொன்று நடைபெறும்; இதில் உறவினர்கள் உணவுப் பொருள்கள் கொண்டு வந்து வைத்துப் படைப்பார்கள்; இதற்கு ‘எட்டாம் துக்கம்’ என்பது பெயர். சுடுபவர்கள் பதினாறாம் நாள் இறுதிச்சடங்கு நடத்துவார்கள், இதற்குப் பதினாறாம் கிரியை, காரியம், கருமாதி, கல்லெடுப்பு என்றெல்லாம் பெயர் கூறுகின்றனர். இந்த இறுதிச் சடங்கு, வழக்கமாக இதற்கென ஊரில் உள்ள ஒரு தோப்பிலோ அல்லது மண்டபத்திலோ நடைபெறும். அங்கே, இறந்தவர் சார்பில் கல்நட்டுச் சடங்கு செய்வர். இதனால்தான் இதற்குக் ‘கல்லெடுப்பு’ என்ற பெயர் வழங்கப்படுகிறது. முற்காலத்தில் போரில் இறந்த மறவர்கட்குக் கல்நடுவது வழக்கம்; இது ‘நடுகல்’ - ‘வீரக்கல்’ என்று சொல்லப்படும். இந்தப் பழக்கம் போரில் இறவாதவர்களுக்காவும் பின்னர் ஏற்பட்டு விட்டது. அதுதான் இன்று ‘கல்லெடுப்பு’ என்னும் பெயரில் நடைபெறுகிறது.

புதைப்பவர்கள் பதினோராம் நாள் வீட்டிலேயே சடங்கு நடத்துகின்றனர். இதற்குப் ‘பதினோராம் கிரியை’, ‘மோட்ச தீபாராதனை’ என்றெல்லாம் பெயர் சொல்வர், இருவகையினருமே இறுதி நாளுக்கு முன்னாள் இரவு ‘நடப்பு’ என்னும் ஒருவகைச் சடங்கு நடத்துவர், இரவு முழுதும் விட்டு விட்டு சாமத்திற்குச் சாமம் செத்த இடத்தில் படைத்துப் பெண்கள் அழுவார்கள். கணவன் இறந்திருந்தால் மனைவிக்குத் ‘தாலி வாங்குதல்’ என்னும் சடங்கு நிகழ்த்துவர். அஃதாவது, அவளிடமிருந்து தாலியை அகற்றி விடுவர். அது முதற்கொண்டு அவள் பொட்டு, பூ, மஞ்சள் முதலிய மங்கலப் பொருள்களை ஏற்றுக் கொள்ளமாட்டாள். அவளுக்குக் கைம்பெண், விதவை, அமங்கலி என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்படும் அந்தோ!

செத்த பிணத்தைக் குளிப்பாட்டிக் கோடி போர்த்தி எடுத்துச் செல்வர். பெண்கள் இறந்தால் தாய் வீட்டார் கோடி போர்த்துவர். செத்த பெண்ணின் கைகளில் வெற்றிலை பாக்கு வைத்து அவற்றைக் கணவன் அவளிடமிருந்து வாங்கிக் கொள்வது போன்ற பொருளில் எடுத்துக் கொள்ளச் செய்வர். கணவன் அடுத்த திருமணம் செய்து கொள்வதற்கு வழிவகுத்துக் கொடுத்ததாக இதற்குப் பொருளாம். பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், கணவன் தம்பியாகிய கொழுந்தன், பிணம் எடுக்கும்போது அண்ணிக்குக் கோடி போடுவான். தாலி வாங்கும்போது தாய் வீட்டார், பெண்ணிற்குக் கோடி போடுவர் கோடி போடுதல் என்றால் கழுத்தில் கோடிப் புடவை போடுதலாம். தாயோ, தந்தையோ இறந்தால், இறுதிச் சடங்கின் போது சம்பந்திமார்கள் பிள்ளைகட்குக் கோடித் துணிகள் கொண்டுவந்து கொடுத்துத் தலையில் பாகையாகக் கட்டிக் கொள்ளச் செய்வர். இதற்குத் ‘தலை கட்டுதல்’ என்று பெயராம். இடுப்பில் கட்டிக் கொள்வதற்கும் கோடு கொடுப்பர். தலைகட்டிய மறுநாள் சாவு வீட்டாரும் சம்பந்திமார்களும் சேர்ந்து கொண்டு எண்ணெய் தேய்த்துத் தலை முழுகிச் சிறப்புணவு கொள்வர்; இதற்குக் கசப்புத் தலை முழுக்கு என்று பெயராம். செத்த முப்பதாம் நாளிலும் ஒருவகைச் சடங்கு நடைபெறுவதுண்டு; இதற்கு முப்பதாங்கிரியை என்பது பெயர். சாவுத் தொடர்பான ஒவ்வொரு நிகழ்ச்சியின் போதும் செத்த இடத்தில் செத்தவரின் துணிமணிகளை வைத்தும், உணவுப் பொருள்கள் வைத்தும் படைத்து, பெண்கள் குழுக் குழுவாகக் கட்டிக் கொண்டும் மாரடித்துக் கொண்டும் ஒப்பாரிப் பாட்டுப் பாடி ஓயாமல் அழுவார்கள்.

பெண்கள் வெள்ளிக்கிழமையில் இறந்தாலும் அல்லது வெள்ளிக்கிழமையில் பிணம் எடுத்துக் கொண்டு போனாலும் அப்பெண்களுடன் திருமகளும் (செல்வமும்) போய் விடுவதாகச் சொல்லி மக்கள் வருந்துவர். அவிட்டநாளில் (நட்சத்திரத்தில்) பிணம் எடுக்கமாட்டார்கள்; தள்ள முடியாமல் அவிட்டத்தில் எடுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டால், பிணம் கிடந்த இடத்திற்கு நேர் மேலே வீட்டுக் கூரையைப் பிரித்துப் போட்டு விட்டுப் பிறகே எடுத்துச் செல்வர். அவிட்டத்தில் பிணம் எடுத்தால் ஆவி இங்கேயே சுற்றிக் கொண்டிருக்குமாம்; மேல் கூரையைப் பிரித்துவிட்டால் ஆவி அந்தக் கூரை வெளி வழியாகப் போய்விடுமாம். இப்படியொரு நம்பிக்கை. மற்றும், பிணத்தை வீட்டிற்குள்ளிருந்து மூன்று வாயிற்படிகள் தாண்டி வெளியில் எடுத்துக் கொண்டு வரக்கூடாதாம், திருமுனைப்பாடி நாட்டு வீடுகளிலோ தெருநடைப் பகுதியிலேயே இரண்டு வாயிற்படிகள் இருக்கும். அதனால், நோயாளி அறையில் படுத்திருந்தால் உயிர் போகும் தறுவாயில் அறையை விட்டு வெளியே எடுத்து வந்து தாழ்வாரத்தில் கிடத்தி விடுவர். அறையிலேயே இறந்துவிடின் அறை வாயிற்படியையும் சேர்த்து மூன்று வாயிற்படிகள் ஆகிவிடும் அல்லவா? அதனால் அறைக்கு வெளியில் எடுத்துவந்து விடுவர். பிணத்தை எமகண்டம், குளிகம் ஆகிய காலங்களில் சுடலைக்கு எடுத்துச் செல்லமாட்டார்கள். இராகு காலம் இதற்குக் கணக்கில்லையாம்.

பெரியவர்கள் இறந்துவிடின், பிணத்தின் முன்னே தேங்காய் பழம் வைத்துச் சூடம் கொளுத்திப் படைத்து எல்லாரும் கீழே விழுந்து வணங்குவர். இதற்காக, சாவது உறுதி என்று தெரியத் தொடங்கியதுமே தேங்காய் - பழம் - சூடம் ஆயத்தம் செய்யத் தொடங்கிவிடுவர். சிலர் தம் சாவு நெருங்கிக் கொண்டிருக்கும் போதே, எதிரில் உள்ள குடும்பத்தார்களை நோக்கி, “தேங்காய் பழம் - சூடம் எல்லாம் ஆயத்தமாய் வைத்திருக்கிறீர்களா?” என்று கேட்டுக் கொண்டே சாவதும் உண்டு. ஆகா! சாகும்போதும் தம் குடும்பத்தார்க்கு அறிவுரை கூறி உதவி ஒத்துழைப்புச் செய்துகொண்டே சாகும் குடும்பச் சமுதாய அமைப்பை என்னென்று கூறி வியந்து பாராட்டுவது!

சிறு குழந்தைகள் இறந்தால் எல்லா இனத்தவருமே எரிக்காமல் புதைக்கின்றனர். ஆனால், தலைச்சன் குழந்தை இறந்துவிடின் எரித்துவிடுவர். அதைப் புதைத்தால், மந்திரவாதிகளும் சூனியக்காரரும் தோண்டி எடுத்துத் தம் மாய மந்திரச் சூனிய வேலைக்குப் பயன்படுத்திக் கொள்வராம். அப்படி அவர்கள் செய்துவிடின், பிறகு பெற்றோர்கட்கு அடுத்த குழந்தைகள் பிறக்கமாட்டாவாம். தள்ளமுடியாமல் தலைச்சன் குழந்தையைப் புதைக்க வேண்டிய கட்டாய நெருக்கடிச் சூழ்நிலை ஏற்படின், குழந்தையின் தலைமயிரிலும் நகங்களிலும் ஒரு சிறிது வெட்டி எடுத்துக் கொண்டே புதைப்பர். இவ்வாறு செய்துவிடின், பிறகு மந்திரவாதிகள் தோண்டினாலும் ஒன்றும் கைகூடாதாம் (பலிக்காதாம்).

சனிக்கிழமையில் ஒருவர் இறந்துவிடின், அடுத்த சனிக்குள் ஊரில் இன்னொருவர் இறந்து விடுவார் என்ற நம்பிக்கை உள்ளது; ‘சனிப் பிணம் துணை தேடும்’ என்பது முதுமொழி.

கெ.28 வியாழக்கிழமையில் ஒருவர் இறந்துவிடின், அடுத்த வியாழனுக்குள் ஊரில் இன்னும் இருவர் இறந்து விடுவர் என்ற நம்பிக்கையும் உண்டு. ‘தங்கு வியாழன் தனியோடு மூன்று’ என்பது முதுமொழி.

செத்தவர்களைத் தெய்வமாக மதித்து ஆண்டுதோறும் செத்த நாளில் நினைவு விழா (திவசம்) கொண்டாடுவது மரபு. கணவன் இருக்க மனைவி சுமங்கலி இறந்துவிடின், அவளுக்குப் ‘பூவாடைக்காரி’ எனப் பெயர் இட்டு ஆண்டுதோறும் தைத் திங்கள் இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கலில் புதுப் புடவை வைத்துப் படைத்து வழிபாடு செய்கின்றனர். செத்தவர்கள் எல்லாருமே தெய்வந்தான்! ‘செத்துத் தெய்வமாகப் போய்விட்டார்’ என்பது இந்தப் பக்கத்து வட்டார வழக்கு.

இந்தப் பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன், செத்தவர்களைக் கல்லால் கட்டிய சவக் குழிகளிலும், மண்பாண்டத் தாழிகளிலும் வைத்துப் புதைத்ததாகத் தெரிகிறது. இத்தகைய சவக்குழிகளும் முதுமக்கள் தாழிகளும் திருமுனைப்பாடி நாட்டில் சில இடங்களில் கிடைத்து வருகின்றன.

உணவு

இந்தப் பகுதியில் நெல், கம்பு, கேழ்வரகு இவற்றாலான உணவுகளையே பெரும்பாலும் மக்கள் உண்கின்றனர். வரகு, தினை, சோளம் ஆகியவற்றை ஒரு சிலரே ஒரு சில போதே பயன்படுத்துகின்றனர் - இது மிக மிகக் குறைவு. கால் நூற்றாண்டுக்கு முன்வரையும் இருந்த உணவு முறை வருமாறு:-

செல்வர்கள் பகல், இரவு இருவேளைகளிலும் நெல்லரிசிச் சோறு உண்பர்; காலையிலும் மாலையிலும் சிற்றுண்டி அருந்துவர். கற்றவர்களும் அரசு அலுவலாளர்களுங்கூட இப்படித்தான். இவர்கள் நண்பகலில்தான் மிடுக்கான உணவு உண்பர்; இரவு உணவு எளிமையாய் இருக்கும். ஏழையரும் தொழிலாளிகளும் கம்பு, கேழ்வரகு இவற்றாலான கூழ் குடிப்பர்; இரவில் மட்டுமே நெல்லரிசிச் சோறு உண்பர். செல்வர் சிலரும் பகலில் கூழும் இரவில் சோறும் உண்பர். ஏழையர் சிலர் இரு வேளைகளிலும் கூழ் குடிப்பதுண்டு. சிறுவர் காலையில் பழஞ்சோறு (பழையது) உண்பர்.

பகலில் கூழ் குடிப்பவர்களும் அமாவாசையில் மட்டும் பகலில் சோறு ஆக்கிப் படைத்து உண்பர். ‘அமாவாசை பருக்கை அன்றாடம் கிடைக்குமா?’ என்னும் பழமொழி எழுந்தது இதனால்தான். ஒரு சிலர் கிருத்திகை (கார்த்திகை) நாளிலும் பகலில் சோறு ஆக்கிப் படைத்து உண்பர். இப்போது சிறுவர்கள் பேதி மருந்து உட்கொள்ளப் பின் வாங்குகின்றனரே - முன்பு பேதி மருந்து உட்கொள்வதென்றால் மகிழ்ச்சியாம்; ஏனெனில், பேதிக்கை மருந்து உட்கொண்டால் பகலில் கூழ் கிடைக்காமல் சோறு கிடைக்குமாம்.

சோறு உண்பவர்கள் வெறு நாட்களில், கீரை, ஒரு குழம்பு, இரசம், மோர் இவற்றுள் ஒன்றிரண்டைச் சோற்றுடன் சேர்த்துக் கொள்வர். கிருத்திகை அமாவாசை போன்ற சிறப்பு நாட்களில், ஒரு கீரை அல்லது ஒரு கூட்டு அல்லது இரண்டும், ஒரு பொரியல் அல்லது ஒரு வறுவல் அல்லது இரண்டும், ஒரு குழம்பும், ஓர் இரசமும் மோரும் சோற்றுடன் சேர்த்து உண்கின்றனர். சிறப்பு நாட்களில் இவற்றுடன் சர்க்கரைப் பொங்கல், வடை, அப்பளம், பாயசம் முதலியனவும் சேர்த்துக் கொள்வர். கூட்டு ‘கூட்டுக்கறி’ என்றும், பயறு இடாத குழம்பு ‘குழம்பு’ என்றும், பயறு இட்ட சாம்பார் ‘பருப்புக் குழம்பு’ என்றும் இங்கே அழைக்கப்படுகின்றன. இரசம் என்பது முன் காலத்தில் ‘மிளகுத் தண்ணீர்’ என்று அழைக்கப்பட்டது; இப்பெயர் இன்று மொளத் தண்ணி’ எனக் கொச்சையாகக் கூறப்படுகிறது.

இப்போது கூழ் குடிப்பவர் தொகை குறைவு. ஏழைகளும் தொழிலாளிகளுங்கூட இருவேளைகளிலும் சோறு உண்ணவும், காலையும் மாலையும் சிற்றுண்டியும் தேநீரும் உட்கொள்ளவும் தொடங்கிவிட்டனர். நகர்ப் புறத்தில் இந்த நிலையே இன்று உள்ளது. நாட்டுப் புறங்களில் மட்டும் சிலரிடையே கூழ் இன்றும் நடமாடுகிறது.

இப்பகுதியிலுள்ளவர்களுள் பெரும்பாலானவர் புலால் புசிப்பவர்களே வேளாளர், இலிங்கதாரிகள், ரெட்டியார், சேடர் போன்ற சில இனத்தவர்கள் புலால் உண்ணுவதில்லை; இந்தக் காலத்தில் இவர்களுள்ளும் சிலர் உண்கின்றனர். எந்தக் காலத்திலுமே எல்லா இனங்களிலுமே, வழிவழியாகப் புலால் உண்ணாத குடும்பங்கள் ஒரு சில இருந்து வரத்தான் செய்கின்றன.

உடை

இப்பகுதியில் கால் நூற்றாண்டு முன்பு வரையும் உடை முறைகள் வருமாறு:

பெண்கள் எங்கும் உள்ளவாறு புடைவையும் கச்சு என்னும் இரவிக்கையும் உடுப்பர். ஆண்கள் கீழேவேட்டி உடுத்து மேலே துண்டு போர்த்திக் கொள்வர். கஞ்சுகம் எனப்படும் சட்டை மேலே போட்டுக் கொள்வதில்லை. சிறப்பு நாட்களிலும் குளிர்காலத்திலும் மட்டுமே சட்டை அணிவர்; மற்ற நாட்களில் சட்டையைச் சட்டை செய்யார். ஒரு சிலர் எந்த நாளிலுமே சட்டை அணியாமல், மேலே துண்டு மட்டும் போர்த்திக் கொள்வர். மேலே சட்டை போட்டுக் கொள்பவரும் சட்டைக்கு மேல் கழுத்தில் துண்டும் போட்டுக் கொள்வர். சட்டைக்கு மேல் துண்டு போடாமல் சட்டை மட்டும் போட்டுக் கொண்டு வெளியே செல்வது மிகவும் இழிவாக மதிக்கப்படும். மேலே சட்டையில்லாதிருப்பது இழிவன்று; துண்டு இல்லாமலிருப்பதே இழிவு. சிலர் கறுப்புத் துணியோ கறுப்புக் கோடு இட்ட துணியோ உடுத்தார்.

இளைஞரும் நடுத்தர வயதினரும் கீழே துணியைச் சுற்றினாற்போல் உடுப்பர். பெரியவர்கள் கீழே துணியைக் ‘கீழ்ப் பாய்ச்சு’ கட்டிக் கொண்டு, தலையில் ‘மண்டாச்சி’ அல்லது ‘முண்டாசு’ என்னும் தலைப்பாகை கட்டிக் கொள்வர். பெரியவர்கள் வெற்று நாட்களில் எப்படியிருப்பினும், சிறப்பு நாட்களில் கீழ்ப் பாய்ச்சும் தலைப்பாகையும் கட்டாயம் கொள்வர். மணமகனும் தலையில் பாகை அணிந்து கொள்வான். பெரியவர்கள் சிறப்பு நாட்களில் கீழே துணி உடுத்திருப்பதல்லாமல், அத் துணிக்கு மேல் இடுப்பைச் சுற்றிக் கச்சு போல் ஒரு துண்டும் கட்டிக் கொள்வர்; அதே போல் மேலே போர்த்திய துணிக்கு மேல் ஒரு நீளத் துண்டு போட்டுத் தொங்க விட்டிருப்பர். சிறப்பு நாட்களில் கீழும் மேலும் பட்டும் சரிகைத் துணியும் உடுப்பர். இவையெல்லாம் பழைய முறைகள். இன்று எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.

உறைவிடம்

நகர்ப் புறங்களில் கல்வீடுகள் இருக்கும். கல்வீடுகளிலும் ஓட்டு வீடுகளே மிகுதி, மாடி வீடுகள் குறைவு. சிற்றுார்களில் கூரை வீடுகளே மிகுதி, கல்விடுகள் குறைவு; கல்வீட்டிலும் மாடி வீடுகள் மிக மிகக் குறைவு. கூறை வீடுகள் தென்னங்கீற்று, பனையோலை மட்டை, வைக்கோல், கம்பந்தட்டு, சோளத்தட்டு, கருப்பஞ் சோலை, விழல் முதலியவற்றால் வேயப்பட்டிருக்கும். கூரை வீடுகளில் ஒன்று அல்லது இரண்டு அறைகளைத் தவிர வேறொன்றும் இரா. ஒரு சில கூரை வீடுகளில் ஓர் அறைகூட இராது. ஒரு சில கூரை வீடுகள் கல்வீடு மாதிரி இருக்கும் - அஃதாவது, மேலே மட்டும் ஓடு இல்லாமல் கூரை இருக்கும்; கீழே கல்வீட்டில் உள்ள எல்லா வசதிகளும் இருக்கும்; இத்தகைய வீடுகட்குத் ‘தூல பத்தி வீடு’ என்பது பெயர்.

உலகில் உரைவிடங்களின் அமைப்பில் இடத்திற்கு இடம், வேறுபாடு இருக்கக் காண்கிறோம். தமிழகத்திற்குள்ளேயே இடத்திற்கு இடம் வேறுபாடு உள்ளது. எனவே, திருமுனை பாடி நாட்டிலுள்ள கல் வீட்டின் அமைப்பு வருமாறு:-

வீட்டின் முகப்பில் வீடு கொண்ட அகலத்திற்கு உயரமான குறடு இருக்கும். தெருவிலிருந்து குறட்டிற்குப் படி இருக்கும். குறடு ஏறிக் கடந்ததும் வாயிற்படிக்கு முன்னால் இரு பக்கங்களிலும் திண்ணை இருக்கும். வாயிற்படிக்குள் நுழைந்ததும் நடை இருக்கும்; நடை என்பது, இரண்டு பக்கம் வழி கொண்ட ஓர் அறை போன்ற அமைப்பு உடையது. நடையைக் கடந்து உள்ளே சென்றதும் நான்கு பக்கங்களிலும் தாழ்வாரம் இருக்கும். நான்கு தாழ்வாரங்கட்கும் நடுவில் திறந்த வெளிவாசல் இருக்கும். சிலர் வாசலைத் திறந்தபடி விடாமல் மேலே கூண்டுபோல் கட்டி மூடிவிடுவதும் உண்டு; இதற்குக் ‘கல்யாணக் கூண்டு’ என்று பெயர் சொல்லப்படுகிறது. நான்கு தாழ்வாரங்களுள் ஒரு தாழ்வாரத்தை அடுத்துக் கூடம் இருக்கும். கூடம் என்பது தாழ்வாரத்தினும் ஓரளவு அகலமாகவும் உயரமாகவும் இருக்கும் அமைப்பாகும். தெற்கு நோக்கிய வீட்டிலும் வடக்கு நோக்கிய வீட்டிலும் மேற்குப் புறத் தாழ்வாரத்திற்கு மேற்பகுதியில் கூடம் இருக்கும். கிழக்கு நோக்கிய வீட்டிலும் மேற்கு நோக்கிய வீட்டிலும் வடபுறத் தாழ்வாரத்தின் வடபகுதியில் கூடம் இருக்கும்.

சில வீடுகளில் கூடம் இருக்காது; நான்கு தாழ்வாரங்கள் மட்டுமே இருக்கும். சிலவற்றில் கூடமும் இன்றி மூன்று தாழ்வாரங்கள் மட்டுமே இருக்கும். சிலவற்றில் மூன்று தாழ்வாரங்களும் கூடமும் இருக்கும். மூன்று தாழ்வாரங்கள் உள்ள வீட்டில் ஒரு நடையும் ஓர் அறையும், நான்கு தாழ்வாரங்கள் உள்ள வீட்டில் ஒரு நடையும் இரண்டு அறைகளும், கூடமும் உள்ள வீட்டில் இவற்றுடன் கூடுதலாக ஓர் அறையும் தெருப் பக்கத்தில் இருக்கும். அறையில் பலகணி உண்டு. பல வீடுகள் முன் கட்டோடு இருக்கும்; நகர வீடுகளில் பின்கட்டும் இருக்கும். வசதியானவர் வீடுகளில் மூன்று கட்டுகள் இருப்பதும் உண்டு. மாடி வீடுகளில் சிலவற்றில் இரண்டு அடுக்குகள் இருக்கும். மூன்று அடுக்குகளைக் காண்பது அரிது. ஒவ்வொரு வீட்டின் பின்னாலும் தோட்டம் இருக்கும். தோட்டத்தில் கிணறும் மரஞ்செடி கொடிகளும் இருக்கும்.

வடக்குப் பார்த்த வீட்டினும் தெற்குப் பார்த்த வீடும், மேற்குப் பார்த்த வீட்டினும் கிழக்குப் பார்த்த வீடும் வசதியானவையாகக் கருதப்படுகின்றன. தெருவாயிற்படிக்கு நேரே தோட்டம் வரையும் தடுப்புச் சுவர் இன்றித் திறப்பு வாயில்கள் இருக்கும். அவ்வாறு தடுப்புச் சுவர் இருந்தால் அதில் பலகணி (சன்னல்) இருக்கும். வீட்டுத் தெரு வாயிலுக்கு நேரே சந்துத் தெரு இருக்கக்கூடாது; அப்படியிருப்பதற்குச் ‘சந்து குத்து’ என்பது பெயர். சந்து குத்து இருந்தால் வீடு உருப்படாதாம். வீட்டிற்கு எதிரில் இன்னொரு வீடு இருக்கவேண்டுமே யொழியக் காலிமனை இருக்கக்கூடாதாம்; காலிமனை இருந்தாலும் வீட்டிற்கு வளர்ச்சியில்லையாம். வீட்டின் முன் புறத்தில் முருங்கை மரமும் பின்புறத்தில் புளிய மரமும் இருக்கக் கூடாதாம். ‘முன் முருங்கையும் பின் புளியனும் உதவா’ என்பது முதுமொழி. வீட்டில் கருவேப்பிலை மரம் போன்ற சிலவகை மரங்களும் இருக்கக்கூடாதாம்.

தெருவாயிற் படியில் இரட்டைக் கதவுகள் இருப்பின், ஒரே நேரத்தில் இரண்டு கதவுகளையும் திறந்து வைக்கமாட்டார்கள். ஒரு கதவுதான் திறந்தபடி இருக்கும். சாவு வீட்டில்தான் இரண்டு கதவுகளும் திருந்திருப்பது வழக்கம். கதவிலுள்ள தாழ்ப்பாளை யாரும் ஆட்டக் கூடாது; ஆட்டினால் சண்டை வருமாம்.

பாகம் பிரிக்கும்போது மூத்த பிள்ளைக்குக் கூடத்துப் பக்கம் கொடுக்கப்படும். ஒரே வீட்டில் குடியிருப்பினும் அல்லது தனித்தனி வீடுகளில் குடியிருப்பினும் மூத்தபிள்ளை மேற்குப் பக்கத்திலும் இளைய பிள்ளை கிழக்குப் பக்கத்திலும் இருக்கவேண்டுமெனச் சொல்லப்படுகிறது.

இந்தக் காலத்தில் வீடுகளின் அமைப்பில் எத்தனையோ மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன என்று சொல்லத் தேவையில்லை.

பெருநாட்கள்

பண்டிகை என்பது ‘பெருநாள்’ அல்லது ‘பெரிய நாள்’ என்னும் பெயரால் இங்கே மக்களால் குறிப்பிடப்படுகிறது. ‘நல்ல நாள் - பெரிய நாளிலே இப்படிச் செய்யலாமா?’ நல்ல நாளும் பெரிய நாளுமாய்ப் பார்த்தா இப்படிச் செய்கிறாய்? என்பன பேச்சு வழக்குகள். இப்பகுதியில் குறிப்பிடத்தக்க முறையில் ஆறு பெருநாட்கள் (பண்டிகைகள்) கொண்டாடப் படுகின்றன; அவை; சித்திரைத் திங்களில் தமிழ்ப் புத்தாண்டுப் பெருநாள், ஆவணித் திங்களில் பிள்ளையார் சதுர்த்திப் பெருநாள், புரட்டாசித் திங்களில் ஆயுதபூசை என்னும் கலைமகள் விழாப் பெருநாள், ஐப்பசித் திங்களில் தீபாவளிப் பெருநாள், கார்த்திகைத் திங்களில் கார்த்திகைப் பெருநாள், தைத்திங்களில் பொங்கல் பெருநாள் ஆகியவையாகும். இவையாறும் தமிழக முழுதும் கொண்டாடப்படினும், இப்பகுதியில் உள்ள தமிழ் மக்களால் கொண்டாடப்பெறும் முறையில் சிறு வேறுபாடும் இருக்கலாம்.

தமிழ்ப் புத்தாண்டு

இது சித்திரைத் திங்கள் முதல் நாளில் கொண்டாடப் பெறும். வைகறையில் எழுந்து இல்ல முழுதும் தூய்மை செய்து, மஞ்சள் குங்குமத்தாலும் மாவிலையும் வேப்பிலையும் கலந்த புதிய இலைக் கொடியாலும் (தோரணத்தாலும்) வீட்டு வாயிற்படிகள் அனைத்தையும் அணி செய்வர். நண்பகலில் பல்வகைக் காய்கறி உணவுகளையும் சிற்றுண்டி வகைகளையும் இறைவனுக்குப் படைத்து உண்பர். அறுசுவை உண்டியும் இருக்கும். புத்தாண்டு நாளில் மகிழ்ச்சியுடன் இருந்தால் ஆண்டு முழுதும் மகிழ்ச்சி நிலவுமாம். இந்த நாளில் துன்புற்றால் ஆண்டு முழுதும் துன்பந்தானாம். அதனால் இந்த நாளில் ஒருவர்க்கொருவர் சண்டையிட்டுக் கொள்ளார்; சிறுவர்களை வைதலோ அடித்தலோ செய்யார். எதுவாயிருப்பினும் ‘நாளைக்குப் பார்த்துக் கொள்கிறேன்’ என்பர். ‘ஒருவர் பிறந்த கிழமையில் புத்தாண்டு பிறந்தால், அவருக்கு அந்த ஆண்டு நன்றாயிராது’ என்ற நம்பிக்கை இப்பகுதியில் இருக்கிறது.

பிள்ளையார் சதுர்த்தி

ஆவணி வளர்பிறைச் சதுர்த்தியில் வழக்கமான துப்புரவுகளுடன் இது தொடங்கப்பெறும். களிமண் பிள்ளையார் செய்யப்படுவார்; அல்லது விலைக்கு வாங்கி வரப்படுவார். பிள்ளைகள் தும்பைப் பூ வில்வம், வன்னி இலை, நாவல்பழம், விளாம்பழம், கொய்யாப்பழம், கம்பங்கதிர், சோளக்கதிர் முதலியன கொய்து வருவர்; இலவசமாகக் கிடைக்காத இடங்களில் விலைக்கு வாங்கப்படும். பிள்ளையாரை முறைப்படி திருமுழுக்காட்டி அணிசெய்து, பலவகைப் பழவகைகள், காய்கறி வகைகள், சிற்றுண்டி வகைகள் வைத்துப் படைப்பர். சுண்டலும் கொழுக்கட்டையும் இன்றியமையாதவை. மறுநாளும் அதற்கு மறுநாளும் ஏதேனும் வைத்துப் படைப்பர். மூன்றாம் நாள் பிள்ளையாரைக் கொண்டு போய் ஏதேனும் ஒரு நீர்நிலையில் விட்டுவிட்டு வந்து விடுவர். பிள்ளையாரின் தொப்பையில் பதிக்கப்பட்டிருக்கும் காசு, கொண்டு போய் நீரில் விடும் சிறார்களைச் சேரும்.

கலைமகள் விழா

புரட்டாசியில் நடைபெறும் இதனை ஆயுதபூசை என்பர். ஒன்பது நாள் நவராத்திரிக் கொண்டாட்டம் பெரும்பாலான இனத்தவர்களின் இல்லங்களில் நடைபெறுவதில்லை. தமிழ் மக்களின் இல்லங்களில் ஒன்பதாம் நாளான வளர்பிறை நவமியில் மட்டுமே இது கொண்டாடப்படும். எல்லா வகைக் கருவிகளையும், பெட்டி பேழை - குதிர் முதலியவற்றையும் தூய்மை செய்து பூசை போட்டுப் பொட்டும் இடுவர். மாணாக்கர்கள் தங்கள் நூல்கள், எழுதுகோல்கள் முதலியவற்றிற்கும் பூசை போட்டுப் பொட்டிடுவர். எல்லாவற்றையும் நடுவிட்டில் இறையுருவத்தின் முன் கொலுவாக வைப்பர். அவல், சுண்டல், காய்கறி - சிற்றுண்டி வகைகள் வைத்துப் படைப்பர். எல்லாவற்றினும் அவல் - கடலை இன்றியமையாத பொருளாம். இவ்விழா தொழிற் கூடங்களிலும் வணிக நிலையங்களிலுங்கூட நடைபெறும். எங்கு நடைபெறினும், தென்னை ஓலை, மாவிலை முதலியவற்றாலான இலைக் கொடிகள் அணிசெய்து கொண்டிருக்கும். கொலுவில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களைக் கொலு கலைக்காமல் யாரும் எடுக்கக்கூடாது. அன்று மாலையோ, அல்லது மறுநாள் அஃதாவது பத்தாம் நாளான விசயதசமியன்றோ மறுபடையல் படைத்துக் கொலுவைக் கலைப்பர்; பின்னரே பொருள்கள் எடுத்துப் பயன்படுத்தப்படும். இந்தப் பெருநாட் காலத்தில் சிறார்களைப் புதிதாய்ப் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது உண்டு.

தீபாவளிப் பெருநாள்

ஐப்பசியில் அமாவாசைக்கு முந்தின சதுர்த்தசி நாள் இரவில் இது கொண்டாடப் பெறும். இரவு முழுதும் பெண்கள் கண் விழித்துத் தின்பண்ட சிற்றுண்டி வகைகள் செய்வர். பிள்ளைகள் பல்வேறு வகை வெடிகள் வெடித்தும் வாணங்கள் கொளுத்தியும் மகிழ்வர். வைகறையில் அனைவரும் எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுவர். பின் உணவு வகைகளும் புதிய உடை வகைகளும் வைத்துப் படைப்பர். சில குடும்பங்களில் பெண்கள் கோயிலுக்குச் சென்று நோன்பு எடுத்துக் கொண்டு வந்து பின்பு வீட்டில் படைப்பர். படைத்ததும் புத்தாடை உடுத்து, உணவு வகைகளை உண்டு மகிழ்வர். மகளைக் கட்டிக் கொடுத்த முதல் தீபாவளியாயின், மகளும் மருமகனும் வந்து தலைத் தீபாவளி மருவுண்பர். உறவினர்களும் நண்பர்களும் ஒருவர்க்கொருவர் உணவு வகைகளை வழங்கிக் கொள்வர்; ஏழை எளியவர்க்கும் அளிப்பர்.

கார்த்திகைப் பெருநாள்

இது கார்த்திகைத் திங்களில் கார்த்திகை (கிருத்திகை) நாளில் நடைபெறும். நண்பகலில் கடவுளுக்குச் சிறப்பாகப் படைத்து உண்பர். சில குடும்பத்தார் பகல் முழுதும் உண்ணாநோன்பு கொண்டு, மாலையில் கோயிலில் ‘தீபம்’ கண்ட பின்னரே வீட்டில் படைத்து உண்பர். பொழுது போனதும், தெரு முற்றத்திலும் வீடு முழுவதிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு அணிசெய்யும். கோயில்களின் உச்சியிலும் மலை உச்சியிலும் தீபவிளக்கு ஏற்றப்பட்டுத் திருவிழா நடைபெறும். தெருக்களில் ‘சொக்கப் பனை’ கொளுத்தப்படும்.

பிள்ளைகள், பனம் பூக்களைச் சுட்டுக் கரியாக்கித் தூளைத் துணியில் இட்டுப் பந்தாகச் சுருட்டிப் பனமட்டைக் கழிக்குள் வைத்துக் கட்டி நெருப்புப் பற்றவைத்துக் ‘கார்த்திகை’ சுற்றுவார்கள்; அதிலிருந்து தீப்பொறிகள் பூப்பூவாக விழுவது தெரு முழுதும் கண்கொள்ளாக் காட்சியாயிருக்கும். இதுபோல் தொடர்ந்து மூன்று நாள் சுற்றுவார்கள். முதல் நாள் அண்ணா மலையார் கார்த்திகை என்றும் இரண்டாம் நாள் நாட்டுக் கார்த்திகை என்றும் சொல்லிக் கார்த்திகை சுற்றுவார்கள். மூன்றாம் நாள் காட்டுக் கார்த்திகை என்று சொல்லிச் சுற்றி முடித்து விட்டு, இறுதியாகத் தெரு மூலைக் காட்டிலோ - ஊர் மூலைக் காட்டிலோ, சுற்றிய கார்த்திகைக் கழியைத் தரையில் அடித்துப் போட்டு விடுவார்கள்.

தமிழ் நாட்டில் பழம்பெருங் கார்த்திகை விழா சங்க நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விழா திருவண்ணா மலைக்கே சிறப்பானது. ஆதலின், முதல் நாள் விழாவை அண்ணாமலையார் கார்த்திகை என்கின்றனர். இரண்டாம் நாள் விழாவை, அந்த அந்த ஊருக்கு உரியதான ‘நாட்டுக் கார்த்திகை’ என்கிறார்கள். சில குடும்பங்களில் நாட்டுக் கார்த்திகை இரவு, கொழுக்கட்டை, துவரம் பருப்புக் கடையல், முருங்கைக் கீரை துவட்டல், வாழைக்காய்ப் பொரியல் (இவை நான்கும் கட்டாயம்) முதலிய உணவுப் பொருள்கள் செய்து படைத்து . உண்பர். புலால் உண்பவர்கள் ஒரே நேரத்தில் இருவகைப் படையல் படைப்பர். அஃதாவது, சைவக் கடவுளுக்குச் சைவ உணவு வகைகளை வழக்கமான இடத்தில் வைத்துப் படைப்பர்; அதே நேரத்தில் இன்னொரு பக்கத்தில் ‘காத்தவராயன்’ என்னும் சிறு தெய்வத்திற்குப் புலால் உணவு வைத்துப் படைப்பர்; இதற்குக் ‘காத்தவராயன் படையல்’ என்று பெயராம். கள் - சாராயம் இருந்த காலத்தில் அவற்றையும் வைத்துப் படைத்தனர். மது அருந்தாத குடும்பத்தார் கூட, காத்தவராயனுக்குக் கள் - சாராயம் வைத்துப் படைத்துப் பிறரிடம் எடுத்துக் கொடுத்து விடுவது வழக்கம். நாட்டுக் கார்த்திகைப் படையல் ஒரு சில குடும்பங்களிலேயே உண்டு.

பொங்கல் பெருநாள்

தைத் திங்களின் தொடக்கத்தில் நடைபெறும் இது, தமிழ் நாட்டின் தனிப்பெரும் பெருநாள் விழாவாகும். மார்கழித் திங்களின் இறுதி நாளில் ‘போகிப் பண்டிகை’ என்பது நடைபெறும். அன்றைய வைகறையிருளிலே தேவையற்ற பழம் பொருள்கள் எரிக்கப்படும். இதற்குப் ‘போகி மூட்டம்’ என்று பெயர் கூறப்படுகிறது. இந்த எரிப்பு விழா நாளடைவில் வளர்ச்சி பெற்று, தேவையற்ற பழம் பொருள்களுடன்,தேவைப் பயனுள்ள விறகுக் கட்டைகள், பெரிய மரத் துண்டங்கள் முதலியவற்றையெல்லாம் போட்டு எரித்து வேடிக்கை பார்த்து அதிலொரு வகை இன்பங் காணும் நிலைக்கு வந்துவிட்டது. போகியன்று காலையில் வீடு முழுதும் பெரிய அளவில் துப்புரவு செய்யப்படும். போகிப் பெருநாள் ஒரு சில குடும்பங்களிலேயே விரிவாகக் கொண்டாடப்படுகிறது. கொண்டாடப்படும் இல்லங்களில் காலையில் கூழ் படைத்து ஏழை எளியவர்க்கு ஊற்றப்படும். இதனைப் ‘போகிக் கூழ்’ என்றும் ‘கூழ் ஊற்றுதல்’ என்றும் குறிப்பிடுவர். அன்று இரவு சிறப்பான உணவுப் பொருள்களுடன் படைத்து உண்பர். இந்தப் படையலிலும், முன்சொன்ன நாட்டுக் கார்த்திகைப் படையல் போலவே சைவப் படையல், காத்தவராயன் புலால் படையல் என இருவகை உண்டு.

மறுநாள் - அஃதாவது தைத்திங்கள் முதல் நாள் பெரும் பொங்கல் விழா கொண்டாடப் பெறும். வீட்டிற்கு நடுவேயுள்ள திறந்த வெளிவாசலில் புதுப்பானைகள் வைத்துப் பச்சரிசிச் சோறு பொங்கியும், புதுச் சட்டிகள் வைத்துக் குழம்பு - காய்கறிகள் முதலியன செய்தும், அந்த நடுவாசலிலேயே குடும்பப் பழக்கத்திற்கு ஏற்றபடி ஐந்து இலைகளோ அல்லது இருபத்தோர் இலைகளோ போட்டுப் பரிமாறிக் கதிரவனுக்குப். (சூரியனுக்குப்) படைப்பர். படைக்கும்போது ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவிப் படைப்பர். இத்தனை பானைகள் வைப்பது இத்தனை படி அரிசி பொங்குவது என்றெல்லாம் குடும்பத்திற்கு ஏற்றபடி மாறுதல் இருக்கும். சிலர் சர்க்கரைப் பொங்கலும் செய்வர். கரும்பு, மஞ்சள் கொத்து, பூசணிக்காய், வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு முதலியவை இந்தப் படையலுக்கு இன்றியமையாதவையாகும். சில குடும்பத்தினர் உணவு வகைகளைப் பூசணி இலையில் இட்டுப் படைப்பர். பொங்கல் இடும் பழக்கம் இல்லாத நெருங்கிய உறவினர்க்கும் நண்பர்க்கும் தொழிலாளர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவு வழங்கப்படும். இந்தப் படையலுக்குப் பெரும் பொங்கல் இடுதல்’ என்று பெயராம். சில குடும்பங்களில் இந்தப் படையல் இராது. சில குடும்பத்தார் நடு வாசலில் பொங்கிப் படைக்காமல், வழக்கமான அடுப்பங்கரையிலேயே பொங்கிப் படைப்பர். இந்தப் படையல், மழை பெய்வதற்கும் உணவுப் பொருள்கள் விளைவதற்கும் காரணமாயுள்ள ஞாயிற்றுக்கு (சூரியனுக்கு) நன்றி செலுத்தும் முறையில் நடைபெறுவதாகும்.

பெரும் பொங்கலையடுத்துத் தைத்திங்கள் இரண்டாம் நாள் ‘மாட்டுப் பொங்கல் விழா’ நடைபெறும். இந்த நாளில் மக்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பர்; மாடுகளைக் குளிப்பாட்டி ஒப்பனை செய்து உணவு படைத்து மாலை வேளையில் ‘மஞ்சு விரட்டு’ நடத்துவர். இது ‘மாடுமிரட்டல்’ என்றும் சொல்லப்படும். வண்டி மாடுகளை வண்டிகளில் பூட்டி ஊரை வலம்வரச் செய்வர். அன்று முழுதும் மாடுகளை அடித்தலோ, வேலை வாங்குதலோ செய்யார். வீட்டிலும் - தெருவிலும் - ஊரிலும் ‘பொங்கலோ பொங்கல் - மாட்டுப் பொங்கலோ பொங்கல்’ என்று கூவும் முழக்கம் விண்ணைப் பிளக்கும். சிற்றுரர்களில் பொதுத் திடலில் இறையுருவம் கொண்டு வரப்படும். அதன் முன்னிலையில் ஊர் மாடுகள் கொண்டு வரப்பட்டு ‘மஞ்சு விரட்டு விழா’ நடைபெறும். வீடு முழுதும் கரைத்த அரிசி மாவினால் ‘மாக்கோலம்’ போட்டு அணி செய்வர். அன்றிரவு உணவுப் படையல் நடக்கும். புலால் உண்பவர் வீட்டில், நாட்டுக் கார்த்திகைப் படையல் - போகிப் படையல் போலவே சைவப் படையலும் காத்தவராயன் படையலும் இருக்கும். உணவு வகைகளுடன் புத்தாடைகளும் வைத்துப் படைக்கப்பட்டு உடுத்துக் கொள்ளப்படும். உழவர்கள் பொங்கல் படைத்த நீரைக் கொண்டுபோய் வயல்களிலுள்ள பயிர்களின்மேல் ‘பொங்கலோ பொங்கல்’ எனக் கூவித் தெளிப்பர். இதற்குப் ‘பொங்கல் கூறுதல்’ என்று பெயராம்.

காணும் பொங்கல் எனப்படுவது மூன்றாம்நாள் - கரிநாள் அன்று கொண்டாடப்பெறும். அன்று மக்கள் புத்தாடை உடுத்துப் புது ஒப்பனை செய்துகொண்டு ஒருவர் வீட்டுக்கு ஒருவர் சென்று கண்டு அளவளாவுவர். சிறியவர்கள் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி வாழ்த்து வேண்டுவர். பெரியோர் தாம்பூலம் அளித்து வாழ்த்துவர். தாம்பூலத்தில் தகுதிக்கேற்பப் பணமும் வைக்கப்படும். அன்று ஊரிலிருந்து பொங்கல் மருவுக்காகப் புதுமண மக்களாகிய மகளும் மாப்பிள்ளையும் வந்து சிறப்புகள் பெற்று விருந்துண்பர். அன்று எல்லா வகைத் தொழிலாளர்கட்கும் விடுமுறை நாள். இந்த விடுமுறை அவர்களாகவே விட்டுக் கொள்வது. சில ஊர்களில் கோயிலில் திருவிழா நடைபெறும். வயதானவர்கள் பல வேடிக்கைப் பேச்சுகள் பேசி மகிழ்வர். இளைஞர்களும் நடுத்தர வயதினரும் தெருக்களில் பல்வேறு விளையாட்டுகள் விளையாடுவர். சில ஊர்களில் குடைராட்டினம் அமைத்து ஏறிச் சுற்றி விளையாடுவர். கலைஞர்கள் கும்மி, கோலாட்டம், ஆடல், பாடல், நாடகம் முதலிய பல வகையான கேளிக்கைகள் நடத்துவர். பல்வேறு தொழிலாளர்களும் கலைஞர்களும் அன்று வீடுதோறும் சென்று பரிசு பெறுவர். அன்றிலிருந்து ஊரிலுள்ள எல்லாவகைத் தொழிலாளர்கட்கும் கலைஞர்கட்கும் தொடர்ந்து சில நாள்கள் விடுமுறை இருக்கும். பின்னர் ஒரு நாள் வேலை தொடங்க வேண்டிய நாளாக ஊர்ப் பெருமக்களால் குறிப்பிடப் பெறும். அன்று தான் எல்லாரும் தத்தம் தொழில்களைச் செய்யத் தொடங்கலாம். அன்று கடவுளுக்குப் படைத்து வேலை தொடங்குவர். இதற்கு ‘நாள் கொள்ளுதல்’ என்று பெயராம். நாள் கொள்வதற்குமுன் எவரேனும் வேலை தொடங்கினால் அது பொதுக் குற்றமாகக் கருதப்படும். சலவைத் தொழிலாளர் நாள்கொண்டு வேலை தொடங்குவதற்குத் ‘துறை கும்பிடுதல்’ என்று பெயராம். அவர்கள் நீர்த்துறையில் பூசைபோட்டு வேலை தொடங்குவர்.

ஐந்தாம் நாள் சில ஊர்களில் ஆற்றுத் திருவிழா நடைபெறும். தை அமாவாசையன்று கடல் முழுக்கு நடைபெறும். தைத் திங்களில் வரும் முதல் ஞாயிற்றுக் கிழமை ‘தலை ஞாயிறு’ என்னும் பெயரில் சில குடும்பத்தினரால் சிறப்பாகக் கொண்டாடப்பெறும். அன்றும் பொங்கலிட்டுக் கதிரவனுக்குப் படைப்பர். சிலர் தலை ஞாயிறு நாளைக் ‘கன்று குட்டிப் பொங்கல்’ என்னும் பெயரிட்டுக் கொண்டாடுகின்றனர். அன்று கன்றுகளைக் குளிப்பாட்டி அணிசெய்து பொங்கல் படைத்து ஊட்டுவர். சிலர் அன்று கூழ் படைத்து ஏழையர்க்கு ஊற்றுவர்; அன்றிரவு சிறப்பு உணவு வகைகளுடன் படையலும் நடைபெறும்.

சில இனத்தார்களுள் - சில குடும்பங்களில் தைத்திங்கள் எட்டாம் நாள் ‘மயிலார்’ என்னும் நோன்பு பெண்களால் நோற்கப்படும். பெண்கள் காலையிலிருந்து உண்ணா நோன்பிருந்து மாலையில் படைத்து உண்பர். படைக்கும் இடத்தில் மயில் இற்கு வைக்கப்படும். பெண்கள் படைக்கும் போது ஆடவர் அங்கு இருந்து அதைப் பார்க்கக்கூடாது; அந்த நேரத்தில் ஆடவர் வீட்டினின்றும் வெளியேறிவிடுவர். அன்று மட்டும் முதலில் பெண்கள் உண்பர்; பின்னரே ஆடவர் உண்பர். பெண்கள் சிலர் மயிலார் நோன்பு நாளில் தரையைத் தூய்மை செய்து உணவைத் தரையில் வைத்து உண்ணுவர் எனச் சொல்லப்படுகிறது.

தைத் திங்கட் பூச நாளில் ஊர்களில் விழா கொண்டாடப்படுவதன்றிச் சில குடும்பங்களிலும் சிறப்புக் கொண்டாட்டம் நடைபெறும். நிரம்ப உணவு வகைகள் செய்து இறைவனுக்குப் படைத்து உற்றார் உறவினர்க்கும் ஏழை எளியவர்க்கும் உணவளிப்பர். இதற்குப் பூச பாவாடை என்பது பெயர். சில குடும்பங்களில் இரவோ டிரவாக உணவு ஆக்கி விடிவதற்குள் படைத்துவிடுவர். சில ஊர்களில் கோயிலில் ‘பூச பாவாடை’ போட்டு ஊரார் அனைவரும் கலந்து உண்பர்.

இப்படியாகத் தைத் திங்களில் பொங்கலையடுத்துப் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். இவ்வாறு பொங்கல் விழா பலநாள் நடப்பதையும், தொழிலாளர் விடுமுறை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட ஒரு நாளில் நாள் கொள்ளுவதையும், முதல் ஞாயிறு தலை ஞாயிறாகக் கருதப்படுவதையும் அடிப்படையாகக் கொண்டு ஆராயுங்கால், தைத்திங்கள் முதல் நாள் ஒரு காலத்தில் தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கமாக இருந்திருக்கக்கூடும் என்பதும், தமிழ்மக்கள் பொங்கல் விழாவைத் தமிழ்த் தேசீய விழாவாகக் கொண்டாடி வந்தனர் என்பதும் உய்த்துணரப்படுகின்றன.

நோன்புகள் (விரதங்கள்)

இப் பகுதியில் பலவகையான நோன்புகள் பின்பற்றப் படுகின்றன. நோன்பு விரதம் எனப்படுகின்றது; ஒரு பொழுதே (ஒரு வேளையே) உண்பதால் ‘ஒரு பொழுது’ என்றும் சொல்லப்படுகிறது. ஆடித் திங்களில் வெள்ளிக் கிழமை தோறும் அம்மனுக்காகப் பெண்கள் சிலரும், புரட்டாசித் திங்களில் சனிக்கிழமை தோறும் பெருமாளுக்காகச் சிலரும், புரட்டாசித் திங்களிலேயே வளர்பிளை சதுர்த்தசியில் ‘அனந்த விரதம்’ என்னும் நோன்புப் பெயரில் சிலரும், ஐப்பசித் திங்களில் அமாவாசை கழித்த ஆறுநாள் ‘கந்தர் சஷ்டி விரதம்’ என்னும் பெயரில் சிலரும் கார்த்திகைத் திங்களில் திங்கட் கிழமை தோறும் ‘சோமவார விரதம்’ என்னும் பெயரில் சிவபெருமானுக்காகச் சிலரும், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி என்னும் பெயரில் சிலரும், மாசியில் ‘சிவராத்திரி’ என்னும் பெயரில் சிலரும், பங்குனியில் உத்திரம்’ என்னும் பெயரில் சிலரும், திங்கள் தோறுமே கார்த்திகை, பூசம் அமாவாசை - சஷ்டி ஆகிய காலங்களில் சிற்சிலரும், வாரந்தோறுமே திங்கள் - செவ்வாய் - வெள்ளி - சனி ஆகிய கிழமைகளில் சிற்சிலரும் நோன்பு கொள்கின்றனர்.

மார்கழித் திங்கள் முழுதுமே பெண்கள் வைகறை இருட்டிலேயே நீராடி, தெரு முற்றத்தைத் தூய்மை செய்து விதம் விதமான அழகிய கோலங்கள் போட்டு அணி செய்வர். பெற்றோர்கள் சிறார்களை எழுப்பிப் படிக்கச் செய்வர். சில ஊர்களில் வழிபாட்டுக் குழு (பஜனை) ஆடல் பாடல்களுடன் ஊர் சுற்றி வரும். பண்டாரம் சங்கு ஊதிச் செல்வார். குடு குடுப்பைக் காரர்கள் நல்ல வாக்கு சொல்லிக் கொண்டு போவர். ஒரு சிலர் பறை முழக்கிச் செல்வர். கோயிலில் மணி முழங்கும்; பூசனையும் நடைபெறும் வைகறை வழிபாட்டிலேயே சுண்டல் முதலியன வழங்கப் பெறும். கோயிலில் ஒரு நாளைக்கு ஒரு வீட்டார் ‘உபயம்’ நடத்துவர். இதற்குத் திருப்பள்ளியெழுச்சி உபயம்’ என்பது பெயர். இவ்வாறாக மார்கழித் திங்களின் ஒவ்வொருநாள் வைகறையும் மிக்க கலகலப்பாயிருக்கும். இந்த மார்கழி வைகறைகளில் பெண்கள் கொள்ளும் நோன்பு பாவை நோன்பு’ எனப்படும் என்னும் செய்தி இலக்கியம் கண்ட செய்தியாகும். ஆண்டாளின் திருப்பாவையும், மாணிக்க வாசகரின் திருவெம்பாவை - திருப்பள்ளி யெழுச்சியும் அந்தக் கால மக்களுக்குத் தண்ணீர் பட்டபாடு. இப்போதோ, ‘அப்படியென்றால் விலை என்ன?” என்று கேட்போர் பலர் உளர்.

கோயில் திருவிழாக்கள்

பல ஊர்களிலும் - பல்வேறு கோயில்களிலும் பின்வருமாறு பல்வேறு வகைத் திருவிழாக்கள் நடைபெறும்; சில விழாக்கள் சில ஊர்களில் நடைபெறா வேறு சில ஊர்களில் நடைபெறும்.

சித்திரைத் திங்களில் புத்தாண்டு முதல் நாள் விழா பெருமாள் கோயிலில் (திருவயிந்திரபுரம்) பத்து நாள் பெருவிழா (பிரம்மோற்சவம்) - பருவத்தில் தேர் ஒடுதல் - வசந்த உற்சவம் என்னும் இளவேனில் விழா - சதய நாளில் (திருவதிகை) அப்பர் விழா.

வைகாசித் திங்களில் (திருப்பாதிரிப் புலியூர்) பத்து நாள் பெருவிழா - விசாகத்தில் தேர் ஓடுதல்.

ஆணித் திங்களில் நடராசன் தரிசனம் - ஆணித்திரு மஞ்சனம்.

ஆடித் திங்களில் மாரியம்மன் கோயில்களில் விழா - தீமிதி விழா செடல் திருவிழா. ஆடிப் பூரத்தில் சிவன் கோயில்களில் வளையல் திருவிழா - பதினெட்டாம் பெருக்கு.

ஆவணி மூலத்தில் சிவன் பிட்டுக்கு மண் சுமந்த விழா.

புரட்டாசியில் - நவராத்திரி - கலைமகள் விழா அம்மன் கோயில்களில் அம்புத் திருவிழா.

ஐப்பசியில் - கந்தர் சஷ்டி - சூரசம்மார விழா. கார்த்திகையில் - சோமவார விழா, தீபதரிசன விழா

மார்கழியில் - வைகுண்ட ஏகாதசி விழா - பாவை விழா - திருப்பள்ளியெழுச்சி விழா - நடராசர் ஆருத்ரா தரிசனம்.

தைத் திங்களில் பொங்கல் விழா - கரிநாள் விழா - ஆற்றுத் திருவிழா - கடல் முழுக்கு - தைப் பூச விழா.

மாசியில் - மாசிமக விழா - மகா சிவராத்திரி விழா. பங்குனியில் - பங்குனி உத்திர விழா - பத்து நாள் பெருவிழா உத்தரத்தில் தேர் ஓடுதல்.

இன்ன பிற பல்வேறு வகை விழாக்கள் திருமுனைப்பாடி நாட்டில் நடைபெற்று வருகின்றன.

நிமித்தங்கள்

இலக்கியங்களில் நிமித்தம் என்று சொல்லப்படுவது பேச்சு வழக்கில் ‘சகுனம்’ எனப்படுகிறது. திருமுனைப்பாடி நாட்டிலும் பல்வேறு நிமித்தங்கள் பார்க்கப்படுகின்றன: அவற்றுள் சில வருமாறு:

நன்னிமித்தங்கள்

மணி அடித்தல், சங்கு ஊதுதல், வேட்டு போடுதல், பீரங்கி வெடித்தல், கருடன் கூவுதல், கழுதை கத்துதல், நரி முகத்தில் விழித்தல், இரட்டைக் காகங்களைப் பார்த்தல், சவ ஊர்வலம், நாய் உடம்பை உதறல், திருமங்கலி (சுமங்கலி) எதிரே வருதல், பூக்கூடை - தண்ணிர்க் குடம் - தானிய மூட்டை - அழுக்குத் துணி மூட்டை முதலியன எதிரே வருதல், நடக்கும் கைகூடும் போய் வரலாம் - நல்லது முதலிய நற்சொற்கள் தற்செயலாய்க் காதில் விழுதல், பொருள் தவறிக் கீழே விழுதல் முதலியன நல்ல நிமித்தங்களாகக் (சகுனங்களாகக்) கருதப்படுகின்றன. வீட்டை விட்டுப் புறப்படும்போது, வீட்டிலுள்ள திருமங்கலி ஒருத்தியை வாயிற்படியில் நிற்கச் செய்து செயற்கை முறையில் நல்ல நிமித்தம் உண்டாக்கிக் கொண்டு போவதும் உண்டு.

தீ நிமித்தங்கள்

ஆந்தை அலறல், கோட்டான் கூவுதல், காகம் கரைதல், நாய் அழுதல், பூனை குறுக்கே போதல், மழை பெய்தல், கைம்பெண் (விதவை) ஒற்றைப் பார்ப்பார் ஒற்றைப் பூணூல்காரர் ஆகியோர் எதிரே வருதல், எண்ணெய்க் குடம் விறகுக்கட்டு, வைக்கோல் கட்டு கோடரி - மண்வெட்டி முதலியன எதிரே வருதல், நடக்காது போகாதே - அழிந்துபோகும் முதலிய தீச்சொற்கள் தற்செயலாய்க் காதில் விழுதல், கால் தடங்கல், எதிரே ஏதேனும் தடை ஏற்படுதல், தும் முதல், புறப்பட்டுப் போகும்போதும் ‘எங்கே போகிறாய்’ என்று யாரேனும் கேட்டல், புறப்பட்டுப் போகும்போது பெயர் சொல்லியோ கை தட்டியோ யாரேனும் அழைத்தல் முதலியன தீய நிமித்தங்களாகக் (சகுனங்களாகக்) கருதப்படுகின்றன.

புறப்படும்போது தீய நிமித்தம் ஏற்படின் புறப்பாட்டைச் சிறிது நேரம் ஒத்திப் போடுவர்; புறப்பட்டுப் போகுங்கால் சிறிது தொலைவில் தீய நிமித்தம் ஏற்படின் திரும்பி வந்து விடுவர். தீய நிமித்தத்தை வெல்வதற்காக வீட்டில் சிறிது நேரம் அமர்ந்தோ அல்லது ஒரு விழுங்காவது தண்ணீர் அருந்தியோ பிறகு மறுபடியும் புறப்படுவர். சிலர் பயணத்தை நிறுத்தி விடுவதும் உண்டு.

நம்பிக்கைகள்

இந்தப் பகுதியில் பின்வரும் நம்பிக்கைகள் உள்ளன. நம்பிக்கைக்கு ஏற்றபடி மக்களின் செயல் முறைகள் உள்ளன.

நாள் காலையில் நல்ல கையால் ‘போனி’ ஆனால் அன்று முழுதும் வாணிகம் நன்கு நடக்கும். நரி முகத்தில் விழித்து விட்டுச் சென்றால் வாணிகம் நன்கு ஊதியம் அளிக்குமாம். அங்காடிக் கூடையைத் தூக்கிவிட்டுக் கைதட்டினால் நன்கு விற்பனையாகுமாம். வாணிகம் செய்யுமிடத்திலும் தொழில் செய்யுமிடத்திலும் படுத்தால் வாணிகமும் தொழிலும் படுத்துவிடுமாம்.

கோடைக் காலத்தில் ‘கொடும் பாவி’ கட்டி இழுத்து மாரடித்து அழுது பின்னர் அதைக் கொளுத்திவிட்டால் மழை பெய்யும். இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஊர் எல்லைகளின் மணலில் கொடும்பாவி உருவங்கள் செய்து வைப்பதும் உண்டு.

ஊர் எல்லையில் எல்லைக் கல் நட்டு வழிபடின், ஊரைக் பிடிக்கவரும் துன்பங்களை எல்லைக் கல் தடுத்து நிறுத்திவிடும். வேப்பிலை பிணிகளைப் போக்கும் - பேய் பிசாசுகளை ஓட்டும்; இது தெய்வ வழிபாட்டிற்கு ஏற்றது.

நல்ல கண் பட்டால் நல்ல வளர்ச்சி இருக்கும்; கெட்ட கண் பட்டால் எல்லாம் கெட்டுப் போகும். கெட்ட கண் படுதலுக்குத் ‘திருஷ்டி விழுதல்’, ‘கண்ணேறு விழுதல்’ என்றெல்லாம் பெயர் சொல்லப்படுகிறது. ‘கல்லடி பட்டாலும் படலாம், கண்ணடி படக் கூடாது’ என்பது பழமொழி. கண்ணேறு கழிப்பதற்காகத் தாய்மார்கள் ஏதாவது சுற்றிப் போடுவர்.

வெள்ளிக் கிழமையில் தம் வீட்டுப் பொருளைப் பிறர்க்கு அளித்தால் திருமகள் போய் விடுவாள். சிலர் செவ்வாய்க் கிழமையிலும் சிலர் ஞாயிற்றுக்கிழமையிலுங் கூட அளிக்க மாட்டார்கள். இந்தக் கிழமைகளில் வீட்டுத் தோட்டத்திலுள்ள குப்பை எருவை அப்புறப்படுத்தார். எந்தக் கிழமையிலுமே பொழுது சாய்ந்து விளக்கு ஏற்றி விட்டாலும் ஒன்றும் கொடுக்க மாட்டார்கள். இரப்பவர்க்குப் (பிச்சைக்காரருக்குப்) பகல் பன்னிரண்டு மணி ஆய்விட்டால் அரிசி போடமாட்டார்கள். அதன் பின்னர், ஆக்கிய உணவே போடப்படும். வெற்று ஏனத்தில் பிச்சை போடப் பின் வாங்குவர். சிறப்பு நாள்களில் கடவுளுக்குப் படைத்தபின் உணவுப் பொருள் தவிர, வேறு எப்பொருளும் இரவல் கொடுக்கமாட்டார்கள். பெண்கள் வெள்ளிக் கிழமையில் வீட்டைவிட்டு வெளியூர் செல்லார். எவருமே எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டால் வெளியூர் செல்லமாட்டார்கள்; அப்படியே சென்றாலும் இரவு படுக்கைக்கு வீட்டிற்கு வந்துவிடுவர். வீட்டிலிருந்து யாரேனும் வெளியூருக்குப் புறப்பட்டுச் சென்றபின் அன்று யாருமே வீட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கமாட்டார்கள். மேற் சொன்னவற்றிலிருந்து மீறி நடந்தால் தீமை விளையும் திருமகள் போய்விடுவாள் என்பது நம்பிக்கை.

பிறந்த கிழமையிலும் செவ்வாய்க் கிழமையிலும் சனிக் கிழமையிலும் புதிய செயலோ - நல்ல செயலோ தொடங்கவோ செய்யவோமாட்டார்கள். ஞாயிற்றுக் கிழமையில் ஊருக்குப் புறப்பட்டால் நாய் படாதபாடு படவேண்டும் என்ற நம்பிக்கை சிலரிடம் உள்ளது. வெள்ளிக் கிழமையை வளர்ந்த நாள் என்பர்; அதனால் அந்நாளில் புதிதாக மருந்து உண்ணார்; இழுபறியான செயல்களையும் தொடங்கார். புதன் கிழமையில் புற்றில் உள்ள பாம்பும் வெளியே புறப்படாது என்பது சிலர் கொள்கை.

வீட்டில் காக்கை கரைந்தால் விருந்தினர் வருவராம். தெருவில் நாய் அழுதால் சாவுச்செய்தி வருமாம். வடக்கே தலை

கெ.29 வைத்துப் படுத்தால் வயதுக் குறைவாம். தேங்காய் உடைத்தால் இரண்டு மூளிகள் சரியாய் உடைய வேண்டும். கோயிலுக்குச் சென்றால் காசு, உணவுப்பொருள் ஆகியவற்றை மீதி பண்ணி எடுத்து வரக்கூடாது சுடலையிலிருந்து எந்தப் பொருளையுமே எடுத்து வரக்கூடாது. ஊருக்குப் போன எட்டாம் நாள் - அஃதாவது அதே கிழமையில் திரும்பக் கூடாது.

சில பழக்க வழக்கங்கள்

நாடோறும் பெண்கள் வைகறையில் எழுந்து தெருவாயிற் படியில் சாணநீர் தெளித்து, அலகிட்டுத் தூய்மை செய்து கோலம் போடுவர். அதன் பின்னரே வீட்டிலிருந்து யாரும் வெளியே செல்வர். நடு இரவில் இரண்டு மணிக்கு யாரேனும் ஊருக்குப் புறப்பட்டாலும் அதற்கு முன் தெருவில் சாணம் தெளித்தே அனுப்புவர். இரவலர் (பிச்சைக்காரர்கள்) வந்தால் கூடிய வரைக்கும் ‘இல்லை’யென்று சொல்லாது ஏதேனும் இட்டு அனுப்புவர். இடுவதற்கு வாய்ப்பு வசதி இல்லையாயினும். ‘இல்லை’ என்னும் சொல்லைச் சொல்லாமல், ‘போய் வா’, ‘இன்னோர் இடம் போய்ப் பாரு’, ‘நேரம் ஆய்விட்டது’, ‘நேரம் ஆகும், என்றெல்லாம் ஏதேனும் சொல்லியனுப்புவர். விருந்தினர் வந்தால், தாம் எவ்வளவு ஏழையராயினும் வந்தவரை இன்முகத்துடன் வரவேற்று, கை கால் தூய்மை செய்யத் தண்ணிர் கொடுப்பர்; வந்தவர் கை கால் தூய்மை செய்த பின்னரே, இடப்பட்டுள்ள இருக்கையிலோ அல்லது விரிப்பிலோ அமர்வர். உடனே ஒரு தட்டில் வெற்றிலை பாக்க கொண்டுவந்து வைப்பர். பின்னர் அருந்துவதற்கு ஏதேனும் கொண்டுவந்து தருவர்.

சிலர் நாடோறும் கதிரவனை வணங்கியே உண்பர்; சிலர் கருடனைக் கண்ட பிறகே உண்பர்; சிலர் உண்பதற்கு முன் காகத்திற்கு உணவு வைத்துப் பின்னரே உண்பர். எல்லோருமே பகலில் கடவுளுக்குப் படைக்கும் நாளில், படைத்தபின் காகத்திற்கு உணவு வைத்துவிட்டுத்தான் உண்பர். சனிக்கிழமையில் பெருமாளுக்குப் படைப்பவர்கள் கருடனைக் கண்ட பிறகே உண்பர்.

மாலை வேளையில் - பொழுது சாயும் நேரத்தில் பெண்கள் தெரு வாயிற்படியிலும் குறட்டிலும் தண்ணீர் தெளித்துத் தூய்மை செய்து கோலம் போட்ட பின் விளக்கு ஏற்றி வைப்பர். நாடோறும் தெருவாயிற்படியில் முன்னிரவு வரையும், ஒரு விளக்கு எரிந்து கொண்டிருக்கும். மின்சார விளக்கு இருந்தாலும், பழைய முறைப்படி எண்ணெய் விளக்கு ஒன்று ஏற்றித் தெருவாயிற்படியில் கொண்டுபோய் வைப்பர். விளக்கு வைப்பதற்கென்றே தெருத் திண்ணைக்கு மேலே மாடமோ அல்லது ஒரு கட்டையோ இருக்கும். தெருவில் விளக்கு வைத்த பின்னரே வீடு முழுதும் விளக்கேற்றுவர். தெருவில் விளக்கு அணைந்து விட்டால் அணைந்த விளக்கை வறிதே எடுத்துக்கொண்டு உள்ளே வரமாட்டார்கள். தெருவிலே ஏற்றி எடுத்துக் கொண்டுதான் உள்ளே வருவர். அணைந்த விளக்கை எடுத்து வந்தால் திருமகள் தெருவோடு போய்விடுவாளாம். வெளியில் எங்கேயாவது விளக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டுமென்றால், வீட்டிற்குள்ளே ஏற்றாமல், தெருவிலே வந்துதான் விளக்கை ஏற்றிக் கொண்டு எடுத்துச் செல்வர். வீட்டிற்குள்ளேயும் விளக்கைத் தானாக அணைய விடமாட்டார்கள்; அணைந்தாலும் இன்னொரு முறை ஏற்றியே அணைப்பர்.

மாலையில் விளக்கு வைக்கும் நேரத்தில் யாரும் சோம்பல் முரிக்கக்கூடாது; படுக்கக்கூடாது; காலை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கக்கூடாது; கெட்ட பேச்சுகள் பேசக்கூடாது. விளக்கு ஏற்றும்போது அங்கிருப்பவர்கள் கையெடுத்துக் கும்பிடுவர்; ஏற்றியவர்களும் கும்பிடுவர்.

“மாடும் கன்றும் வரும்வேளை
மஞ்சள்தண்ணீர் சுற்றும்
வேளை காலை மடக்கடி காமாட்சி
கையை முடக்கடி மீனாட்சி

என்பது வட்டார வழக்குப் பாடல். மாலை நேரம் என்பது, மாடும் கன்றும் மந்தையிலிருந்து வரும் நேரமாகும் - பூப்படைந்த பெண்ணுக்கு மஞ்சள் நீர் சுற்றும் நேரமாகும். விளக்கு வைக்கும் நேரமும் அதுவேயாகும் - அந்த நேரத்தில் காலை நீட்டிப் போட்டுக் கொண்டிருக்கக் கூடாது; மடக்க வேண்டும் கையை மடக்கிக் கும்பிட வேண்டும் - என்பது இந்தப் பாடலின் கருத்து.

குழந்தை தும்மினால் ‘நூறு’ என்று சொல்லி அஃதாவது, நூறு ஆண்டு வாழவேண்டும் என்றபொருளில் சொல்லி மக்கள் வாழ்த்துவர்; குழந்தை இரண்டாவது தும்மல் தும்மினால் ‘இருநூறு’ என்று சொல்லி வாழ்த்துவர். பல்லி ஒலியெழுப்பினால், கையை நொடித்துச் சிட்டிகை கொட்டுவர் அல்லது, தரையைத் தட்டுவர். கொட்டாவி விடினும் கையை நொடிப்பர். இடி இடித்தால் ‘அர்ச்சுனா அர்ச்சுனா - கிருஷ்ணா அர்ச்சுனா’ என்பர்.

திருமணம் போன்ற ஒரு நன்னிகழ்ச்சியோ அல்லது வேறு ஒரு புதிய செயலோ தொடங்க வேண்டுமெனில் குறி கேட்டே தொடங்குவர். கூடுமா கூடாதா என அறிவதற்காக இறையுருவத்தின் முன்னிலையில் திருநீறும் குங்குமமும் தனித்தனியே மடித்துப் போட்டுச் சிறு குழந்தையை விட்டு எடுக்கச் செல்வர்; சிலர் கைவிரல்கள் இரண்டினைக் காட்டி, ஏதேனும் ஒன்றைத் தொடுமாறு குழந்தையைத் தூண்டுவர். சிலர் கோயிலுக்குச் சென்று பூசாரியிடம் - சாமியாடியிடம் - குறி கேட்பர். அம்மன்மேல் பூக்களை நிரப்பி, மேலே ஒர் எலுமிச்சம் பழத்தை வைத்துப் பூசாரி உடுக்கையடித்துப் பாட்டுப் பாடி வன்னிப்பார்; குறி கேட்கும் குடும்பத்து மகளிர் ஒருவர் முன்றானைத் துணியைக் கீழே ஏந்திக் கொண்டிருப்பார்; பழம் அத்துணியில் விழுந்தால் திருமணம் செய்யலாம்; கீழே விழின் செய்யக்கூடாது. இப்படியொரு நம்பிக்கை சில இனத்தாரிடம் - சில குடும்பத்தாரிடம் உள்ளது. எலுமிச்சம் பழம் துணியில் விழாததால் ஒரு சிலர்க்குத் திருமணம் பல ஆண்டுகள் தள்ளிப் போனதும் உள்டு.

நகர்ப் புறங்களில் அண்டை வீட்டினரும் எதிர்வீட்டினரும் அயலார்போர் வாழினும் (இங்கேயும் எல்லாரும் இப்படியில்லை) - சிற்றூர்களில் மதம் - இனம் - மொழி போன்ற வேறுபாடுகள் இன்றி ஒரு குடும்பத்தினர் போல் மக்கள் ஒன்றி வாழ்கின்றனர். ஒருவர் வீட்டிற்குள் இன்னொருவர் கேட்காமலேயே நுழைந்து தெருவிலிருந்து தோட்டம் வரையும் எங்கு வேண்டுமானாலும் தங்கு தடையின்றிப் போய்வருவார்; உண்ணும்போதும் உண்ணும் இடத்திற்குள் கூசாது நுழைவார். இது நாகரிகக் குறைவு அன்று; உயர்வு தாழ்வு இன்றி ஒற்றுமையுடன் பழகும் உயர்ந்த நாகரிகப் பண்பாகும் இது.

ஊருக்குள் அரசாங்கத்தின் தொடர்பு இல்லாமலேயே மக்களுக்குள் ஊராட்சி ஒன்று நடைபெறும். இதன் தலைவர் நாட்டாண்மைக்காரர் அல்லது பெரிய தனக்காரர் எனப்படுவார். நாட்டாண்மைக்காரர் அப்போதைக் கப்போது மக்களால் பேர்ட்டியின்றி ஒருமுகமாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். இவருக்குத் துணையாக உறுப்பினர் சிலர் இருப்பர். எப்பேர்ப்பட்ட வம்பு வழக்குகளும் நீதிமன்றம் செல்லாமலேயே ஊராரால் தீர்த்து வைக்கப்படுவதுண்டு. சாவு - வாழ்வு தொடர்பான எந்த நிகழ்ச்சிக்கும் நாட்டாண்மைக்காரர் வருவார். அவர் வந்த பிறகே அவர் கையால் நிகழ்ச்சி தொடங்கப்பெறும். ஊராரின் ஒப்புதலுடனேயே எந்தச் செயலும் நடைபெறும். ஊராரை மீறி நடப்பவர் ஊராரால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்படுவார், எத்தகைய ஒத்துழைப்பும் அவருக்குக் கிடைக்காது. ஆனால், எல்லாம் அரசின் சட்ட திட்டத்திற்கு உட்பட்ட அளவிலேயே நடைபெறும். ஊராட்சிக்காகத் தலைக்கட்டுக்கு இவ்வளவு என்று வரி உண்டு. ஊர்க் கூட்டத்தில் ஒன்று பேசி முடிவு செய்ய வேண்டுமெனில், வேலையை நிறுத்திவிட்டு ஊரார் அனைவரும் வந்தேயாக வேண்டும்.

இந்தப் பகுதியிலும் பெண்கள் இல்லத்தரசியராகவே இருக்கின்றனர் இல்லத்திற்கு வெளியே ஆண்களைப் போல் நடந்து கொள்வதில்லை; அயல்நாடுகளில் உள்ளது போல் ஆண்களுடன் கூசாது தொடர்பு கொள்வதில்லை. தம் கணவரிடங்கூட வீட்டிற்கு வெளியே நாணாது கூசாது உரிமையுடன் பழகுவதில்லை. பிறர் எதிரே தம் கணவருடன் பேசவும் கூசும் பெண்டிரும் உளர். வீட்டிலே உரிமை கொடுக்காவிடினும் அவ்வுரிமையைத் தாங்களாகவே எடுத்துக் கொள்ளும் பெண்டிரும், வீட்டிற்கு வெளியே உரிமை கொடுத்தாலும் அதனைப் பயன்படுத்திக் கொள்வதில்லை. இந்த நிலைமையிலிருந்து இப்போது ஒரளவு மாறுதல் தெரியத் தொடங்கி யுள்ளமை வரவேற்கத் தக்கது.

கொச்சைப் பேச்சுகள்

இந்தப் பகுதியில் வழங்கப்படும் சில கொச்சைப் பேச்சுருவங்கள் வருமாறு:

தூய உருவம் கொச்சை உருவம்

தாராளமாக - தாளாரமாக
திருப்பி - திலுப்பி
நான்கு - நாலி
ஐந்து - அஞ்சி
முப்பது - துப்பது
எண்பது - எம்பளது
ஆமாம் போலிருக்கிறது - ஆமாம் பெலக்கு
இருக்கிறது - இருக்குது
என்று சொல்கிறார் - இன்றார்
என்று சொன்னார் - இன்னார்
கொஞ்சம் - கொஞ்சோண்டு
போய்விட்டு வருகிறேன் - போய்ட்டுவரேன், பூட்டுவரேன்
சொன்னேன் - சொஞ்ஞேன்
என்ன அது - எஞ்ஞா அது

எல்லாம் - அல்லாம்
சாப்பிட்டு - சாட்டு
எழுந்திருந்து - ஏன்ழ்சி

வட்டார வழக்குகள்

ஒருவரது பேச்ச வழக்கைக் கொண்டு அவர் இன்ன மாவட்டத்தினர் என ஏறத்தாழக் கூறிவிடலாம். இவ்வாறு கூறுவதற்குப் பரந்த அளவில் பட்டறிவு (அனுபவம்) வேண்டும். இந்த முறையில், தென்னார்க்காடு மாவட்டத்தினரை அடையாளம் காட்டிக் கொடுக்கும் சில பேச்சு வழக்காறுகள் உள்ளன. பிற மாவட்டத்தினர் சிலர் தென்னார்க்காடு மாவட்டத்தினரை ‘வந்துகினு - போய்க்கினு’ எனக் கேலி செய்வது உண்டு. ‘வந்துகொண்டு’, ‘போய்க் கொண்டு’ என்னும் சொற்களைத் தஞ்சாவூர் மாவட்டத்தினர் ‘வந்துகிட்டு’, ‘போய்க்கிட்டு’ எனச் சொல்லுவர்; தென்னார்க்காடு மாவட்டத்தினர் ‘வந்துகினு’ ‘போய்க்கினு’ என்பர். ‘‘ரும்போது - போம்போது’ என்பதை ‘வர சொல்ல போ சொல்ல’ என்று வடார்க்காடு மாவட்டத்தினர் கூறுவர். இதையே தென்னார்க்காடு மாவட்டத்தினர் ‘வரக்குளே போக்குளே’ என்றும், வரப்போ - போரப்போ’ என்றும் கூறுகின்றனர். அதன் பிறகு என்னும் பொருளில் சென்னைப் பக்கத்தில் ‘அப்பாலே’ என்பர்; திருநெல்வேலிப் பக்கத்தில் பெறவே என்பர்; தென்னார்க்காடு மாவட்டத்தில் ‘அப்புறம்’ என்பர்; சிலர் அப்புறம் என்பதை ‘அம்பறம்’ எனப் பிழைபட ஒலிப்பர். இப்படியாகப் பொதுவாகத் தென்னார்க்காடு மாவட்டத்தில் - சிறப்பாகத் திருமுனைப்பாடி நாட்டில் பேச்சு வழக்கில் சில மாறுதல்கள் உள்ளன. அவற்றுள் மேலும் சில வருமாறு:

தந்தையை அப்பா என்று அழைப்பதல்லாமல் ‘அண்ணன்’ என்றும் சிலர் அழைப்பர்; சிற்றப்பாவைச் சின்னண்ணன் என்பர்; பெரியப்பாவைப் பெரியண்ணன் என்பர்; தெலுங்கரே யன்றித் தமிழருள்ளும் சிலர் தந்தையை நாயனா என அழைக்கின்றனர். சின்னம்மாவைச் சிலர் சின்னம்மா என்றும், சிலர் சித்தி என்றும், சிலர் சின்னாயி என்றும் அழைப்பர். பெரியம்மாவைச் சிலர் பெரியாயி என்பர். அப்பாவுக்கும் பெரியப்பாவுக்கும் இடைப்பட்டவரை நடப்பா என்றும், அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் இடைப்பட்ட அம்மாவை ‘நடம்மா’ என்றும் அழைப்பர். அண்ணனை ‘அண்ணாத்தை’ என்பர் சிலர். தமக்கையைப் பெரும்பாலார் ‘அக்கா’ என்பர்; ஒரு சிலர் ‘ஆச்சி’ என்றும், மற்றும் ஒருசிலர் ‘அப்தா’ என்றும் அழைப்பர். தம்பி தம்பியேதான். தங்கையைப் படர்க்கையில் ‘தங்கச்சி’ என்றும், முன்னிலையில் ‘பாப்பா’ என்றும் குறிப்பிடுவர். பாட்டியை ஆயா என அழைப்பர்; ஒரு சிலர் ஆயி என்பர். பாட்டனாரைத் தாத்தா என்பர். எவரையும் அத்தான் என அழைக்கும் பழக்கம் இங்கே கிடையாது தாயுடன் பிறந்தவரும் மாமன்தான்; தமக்கையின் கணவனும் மாமன்தான்; (பெண்ணுக்குத்) தன் கணவனும் (மாமன்தான்; அஃதாவது, அம்மான், அத்தான் முதலிய அனைவருமே மாமாதான்.

கணவன் - மனைவியை, ஆம்படையான், (அகமுடையான் பெண்டாட்டி) என்பர். ஆடவரை ஆம்பிளை (ஆண் பிள்ளை) என்பர்; பெண்டிரைப் பொம்பிளை (பெண் பிள்ளை), பொம்மனாட்டி, பொண்டுவங்க என்பர். இளம் பெண்ணைப் பாப்பா என்பர்; இளம் பிள்ளையைப் பிள்ளையாண்டான் என்பர். சிறுமியரை ‘வெடை’ என்று கேலியாகச் சொல்வதும் உண்டு. கணவன் மனைவியை ‘எங்க வீட்டிலே’ என்றும், மனைவி கணவனை வீட்டுக்காரர் என்றும், ‘எங்க ஆம்பிளை’ என்றும் குறிப்பிடுவர். மனைவி கணவனை ‘ஏன்னா’ என்றும், கணவன் மனைவியை ஏன் என்றும், ‘டேய்’ என்றும் அழைப்பதும், இருவருமே ஒருவரையொருவர் ‘அவுங்க இவுங்க’ எனக் குறிப்பதும் உண்டு. பொதுவாகப் பெரிய இடத்து ஆடவரை ஐயா, ஐயாமார் என்றும், பெண்டிரை அம்மா, அம்மாமார் என்றும் மற்றவர் அழைப்பர். சிறு பையனை இலே அல்லது எலே என்று அழைக்கும் பழக்கம் திருமுனைப்பாடி நாட்டில் இல்லை; டேய் அல்லது ‘டேய் தம்பி’ என்றே அழைப்பர். சிறுமியரைப் புள்ளே (பிள்ளை) ‘தோபுள்ளே’ என்று சில ஊர்களில் அழைக்கின்றனர். கணவன் மனைவியருள்ளும் சரி - மற்ற ஆண் பெண்களுள்ளும் சரி. ஒருவரை யொருவர் ‘தே’ என அழைத்துக் கொள்ளும் பழக்கம் ஒரு சிலரிடையே உண்டு.

சிறு குழந்தைகளைக் குழந்தை குட்டிகள் என்னும் பொருளில் ‘புள்ளை சாதிவோ’ (பிள்ளை சாதிகள்) என்பர் சிலர். ஆண் பிள்ளையை ‘ஆணாய்ப் பிறந்தது’ எனக் குறிப்பிடும் வழக்கம் அவ்வளவு மிகுதியாக இல்லாவிடினும், பெண் பிள்ளையைப் பொண்ணா பொறந்தது (பெண்ணாய்ப் பிறந்தது) என்று குறிப்பிடும் வழக்கம் மிகுதியாயிருக்கிறது. இங்கே, பையன்கள் என்னும் சொல் கொச்சையாகப் ‘பசங்கள்’ எனச் சொல்லப்படுகிறது. பசங்கள் என்றால் ஆண் சிறுவர்கள் என்றே மற்ற மாவட்டத்தார் எண்ணக்கூடும்; இங்கே ‘பொம்பளே பசங்கள்’ என்று பெண் சிறுமிகளையும் ‘பசங்கள்’ எனக் குறிப்பிடும் வழக்கம் உண்டு. இங்கே ‘பசங்கள்’ என்னும் சொல் பொதுவாகச் சிறுவர் சிறுமியரைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகளைப் ‘பிள்ளை குட்டிகள்’ ‘பசங்க குட்டிகள்’ என்றும் இங்கே அழைப்பர். மிகுந்த குழந்தைகள் உடையவர் ‘பிள்ளை குட்டிக்காரர்’ எனப்படுகிறார்.

மரபு வழக்குகள்

இந்தப் பகுதியில், குறிப்பிட்ட ஒரு கருத்தை அதற்குரிய நேர்ச் சொற்களால் கூறாமல், சுவையான மாற்றுச் சொற்களால் சொல்லும் மரபு வழக்குகள் சில வருமாறு:- முதலில் நேர்ச் சொற்களும் பின்னர் மாற்றுச் சொற்களும் தரப்படும்.

இளம் வயதில் பிறந்த பிள்ளை; காலம் காத்தாலே பிறந்த பிள்ளை.

ஏமாற்றுதல், வஞ்சித்தல்: காதுகுத்தல், வாயிலே போட்டுக் கொள்ளுதல், தில்லாமுல்லு திருவாதிரை தெத்து மாத்து.

ஏமாற்றுக்காரன்: கேப்மாறி, முடிச்சிமாறி, மூணுதாளு. இறத்தல்: கண்ணை மூடிக் கொள்ளுதல், வாயைப் பிளத்தல், கட்டையைக் கீழே போட்டு விடுதல், பயணப்பட்டு விடுதல், போக வேண்டிய இடத்திற்குப் போய் விடுதல், மெய்யூருக்குப் போதல், அந்த லோகம் போதல், வைகுண்ட பதவியடைதல், கைலாய பதவியடைதல், சட்டையைக் கழற்றிக் கீழே போட்டு விடுதல், கட்டையை நீட்டி விடுதல், காலைக் கிளப்பிக் கொள்ளுதல், நிறைவேறி விடுதல்.

பெரிய திருடன்: முழுப் பாசுருட்டி

பெரிய புளுகன் : அல்டாப்பு, வண்டிப் புளுகன், மூட்டைப் புளுகன், அரிச்சந்திரன் வீட்டுக்கு அண்டை வீட்டுக்காரன்.

சிறை செல்லல்: பள்ளிக்கூடம் படித்தல், மாமனார் வீட்டிற்குச் செல்லல், கம்பி எண்ணுதல்.

கொஞ்சம் நகரு: ஒரு நெல்லுகனம் புரளு. கொஞ்சம்: ரவபோதும், ராவோண்டு (ரவையளவு). வாய்க்குப் புகையிலை கொடு: நாலாவது கொடு, (வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு, புகையிலை என்ற வரிசையில் புகையிலை நான்காவது அல்லவா?)

இறங்குதல்: இழிதல். வேகமாய் நட கொஞ்சம் காலைத் துரக்கிப் போடு. எறிதல்: கடாசுதல், கடாவுதல். -

தொந்தி பெருத்தவர்: முன்பளுவு, மானம் பார்த்தான்.

குனிந்து வளைந்த கிழம்: முட்டுகிற மாடு.

தெளிவின்றிக் குழப்புபவர்: கொதாப்படி.

உடல் பருத்தவர். தடிப் போத்து. தடியாப் பிள்ளை, பொத்த சாக்கு, ரோட்டு உருளை, பிள்ளையார்.

ஆங்கிலத்தில் பேசுதல்: பாஷையிலே பேசுதல்.

தெலுங்கில் பேருரீதல்: தெலுங்கிலே மாட்டுதல்.

கோயில் பூசை செய்தல்: கல்லைக் கழுவுதல்.

விளக்கு அணைத்தல்: திருவணைத்தல், பெரிசாக்குதல்.

திருமணம்: விளக்கேற்றி வைத்தல், கன்னி கழிதல், துணைதேடுதல், கால்கட்டு போடுதல், கழுத்திலே முடிச்சு விழுதல், கட்டிக் கொடுத்தல், கழுத்தை நீட்டுதல்.

சாக்கடை: சாலாவம், சாலவம், சாலம்.

சோம்புதல், பின்வாங்குதல்: பால் மாறுதல்.

கொட்டாவி: கோட்டுவாய்.

கணவனும் மனைவியும்: ஒரு தலைக்கட்டு.

பிரசவ காலம்: பேறுகாலம், போதுகாலம்.

பேடி பெட்டை மாறி, பொண்டுவ சட்டி

திருவிழா: திருநாள்.

பண்டிகை பெருநாள்.

தீப்பெட்டி வத்திப்பெட்டி,

போதாமை: எட்டாமூட்டி.

சிக்கனம்: செட்டும் சிறுக்கும்.

வயதான கிழங்கள்: தள்ளாதவரு, தள்ளாதது, பெரியவரு, பெரியம்மா, தள்ளாத பெரியவரு, தள்ளாத பெரியம்மா, தள்ளாத கிழம், கிழங்கட்டு.

உண்ணுதலைப் பற்றி எளிமையாகவும் அடக்கமாகவும் தெரிவித்தல்: வயிற்றைக் கழுவுதல், ஏதோ ரெண்டு வாயிலே போட்டுக் கொள்ளுதல், ஏதோ ரெண்டு வயிற்றை நிரப்புதல், ஏதோ கஞ்சி குடித்தல், ஏதோ தண்ணி குடித்தல், ஏதோ கஞ்சி தண்ணி குடித்தல், ஏதோ கொதிக்க வைத்துக் குடித்தல்.

எளிய முறையில் உணவு ஆக்குதல்: கஞ்சி எரிய விடுதல், ஏதோ கொதிக்க வைத்தல்.

ஓரளவு நல்ல உணவு : நல்ல கஞ்சி, நல்ல தண்ணி,

மிகவும் நிரம்ப உண்ணுதல்: கொத்துப் பிடித்தல், மூக்கைப் பிடிக்கச் சாப்பிடுதல், மூக்கைக் கிள்ளி வைத்து விட்டுச் சாப்பிடுதல், முழுங்குதல் (விழுங்குதல், குலையை அறுத்தல் - குடலை அறுத்தல் (குடல் அறுபடும்படி உண்ணுதல்), வெள்ளைப் பூண்டுத் திருப்பாட்டம் விழுங்கினான் என்றல்.

மிக்க உணவு : முறஞ்சோறு படி குழம்பு; மலை சோறு சமுத்திரம் குழம்பு.

உயர்ந்த உணவு இடுதல்: பொன்னைப் பொரித்து வெள்ளியை வறுத்துத் தங்கத்தைத் தாளித்துப் போடுதல்.

பெருந்தீனிக்காரன்: வயிறுதாரி, வவுத்தான் (வயிற்றான்), வண்ணான்சாலு.

நிலக்கடலை, வேர்க்கடலை: கடலைக்காய், மணிலாக் கொட்டை, மல்லா கொட்டை (மல்லாட்டை).

பல் உடையும்: பல்லு வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்ளும்.

பல்லை உடைத்து விடுவேன்: பல்லை எண்ணச் செய்துவிடுவேன், முப்பத்திரண்டு பல்லையும் தட்டிக் கையிலே கொடுத்து விடுவேன்.

உதை வேண்டுமா : உடம்பைப் பிடித்துவிட வேண்டுமா? உடம்பு ஒளதடம் கேட்கிறதா?

தூங்குதல் : தட்டிப் போட்டு முடங்குதல், சும்மா கொஞ்ச நேரம் கட்டையை நீட்டிப் போடுதல், கட்டையைக் கீழே போட்டு ஒரு புரட்டு புரட்டி எடுத்தல்,

குளித்தல் : உடம்பைக் கழுவுதல், கட்டையைக் கழுவுதல்.

பொறுமையாக : ஆர அமர, அமர, அமரிக்கையா, மெதுவா, மெள்ளமா.

பேதிக்கை சாப்பிடுதல்: மருந்து குடித்தல். (அந்தக் காலத்தில் பேதிக்கை மருந்தைத் தவிர வேறு மருந்து பெரும்பாலான மக்கட்குத் தெரியாது. அதனால், மருந்து குடித்தல் என்றால் பேதி மருந்து சாப்பிடுதலையே குறித்தது.)

காணாது போதல்: தாரை வார்ந்து போதல்.

திருட்டுத்தனமாக ஏமாற்றி எடுத்துக் கொண்டு போதல்: அடித்துக் கொண்டு போதல், தட்டிக் கொண்டு போதல், சுருட்டிக் கொண்டு போதல், கண்ணிலே மிளகாய்ப் பொடி தூவுதல்.

இழத்தல், பறிகொடுத்தல்: தலை முழுகல், தொலைத்துத் தலை முழுகல், எள்ளும் தண்ணியும் இறைத்தல், அவன் இழவுக்கு எள்ளும் தண்ணியும் இறைத்து எட்டாம் துக்கம் படைத்துவிட்டேன் என்று கூறுதல்.

சகுனத் தடையாயிற்று: கட்டுது, தாங்குது.

எதிர்பாராவிதமாய்: திடும்பிரவேசமாய்.

தற்செயலாய்: அகஸ்மாத்தாய்.

இவ்வாறு இன்னும் பல்வேறு மரபு வழக்காறுகள் உள்ளன. சிற்றுார்களில் சிறியவர்கள் பெரியவர்களை முறை சொல்லி அழைப்பதன்றி, மூத்தவர் - இளையவர் - நடுவிலவர் என்றும் அழைப்பர். பெண்களைப் பெரியவள் சின்னவள் என்று அழைப்பதன்றி, அவர்களின் பிறந்த ஊர்ப் பெயராலும் மக்கள் அழைக்கின்றனர். பொதுவாக ஒருவரையொருவர் வீட்டுப் பெயரால் குறிப்பிடும் வழக்கம் மிகுதியாயிருக்கிறது; சிற்றுார்களில் வீட்டிற்கு ஒரு பெயர் இருக்கும்; மற்றும் ஒருவரையொருவர் புனைபெயரிட்டு அழைத்துக் கொள்வதும் உண்டு; இந்தப் புனைபெயர் தாழ்வாகவும் இருக்கலாம்; அதற்காக எவரும் வருத்தப்படுவதில்லை. கணவரின் தமக்கையைச் ‘சின்னம்மா’ என்று அழைக்கும் வழக்கம் இப்பகுதியில் உண்டு.

சில மாவட்டத்தினர் ‘ழ’ என்னும் எழுத்தைச் சரியாக ஒலிப்பதில்லை. தென்மாவட்டத்தினர் சிலர் வாழைப் பழம் என்பதை ‘வால்ப் பலம்’ என்பர். வடக்கே சிலர் குழந்தையைக் ‘கொயந்தை’ என்றும், கழுத்து என்பதைக் கெயுத்து’ என்றும் ஒலிப்பர். ஆனால், திருமுனைப்பாடி நாட்டினர் வாழைப் பழம், குழந்தை, கழுத்து என ழகரத்தைத் தூய்மையாக ஒலிக்கின்றனர். இந்தப் பகுதியில் நான் என்பது ‘நானு’ எனப்படுகிறது. சில ஊர்களில் நீ என்பது ‘நீனு’ எனப்படுகிறது.

இவ்வாறு இன்னும் பல்வேறு வட்டார மரபு வழக்குகள் காணப்படுகின்றன. அனைத்தையும் விரிப்பிற் பெருகும்.

நாட்டுப் பாடல்கள்

இனி, இந்தப் பகுதியில் பாடப்படும் பல்வேறு வகை நாட்டுப் பாடல்கள் வருமாறு:

1. தாலாட்டுப் பாடல்கள்

“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
ஆரடிச்சு நீ அழுதாய் -
அழுதகண்ணு நீர்தளும்ப
அடித்தாரைச் சொல்லியழு -
ஆக்கினைகள் செய்திடுவோம்
தொட்டாரைச் சொல்லியழு -
தொழுவிலங்கு பூட்டிடுவோம்
அத்தை அடித்தாளா
அலரிப்பூச் செண்டாலே
மாமன் அடித்தானா
மல்லிகைப்பூச் செண்டாலே
ஆரும் அடிக்கவில்லை
அங்கொருவர் தீண்டவில்லை
தானே அழுகிறாளாம் -
தாயாரைக் காணாமல்
புலம்பி அழுகிறாளாம் -
பெற்றவளைக் காணாமல்
ஆராரோ ஆரரிரோ நீயாரோ நானாரோ.”

“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
பாலும் அடுப்பினிலே பாலகனும் தொட்டிலிலே
பாலகனைப் பெற்றெடுத்த பாண்டியரும் கட்டிலிலே
பாலைத்தான் பார்ப்பேனா பாலகனைத் தூக்குவேனா
சோறும் அடுப்பினிலே சுந்தரியும் தொட்டிலிலே
சோற்றைத்தான் பார்ப்பேனா சுந்தரியைத் தூக்குவேனா
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”


“ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
மாமாங்க மாடி மதுரைக் கடலாடி
மாமாங்க ராயருட மலர்ப்பாதம் பெற்றாளாம்
சீரங்க மாடி சீர்மைக் கடலாடி
சீரங்க ராயருட சீர்ப்பாதம் பெற்றாளாம்
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”

"ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
வெள்ளிக்கு வெள்ளி
விடியத் தலைமுழுகி
அள்ளி மிளகுதின்று
அனந்த விரத மிருந்து
கேதாரி நோன்பாலே
கிடைச்ச திரவியமே
ஆராரோ ஆராரோ ஆரிரரோ ஆராரோ
ஆறுஇரண்டு காவேரி
அதன் நடுவே சீரங்கம்
சாமி கிருபையாலே
தந்திட்ட திரவியமே
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ
நித்திரைபோ நித்திரைபோ
நேரமாச்சு நித்திரைபோ
சிற்றிலைபூந் தொட்டிலிலே
சிகாமணியே நித்திரைபோ
ஆராரோ ஆராரோ ஆரரிரோ ஆராரோ.”
"கண்ணே உறங்குறங்கு
கண்மணியே நீஉறங்கு
கண்ணான கண்ணுக்குக்
கண்ணாறு வந்ததென்ன
சுண்ணாம்பு மஞ்சளுமாய்ச்
சுற்றி எறிந்திடுவோம்
வெற்றிலையும் பாக்கும்
வீசி எறிந்திடுவோம்
ஆனையைக் கண்டுநீ
அலறி அழவேண்டாம்
அதட்டியே ஓட்டிவிட்டோம்
அஞ்சுகமே கண்வளராய்
பூனையைக் கண்டுநீ
புலம்பி அழவேண்டாம்
ஈனமற ஒட்டிவிட்டோம்
இளவரசி கண்வளராய்
வீதியிலே சாமி
வெகுவேடிக்கை யாகவரும்
தாதிமார் காண்பிப்பார்
தவம்பெறவே கண்வளராய்
கண்ணே உறங்குறங்கு
கண்மணியே கண்ணுறங்கு."

நீண்ட நாள் பிள்ளை இல்லாமல் இருந்து வயதான காலத்தில் பிறந்த பிள்ளைக்குப் பாடும் தாலாட்டுப் பாடல் பகுதி:

"ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ
கண்ணே உறங்குறங்கு
கண்மணியே நீஉறங்கு
இலைவதங்கிக் கொடிகாஞ்சி
இல்லையென்ற நாள்போக
மழைபேஞ்சி கொடிதுளுத்து
மாஞ்சிமுளைச்ச கண்ணே
கறுத்ததலை நரைச்சி
காலமெல்லாம் சென்றபோது
வறுத்தபனிப் பயறாம்
மாஞ்சமுளைச்ச கண்ணே
இடிஞ்சமதி லெழுப்பி
இருபுறமும் தூண்நிறுத்தி
குறைஞ்ச மதிலுக்குக்
கொடியேத்தவந்த கண்ணே
கண்ணே உறங்குறங்கு
கண்மணியே நீஉறங்கு
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ

(காஞ்சி - காய்ந்து பேஞ்சி - பெய்து மாஞ்சி - மாய்ந்து; ஏத்த ஏற்ற)

அம்மன் தாலாட்டுப் பாட்டு
பச்சை இலுப்பை வெட்டிப்
பால்வடியத் தொட்டிலிட்டு
தொட்டில் இட்ட அம்மானே
பட்டினியாய்ப் போகாதே
நெல்லும் களத்தினிலே
நீரும் கிணற்றினிலே
உரலும் உலக்கையும்
ஊருணியான் சத்திரத்தே
அம்மியும் குழவியும்
ஆவுடையார் கோயிலிலே
ஆக்கி யிடும்தாதி
ஆலரசம் ஆகிவிட்டாள்
எனக்கும் தலைநோவு
இருந்துபோ அம்மானே
நாழித் தனைகுற்றி
நல்லருமைப் பால் காய்ச்சி
உண்ணுப்போ அம்மானே
ஊர்வழியும் தூரமுண்டு
தங்கிப்போ அம்மானே
காதவழி தூரமுண்டு
ஆராரோ ஆரரிரோ நீயாரோ நானாரோ.”

2. குழந்தைப் பாடல்கள்

இந்தப் பகுதியில் வழங்கும் பல்வேறு வகைக் குழந்தைப் பாடல்களின் மாதிரிக்காகச் சில பாடல்கள் வருமாறு:

குழந்தை தவழும் பாடல்
“தப்பளாங் குட்டி தவழ்ந்துவரத்
தரைஎத்தனை பாக்கியம் செய்ததோ
குட்டி யானை குதித்துவரக்
குடில்எத்தனை தவம் செய்ததோ!"
1
குழந்தை உணவுப் பாடல்
"மம்மு சுடம்மா மம்முசுடு
மாணிக்கக் கையாலே மம்முசுடு
அள்ளித் தின்னம்மா அள்ளித்தின்னு
அமிர்தக் கையாலே அள்ளித்தின்னு
பொட்டு குத்தம்மா பொட்டு குத்து
பொன்னான கையாலே பொட்டுகுத்து"
2
குழந்தை நிலாப் பாட்டு
"நிலாநிலா ஓடிவா - நில்லாமல் ஓடிவா
மலைமேலே ஏறிவா - மல்லிகைப்பூ கொண்டுவா
நடுவிட்டிலே வை - நல்ல துதிசெய்
வெள்ளிக் கிண்ணத்தில் பால்சோறு
அள்ளிஎடுத்து அப்பா வாயில்
கொஞ்சிக் கொஞ்சி ஊட்டு
குழந்தைக்குச் சிரிப்பு காட்டு."
3
குழந்தை சாய்ந்தாடல்
"சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாயுங் காலத்திலே சாய்ந்தாடு
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு
சாலைக் கிளியே சாய்ந்தா
குத்து விளக்கே சாய்ந்தா
கோயில் புறாவே சாய்ந்தாடு
மாடப் புறாவே சாய்ந்தாடு
மணி விளக்கே சாய்ந்தாடு
சாய்ந்தா டம்மா சாய்ந்தாடு.”
4
குழந்தை கைவீசல்
“கைவீ சம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
பூந்தி வாங்கலாம் கைவீசு
பொருந்தி உண்ணலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய்த் தின்னலாம் கைவீசு
கைவி சம்மா கைவீசு.’’
5
குழந்தை கைதட்டல்
“தட்டாங்கி தட்டாங்கி
தட்டாங்கி கொட்டம்மா தட்டாங்கி
தட்டாங்கி தட்டாங்கி
தட்டாங்கி கொட்டுமாம் பெண்ணு
தயிரும் பழையதும் தின்னு
ஆப்பத்தைக் கண்டால் அமுக்குமாம் பெண்ணு
அழாதேன்னு சொன்னால் இருக்குமாம் பெண்ணு"
"தட்டாங்கி தைலம்மே
தண்ணிக்கு வெந்நிக்குப் போகாதே
தட்டான் கண்டால் மறுப்பான்
தட்டிலே வச்சு நிறுப்பான்
கோயில் மேளத்தைக் கொட்டுவான்
கும்பிட்டுத் தாலி கட்டுவான்."
6
காதணி விழாப் பாடல்
"கண்ணான கண்ணுக்குக்
காதுகுத்தப் போறோமென்னு
முந்நூறு சேர்திறந்து
முடியளந்து நெல்லுகுத்தி
ஐந்நூறு தென்னைமரம்
ஆளைவிட்டுக் காய்பறித்து
எள்ளைப் பொரிச்சிக்கொட்டி
இளந்தேங்காய் சீவிக்கொட்டி
பச்சைப் பயறதனைப்
பாங்காக வறுத்துப்போட்டு
பாவைப் பதமாக்கிப்
பக்குவமாய் அரிசிகிண்டி
அள்ளி வழங்குங்கள்
அருமைப் பிள்ளைகாப்பரிசி
கொட்டி வழங்குங்கள்
குழந்தைப் பிள்ளைகாப்பரிசி."
7
3. சிறுவர் விளையாட்டுப் பாடல்கள்

ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் பக்கத்தில் பக்கத்தில் அமர்ந்திருப்பளதைப் பார்த்து மற்றச் சிறுவர்கள் பாடுவது

"ஐயையோ ஐயையோ எனக்குஎன்னா
ஆம்படையான் பெண்டாட்டி சோடிசோடி
பொத்தல் செருப்பாலே போடுபோடு
ஆம்படையான் பெண்டாட்டி சோடிசோடி
பொத்தல் செருப்பாலே போடுபோடு
ஐயையோ ஐயையோ அதோபாருங்கோ."
1
தாங்கள் விளையாடும் உழக்கைத் தூக்கிக்கொண்டு போய்விட்ட காக்கையைப் பார்த்து உழக்கைப் போடுமாறு கேட்டுச் சிறுமியர் பாடுவது:
"காக்காச்சி உழக்கைத்தா
கம்பைக் கொட்டி உழக்கைத்தா
கம்மாசும்மா உழக்கைத்தா - எங்கள்
அம்மா அடிப்பாள் உழக்கைத்தா."
2

சிறுவருள் ஒரு குழுவினர் பெண் கேட்க, மற்றொரு குழுவினர் பெண் கொடுக்க மறுத்து விளையாடும் ஆட்டப் பாடல்:

(பெண் கேட்டல்)
"இஞ்சிலே பிஞ்சிலே பெண்ணுண்டோ - சிறு
எலுமிச்சங் காயிலே பெண்ணுண்டோ
(பெண் மறுத்தல்)
இஞ்சிலே பிஞ்சிலே பெண்ணில்லே - சிறு
எலுமிச்சங் காயிலும் பெண்ணில்லே
(பெண் கேட்டல்)
தாலி பீலி பெண்ணுண்டோ - சிறு
தாமரைக் காயிலே பெண்ணுண்டோ
(பெண் மறுத்தல்)
தாலி பீலி பெண்ணில்லே - சிறு
தாமரைக் காயிலும் பெண்ணில்லே."
3
வேடிக்கைப் பாடல்கள்
அதோ பாரு காக்கா
கடையிலே விக்கிது சீக்கா
பொண்ணு வரா சோக்கா
எழுந்து போடா மூக்கா."
"சின்னகுட்டி ஆம்படையான் சீமானாம்
சிங்கப் பூருகப்பலுக்குப் போனானாம்
அங்கே ஒருத்தியே கண்டானாம்
அடிபட்டு உதைபட்டு வந்தானாம்
ஆவட்ட சோவட்ட கொண்டானாம்
ஆக்கின சோத்த தின்னானாம்.’’
4
சிறுவர் சிறுமியர் ஒருவர் பின் ஒருவராகச் சாரையிட்டு வருவர். சிறுவர் இருவர் கைகோத்துக்கொண்டு நிற்பர்; இவர்களின் கோத்த கைகளின் கீழ்ச் சிறார்சாரை புகுந்து செல்லும். கடைசியில் வரும் சிறுவரைக் கைக்குள் வளைத்துக் கொள்வர்; மற்றவர் அவரை விடுமாறு கேட்பர்; இவர்கள் விடமாட்டேன் என்பர். இந்த விளையாட்டின்போது, சாரையில் செல்பவர்கள் ஒன்றிலிருந்து பத்து வரையுமாகப் பின்வருமாறு பாடிச் செல்வர்:
“ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரே பூபூத்து
இரண்டு குடம் தண்ணீர் ஊற்றி இரண்டே பூபூத்து
... ... ... .. ... ... ... ... ... ...
பத்துக் குடம் தண்ணீர் ஊற்றிப் பத்தே பூபூத்து..."

என்று பாடிச் செல்வர். சாரையில் உள்ள ஒவ்வொருவராகப் பிடித்துக் கொண்டதும், சாரையின் தலைவர் பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் தம் கணுக்கால், முழங்கால், இடுப்பு, கழுத்து ஆகியவற்றை முறையே ஒவ்வொன்றாகக் காட்டி, ‘அவ்வளவு பொன் தருகிறேன் விட்டுவிடு’ என்று கேட்பார்; அவர்கள் விடமாட்டோம் என்பர். இதற்குரிய பாடலாவது:

“இத்த மட்டும் பொன்னு தரேன் உடுடா துலுக்கா
-உட மாட்டேன் மலுக்கா
அத்த மட்டும் பொன்னு தரேன் உடுடா தலுக்கா
-உட மாட்டேன் மலுக்கா
கொட்டாஞ்சி பொன்னு தரேன் உடுடா துலுக்கா
-உடமாட்டேன் மலுக்கா
கூடைப் பொன்னு தரேன் உடுடா துலுக்கா
- உட மாட்டேன் மலுக்கா..."

கடைசியாக விட்டுவிடுவர்; ஆட்டம் முடிவுறும்.

பிடிக்கும் விளையாட்டுப் பாடல்

மரங்கொத்திக் குருவியைக் கேட்பதுபோலவும் அது பதில் சொல்வது போலவும் சிறுவர்கள் நடித்துப் பிடிக்கும் விளையாட்டு ஆடும்போது பாடுவது:

பையன் : “மரங்கொத்திக் குருவி!
குருவி : ஆஅஅ -ஓஓஓ
பை : வந்து பிடிச்சிக்கோ
கு : வரமாட்டேன் போ
பை : மரங்கொத்திக் குருவி
கு : ஏன் ஏன் ஏன்
தலையை நோவுது - தலைக்காணி போட்டுக்கோ
பாக்கு வேணும் பல்லைத்தட்டிப் போட்டுக்கோ
வெற்றிலை வேணும் - வேப்பிலையைப் போட்டுக்கோ
புகையிலை வேணும் - குதிரைவாலைப் போட்டுக்கோ
சுண்ணாம்பு வேணும் சுத்திசுத்தி ஒடிவா!
மரங்கொத்திக் குருவி ஆஅ ஒஒ!’

ஒருவர் பின் வரிசையாக நிற்கும் மற்றவரை இன்னொருவர் பிடிக்கும் விளையாட்டின்போது ஒருவர்க் கொருவர் மாறிமாறிப் பாடுவது:

ஆடு பிடிப்பேன் கோனாரே
ஏன் பிடிப்பே நாட்டாரே
கோழி பிடிப்பேன் கோனாரே
ஏன் பிடிப்பே நாட்டாரே
அடுப்பின் மேலே ஏறுவேன்
துடுப்பாலே அடிப்பேன்
ஊசி போட்டேன் - ஊதி எடு
காசு போட்டேன் - கண்டு எடு.”


திரிதிரி பந்தம்

பிள்ளைகள் வட்டமாக அமர்ந்திருப்பார்கள்; ஒருவன் தன் கையில் ஒரு சிறு துணியைப் பந்துபோல் சுற்றி வைத்துக் கொண்டு வட்டத்தைச் சுற்றி வருவான். அப்போது அவன் ஒரு பிள்ளையின் முதுகின் பின்னால் துணியைத் தெரியாமல் வைப்பான். உடனே அந்தப் பிள்ளை தன் பின்னால் துணி வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டு அதைத் தான் எடுத்துக்கொண்டு சுற்றி வரவேண்டும். இவ்வாறு சுற்றி வருபவர்கள் பாடும் பாட்டாவது:

"திரிதிரிபந்தம் - திருமால் பந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒரு கொட்டு
திரிதிரி பந்தம் - திருமால் பந்தம்
திரும்பிப் பார்த்தால் ஒருகொட்டு’
நிலா விளையாட்டு

நிலாக் காலத்தில் பிள்ளைகள் ‘நிழலா? வெய்யிலா?’ ஆட்டம் ஆடுவர். வெய்யில் என்பது நிலா வெளிச்சம். ஒருவனை மற்றவர் ‘நிழலா வெய்யிலா’ எனக் கேட்பர். அவன் வெய்யில் என்று சொன்னால், அவன் நிலா வெளிச்சத்தில் நின்று கொள்வான்; மற்றவர் நிழலில் நின்றுகொண்டு, வெய்யிலில் ஒடி ஒடிப் பின்வருமாறு பாடுவர்:

"வெய்யிலிலே நிக்கிறியே வெக்கங் கெட்டநாயே
வெய்யிலிலே நிக்கிறியே வெக்கங் கெட்டநாயே ::வெய்யிலிலே வந்தேனே வெக்க மில்லையோ
வெய்யிலிலே வந்தேனே வெக்க மில்லையோ’’

வெய்யிலில் வருபவர்களை வெய்யிலில் நிற்பவன் ஒடித் துரத்திப் பிடிப்பான். ஒருவன் நிழல்கேட்டு நிழலில் நின்று கொண்டால் மற்றவர் வெய்யிலில் நின்று நிழலுக்கு ஒடி ஒடிப் பின்வருமாறு பாடுவர்:

“நிழலிலே நிக்கிறியே நிலைகெட்டநாயே
நிழலிலே நிக்கிறியே நிலைகெட்டநாயே
நிழலுக்கு வந்தேனே வெட்கமில்லையோ
நிழலுக்கு வந்தேனே வெக்கமில்லையோ.”

4. கோலி விளையாட்டு பாடல்

சிறுவர் கோலிகுண்டு விளையாடும்போது ஒன்றிலிருந்து பத்துவரையும் எண்ணிக் கூறும் எண்பாடல் வருமாறு:

1. ஒக்காச்சி கொக்கு

2. இரட்டைப் பருந்து (அல்லது)

இரட்டைப் பிரம்பு

3. மூக்கிலே சொள்ளை (அல்லது)

மூக்கு சொளாங்கி

4. நாக்கிலே நந்தம்

5. ஐயப்பன் சொள்ளை (அல்லது)

ஐயப்பன் சோலை

6. அறுமுக தாளம்

7. எழுமா லிங்கம் (அல்லது)

எழுவா லிங்கம் 8. எட்டண கொட்டை

9. தோட்டிக்குத் தொம்பம் (அல்லது)

தொம்மன பீயம்

10. தோணிக்கு ராசா (அல்லது)

தோட்டிக்கு ராசா.

5. சடுகுடுப் பாடல்கள்

பிள்ளைகள் ஆடும் ‘சடுகுடு’ ஆட்டம் இந்தப் பக்கத்தில் பலி ‘பலிச்சான் கோடு’ என்று சொல்லப்படுகிறது. இந்த ஆட்டத்தின்போது இளைஞர்கள் மூச்சு பிடித்துக்கொண்டு பாடும் பாடல்களுள் சில வருமாறு:

“பலிபலி பலிபலி
பலிபலிக்குது நண்டு கடிக்குது
வரகஞ் சோறு மாரடைக்குறு
தண்ணி கொண்டா பிள்ளை தண்ணிகொண்டா
பாலுஞ் சோறும் மாரடைக்குது
தண்ணி கொண்டா தண்ணிகொண்டா
தண்ணி கொண்டா .... 1
"பலிபலிச்சான் கோடு அடிப்பானேன்
கையும் காலும் முறிவானேன்
கச்சேரிக்குப் போவானேன்
போவானேன் போவானேன்...2
“சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சப்பளாங்கி குடுகுடு குடுகுடு
வாகிட தோகிட வையட நக்கட
காலை முறியடா கட்டிப் பிடியடா
காலை முறியடா கட்டிப் பிடியடா
கட்டிப் பிடியடா பிடியடா பிடியடா
பிடிடா பிடிடா பிடிடா.....3
"சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
கீச்சு கீச்சடா கீரைத் தண்டடா
நட்டு வச்சேண்டா பட்டுப் போச்சடா
பட்டுப் போச்சடா, போச்சடா போச்சடா...4

"நான்தாண்டா ஒங்கொப்பன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிப் பிரம்பெடுத்து விளையாட வந்தேன்டா
தங்கப் பிரம்பெடுத்துத் தாலிகட்ட வந்தேன்டா
கோயில் பிரம்பெடுத்து சோதிக்க வந்தேன்டா
வந்தேன்டா வந்தேன்டா வந்தேன்டா.."

5

"காவெட்டி திருவெட்டி
காலுங் கீழே மண்ணைவெட்டி
இரும்புத் தகடடித்து
இந்திரானி கோட்டை கட்டி
சோளப் பொரி பொரித்து
சொக்கட்டான் சொக்கட்டான்
சொக்கட்டான் சொக்கட்டான்..."

6

"உச்சி உச்சி கம்மந்தட்டு
ஊட்ட பிரிச்சு கட்டு
காசுக்கு ரெண்டு கருணைக் கிழங்கடா
தோலை உரியடா தொண்டையிலே வையடா
தொண்டையிலே வையடா வையடா வையடா..."

7

"கறுப்புங் குதிரையுங் காலடியாம்
அதற்கு ரெண்டு வெண்டையமாம்
செருப்பு தைக்கிற செகநாதா
சேர்ந்து வாடா சண்டைக்கு
சேர்ந்து வாடா சண்டைக்கு - சண்டைக்கு..."

8

"சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
எள்ளுக்கா மேட்டுமேலே நான்
கொள்ளுக்கா பறிக்கப் போனேன்
வள்ளுவப் பண்டாரம் வந்து
வழியை மறித்துக் கொண்டான்
நான் திமிறிக் கொண்டேன்
திமிறிக் கொண்டேன் - திமிறிக் கொண்டேன்..."

9

"சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
காளை காளை வருகுது பார்

கறுப்புக் காளை வருகுது பார்
சூரியனுக்கு வட்டக் காளை
சொல்லிச் சொல்லி அடிக்குது பார்
அடிக்குது பார் அடிக்குது பார்."

10

"சடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு
சிக்சிக் தாரா கிளிமூக்கு தாரா
சிக்சிக் தாரா கிளிமூக்கு தாரா
கிண்டலா செய்யற கிண்டலா செய்யற
சடுகுடு சடுகுடு குடுகுடு குடுகுடு."

11

6. ஏழாங்காய்ப் பாடல்

இளம் பெண்கள் ஏழுகாய்கள் வைத்துக்கொண்டு உயரே தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடும் ஒருவகையாட்டம் இந்தப் பகுதியில் உண்டு. இதற்கு ‘ஏழாங்காய் விளையாட்டு’ என்பது பெயர். ‘காய் சுங்குதல்’ என்றும் இதனைச் சொல்வதுண்டு. பெண்கள் கூடிப் பாடிக்கொண்டே விளையாடும் இதுபோன்றதொரு விளையாட்டு இலக்கியங்களில் ‘அம்மானை’ என்று சொல்லப்படுகிறது. ஏழாங்காய் விளையாட்டில், ஒரு காயை மேலே தூக்கிப் போட்டுக் கீழே முதலில் ஒவ்வொரு காயாகவும், பின் இரண்டிரண்டு காய்களாகவும், பின் மூன்று மூன்று காய்களாகவும் பின் இன்னும் பல்வேறு வகையாகவும் எடுத்துக்கொண்டு மேலிருந்து கீழ்நோக்கி வரும் காயையும் பிடித்துக் கொள்வர். ஒவ்வொரு காயாக எடுக்கும்போது ஒவ்வோர் எண்ணிற்கும் ஏற்ற பாட்டுப் பாடுவர். மற்றும் பல்வேறு வகையாகக் காய் எடுக்கும்போதும் அந்தந்தக் காய்களின் அளவிற்கேற்பப் பாடுவர். இந்தக் காய் எண் பாடல்கள் பலவிடங்களில் பலவிதமாகப் பாடப்படுகின்றன; இருப்பினும், பாடல்கள் யாவும் பெரும்பாலும் ஒன்றுக்கொன்று ஒத்துள்ளன; சில பகுதிகளில் மட்டும் சிறுசிறு வேற்றுமைகள் உள்ளன. இனிப் பாடல் வகைகள் வருமாறு:

"பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணி கரையிலே தகுந்த மனையிலே
பூமாதேவி அம்மா பிள்ளை வரம்கேட்கிறாள்.

ஈரியோ ராகவா என்தம்பி கேசவா
மாட்டை மடக்குடா மாதவா.

முக்கோட்டிலே என்னைப் பெத்து
கப்பலிலே தாலாட்டி

நாங்குத்தி யம்மா நல்லம்மா
நடந்து வாடி கண்ணம்மா.
அஞ்சிலே பிஞ்சி அவளுட நெஞ்சி
அஞ்சிலே பிஞ்சிலே என்ன வாழை
கும்ப கோணத்திலே குலை வாழை.

ஆறுநலாறு - தண்ணீர்ப் பந்தல் ஆறு.

ஏழையிலே கிடக்கிறேனே என்தோழி ஈசுவரி
மாயாப் பறக்கிறேன்.

கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணு ரெண்டும் கறப்பான்
கறந்த பால் குடிப்பான்.

அக்காடி அக்காடி - அக்கா ஆம்படையான் வந்தாண்டி
தெருவைப் பெருக்கடி - தென்னம் பாயைப் போடடி
(அல்லது)
ஊட்ட (வீட்டை பெருக்கடி உள்ளே பாயைப் போடடி
கிட்டவரப் பார்த்து - கட்டையாலே அடிடி.

தட்டு ஒண்ணு - தாம்பாலம் ரெண்டு
சோளப் பொரிமூணு - சொக்கட்டான் நாலி.

பொத பொத பொன்னும் பொத
வரவர வைக்கோல் தழை
சுடசுட சுக்குத் தண்ணீர்."


"அல்லுக்கு சில்லக்கு காமாட்சி விளக்கு
திருவாரூர் திருச்செங்க நாடு
நாடுநல்ல நாடு - நல்ல பாம்பு தலையாட்ட

ஈருகுத்தற மாதவா இலைபறிக்கிற தூதுவா
மணத்தக் கார யாதவா.

முக்கோட்டு சிக்கோட்டு பாகற்கா
முள்ளில்லா ஏலக்கா.

நாவே நாவே இந்திராணி
நாவல் மரத்திலே பட்டாணி.

ஐவால் அரக்கு மஞ்சள்
தெய்வம் குளிக்கு மஞ்சள்.

அக்கூர் அடிவாழ அண்ணன் தலைவாழ.

ஏழலூர் எங்களுர் பெங்களுர்.

கீழ்க்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிரண்டும் கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே வளர்வான் செல்வக் குமரன்.

கையேந்தி கையேந்தி கடலைச் சுடலேந்தி
ஏந்தி யேந்தி நாதா என்பிறப்பே வாராய்.

புதையார் புதைப்பார் மகளார் மதிப்பார்
மதிகொண்ட ராசன் திருக்கோலம் போவான்
திருவாரூர் திருச் செங்கநாடு
நாடுநல்ல நாடு - நல்ல பாம்பு தலையாட்ட"


"கொத்தவரங்காய் அடுப்பிலே கொத்துசாவி இடுப்பிலே.

சாதா கம்மல் காதிலே சைன் அட்டிகை கழுத்திலே
புதுமாப்பிளை பொன்னம்பலம் போட்டதெல்லாம் பித்தளை.

ஈரிகோ ராகவா என்தம்பி கேசவா
மாட்டை மடக்கும் மகாதேவா.

முக்கோட்டு சிக்கோட்டு பாகற்காய்
முள்ளில்லாத ஏலக்காய்.

நான்கே நடந்துவா - பாம்பே படர்ந்துவா.

ஐவாள் அரக்கு மஞ்சா - பம்பாய் குளிக்கு மஞ்சா

கூறும் கூறும் சித்தப்பா
கூழு குடிக்கும் பெரியப்பா.

ஏழண்ணன் காட்டிலே
எங்க ளண்ணன் வீட்டிலே
மஞ்சா சரட்டுக் குள்ளே.
கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிலே கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே உண்பான் செல்வக் குமாரன்.

கையேந்தி கையேந்திக் கடலை சுடலேந்தி
ஏந்தி ஏந்தி நாதா என்பரப்பில் வாடா
பச்சைப் பிள்ளைக்கும் தாய்க்கும் பசுவேநாதா.

மார்தட்டு கீழ்தட்டு மாமி மறுதட்டு
சோளப் பொரித்தட்டு சோற்றை வடிகட்டு.

புதை புதை பொன்னம் புதை
வர வார வைக்கத் தாழை
சுடசுட சுக்குத் தண்ணி.

செல்லம் போட்டா காப்பித் தண்ணி
சர்க்கரை போட்டா டீத் தண்ணி.

கோங்காட கோங்காட கோகிலாம்பாள் தேரோட
பாம்பாட பாம்பாட பார்வதியம்மாள் தேரோட"

3


"பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணித் துறையிலே தகுந்த மனையிலே
பூமாதேவி யம்மா பிள்ளைவரம் கேட்கிறாள்.

அல்லல்ல அரசல்ல தித்திப்புப் பண்டம்
பாலாறு பழம்பழுக்கப் பலாச்சுளை.

இரட்டைக்குச் சிட்டை இராமனாத்தி முட்டை
கோழிக்குஞ்சு சப்பட்டை.

ஈரே இறுச்சிக்கோ பூவைப் பறிச்சிக்கோ
பெட்டிக்குள்ளே வச்சிக்கோ.

நான்கே நடந்துவா - பாம்பே படர்ந்துவா.
நாங்க ளாடும் பம்பரம் - சீதையாடும் சிதம்பரம்.

ஐவா குய்வா தட்டாத்தி
அழுக் கெடுப்பா வண்ணாத்தி
கூறும் கூறும் சித்தப்பா
கூழு குடிப்பார் பெரியப்பா.

ஏழைநீதி வாழை எங்கள் நீதி தோட்டம்
மணவாளத்து சர்க்கரை.

கீழ்காணி மேல்காணி கீழே அரைக்காணி
கண்ணிரண்டும் கறப்பாள் கறந்த பால்குடிப்பாள்
தேனிலும் பிறப்பாள் செல்வக் குமாரி.

ஈரோன் ரெண்டு
மாதாக் குண்டு மல்லிகைப்பூச் செண்டு.

பக்கா பக்கா லேலிலோ பறங்கிப் பக்கா லேலிலோ
குண்டு பக்கா லேலிலோ குடுகுடுத்தா லேலிலோ
வாங்கித் தின்னா லேலிலோ வட்டமிட்டா லேலிலோ.

மார்மார் ஒன்று - மத்தாப்பு இரண்டு
சோளப்பொரி மூன்று - சொக்கட்டான் நாலு
சோழி ஐந்து"


"சீ சிலுத்துக்கோ மாதுளங்கொழுந்து தண்ணியிலே
வெண்ணெய் சம்சாரப் பெண்ணை
சிலுக்கா கெண்டை மலுமலுக்கா கொண்டை
நாலகப்பை அரிக்கும் சட்டி
எடுக்கப் போனேன் தவறிப் போச்சு.

வெள்ளி முளைச்சிக் குச்சு விடிகாலம் ஆயிட்டுது
ஆலைக் குழாய் கூவிட்டுது அஸ்தகாலம் ஆயிட்டுது
இடியாப்பக் காரன் குடியைக் கெடுத்தான்.

ஈரி இறுச்சிக்கோ இலந்தம் பழுத்துக்கோ
ஏறி உலுக்கிக்கோ.

முக்கோட்டிலே பிள்ளை பெற்று - கப்பலிலே தாலாட்டி
நான்கே நான்கே நடந்துவா - பாம்பே பாம்பே படர்ந்துவா.

அஞ்சிலே பிஞ்சிலே என்ன வாழை
கும்பகோணத்திலே குலை வாழை.
பூ பொறுக்கி நாட்டிலே புடலங்காய் காய்ச்சுது
கா பொறுக்கி நாட்டிலே கடலைக்காய் காய்ச்சுது.

சிட்லா புட்லா காயே சீமை நெல்லிக் காயே
கடிச்சிப் பார்த்தா தெறிச்சிப் போகும்
கண்டங் கத்தரிக் காயே.

பக்காவே பக்காவே பாலடை விற்குது
எந்தத் தெருவிலே சந்தைத் தெருவிலே
வாங்கப் பணமில்லை வரிசை வைக்கத் தட்டில்லே."

5

"பொறுக்கி சிறுக்கி போறாளாம் தண்ணிக்கு
தண்ணி குடத்திலே தவழ்ந்த மலையிலே
பூமா தேவியம்மா பிள்ளைவரம் கேட்டாளாம்.

ஈரோன் ரெண்டு மாதா மணிக்கூண்டு
மல்லிகைப் பூச் செண்டு
முக்கோட்டு சிக்கோட்டு மூன்றாம் படிக்கட்டு
ஏழைக் கண்ணாட்டி தூது விளையாட்டி
துலுக்கன் பெண்டாட்டி.

கீழ்க்காணி மேல்காணி கீழே சுரக்கானி
கன்றுள கறப்பான் கறந்ததைக் குடிப்பான்
தேனிலே செல்லம் செல்வக் குமாரன்.

பக்கா பக்கா லேலிலோ பறங்கி பக்கா லேலிலோ
குண்டு பக்கா லேலிலோ குடுகுடுத்தா லேலிலோ
வாங்கித் தின்னா லேலிலோ வச்சிப் படைக்கிற லேலிலோ

அஞ்சு களாக்கா தும்பைப்பூ
அதுமேலே வாராள் ராசாத்தி
ஐவால் ரேக்கு பம்பாய் சிலுக்கு.

ஐவர் அரைக்கும் மஞ்சள்
தேவர் குளிக்கும் மஞ்சள்.

ஆக்கூரு சீக்கூரு அறிந்த களிக்கூரு
ஆக்கூரு மச்சான் பாக்கு வச்சான்
அதிலே ரெண்டு பணத்தை வச்சான்.
ஏழைப் பெண்ணு இடையப் பெண்ணு
மோரு விக்கிற மொட்டைப் பெண்ணு
மூத்தாரைக் கண்டால் பேசாளே."


பொறுக்கி சிறுகுருவி பொங்கும் மனக்குருவி
தந்தம் தனக்குருவி தாயில்லாப் பேய்க்குருவி
பேய்க்குருவி வாசலிலே பெண்பிறந்தால் ஆகாதோ.

ஆளா பொறுக்கி ஆசாரக் கள்ளி
துக்கம் துளசி பொறிவிளங்கா நாச்சி
விளையாடா நல்லாள் ஊஞ்சல் தாலாட்ட
இரட்டை இணைச்சிக்கோ தாவி அணைச்சிக்கோ
தட்டாரக் கோவிலிலே தாலி பிரிச்சிக்கோ.

4

"நாங்கள் சிங்கல் ஆடவே
ராயர் பட்டணம் கட்டவே
பட்டணத்தான் செட்டி மகன்
பாக்குத் தின்று பறிபோனான்

நாங்கே நீ நடந்துவா பாம்பேநீ படர்ந்துவா
அஞ்சிலே பிஞ்சி அவளுட நெஞ்சி
ஆக்கூரு வாசலிலே பாக்கை வெட்டிப் பந்தலிட்டான்.

ஏழைப் பெண்ணு எங்க பெண்ணு
மோரு விக்கிற மொட்டப் பெண்ணு
தயிரு விக்கிற தர்மப் பெண்ணு.

எட்டால் அடிச்சான் செட்டி மகன்
இடிஇடிச்சான் ராசா மகன்.

கோங்கா நங்கா வடிவச்சி
குண்ட லுரு தாதச்சி - இந்தாடி ஆயா
உன்பேரன் பொறந்தான் பார்த்துக்கோ
பழம் கொடு திருப்தியா நான் வருவேன்.

கட்ட வச்சவ யாரடி
லவுட்டு அடிச்சவ யாரடி
கட்டை கட்டை ஒன்று
கருவங் கட்டை இரண்டு
வேலங் கட்டை மூன்று
விறகு ஒடிக்கப் போனேன்
கத்தாழை முள்ளு - கொத்தோடு தச்சிது.
கீழ்க்கண்ணன் வெள்ளாழக் கீழண்டைத் தெருவிலே
சின்னண்ணன் பெண்டாட்டி சிறுக்கி சண்டை போட்டாளாம்
அப்போது பெரியண்ணன் அலறி அலறி அழுதானாம்."

“அல்லலேகு முத்தண்ணா ஆனைத்தடி யண்ணா
குள்ள நரியண்ணா கோவைப் பழமண்ணா
பொறுக்கி கிட்டே போனேன் பொங்கல் சோத்தைப் போட்டாள்
வாவென அழைச்சாள் வண்ணத் தடுக்கிட்டாள்
குத்துப் பருப்பிட்டாள் கூசாமல் நெய்விட்டாள்.

ஈரி குத்துற மாதுளை இலை பறிக்கிற தூதுளை
மணத்தக் காளி வேதளை.

முக்கோட்டு சிக்கோட்டு ராவணா
முத்து சரவணா.

நாங்குத்தி நல்லம்மா நடந்து வா கண்ணம்மா.
அஞ்சு களாக்காய் தும்பைப் பூ
அறுத்து கொட்டடி பண்ணைப் பூ.

ஆறுன்னா ஆறலியே அவிச்சா தணியலியே.
ஏழம்பூ தாழம்பூ ஏரிக்கரை சித்தம்பூ
காசிக்குக் களம்பூ.

கீழ்காணி மேல்காணி கீழே சுரக்காணி
கண்ணிரண்டும் கறப்பாள் கறந்ததைக் குடிப்பாள்.

அக்காடி அக்காடி அத்தானுக்கு என்னகறி
ஊசிப் பலாக்கொட்டை உசுட்டேரி மாங்கொட்டை
காட்டு மரவட்டை போட்டுக் குழம்பிட்டேன்."

8

"நாரத்தம் பழமே நான் வளர்த்த செல்வமே
நான் செத்துப் போனால் நீ எங்கே இருப்பாய்
ஆத்தங்கரை ஓரத்திலே அழுதுகொண் டிருப்பேன்
சித்தாத்தா வருவாள் சீத்தாப்பழம் தருவாள்
பெரியாத்தா வருவாள் பிரப்பம்பழம் தருவாள்
கப்பல்காரன் வருவான் கப்பல் ஏற்றிப் போவான்."

9

7. ஏற்றப் பாட்டு

ஏற்றப் பாட்டு முழுமையும் போடுவதென்றால் ஒரு தனி நூல்போல் விரியும். அதனால், மாதிரிக்காக ஒருசில பகுதிகள் மட்டும் வருமாறு:

"வள்ளியாரே பாடும் - பிள்ளையாரே வாழி
பிள்ளையாரே வேலும் - பிழைவராமல் காரும்
மழைவரக் கண்பாரும் மகாதேவா பாரும்
கந்தன் அருளாலே கனகவல்லி தாயே
காரும் இந்தவேளை கால்களே நோவாதே
கால்கை நோவாதே கண்ணாறு வராதே
எங்களைக் காரும் எழுந்தருள் தேவி

ஒன்னுடைய ராமா
இரண்டுடைய ராமா
மூனுடைய ராமா
நாலுடைய ராமா

நாலு பிள்ளையாரே நாவல்மரம் பாரே
ஆரை மறந்தாலும் ஐயனாரை மறவேன்
பேரை மறந்தாலும் பெருமாளை மறவேன்
புத்தி மறந்தாலும் பத்தி மறவேனே
பத்தி மறந்தாலும் கீர்த்தி மறவேனே
கீர்த்தி மறந்தாலும் கினவு மறவேனே
கினவில் மறந்தாலும் நினைவில் மறவேனே
ஐந்துடனே வாழி ஆறுடனே வாழி
ஏழுடனே வாழி எட்டுடனே வாழி
எட்டியடி வச்சேன் கட்டிச்சு பெருமாளே
தாவியடி வச்சேன் தாங்குது பெருமாளே
ஓங்கியடி வச்சேன் ஓடுது பெருமாளே
ஒண்ணேருட வாழி இருபதியா லொன்று."

மேலுள்ள ஏற்றப் பாட்டு, இந்தப் பகுதியில் பல இடங்களிலும் பாடப்படும் ஏற்றப் பாட்டின் தொடக்கப் பகுதியாகும். இனி, ஏற்றப் பாட்டின் நடுநடுவே பாடப்படும் சில அடிகள் வருமாறு:

'ஏண்டி யம்மா பெற்றாய் ஏத்தக் கட்டை தொங்க'
'எருமுட்டையில் பாம்பு இட்டிடுங்காண் தீம்பு'
'மாமனுக்கு ஒண்ணு மரக்காலாட்டம் பெண்ணு'

‘குதிக்காதடி பெண்ணே நிலைக்கா திந்த வாழ்வு
மாணிக்கமே குட்டி சாணிக்காடி நீ போறே’

‘அம்புபோன வேகம் தம்பிபோனான் காணாம்
அம்புக் கேத்த வில்லு தம்பிக் கேத்த பெண்ணு’

‘ஏத்தக் காரஐயா எந்தப் பெண்ணுவேனும்
நாலு பேரு போறாள் நடுவிலே இருக்கிறவ வேணும்’

‘முண்டக் கண்ணு குட்டி சண்டை போடகெட்டி
முண்டன் கிட்டே சொன்னேன் சண்டை வேண்டா மென்று
நட்டுக் கிச்சாம் ஏத்தம் குட்டி பண்ண மோசம்’

‘மாவு இடியேன் பெண்ணே மயிலத்துக்குப் போவோம்
மாவிடிக்க வில்லை மயிலத்துக்கு வல்லே
பூமுடியேன் பெண்ணே புதுச்சேரிக்குப் போவோம்
பூமுடிக்க வில்லை புதுச்சேரிக்கு வல்லே.’

8. நடவுப் பாட்டு

உழவர்கள் வயலில் நடவு செய்யும்போது பாடும் சில பாட்டுகள் வரமாறு:

"வள்ளி வள்ளி கொடி நடுவாய்
கிள்ளி வந்து கிழங் கெடுத்து
குழிதனில் நடுவ தென்ன
மானெடுத்து நடுவ தென்ன
மஞ்சம் குரல் கேட்ட தென்ன
பூனை ஓடி நடுவ தென்ன
புள்ள குரல் கேட்ட தென்ன

வெள்ளானை உழுதுவர வேடமக்கள் புல்பிராய
கருப்பானை உழுதுவர கள்ளமக்கள் புல்பிராய
சிவப்பானை உழுதுவர சேடமக்கள் புல்பிராய
சிவப்பு நாயும் சங்கிலியும் சேடருட கூட்டினங்கள்
கருப்பு நாயும் சங்கிலியும் கள்ளருட கூட்டினங்கள்

காடு வெட்டிக் கல்பொறுக்கிக்
கம்பு சோளம் தினை விரைக்க

மோடு வெட்டி முள்பொறுக்கி
முத்து சோளம் தினை விரைக்க
அள்ளி விரைச்சதினை அள்ளித்தின்ன மாளலையோ
சாய்ந்து விரைச்சதினை சாய்ந்துதின்ன மாளலையே
பிடிச்சி விரைச்சதினை பிடிச்சித் தின்னமாளலையோ
வீசி விரைச்சதினை வீசித்தின்ன மாளலையோ கொட்டி
விரைச்சதினை கூடித் தின்ன மாண்டுதம்மா
ஓராம் திங்களுக்கு ஓர் இலை தினைப் பயிர்
ஓர் இலைக்குக் காப்பு கட்டி ஒருபானை பொங்கல் வைத்து
ஈராம் திங்களுக்கு ஈர்.இலை தினைப்பயிர்
ஈர் இலைக்குக் காப்புகட்டி இருபானை பொங்கல் வைத்து
மூனாம் திங்களுக்கு மூனு இலை தினைப்பயிர்
மூனு இலைக்குக் காப்புகட்டி மூனுபானைபொங்கல் வைத்து
நாலாம் திங்களுக்கு நாலுஇலை தினைப்பயிர்
நாலு இலைக்குக் காப்புகட்டி நாலுபானை பொங்கல் வைத்து
ஐந்தாம்திங்களுக்கு ஐந்துஇலை தினைப்பயிர்
ஐந்து இலைக்குக் காப்புகட்டி ஐந்துபானை பொங்கல்வைத்து
ஆறாம் திங்களுக்கு ஆறுஇலை தினைப்பயிர்
ஆறு இலைக்குக் காப்புகட்டி ஆறுபானை பொங்கல் வைத்து
ஏழாம் திங்களுக்கு ஏழுஇலை தினைப் பயிர்
ஏழு இலைக்குக் காப்புகட்டி ஏழுபானை பொங்கல்வைத்து
எட்டாம் திங்களுக்கு இலை வதங்கிப் போகுதம்மா
ஒன்பதாம் திங்களுக்கு ஓலை ஒடிச் சுருங்குதம்மா
பத்தாம் திங்களுக்கு பட்சி வந்து இறங்குதம்மா
ஆராளோ காவல் வைப்பேன் என் அழகான சிந்தனைக்கு
சின்ன அண்ணன் பெண்டாட்டி
சீதையாளைக் காவல் வைப்பேன்
சிதையாளைக் காவல் வைத்து
சிந்திடும் தினைக்கதிர் காப்பேன்
பெரிய அண்ணன் பெண்டாட்டி
பெரியாளைக் காவல் வைப்பேன்
பெரியாளைக் காவல் வைத்து
பெரிதான தினை காப்பேன்.’’
1
"குன்று குன்றா மப்பு இறங்க ஏலேலம்படி ஏலம்
கொடிகாலும் மின்ன மின்ன ஏலேலம்படி ஏலம்
விடியற் காலம் பேய்ஞ்ச மழை ஏலேலம்படி ஏலம்
வெள்ள முண்டோ வள்ளியாரே ஏலேலம்படி ஏலம்
வெள்ளம் புரண்டுவர ஏலேலம்படி ஏலம்

கல்லு உருண்டு வர ஏலேலம்படி ஏலம்
காடு வெட்டிக் கல்பொறுக்கி ஏலேலம்படி ஏலம்
கம்பு சோளம் தினைவிரைச்சி ஏலேலம்படி ஏலம்
மோடு வெட்டி முள்பொறுக்கி ஏலேலம்படி ஏலம்
முத்து சோளம் தினைவிரைச்சி ஏலேலம்படி ஏலம்
வெள்ளானை உழுதுவர ஏலேலம்படி ஏலம்
வேட ரெல்லாம் புல்பிராய ஏலேலம்படி ஏலம்
கருப்பானை உழுதுவர ஏலேலம்படி ஏலம்
கள்ள ரெல்லாம் புல்பிராய ஏலேலம்படி ஏலம்
அள்ளி விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
அள்ளித் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
பிடிச்சு விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
பிடிச்சுத் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
வீசித் தின்ன மாளலியே ஏலேலம்படி ஏலம்
கொட்டி விரைச்ச தினை ஏலேலம்படி ஏலம்
கூடித் தின்ன மாண்டுதம்மா ஏலேலம்படி ஏலம்."

2

9. நெல் குத்துவோர் பாடல்

நெல் குத்திக்கொண்டே மாமியாரும் மருமகளும் மாறிமாறிப் பாடுவதுபோல் பெண்டிர் இருவர் பாடும் பாடல்:

"மூச்சு பிடிச்சி போடடிகுட்டி
முத்துமணி குத்தி சோறாக்கணும்
ஆச்சுதா அத்தே சாயங்காலம்
அள்ளிக்கோ இந்தா அரிசிமணி
மச்சான் வருவான் போடடிகுட்டி
மாளலியா இன்னும் நெல்லுகுத்தி
மாமியாரே அத்தே மஞ்சிபோச்சி
மச்சான் வரட்டும் மிஞ்சிபோச்சி
பொழுது போகுது போடடிபுள்ளே
பொன்னுமணி குத்தி பொங்கிடணும்
பொழுதும் பூட்டுதா அத்தையாரே
புடைச்சிதரேன் இந்தா புட்டரிசி
குழந்தை தூங்கிடும் குத்தடிசெல்லீ
கூட்டுகறி சோறு ஆக்கிடணும்
குழந்தைக்குப் பால்கொடுக்கணும் அத்தே
குத்திவிட்டேன் இந்தா முத்தரிசி."

10. சுண்ணாம்பு இடிப்போர் பாடல்

வீடு கட்டும்போது சுண்ணாம்பு இடிக்கும் பெண்கள் மாறிமாறிப் பாடும் பாடலில் ஒரு சிறு பகுதி வருமாறு:

"அக்கா தங்கச்சி அஞ்சு பேரண்ணா -
ஏலம்மா ஏலம்
அஞ்சு பேரண்ணா - ஏலம்மா ஏலம்.

ஆத்தங்கரை தாண்டமாட்டோண்ணா -
ஏலம்மா ஏலம்
தாண்டமாட்டோண்ணா - ஏலம்மா ஏலம்.

கொல்லத்துக்காரன் கொடுமைக்காரன் -
ஏலம்மா ஏலம்
கொடுமைக்காரன் - ஏலம்மா ஏலம்

கொஞ்சமும் மனம் இரங்கலியே -
ஏலம்மா ஏலம்
இரங்கலியே - ஏலம்மா ஏலம்."

1

"ஒருசுத்து வேப்பமரம் - ஆரியமாலா
வேப்பமரம் - ஆரியமாலா
ஓராண்டிலும் காவலில்லே - ஆரியமாலா
காவலில்லே - ஆரியமாலா
சித்திரம்போல் உருவங்கொண்டு - ஆரியமாலா
உருவங்கொண்டு - ஆரியமாலா
பிள்ளையாரை கேட்டா வரம் - ஆரியமாலா
கேட்டா(ள்) வரம் - ஆரியமாலா
பூமுடிச்சா பொன்னுருவி - ஆரியமாலா
பொன்னுருவி - ஆரியமாலா
பிள்ளைவரம் பலிச்சதுண்டே - ஆரியமாலா
பலிச்சதுண்டே - ஆரியமாலா."

2

11. வண்டி யோட்டும் பாடல்

"ஏய் ஏய் இந்தா...
செல்லுங்கடா சீக்கிரமாய் துள்ளிவிழும் காளைகளா

வெள்ளிநிலா காயுதுபார் வீதிஒளி பாயுதுபார்
பள்ளமேடு பார்த்து நீங்கள் பாய்ந்து போவீர் பாதையிலே
வெள்ளம்போல் எதுவரினும் வெட்டி செல்வீர் தோழர்களே
வீடுசெல்வோம் விரைவாக வெற்றிநடை போடுங்கடா
ஆடிசெல்லும் காதுமணி அலங்கரிக்கும் கழுத்துமணி
தேடிவரும் குளம்போசை தேன்பாயும் காதுக்குள்ளே
செல்லுங்கடா சீக்கிரமாய் துள்ளிவிழும் காளைகளா
ஏய் ஏய் இந்தா போ போ..."

12. பரதவர் பாடல்

"விடிவெள்ளி நம்விளக்கு - ஐலேசா
விரிகடலே பள்ளிக்கூடம் - ஐலேசா
அடிக்கும் அலை நம்தோழர் - ஐலேசா
அருமை மேகம் நமதுகுடை - ஐலேசா
பாயும் புயல் நம்ஊஞ்சல் - ஐலேசா
பனிமூட்டம் உடல்போர்வை - ஐலேசா
காயும் ரவிச்சுடர்கூரை - ஐலேசா
கட்டுமரம் வாழும்வீடு - ஐலேசா
பின்னல்வலை அரிச்சுவடி - ஐலேசா
பிடிக்கும் மீன்கள் நம்பொருள்கள் - ஐலேசா
மின்னல் இடிகாணும்கூத்து - ஐலேசா
வெண்மணலே பஞ்சுமெத்தை - ஐலேசா
முழுநிலாதான் நம்கண்ணாடி - ஐலேசா
மூச்சடக்கி நீந்தல்யோகம் - ஐலேசா
தொழும் தலைவன்பெருவானம் - ஐலேசா
தொண்டு தொழிலாளர் நாங்கள் - ஐலேசா"

(இந்தப் பாடலைப் புத்தகத்தில் படித்து மனப்பாடம் செய்துகொண்டதாக ஒருவர் கூறினார்.)

இவ்வாறு இன்னும் பல்வேறு வகைப் பாடல்கள் இப் பக்கத்தில் வழக்காற்றில் உள்ளன. இன்னும் ஊர் வாரியாகத் திரட்டினால் பாடல்கள் ஒரு தனி நூலாகப் பெருகி விரியும். சில ஊர்ப் பக்கத்துப் பாடல்கள் மட்டுமே ஒரளவு இங்கே தரப்பட்டுள்ளன. பாடல்களைப் போலவே கெடில நாட்டு மக்களின் வாழ்க்கை முறைகளும் ஒரளவே தரப்பட்டுள்ளன. இவற்றுள் சில தமிழக முழுவதற்கும் பொதுவாயிருப்பினும், கெடிலக்கரை நாட்டிலும் இவ் வாழ்க்கை முறைகள் உள்ளன என அறிந்து கொள்ளலாம்.