செயலும் செயல்திறனும்/இயன்றது அறிதல்
1. ஈடுபாடு
இனி, ஒரு வினையின் ஆழ அகலங்களை நாம் அறிந்து கொண்டபின், அவ்வினையில் நம்மால் செய்ய முடிந்த அளவுகளைத் தெரிந்து தேர்ந்து கொள்ளல் வேண்டும். தெரிதலும் தேர்ந்து செய்தலும் (குறள் 634 வினை - செயலுக்கு மிகவும் தேவையான ஆக்க உணர்வாகும். ஒரு வினையை நாம் முழு அளவில் செய்துவிட முடியாது. எந்த வினையையும் ஓரளவினதாகவே நம்மால் செய்ய இயலும் அகலக்கால் வைப்பதினும் ஆழக்கால் வைப்பது நல்லது. வினை பெரிதென்று எண்ணிச் சோர்ந்து விடவும் கூடாது. அதற்காகப் பெரிய வினைகளைத் தூக்கிப் போட்டுக் கொண்டு தொல்லைப்படுதலும் கூடாது. நமக்கு முடிந்த வினையளவு - ஒல்லும் அளவு - அறிந்து நாம் வினை செய்தல் வேண்டும்.
ஒல்வ தறிதல் அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்
(472)
என்பது திருக்குறள். 'அறிந்ததன்கண் தங்கி' என்பது அறிந்த அளவில் முழுவதும் ஈடுபட்டுச் செய்தல் என்பதை உணர்த்தும்.
தன்னால் முடிந்த அளவு செய்யும்பொழுதுதான், வினையும் சிறக்கும். அதனால் இன்பமும் கிடைக்கும். இல்லெனின் வினையும் சிறவாது. அதனால் துன்பமே எஞ்சும். எனவேதான் நமக்குச் செய்ய முடிந்த அளவு நோக்கிச் செய்தல் வேண்டும்.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்
(367)
முடிந்த அளவறிந்து, முடிந்த வகையிலெல்லாம் ஈடுபட்டால் தான் வினை சிறக்கும். முடியாவிட்டால் நமக்கு இயைபான வேறு ஒரு வினையைச் செய்ய முற்படலாம். அதிலேயே வாழ்நாளை ஈடுபடுத்தி உடலையும் மனத்தையும் வருத்திக் கொண்டு பொருளையும் இழந்து கொண்டிருக்க வேண்டியதில்லை.