செயலும் செயல்திறனும்/வினையறிவு பெறுதல்
1. நூலறிவு
ஒரு வினையை விரும்பித் தேர்ந்து கொண்டபின், அவ்வினையைப் பற்றிய முழு அறிவையும் நாம் பெறுதல், வினை முயற்சிக்கு அடுத்த படிநிலையாகும். ஒரு வினையை விரும்பிய அளவிலேயே அதைச் செய்வதற்குரிய அறிவு நமக்கு ஏற்பட்டுவிடாது. வினை விழைவு அல்லது விருப்பம் வேறு வினையறிவு வேறு விருப்பம் என்பது உயிருக்கு ஏற்கனவே தொடர்பான ஒரு பொருளின் மேல் தானாகச் செல்லும் மன நாட்டம் மனத்துக்குப் பிடித்த ஒரு தொழிலை நாம் மேற்கொள்ளத் திட்டமிட்டவுடன், அத்தொழில் பற்றிய அறிவை நாம் பல வழிகளிலும் பெற்றுக் கொள்ளுதல் மிகவும் இன்றியமையாததாகும். நம்பால் ஏற்கனவே உள்ள அறிவு நுட்பத்துடன் நாம் மேற்கொள்ள விருக்கும் தொழிலறிவு பற்றிய நூல்களை நாம் வருந்திக் கற்றல் வேண்டும். நமக்கு முன்பே உள்ள நிலை விருப்பம் என்னும் மனவுணர்வின் அடிப்படையிலேயே அமைந்து, அதுபற்றிய பொதுவான அறிவையே கொண்டதாகலின், அது தொடர்பான சிறப்பறிவைப் பெறுதற்கு, அத்தொழில் விளக்கம் பற்றிய நூல்களை நாம் கற்றலே, நமக்கு அத்தொழில் தகுதியை உண்டாக்க உதவும்.
ஒரு தொழிலை நாம் தெரிந்து கொள்ளாமல் அத்தொழிலில் ஈடுபடுதலோ, அல்லது அத்தொழில் தெரிந்தாரைக் கொண்டு செய்தலோ நன்மை பயவாது. தொழில் தெரிந்தவர்கள் அதனைச் சரியாகச் செய்கிறார்களா என்று அறிவதற்கும் , அவர்கள் அதனைச் சரிவரச் செய்யாவிட்டால் அவர்கட்கு அறிவுறுத்தற்கும் நமக்கு அத்தொழில் முழு அளவில் தெரிந்திருத்தல் வேண்டும்.
எனவேதான் நூலறிவாலும் செய்முறையறிவாலும் நாம் அத்தொழில்திறன் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு பெறாமல் ஒரு தொழில் செய்ய முற்படுதல், நமக்கும் பல வகையான இழப்புகளை ஏற்படுத்தும், தொழில் திறன் பெற்றவர்க்கு எவ்வகையான வினைத்தடையும் நேர்வதில்லை.
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை.
(636)
என்பது குறள்.
2. அறிந்து செய்தல்
இனி, ஒரு தொழிலை அறிந்து செய்பவர்க்கு அல்லால் பிறர்க்கு அவ்வினை ஏவப்படுதல் கூடாது, என்பது கவனிக்கத் தக்கது.
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.
(515)
எனவே, அறிந்து செய்தல் ஒரு வினைக்குச் சிறந்த திறனாகும். வினையறியாதவரை, நம்மிடத்து அன்புடையவர் என்பதற்காக ஒரு வினையில் அமர்த்துதல் கூடாது. நாமும் வினையறிவு பெறாமல் அதனை மேற்கொள்ளுதலும் கூடாது. ஒரு வினை பற்றிய நூலறிவோடு செயலறிவும் நமக்குத் தெரிந்திருத்தல் வேண்டும். செய்வினை, செய்வான், செயல் முறை - குறள் (677) என்று படிப்படியாக நாம் எண்ணிப் பார்த்தல் வேண்டும்.
3. தெளிவு பெறுதல்
ஒரு வினையைப் பற்றிய நூலறிவும் செய்முறை யறிவுந்தாம் ஒரு வினையில் நம்மைத் தெளிவுடையவர்களாக்கும். தெளிவு பெறாமல் வினை செய்வது எங்ஙன்? தெளிவு பெறாமல் செய்வது வினையில் தவறுகளை உண்டாக்கும்; அதனால் இழப்புகள் ஏற்படும். எனவே வினைத் தவறுக்காகவும் அதன்வழி ஏற்படும் இழப்புகளுக்காகவும் அஞ்சுகிறவர்கள், முதலில் வினையில் ஒருவகைத் தெளிவை ஏற்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.
தெளிவி வதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்
(464)
என்பார் திருவள்ளுவர். இந்தத் தெளிவு நூலறிவாலும், செயல் முறையறிவாலும் பெற வேண்டுவதாகும்.
ஒரு சவளி வாணிகத்தில் ஈடுபட விரும்புகிறவன் துணி மணிகள் பற்றிய அறிவையும், அவை மலிவாகக் கிடைக்குமிடங்கள், விலை கூடி விற்குமிடங்கள், அவற்றை விற்கும் காலம், அவற்றினைத் தேக்கி வைக்கும் காலம், பல வகையிலும் அவ் வாணிக வகையில் ஏற்படும் செலவுகள், வருகின்ற ஊதியம் இவற்றையெல்லாம் தெளிவுபட உணராமல் அவ் வாணிகத்தில் வெற்றி பெறுவது எப்படி?