செயலும் செயல்திறனும்/துணை வலிமை அறிதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search10. துணை வலிமை அறிதல்

1. முதலில் எண்ண வேண்டுவது

தான் செய்யப் புகுகின்ற வினைக்கு எதிரானவர்களின் அறிவு, மனம், செயல் இவற்றால் வரும் எதிர்ப்புகளை நன்றாக உய்த்துணர்ந்து அறிந்த ஒருவன் மனச் சோர்வுறாது தன் வினைகளில் மேன்மேலும் ஊக்கமாக உழைத்தல் வேண்டும் என்பது பற்றி முன்னர் ஒருவாறு தெரிந்து கொண்டோம். இக்கட்டுரையில், வினைக்கு வரும் எதிர்ப்புகளைப் போல் அதற்கு வரும் துணை நிலைகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

வலியறிதல் என்னும் அதிகாரத்துள், அறிய வேண்டிய வலிமைகளை நான்காகப் பகுத்த திருவள்ளுவப் பேராசான் துணை வலிமையை இறுதியில்தான் எண்ணிப் பார்த்தல் வேண்டும் என்று கூறுவார். வினை வலிமை, தன் வலிமை, மாற்றான் வலிமை இவற்றையே முறையாக முன்னர் எண்ணுதல் வேண்டும் என்னும் கருத்துள் பல உலகியல் அறிவு நிலைகள் பொதிந்துள்ளன. கூர்மையாகப் பார்ப்பார்க்கு இவை தெரியவரும். சிலர் தனக்கிருக்கும் வலிமையையே முதலாவதாகக் கருதிக் கொண்டு, அதைச் செய்ய என்னால் முடியும் என்று அளவிறந்த முனைப்புக் காட்டி ஈடுபடுவர். அது தவறு என்பது குறள் கொள்கை. முதலில் கவனிக்கப்பட வேண்டுவது, ஒரு வினையைப் பற்றிய தன்மைகளையே. அது பற்றிய அறிவு, உழைப்பு அழுத்தம், செயல் திறன் ஆகியவையே முதற்கண்டு அறியப் பெறவேண்டியவை.

2. அறிவும் அறியாமையும்

பொதுவாக நமக்கு எந்த வேலையும் செய்யத் தெரியும் என்னும் தவறான மனப்போங்கு ஒன்று உண்டு. அது தவறான சூழலால் எழுந்த அறியாமை முனைப்பாகும். அறிவு நிலையில் முதலில் கவனிக்கப்பட வேண்டியது அறியாமையே. நமக்கு என்னென்ன தெரியும் என்று எண்ணிக் கொண்டிருப்பதைவிட, என்னென்ன தெரியாதன என்று எண்ணிப் பார்ப்பதே அறிவுடைமையாகும். அறியாமையை அறிவதுதானே அறிவு. 'அறிதோறும் அறியாமை கண்டற்றால்' என்பார் திருவள்ளுவப் பெருந்தகை (குறள் 110). இக்கருத்து சொல்லப் பெறும் இடமும் மிக நுட்பமானது. அதைக் காலத்தால் அறிந்து கொள்ளுக.

இங்கு அறியாமை என்பதே முதலில் அறியத் தக்கது என்று மட்டும் தெளிவாக அறிந்து கொள்வது மட்டும் போதுவதாகும் அறியாமையைத் தெரிந்து கொண்ட பின்னர்தான் அறிவுக்கே ஊக்கம் பிறக்கும். அறிவு முனைப்பு தோன்றும். அதன் பின்னரே அறிவு இயக்கம் தொடங்குகிறது. அறிந்து கொண்டதைப் பற்றி எண்ணிக் கொண்டிருப்பவனுக்கு அறிவு இயக்கம் இல்லை. நமக்குத் தெரிந்தது பற்றி எண்ணியவுடன், அறிவு அங்கேயே அமர்ந்து கொள்கிறது. நாம் நிற்கின்ற இடந்தான் நாம் தேடிப் போக வேண்டிய இடம் என்று நாம் தெரிந்தவுடன், நாம் ஏன் மேலே போகின்றோம்? அங்கேயே உட்கார்ந்து கொள்கிறோம். அதன் பின்னர் நாம் வேறோர் இடம் போக வேண்டியிருந்தால்தான் நாம் எழுந்து நடக்கத் தொடங்குவோம். அதுபோல் அறிவு, அறிவை அறிவதற்குப் பயன்படக் கூடாது. அங்கு அதற்கு வேலையில்லை. ஒளியுள்ள இடத்தில் விளக்குக்கு என்ன வேலை? என்ன தேவை? இருள் உள்ள இடத்தில்தான் அது பயன்பட வேண்டும். பயன்படும். அப்பொழுதுதான் அங்குள்ள இருளைப் போக்குதற்கு நாம் வைத்திருக்கும் விளக்கின் ஒளி போதுமா, போதாதா என்று தெரிந்து கொள்ள முடியும். அப்படித் தெரிந்து கொண்டால்தான், ஒரு வேளை ஏற்கனவே உள்ள விளக்கின் ஒளி போதாத விடத்து, வேறு ஒளி மிகுந்த விளக்கைத் தேடலாம். அல்லது அதனைச் செய்யத் தொடங்கலாம். உலகில் இதுவரை தோன்றிய அறிவுழைப்பாளரெல்லாரும் தம்தம் அறியாமையைக் கண்டு அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டு உழைத்து வெற்றி கண்டவர்களே ஆவர்.

3. மூன்று வகைத் தொழிலறிவு

எனவே, ஒரு வினையைத் தெரிந்து கொண்டோம் என்பது, அது பற்றிய அனைத்து அறியாமைகளையும் போக்கிக் கொண்ட ஒரு நிலையே ஆகும். ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலைக்குள் ஒரு நாளோ இரு நாட்களோ நுழைந்து விட்டு வெளிவந்தவுடன், அந்தத் தொழிலைப் பற்றிய அறிவு நமக்கு வந்துவிடாது. அறிவு மூவகைப்பட்டது. தொழிலறிவு. தொழில் செய்யறிவு, தொழில் திருத்த அறிவு என்பன அவை. ஒரு தொழிலைப் பற்றித் தெரிந்து கொள்வது தொழிலறிவு (Theory) ஆகும். அத்தொழிலை நன்கு திறம்படச் செய்வது தொழில் செய்யறிவு (Practical) ஆகும். அத்தொழில் செய்கின்றபொழுது நம் வகையாலோ கருவிகள் வகையாலோ ஏற்படுகின்ற இடைத் தவறுகளைத் திருத்தி, ஒக்கிட்டு (Repair) மேலும் அத்தொழிலைச் சரிவர இயங்கும்படி கட்டமைத்தல் பற்றிய அறிவு (Mechanical) தொழில் திருத்த அறிவாகும். இம்மூன்று வகையான தொழிற் கூறுகளும் படிப்படியாக வளர்ச்சி பெறுவனவாகும். எனவே, ஒரு வினை, அல்லது தொழில், அல்லது செயல் பற்றிய அறிவு பெறுவது, வினை செயப் புகுவான் ஒருவன்

முதலில் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். வெல்லம் காய்ச்சும் வேலையில் ஈடுபடவேண்டும் என்று முனைபவன், வெல்லந் தின்னுவதை மனத்தில் நினைத்துக் கொண்டு செல்லக் கூடாது. அதைக் காய்ச்சி எடுக்கத் தெரியும் திறனை வைத்துத்தான் செல்லுதல் வேண்டும்.

4. பொருளே குறிக்கோளாக இருத்தல் கூடாது

இக்காலத்தில் பயன் கருதியே பலரும் தொழிலில் ஈடுபடுகின்றனர். கல்வி நோக்கமும் அப்படித்தான் உள்ளது. எந்தத் துறைப் படிப்புப் படித்தால் அதிகச் சம்பளம் உள்ள வேலை கிடைக்கும் என்று கல்வி கற்கப் புகின்றனரே தவிர, தமக்குள்ள இயற்கையறிவை, உணர்வை உணர்ந்து அது தொடர்பான கல்வி கற்றால்தான் தம் ஊக்கம் வெற்றி பெறும் என்று நினைப்பதில்லை. மாணவர்கள் மட்டுமல்லாது, பெற்றோர்களும் இதை நினைக்கத் தவறி விடுகின்றனர். எனவேதான், வாழ்க்கையில் பலரும் வெற்றி பெறுவதில்லை. பொருளைத் திருடியோ, ஏமாற்றியோ, கொள்ளை, கொலை செய்தோ ஈட்டுவது பெருமையன்று. அன்பில்லாமலும், தன்னை இழந்து கொண்டும், அறம் நோக்காமலும் ஈட்டிய பொருளை மற்றவர்களே கவர்ந்து கொள்வார்கள் என்பது உலக நெறி நூல் (1009). மேலும், அது கூறும் பின்வரும் கருத்துகள், பொருளை எவ்வாறேனும் ஈட்ட வேண்டும் என்னும் "கொள்கை"யுடையவர்கள் கவனிக்க வேண்டுபவையாகும்.

'பண்பிலான்' பெற்ற பெருஞ்செல்வம் பயன்தராமல் விரைவில் அழிந்துப போகும் (1000). தீதில்லாமல் வந்த பொருளே நல்ல செயல்களுக்குப் பயன்பட்டு, அறத்தையும் இன்பத்தையும் தரும் (754). அன்பில்லாமலும் அருளில்லாமலும் ஈட்டப் பெறுகின்ற செல்வப் பெருக்கம் தீது. அதை வரவேற்கக் கூடாது (755). மனச் சீர்மையில்லாதவர்களிடம் வந்து சேரும் செல்வம் எல்லாவற்றையும் அழித்தொழிக்கும் வேலையையே செய்யும் (1009) என்பன பொய்யாமொழியாரின் புகழுரைகளாகும்.

{{gap}எனவே, செல்வத்தை மட்டும் திரட்டும் நோக்கத்தில் கல்வியையோ, செயலையோ பயிலக்கூடாது. அறிவு நோக்கமும் அறநோக்கமும் செல்வப் பெருக்கத்தைப் பயனுடையதாக்கும். மகிழ்ச்சியுடையதாக்கும் என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும். ஆதலால், செயல் ஒன்று செய்ய நினைக்கும்பொழுது, அதனால் பணந் திரட்டுவதை மட்டும் முதல் நோக்கமாகக் கொள்ளுதல் கூடாது. பொருள் திரட்டுவதும் நோக்கங்கள் பலவற்றுள் ஒன்றாக இருக்கலாம் என்பது தவறாகாது. எனவே தான் வினையைத் தெரிந்து கொள்வது தான் வினை செய்யும் எண்ணத்தைத் தோற்றுவிக்க வேண்டும். வினைவலி எண்ணப் பெற வேண்டியவற்றுள் முதலானது என்று குறள் கூறும் கரணியதை நன்கு தெரிந்து கொள்ளுதல் வேண்டும்.

5. எல்லாருமே துணைக்கு வரமுடியுமா?

இனி, தன் வலியும் மாற்றான் வலியும் அடுத்தடுத்து எண்ணப் பெற வேண்டியவை என்று கண்டோம். இவ்வரிசையில் எண்ணப் பெறும் இறுதி நிலையே துணைவலி என்பது திருவள்ளுவர் கருத்து. சிலர் தமக்கிருக்கும் நண்பர்கள் கூட்டத்தையே பெரிதாக முன் நினைந்து உடனே ஒரு தொழிலில் ஈடுபட்டுவிடுவர். இது தவறு என்று கடிகிறார் திருவள்ளுவர். உலகில் உள்ளவர்கள் அனைவருமே நண்பர்களாக அமைந்தாலும் அவர்களைக் கொண்டு ஒரு செயலைத் தொடங்கி வெற்றி கண்டுவிட முடியாது. அவர்களின் வலிமை நான்காம் தரத்தினதே என்று கருதுதல் வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருமே தம் தம் வழியில் வாழ முற்படுவார்கள் இல்லையா? எனவே அவர்கள் எல்லாரும் நமக்குத் துணைவருவார்கள் என்பதை எண்ண முடியுமா ? அவரவர்கள் செயலைக் கவனிக்கவே அவரவர்களுக்குச் சரியாக இருக்கும் என்பதுடன், இனி அவரவர்களுக்கென்று தனித்தனியாகச் சுற்றமும் உற்றமும் உண்டு. நண்பர்கள் இருவரும் இளமைப் பருவத்தில் தங்களைத் தாங்களே அறிந்தவர்களாகையாலும், பொருளிட்டும் முயற்சி அக்கால் தலையெடுக்காதிருக்குமாகையாலும், அவர் தம்மை வந்து சூழும் குடும்பச் சுமைபற்றி அவர்கள் அக்கால் உணரார் ஆகையாலும் ஒருவர் பணிக்கு ஒருவர் துணை நிற்பதாயும் தோள் கொடுப்பதாயும் மிக்க ஆரவாரமாய் அக்கால் பேசிக் கொள்ளலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல ஒருவரினும் ஒருவர் திருமண அமைப்பு, பொருள்நிலை, அறிவுநிலை, செயல்நிலை இவற்றால் சிறந்து விளங்க விளங்க, மற்றவர்க்குப் பொறாமையும், காழ்ப்பும், கெடு நினைவும், இகலும், பகையும் வந்து மனத்தை இருளாக்கி விடுகின்றன. அக்கால், அவர்கள் தங்கள் ஒருவர்க்குள் ஒருவர் துணையாகி நில்லார். பகையாகி நிற்பர். வெளிப்படப் பகையென்றில்லையானாலும், மனத்துள்ளேனும் மேற்கூறிய தீயுணர்வுகள் வந்து அலைமோதிக் கொண்டிருக்கும். அதனால்தான் துணைவலிமையை இறுதியில் வைத்து நாலாம்படியாக வைத்துப் பேசுவர் திருவள்ளுவர் பெருமான்.

6. நண்பர்களின் தன்மை

இனி, ஒரு வினைக்குத் துணையாக வந்து வாய்ப்பவர்கள் அல்லது நண்பர்கள் - அனைவருமே நல்லவர்களாக இருந்துவிடுவார்கள் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. நண்பர்கள் என்போர் எப்பொழுதுமே அல்லது பெரும்பாலும் இடையில் வந்தவர்களாகவே தாம் இருப்பர். பிள்ளைப் பருவந்தொட்டு, இறுதிக் காலம் வரையில் நண்பர்களாக அமையும் வாய்ப்பு, இலக்கம் பேர்களில் ஒருவர்க்குக் கூட வாய்ப்பது அருமை. எனவே, பெரும்பாலானவர்கள் பலவேறு சூழல்களில், பலவேறு

கொள்கைகளுக்காக, பலவேறு தேவைகளின் பொருட்டு, நண்பர்கள் ஆனவர்களாகவே இருப்பர். அவர்களெல்லாரும் சூழல்கள் மாறும்பொழுது, கொள்கைகள் வலிவடையும் பொழுது, அல்லது துன்பம் நேரும்பொழுது, தேவைகள் நிறைவு பெற்றவுடன், அல்லது நிறைவு பெறாது என்று தோன்றியவுடன், நட்பில் தளர்ந்து அல்லது விலகி அல்லது பகையாகிப் போய்விடுவார்கள். அரசியல் காரணமாக, கொள்கைகள் காரணமாக, அல்லது கட்சிகள் காரணமாக, பொருள் காரணமாக, அல்லது கலைகள் தொடர்பாக, அல்லது குடும்ப ஈடுபாடு அடிப்படையில், தொழிலடிப்படையில் நட்பு வைத்த பெரும்பாலார்களின் நிலை இப்படியே. அன்புமுறையாக நட்பு வைத்தவர்களே பிற எக்காரணங்கள் தொடர்பாகவும் விட்டு விலகாமல், கை நெகிழ்த்துக் கொள்ளாமல் என்றும் இருப்பர். இவற்றுள் எதிலும் தொடர்பில்லாமல் அறிவு அடிப்படையில் நட்புச் செய்வோரும் உண்டு. அவர்களுக்கிடையிலும் நாளடைவில் இருவர் உள்ளங்களையும் இறுகச் செய்யும் அன்பு தோன்றாவிடில் பிளவு ஏற்படுவது உறுதியே. அறிவு மட்டுமே ஒரு நட்புக்குக் காரணமாக இருந்து விடுவது இயலாது. அறிவு வேறுபாட்டுணர்வுகளை வளர்க்கக் கூடிய ஒருணர்வு பகுத்தாய்கின்ற தன்மையது அது. எனவே அறிவொன்றே காரணமாக நட்பு வைப்பவர்களின் தொடர்பு விரைவில் பிளவுப்பட்டுப் போக வாய்ப்பேற்படும். அந்நிலைகளிலெல்லாம் அன்புணர்வைத் துணையாகக் கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்ளாதவர்களிடம் பகையுணர்வு கூடக் கால்கொள்ளும். பகை பின்னர் கடும் பகையாக மாறி, ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளும் மனப்பான்மையைக் கூடத் தோற்றுவித்து விடும்.

7. நட்பின் சிறப்பு

உண்மையான நட்பு என்பது உயிரொடு கலந்த அன்புணர்வால் தோன்றுவது. அது பல பிறவித் தொடர்புடையது. உலகில் உள்ள எல்லாத் தரப்பினருக்கும் நட்பு அடிப்படையானது. தேவையானது. நட்புச் செய்யாத மாந்தன் ஒருவனும் இருக்க முடியாது. ஒருவன் அரசனாயிருக்கலாம். அமைச்சனாய் இருக்கலாம். தொழிலாளியாக விருக்கலாம். படை வீரனாய் இருக்கலாம். அதிகாரியாக விருக்கலாம். இன்னும் ஏழையாக, பணக்காரனாக, கலைஞனாக, உழவனாக, திருடனாக ஒழுக்கமில்லாதவனாக, இன்னும் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் நண்பனில்லாதவனாக இருத்தல் முடியாது. இவ்வுலகில் உள்ள எல்லாருக்குமே நண்பர்கள் இருந்தாக வேண்டும். மக்கள் அனைவர்க்குமே நட்புணர்வு பொதுவானது. ஆகவே, நட்பைப் பற்றி அனைவரும் விரிவாக, நுட்பமாக, கட்டாயமாகச் சில உண்மைகளைத் தெரிந்து கொண்டே ஆகல் வேண்டும். எனவேதான்,

இதன் இன்றியமையாமையைக் கருதிய திருவள்ளுவப் பேராசான், தாம் எடுத்துக்கொண்ட பிற பிற செய்திகளைப் பற்றியெல்லாம், ஓரதிகாரத்தின் பத்துக் குறள்களிலோ, இருபது அல்லது முப்பது குறள்களிலோ விளக்கிச் சென்றவர் நட்பைப் பற்றி மட்டும், நட்பு, நட்பாராய்தல், பழைமை, தீ நட்பு, கூடா நட்பு, இகல் முதலிய ஆறு அதிகாரங்களில் வெளிப்படையாகவும், நேரடியாகவும், பெரியாரைத் துணைக்கோடல், சிற்றினஞ் சேராமை, பகைமாட்சி, பகைத் திறத்தெரிதல், உட்பகை, பெரியாரைப் பிழையாமை முதலிய ஆறு அதிகாரங்களில் மறைமுகமாகவும், நுட்பமாகவும் விளக்கியதுடன் நில்லாமல் பெண்டிரொடு கொள்ளும் நட்பு பற்றி, பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் ஆகிய இரண்டு அதிகாரங்களிலும், நண்பர்கள் வழியாகத்தான் ஒருவன் கட்குடியனாகவும், சூதாடியாகவும் ஆகின்றான் என்பதைத் தெளிந்து, கள்ளுண்ணாமை, சூது ஆகிய இரண்டு அதிகாரங்களிலும், இவற்றால் நோய்வாய்ப்பட்டவன் விடுபட மருத்துவர் நட்பை நாட வேண்டும் என்று கருதி மருந்து என்னும் ஓரதிகாரத்தையும் ஆக மொத்தம் பதினேழு அதிகாரங்களில், நூற்றெழுபது குறட்பாக்களில் அளாவியும் விளக்கிப் போந்ததுடன், நட்பு என்றொரு தனியியலையும் வகுத்துக் கூறினார் என்று அறிதல் வேண்டும். இவையன்றி அன்புடைமை, விருந்தோம்பல், இனியவை கூறல், செய்நன்றியறிதல், பிறனில் விழையாமை, புறங்கூறாமை, பயனில சொல்லாமை, ஈகை முதலிய அதிகாரங்களிலும் நட்புச் செய்வானுக்கு இருக்க வேண்டிய பண்புகள், எதிர் நேரும் குறைகள் இவற்றை யெல்லாம் பொதுவாகவும் அதேபொழுது மிகமிக விளக்கமாகவும் கூறிய கருத்துகள் அனைத்தும் கவனிக்கப் பெற வேண்டியனவாகவும் சுட்டுகின்றார்.

8. வினைத் தொடர்புள்ள நட்பு

இனி, வினை செய்யப் புகுவானுக்கும் நட்பு துணையாக வேண்டியுள்ளது. இது பற்றி முன்னரே ஓரளவு கூறப்பெற்றது. வினை செய்யப் புகுவானுக்கு ஏற்படும் தட்பு வினைத் தொடர்புடையதாகத் தான் இருக்க முடியும். இருத்தல் வேண்டும். எனவேதான் அதை நட்பு என்று குறியாது, துணை என்று குறிப்பிடுவார் குறளார். திருக்குறளில் துணை என்ற சொல், அளவு என்னும் பொருளைத் தவிர, இரண்டு பெயர்களை மட்டுமே சுட்டும் சொல்லாக அமைந்துள்ளது. ஒன்று மனைவி, இரண்டு துணைவர். அஃதாவது வினைக்குத் துணையாக வரும் நண்பர். மனைவியைத் துணை என்றது, இல்லற வாழ்க்கையில் அவள் இறுதி வரையில் வர வேண்டியவள் என்பதற்காகவும், அவள் தன் வாழ்வில் பாதி உரிமை பெற்றவள் அடிமையல்லள் - என்பதற்காகவும், தன் இன்ப துன்பங்களில் அவள் ஒருத்திக்குத்தான் பகிர்ந்து கொள்ளும் பங்குண்டு என்பதைக் குறிக்க

வேண்டியும் என்று கருதுதல் வேண்டும். இனி, நண்பனைத் துணை என்றது அவன் தான் செய்யப் புகும் வினைக்கு மனைவி போல் நெருங்கிய தொடர்புடையவன். அச்செயலால் வரும் ஊதிய இழப்பில் பங்கு கொள்ளற்குரியவன், தம் வினைக் கமுக்கங்களைப் பகிர்ந்து கொள்ளத் தகுதியுடையவன் என்பதன் பொருட்டே என்று தெளிதல் வேண்டும்.

9. தன்னலமற்ற அன்பும் அறிவும்

தனியாக வினை செய்வதுடன், ஒரு துணையொடு வினை செய்வது பொருள்நிலைக்கும் ஏற்றது. எனவேதான், துணை நலம் ஆக்கம் தரும் (55) என்று திருவள்ளுவர் கூறுவார். துணையிருந்து வினை செயத் தொடங்கினால் இழப்பிலும் பகுதி ஊதியம் ஆகும். ஆனால் வினைக்குத் துணையாக வருபவர் வெறும் வினைத் துணையாக மட்டும் இராமல் ஒரளவு நட்புணர்வும் கொண்டு விளங்குதல் வேண்டும். நட்புணர்வுக்கு அன்பே அடிப்படை, கரவான அன்பும், செருக்கான அறிவுணர்வும் என்றுமே வினைக்குத் துணையாக வருதல் இயலாது. தன்னன்பே அன்பு என்பது தன்னறிவே அறிவு என்பது போலும் ஒரு செருக்குணர்வினதே! உண்மை அன்புள்ளவனே பிறரையும் அன்புள்ளவர்களாகக் காண முடியும் அதுபோல் உண்மையான அறிவுள்ளவனே பிறரிடம் அறிவு இருப்பதாகக் கருத முடியும். அன்புக்கு எல்லையில்லை. அது பரந்துபட்டுப் பாயும் நீர் போன்றது. அதை எல்லைப்படுத்தி, அணைக்கட்டித் தேக்குங்கால் அது தன்னலமாக மாறுகிறது. அது போல அறிவுக்கும் எல்லையில்லை. அதுவும் பரந்துபட்டு எரியும் தீப் போல்வது. அதை எல்லைப்படுத்தி சுவர்கட்டி அடக்குங்கால் அதுவும் தன்னலத்திற்கே பயன்படுகிறது. தன்னலம் என்பது தனக்கும் தன்னைச் சார்ந்தவர்க்குமே பயன்படும் ஒரு குறுகிய உணர்வு எல்லைகளைத் தாண்டி வெளியே வந்து, பலருடன் ஊடாடுபவனே . உறவாடுபவனே - தன்னலமற்ற அன்பினனாகவும், தன்னலமற்ற அறிவுடையவனாகவும் இருக்க முடியும். அப்படிப்பட்ட மனப் பாங்குள்ளவனே வினைக்குத் துணையாகும் தகுதியுள்ளவன் ஆவான். அவனே வினைக்குத் தக்கவன். அவனே பிறரொடு கலந்து பழகும் தன்மையுள்ளவன். அவனே செயலுக்குரிய வாய்ப்பைப் பெற முடியும். உருவாக்கவும் முடியும்

10. பொதுவுணர்வு தேவை

செயல் என்பது ஒரு குறுகிய இடத்தில் மட்டும் அடங்குவதாக இருப்பின் அது பெரும்பாலார்க்குப் பயனளிக்காது. மாந்தனிடம் தோன்றும் எந்த உணர்வுமே பொதுவுணர்வாக மாறும் தன்மையுடையது. தான் ஒழுக்கமாக இருக்கும் உணர்வுடையவன், தன்னளவில் மட்டும் ஒழுக்கவுணர்வுள்ளவனாக இருந்தால் போதாது. தன்னைச்

சார்ந்தவர்களிடமும், அவர்களையும் கடந்த பிறரிடமும் அந்த ஒழுக்கவுணர்வை வருவித்தல் வேண்டும். தன்னை மட்டும் வெளிப்படுத்திக் கொண்டிருப்பது ஒளி ஆகாது. பிறவற்றையும் வெளிப்படுத்திக் காட்டவல்லதே ஒளி மேலும் அஃது எவ்வளவுக் கெவ்வளவு மிகுதியான பொருள்களை வெளிப்படுத்தவும், ஒளிப்படுத்தவும் வல்லதோ, அந்த அளவுக்கு அது பேரொளி. அப்பேரொளி போலவே மாந்தனுக்குள்ள அன்பு, அறிவு, பண்பு, பயன் முதலியவை பரந்துபட்டு விரிந்து உலகை மலரச் செய்தல் வேண்டும். அம்முயற்சியே வாழ்க்கை எனப் பெறும். இவை தவிர்த்துத் தான் தானாக மட்டுமே இருப்பது வாழ்க்கையன்று. ஒருவன் தன்னையிழந்து தாமாக மாறுவதையே அன்பு வாழ்க்கை, அருள் வாழ்க்கை, அற வாழ்க்கை, வாழ்வாங்கு வாழும் வாழ்க்கை என்று கூறுவர் சான்றோர். அத்தகைய வாழ்க்கையை நோக்கிப் போய்க்கொண்டிருப்பவனே மாந்தத் தகுதியுள்ளவன். அவனே தக்கவன். அத் தக்கவனைத் தேர்ந்தே ஒரு வினைக்கு செயலுக்குத் துணையாக்கிக் கொள்ள வேண்டும். ஏனெனில் உலகில் செய்யப் பேறும் வினைகள் அனைத்தும், பொதுநலம் கருதியதாகவே இருத்தல் வேண்டும். பொது நலத்துள் தன்னலமும் இயல்பாகவே அடங்குமாகலின் வினை நோக்கம் தன்னலத்தைக் கருதியதாக மட்டும் அமைந்துவிடக் கூடாது. அவ்வாறானால் வினைப் பயனும் குறுகியதாக அமைந்து விடும். தன்னையும் தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்களினத்தின் நலனையும் அளாவிட அமைந்ததாகவே வினைகள் இருத்தல் வேண்டுமாகலின், தக்கவர்களையே அவ்வினைக்குத் துணவர்களாக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். தக்க துணைவர்கள் அமைத்துக் கொண்டு இயங்கும் ஒரு செயலைப் பகைவராலும் அழித்துவிட முடியாது என்பது திருவள்ளுவம்.

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்

செற்றார் செயக்கிடந்த தில்

(446)