செயலும் செயல்திறனும்/எதிர்ப்புநிலை வலிமையறிதல்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
9. எதிர்ப்புநிலை வலிமையறிதல்

1. ஒவ்வொரு வினைக்கும் ஒர் எதிர்வினை உண்டு

வினைசெயப் புகுவான், தன் வலியைத் தானே நன்குணர்ந்த நிலையில், அந்த வினையில் துணிவுடன் ஈடுபடலாம். ஆனால் அவ்வாறு ஈடுபடுமுன், அவ்வினைக்கு முன்னாகவுள்ள எதிர்ப்பு நிலைகளையும் அறிந்து கொள்ளுதல் மிகவும் இன்றியமையாதது. உலகில் எதிர்ப்பின்றி எந்த இயக்கமும் இல்லை. ஒவ்வொரு வினைக்கும், அதே ஆற்றலுடைய நேர் எதிர்வினையுண்டு என்பது அறிவியல் கோட்பாடு. இயற்கை வினைகளுக்கு மட்டுமின்றி, மாந்த முயற்சிகளுக்கும் எதிர்ப்பு வினைகள் உண்டு. வினையும் அதற்கு எதிர்வினையும் சேர்ந்துதான் வினையியக்கம் உருவாகிறது. மின்சாரத்தில் நேர் மின்னாற்றல் எதிர் மின்னாற்றல் என இருவகை ஆற்றல் நிலைகள் உண்டு என்பதைப் பலரும் அறிவர். இவை இரண்டும் சேர்ந்த பின்தான் மின்னாற்றல் இயங்குகிறது. அது போலவே ஒரு வினை யியக்கத்திற்கு எதிர்ப்பு வினையியக்கம் மிகவும் இயல்பானது. இவ்விடத்தில் இயற்கையமைப்பின் ஒர் இயக்கக் கூறை நாம் நன்கு உணர்ந்து கொள்ளல் வேண்டும், எதிர்ப்பின்றி எந்த இயக்கமும் சிறப்புறாது. இஃது ஓர் இயற்கைத் தேர்வு நிலை.


2. எதிர்ப்பு இயற்கையே

ஒருவன் ஒரு வினை செய்யப் புகுகையில் எதிர்ப்பு வராமல் இருப்பின் இயற்கைத் தூண்டுதல் இராது. எனவே, எதிர்ப்பு என்பது ஓர் இயற்கைத் தூண்டுதலே. வினையில் ஈடுபடுவானை, அவ்வெதிர்ப்பு நிலை, அவ்வினையில் நன்கு அழுத்தி ஈடுபட வைக்கிறது. அவனை அதற்குத் தகுதியுடையவனாக்குகிறது. இல்லெனில் அவன் ஊக்கம் குறைந்து போவான். எதிர்ப்பு நிலை உருவாக உருவாகத்தான் அவன் அவ்வினையில் படிந்து ஈடுபட முடியும். உள்ளூக்கம் பெற முடியும். இயற்கை, அவ்வெதிர்ப்புகளை உருவாக்கும் வகையில் ஒருவனை அவ்வினைக்கும் தகுதியுடையவனாக்குகிறது. அவ்வெதிர்ப்பு இல்லையெனில், அவன் அவ்வினைக்கண் மிகவும் ஈடுபாடு குறைந்தவனாகப் போய்விடுவான். அவன் ஈடுபாட்டை மிகுவிக்கவே, இயற்கை அவன் செய்யும் வினைக்கு எதிர் வினைகளைத் தோற்றுவிக்கிறது. எதிர் வினை தோன்றும்பொழுது, ஒருவன் தன் வினையில் மிகுந்த கவனம் செலுத்துகின்றான். மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றான். எங்குத் தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சுகின்றான். எனவே அவன் வினையில் விழிப்பாயிருக்கின்றான். இல்லெனில் அவனுக்கு ஊக்கம் குறையும். கவனம் குறையும். எச்சரிக்கை இல்லாது போகும். இந்நிலையில் அவ்வினை வலுக் குறைந்து, வினை வெறுமை தோன்றுகின்றது. இவ்வினை வெறுமை உண்டாகாமல் இருக்கவே இயற்கை எதிர்ப்புகளை உருவாக்கி, அவன் ஊக்கத்தை மிகுதிப்படுத்தி, அவனை அவ்வினையில் மேன்மேலும் ஆழ்ந்து போகின்ற வல்லமையை உருவாக்கித் தருகின்றது.

3. எதிர்ப்பு பல முனைகளில் இருக்கும்

மாந்த முயற்சிகளில் இவ்வெதிர்ப்பு நிலை பல முனைகளிலிருந்து வரும். ஒருவனுக்கு அவன் செய்யும் வினைகளில் எதிர்ப்புத் தோன்றவில்லையானால், அவன் அவ்வினைக்குத் தகுதியுடையவனாக ஆக மாட்டான். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சுகின்றவன், அவன் தொடங்கிச் செய்கின்ற வினையை ஈடுபாட்டுடன் செய்ய மாட்டான். எதிர்ப்புகளைத் தாங்கிக் கொள்ளும் மனவலிமை ஒருவனுக்கு இருந்தாலொழிய, ஒருவன் ஒரு செயலில் படிந்து ஈடுபட முடியாது. எதிர்ப்புகளுக்கு ஈடுகொடுக்கும் முயற்சிகளில் அதன் அறிவை இயற்கை பரவலாக்குகிறது. ஆழமுடையதாக்குகிறது. அதனால் மேலும் மேலும் அவ்வினையைச் செய்ய அறிவுடையனாகிறான்; ஆற்றலுடைய வனாகிறான்; அவ்வினையின் நெளிவு சுழிவுகளை யெல்லாம் தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறான். ஒருவன் ஒரு வினையைத் தொடங்கும் பொழுதே, அது பற்றிய எல்லா நிலைகளையும் தெரிந்தவனாக இருப்பதில்லை. ஏதோ ஒர் ஊக்கத்திலும் ஆர்வத்திலும் தேவையிலும் ஒரு வினையை ஒருவன் தொடங்குகிறான். ஆனால் அவன் அவ்வினைக்கு முழுத் தகுதி படைத்தவனாக அப்போது இருப்பதில்லை. அவனை முழுத் தகுதி படைத்தவனாக ஆக்குவதற்கே இயற்கை அவனுக்கு எதிர்ப்புகளை உருவாக்குகிறது. அவன் அவ்வெதிர்புகளுக்குத் தன்னை ஈடுகொடுத்துக் கொண்டு, அவ்வினையில் மேன்மேலும் ஈடுபடத் தன்னை அணியமாக்கிக் கொள்கிறான். அவன் அவ்வினையில் மேலும் மேலும் ஈடுபட ஈடுபட, எதிர்ப்பு இன்னும் வலிவாகிக் கொண்டே வருகிறது. எதிர்ப்புகள் வலிவாக வலிவாக, அவன் மனவலிமையும் மிகுகிறது. உடல் வலிமையும் தோன்றுகின்றது. பல்வேறு அறிவு நிலைகளும் அவனுக்குப் புலப்படுகின்றன.

4. எதிர்ப்பு இயற்கை ஆசிரியன்

இயற்கை, இவ்விடத்தில் அவனுக்கு ஆசிரியனாக இருந்து கொண்டு, மறைமுகமாக, ஒரு வினையில் பலவகையான உத்திகளையும் அவனுக்குக் கற்பிக்கிறது. நாளடைவில் அவன் அத்துறையில் தெளிந்த அறிவுடையவனாகிறான். அவ்வினைக்குத் தகுதியுடையவனாகிறான். இயற்கையின் இந்த நுட்பமான போங்கு நிலையை ஒருவன் உணர்ந்து கொள்வானாகில், அவன் அவனுடைய முயற்சிகளில் எதிர்ப்படும் எதிர்ப்புகளையும் இடர்களையும் கண்டு கொஞ்சமும் மனம் சோர்ந்து போக மாட்டான். மாறாக அவன் எந்த நொடிப்பொழுதிலும், எந்தப் படிநிலையிலும் எதிர்ப்புகளையும் இடர்களையும் அவனே இரு கை நீட்டி எதிர்கொள்வான். ஏதோ இயற்கையின் நுணுக்கம் ஒன்றைக் கற்பிக்கவே அவ்வெதிர்ப்புகள் வருவதாக அவன் மன மகிழ்வு கொள்கிறான்.

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல் (627)

என்பார் திருவள்ளுவர். இடும்பைகள் துன்பங்கள் அல்லது எதிர்ப்புகள்) மாந்தனாய்ப் பிறந்த ஒவ்வோர் உடல் இயக்கத்திற்கும் உண்டு. உடலை வருத்தித் துன்பந் தருவதே அவற்றின் இயற்கை கொள்கை. இதை அறிவினால் உணர்ந்து கொண்டு மனக்கலக்கம் கொள்ளுதல் கூடாது என்று இக்குறள் அறிவுறுத்துகின்றது.

5. இன்பத்தை மட்டும் நாடக்கூடாது

மேலும், உடம்பு இன்பத்தை மட்டுமே நாடக்கூடாது; இன்பத்தை நாடினால் வருந்துன்பம் சிறிதாயினும் மிகப் பெரிதாகத் தோன்றும். ஆகையால் எதிர்ந்து வருகின்ற பெருந் துன்பங்களையும் தடைகளையும், எதிப்புகளையும் இயற்கை என்று கருதி, அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவத்தை ஒருவன் கொண்டுவிட்டால், அவன் அவற்றால் துன்பப்படுவதும் இல்லையாகின்றது. இக்கருத்தைக் கீழே வரும் குறள் நன்கு எடுத்துக் கூறுகிறது.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் (628)

எனவே இயற்கையால் வரும் இடுக்கண்களையும், மாந்தர்பாலிருந்து செயற்கையாக வரும் எதிர்ப்புகளையும் இடர்ப்பாடுகளையும் கண்டு ஒருவன் அஞ்சிவிடக் கூடாது. வினை செயலினின்று பின் வாங்கி விடக்கூடாது. ஒருவன் முனைந்து முன்னே செல்லச் செல்ல எதிர்ப்புகளும் துன்பங்களும் பின் வாங்கிப் போகும். துன்பத்திற்குத் துன்பம் வரும்படி நாம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர் (623)

என்பார் திருவள்ளுவர். இதற்கு, மனத் திட்பமுடையராய் விடாது முயலவே வினை முற்றுப் பெற்றுப் பயன்படும். படவே, எல்லா இடும்பையும் இலவாம் என்று பரிமேலழகர் பொருள் எழுதுவார். வினையை எதிர்த்து வரும் இடும்பைகள் பற்றியும் இடுக்கண்கள் பற்றியும் துன்பம் பற்றியும் பின்வரும் வேறு தலைப்புகளில் இன்னும் விரிவாகப் பார்ப்போம். இங்கு, ஒரு வினைக்கு மக்களால் வரும் எதிர்ப்பு நிலைகள் பற்றி இன்னும் சிறிது விளக்கமாகப் பேசுவோம்.

6. எதிர்ப்புகள் எப்படி எங்கிருந்து வரும் ?

ஒருவனை வினை செய்ய முற்படுங்கால் அவனை நெருங்கியிருக்கும் சிலராலும், அவனை எதிர்த்து நிற்கும் பலராலும் அவனுக்குப் பல வகையிலும் எதிர்ப்புகள் தோன்றும் அவனை எதிர்க்கின்றவர்கள் அனைவரும் அவனுக்கு மாற்றார் ஆகிவிடுகின்றனர். மாறுபாடான எண்ணங்களுடனும் செயல்களுடனும் இயங்குகின்ற அனைவரும், அவர்கள் அன்பர்களாயினும், எதிரிகளாயினும் அவர்கள் மாற்றாரே. அவர்களைப் பற்றி, வினை செய்யப் புகுவார்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும். அப்படிப் பட்டவர்களின் அறிவு வலிமை, செயல் வலிமை, உடல் வலிமை, கருவி வலிமை முதலியவற்றை நாம் முதலில் அளவிட்டுத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். அவ்வலிமைகளை நாம் உணர்ந்து கொண்டால்தான் நம் வலிமைகளை அவற்றுக்கு மேலாகக் கொண்டு செலுத்தி, அவர்களின் எதிர்ப்புகளை முறியடிக்க முடியும் செயலிலும் இறுதியில் வெற்றி பெற முடியும்.

7. மாற்றான் வலிமையை உணர வேண்டும்

தன் வலிமையை ஒருவன் உணர்ந்து கொண்டால் மட்டும் போதாது. தன்னை எதிர்க்கின்ற, தன் செயலுக்கு எதிர்ச்செயலில் ஈடுபடுகின்ற மாற்றானின் வலிமைகளையும் நாம் கணித்தறிந்து தெரிந்து கொள்ளுதல் . வேண்டும். மாற்றான் வலிமையை ஆராய்ந்து வினை செய்தல் வேண்டும் என்பது திருக்குறள் (471), நம் செயலால் வரும் பயனை மட்டும் அளவிட்டு அச்செயலில் இறங்கி விடுதல் கூடாது. இடையில் வரும் இடையூறுகளையும் எண்ணிப் பார்த்துச் செயல் செய்தல் வேண்டும் என்பார் திருவள்ளுவர் (676)

நம் வினைக்கு மாற்றார் பிறர் எதிராக இருப்பதற்குப் பல கரணியங்கள் அடிப்படையாகவிருக்கும். அவர்கள் நம் மேல் கொள்ளும் பொறாமை, நம் வினையின் வளர்ச்சியால் அவர்கள் எய்தவிருக்கும் தளர்ச்சி, நம் அறிவூக்கத்தால் அவர்கள் கொள்ளும் மனக்காழ்ப்பு இதுபோல் பலவகையான அறிவு, மனம், செயல் தழுவிய கரணியங்களால், ஒரு செயலுகுக்குப் பிறரிடமிருந்து எதிர்ப்புகள் வருகின்றன. ஆனால் இக்கரணியங்கள் வெளிப்படையாகத் தெரியவரின், அவர்ளைப் பிறரும் அடையாளங் கண்டு கொள்வார் களாகையால், அவர்கள் அத்தகைய உள்முகக் கரணியங்களை வெளியே புலப்படுத்திக் காட்டாதவாறு, வேறு பலரும் அவர்களின் எதிர்ப்பை ஒப்புகின்ற வகையில் எல்லார்க்கும் வெளிப்படையாகத் தெரிந்த, நம் குணநலன்கள், அறிவு முனைப்புகள், செயல் ஊக்கங்கள் இவற்றைப் பிறரிடம் பிறழக் காட்டிக் குற்றஞ்சாட்டி, எதிர்ப்புகளை உருவாக்குகின்றனர். அவ்வெதிர்ப்புக் கருத்துகளுக்குத் துணை சேர்த்து, அவற்றுக்கு வலிமை சேர்க்கின்றனர். இத்தகைய வலிவான எதிர்ப்பு ஒரு வினைக்கு ஏற்படுவதால், அவ்வினை தடைப்பட்டுப் போகாமல், அதைச் செய்கிறவன், அவ்வெதிர்ப்புகளை முறியடிக்கத் தன் அறிவு, மனம், செயல் முறைகளை மேலும் வலிவாக்கிக் கொள்ளும் வழிவகைகளைச் செய்து கொள்ளுதல் வேண்டும். மனச் சோர்வு அடைந்துவிடக் கூடாது. மேலும் அறிவு முனைப்புக் காட்டுதல் வேண்டும். தான் செய்யும் செயலை மேலும் வலிமையாக்க என்னென்ன முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்பதை ஆய்ந்தறிதல் வேண்டும். எதிர்க்கின்றவர்களின் அறிவு, மனம், செயல்வலிமை, கருவிகளை உணர்ந்து, அவை செயற்படும் வகைகளைக் கண்டறிந்து, அவற்றினும் கூடுதலான வலிமையுடன் தன் செயலைச் செய்து கொண்டு போதல் வேண்டும். அப்பொழுதுதான் இவன் செய்யும் செயல்கள் செவ்வனே நடைபெறும். செயல்களுக்கு ஏற்படும் மாந்த எதிர்ப்புகளால் ஒருவன் செய்கின்ற செயல்கள் தூய்மையுறும். செப்பமடையும். வலிவு பெறும் என்று ஒருவன் கருதிக்கொள்ளுதல் வேண்டும். மேலும் ஒரு செயலுக்கு ஏற்படும் எதிர்ப்புகள் அச்செயலுக்கு ஒருவகையில் கிடைத்த விளம்பரங்கள் என்றும் எண்ணுதல் வேண்டும். எதிர்ப்பாளர்களின் கருத்துகளுக்கும் செயல்களுக்கும் நாளடைவில் பிற வேறு எதிர்ப்புகள் ஏற்படும் பொழுது, அப்பிற வேறு எதிர்ப்புகள், முன் தொடங்கப்பெற்ற மூலச் செயலுக்கு நல்ல துணைகளாக அமைவதும், இயற்கை தரும் ஒரு வெற்றிப் பரிசாகும்.