தந்தையும் மகளும்/16
16அப்பா! சந்திரனில் மக்கள் வாழமுடியாது என்று கூறுகிறார்களே, நம்முடைய பூமியும் அதுபோலவே ஆகிவிடுமோ?
அம்மா! பூமியானது சூரியனிடமிருந்து பிரிந்த ஒரு கோளமே என்பதை நீ அறிவாய். அப்படி அது பிரிந்து வந்த சமயத்தில் உஷ்ணமயமான வாயுக்களாலான ஒரு உருண்டையாகவே இருந்தது. அதன் பின் அது நாளடைவில் குளிர்ந்து மண் குழம்பாக ஆயிற்று. அப்பொழுது சூரியனுடைய ஆகர்ஷண சக்தி அதிலிருந்து ஒரு துண்டைப் பெயர்த்துவிட்டது. அந்தத் துண்டுதான் நாளடைவில் குளிர்ந்து இப்பொழுது நமக்கு நிலாப் பொழிந்து கொண்டிருக்கும் சந்திரன் ஆகும்.
சந்திரன் மிகச் சிறியதாக இருந்தபடியால் உயிர்கள்வாழ முடியாத அளவு குளிர்ந்துவிட்டது. அத்துடன் அதன் ஆகர்ஷண சக்தியால் வாயு மண்டலத்தை இறுக்கிப் பிடித்துக்கொள்ள முடியவில்லை. காற்றும் உஷ்ணமும் இல்லாவிட்டால் உயிர்கள் வாழ்வது எப்படி? அதனால் தான் சந்திர மண்டலத்தில் மக்கள் இல்லை என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.
அது போலவே பூமியும் ஆகிவிடுமோ என்று நீ கேட்கிறாய். அம்மா! நம்முடைய பூமியும் குளிர்ந்து கொண்டுதான் இருக்கிறது, அதனால் அது நீண்டகாலம் கழித்து மக்கள் வாழ முடியாதபடி ஆகிவிடலாம் என்றே அறிஞர்கள் கருதுகிறார்கள்.