உள்ளடக்கத்துக்குச் செல்

தந்தையும் மகளும்/25

விக்கிமூலம் இலிருந்து


25அப்பா! நம்முடைய தேசத்தில் மழை பெய்வதுபோலவே இங்கிலாந்து தேசத்தில் பனிக்கட்டி பெய்யும் என்று கூறுகிறார்களே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா ! பூமியில் உண்டாகும் நீராவி மேலே சென்று மேகமாக ஆகிறது என்றும் அந்த மேகம் அதிகமாகக் குளிர்ந்து மழையாகப் பெய்கிறது என்றும் நீ அறிவாய்.

இவ்வாறு மேகத்தில் உண்டாகும் நீர்த்துளிகள் ஐஸ் குளிர் என்னும் O°C டிகிரிக்கும் குறைந்த குளிர் பெறுமானால் அப்போது அவை ஐஸ் போல் இறுகி படிக உருவத்தில் பூமிக்கு வந்து சேர்கின்றன. அதை "வெண் பனி" என்று கூறுவார்கள், சில சமயங்களில் அது சிறிதளவு இளகியும் பெய்யும்.அது ஐஸ்தூள் போல் இருக்கும். மரங்களில் படிந்து அவைகளை வெண்ணிறத்துடன் அழகாக ஒளிரச் செய்யும். வெண்பனி சில சமயங்களில் முழுவதும் இளகி மழையாகப் பெய்வதுண்டு.

இத்தகைய வெண்பனி இங்கிலாந்து நாட்டில்தான் உண்டு என்று எண்ணாதே. வெண்பனி உண்டாவதற்கு அதிகக் குளிர் வேண்டியதுதான். அத்தகைய குளிர் உஷ்ண தேசத்திலும் அதிக உயரமாகச் செல்லும் மேகங்களிடம் உண்டாவதுண்டு. ஆனால் அந்த மேகங்களில் உண்டாகும் வெண்பனி கீழே இறங்கி பொழுது குளிர் குறைந்துவிடுவதால்தான் நீராக மாறி மழையாகப் பெய்துவிடுகிறது.

ஆதலால் சாதாரணமாக வெண்பனி உண்டாவது உஷ்ண மண்டலத்திற்கு வடக்கேதான். இமயமலை போன்ற உயரமான மலைகளின் சிகரங்கள் எப்பொழுதும் வெண்பனியால் மூடப்பட்டிருக்கும். அந்தப் பனி அதிகமானதும் பனிக்கட்டிபோல் உறைந்துபோகும். இவ்வாறு வெண்பனியானது பூமியில் மூன்றில் ஒரு பகுதியிலேயே பெய்வதால் கோடிக்கணக்கான மக்கள் அதைப் பார்த்ததேயில்லை.

வெண்பனி எப்பொழுதும் ஆறு கதிர்கள் உள்ள அழகான படிகங்களாகவே இருக்கும். அந்த ஆறு பக்கத்திலும் சூரிய ஒளியைச் சிதறச் செய்வதால்தான் வெண்ணிறமாக இருக்கின்றன. அவை இங்கிலாந்துக்கு வடக்கேயுள்ள கிரீன்லாந்து முதலிய இடங்களில் சிவப்பு நிறமாயும் பச்சை நிறமாயுங்கூட இருப்பதுண்டு. அதற்குக் காரணம் அவற்றில் அந்நிறமுடைய நுண்ணிய உயிர்கள் கலந்திருப்பதே என்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/25&oldid=1538100" இலிருந்து மீள்விக்கப்பட்டது