தந்தையும் மகளும்/26

விக்கிமூலம் இலிருந்து


26அப்பா! நாம் குற்றால மலையில்' சுனையைப் பார்த்தோமே, அதற்குக் காரணம் என்ன?

அம்மா! மழை பெய்வதால் தரையில் விழும் தண்ணீரினால் தான் கிணறுகள் உண்டாகின்றன என்பதை நீ அறிவாய். அதுமாதிரி மழை பெய்வதால்தான் சுனைகளும் உண்டாகின்றன. ஆனால் கிணறுகளை நாம் வெட்டுகிறோம், சுனைகள் தாமாகவே உண்டாகின்றன. அது எப்படி என்று கூறுகிறேன் கேள்.

அம்மா! மழை பெய்தால் அந்த நீர் தரையில் ஊறி கீழே இறங்குகிறது. அது பூமியினுள்ளே போகும் போது நீர் புகமுடியாத பாறையைக் காணுமானால் அதனடியில் போகாமல் நின்றுவிடும். நாம் கிணறு வெட்டி அந்த நீரை இறைத்துக் கொள்வோம்.

ஆனால் கீழேயுள்ள பாறை சமதளமாயில்லாமல் இருக்குமானால் அதன்மீது வந்து சேரும் நீர் அந்தப் பாறையின் சரிவில் இறங்கி பாறை முடியும் இடத்தில் சுனையாகக் கொப்பளித்துவிடும். அதனால்தான் சுனைகள் மலைச் சரிவுகளிலேயே காணப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=தந்தையும்_மகளும்/26&oldid=1538101" இலிருந்து மீள்விக்கப்பட்டது