தமிழர் தோற்றமும் பரவலும்/இரண்டாம் சொற்பொழிவின் குறிப்புக்கள்
குறிப்புகள்
1) ஊழிப் பெருவெள்ளம் பற்றிய கற்பனைக் கதை குறித்துத் திருவாளர் எல். தெலபொர்டே (L. Delapore) அவர்களின் மெசபடோமியா என்ற நூலைக் காண்க. (Kegan Paul, 1925; Page: 20-21; 138-9; 207-8; Page 31.1-26. சபே (Sabae) தென் அரேபியாவின் பழம்பெரும் நாடு, விவிலிய நூலில் குறிப்பு 1 அவில் The Joktanite Shiba என்ற தொடர் இடம் பெற்றுள்ளது.
ஷீபாவின் பேரரசு, வடபகுதி நீங்க உள்ள அனைத்து அரேபியா (Arabia Felix) வைச் சார்ந்த, யேமன் நாட்டின் பெரும்பகுதியைத் தன்னகத்தே கொண்டுவிட்டது. அதன் முக்கிய நகரங்கள், பெரும்பாலும், அடுத்தடுத்துத் தலைநகராக அமைந்த, ஸெபா ( Seba); ஸனியாஸ் (Sanias) மற்றும் ஸெபர் (Sephar) முதலியனவாம். “லெபர்” என்பது பெரும்பாலும் ஒரு நகரத்தின் பெயரும், பொதுவாக நாட்டையும், நாட்டு மக்களையும் குறிக்கும். “குஷ்” (Cush) என்பானின் மகனாகிய “ராமஹ்” (Raamah) என்பானின் மகனாகிய ஷீபா (Sheba) என்பவன், பர்ஷிய வளைகுடாவின் கரைகளில் எங்கோ ஓர் இடத்தில் வாழ்ந்திருந்தான். இந்த ஷீபாதான், ஜோக்-ஷன் (Jokshan) என்பானின் மகனாகிய, மற்றொரு ‘ஷீபா’வுடன் சேர்ந்துகொண்டு பாலஸ்தீனத்தோடு, இந்தியா கொண்டிருந்த போக்குவரத்தை மேற்கொண்டிருந்தான். 2. பொய்னீஷீயர்களும், இந்தியாவும், இந்தியாவுடான வாணிகம்: பொய்னீஷியர்கள், ஆசியாவின் உட்பகுதியில் இருந்த நாடுகளோடு மேற்கொண்டிருந்த வெளிநாட்டு வாணிகம், அது மேற்கொண்டிருந்த முக்கிய வழித்தடங்களின்படி மூன்று கிளைகளாகப் பிரிக்கப்படும். அவற்றுள் முதலாவது, தென்பால் வாணிகம், அதாவது அராபியாவுடனும், கிழந்கிந்தியாவுடனும், எகிப்துடனும் நடைபெற்ற வாணிகம், இரண்டாவது கீழ்ப்பால் வாணிகம், அதாவது அஸ்லிரியாவுடனும், பாபிலோனியாவுடனும் நடைபெற்ற வாணிகம், மூன்றாவது வடக்கு நோக்கியது. அதாவது அர்மீனியாவுடனும் காக்கஸ் மலைத் தொடர் நாட்டுடனுமான வாணிகம். சமயச் சார்பற்ற எழுத்தாளர்களும், ஹிப்ரு மொழிப் புலவர்களும் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு விளக்கங்களிலிருந்து, இம்மூன்று வணிகக் கிளைகளுள் முதலாவது ஒன்றே, நனிமிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பது உறுதிப்படும். அதை, “அரேபிய-இந்திய நட்புறவு” (Arabian-Fast-Indian) என அழைக்கிறோம். அவ்வாறு அழைப்பதற்குக் காரணம், பொய்னீஷியர்களே அரேபியாவைக் கடந்து இந்தியாவுக்குப் பயணம் செய்தனர் என்ற உறுதிப்பட்ட ஒன்றை நாம் மேற்கொள்வது அன்று. மாறாக, அவர்கள் அப்போது வாணிக நிலையங்களில் பெருமளவில் வேண்டப்பட்ட கிழக்கிந்தியப் பண்டங்களை, அரேபியாவில் வாங்கியதே காரணமாம்.
எது எப்படி ஆயினும், பொய்னீஷியர்களின் வாணிகம், தென் ஆப்பிரிக்காவோடு நின்றுவிடவில்லை. பர்ஷிய வளைகுடாவின் கரை நெடுகிலும் விரிந்து இருந்தது. “டேடன் நகரத்து மக்கள் உங்கள் வணிகர்கள்; எண்ணற்ற தீவுகள், உங்கள் நாட்டுப் பெருவாணிக நிலையங்கள்; தங்களுக்கு அவர்கள் தந்தத்தையும், கருங்காலி மரத்தையும். நன்கொடையாகத் தருகின்றனர்.” பர்ஷியன் வளைகுடாவில் அராபியக் கடற்கரைக்கு அணித்தாக உள்ள, “பகாரியன்” தீவுக் (Baharein Islands) கூட்டத்தில் ஒன்று. டேடன் தீவு. இது, ஒருபக்கம் பொய்னிஷியாவுக்கும், பர்ஷிய வளைகுடாவுக்கு இடையிலும், இன்னொரு பக்கம், பொய்னீஷியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலும் போக்குவரத்து இருந்தது என்பதைக் காட்டுகிறது. பொய்னீஷிய வர்த்தகம், டேடனுக்கு அப்பால், பெருமளவில் இருந்த நாடுகள், இந்தியா தவிர்த்து வேறு இருக்க இயலாது. இது வணிகப் பொருள்களால், போதுமான அளவு உறுதி செய்யப்படுகிறது. கி.மு. 1016 முதல் 976 வரை இஸ்ரேல் ஆண்ட மன்னன் சாலமன், தன் தந்தை டேவிட், மேற்கொண்டிருந்த வாணிகத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தான். மேலும், பொய்னீஷியத் துறைமுக நாடாம் டயரை (Tyre) ஆண்டிருந்த அரசனோடு வாணிக ஒப்பந்தம் ஒன்றையும் செய்து கொண்டான். இவ்வகையால் ஒன்றுபட்ட வாணிக வங்கங்கள், ஒப்பீர் (0phir) நாடு, மற்றும் கிழக்கு நாட்டுப் பொன்னைப் பாலஸ்தீனத்திற்குக் கொண்டு சென்றன. விவிலிய நூலின் பொதுப்பிரிவு இரண்டில், முதல் பிரிவில் (Old Testament) வரும் “ஒப்பீர்” என்ற சொல்லின் பொருள் காண்பது, வரலாற்றுப் பேராசிரியர்களிடையே, ஒரு பெரிய வாதப்பொருளாம். சிலர், அதைப் பம்பாய்க் கடற்கரையைச் சேர்ந்த பண்டைய துறைமுகமாம் “ஸோபாரா” வாகக் கொள்கின்றனர். சிலர், சமஸ்கிருத “அப்ஹீர” (Abhira)அல்லது, சிந்து நதியின் முகத்துவாரமாகக் கொள்கின்றனர். வேறுசிலர், அரேபியா அல்லது “மேஷனாலான்ட்” (Mashonaland) நாட்டில் உள்ள ஓர் இடமாகக் கருதுகின்றனர்.
சாலமன் அவர்களின் பொன்னால் ஆன அரியனை, விலைமதிக்கவொண்ணா அருங்கற்கள், பொன்னால் அடித்துச் செய்யப்பட்ட 300 கேடயங்கள், மனம்மகிழ் பூஞ்சோலையில் உள்ள குரங்கு மற்றும் மயில்கள், திருக்கோயிலின் சந்தன மரத்தால் ஆன கம்பங்கள் ஆகிய, அனைத்தும் இந்தியாவிலிருந்தே கொண்டுவரப்பட்டனவாம். ஆகவே, “ஒப்பிர்” என்பதை இந்தியாவில், அதிலும் குறிப்பாகப், பாம்பாய்க் கடற்கரை நகராம். “சோபாரா” வாகக் கொள்வதே பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று. ஹிப்ரு மொழியில் வரும் “ஷென்ஹாப்பின்” (Shenhabhin) சமஸ்கிருத “இப்ஹதந்தா” (Ibha danta) ஆகிய சொற்கள், தந்தம் எனும் பொருள் உடையவாம். ஹீப்ரு மொழிக், “கோபி” (Kophy) வாலில்லாக் குரங்கு ஆகும். மேலும், அம்மொழி, “துக்கிம்” (Tukhin) என்ற சொல், தமிழ்த்தோகை ஆகும்.
திருவாளர்கள், “பிர்ட்வுட்” (Bird wood) மற்றும் “பாஸ்டர்” (Foster) ஆகியோர் பதிப்பித்த “கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் கடிதப் புத்தகம்” (The first Letter Book of the East India Company) என்ற நூலையும், திருவாளர் “எச். ஜி. ராவிலின்சன்” (H.G. Rawlinson) அவர்களின் “இந்தியாவும், மேற்கு உலகத்திற்கும் இடையிலான போக்குவரத்து” (Inter Course between India and the Western World) என்ற நூலையும் காண்க.
திருவாளர் கென்னடி அவர்கள், ஓ.கீ.அ.கு. என்ற செய்தி ஏட்டில் எழுதியிருக்கும் கட்டுரை (ஏப்ரல், 1898) யினையும், திருவாளர் பூலர் (Buller) அவர்களின் “இந்தியா பற்றிய ஆய்வு” (Indian Studies) என்ற நூலையும் (பகுதி. 3. பக்கம் 81-82) காண்க.
திருவாளர் ஹண்டர் (W.W. Hunter) அவர்களின், “பிரிட்டிஷ் இந்தியாவின் வரலாறு” (A History of British India) என்ற நூலின் “லாங்குமென் கிரீன்” (Longmans Green & Co) பதிப்பையும் காண்க. (1919 ஆண்டுப் பதிப்பு: பக்கம். 23-25) அருள் தந்தை ஹீராஸ் அவர்கள், எழுதிய “மேகனின் அரசு” (Kingdom of Megan) என்ற கட்டுரையில், இக்கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
3) இரு கடல்களை இணைக்கும் நீண்டு குறுகிய சூயஸ் நிலப்பகுதியை வெட்ட எடுத்த முதல் முயற்சி.
நைல் நதிக்கும், செங்கடலுக்கும் இடையிலான, நீண்ட, இடர்மிகு, பாலைவனப் பிரயாணத்தின் கொடுமை, நீண்ட காலமாகத் தொடர்ந்து உணரப்பட்டது. வாணிகம் பெருகப் பெருக, இவ்விரு கடல் வழிகளையும், ஒரு கால்வாய் மூலம் இணைக்க வேண்டியதன் இன்றியமையாமை, மிகமிகத் தெளிவாகிவிட்டது. கி.மு. இருபதாவது நூற்றாண்டைச் சேர்ந்த ‘ஸெஸொத்ரிஸ்’ நாடு (Sesostris) இத்துறையில் முதல் முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. எகிப்திய மன்னன் நெக்கோ (Necho) வும், கி.மு. 521 முதல் 486 வரை ஆண்ட பர்ஷிய மன்னன் டாரியஸ்ஸும் (Darius), தங்கள் கருத்தாழ்ந்த கவனத்தைத் தீர்வு காணமாட்டா இத்திட்டத்தில் திருப்பினர். இன்றைய சூயஸ் துறைமுகமாம் அன்றைய “அர்சினோஇ” (Arsince) துறை முகத்தைக் கண்டமைக்காம் பெருமையைச் சிற்றாசியாவைச் சேர்ந்த பிலடெல்பஸ் (Philadelphus) ஸில், கி.மு. 285 முதல் 246 வரை வாழ்ந்திருந்த கணிதம் மற்றும் சில நூல் வல்ல தாலமி (P.Tolemy) அவர்களின் மேதகவுக்கே கொடுக்கப்படவேண்டும். ஆனால், வளைகுடாவில், கடல் பயணத்தின் இடர்ப்படு நிலைமை, இதை உடனடியாக அல்லது காலப்போக்கில் கைவிட வேண்டி நேர்ந்தது. ஒரு நூற்றாண்டிற்குப் பின்னர் சூயஸின் தவிர்க்க முடியாத மிகப் பெரிய நன்மை, பிரான்ஸ் நாட்டு அரசியல்வாதியான டி. லெஸ்லெப்ஸ் (De Lesseps) அவர்கள் மனத்தில் பட்டது. அவர், அதை வெற்றியுற முடித்து வைத்தார். வணிகர்கள், தங்கள் வாணிகப் பொதிகளை யெலனா (Aelana), பண்டைய எஸியோன் ஜெபர் (Ezion Geber) அதாவது இன்றயை அகபா (Akaba) மற்றும், பாலஸ்தீனத்திலிருந்து பாயும் ஜோர்டன் ஆற்றிற்குக் கிழக்கில் உள்ள பெட்டரா (Petra) ஆகிய நகரங்கள் வழியாக, மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் உள்ள லெவன்டினே (Levantine) துறைக்குக் கொண்டு செல்வதையே விரும்பினர் என்பது காட்டப்பட்டது. எச்.ஜீ. ராலின்சன் (H.G. Raulinson) அவர்களின், “இந்தியாவுக்கும் மேலை உலகிற்கும் இடையிலான போக்கும் வரவும்” (Intercourse between, India and western world: 1926, Cambridge p. 89-90) என்ற நூலைக் காண்க.
4) திருவாளர் இ.பி. கெளல் அவர்கள் பதிப்பித்த 1897 ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் அகராதி, பகுதி. 3 பக்கம் 83) பாபெரு (Baberu) என்ற நிலம், பாபிலோன் ஆகும். இந்திய வணிகர்களால், இந்தியாவிலிருந்து முதலில் ஒரு காக்கையும், பின்னர் ஒரு மயிலும், பாபிலோனுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.
5) உரோமப் பேரரசின் கருவூலத்திலிருந்து, உரோம நாணயம் வடித்தல் குறித்து, உரோம் நாட்டு, அரசியல்வாதியும், எழுத்தாளருமான பிளைனி கூறுவது:
“எவ்வளவு குறைவாக மதிப்பிட்டாலும், இந்தியா, சேரநாடு, மற்றும் அரபுநாடுகள், ஆண்டுதோறும், உரோமப்பேரரசிலிருந்து, 10 கோடி உரோம நாணயம், செஸ்டெர்ஸெஸ் (Sesterces) ஐ வடித்துவிடுகின்றன எனக் கூறுகிறார் திரு. பிளைனி, “எங்கள் ஆடம்பர வாழ்க்கைக்கும், எங்கள் மகளிர்க்காகவும் நாங்கள் அவ்வளவு அரிய விலையைக் கொடுக்கிறோம். மீண்டும், மற்றுமொரு முக்கியமான இடத்தில், “இந்தியா போக்குவரத்தில் ஏற்பட்ட செலவோடு பழைய விலை போல நூறு மடங்கு விலைக்குப் பண்டங்களைக் கொடுத்து விட்டு, “செஸ்டெர்ஸெயை” எடுத்துக் கொள்கிறது எனக்கூறியுள்ளார். பண்டைய மேற்கு ஆசியாவைச் சேர்ந்த பார்த்தியர்களும் (Parthians) இந்தியர்களும், உரோமப் பேரரசரோடு கடல் வாணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டினர் எனச், சீனநாட்டுச் “சின்-ஷூ” (Chil-Shw) அரச இனத்து வரலாற்றுப் பதிவேட்டின் ஒருபகுதி, பத்து மடங்கு வாணிகத்தைக் குறிப்பிடுவதாலும், அதுபோலவே, கி.மு. 200 முதல் கி.பி. 220 வரை ஆட்சியில் இருந்த பிற்கால “ஹன்” (Han) இனத்து வரலாற்றுப் பதிவேட்டில் வரும் ஒரு பகுதி, பத்து மடங்கு வாணிகத்தைக் குறிப்பிடுவதாலும், மத்தியதரைக் கடலின் கிழக்குக் கரையைச் சேர்ந்த சிரியா, வாணிகத்தால் வளம் பெற்றது என்பதை உய்த்துணரவைப்பதன் மூலம், சீனநாட்டு வரலாற்று மூலமும் இதை உறுதி செய்கிறது. ஆக, பிளைனி அவர்களின் அறிக்கை நனிமிக உயர்ந்த மதிப்பீட்டை உறுதி செய்வதாகத் தெரிகிறது. (உரோமப் பேரரசுக்கும், இந்தியாவுக்கும், இடையிலான வாணிகம், (The Commerce between the Roman Empire and India) பக்கம் : 274-275)
6) உரோமுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் கடல் வாணிகம். .
மேலைநாட்டு கிரேக்க எழுத்தாளர்களிடமிருந்து பெறப்படும் அகச்சான்று, உரோமப் பேரரசின் முதல் மன்னனாகிய அகஸ்டஸ் என்பானின் கி.மு. 27 முதல், கி.பி. 14 வரையான ஆட்சிக்காலத்தில் சேர, பாண்டிய அரசுகளுக்கும், உரோமப் பேரரசுக்கும் இடையில் நிலவிய தொடர்புகளை வெளிப்படுத்துகிறது.
1) ‘ச’கரத்தின் மெல்லொலியாலும் இலங்கையர்களால், சேரர் என்பதற்கு ‘ஷேரி’ என்பது ஆளப்படுவதாலும், “ஷெரெய்” அல்லது சீனர்களாகக் குழப்பப்படுவதும், உரோமப்பேரரசனுக்கு நன்றி தெரிவிக்கும். முகத்தான், முசிறியில் (இன்றைய க்ரேங்கனூர்) மன்னன் அகஸ்டஸூக்குக் கோயில் கட்டப்பட்டிருப்பதுமாகிய தென்னிந்தியச் சேர நாட்டிலிருந்து மிளகு வந்தது. ஆகவேதான், ஆப்கானிஸ்தானத்தின் வட கிழக்குப் பகுதியாகிய பாக்டீரிய நாட்டவர் (Bactrians) (குஷான்கள்) அல்லராயின், ஷேரெஷ் (அதாவது சேரர்) அரசியல் தூதவர் ஆயினர்.
2) தன்னுடைய முத்தால் பெருமை பெற்றதும், கிரேக்கர்களால், “பாண்டியோன்” எனப் பெயர் சூட்டப்பட்ட அரசர்களால் ஆளப்பட்டிருப்பதும் ஆகிய பாண்டி நாட்டிலிருந்தும் வணிகப் பண்டங்கள் வந்தன. அவர்கள் தமிழ்நாட்டிற்கே உரிய செய்பொருட்களாகிய விலை உயர்ந்த கற்கள், முத்துக்கள், சில வேளைகளில் யானைகள் ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். சோழப் பேரரசும் அரசியல் தூதுவரை அனுப்பியது. இத்தூது அனைத்தும், அலெக்ஸ்யாண்டிரியாவையும், சிரியாவையும் சேர்ந்த கிரேக்கர்களால், முடிந்தால் இடைத்தரகர்களாகிய அராபியர்களை அகற்றுதற் பொருட்டுத் திட்டமிட்டு மேற் கொண்ட வாணிகத்தூதுக்களாம். (E.H.Warningtonp,page:37).
உரோம நாணயம், இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது, உண்மையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பெரும்பாலும், விலைமலிந்த உலோகத்தால் செய்யப்பட்ட இந்திய நாணயங்களுக்கு உலகப் பெருஞ் சந்தையில், குறைந்த பண்டமாற்று மதிப்பே இருந்தது. தமிழர்கள் உரோம நாணயங்களை ஏற்றுக்கொண்டனர். தமிழ் மாவட்டங்களில், உரோம நாணயங்களால் ஆன உரோம நாணயச் செலாவணி, திட்டமிட்டு நிலைகொண்டு விட்டது. தரத்தில் குறைந்த உலோகத்தால் செய்யப்பட்ட இந்திய நாணயங்களை உரோமர், குறைந்த பண்டமாற்றிற்கே ஏற்றுக்கொண்டனர். மிகவும்பிற்பட்ட காலத்திலேயே, தரம் குறைந்த உலோகத்தால் ஆன உரோம நாணயங்கள் இந்தியாவை அடைந்தன. தமிழ் நாடு முழுவதும், உரோமப் பேரரசின் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆயிரம் ஆயிரம் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டன. பிறஅரசர் காலத்து நாணயங்களைக் காட்டிலும், அகஸ்டஸ், மற்றும் டிபெரியஸ் (Augustus and Tiberius) பேரரசர், சிறப்பாகப் பின்னவர் சின்னம் பொறித்த நாணயங்கள் பெருகிவிட்டன. கி.பி. 69 முதல் 79 வரை ஆண்ட உரோமப் பேரரசன் வெஸ்பாஸியன் (Vespasian) காலத்தனவும். அவனுக்குப் பின் வந்த உரோமப் பேரரசர் காலத்தனவுமான உரோம நாணயங்கள் பெருமளவில் காணப்படவில்லை. ஏறத்தாழ 1898 ஆண்டளவில். புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பொன் நாணயங்கள், திருவாளர் “தர்ஸ்டன்” (Thurston) அவர்கள் பட்டியல்படி பின்வருமாறு:
அகஸ்டஸ் ஆட்சிக்காலம், 51 நாணயங்கள்
டைபெரியஸ் ” 193 ”
காயஸ் ” 5 ”
கிலாடியஸ் ” 126 ”
நீரோ ” 123 ”
வெஸ்பாஸியன் ” 5 ”
ஒருசேமிப்பில் இருந்த மொத்தம் 510 நாணயங்கள்
இது போலவே, மதுரை மாவட்டம், கல்லியம் புத்தூர், பண்டைய நெல்சியண்டா (Neleynda) (பழைய சேரநாடு) ஆகிய கோட்டயம், திருச்சிராப்பள்ளி மாவட்டம், கருவூர் நெல்லூர். கிருஷ்ணா மாவட்டம் விணு கொண்டா ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நீரோவுக்கு, முற்பட்ட பேரரசர் காலத்து நாணயங்களுக்கும், நீரோவுக்குப் பிற்பட்ட பேரரசர் காலத்து நாணயங்களுக்கு இடையிலும் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்தது. கி.பி. 193 முதல் 211 வரை ஆண்ட உரோமப் பேரரசன் செப்டிமியஸ் செவெரஸ் (Septimius Severus) காலத்திற்குப் பிற்பட்ட காலத்து நாணயங்கள் காண்பதும் அரிதாம். 1800-ல் கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும், 1878-ல் கருவூரிலும், 1891-ல் பெங்களூருக்கு அருகில் யெஸ்வன்புதூரிலும் கண்டெடுக்கப்பட்ட வெள்ளி நாணயங்களுக்கு இடையிலும், எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு செய்து கூட, டைபெரியஸ் காலத்தில் அல்லது அகஸ்டஸ் ஆட்சிக் காலத்துக்கு முன்னர் தொடங்கிற்று. திரு. ஹிப்பாலோஸ் (Hippalos) அவர்கள் கி.பி 45-ல் பருவக்காற்று ஓட்டத்தின் விளைவைக் கண்டெடுக்கவே உரோம நாணயங்கள், கிழக்கு நாடுகள் நோக்கி, வடிந்து போவது குறித்து டைபெரியஸ் முறையிட்டுக் கொண்டான். பொன் நாணயங்களும் வெள்ளி நாணயங்களும், இந்தியாவின் மேற்குக் கரை வாணிக மையங்களில் வந்து கொட்டின. இதற்குப் பெரிய காரணம், தனக்கு முந்திய காலத்தில், இந்தியாவுக்குச் சென்ற நல்ல நாணயங்கள் அனைத்தையும் அப்புறப்படுத்துமாறு வணிகர்களைத் தூண்டிவிட்ட நீரோ, நாணயச் செலாவணி மதிப்பைக் குறைத்துவிட்டதே தலையாய காரணம். தமிழ்நாட்டில், நீரோவுக்குப் பின்னர் வெள்ளி நாணயமே இல்லை. உரோமப் பேரரசின் பிற்பட்ட காலத்தை அடையும்வரை பொன் நாணயங்களும் காணப்படவில்லை. திருவாளர் சூவெல் (Sewell) அவர்கள், “பொன் நாணயங்கள் குவியல் குவியல்களாக ஆங்காங்கே புதைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டன என்றால், பாண்டியப் பேரரசுக்கும் சோழப் பேரரசுக்கும் இடையில் தொடர்ந்து நடைபெற்ற போர்கள் காரணமாகவே தமிழ்நாட்டு வாழ்வை உரோமர் கைவிட்டனர் என்பதை மறுக்கிறார். பொன் நாணயங்கள், தமிழ்நாட்டில் நனிமிகக் குறைந்த அளவில் காணக் கிடைக்க, (மதுரை மாவட்டத்தில் மூன்று கண்டுபிடிப்பே நிகழ்ந்தன. கோவை மாவட்டத்தில் ஒன்று கூட இல்லை) அதற்கு நேர்மாறாக, வடமாவட்டங்களில் பெருமளவில் காணக் கிடைப்பது, பொற்காசுகள் கொடுத்து வாங்கும் ஆடம்பரப் பொருள்களின் தேவை ஓரளவு குறைந்தமையும், பண்டமாற்று மூலம் வாங்கப்படும் பருத்தியாலான பொருட்கள் போலும், இன்றியமையாத் தேவைப் பொருட்களை ஆர்வத்தோடு திரட்டும் புதிய வாணிகத் தூண்டுதலுமே காரணமாம் என்றும், வாணிக நிலையிலான மொத்த விளைவுகளும், கி.பி. 64-ல் நேர்ந்த கொடிய நீ விபத்து, கிலாடியஸ், வழிப் பேரரசின் வீழ்ச்சி. வெஸ்பாஸியனின் சிக்கன எடுத்துக்காட்டு. கி.பி. 81 முதல் 96 வரை ஆண்ட டோமிட்டியன் (Domitian) கொடுமை, அடுத்து வந்த பேரரசர்கள், செலவினத்தில் காட்டிய நிதானம் ஆகியவை. துணை செய்ய ஏற்பட்ட வாணிக வீழ்ச்சியையே காட்டுகிறது என்று கூறியுள்ளார். நறுமணப் பொருள்கள், விலை உயர்ந்த நவமணிக்கற்கள் ஆகியவற்றில் இந்தியாவோடு கொண்டிருந்த வாணிகம். நீரோ மன்னன் இறப்போடு பெரும்பாலும் முடிவுற்று விட்டது என்ற சூவெல் அவர்களின் முடிவு முழுவதும் உண்மையானதன்று. உண்மையைக் கூறுவதானால், திருவாளர் வார்மிங்டன் காட்டுவதுபோல் நீரோவுக்குப் பிற்பட்ட காலத்து நாணயங்களின் கண்டுபிடிப்பு குறிப்பிட்டுக் காட்டுவதுபோல், இருமடங்கு வளர்ச்சி இருந்தது. முதலாவது தாலமி அவர்களின் நிலஇயல் ஆய்வு நூல், நமக்கு அறிவுறுத்துமாறு, உரோமானிய வணிகர்கள், கன்னியாகுமரியைச் சுற்றிக்கொண்டு, கிழக்குக் கரை வரை சென்று வந்தமையினைச் சுட்டிக் காட்டும். தென்னிந்திய தீபகற்பத்தின் கிழக்குக் கரை வாணிக வளர்ச்சி கடப்பா மாவட்டம் வினுகொண்டா கோட்டை மற்றும் அதிரல் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களிலிருந்து காணுமாறு அவர்கள் தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களுக்கும், ஏனைய அரசு நாடுகளுக்கும் ஊடுருவிச் சென்றிருந்தனர். இரண்டாவதாகச் சேர நாட்டின் வடமேற்குவரை, வெள்ளி நாணயங்கள் இல்லாமை கொண்டுவந்த வெள்ளி நாணயங்கள் அனைத்தும், பொன் நாணயங்களைச் செய்யாத ஆந்திரர்களாலும் சாகர்களாலும் உருக்கப்பட்டு, மறுவலும் வடித்து வழக்காற்றில் விடப்பட்டது என்ற உண்மையால் விளக்கப்படும். திருவாளர் வார்மிங்டன் பின்வருமாறு கூறுகிறார்: “இதுவும், தமிழ்நாடுகளில் உரோம நாணயங்களின் இடை நிறுத்தமும், பிற வரலாற்று மூலங்களிலிருந்து நாம் உய்த்துணரும் ஒரு மனப் போக்கைப் பிரதிபலிக்கும். முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இரண்டாம் நூற்றாண்டிலும், நறுமண்ப் பொருள்கள், விலையுயர்ந்த நவமணிக்கற்கள் போன்ற பொருட்களுக்குக் குறைவிலாத் தேவை இருந்தது. ஆனால், அதே காலத்தில், இந்தியப் பொருள்களையும், உரோமானியப்பொருள்களையும் தமிழ்நாட்டில் பண்ட மாற்றிக்கொள்வது தடையின்றித் தொடர்வதும், தமிழ்நாட்டுக்கு அப்பாலும், கிழக்கு நாடுகளுக்கு உரோமானியர்களின் கடற் பிரயாணம் தொடர்வதும் ஒருபால் இருக்க, தமிழ்நாட்டிலிருந்து சில வணிகங்களைத் திருவாளர் தாலமி காட்டியவாறு, சிம்யல்லா (Simylla) போலும் நகரங்கள் வளர்ச்சி பெறக் காரணமாக, இந்தியாவின் வடமேற்கு மாவட்டங்களுக்கு மாற்றும் போக்கு இருந்தது. ஆனால், தமிழர்கள், கிரேக்கர்கள், சிரியன்கள், அராபியர்கள், பர்ஷியர்கள், சாகர்கள், ஆந்திரர்கள், குஷான்கள் ஆகியோரிடையே பல்வேறு வாணிக நிலையங்களைக் காணும் வகையில், தம் பண்டப் பொருள்களைத் தங்களால் இயன்ற அளவு மேற்குக் கடற்கரை வரைக்கும் அனுப்பி வைக்கத் தொடங்கிவிட்டனர். இலங்கையும் கூட, அதே நடைமுறையை மேற்கொண்டது. ஆனால், உரோமானியர் அங்கு எப்போதும் சென்றது இல்லை. ஏனைய இரு தமிழ் அரசர் நாடுகளைக் காட்டிலும், சேர நாடு, மிக்க வளம் வாய்ந்தது. மிக்க அமைதி நிலவுவது மேலை நாட்டு வணிகர்களால், மிகவும் எளிதில் அடையக் கூடியது. பார்பரிகான் (Barbaricon) “பரியகஜ” (Barygaza) போலும் இடங்கள், பர்சியர், அராபியர், சிரியர், பால்மைரெனியர், குஷானியர் மற்றும் வேறு சில மக்களால், ஏனைய தமிழ்நாட்டு இடங்களைக் காட்டிலும் எளிதில் அடையப்பெற்றது. திருவாளர் “பெரிபுலூஸ்” (Pariplus) அவர்கள், தம்முடைய காலத்தில், தென் கோடித் தமிழ்நாட்டு முத்தும், பல்வேறு வழிகளில் கிடைத்த ஆமை ஓடும், வாணிகம் காணும் பொருட்டு, மலபார் நாட்டு வணிக நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன என்றும், இந்திய இரும்பு, (சிறப்பாக, மத்திய இந்திய மாவட்டத்தைச் சேர்ந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சிந்து நகரத்தைச் சேர்ந்தது) வடமேற்கு இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்ட்டது என்றும், இலங்கையின் செய் பொருள் (சிறப்பாக இலங்கை, பர்மா, சையாம் நாட்டு நீலமணிகள்) இந்தியாவின் கிழக்குக் கரைத்துறை முகங்களோடு தொடர்பு கொண்டிருந்த மலபார் வணிக நிலையங்களுக்குக் கொண்டுவரப்பட்டன என்றும் கூறியுள்ளார். (See. Warmington P.277-917).
7) பண்டைத் தமிழர்கள் மூவகை மரக்கலத்தைக் கண்டறிந்திருந்தனர். அவற்றுள் ஒன்று மீன்பிடி படகு, இரண்டு ஆற்றில் ஒடும் சிறு மரக்கலம். மூன்றாவது, கடலோடும் பெரிய மரக்கலம். மீன்படி படகை எடுத்து கொண்டால், அரபு நாட்டு மாதிரியானதும், பண்டங்களை ஏற்றிச் செல்வதும் ஆகிய சிறு படகு, மற்றும் பொய்னீஷியரின் படைக்கலம் பொருத்திய தட்டையான அடிப்பாகத்தை உடைய கப்பலை ஒத்திருப்பதும், திருவாங்கூர் நீர் விழாவில் பயன்படுத்தப் பெறுவதும் ஆகிய, துடுப்பால் உந்தப்படும் சிறு படகு போலும் உள் நாட்டு மாதிரிகளைக் காணலாம். கன்னியாகுமரிக்கு அப்பால், நூறு மைல் வரையும், பரதவர் கட்டுமரங்களையும், துடுப்பால் உந்தப்படும் மலபார் நாட்டுப் படகு போலும் சிறு படகுகளையும் கொண்டு செல்வர். இவை, நீண்டு பருத்த மரத்துண்டங்கள் இரண்டு அல்லது மூன்றைப் பனைநார்க் கயிற்றால் ஒன்று சேரக் கட்டப்பட்டவை. இச்சிறுபடகு, மெஸ்படோமிய அராபியர்கள், துடுப்பால் உந்தப்படும் தங்கள் மரக்கலங்களுக்கு இட்டு வழங்கும் வள்ளம் என்ற பெயரால் அழைக்கப்படும். பெரிய உந்து படகுகளில் மீன் பிடிக்க எழுவர் அல்லது எண்மர் கடல் மேல் செல்வர்.
கோடிக் கரையில், இன்றும் வழக்காற்றில் இருக்கும் (திருட்டுப்படகு எனும் பொருள் உடையதான) கள்ளத் தோணி, படகு வகைகளில் சிறப்புடைய ஒன்றாம் கண்ணேறுபடுதலால் உண்டாகும் கேட்டினைத் தவிர்த்தல் பொருட்டுக் கை முத்திரை, இடுதல், இதில் குறிப்பிடத்தக்க சிறப்பியல்பாம். இரு பக்கங்களிலும் குறை தீர்க்கும் குறியாம் “உ”, குதிரை வழிபடும் பெண் தெய்வத்தின் பெயர்கள் ஆகியனவும் பொறிக்கப்பட்டிருக்கும். மீன் பிடிக்கப் போவார், போவதன் முன்னர், மாரியம்மனை வழிபடுதல் கோடிக்கரையில் இன்றும் வழக்காற்றில் இருக்கிறது. மேலும் ஒரு வியப்பு என்னவென்றால், இவ்வழக்கம் உலகெங்கும் உள்ள வழக்கமாம். கள்ளத் தோணிக்கு உரியவர்கள் கரந்துறை வெள்ளாளர் என அழைக்கப்படுவர். அஜந்தா குடைவரைகளில் கி.பி. 600 ஆண்டைய வண்ண ஓவியங்களுள், மூன்று பாய்மரங்களோடு கூடிய கப்பல் மற்றும் அரசு விழாக்களில் பயன்படும் வள்ளப்படகு ஆகியவற்றின் ஓவியங்கள் காணப்படுவது காலாகாலமாகக் பின்பற்றப்பட்டு வரும் வழக்கத்தினைக் காட்டுகிறது. இந்தியாவுக்கு வெளியில், கிரேக்கர்களும், உரோமானியர்களும், பண்டைய எகிப்தியர்களும், இவ்வழக்காற்றைப் பின்பற்றினர். சீனாவைச் சேர்ந்தனவும், இந்தோ-சீனாவைச் சேர்ந்தனவும், வட இலங்கையைச் சேர்ந்தனவும் ஆகிய சீனக்கடல் ஓடவல்ல, அடித்தட்டையாக உள்ள மரக்கலங்களில் கண் பொறிக்கப்பட்டது என்பது சொல்லத் தேவை இல்லை. கிருஷ்ணா வரையான கிழக்குக் கடற்கரையில் கட்டுமரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. அதற்கு அப்பால், இதனினும் பழமையானதான கட்டுமரம் வழக்காற்றில் இருக்கிறது. கோதாவரி கழிமுகங்களில் கால் அணியாம் ஷூ வடிவிலான தோணி, காணக்கூடிய ஒன்றாம்.
ஆற்றில் ஓடவல்ல தென்இந்திய மரக்கலம், நான்கு வகைப்படும். தஞ்சையிலும் வங்காளத்திலும் இன்றும் வழக்காற்றில் இருக்கும் வாழைமரத்தண்டுகளால் ஆன கட்டுமரம் நனிமிகப் பழமையானது. மேற்கூறியது போலவே நனிமிகப் பழமையானதும், வேலூரில் இன்றும் காணக்கூடியதுமான மட்கலமிதவை, இரண்டாவது இனம் மூன்றாவது வகை, காவிரி, துங்கபத்திரை, டைகிரிஸ், மற்றும் இயூபிரட்டஸ் ஆறுகளில் விடப்படும் பரிசில், தாம் காய்ச்சிய மது வகைகளை டைகிரிஸ் ஆற்றின் வழியே இயூபிரட்டஸ் ஆற்றுப் பகுதியும் பர்ஷிய வளைகுடாப் பகுதியுமான சால்டியன் (Chaldeen) நாட்டு நகரங்களுக்குக் கொண்டு செல்ல, அஸ்லிரிய மது வணிகர்களால், தோலால் மூடப்பட்ட பரிசில்கள் பயன்படுத்தப்பட்டன என்பதும் ஈண்டுக் குறிப்பிடல் தகும். இப்பரிசில் வகைகள், பரிசிலுக்குத்தார் பூசப்பட்ட மெழுக்குத் துணிகள், பயன்படுத்தப்பட்ட அயர்லாந்து வரையும் பயணம் செய்ததாகத் தெரிகிறது. பனைமரங்கள் இரண்டை ஒன்றாக மூட்டிக் குடைந்து செய்யப்பட்டு “சாங்கடம்” (Sangadam) என்ற பெயரில், கோதாவரித்துறை முதல், தென்னிந்தியா மற்றும் இலங்கை வரை காணப்படும் பரிசில் நான்காவது வகை.
“சுருயல்” (Surual) என வழங்கப்படும் கடல் ஓடும் கப்பல்கள் தென்னிந்தியாவில் உள்ளன. இவை, நீண்ட கிடக்கையிலான, வெள்ளைநிறக் கட்டைகளைத் தாங்கி, சிவனின் அடையாளச் சின்னமாகிய மூன்று பட்டைத் திருநீறு பூசப்பட்டிருக்கம்.
கடல் ஓடும் கப்பல்களில் உள்ள பாய்விரி கப்பல் மற்றும் கப்பல் ஒருபால் சாய்ந்து விடாதபடி காக்கும் பக்கவாட்டுச் சட்டம் ஆகியவற்றின் வடிவமைப்பு, “பொலினிஷிய” ஒருமைப்பாடு உடையதாகக் கொள்ளப்படுகிறது. அது எப்படியாயினும், அந்த ஒருமைப்பாடு, இந்தியாவுக்கு, பொலினீஷியாவுக்கும் இடையில் நடை பெற்ற வாணிக உறவைத் தாங்கியுள்ளது ஆந்திரா மற்றும் குறும்ப அரசர்களின் நாணயங்கள், ஒற்றைப் பாய்விரிதுலம் இல்லாமல் இரட்டைப்பாய்விரி கூம்புகளைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாம். மலேயா நாட்டுக் கப்பல்களுக்கு இடப்பட்டிருக்கும் பெயர் தமிழ்ச் சொல்லாகிய கப்பல் என்பதாம் என்பது நனிமிக வியத்தற்கு உரியது. மலேசிய மொழிகளில், தென்னிந்திய மொழி மூலத்தைக் கொண்ட எண்ணற்ற சொற்கள் உள்ளன. இவைபோலும் உண்மைகள், தென்னிந்திய நாகரீகம், கடல் கடந்த நாடுகளிலும் சென்று பரவின என்பதை மேலும் உறுதி செய்கின்றன.
நனிமிகப் பழங்காலத்திலேயே, தமிழர் செல்வாக்கு எப்படியெல்லாம் உலகெங்கும் பரவியிருந்தது என்பதைக் காண்கிறோம். கண் பொறிக்கப்படுவது, பரிசில்கள் உலகெங்கும் பரவிக் கிடப்பது ஆகியனபோலும் தெளிவான நிகழ்ச்சிகள், அங்கும் ஒரே காலத்தில் தோன்றிய ஒருபோகு நிலையாம் என எளிதில் ஒதுக்கி விட முடியாது.
“வங்காளத்து ஆசிய சமூகத்தவர் நினைவுகள் (Memories of Asiatic Society of Bengal VII) என்ற தலைப்புள்ள திருவாளர் ஜே. ஹார்னெல் (J. Hornell) அவர்களின் கட்டுரையினைக் காண்க (பக்கம் 152-190; 216-227) 8) பூமராங்கு எனப்படும் வளைதடி மகாபாரதத்தில் இடம்பெற்றுள்ளது. (J.R.A.S. 1898, page: 379, J.A.S.B. 1924, p. 205).
தக்கணத்தின் தொல் பழங்குடியினரோடு ஒருமைப்பாடுடையவர் ஆஸ்திரேலியர் எனக்கருதும், ஆங்கில நாட்டு உயிரியல் அறிஞரும், எழுத்தாளரும் ஆன, திருவாளர் ஹக்ஸிலி (Huxley) அவர்கள் இருநாட்டிலும் வளைதடி இருப்பது, ஆஸ்திரேலியாவில் உள்ள சில இனத்தவர் கால்வழி ஆகிய பொருள்கள் மீது கருத்தூன்றி ஆய்வு செய்துள்ளார்.
திருவாளர் தர்ஸ்டன் (Thurston) அவர்களுக்குப் புதுக்கோட்டையின் அன்றைய திவான் கொடுத்திருக்கும் அடியில் தரப்பட்டிருக்கும் குறிப்பு கவனத்தோடு படிக்கத் தக்கது:
“வளலரி” எனப்படும் வளைதடி பொதுவாக, நன்கு வயிரம் ஏறிய கடின மரத்தினால் செய்யப்பட்ட படைக்கலன் ஆகும். ஒரோவழி இரும்பால் செய்யப்படுவதும் உண்டு. பிறை வடிவானது. ஒரு முனையைக் காட்டிலும், மற்றொரு முனை கடினமானது. வெளி விளிம்பு கூர் செய்யப்பட்டது. அதைக் கையாளத் தெரிந்தவர், அதன் கனம் குறைந்த முனையைக் கையில் பற்றிக்கொண்டு, விரைந்து பாயவல்ல ஆற்றலை அதற்குத் தரும் வகையில், தம் கோள்களுக்கு மேலாகப் பலமுறை விரைந்து சுழற்றிப் பின்னர் தாக்கக் கருதிய பொருள்மீது வீசி எறிவர். ஒரே வீச்சில் சிறிய வேட்டை விலங்கினை - ஏன் ஒரோ வழி மனிதனையும் வீழ்த்தும் வளை தண்டு வீச வல்லவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வளைதடி ஒரோவழி முயல் மற்றும் காட்டுக் கோழியை வேட்டை ஆடப் பயன்படுத்தப்படுவதாக அறிமுகம் செய்யப்படுகிறது என்றாலும் புதுக்கோட்டை மாநிலத்தில், வளைதடி வீச வல்லார் எவரும் இப்போது முன்வரவில்லை. ஆயினும், அதன் வாழ்நாள், இறந்த நாளாக ஆகிவிட்டது என்றே கணக்கிடப்பட்ட வேண்டும் கடந்த நூற்றாண்டில் நடைபெற்ற பாளையக்காரர்களிடையிலான சண்டைகளில், அப்படைக்கலம் பெரும் பங்கு கொண்டது என மரபு வழிச் செய்தி கூறுகிறது.” (E. Thurston, Castes and Tribes of Southern India. Vol. I introduction p. xxviii-xxix.) .
“பண்டைய எகிப்து, ஆப்பிரிக்கா, அமெரிக்காவில் ஐக்கிய நாடுகளின் தென்மேற்கில், மெக்ஸிகோவை அடுத்துள்ள அரிஸோனா (Arizono), புதுமெக்ஸிகோ, மற்றும் இத்தாலியின் மைய நாடாகிய எட்ருஸன் (Etruscan) ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குவளைகளிலிருந்து பதிவு செய்யப்பட்ட கணக்கிலா அகச்சான்றுகளிலிருந்து, ஆஸ்திரேலியப் பழங்குடியினரிடையே, எதிர்பாரா நிலையில், தன்னாலேயே தோன்றியதோ, எந்த நிலையிலும், ஆஸ்திரேலிய மண்ணிலேயே தோன்றியதோ அல்லாமல், ஆசியப் பெருநிலப் பரப்பிலிருந்து, ஆங்கு முதன் முதலில் சென்று குடியேறியவர்களால் கொண்டு செல்லப்பட்ட தான வளைதடி, ஒரு வலுவான படைக்கலமாகவே மதிக்கப்பட வேண்டும். திரும்பி வந்துசேரும் ஆஸ்திரேலிய வளைதடிக்கே உரிய சிறப்பியல்புகளாகிய, அலகுபோலும் தட்டையாம் தன்மை, திருகு சுருள் போலும் முறுக்குகளைத் தென் இந்திய வளைதடி இழந்துளது. ஆஸ்திரேலிய வளைதடிகளில், பெரும்பாலன. திரும்பி வரும் வகையில் வடிக்கப்பட்டது அன்று. உண்மையில் திரும்பி வந்தடையும் வளைதடிகளைப் பெறுவது இப்போது அரிது. (E. Thurston Ethnographic Notes in Southern India. P. 555-6).
9) தென்கிழக்கு ஆசியாவில் இந்தியர் குடியேற்றம்.
இன்றைய இந்தோ சைனாவின் தென்பகுதி, மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளில், மக்கள் குடியேற்றம், திருவாளர் பெர்ராண்ட் (Ferrand) அவர்கள் கூற்றுப்படி, கி.மு.மூன்று அல்லது ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பே தொடங்கிவிட்டது. திருவாளர் க்ரோம் (Krom) அவர்கள், அத்தீவுகளில் மக்கள் குடியேற்றம். கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்தில் கூட தொடங்கப்படவில்லை என்று கருதுகிறார். திருவாளர் பெல்லியோட் (Pelliot) அவர்கள் கருத்துப்படி, கம்போடியாவின் தென்பகுதி மற்றும் கொச்சின்-சைனாவை உள்ளடக்கிய “ப்யூனன்” (Fuman) எனும் இடத்தில் மக்கள் குடியேற்றத்தைத் துவக்கி வைத்த திரு.கெளண்டினியன் (Kaundinya) அவர்கள், குறைந்தது கி.பி முதல் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் வைக்கப்படவேண்டும். “சம்பா” பகுதியிலும் அதற்கும் அப்பாற்பட்ட தெற்கு அன்னம் கழித்தே இக்குடிபெயர்ப்பு மேலும் நூறு ஆண்டுகள் கழித்தே நடைபெற்றிருக்க வேண்டும். சுவர்ணதீபம் அதாவது பொன்தீவு என அழைக்கப்படும் சுமத்ரா மற்றும் யவபூமி என்றும், பார்லே நாடு (Land of Barley) என்றும் அழைக்கப் பெறும் ஜாவா முதலியன, சீன யாத்திரீகன் அடியிட்ட குப்த அரசு காலத்தில் புகழ் பெற்றும் விளங்கின.
“மேற்கே, தென் ஆப்பிரிக்க முனையை அடுத்துள்ள மடகாஸ்கர் முதல் கிழக்கே, வியட்நாம்நாட்டின் ஒரு பகுதியாகிய தொங்கிய (Tongking) வரை பரவியிருந்த இந்தியச்செல்வாக்கின் மக்கள் குடியேற்றப்பரவல், வெறும் பொருள் ஈட்டும் பெருமுயற்சி மட்டும் அன்று. அது சமய முடிவுகளையும் கருத்தில் கொண்டது. வைணவம், சைவம், மற்றும் பெளத்தம் ஆகிய சமயங்கள் கொடிய போராட்டத்திற்குக் கொண்டுபோய்விடும் சமய வேறுபாடுகளும் இடம் கொடாமல், புதிய மண்ணில் வேர் ஊன்ற முற்பட்டன. ஆஸ்திரேலியத் தீவுகள் மற்றும், மத்திய, தென்பசிபிக் கடல் தீவுகள், இந்தியக் குடியேற்றப் பகுதியாக ஆனது. கொடும் போரின் விளைவால் நேர்ந்ததாகத் தெரியவில்லை.”
(Paul Masson-Cursel. Helena De Willman-Grabowska, and Philipp Stern அவர்களின் பண்டை இந்தியாவும் பண்டை இந்திய நாகரிகமும் (Ancient India) and Indian Civilization. p. 110-11 | Kegan-Paul, Trench, Trubner & co., Ltd., 1934).
10) மேலைக்கடல் தீவுகள், எகிப்து, ஆப்பிரிக்கா ஆகியவை ஒருபக்கமாகக் கீழ்க்கடல் தீவுகள், வட அமெரிக்காவின் தென்பகுதியில் உள்ள யுகாடன் (Yucatan) மெக்ஸிகோ ஆகியன ஒருபக்கமாக இரண்டிற்கும், இடையில் நிலவிய இணைப்புக்கான அடையாளங்கள்:
ஜப்பான் நாட்டு சுகுவில் (Sukuh) அழிவுறாமல் விடப்பட்டிருக்கும் கட்டிடங்களுக்கும் வடஅமெரிக்காவின் தென்மேலைப் பகுதிகளாகிய யுகாடன் மற்றும் மெக்ஸிகோவின் மாளிகைகளுக்கும் இடையில் நிலவும் ஒருமைப்பாடு நினைவில் கொள்ளத்தக்க ஒன்று. இதிலிருந்து, திருவாளர் பெர்கூஸன் (Perguson) அவர்கள், மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த கட்டிடம் கட்டும் இனத்தவர், ஜாவாவில், தற்காலிமாகக் குடிவந்த, அதே கட்டிட இனத்தவரே என முடிவு செய்கிறார். அங்ஙனமாக, ஜாவா, தன்கட்டிடக்கலையினை, எங்கிருந்து எவ்வாறு பெற்றது என்பதே அடுத்த கேள்வி. இந்தியா குறிப்பாகத் தென்இந்தியாவே வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட காலத்தில், பண்டைய ஜாவா மக்களை, அக்கலைத் துறைக்கு ஈர்த்திருக்க வேண்டும் என்பதே அதற்கு விடையாதல் வேண்டும். .
“ஒரு நாட்டு வீடுகளின் நுழைவாயில், பண்டை எகிப்திய கோபுரவாயில்களைப்போல், எடுத்துக்காட்டுக்கு நைல்நதிக்கரை “கர்னக்” (Karnak) எனும் இடத்தில் உள்ளதுபோல் உள்ளது. என்றாலும், இது போலும் வடிவங்கள், சுகுவில் உள்ளதைக் காட்டிலும் அதிக ஒருமைப்பாடு உடையன சொகொட்டோ,(Sokoto) அடமவ (Adamawa) மற்றும் காண்டோ (Gando) ஆகிய இடங்களில் வாழும் மக்களில் பெரும்பாலனவராக உள்ள சூடான் நாட்டு ஹெளஸா (Haussa) மக்களிடையே, இன்றும் உள்ளன” என்ற குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது, திருவாளர் “ஸ்டுட்டெர்ஹெம்” (Stutierem) அவர்களைக், கிழக்கு ஜாவா மக்களிடையே, எகிப்தியச் செல்வாக்கு இருந்தது என்ற முடிவினைத் தரச்செய்துள்ளது. ஆனால், நம்முடைய கொள்கைப்படி, எகிப்தியர் தாமும், இந்திய நாகரீகத்தால் இயக்கப்பட்டனர். ஆகவே, உலகத்தின் தொல்பழம் நாகரீகத்திற்குப் பொறுப்பாளி எகிப்து அன்று. இந்தியாவே (R.C. Majundar, Svarnadvipa. Vol, II. Part II, p. 283-84).
இந்தோனேஷியாவில் தென்னிந்தியச் செல்வாக்கு:
ஒரு சிற்றாய்வு:
புகழ்பெற்ற நாளந்தாப் பல்கலைக் கழகத் தலைவரும், காஞ்சியில், உயர்ந்த அரசுப் பணியாளரின் மகனாகப் பிறந்தவரும், அன்றைய பெரும் புலவர்களில் ஒருவராம் என்ற பெருநிலைக்கு உயர்ந்தவருமான தர்மபாலர், தம் கடைசி வாழ்நாட்களைச் சுமத்ராவில் கழித்ததாகச் சொல்லப்படுகிறது. நாளந்தாப் பல்கலைக் கழகத்தில் அவர் தலைமை வகித்த காலத்தை, தொடக்கத்தில் ஏழாம் நூற்றாண்டில் நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. (திரு. எச்.டி. சங்கலியா அவர்களின் நாளந்தாப் பல்கலைக்கழகம் என்ற ஆங்கில நூலைக் காண்க (பக்கம் 107-8) தர்மபாலர் நாளந்தா பல்கலைக் கழகத்தில் முப்பது ஆண்டுகாலம் பாடம் கற்பித்துவிட்டு, தம் வாழ்நாளின் இறுதியில் சுவர்ணபூமி சென்றடைந்தார். ஶ்ரீவிஜயத்திற்கும் தென்னிந்தியா மற்றும் இலங்கைக்கும் இடையில் இருந்த மிகப் பெரிய போக்குவரத்து ஏனைய அகச் சான்றுகளேயல்லாமல், தஞ்சைப் பேரரசன் முதலாம் இராஜராஜன் தன்னுடைய ஆட்சி ஆண்டு 23-ல், அதாவது கி.பி. 1007-8-ல் கடாரம் மற்றும் ஶ்ரீவிஜயத்தின் அரசனும் சைலேந்திரன் வழிவந்தவனுமான ஶ்ரீமாரவிஜயோத்துங்கன் நாகப்பட்டினத்தில் கட்டிய சூடாமணி விஹாருக்கு வழங்கிய லெய்டன் கிராண்ட்கல்வெட்டாலும் தெரிய வருகிறது. சோழர் வெற்றி பெற்ற நாடுகளாகமலேயத் தீபகற்பத்தைச் சேர்ந்த நிகோபார் தீவுகள், தகோபா மற்றும் சுமத்ரா ஆகியவற்றைத் திருவாலங்காட்டுச் செப்பேடு குறிப்பிடுகிறது. பிற்காலச் சோழன் ஒருவன், கடாரத்தை வென்று பெருந்தன்மையோடு அதன் ஆட்சிப் பொறுப்பை அதன் அரசன்பால் ஒப்படைத்தான்.
மேற்கில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள டோபோ (Tabo) ஏரியைச் சுற்றி வாழும் கரோ-படகம் (Karo Bataks) பழங்குடியினரின் ஐந்து பிரிவினரில் ஒரு பிரிவினராகிய “மெர்கா சிம்பிரிங்” (Merga Symbiring) என்ற பழங்குடியினரிடையே உள்ள ஈமச்சடங்கு குறித்துச் சிறந்த கட்டுரை ஒன்றைத் திருவாளர் பேராசிரியர் “கெர்ன்” (Kern) என்பார் குறிப்பிட்டுள்ளார். சிம்பிரிங் இனத்தவரின் கிளைப் பிரிவினர் சொலியா, பாண்டியா, மெலியலா, தேபரி மற்றும் பெலவி (பெலவி அதாவது மலாய்) என்பவராவர். முதல் மூன்று பெயர்களும், தென்னிந்தியாவில் நன்கு அறிந்த இனப் பெயர்களாம். அவை இப்போது ஆய்வில் உள்ள பழங்குடியினர் திராவிட இனத்தவராவர் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. ‘பெலியலா” என்பது மலையாளம் என்பதனோடு ஒருமைப்பாடுடையதே; “பெலவி” என்பது “பல்லவா” என்ற சொல்லோடு ஒருமைப்பாடுடையதாகக் கொண்டால் அது நனிமிகு கவர்ச்சிக்கு உரியதாம்” என்கிறார் திருவாளர் “கெர்ன்” அவர்கள். கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றான, “போர்னியோ”வில் உள்ள “கோயிடெய்” (Koetie) என்னும் இடத்தில் காணப்படும் எழுத்து வடிவம், மகேந்திரவாடியிலும், தளவனூரிலும் உள்ள மகேந்திர பல்லவனின் குகைக் கல்வெட்டு எழுத்துக்களோடு ஒரு சார் ஒருமைப்பாடு கொண்டுள்ளது. .
இந்தியாவின் வடகோடியிலிருந்து தென் கோடிக்கும், அங்கிருந்து வங்காள விரிகுடாவைக் கடந்து மலேயத் தீவுகளுக்கும், அகஸ்தியர் குடிபெயர்ந்தார் என்ற சமயக் கோட்பாடு, மேலும் மேலும் ஆதரவு பெற்று வருகிறது. வாயு புராணத்தின்படி, திருவாளர் தீக்ஷிதர் அவர்களின், வாயு புராணத்தின் சில கூறுகள் (Some Aspects of Vayu Purana See. vii) அகஸ்தியர் ஜாவாவைப் போலவே பர்ஹினதீபா. (பெரும்பாலும் , போர்னியோ), குஷதீபா, வராஹதீபா, சாணக்யதீபா மற்றும் மலையதீபா ஆகிய இடங்களுக்கு வருகை தந்தார். ஓர் அகஸ்தியர், தென்னிந்தியாவைச் சேர்ந்த மலைய பர்வதத்திலிருந்து வேறுபட்டதான மலையதீபாவில் உள்ள மஹாமலைய பர்வதத்தின் மேல் ஓர் அகஸ்தியர் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. சுமத்ராவில் உள்ள முக்கியமான ஒரு மலை, இன்றும் மலையமலை என்றே அறியப்படுகிறது. கிழக்கிந்தியத் தீவுகளுக்கு அகஸ்தியர் வருகை தந்தார் என்ற கற்பனைக் கதை, ஒருவேளை, இந்தியப் புண்பாட்டின் குடியேற்றத்திற்கு முந்திய, அதற்கு வழி வகுத்த தென்னிந்தியாவிலிருந்து அலைஅலையாக வந்த பிராமணப் பண்பாட்டின் வரலாற்றுச் சின்னமாம் என வாதிடப்படுகிறது. ஜாவாவில் அகஸ்தியரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் சிவன் கோயில், மற்றும் அங்கு, தென்னிந்திய அகஸ்திய கோத்திர பிராமணர் வழிவந்தவர் குடியிருப்பு பற்றிய அகச்சான்று எதுவும் இல்லை. அகஸ்தியர், இந்தோனேஷிய பிராமண நாகரீகத்தின் பெயர் சூட்டு தலைவனாக இல்லையாயினும், பிராமணப் பண்பாட்டுத் தலைவனாக வளர்ந்திருக்கக் கூடும்.
மத்திய ஜாவாவில் டியெங் (Dieng) மேட்டு நிலத்தில் கட்டப்பட்ட சஞ்சயாவில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்ட பழைய சிவா கோயிலுக்கு அருகில், தென்னிந்திய மூலச்சாயல் உடைய கணேசர், துர்க்கை சிலைகள் உள்ளன. பிரம்மணம் (Prambanam) என்ற இடத்தில் உள்ள இந்து சமயக் கோயில் இடிபாடுகளில் 9, 10, 11 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த தென்னிந்தியச் சிலைகளின் வடிவமைப்பினையும், உருவத்தால் பொருள் உணர்த்தும் தன்மையினையும் நினைவூட்டுவதாகக் கருதப்படும் சிவன், விஷ்ணு, பிரமன் மற்றும் திரிமூர்த்தி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாளர் ஒ.சி. கங்கோலி அவர்கள் தம்முடைய “தென்னிந்திய வெண்கலங்கள்” என்ற தலைப்புள்ள ஆங்கில நூலில், உமா-மகேஸ்வர மாதிரி, தென்னிந்திய சிலை ஒன்று, உண்மையில் எடுத்துச் செல்லப்பட்டதற்கான ஐயத்திற்கு இடம் இல்லா அகச் சான்றினைக் குறிப்பிட்டுள்ளார்.
எட்டு ஒன்பது நூற்றாண்டுகளில், ஜாவா இயல்புடையதாக ஆக்கப்பட்டதும், அதன் விளைவாக, அதன் இரண்டாம் நிலை இந்துவாம் தன்மையைப் பெற்றதும் ஆகிய பாலித்தீவில், தென்னிந்தியப் பல்லவ கிரந்த எழுத்து திருந்திய வடிவில் வழக்காற்றில் இருந்தது போன்ற, இந்தியாவிலிருந்து நேரிடையாக இடமாற்றம் இருந்தமைக்கான அகச் சான்றுகள் உள்ளன. திருவாளர், ஸ்டுட்டெர்ஹெம் அவர்களின் “பண்டைய பாலி இனக் கலையில் இந்தியச் செல்வாக்கு” என்ற நூலையும், டாக்டர் பி. சிச்சப்ஹர அவர்களின் “பல்லவர் காலத்தில் இந்தோ-ஆரியப் பண்பாட்டின் விரிவாக்கம்” என்ற நூலையும் காண்க. இந்தியாவிற்கு நனிமிகத் தொலைவான நாடுகள் மற்றும் இந்தோனேசிய நாடுகளின் பண்பாடு, பல்லவ ஆவணங்கள், அவை போலும் நிகழ்ச்சிகளுக்கான சிறு குறிப்பினைத்தானும் பெற்றிருக்கவில்லையாயினும் பல்லவர்கள், அத்தொலை நாடுகள் வரையும் தங்கள் அரசாணையைச் செலுத்தி, பரந்த பெரிய காலனி , ஆட்சியை நிறுவி இருக்க வேண்டும் என்ற யூகத்தை உறுதி செய்யவல்ல அசைக்க முடியாத பல்லவ முத்திரையினைக் கொண்டுள்ளது.
11) தென்இந்தியாவுக்கும் தென் சீனாவுக்கும் இடை யிலான தொடர்பு:
தென் சீனாவோடு கொண்டிருந்த தொடர்பைப் பொறுத்த வரையில், அன்னம் எனவும் அழைக்கப்படும் சம்பா நாட்டில் வோகன் (Vocan) எனும் இடத்தில் உள்ள சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள், இந்தியா உடனான தொடர்பு அதற்கு முந்திய காலத்தில் இல்லையாயினும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டு போலும் பழங்காலத்தைச் சேர்ந்தது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றன. உரோம வணிகர்கள் கடல் வழியாக கட்டிகராவுக்கு அதாவது கொச்சின் சீனாவுக்குக் கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தனர். கி.பி. 166-ல் அவர்களில் ஒருவர் இன்றைய தொங் கிங் நகராகிய கியஒ-சு (Kiao-Cho). துறையில் இறங்கினர்.
இந்தோசீனாவில் உள்ள இந்தியர் குடியிருப்புகளில் இருந்தோ அல்லது தம் தாயகமாம் இந்தியாவிலிருந்து நேரிடையாகவோ, கடல் வழியாக வந்த புத்த பிக்குகளால் தென்சீனா பழங்காலத்திலேயே ஆட்கொள்பபட்டுவிட்டது. தென்சீனாவைச் சேர்ந்த பெளத்தப் பண்பாடு, தென் இந்தியாவின் தெளிவான முத்திரையினை ஏற்றுள்ளது. திருவாளர் பி.கே. முகர்ஜி அவர்களின் “சீனாவிலும், தொலைகிழக்கு நாடுகளிலும் இந்திய இலக்கியம்” (Indian Literature in China and the Far East, p. 25- 26) என்ற நூலைக் காண்க.
சீனாவுடனான இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு:
தென்சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மற்றும் இந்தோனேஷியாவுக்கும் இடையில் கடல்வழித் தொடர்பு கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே தொடங்கிவிட்டது.
கி.பி. 618 முதல் 907 வரை ஆட்சியில் இருந்த “டி-வாங்” (Tang) இனத்தவர் காலத்தில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இருந்த கடல்வழி, பெரிதும் வணிகர்களாலும், சமயப் பிரயாணிகளாலும் பயன்படுத்தப்பட்டது. தொலைதூர இந்தியத் தீபகற்பமும் கிழக்கிந்தியத் தீவுகளும், இந்திய நாகரீகம் உடையவாக ஆக்கப்பட்டுவிட்டன. ஶ்ரீவிஜயன் பேரரசு, ஜாவா, நாட்டின் கலிங்க மாநிலம், ப்யூனன் அல்லது பண்டைய அன்னம் போன்றவை. இந்துப் பண்பாடு நிலவும் நாடுகளாம் என்ற உலகப் புகழ் பெற்றுவிட்டன. எங்கும் சமஸ்கிருதம் கற்கப்பட்டது. சீனச் சமயப் பிரயாணிகள், தங்களுக்குத் துணைசெய்யவும், தங்க இடந்தரவும் சமஸ்கிருத மொழி வல்லார்களைக் கண்டனர். சீன யாத்திரிகன் இட்சிங்க் கூட இந்த வழியாகவே வந்தான். கி.பி. 618 முதல் 799 வரையான காலத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட பெளத்த சந்நியாசிகள், இந்தியாவுக்கும், அதன் குடியேற்ற நாடுகளுக்கும் சென்றனர். ஏறத்தாழ 400 நூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து சீன மொழிக்கு, மொழி பெயர்க்கப்பட்டன. அவற்றுள் 300 நூல்கள் இன்றும் அழியாமல் உள்ளன. சமஸ்கிருத்திலிருந்து சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கடைசி நூல் கி.பி. 1280 முதல் 1368 வரை ஆட்சியில் இருந்த ய்யூன் அல்லது மொங்கோல் அரச இனத்து ஆட்சிக் காலத்தில். 12-13 இலங்கை அரசர்கள் முதல் இரண்டு சேனர்களுக்கும், தென்னிந்தியாவுக்கும் இடையில் நடை பெற்ற போர்கள்:
“பூஜாவலிய” என்ற நூலின்படி, பராக்கிரமபாபு என்ற பேரரசன் காலத்திலிருந்து பின் நோக்கிக் கணக்கிட்டவாறு, முதலாம் சேனன், தன்னுடைய ஆட்சியைக் கி.பி. 819-820-ல் தொடங்கியதாகக் கருதப்படுகிறது. அவன் காலத்தில், இலங்கைமீது, பாண்டியர் படையெடுப்பு ஒன்று நிகழ்ந்தது. அந்நாட்டில் வாழ்ந்திருந்த தமிழ் இனத்தவர் அதில் சேர்ந்துகொண்டனர். அநுராதபுர நகரும்கூட அழிக்கப்பட்டது. ஆங்கு வைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னங்களாகிய புத்தரின் பல், மற்றும் கமண்டலமும் எடுத்துச்செல்லப்பட்டன என, பிற்கால வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஆனால், இதை உறுதி செய்யவல்ல வேறு அகச்சான்று எதுவும் இல்லை. சேனன். அநுராதபுரத்திற்குத் திரும்பி விட்டான். அமைதி நிலைநாட்டப்பட்டது.
இரண்டாம்சேனன் தன் ஆட்சிக்காலத்து ஒன்பதாவது ஆண்டில், அதாவது கி.பி.866-901-ல், அவன் படைத்தலைவன் பாண்டிய நாட்டின்மீது படையெடுத்துச் சென்று, மதுரையைக் கைப்பற்றி அழித்துவிட்டு, பாண்டிய அரசன் போரில் பெற்ற புண்ணால் இறந்து போகவே, பாண்டியர் குலத்தவர் எனச் சொல்லிக்கொண்ட ஒருவனை அரியணையில் அமர்த்தினான்.
ஐந்தாம் காசிபன் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 929-939) இராஜசிம்மபாண்டியன், சோழர்க்கு எதிரான போரில் அவன் துணையை நாடினான். ஆனால், இந்தியாவுக்குச் சென்ற, சிங்களப்படை, வெற்றி காணாமல் திரும்பிவிட்டது. ஐந்தாம் தப்புலா காலத்தில் (940-952) கி.பி. 918-19 ஆண்டளவில், பாண்டிய அரசன் இலங்கைக்குச் சோழ நாட்டிலிருந்து தேர்ந்தோடி வருகை தந்தான். சிங்கள அரசன் அவனுக்குத் துணை போவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்த போது, அந்நாட்டுச் சிற்றரசர்களிடையே உள்நாட்டுக் குழப்பம் திடுமென எழுந்து விடவே, பாண்டியன், தன் முடி மற்றும் அரசியல் அணிகலன்களை அங்கேயே விட்டுவிட்டு, ஏமாற்றத்தோடு மலபாருக்குத் திரும்பி விட்டன.
கி.பி. 942 முதல் 918 வ்ரை ஆட்சியில் இருந்த மூன்றாம் உதயனின் பலவீனத்தைப் பயன்கொண்டு பராந்தக சோழன், ஆங்குப் பாண்டியன் விட்டுச் சென்ற முடி மற்றும் அரச அணிகளைத் திரும்பப்பெற அரசியல் தூது ஒன்றை அனுப்பி வைத்தான். அது மறுக்கப்படவே, பராந்தன் இலங்கை மீது படையெடுத்துச் சென்றான். ஆனால், உதயன் அரச சின்னங்களோடு ரோசனத்திற்கு ஓடிவிட்டான். எதிர்பாரா இராஷ்டிரகூடர் படையெடுப்பு வந்துவிடவே, சோழர், பேரச்சத்தோடு சோழர் தாயகம் திரும்பிவிட்டனர். சோழ நாட்டின் எல்லைப் பகுதிகளை அழித்து உதயன் தானும் பழி தீர்த்துக்கொண்டான்.
கலிங்க நாட்டுச் சிற்றரசி ஒருத்தியை மணந்து கொண்ட நான்காம் மகிந்தன் காலத்தில், ஶ்ரீவல்லப பாண்டியனால் இலங்கை தாக்கப்பட்டது, அப்போரில் பாண்டியன் படைத் தலைவன் கொல்லப்பட்டான். ஐந்தாம் சேனன், கி.பி. 991 அளவில், இலங்கையில் வாழ்ந்திருந்த தமிழர்கள் கிளர்ச்சியால் துன்பப்பட நேர்ந்தது.
இராஜராஜசோழன், மகிந்தனை, அவனுடைய முடி அணிகலன்களைப் பாண்டியன் விட்டுச்சென்ற முடி அணிகலன்களோடும் கைப்பற்றி, தன்வெற்றியை முடித்துக் கொண்டான் இலங்கை, சோழ நாட்டின் ஒரு மாநிலமாகிவிட்டது. பொலனருவா நரகம், ஜனனாதபுரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மகிந்தன், இந்தியச் சிறையில் இறந்துபோனான். முதலாம் சேனன் காலத்து இலங்கைமீது படையெடுத்துச் சென்றவன், ஶ்ரீவல்லப பாண்டியன் மகனாகிய வரகுண பாண்டியனாவன். முதல் இரண்டு சேனர்களும் தென்னிந்தியாவோடு கொண்டிருந்த உறவு பற்றி ஆண்டுகணிப்பு தொடர் வரலாற்றுக் குறிப்பும் பிறவும் தரும் செய்திகளின் பொருந்தாமை மற்றும் முரண்பாடுகள் குறித்துத் திருவாளர் நீலகண்ட சாஸ்திரியார் கூறுவன காண்க (The Pandiyan Kingdom.p. 70-71) ‘இலங்காபுரன் தலைமையில், இலங்கையர் வெற்றி’ பற்றி மகாவம்சம் கூறுவதையும் காண்க.
தமிழர்கள் மீது இலங்கை ஆதிக்கம்:
கி.பி.248 முதல் 551வரை அரசாண்ட ‘கோதப்ஹய்ய’ அரசன் காலத்தில் ஏற்கெனவே இருந்த வைதுல்யன் சமயக் குழுக்களுக்குத் துணையாக, ‘ஸஹல்ய’ எனும் பெயர் உடைய மூன்றாவது சமயக் குழு தோன்றிற்று. பெளத்த மதத் துறவிகள் அறுவர், அரசனால் நாடு கடத்தப்பட்டுக் கப்பல் வழியாக இந்தியாவுக்கு வந்து காவிரிப்பூம்பட்டினத்தில் குடியேறி, ஆங்குள்ள மக்களின் புரவுள்ளத்தால் நன்கு வாழ்ந்தனர்.
“யுஜூ” என்ற பழங்குடியின் புகழ்பெற்ற தமிழனாகிய எலா அரசன், சோழ நாட்டிலிருந்து இலங்கைமீது படையெடுத்துக் கி.பி. 105 முதல் 161 வரை அரசாண்டிருந்த அஸெல் அரசனின் அரியணையைக் கைப்பற்றிக்கொண்டு அந்நாட்டை நாற்பத்து நான்கு ஆண்டு காலம் நண்பர் பகைவர் எனப் பாராமல் நடுவு நிலைமை தவறாமல் நீதி வழங்கி ஆண்டான். அவன் புத்த சமயத்தைத் தாங்கிக்கொண்டது மட்டுமல்லாமல், அதன் நல்ல நண்பர்களுள் ஒருவனும் ஆனான்.
திருவாளர் எச்.கெர்ன் (H Kern) அவர்களின் “இந்திய புத்த மதம் பற்றிய சிற்றேடு” பக்கம் : 245; திருவாளர் ஜி டானோர் (G. Tunoun) அவர்களின் மகாவம்சம்; அதிகாரம் 3 திருவாளர் ‘கெய்கெர்’ (Gegar) அவர்களின் மகாவம்சம்; அதிகாரம் : 27, “துட்டுஜென் மினா முதல் மகாஸேனா வரை” ஆகிய நூல்களைக் காண்க.
இலங்கை புத்த பிக்குகளும், ஏன் சாதாரண மக்களும் கூட இடையில் உள்ள கடலைக் கடந்து தென்னிந்தியாவுக்கும் அங்கிருந்து புத்தகயா வரை ஆறு திங்கள் நடந்து சென்றனர். வங்காளத்தில் உள்ள தமர-லிப்டெ என்ற ஊருக்கான அவர்கள் வழி கடல் வழியாகும். பிராமணர்கள் உறுதியாகத் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள். சிற்றூர்களுக்கு வெளியே குடி வந்தவர்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
பராக்ரமபாகுவிற்குப் பின்னர் அடுத்தடுத்து நடைபெற்ற தமிழர் படை எடுப்புகளும் ஆட்சியைக் கைப்பற்றுதலும் இலங்கை கிறிஸ்துவர் கோயிலின் ஒழுங்கைச் சீர்குலைத்துவிட்டன. 13ஆம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் தம்பெதெனிய்யாவிலிருந்து ஆட்சி புரிந்த கலிகால சாகித்திய பண்டித பாகேசர மகாபிரபு அக்கோயிலை அதன் பழைய நிலையில் கொண்டு நிறுத்தினான். அவன் சோழ நாட்டிலிருந்து புத்த பிட்சுக்களை அழைத்து வந்து புத்தப் பள்ளிகளையும், பர்வீனாக்களையும் நிறுவிக் கற்றலை ஊக்கப்படுத்தினான். இது, அந்த நூற்றாண்டில், தமிழகத்தில் புத்த மதம் அடியோடு மறைந்துவிடவில்லை என்பதைக் காட்டுகிறது. 14. வட இலங்கையில் தமிழ் அரசின் தோற்றமும் வளர்ச்சியும்:
இபன்-பதுதன் என்ற அராபியன் கி.பி. 1344ல் வடஇலங்கைக்கு வருகை தந்தான். புட்டாலம் துறைமுகம் உட்பட, அத்தீவின் வடபகுதி, யாழ்ப்பாண அரசன் ஆரிய சக்கரவர்த்தி என்பான் ஆட்சிக்கீழ் இருப்பதைக் கண்டான். அந்த அரசு, கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் தனிநாடாக ஆயிற்று. ஆரிய சக்கரவர்த்திகள் எனத் தங்களை அழைத்துக்கொள்ளும் அதன் அரசர்கள், கங்க வம்சத்தவர்கள் எனத் தங்களைச் சொல்லிக் கொண்டனர். அவர்கள் பதினான்காம் ஆண்டின் பிற்பாதி வரை நல்ல செல்வாக்கோடு இருந்தனர். பின்னர், விஜயநகர அரசுக்கு அடங்கிய சிற்றரசாயினர். பிற்காலப் பாண்டியர்கள். தங்களை ஜடாவர்மன், மாறவர்மன் எனவும், சோழர்கள் தங்களைப் பரகேசரி, இராஜகேசரி எனவும், மாறிமாறி அரியணை ஏறியதற்கேற்ப் அழைத்துக் கொள்ளுமாறு, அக்காலத்து யாழ்ப்பாணத்து அரசர்களும், அரியணை ஏறும் முறைக்கு ஏற்பத் தங்களைப் பரராஜசேகரன் என்றும் ஜெகராஜ சேகரன் என்றும் அழைத்துக்கொண்டனர். ஐரோப்பிய டச்சு நாட்டுப் பயணி வாலெந்தியன் என்பான் கன்னட நாட்டவர் படையெடுப்பு ஒன்றைக் குறிப்பிட்டுள்ளான். அக்கன்னடியர் பெரும்பாலும் விஜயநகர மக்களாவர் கி.பி. 1591-ல் யாழ்ப்பாணத்து அரசன் போர்த்துகீஸியர் ஆட்சிக்கீழ் எனத் தம்மைக் கூறிக் கொண்ட தஞ்சை நாய்க்கர்கள் அவ்வியாழ்ப்பாணத்து அரசை உயிர்ப்பிக்கப் பயன் அற்ற முயற்சிகளை மேற்கொண்டனர் என்றாலும், 1819ல் ஆளும் அரச இனம் பதவி இறக்கம் செய்யப்பட்டது.
கி.பி 1656ல் தஞ்சை இரகுநாத நாய்க்கன், யாழ்ப்பாணத்து அரசர்களைக் காக்க விரும்பி மன்னார் வளைகுடாவைச் சங்கிலிபோல் நின்ற படகுகள் மூலம் கடந்தான்.
17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாடப்பட்ட திருவாளர் மயில்வாகனப் புலவர் அவர்களின் “யாழ்ப்பாண வைபவ மாலை” என்ற நூலையும் பாதிரியார் எஸ். ஞானப் பிரகாசர் அவர்களின், “போர்த்துகீஸியர் காலத்தில் யாழ்ப்பாணம்” என்ற ஆங்கில நூலையும் திரு. ராஜநாயகம் அவர்களின் “பழைய யாழ்ப்பாணம்” மற்றும் “யாழ்ப்பாண வரலாறு” என்ற ஆங்கில நூல்களையும் காண்க.
15. கரியன்கள் : (சிற்றாசியாவின் தென்மேற்கில் வாழ்ந்த பழங்குடியினர்):
கிரேக்க வரலாற்று ஆசிரியன் ஹெர்ரோடோட்டஸ் (Herodotus) அவர்கள் கூற்றின்படி, கரியர், தீவுகளிலிருந்து உள்நாட்டிற்கு வந்தவராவர். கரியர் என்ற சொல், சேர அல்லது கேர என்ற சொல்லில் இருந்து வந்திருக்கக் கூடும் அல்லவா?
கரியன்கள் தங்கள் தலைக்கவசம் மற்றும் கேடயங்களைப் பறவைகளின் சிறகுகளோடும் கைப்பிடிகளோடும் கொண்டுள்ளனர். ஆகவே, அவர்களின் படைக்கலன்கள், சிற்றாசியாவைச் சேர்ந்த கிரேக்கக் குடிவாழ்நராகிய எல்லெனிக் (Hellence) மக்களின் படைக்கலங்களைவிடச் சிறந்தன என நம்புகிறார் ஏதன் நாட்டு வரலாற்றுப் பேராசிரியர் திருவாளர் துசிதிதெஸ் (Thudydides) அவர்கள் கி.மு. ஏழாம் நூற்றாண்டு போலும் அத்துணைப் பழங்காலத்திலேயே, கரியன்கள், வளம் தரும் படை கிரேக்கப் பழங்கதையாகிய ‘இலியட்’ (Iliad), உலோகம், தந்தம், மற்றும் தோல்களில் கைவினைப் பொருட்கள் செய்யும் அவர்களின் பழக்கத்தைக் குறிப்பிடுகிறது. பிற்கால வரலாற்று ஆசிரியர்கள், விலை உயர்ந்த கற்களைச் செதுக்குதல், கருஞ்சிவப்பு வண்ணம் தோய்த்தல் போலும் அவர்கள் கைத்திறனைக் குறிப்பிடுகின்றனர். பத்துப் பத்தாக எண்ணும் எண்ணுமுறை, கப்பல் கட்டுதல் தொழில் மேம்பாடு; இசையில் மெருகேற்றல்; புதிய கரங்களைக் காணல், எழுதுகோல் காணல், தானியங்களை அறைக்கும் பொறிகளில் சில முன்னேற்றம் ஆகியவற்றில் அவர்களுக்குப் பெருமை சேர்க்கின்றனர் டாக்டர்ஹோகர்த் அவர்களின், கேம்பிரிட்ஜ் பழைய வரலாறு (The Cambridge Ancient History).
16. அரேபியாவின் தென்கிழக்கே, ஓமன் கடலில் உள்ள “சொகொட்ரா” (Socotra) என்ற தீவில் வாழ்பவரால் தலைநகர் முஸ்காட் (Muscat) டின் இன்றும் வழக்காற்றில் உள்ளவை திருவாளர் வில்சன் அவர்களின் “பர்ஷிய வளைகுடா” என்ற ஆங்கில நூலைக் காண்க. (பக்கம், 8, 21, 27)
பழங்குடி இனத்துக் கடலோடிகள் மிகவும் பழமை விரும்பிகள். அவர்களின் தொடக்க காலச் சிறு படகு, கற்காலத்து மனிதன் கடலோடு போராடியதைக் காண உதவும் எனச் சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மானியா இடத்துப் பழங்குடியினரை, இந்தோனேஷியாவில் அடையாளம் காணலாம்.
ஆஸ்திரேலியாவை அடுத்துள்ள நியூஸிலென்ட் நாட்டுப் பழங்குடியினராகிய ‘மாவோரி’ (Maoris) மக்களின் மூதாதையர் பொலினீஷிய இனத்தவர் ஆவர். தொடக்கத்தில் இந்தோனேஷியாவில் இருந்து வந்து, பசிபிக் பெருங்கடலில் மேற்குக் கோடியில் உள்ள தீவுகளுக்குக் கடல் வழியாகச் சென்று, அங்கிருந்து பிஜித் தீவுக்கும் மத்திய பொலினீஷியாவுக்கும் சென்று பரவினர். அவர்கள் மலேனேஸியாவின் தொல் பழங்குடியினரை வென்று, தங்களோடு இணைத்துக்கொண்டனர் எனக் கூறுகின்றது ஒரு பழங்கதை.
இந்தோனேஷியா, மற்றும் பொலினீஷியாவைச் சேர்ந்த பழங்குடியினர். கட்டிடக் கலைத் துறையிலும், கடல் ஓடு துறையிலும், மிகப் பெரிய அறிவை வளர்த்துக்கொண்டனர். பசிபிக் கடலில் ஓடவல்ல. சாதாரணச் சிறு படகுகள், அண்மைக்கால நிலையோடு ஒப்பிட்டு நோக்க மதிக்கத் தக்க, நெடுந்தொலைவு ஓடவல்லதாம் என்பது கருத்தில் கொள்ளத் தக்கதாம். திருவாளர் ஜே. ஹோலன் ரோஸ் (J. Holland Rose) அவர்களின் ‘மனிதனும் கடலும்’ என்ற ஆங்கில நூலைக் காண்க. (பக்கம்: 168:173-74)
17) திருவாளர் பெர்ரி (W.J. Perry Page : 24) அவர்கள் கூற்றுப்படி, நீர்ப்பாசனம் மற்றும் உழவுத் தொழிலைக் கண்டுபிடித்த முதல் நாடு எகிப்துதான் என்ற கொள்கை நிலைத்து நிற்கக்கூடிய தொன்றன்று. தொல் பொருள் ஆய்வாளர்களுக்கும் வரலாற்று ஆசிரியர்களுக்கும் தெரிந்த அப்பழங்காலம் முதல் தென்னிந்தியாவில் உள்ள காவிரி ஆற்றுப்படுகை நெல் விளைத்தலிலும், சிந்து நதிப் படுகை, கோதுமை விளைத்தலிலும் சிறந்து விளங்கின. (பக்கம் : 24).
சிந்து நதிப்படுகையில் கி.மு. மூன்று மற்றும் நான்காம் நூற்றாண்டுகளில் வாழ்ந்திருந்த செப்பு மற்றும் பித்தளை நாகரீகத்து மக்கள், பேரீச்ச மரங்களைப் போலவே, கோதுமையையும், பார்லியையும் விளைவித்தனர். அவர்கள் இமிலேறு, எருமை, குறுகிய கொம்புடைய எருது, ஆடு, பன்றி, நாய், யானை மற்றும் ஒட்டகம் ஆகியவற்றைப் பழக்கி வைத்தனர். ஆனால், பூனை, பெரும்பாலும் குதிரை அவர்களுக்குத் தெரியாத விலங்குகள்.
போக்குவரத்துக்கு, ஐயத்திற்கு இடமில்லாமல், எருது பூட்டப்பெற்ற ஈருருளை வண்டிகளை அவர்கள் பெற்றிருந்தனர். உலோகங்களில் பொருள் செய்யவல்ல நன்கு தேர்ந்த கைவினைஞர்கள் ஆங்கு இருந்தனர். அவர்களிடம் பெருமளவில் பொன்னும் வெள்ளியும் செப்பும் இருந்தன. ஈயம் கூட இருந்தது. வெள்ளீயம் பழக்கத்தில் இருந்தது. ஆனால், அது, வெண்கலம் உலோகத்தைச் செய்யும் கலவை உலோகமாகவே பயன்பட்டது. நூற்றல், நெய்தல் ஆகிய தொழில்களில் அவர்கள் கைவந்தவர்கள். அவர்களின் படைக்கலங்களும் வேட்டைக் கருவிகளும், வில்லும், அம்பும் ஈட்டி அல்லது வேல்கம்பு, கோடரி, குத்துவாள் மற்றும் தண்டு முதலியனவாம். நீண்ட பட்டாக்கத்தி காணப்படவில்லை பகைப் படை பாயாவாறு அணிந்துகொள்ளும் மார்புக்கவசம் இருந்தமைக்கான சான்று எதுவும் இல்லை. அவர்களிடம் இருந்த, செப்பு மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்ட கைக் கோடரி அரிவாள், இன்பம், உளி கூரிய மென்கத்தி, கோடரி முதலியனவாம். சில சமயம் சக்கி முக்கிக் கல்லிலும், கடிய கல்லிலும் கூடச் செய்யப்பட்டன. தானியங்களை அறைக்க, அவர்கள், அம்மி, குழவியையும் கால் கதியொடு கூடிய அறைக்கும் கருவியையும் பயன்படுத்தினர் ஆனால், வட்ட வடிவான மாவறைக்கும் கல் இயந்திரத்தைப் பயன்படுத்தவில்லை. அவர்களின் வீட்டுக் கலங்கள் எல்லாம், பொதுவாகச்சக்கரத்தில் சுற்றிச்செய்து கட்டு இங்கும் அங்குமாகப் பல மாதிரிகளில் வண்ணம் தீட்டப்பட்ட மட்பாண்ட்ங்களாம். மிக அருகி. செப்பு, வெண்கலம், அல்லது வெள்ளிப் பாண்டங்களையும் ஆண்டனர். செல்வந்தர் வீட்டு அணிகலன்கள், விலை உயர்ந்த உலோகங்களாலும் செப்பாலும் பெய்யப்பட்டன. சில பொன் முலாம் பூசப்பட்டன. தந்தத்தாலும், ஏழைகளுக்குப் பொதுவாகக் கிளிஞ்சல்களால் ஆனவை. பெருமளவில், வழக்கத்தில் இருந்த சிறு உருவச்சிலைகளும் விளையாட்டுப் பொம்மைகளும், சுடுமண்ணால் செய்யப்பட்டவை. யூபிரட்ஸ் ஆற்றங்கரை நகராம் சுமரிலும், பொதுவாக மேற்கு நாடுகளிலும், பொதுவாக வழக்கத்தில் இருப்பது போல, கிளிஞ்சல்களாலும், சுட்டு வண்ணம் தீட்டப்பட்டனவாலும் செய்யப்பட்டவை ஆளப்பட்டன. சொந்த அணிகலன்களுக்கு மட்டுமல்லாமல் கல்பதித்து அணி செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டன எழுத்துமுறை அறியப்படவே, சிந்து நதிநீர மக்கள் தாமும், எழுதுவதற்கு மேற்கு ஆசியா மற்றும் அண்மைக்கிழக்கு நாடுகளில் ஆட்சியில் இருந்த எழுத்து வடிவங்களின் காலத்தனவும், அவற்றோடு, தெளிவான ஒருமைப்பாடுடையவுமான, ஆனால், இந்தியாவுக்கே உரியவுமான ஓர் எழுத்து வடிவை ஆண்டனர். திருவாளர் ஜான்மார்ஷல் அவர்களின் “சிந்துநதி நாகரீகம்; மற்றும் திருவாளர் எம்.எஸ். வாட்ஸ் அவர்களின், ஹரப்பா அகழாய்வு என்ற நூல்களைக் காண்க. (Ref : to John Marshal Indus Civilization. M.S. Vats. Excavations at Harappa. Vol : I page 5-6)
18) திருவாளர் ஓ.ஜி.எஸ் க்ராபோர்ட் அவர்களின் “தொல்பழங்காலம்” பகுதி 6 பக்கம் : 259 (O.G.S. Crawbord Antiquity VI 259) நீலகிரியில் கண்டெடுக்கப்பட்ட, கிரேக்க நாடோடிப் பாடல்களில் இடம்பெறுவதும், ஒருவகைப் பச்சைக்கல்லால் ஆனதுமான ஜெபமாலைகள், சுமேரியாவில் ஓடும் யூபிரடஸ் ஆற்றங்கரை நகராகிய உர் (Ur) நகரில் ஊழிப் பெருவெள்ளத்திற்கு முந்திய வண்டல் படிவங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. எகிப்தில், பச்சை நிற மணிக்கல்லால் வைடூரியம், முடியாட்சிக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
19) இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு, ஆண்டு அறிக்கை, 19-2-3; usgib: 120 (ArchSurvey ofIndiaAnnual Repport 1902– 3 p. 120)
20) திருவாளர் ஈர்னெஸ்ட் மக்கே (Earnest Mackay) அவர்கள், “மெஸ்படோமியாவில் கண்டெடுக்கப்பட்ட ஜெபமாலை மணிகள், இந்திய மூலம் வாய்ந்ததே என்ற உறுதியான கருத்தைக் கொண்டுள்ளார். (J.R.A.S. for 1926 p. 696 701.) தென்னிந்தியாவில் சேலம் மாவட்டத்திற்கு உரியதாகக் கூறத்தக்கதான சுமேரியநாட்டுக்கிஷ் (Kish) பகுதியில் காணப்பட்ட, வைடூரிய மணிக்கல் ஜெபமாலைகள் குறித்து அதுவே கூறப்படல் வேண்டும்.
21) தாய்க்கடவுள் வழிபாடு:
மண்ணைக் கடவுளாக உருவகித்து வழிபடுதல் பழங்கால மக்களிடையே பரவலாக இருந்தது. இந்தியாவைச் சேர்ந்த பண்டைய ஆரியர்களிடையே வானும் நிலனும், வாழும் உயிர்கள் அனைத்திற்கும், தந்தையும் தாயும் என்ற நிலையில், “டியயுஸ்” (Dvaus) மற்றும் “பிர்திவி” (Prthiv) என்ற பெயர்களில் கணவனும் மனைவியுமாகக் கற்பிக்கப்பட்டனர். அதர்வ வேதத்தில், ‘பிர்திவி’ யான பெண் தெய்வத்தை நோக்கிப் பாடப்பெற்ற அழகிய நெடிய பாட்டு ஒன்று உளது (திருவாளர், தீக்ஷிதர் அவர்களின் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாகிய லலிதவழிபாடு என்ற ஆங்கில நூலைக் காண்க.) பண்டைய கிரேக்கர்களிடையே, உண்மையான நிலத்தெய்வம் மூலப் பொருளாம் நிலமாவதும், கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த, அறம் உரைக்கும் புலவனாம் ‘எஸிஓட்’ (Hsiod) காலம் முதல் உள்ள எழுத்தாளர்களால், அதே பொருளில் ஆளப்பட்டதுமான, “கய” (Gaia) அல்லது “கி” (Ge) என்பதாம். நிலமகள் வழிபாடு, டெல்பி (Delph) ஒலிம்பியா (Olympia) மற்றும் டொடொனா (Dodona) போலும் கிரேக்க நகரங்களில் நனிமிகப்பழைய வழிபாடாம் பண்டை உரோமானியர், கருவுற்றிருக்கும் பசுவைப் பலி கொடுத்து நிலமகளை வழிபட்டனர். நிலத்தெய்வம், உரோமப் பழங்கதைகளில் வரும், நவதானியப் பெண் தெய்வமாம் செரொஸ் (Ceres) அல்லது “டெமெடெர்” (Demeter) என்ற தெய்வத்தோடு இணைத்துக் காணப்பட்டது. பாபிலோனியக் கற்பனைப் பழங்கதைகளில், அனு (Anu) என்கிற வான்கடவுளோடு, “இஎ” (Ea) என்கிற, நிலத்துக்கு அடியில் உள்ள நீர்க்கடவுளோடும் இணைத்து வழங்கப்படும் “என்லில்” (Enli) என்ற நிலத்தெய்வம் இருந்தது. மனித முகம், நீண்ட முடி, தாடியோடு கூடிய, கடவுள் போலும் வடிவங்கள், களிமண்ணால் ஆன சிலைகள் உள்ளன. அவனுக்கு “நின்லில்” (Nihil) என்னும் பெயருடைய உயிர்களைப் பெற்றுப் பேணும் பெண் தெய்வமாகிய மனைவியும் இருந்தாள். நின்லில் என்பது ‘என்லில்’ என்பதன் பெண்பாற் பெயராம். திருவாளர் ஜே. ஜி. ப்ரொஜர் (J.G. Frazer) அவர்களின் “இயற்கை வழிபாடு” (Worship of Nature) பக்கம்:348 என்ற நூலைக் காண்க.
பண்டைய எகிப்தியரிடையே, வானாம் பெண் தெய்வத்தை மணந்த ஆண் தெய்வமாக, நிலம் உருவகிக்கப்பட்டது. அவன் ‘ஸெப்’ (Seb) அல்லது ‘கெப்’ (Kab) எனப் பெயர் இடப்பட்டான். அவன் மனைவி, “நட்” (Nut) எனப்பட்டாள். அவன் நில மூலத்தையும் மரம் செடிகொடிகள் வளரும், நில மேல்புறத்தையும், உருவகித்தான். அவன் கிரேக்கர்களால், உரோமர்களின் வேளாண்மைத் தெய்வமாகிய “க்ரோனஸ்” (Ronus) ஆக அடையாளம் காணப்பட்டான். அவனுடைய வழிபாட்டிற்கு அடையாளம் காணப்பட்டான். அவனுடைய வழிபாட்டிற்கு உரிய இடம், சிரியாவில் டமாஸ்கஸ் நகருக்கு அண்மையில் இருந்த நனிமிகப் பழைய நகரமாகிய ‘ஹெலியோசோலிஸ்’ (Heliosolis) என்பதாம். அதாவது அவனும் அவன் மனைவியும் பெரியதொரு முட்டை இட்டு அடைகாக்க, அதை உடைத்துக்கொண்டு வெளிவந்த சூரியக் கடவுளின் நகராம்.
சீனர்கள், நிலத்தைத் தாய்க்கடவுளாக உருவகித்து வழிபட்டனர். நிலத்தின் சரிநகரான வானைத், தந்தை கடவுள் என்ற உரிமையில் வழிபட்டனர். நிலமாம் தாய்த்தெய்வ வழிபாடு சீனாவில் அதற்கும் முந்தி இல்லை என்றாலும் கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலிருந்து காணக்கூடும். கி.மு. 140 முதல் 137 வரை ஆண்ட பேரரசர் “வு” (Wu) அவர்கள் ஆட்சிக் காலத்தில், வானையும், நிலத்தையும், வழிபடும் சமய நெறி முக்கியத்துவம் பெற்றிருந்தது. இரண்டு இயற்கைகளை வழிபடும் வழிபாட்டு நெறி சீன, சமயத்தின் தலையாய உயிர்ப் பண்பாகக் கருதப்பட்டது.
மத்திய இந்தியாவைச் சேர்ந்த “ஓரஓனியா” (Oraons) மற்றும் ஏனைய பழங்குடியினரிடையே “தஹர்திமை” (Dharti Mai) வழிபாடு பெருவழக்காய் நிலைபெற்றிருந்தது. நிலத்தாயின் வளத்தைப் பெருக்குவதற்காகக் காலம் தவறா விழாக்களும் இருந்தன. அவ்விழாவில், மனித பலியும் உண்டு. பெரும்பாலும் அது ஒரிஸ்ஸா நாட்டு கோண்ட் பழங்குடியினரிடையேதான்.
வட அமெரிக்காவைச் சேர்ந்த சிவப்பு இந்தியர்களிடையே, நிலத்தைத் தங்கள் தாயாக உருவகப்படுத்தும் பழக்கமும், தங்கள் முதல் மூதாதையர் தாயின் கருப்பையிலிருந்து குழந்தைகள் பிறத்தல் போல, நிலத்திலிருந்து பிறந்தனர் என்ற நம்பிக்கையும் இருக்கும் போது, மேற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த போபோஸ் (BoBos) எனும் இனத்தவர் போலும், ஆப்பிரிக்கரிடையேயும், நிலத்தாய் வழிபாடு நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வந்தது. வட அமெரிக்க மெக்ஸிகோ நாட்டவரும், நனி உயர்ந்த நாகரீகம் வாய்ந்தவருமான “அஸ்டி” (Aztees) இனத்தவரிடையே, நிலத்தாய்தான், கடவுள்களுக்கெல்லாம் தாய் ஆகும். மத்தியத் தரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டில் (Crete) உள்ள, தாய்க் கடவுளின் சுடப்பட்ட சிறு உருவ மண்சிலை, மொகன்ஜாதாரோவில் கண்டெடுக்கப்பட்டதை, அப்படியே முழுமையாக ஒத்துளது. திருவாளர். ஒசி கங்கோலி (Gangoly) அவர்களின் பெளத்த கலையில் நிலத்தாய்க் கடவுள் (The Earth Goddess in Buddhist Art I. H. Q. XIX p) என்ற ஆங்கில நூலைக் காண்க.
22) சிலப்பதிகாரம், பதினாறாம் காதை, 817 வரிகளைக் காண்க. அதில் வரும் “ஐயை” என்பாளுக்குப், பாபிலோனியர்களின் சூரியக் கடவுளின் மனைவியாம், “ஐ” அல்லது “ஐய” அல்லது “ஐய்ய” என்பதனோடு ஏதேனும் தொடர்பு இருக்குமா? பாபிலோனிய சூரியக் கடவுளுக்கு, நீதி நேர்மை, நன்னிலம், கனவு உள்ளிட்ட எண்ணற்ற கால்வழி மரபுகள் உள்ளன (பக்கம் :45, 1,28.) திருவாளர் ப்ரேஸர் (Frazer) அவர்களின் “பொன் மரக்கிளை” (The Golden Bough) (சுருக்கம்) என்ற நூலைக் காண்க. 1923 பக்கம் 380-1
23) திருவாளர் ப்ரேஸர் அவர்களின் மேற்படி நூல் பக்கம் 331 ஐக் காண்க. .
24) மேற்படி நூல் மேற்படி பக்கம் காண்க.
25) திருவாளர். தீக்ஷிதர் அவர்களின் “மத்ஸய புராணம் ஒரு ஆய்வு” என்ற ஆங்கில நூலைக் காண்க.
26) இது பற்றிய பொருள், திருவாளர். வோகல் (Wogel) அவர்களின், ‘இந்தியப் பாம்புக் கோட்பாடு’ (Indian Serpent Lore) என்ற நூலில், போதிய ஓவியங்களுடன் நன்கு ஆராயப்பட்டுள்ளது.
27) திருவாளர் எச்.ஆர்.ஹால் (H.R. Hall) அவர்கள் கூற்றுப்படி, பாபிலோனியாவில் இஷ்தர் நின்னி (Istar-Ninni) காதற் கடவுளும், நல்வளக் கடவுளும் ஆம். சிரியாவில், அஷ்டோரெத் டெய்ன்ட் (Ashtozeth-Taint) பெண் திங்கள் கடவுளாம். சிற்றாசியாவாம் அனடோலியாவில், அது, பெரிய தாய்க்கடவுளாம். சிரியாவில், ‘அஸ்டர்டெட்’ மற்றும், “தம்மூஸபு” (Astarte and Tammuz) என்பது, தன்னிலும் இழிந்ததான, ஆண் சூரியன் பணிபுரியத்தக்க, பெண் திங்கள் தெய்வமாம். (The Ancient History of the Near East. page: 207-8-8th Edition.)
28) பாபிலோனியர்களிடையே, “ஷமஷ்” (Shamash) எனப்படும் சூரியக் கடவுள், திங்கள் கடவுளின் மகனாகக் காணப்படுகிறது. சுமேரியாவில் யூபிரட்ஸ் ஆற்றின் கரையில் உள்ள நனிமிகப் பழைய “உர்” (Ur) நகரை ஆண்ட பண்டைய அரசன் சூரியக் கடவுளைத் திங்கள் கடவுளின் பெயர்களுள் ஒன்றான “நன்னர்” (Nannar) என்பதன் கால்வழி வந்ததாக அழைத்துள்ளான். பாபிலோனியாவின் பழங்குடி அரசர்களில் கடைசி அரசனாகிய ‘நபொனிடஸ்’ (Nabonidas) என்பான். அவனுக்கு அதே தந்தையை உரிமையாக்கி உள்ளான். ஆகவே முதல் அரசன் முதல், இறுதி அரசன் வரை, மதிப்பீட்டில் சூரியக் கடவுள், திங்கள் கடவுளுக்குத் தாழ்ந்தவனாகவே வரிசைப்படுத்தப்பட்டுள்ளான். அவனுடைய தாழ்நிலை வேறுவகைகளிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாபிலோனிய பண்டைய சமய நெறியில், ஞாயிறு வழிபாடு, திங்கள் வழிபாட்டிற்கு இரண்டாம் தரத்ததே என்பது ஒரு சிறப்பு இயல்பாம். (திருவாளர் ப்ரேஸ்ர் அவர்களின் “இயற்கை வழிபாடு” (The Worship of Nature) என்ற ஆங்கில நூலைக் காண்க. பக்கம் 530-531).
29) பாபிலோனிய மண்ணிலும், பழங்கதையிலும் ஏப்ருமொழி சமய இலக்கியங்களோடு, ஐயத்திற்கு இடம் இன்றி ஒத்துப்போகக் கூடியன பல உள்ளன. அவ்வொருமைப்பாடு, பாபிலோனியப் பண்பாடுகள், பழங்காலத்திய இஸ்திரேலிய நடனம் கேனனுக்குப் பரவி, தொடக்காலத்திலிருந்தே தொடர்ந்து பெற்றிருந்த
செல்வாக்கு காரணமா? அல்லது ஏப்நு மக்களின் மூதாதையர் இனத்தவராகிய 'அப்ராமிக்' (Abrahmic) மக்கள் உள்ள யூபிரடஸ் ஆற்றங்கரையில் (தென் மேற்கு ஆசியாவில்) "சால்டீஸ்" (Chaldees) நாட்டிற்கு ஹாரன் (Harran) வழியாகக் கானனுக்குக் (Canaan) குடிபெயர்ந்தது காரணமா? அல்லது, அடிமைப்பட்டிருந்த காலத்தில், பாபிலோனியர்களின் சுற்றுச் சூழலின் ஆட்சி காரணமா என்பன இன்னமும், நல்ல உறுதியான சான்றுகளோடு உறுதிப்படுத்தப்பட வேண்டி உளது. பெரும்பாலும் இம்மூன்று காரணங்களுமே அவ்வொருமைப்பாட்டைக் கொண்டு வர ஒன்று பட்டிருக்கலாம். (Hall, The Ancient History of the Near East, 8th Edition p. 209)
30) காளைமாடு வழிபாடு
மத்திய தரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டன் Creton மக்கள் வளர்க்கும் காளைமாடு செயலாற்றல் கடல் ஆற்றல்களை உணர்த்தும் இயற்கைச் சின்னமாம். ஏறு தழுவல் விளையாட்டு, ஓரளவு சமயச் சார்புடையது. ஆகவே அதுதானே காளைமாட்டுக்கு ஒருவித தெய்வத் தன்மையைக் கொடுக்கிறது. ஆனால், கிரீட்டில், காளைமாட்டுத் தெய்வம் எனப் போற்றுவதற்கான, நேரிடை அகச்சான்று எதுவும் இல்லை (The Archaeology of Creat : At Introudction 939)
கிரீட்டனில் உள்ள இடிபாடுகளில் கி.மு. 3000 முதல் 1100 வரையானது எனக் கணிக்கப்படும் வரலாற்றுக்கு முந்திய கால கட்டமாம் "மினோயன்" (Minoan) ஊழிக் காலத்தின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஏறு தழுவல் நிகழும் தொழுவக் காட்சியின், அரைத்த சாந்தால் தீட்டப் பட்ட வண்ண ஒவிய நினைவுச் சின்னங்கள் உள்ளன. கடல் தெய்வமாம் 'பொசெஇடொனுக்கு'க் (Poseidon) காளைமாடுகள் தொடர்ந்து பலி கொடுக்கப்பட்டு, தெய்வீக அகத் தூண்டுதல் பெறுதல் பொருட்டு, அதாவது தன்மீது தெய்வம் ஏறற் பொருட்டு, பெண் பூசாரியால், அதன் குருதி குடிக்கப்பட்டது. இடி கடவுளின் மரபுச் சின்னமாக, ஞாயிற்றின் அடையாளச் சின்னமாக, ஒரு வகை, இழந்த ஆற்றலை அளிப்பதாக அது பார்க்கப்பட்டது. சிற்றாசியாவிலும், சிரியாவிலும் கி.மு. 2000-700 ஆண்டுக் காலத்தில் வாழ்ந்திருந்தவராகிய "ஹிட்டிட்டெஸ்" (Hittites) மக்களிடையே, இடி மற்றும் செழிப்பின் சின்னமாக அது வணங்கப்பட்டது தந்தை தெய்வத்தின் சின்னமாக மதிக்கப் பட்டது. "சிபெலெ" (Cybele) மற்றும் "அட்டிஸ்" (Attis) என்ற கிரேக்க இயற்கைக் கடவுள்களை வணங்கும் சமய வழிபாடுகளில் அதன் ஆண்குறி பயன்படுத்தப்பட்டது.
காளைமாடு நவதானியச் சிறு தெய்வத்தைச் சுட்டிக் காட்டித் தென் ஆப்பிரிக்க நெட்டாலில் முதல் பழ அறுவடையின் போது நடைபெறும் ஜூலு (Zulu) விழாவில் பலி கொடுக்கவும் பட்டது. பண்டை எகிப்தில் அது பலி ஆடாக ஆக்கப்பட்டது. பண்டைப் பர்ஷியாவின், நளி, உண்மைகளின் கடவுளாம் "மித்ரா" (Mithra)வை வழிபடும் சமய நெறியில், காளைமாடு ஒரு முக்கியமான பொருளாம். புதுப்பழ விழாக் காலத்தில் காளைச்சண்டை, உடற்பயிற்சி விளையாட்டுகள், விழாக்காண வரும் மக்களுக்கு மனமகிழ்ச்சி அளித்தன. - :
31) திருவாளர் ஜி. க்லோட்ஸ் (G. Giots) அவர்களின், “ஏஜியன் நாகரீகம்" {The Aegean Civilization, (Kegan Pawl. 1925) Page , 293-5} என்ற நூலைக் காண்க. கிரீட் நாட்டில், ஏறு தழுவுதல் தேசிய விளையாடல்களில் ஒன்று. பக்கம் 295-ல் ஓர் அழகிய விளக்கப்படமும் உளது. திருவாளர், ஏ.ஏ. த்ரேவர் (A.A. Trever) அவர்களின், "தொல்பழங்கால அண்மைக் கிழக்கு மற்றும் கிரேக்கம்" (The ancient Near East and Greece page : 123-8) என்ற நூலையும் காண்க.
32) "கெரெத்தி" (Kerethi) அல்லது "செரெத்திம்" (Cherethim) என்ற சொல், மத்திதரைக்கடலில் உள்ள கிரேக்கத் தீவாகிய கிரீட்டில் வழங்கப்பபெறும் மொழியில் விவிலிய நூலின் கிரேக்க மொழி நடையில் "கிரெடன்" (Cretan) என்ற சொல்லுருவில் மாற்றி வழங்கப்பட்டுளது. பாலஸ்தீனியக் கடற்கரை வாழ்வாரிடையே. அவர்கள் கிரீட்டன் நாட்டவர் வழிவந்தவர் என்ற மரபுவழிச் செய்தி ஒன்றும் உள்ளது. கிரீட்டன் நாட்டவர் தாமும், சிரியா மற்றும் பாலஸ்தீனிய மக்களோடு தொடர்புடையவர் ஆதல், பெரும்பாலும், இயலக் கூடிய ஒன்றாம்.
இந்தக் கெரெத்தி மக்களுக்குத் தென்னிந்தியக் கிராடஸ் மற்றும் காட்டுமிராண்டிப் பழங்குடியினர்களோடு ஏதேனும் தொடர்பு இருக்குமா என்பது வாதத்திற்குரிய பொருளாம். கிரேக்கம், தன் பண்பாட்டு நிலைக்குக் கிரீட் மற்றும் சிற்றாசிய நாடுகளுக்குப் பெரிதும் கடமைப் பட்டுளது. இவர்கள், தங்கள் பண்பாட்டிற்கான அகத் தூண்டுதலை எகிப்து, மற்றும் சுமேரிய நாடுகளிலிருந்தே பெற்றிருக்க வேண்டும். வடஆப்பிரிக்காவில் மத்திய தரைக் கடலையொட்டி உள்ள துனிஸியா (Tunisia) தன் பண்பாட்டிற்கு இந்தியாவுக்குப் பெரிதும் கடமைப் பட்டுளது. நாகரீக வளர்ச்சியில், குறிப்பிடத்தக்க பங்கினை எகிப்து ஆளவில்லை என்ற கருத்து கொண்டுள்ளார், திருவாளர் "வாட்டெல்" (Waddel) அவர்கள்.
33) திருவாளர் ஆர். ஜி. பந்தர்கார் அவர்களின் வைஷ்ணவம், Gசைவம் மற்றும் சிறு சமயங்கள் (Vaishnavism Saivism and
Minor Religions) பக்கம் 114-115) என்ற ஆங்கில நூலைக் காண்க.
34) The Matrilineal System (தாய்வழி வரும் குடிமுறை).
தாய்வழி உறவுக்கும், தாய் ஆட்சிக்கும் இடையில் நிலவும் வேறுபாட்டினைக் கண்டாக வேண்டும். முன்னது பின்னதைக் குறிக்காது. தாய்வழி உறவினைப் பின்பற்றும், வளர்ந்த நாடுகள் பலவற்றில், பெண் ஆட்சி நடைமுறையில் இல்லை. தொல்பழங்காலச் சமுதாயத்தில், தாய்வழி உறவு நிலையினையும், காலம் செல்லச் செல்ல, அது வெளிப்படுத்திய பயன்களைத் திருவாளர் ஜே. ஜி. ப்ராசர் (J.G. Frazer) அவர்கள் விளக்கியுள்ளார். குடிவழிப் பிறப்பையும், குடிவழிப் பொருள்களை அடைதலையும் தாய்வழிப் பெறுவது ஒன்றே, அப்பழங்குடி தாய்வழி ஆட்சியைப் பெற்றிருப்பதாகக் கொண்டுவிடக் கூடாது என அவர் கூறுகிறார். தாய்வழி மரபு தாய் ஆட்சி ஆகிவிடாது. அதற்கு மாறாகப் பெண்கள் எப்போதும் குற்றேவல் செய்யப் படுவோராகவும், பரவலா அடிமைகளாகவும் மதிக்கப்படும். நனிமிகக் காட்டுமிராண்டி இனத்தவரிடையே, தாய்வழி ஆட்சி நிலவுகிறது. எகிப்தில் இருப்பது போலவே, கிரீட்டிலும், அரசுரிமை, பெண்கள் வழியே ஆகும்.
அரசுரிமை, பொருள் உரிமைகளைத் தாய்வழி ஆட்சி முறை மூலம் பெறும் வழக்கம் செல்வாக்குப் பெற்றிருப்பது, உண்மையான ஆட்சி உரிமையை ஆண்களிடமிருந்து எடுத்துக்கொள்ளவில்லை.
35) திருவாளர், தீக்ஷிதர் அவர்களின் "மருமக்கள் தாயமும், சங்க இலக்கியமும்" என்ற நூலினைக் காண்க. (Marumakkal tayam and Sangam Literature. Z.D.M.G. Vol. IX No. 3. p 255). 36) எகிப்தில் உள்ள அட்டி (Attis) இனத்துப் பூசாரிகளின் சின்னமும், நவதானியத் தெய்வமும் கோழிச் சேவலாம். அது அறுவடைக் காலத்தில் பலியிடப்படும். கிரேக்க உரோமப் பழங்கதைகளில் வரும் (Apollo) கடவுள், தமிழ் முருகன் போலவே.இளமைக் கடவுளாம். இளமை, அழகு, ஆற்றல்களின் அடையாளமாம்.
37) இந்தோ-ஐரோப்பிய இனம் மக்கள் ஆகியவற்றின் பிறப்பு மூலம். (The Origin of the Indo European Races and Peoples: 1935) என்ற திரு. சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் நூலைக் காண்க.