தமிழர் தோற்றமும் பரவலும்/வெளிநாடுகளில் தமிழர் பண்பாட்டுப் பரவல்
தமிழர்பண்பாட்டுப் பரவல்
இன்று இரவு, வரலாற்றுக் காலத்துக்கு முன்பிருந்தே, தென்னிந்தியாவிலிருந்தும், தென்னிந்தியாவுக்கும் இடையில் நிகழ்ந்த பண்பாட்டுப்புடைபெயர்ச்சிகளை எடுத்து விளக்க நான் பெருமுயற்சி மேற்கொள்வேன். அது செய்வதன் முன்னர்ப், பண்டைய உலகின் குறைந்தது, அப்பழந்தமிழர்கள் உணர்ந்திருந்த, அவர்கள் இடைவிடாப் போக்குவரத்து உணர்ந்திருந்த அந்த உலகின் நிலஇயல் பற்றிய நிலைகளை, உங்களுக்குக் கொடுத்தாக வேண்டும். மேற்கில், ஆப்பிரிக்கா, மற்றும் எகிப்து, தென்மேற்கு ஆசியாவில் டைகிரஸ், யூபிரடஸ் ஆறுகளின் கீழ்ப்பகுதிப் பள்ளத்தாக்கில் கி.மு. 2700 முதல் 350 வரையும் சிறப்புத்திருந்த பழம்பெரும் பேரரசின் தலைநகராகிய பாபிலோனியா, அதை அடுத்து இருந்த நகராகிய கமர், மற்றும், மேற்கு ஐரோப்பியாவின் இரான் நாட்டுப் பர்ஷியா ஆகியவற்றையும், கிழக்கே சீனர் மற்றும் பர்மாவையும் தெரிந்திருந்தனர். தென்கிழக்கே, உள்ள கடலிடைத் தீவுக் கூட்டங்கள், ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் பெருங்கடலிடைத் தீவுக் கூட்டங்களாகிய பொலினிலியாக்களைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இருந்தது. வடஇந்தியா மற்றும் இலங்கையும் தெரிந்திருந்தன.
உங்களின் ஆய்வுக்காக, உங்கள் முன் நான் எடுத்து வைக்கும் இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவு, அதாவது தென்னிந்தியாதான், இன்று நாம் அழைக்கும் மத்திய தரைக் கடற்பகுதி வாழ் இனத்தவரின் (Mediterranean Race) உண்மையான தாயகம் என்பது ஏற்றுக்கொள்ளப்படுமாயின், குறிப்பிடத்தக்க இயல்பான முடிவு, மேற்கு ஆசிய நாடுகளின் பண்பாட்டிற்கும், எகிப்தியப் பண்பாட்டிற்கும், கீழைநாட்டு மூலத்தைக் கொடுப்பதாக அமையும். (De Morgan, L’ Epgypte. Asieaux temps ante historiques, J.A. cc III 1923. p. 117-159. La Prehistoric Orientala vol I and II paris- 1925-6).
காலத்தால் முந்திய வரலாறுகள் பற்றிய ஆய்வில், பிழைபடாத் துல்லிய முடிவுகளை எப்போதும் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் பின்வரும் விளக்கங்கள் குறிப்பிடத்தக்கவாம். தென் இந்தியாவுக்கும், மெசபடோமியாவுக்கும் இடையில், தென்கடல் மற்றும் இருவழிகளாலும் தொடர்பு இருந்தது. தொடக்ககாலக் கடல் வழிச்செலவு அனைத்தும் கடல் ஓரமாகவே நடைபெற்றன. தென்னிந்தியப் பண்டைத் திராவிடர்கள், வீரம், மற்றும் அறிவு நிலைகளில் புதியன காணும் ஆர்வம் உடையவர். அவர்கள், தக்ஷிணாபத செல்வழி மூலம், இந்தியா முழுவதும் பரவியிருந்தனர். இந்தியாவின் வடமேற்கில் உள்ள சிந்துவிற்கு அவர்கள். கடல் வழியாகவே சென்றிருக்க வேண்டும். புதியன, அதாவது புதிய இடங்களைக் காணும் அவர்கள் ஆர்வ நோக்கம், நாடு பிடிக்கும் வெற்றிகள் அல்ல. மாறாகப் புதிய வாணிக நிலையங்களைக் காண்பதே. அவர்களின் வாணிகப் பொருள்களும், அன்று வரை தெரிந்திருந்த உலகில் பெரியதேவை இருந்தது. அவை, உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டன. மிக முக்கியமான நகரங்களில் இந்த மக்கள் நிலைத்த குடியினராகி, ஆங்குத் தம் மொழிகளையும் பண்பாடுகளையும் புகுத்தினர். சிற்றாசியாவுக்கும் (Asia Minor) மத்தியதரைக்கடலுக்கும் போகும் வழியில், எகிப்துக்குச்செல்லும் ஒருவழி, அரேபியன் கடலைக் கடந்து செல்வதாம், என்றாலும், பண்டைய சுமேரிய நாட்டிற்குச் செல்லும் மற்றொரு வழி, பர்ஷிய வளைகுடாவுக்கு மேலே, நம், திருவாளர் “பிரோசஸ்” (Berosus) அவர்கள் மேற்கோள் காட்டும் ஒரு மரபு வழிச் செய்தி, அதாவது “ஒனெய்” (Oanns) என்னும் மனிதமீன், தன்னோடு நனிமிக நாகரீகக் கலைகளையும் கொண்டு, பர்ஷிய வளைகுடாவரை நீந்தி வந்தது என்ற செய்தி, (குறிப்பு.1) நாகரீகங்களின் பிறப்பிடம் இந்தியா. ஆகவே, அவ்விந்தியாவிலிருந்து, பழைய “சுமர்” (Summar) நாட்க்குக் கடல் வழிப்பயணம் இருந்தது என்ற நம் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு, நல்லதொரு சான்றுத்திட்டமாம். அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களையே அல்லாமல், ஆடம்பர வாழ்க்கைக்காம் பொருள்களையும் ஏற்றிக் கொண்டு பர்ஷியா வழியாக, சுமேரியாவுக்குச் செல்லும் வணிகப் பெருங்கூட்டம், இந்தியாவுக்கும், இந்தியாவிலிருந்தும் அடுத்தடுத்துச் செல்வதை நாம் காணலாம்.
நமக்கென ஒரு வரலாறு இருக்கிறது என உரிமை கோரும் நாளுக்கு அணித்தானதான கி.மு. பத்தாவது நூற்றாண்டில், உலகப் பெருவாணிக நிலையமாக இருந்தது, அரேபியாவின் தென் மேற்கு மூலையில் உள்ள, கிறித்துவ விவிலிய நூலில் “ஷீபா” என அழைக்கப்படும் “சபா” எனும் நகராகும். (Saba) இந்த இடத்தில்தான் இந்திய வணிகப் பெருமக்களால் பண்டப் பொதிகள் இறக்கப்பட்டன; இங்குதான் எகிப்தியர்களும், இன்றைய சிரியாவும், பாலஸ்தீனமுமான பொய்னிலிய நாட்டவரும் (Phoenicians) (குறிப்பு 2) இந்திய வணிகர்களைச் சந்தித்துத் தங்கள் பண்டப் பொருள்களை இந்தியப் பொருள்களுக்கு மாற்றிக்கொண்டனர். சபாநகரத்து வணிகர்கள், இடைத் தரகர்களாகச் செயலாற்றி, நடைபெறும் பல்வகை வாணிகங்களில் கிடைக்கும் அங்கத்தின் பெரும்பகுதியைத் தமதாக்கிக் கொண்டதாகத் தெரிகிறது. அப்போது செல்வாக்குக்கு வந்துவிட்ட சாலமன் கூடச் சிறந்த அறிவாளன். ஆகவே, இவ்விடைத் தாள்களை அறவே ஒழித்துவிட்டு, இந்தியா வாணிகத்தோடு நேரடித் தொடர்பு கொண்டுவிட்டான். இது நடைபெற்றது பொன் வளம்மிக்க “ஓய்ஹரி” (Ophir) மற்றும், பண்டைய பொய்னிசியாவும் இன்றைய லெபனானுமான நாட்டின் கடல் துறைமுகமாகிய டையர் (Tyre) ஆகிய நகரங்களில் ஆம், இது, இந்திய வாணிகப் பெருக்கத்தை இயல்பாகவே பெருக்கியிருக்கும். தென் இந்தியாவுக்கும் பாரசீகக் கடற்கரை மற்றும் ஏடனுக்கும் இடையிலான வாணிகப் பெரும் நடிவடிக்கை, மேற்கு ஈரான் நாடாகிய சுசா (Susa) நாட்டு நகராகிய “அச்செமெனிட்” (Achaemenid) நகரம், ஈரான் நாட்டுப் பழம்பெரும் பேரரசின் தலைநகராக இருந்தபோது நேர்ந்த அழிபாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. பானம் பருகும் கிண்ணங்கள் மற்றும் இந்திய நாட்டுச் சங்கு வளையல்கள் ஆகியன, பொருள்மிக்க அகச்சான்றுகளாம். இந்தியத் தேக்கு மரம், பிரிட்டானிய “நிமி ரெளட்” (Nimroud) மற்றும் யூப்ரடஸ் ஆற்றங்கரையில் உள்ள “உர்” (Ur) ஆகிய இடங்களில் உள்ள அழிபாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய “லகாஷ்” நாட்டின் நகராகிய டெல்லோ (Tello) நகரத்தில் சங்காலான அணிகள் காணப்பட்டன. (குறிப்பு 3). பாரசீக மன்னன் டாரியஸ் (Darius), இஸ்ரேல் நாட்டின் கி.மு. 10வது நூற்றாண்டைச் சேர்ந்த காலத்து அரசன் சாலமனைக்காட்டிலும் (Soloman) துணிந்து வினையாற்றத் தயங்காதவன். நிலவழி வாணிகத்தில் உள்ள நடைமுறை இடர்ப்பாடுகளை அவன் உணர்ந்தான். இந்தியாவை மத்தியதரைக் கடற்பகுதிகளோடு இணைக்கும் ஒரு குறுகிய வழியைக் காண விரும்பினான். அதனால், வருங்கால வளர்ச்சியில் எகிப்தியப் பேரரசன். “பார்வோன் நெக்கே” (Pharoah Necho) தொடங்கி வைத்த, சூயஸ் கால்வாயை வெட்டி முடிக்கும் பணியில் வெற்றி கண்டான். கிரேக்க மக்கள் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில், மயில்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ததும் குறிப்பிடத் தக்கது. கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் பாபிலோனியாப் போக்குவரத்தைப் “பவேறு ஜாதக்” கதையும் (Bavertialaka) உறுதி செய்கிறது. (குறிப்பு:4).
தென்னிந்திய வாணிக வரலாற்றைத் தொடர்ந்து காண்பதாயின், உரோம் நாட்டு வரலாற்று எழுத்தாளன் பிளைனி (Piny) அவர்கள் விளக்கும் உரோம் நாட்டோடான கடல் வாணிப அகச்சான்று நமக்கு உளது. உரோமர்கள் நறுமணப் பொருள்கள், நறுமண எண்ணெய்கள், மிளகு, முத்து மற்றும் நவமணிகளுக்காகச் சென்றனர். இவை அனைத்தும் தென்னிந்தியப் பொருள்களாம். இவற்றிற்கு விலையாக உரோமப் பொன் நாணயங்களையே தந்தனர். தென்னாட்டுப் பல மாவட்டங்களில் எண்ணற்ற உரோம நாணயங்களைக் காணலாம். உரோமப் பேரரசின் கருவூலத்தை ஆண்டு தோறும். ஐந்து லட்சம் எடையுள்ள பொற் காசுகளை, இந்தியா வற்றச் செய்துவிட்டது எனப்பிளைனி அவர்கள் கூறவில்லையோ? (குறிப்பு. 6) கிரேக்க நாட்டைச் சேர்ந்த நிலநூல் ஆய்வாளர் திருவாளர் ஸ்ட்ராபோ (Strabo) அவர்கள். கி.மு. 63க்கும், கி.பி. 64க்கும் இடையில் செங்கடல் வழியாக நடைபெற்ற எகிப்து நாட்டுடனான வாணிக வளர்ச்சியை விளக்கியுள்ளார். இவ்வாணிகம் தொடர்பாகப் பண்டைச் சேர நாட்டுத் தலைநகரம் முசிறி, மங்களுர், மற்றும் குஜராட் ஆகிய நகரங்களில் முக்கியத்துவம். திருவாளர்கள். “செங்கடற் செலவு” என்ற நூலின் ஆசிரியர். பெரிப்பிலஸ், பிளைனி மற்றும் கிரேக்க நிலநூல் ஆய்வாளர் தாலமி ஆகியோரால் குறிப்பிடப்பட்டுள்ளது. குஜராத்திலிருந்தும், எகிப்திலிருந்தும் வந்த கப்பல்கள் ஆங்குக் காணப்பட்டன. கி.பி. நான்காம் நூற்றாண்டில், உரோமப் பேரரசின் வீழ்ச்சியோடு வாணிக உறவிலும் சோர்வு ஏற்பட்டது. அந்நிலையில் தென்இந்திய வாணிகம், மீண்டும் அராபியர் கைக்கு மாறிவிட்டது. போர்த்துகல் நாட்டவரும், அந்நாட்டுக் கடலோடியுமாகிய மார்க்கபோலோ அவர்கள் காலம் வரை, இந்தியப் பெருங்கடல்களில் கப்பலோட்டத்தை அரேபியர்களே தொடர்ந்து மேற்கொண்டனர்.
இந்த வாணிபங்களெல்லாம் முக்கியமாக, மேற்குக் கரையைச் சேர்ந்ததாக, அதற்கு ஈடான, வாணிகம், அதனினும் அதிகமாகப் பெரும்பாலும் பண்டைக்காலத்தில், இலங்கை வழியாகவும், பிற்காலத்தே நேரிடையாகவும், பசிபிக்கடல் தீவுகளாகிய, ஆர்ச்சிபெலகோ (Archipelago) பொலனீஷியா (Polynesia) மற்றும் மலேசியா (Malaysia) ஆகிய நாடுகளோடு இருந்தது. இத்தொடர்புகள் எல்லாம், இயல்பாகவே, இந்தியத் தீபகற்பத்தின், அதாவது தென்னிந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்குக் கடற்ரைகளில் இருந்து ஆகும். இப்போக்குவரத்துக்கள், ஆசியாவின் மற்றப் பகுதிகள், ஆப்பிரிக்கா, மற்றும் ஐரோப்பாவோடு கொண்டிருந்த போக்குவரத்துக்கள் போலவே பண்பாடு பற்றியதும், வாணிகம் பற்றியதும் ஆம். திருவாளர் பி.டி.எஸ் அவர்களின் “இந்தியாவில் கற்காலம்” (Stone Age in India), (பக்கம். 43) காண்க.
நம் ஆய்வைச் சிறிதுகாலம்வரை கிழக்குக் கடற்கரையை ஒட்டிய வாணிகத்திலேயே வரையறுத்துக் கொண்டு நோக்கின், வாணிகம் மற்றும் ஏனைய போக்குவரத்துக்கள், பழங்காலம் தொட்டே பெருமளவில் இருந்தன. இலங்கை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், மற்றும் பொதுவாகப் பசிப்பிக்கடல் தீவுகளில், தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒற்றைப் பாய்மரக்கப்பல்களைப்போல் அல்லாமல், இரட்டைப் பாய்மரக்கப்பல்களை உடைய பொலினீஷியாவோடு வாணிகத் தொடர்பு இருந்தது. ஆந்திரர் மற்றும் குறும்பர்களின் பழங்கால நாணயங்கள் இரண்டு பாய்மரக் கப்பல்கள் சின்னல்களையே கொண்டுள்ளன. ஒற்றைப் பாய்மரக்கப்பல் சின்னம் இல்லை என்பதையும் இடையில் குறிப்பிடுகின்றேன். அவை, கடல் வாணிபம் இருந்ததை அறிவுறுத்துகின்றன. அதே கால அளவில், தென்இந்தியா, மலேசியாவுடனும், வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. (குறிப்பு. 7) இந்நாடுகள் உடனான கடல் வாணிகத்தின் பயன், பசிபிக் நாட்டுத் தென்னை, கள் இறக்கல், வெற்றிலை தின்னல் ஆகியன நுழைதலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. எது எப்படி ஆயினும், கூறிய அனைத்தும், சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் பனைமரக்கள், அக்கால மக்கள், நனிமிக விரும்பிய ஒன்றாம். தென்னிந்தியத் தேவாங்க இனத்து நெசவாளர்கள், விஸ்வகர்மாக்கள், கோவை மாவட்டத்து ஒக்கியர்கள் (Okkyians) திருவாங்கூர் நாட்டுப் பிஷரோடிகள் (Bisharodis) மற்றும் நீலகிரியைச் சார்ந்த இருளர்கள் ஆகியோர்களிடையே இன்றும் வழக்காற்றில் உள்ள, இறந்தார் உடல்களை, உட்கார்ந்த நிலையிலேயே புதைக்கும் முறை பொலினீஷியாவில் உள்ளது: தென்னிந்தியாவில் உள்ள நீண்ட பிடியில் பொறுத்தப்பட்ட மரம் செதுக்கும் வாச்சிற்கு இணையான ஒன்று, பொலினீஷியா மற்றும் ஆர்ச்சிபிலகோத் தீவுகளில் உள்ளன. தொடக்க காலம் படைக்கலமாகிய, தானே தாக்கித் திரும்பும் ஆயுதமும் (Boomerang) அதே வழியில், தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவின் கண்டுபிடிப்பானதும் தென்னிந்தியப் பழைய கடல் மாலுமிகளால் கொண்டு வரப்பட்டதுமாம். (குறிப்பு. 8) மத்திய இந்தியாவில் உள்ள பஹில்லர் (Bhils) எனும் இனத்தவர், வளைந்த வடிவுடைய தானே தாக்கித்திரும்பும் படைக்கலங்களை ஆளும்போது, மதுரை மாவட்டத்து மறவர்கள், பிறைத்திங்கள் போலும் வடிவுடையதும், முனையில் குமிழ் போலும் கைப்பிடி உடையதுமான அப்படைக்கலத்தைக் கொண்டுள்ளனர். இதில் வியப்பிற்குரியது என்னவென்றால் அதே படைக்கலக் கருவி, ஆப்பிரிக்கா நாட்டு நைல் நதிப் பள்ளத்தாக்கிலும் உளது. தென்னிந்தியா மூலமாக அல்லது. இது எகிப்துக்கு எவ்வாறு சென்றிருக்க முடியும்? பெரும்பாலும் கற்காலத்திலிருந்தே, தென் இந்தியா எகிப்தோடு தொடர்பு கொண்டிருந்தமைக்கான, மறுக்க முடியாத அகச் சான்றுகளுள் இதுவும் ஒன்று. எகிப்தில் முடியாட்சி முறைக்கு முற்பட்ட காலத்தில், தென்இந்திய மட்பாண்டங்கள் இருந்தமையினை, முன்பே சுட்டிக்காட்டியுள்ளேன். ஈண்டு நாம் அறியக்கூடியது என்னவென்றால் எப்போதெல்லாம் தன் தேவைகளுக்குப் பொருந்துமோ, அப்போதெல்லாம் வேற்று நாட்டுப் பண்பாடுகளை மேற்கொண்டுள்ளது தென்னிந்தியா என்பதே. வெளி உலகிற்கு நிறையக் கொடுத்திருக்கும் அதே நிலையில், ஆங்குள்ள சிலவற்றைத் தானும் எடுத்துக் கொண்டுளது.
வரலாற்றுத்துறை மற்றும் வாணிகத்துறை தொடர்பாக முழுமையாக ஆராயப்பட்டிருக்கும், சுமத்தரா, பாலி, போர்னியோ, மலையா, சயாம், ஜாவா, சம்பா, கம்போடியா, மற்றும் கிழக்கிந்தியத் தீவுக் கூட்ட நாடுகள் ஆகிய கிழக்கிந்தியத் தீவுகள், இந்தியாவால் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவால் செல்வாக்குப் பெற்றுவிட்டன. இந்நாடுகளில் பெரும்பாலனவற்றில் கிறித்து ஆண்டு பிறப்பதற்கு முன்பே, இந்துக்களின் முறையான குடியிருப்புகள் இருந்தன (குறிப்பு, 9) காண்க. அமெரிக்க நாகரீகம் அதாவது ஒரு அமெரிக்க நாட்டவராகிய மாயர் என்பாரின் பண்பாடு, கிழக்கிந்தியத் தீவு மக்களால் செல்வாக்குப் பெற்றிருக்க வேண்டும். இம்முடிவை நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் அதே நிலையில் “இந்து அமெரிக்கா” (Hindu America) என்ற அண்மைக்கால ஆய்வு, நனிமிகப் பழங்காலம் தொட்டே, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரிடைத் தொடர்பு இருந்ததைக் காட்டுகிறது. வடஅமெரிக்காவில் ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கில் உள்ள மெக்ஸிகோ நாடு, இந்திய சமுதாய மற்றும் சமயங்கள் சார்ந்த நம்பிக்கைகைள் சிலவற்றை இன்னமும் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. (குறிப்பு. 10)
தொலைதூர இந்தியா எனப்படும், இந்தோசீனாவில் உள்ள சுவர்ண பூமியை, ஜாதகா கதைகள் குறிப்பிடுகின்றன. இந்தத் தீபகற்பத்தில், தென்னிந்தியர்களின் செயல்பாடுகளைப், பெரிபுலுஸ் குறிப்பிடுகிறது. புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம், அதற்கு ஈடான பெருத்த வாணிக நிலையம் ஆகும். பட்டினப்பாலை குறிப்பிடும் “காழகம்” என்பது, தென்கிழக்கு சுமத்ரா நாடாகிய பூரீ விஜயப் பேரரசில் உள்ள ஒருநாடாம் “கட்ஹா” (Kataha) என்ற நகராக அடையாளம் காணக்கூடும். இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள தொண்டி, மதிக்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் ஒரு பெருவாணிப நிலையமாம். ஜாகாவில், பல்லவர் காலத்து எழுத்துக்கள் ஆளப்பட்டிருந்தமைக்கான உறுதியான அகச்சான்று உளது. பதினோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜாவாவைத் தலைநகராகக் கொண்ட சைலேந்திரப் பேரரசோடு, சோழர்கள், அரசியல் உறவுகளை மேற்கொண்டிருந்தனர். தாய்லாந்து என இப்போது அழைக்கப்படும், பண்டைய சையாம் நாட்டில் ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு தமிழ்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது தென்னாட்டிலிருந்து சென்ற ஒரு வணிகக் குழுவைக் குறிப்பிடுகிறது. கி.பி. முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்தோசீனாவில் உள்ள ப்யூனன் (Fufian) நகரம், தென்னிந்தியர்களால் குடிவாழப்பெற்றிருந்தது. மரபுவழிச் செய்தி ஒன்று, “கெளண்டின்ய” என்ற பெயர் உள்ள பார்ப்பனன் ஒருவனை, அந்நாட்டு முதல் அரசனாக அரியணையில் அமர்த்துகிறது. கம்போடியத் தலைநகர்க்கு அணித்தாக உள்ள “அங்கோர் வாட்” (Angkor Vat) எனும் இடத்தில் திராவிடக் கலைத்தொழில் அமைந்து விஷ்ணு கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. சம்பா நாட்டு முதல் அரச இனம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற்கு முன்னரே, தென்னிந்தியர்களால் நிறுவப்பட்டது என நம்பப்படுகிறது. வாணிபத் தொடர்பை அடுத்து, அரசியல் வெற்றிகள் தொடர்ந்தன. ஆகவே, இந்தச் செய்தி மறுக்க முடியாத ஒன்று.
தென்னிந்திய வாணிபத்தின் ஒருபகுதி, பெரும்பாலும் தொடக்க காலத்திலிருந்தே சைனாவோடு நடைபெற்று வந்தது. தொடக்ககால இவ்வாணிபத்திற்கு ஆதரவான அகச்சான்றுகள் மிகக்குறைவாக இருக்கும் நிலையில், கி.பி. நான்காம் நூற்றாண்டிற்கு வரும் போது, நாம் உண்மையான அடிப்படையில் நிற்கின்றோம். கி.பி. நான்கு முதல் 14ஆம் நூற்றாண்டு வரை, இந்தியாவுக்கும் சைனாவுக்கும் இடையில், முறையான கடல்வழி வாணிகம் இருந்து வந்துளது. (Yule Cathay and the way Thither) “சீன தேசமும் அதற்கு அப்பாலும்”, சீன நாட்டுத் தட்டையான அடிப்பகுதியுடைய மரக்கப்பல்கள் வந்து செல்லும் முக்கிய இடங்கள், காலிகட், கொய்லோன், நாகப்பட்டினம் மற்றும் மகாபலிபுரம் முதலாம் கடற்கரைப் பட்டினங்களாம். பல்லவ நரசிம்மவர்மன், சீன வர்த்தகர்கள், சைனமுனிவர்களுக்காக, நாகப்பட்டினத்தில், “சீன பகோடா” (China Pagoda) என்ற சீனக் கோயில் ஒன்றைக் கி.பி. ஏழாவது நூற்றாண்டில் கட்டினான். இது, தென்னிந்தியப் பேரரசர்களின் சமய ஒருமைப்பாட்டு நிலையைக் காட்டுகிறது. இதனினும், சிறப்பானது. கிறித்துவ ஆண்டு தொடக்கத்திலிருந்தே, புத்தமதக் கோட்பாடுகளை எடுத்து விளக்கவும், அம்மதத்தை நடைமுறையில் பரப்பவும், சீனாவுக்குச் சென்ற தென்னிந்திய பெளத்த முனிவர்களின் செல்வாக்குதான். “இயான் சியாங்” (Huien Tsiang) வருகை தந்தான். இட்சிங் (ltsing) அவர்காலத்தில் இந்தியாவுக்கு வருகை தந்த பல பயணிகளைக் குறிப்பிடுகிறான். கி.பி. ஆறாவது நூற்றாண்டு போலும் தொடக்க காலத்தில் இந்தியாவிலிருந்து சென்றவர்களுள், போதிதர்மர் எனும் சமயப் பெயர் பூண்டு, சீனாவுக்குச் சென்று, சீனமொழியில். “ஜென்” (Zen) (குறிப்பு 11) என அழைக்கப்பெறும் தத்துவத்தைப் பிரசாரம் செய்தவனாகிய, காஞ்சியைச் சேர்ந்த சிற்றரசனும் ஒருவன், கி.பி. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டை நோக்கினால், கி.பி. 1374 ஆம் ஆண்டில், விஜயநகர அரசன் முதலாம் புக்கன், அப்போது சீனப் பேரரசனாக விளங்கியவனுக்கு நட்புறவுத் தூது ஒன்றை அனுப்பியதைக் காணலாம். இவ்வகையால், சீனாவுடனான தென்னிந்தியப் போக்குவரத்து, வாணிகத் தொடர்பானது மட்டும் அன்று; பண்பாட்டுத் தொடர்பானதும் கூட.
கடலுள் அமிழ்ந்து போன பழைய பெருநிலப் பரப்பிலிருந்து இலங்கை துண்டிக்கப்பட்டுவிட்டது என்றாலும், இலங்கையோடு தென்னிந்தியா கொண்டிருந்த உறவு, துண்டிக்கப்படாமல் தொடர்ந்து இருந்தே வந்தது. (குறிப்பு: 12) இராக்கதர் ஆட்சி, இலங்கையிலிருந்து, தக்ஷிணம் முழுமையும், மற்றும் தென்னிந்தியா முழுமையும் அதற்கு மேலும், கொள்ளைக்காரர்களாகிய இராக்கதர்களிடமிருந்து, அமைதி விரும்பும் நாட்டு மக்களைக் காத்தற் பொருட்டுத் தன் இளம்வயது மகன் இராமனை அனுப்புமாறு தசரதனை, விஸ்வாமித்திரர் வேண்டுமளவு, தசரதன் நாடாகிய அயோத்திவரையும் பரவி இருந்தது. இலங்கை மீது இராமர் எடுத்த படையெடுப்பும் அதன் பின்விளைவுகளும் அனைவரும் அறிந்ததே. அப்பழங்குடியினர்களின் அழியா உயிர் வாழ்க்கை, கி.மு.300ல் கங்கைக்கரைப் பேரரசன் சீயபாகுவின் மகன் விஜயன், இலங்கையில் அடியிடும் வரையும் இருந்தது. இவர்கள் உலக அரங்கிலிருந்தே மறைந்துவிட்ட ராக்கதர்கள் ஆவர். இலங்கையில் உள்ள வெட்டர்கள் (Veddhas) பெரும்பாலும், பண்டைய இராக்கதர்களின் வழிவந்தவராதல் கூடும். புத்தமதம் தென் இந்தியாவுக்கு இலங்கையிலிருந்து கிறித்துவ ஆண்டுத் தொடக்கத்தில் வந்ததாக நம்பப்படுகிறது. (குறிப்பு.13) இக்காலம் முதல் நட்புறவு இருந்ததாகத் தெரிகிறது. சோழ அரசன் கரிகாலன், தன் பாசனப் பணிக்காக இலங்கையிலிருந்து நூற்றுக் கணக்கான பணியாளர்களைக் கொண்டுவந்து பணியில் அமர்த்தினான் எனச் சொல்லப்படுகிறது. இலங்கை அரசன் கஜபாகு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில், செங்குட்டுவன், சேரர் தலைநகரில், பத்தினிக் கடவுளுக்கு எடுத்த விழாவிற்கு வந்திருந்தான் எனச் சொல்லப்படுகிறது. ஆறாம் நூற்றாண்டு வரை, அமைதியான நட்புறவு இருந்து வந்துளது. இக்காலம் முதல் 8வது நூற்றாண்டின் கடைசி வரை, பல்லவர்கள் இலங்கைமீது, பலமுறை படையெடுத்து வெற்றி கொண்டான். இது பாண்டியர்களால் தொடரப்பட்டு, இலங்கை அரசன் முதலாம் சேனன் காலத்தில் இலங்கைத் தலைநகர் கைப்பற்றப்பட்டது. ஆனால் இரண்டாம் சேனன் தன் பங்காகப் பாண்டியர் தலைநகர் மதுரையை அழித்தான். பராந்தக சோழன், மதுரையை வெற்றி கொண்டபோது, இராஜசிம்ம பாண்டியன், இலங்கையில் அடைக்கலம் புகுந்தான். இலங்கை மீதான சோழர் படையெடுப்பு ஒன்று இருந்தது. ஆனால் வெற்றி இல்லை. முதலாம் இராஜராஜன், வடஇலங்கையை வெற்றி கொள்ளும் வகையில் அது விட்டு வைக்கப்பட்டது. முதலாம் இராஜேந்திரன், சோழ அரசை இலங்கைத்தீவில், நல்ல வலுவாக நிறுவினான். ஆனால், முதலாம் குலோத்துங்கன், சோழர் ஆட்சிப் பொறுப்பேற்றுக்கொள்ளும் முன், சோழ நாட்டில் இருந்த அரசியல் குழப்பத்தைப் பயன் கொண்டு இலங்கை அரசன் விஜயபாகு, கி.பி. 1070 தன்னைத் தனியரசன் ஆக்கிக்கொண்டான். இலங்கையில் தென்னிந்திய அரசர்களின் செல்வாக்கு எத்தகையதாக இருப்பினும், பண்பாட்டுச் செல்வாக்கு மட்டும் அழிவுற்றுப் போகாது வலுவாக இருந்துவந்தது. தன்னுடைய கலை, கட்டிடக் கலை, மற்றும் இலக்கியங்களைக் கற்றுக்கொள்ளக் காலமெல்லாம் தென்னிந்தியாவின் காலடியில் அமர்ந்திருந்தது இலங்கை. இலங்கை முழுவதும் பரவலாகக் கிடைக்கும் பத்தினி தேவி வழிபாடு மற்றும் கடவுள் திருமேனிகள் ஆங்கு இடம்பெற்றுவிட்ட தென்னிந்தியாவின் செல்வாக்கைத் தெளிவாக உணர்த்துகின்றன. சைவ சமயமும், சைவ நாயன்மார்களும், அங்கு நிலைத்த இடம் பெற்றுவிட்டனர். மாணிக்கவாசகர் காலத்தில், அதாவது கி.பி. 9வது நூற்றாண்டில், இலங்கையை ஆண்டுகொண்டிருந்த, புத்தமத அரசன் ஒருவன் சிதம்பரத்திற்கு வந்து சைவனாக மாறிவிட்டான். என ஒரு மரபுவழிச் செய்தி உறுதிப்படுத்துகிறது. இந்நிகழ்ச்சி, வட இலங்கையில், தமிழரசின் தோற்றம் வளர்ச்சிகளின் தொடக்க நிலையாம் எனக் கொள்ளலாம். (குறிப்பு-14) 1344ல் இலங்கைக்குச் சென்றிருந்த அரேபிய யாத்திரீகள் இபன் பதுதா (Ibn Batuta) இலங்கையை ஆண்டிருந்த தமிழ் அரசன், பர்ஷிய மொழியில் சிறந்த அறிவு வாய்க்கப் பெற்றிருந்தான் எனப் புகழாரம் சூட்டியுள்ளான். பிற்காலத்தே, இலங்கை, விஜயநகரப் பேரரசின் ஓர் அங்கமாகிவிட்டது. அக்காலம் முதல், அது தமிழ் நிலமாகவே இருந்து வந்துளது. இக்காலை, யாழ்ப்பாணமும், இலங்கையின் வடபகுதி அனைத்தும் சில குடியேறியவர்கள் தவிர்த்து, முழுவதும் தமிழர்களையே கொண்டுள்ளன.
ஆசியாவின் தென்மேற்கில், டைகிரஸ், யூபிரடஸ் ஆறுகளின் இடைப்பட்ட நாடாகிய மெஸ்படோமியாவில் வழங்கப்பெறும் “எலம்” (Elam) என்ற சொல், பெரும்பாலும், அங்கே குடிவந்தவர்களும், அந்நகரின் வளர்ச்சிக்குப் பொறுப்பானவர்களுமான இலங்கையர் கொடுத்ததாகத் தெரிகிறது. காரணம், இலக்கியங்களிலும், கல்வெட்டுக்களிலும், இலங்கை, ஈழம் என அறியப்படவில்லையா? ஈழத்து மக்கள், பண்பாட்டு நிலையில், ஆசிய ஆப்பிரிக்கப் பண்பாடாம் செமிடிக் பண்பாட்டினார் அல்லர் மாறாகப் பாபிலோனியாவைச் சார்ந்த சுமேரியப் பண்பாட்டினர் ஆவர். அதே வழியில், சிற்றாசியா (Asea-Minor) நாட்டின் தெற்கே உள்ள நனிமிகப் பழைய நாடாம் “லிஷியா” (Lycia) வை அடுத்துள்ள “கரியா” (Caria) என்ற இடப்பெயரும், கேரள நாட்டவர், ஆங்குக் குடியேறிய பின்னர், “சேர” (Cera) என்ற சொல்லின் வடிவாம். வளைகுடாவை அடுத்து, ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியாம், சோமாலி நாட்டுச் சோமாலி மொழிக்கும், தமிழ் மொழிக்கும் இடையிலான மொழி ஒருமைப்பாடு குறிப்பிடத்தக்கதாம். உலகப் பண்பாட்டிற்குப் பண்டைய திராவிடப் பண்பாடு அளித்த மதிக்கத்தக்க பங்கு, திராவிட மொழியினதாம். ஒரு சில மொழிகள் தவிர்த்துச். சொல்லோடு சொல், இடையில் எத்தகைய இடையீடுமின்றி இணையும் இயல்புடைய மொழிக் குடும்பங்கள் (agglutinative dialects) தங்கள் தாய் மொழிக்குப் பழந்தமிழ் மொழியை நோக்கியுள்ளன. திராவிட மொழியின் தொண்டு, பேச்சு வழக்கற்றிருந்த மக்களுக்குப் பேச்சுக் கற்றுக்கொடுத்ததாகக் கொள்ளலாம் அல்லவா? தொல் பழங்காலத்து உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவிய பண்பாடுகள் பற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வு, தென் இந்தியாவில் உள்ள அமைப்புகளுக்கும் நாகரீகம் பெற்றிருந்த அன்றைய உலகின் ஏனைய பகுதிகளில் இருந்த அமைப்புகளுக்கும் இடையில் இருந்த இன உறவு, ஒருமைப்பாடுகளைத் தொடர்ந்து, நான் எடுத்துக்காட்ட இருப்பதுபோல், ஐயத்திற்கு இடனின்றி உணர்த்தும். இரண்டும் துல்லியமாக ஒரே மாதிரியாக இருக்கும் அந்த நிலைக்கு, ஒருவர்க்கொருவர் பரிமாறிக்கொண்டிருந்திருக்க வேண்டிய அடுத்தடுத்து மேற்கொண்ட தொடர்புகளையே காரணம் ஆக்குதல் வேண்டும். வேற்று நாட்டவர் பண்பாடு, நமக்கே உரிய நம் பண்பாடுகளுக்கு, ஊழிக்கு ஊழி தொடர்ந்து அதன் தனித்தன்மைக்கு - சென்னை மாநிலத்திலிருந்து வேற்று நாட்டில் குடிபோய் இருப்பவரிடையே, இன்றும் குறிப்பிட்டுக் காட்டுமளவு இடம் பெற்றிருக்கும் தனித் தன்மைக்கு எவ்வித ஊறும் விளைக்காத வகையில் வளப்படுத்தியிருப்பது இயல்பானதே. 1931ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, 25 லட்சம் இந்தியர்கள் வெளிநாடுகளில், அதிக எண்ணிக்கையில் இலங்கை, மலேயா, மாருதியஸ், தென் ஆப்பிரிக்கா நாடுகளில் வாழ்கின்றனர். அவ்வாறு சென்று வாழும், அச்சென்னைவாசிகள் பற்றி அந்த அறிக்கை இவ்வாறு கூறுகிறது; “குடும்பம் தாயகத்திற்குத் திரும்புதல், அவர்களிடையே பொதுவான இயல்பு. தங்கள் வீட்டோடும், மூதாதையர் வழிவந்த தங்கள் நில உடைமைகளோடும் நீண்ட தொடர்பு கொண்டுள்ளனர். சமய வழிபாடு போலும் தனக்கே உரிய அனைத்தையும், சென்ற நாடுகளில் சிறிதும் மாறுதலுக்கு உள்ளாகாமல் தொடர்ந்திருக்கும் வகையில் அவன் கொண்டுள்ளான். சாதி வேறுபாடு, ஐயத்திற்கு இடமில்லாமல் தளர்ந்தே உளது. என்றாலும், சாதி ஒருமைப்பாட்டின் பங்கு. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் சிறிதளவே ஆம். எந்தச் சென்னைவாசியும், தன் தாயகத்தில் சார்ந்திருந்த சாதித் தொடர்பைவிட்டுக் கொடுப்பதில்லை. தாயகம் திரும்பியதும், தன் பழைய இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ளவே விரும்புகிறான். மேற்கொண்ட தொழில் எதிர்பார்ப்புக்குக் குறைவான பயனையே அளிக்கிறது. மிகப் பெரும்பாலோர் தங்கள் தாயகத்தில் வழிவழியாக மேற்கொண்டிருந்த உழவுத் தொழிலுக்கே செல்கின்றனர். வீடுகளில் எடுபிடி வேலைகளுக்குச் செல்வது, இந்தியாவில் அவ்வேலை செய்தவர்களே. வணிகர்கள், இந்தியாவிலும் பெரும்பாலும் அத்தொழில் புரிந்தவர்கள், சென்னையிலிருந்து குடிவாழச் சென்றவர்கள், தங்களோடு, தங்களுக்கே உரிய உலகை உடன் கொண்டு சென்று. ஆங்குத் தங்களைச் சூழ அமைத்துவிட்டனர்.” (பக்கம் 72)
தென்னிந்தியாவுக்கே உரிய பல தனிச் சிறப்புகளைச் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து மற்றும் கிரீட் ஆகிய நாடுகளில் உள்ள, கைவண்ணப் பொருட்களிலும், கலைகளிலும், சமய, சமுதாயப் பழக்க வழக்கங்களிலும் காணலாம். ஏனைய தொல் பழங்கால நாடுகள் பற்றிச்சொல்லத் தேவை இல்லை. இன்று இரவு, அவற்றுள் சில பற்றிச் சுருக்கமாக எடுத்துக் கூறுகின்றேன். தென்னிந்தியாவில், பழங்காலத்தே தெரிந்திருந்த தொழில்களில் முதல் இடத்தைப் பெற்றது. மீன்பிடி தொழில் மீன்பிடித்தலுக்குக் கட்டுமரங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தன. கனத்த நீண்ட மரத்துண்டங்கள் இரண்டு அல்லது மூன்று, தென்னங்கயிறுகளால் பிணிக்கப்பட்டு, பிளந்த மூங்கில் கழிகள் துடுப்புகளாகப் பயன்படுத்தப்படும். கட்டுமரப்படகும், வள்ளம் எனப்படும் சிறுபடகும் இருந்தன. வளர்ந்துவந்த வாணிக ஆர்வத்தால் படகு கட்டும் தொழில், பெருமளவில் மேற்கொள்ளப்பட்டது. (குறிப்பு-16) படகின் மாதிரிகளும் பலப்பல இடத்திற்கு இடம் வேறுபட்டன. மலபார் நாட்டு ஈர்க்கும் சிறு படகுகள், பாம்பு வகைப் படகுகளும், கோடிக்கரைக் கள்ளத் தோணிகளும், இவைபோலும் பிறவும் உள்ளன. இவையெல்லாம், பண்டைய கட்டு மரங்களில், அழியாது இருப்பனவாம்; சிலப்பதிகாரம், வடிவமைப்புகளிலும், அளவிலும் வேறு வேறுபட்ட எண்ணற்ற படகுகளைக் குறிப்பிடுகிறது. அவற்றுள் சிறப்பாகக் குறிப்பிடப்படும் வடிவுடையன, திரைமுகப் படகு, யானைமுகப் படகு, சிங்கமுகப் படகுகளாம். (பரிமுக அம்பியும். கரிமுக அம்பியும், அரிமுக அம்பியும்” (காதை 13 176-177):
அவற்றுள் கள்ளத் தோணி வகைகள் தனிச்சிறப்பு வாய்ந்தவை. இவை, இருமுனைகளின் இரு பக்கங்களிலும், நல்லன நல்கும் குறியாகக் கருதப்படும் “உ” என்ற குறி, மற்றும் குதிரைகளோடு, கண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இது, தீமைகளை விலக்குவதற்காக எனக் கூறப்படுகிறது. பண்டைய எகிப்தியர்களும், கிரேக்கர்களும், உரோமானியர்களும் இதை வியப்பூட்டும் நிலையில், பின்பற்றினர். இவற்றின் அழியா நினைவுச் சின்னங்களைச், சீனாவிலும், இந்தோசீனாவிலும், இன்றும், காணலாம். அவை அடிப்பாகம் தட்டையாக உடையவும், சிறு கடல் ஓடும் நாவாயும் (Junks and Sampans) ஆகும். காவிரி மற்றும் பெரிய ஆறுகளில் பக்கத்தில் உள்ள கூடை முடையப் பயன்படும் விரிசல்களால் பின்னப்பட்டு, தோல் மூடிய பரிசில், டைகரஸ் மற்றும் யூபிரடஸ் ஆறுகளைக் கடக்கப் பயன்பட்ட ஒன்றாம்.
தொல் பழங்காலப் பாசன முறைக்கு மூலம் ஆக விளங்கு நிலையால், தென்னிந்தியா மீண்டும் ஒரு புகழுக்கு உரியதாம். குறிப்பு-17 தென்னிந்திய அரிசி நாகரீகம் தென்சீனா மற்றும் இந்தோனேசியா நாகரீகத்தோடு ஒப்பிடக்கூடியதாம். கோதுமை நாகரீகத்தின் மைய இடம், அந்நாகரீகம் எங்கிருந்து மெசபடோமியாவுக்கும் நைல் நதிப் பள்ளத்தாக்கிற்கும் சென்று பரவியதோ, அந்த இடமாம் சிந்துவெளிப் பள்ளத்தாக்காம், ஒன்று கொடுத்து ஒன்று வாங்கும் முறையால், பிற்காலத்தில் இந்தியா பெற்ற மக்காச்சோளம், ஒருவேளை மத்திய அமெரிக்காவைச் சேர்ந்ததாம். தொல் பழங்கால உலகம் முழுவதும், நாகரீகத்தின் முதல் வித்து துவப்பட்ட ஆற்றுப்படுகை அனைத்திலும், தானே வளர்ந்த பாசனவழிப் பயிர் முறை, இருந்திருப்பது இயலக்கூடியதே. அது எந்த ஒரு நாட்டிற்கும், ஏகபோக உரிமை உடையதன்று. ஆனால், தென்னிந்தியா உழவுத் தொழிலைக் கற்காலத்திலிருந்தே தெரிந்திருந்தது என்பது, ஆங்காங்குக் கிடைக்கலாகும். உழவுத்தொழில் கருவிகளால் தெரிய வருகிறது. அதற்குத் தொல்பொருள் ஆய்வாளர்களின் மண்வாரிக்கு நன்றி செலுத்துவோமாக. உழுதொழில் பயிற்சியை உணர்த்த சக்கிமுக்கிக் கல்லால் ஆன உழுகலப்பையின் கொழு முனை, சக்கிமுக்கிக் கல்லால் ஆன சுட்ட ஆப்பம் வைக்கும் அடுக்கு ஆகியவை போதும். சக்கிமுக்கிக்கல் ஆப்ப அடுக்குகள் பண்டைச் சுமேரியா மற்றும் எகிப்திய நகரங்களில் பெருமளவில் ஆளப்படுபவனவாம். சிந்து வெளிப் பள்ளத்தாக்கில் ஆளப்படுவனவாம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் அத்தகைய ஆப்ப அடுக்கு காணப்படவில்லை. அந்நிலை பெரும்பாலும் செப்புக் கருவிகள் கிடைத்தமையே ஆம். ஆனால், அந்தப் பண்பாடு, நனிமிக வளர்ச்சி பெற்ற பித்தளை அல்லது செம்பு கலந்த கற்காலத்ததாம்.
உலோகப் பண்பாடு பற்றிய சில இயல்புகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளும் நிலையில், முறையான வேதியல் ஆய்வின் அடிப்படையில், சிந்துவெளியில் பயன்படுத்த பட்ட பொன், மைசூர் மாநிலம், கோலார் தங்கச் சுரங்கத்திலிருந்து பெற்ற நனிமிகச் சிறந்தது என ஐயத்திற்கு இடன்இன்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. மொகஞ்சொதாரோ மற்றும் ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட விலை உயர்ந்த அமேஸான் வகைக் கற்கள், நீலகிரிக்கே உரிய தனிச் சிறப்பு வாய்ந்த கற்களாம். இக்கண்டுபிடிப்புகளுடன், மொகஞ்சொதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட மைசூர் மாநிலத்திலிருந்து வந்திருக்கக் வேண்டிய, அழகிய பச்சைக் கல்லால் செய்யப்பட்ட நீர்குடிக் குவளையையும் இணைத்துக்கொள்க. இது, தென்இந்தியா, பித்தளை செப்புக் காலத்திலேயே, சிந்து வெளி நகரங்களோடு, நேரிடையாகக் கொண்டிருந்த தொடர்பினை உறுதி செய்யும். என் முதல் சொற்பொழிவில் குறிப்பிட்டது போல், ஊழிப் பெருவெள்ளம் விட்ட வண்டல் வடிவத்தில் கண்டெடுக்கப்பட்ட நீலகிரியைச் சேர்ந்த அமேஸான் வகைக் கற்களால் ஆன குமிழி, கண்டெடுக்கப்பட்ட சுமேரிய நாட்டு “உர்” (Ur) எனும் ஊரின் நிலையும் அத்தகையதே ஆதல் வேண்டும். (குறிப்பு:18) மன்னர் ஆட்சிக்கு முற்பட்ட எகிப்து, பச்சைக் கல்லைப் பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதாம். “ராய்கிர்” (Raigir) என வழங்கப்படும் ஐதராபாத்திலும், கி.மு. 3500 ஆம் ஆண்டு காலத்திய, சுமேரிய நாட்டு “உர்” (Ur) எனும் இடத்திலும் கண்டெடுக்கப்பட்ட நீலக்கல்லால் ஆன, நீண்ட உருளை வடிவிலான குமிழ்களுக்கிடையே, வகையால் மட்டுமன்று, வேலைப்பாட்டு நிலையிலும் உள்ள ஒருமைப்பாட்டினையும் நான்குறிப்பிடுவேன். அதே இடத்தில் கண்டெடுக்கப்பட்ட “குவார்ட்ஸைட்டே” என்ற ஒருவகைக் கல்லால், முக்கோண வடிவில் செய்யப்பட்ட மணிமாலைகளும், தொல்பழங்கால எகிப்திய நாகரீகத்திற்கு நிகரானதாகும். கி.மு. 1600 ஆண்டு காலத்திய நாற்சதுர உருளை வடிவிலான, கிரீட்டன்மாதிரி மணிமாலையும், குவார்ட்லைட்டே என்ற ஒருவகைக் கல்லால் ஆன, ஆறுபட்டையும், பீப்பாய் வடிவமும் உள்ள மணிமாலையும் உர் (Ur) எனும் இடத்தில் கி.மு. 3500ஐச் சேர்ந்த புதைகுழிகளில் நமக்குக் கிடைக்கின்றன. கலைநுணுக்கம் வாய்ந்த இப்பொருட்களெல்லாம் ஆங்காங்கே, தனித்தனியாக முகிழ்த்தனவா? இவை தென்னிந்தியாவுக்கும் கிரீட்டுக்கும், பாபிலோனியாவுக்கும் இடையில், தொல்பழங் காலந்தொட்டே இருந்து வந்த, இடைவிடாப் போக்குவரத்து இருந்தமையினை உணர்த்தவில்லையா? இதுபற்றிய முடிவு செய்வதை உங்களுக்கே விட்டு விடுகின்றேன். மேலும், மலையா தீபகற்பத்தின் கூட்டாட்சியைச் சேர்ந்த “குலா” மற்றும் செலிங்ஸிங் (Kuala Selingsing) பகுதிகளில் காணப்பட்ட உலோகத்தில் செதுக்கி வேலை செய்யப்பட்ட, மங்கிய சிவப்புநிற நேர்த்தியான மணிக்கல்லால் செய்யப்பட்ட மாலை வகையும், கி.பி. 9 அல்லது 10 ஆம் நூற்றாண்டின் வாணிகத்தின் விளைவாக, அழுத்தமான இந்தியச் செல்வாக்கிருந்தமையினை உணர்த்துகிறது.
ஆதிச்சநல்லூர்ப் புதை குழிகளில் கண்டெடுக்கப்பட்ட, மெல்லிய நீண்ட உருண்டை வடிவிலான, பொன் தகடுகளால் செய்யப்பட்ட பொன் முடிமாலை, நீண்டிருப்பது இறந்தவர் தலைகளைச்சுற்றி, அவற்றைக் கட்டும் வழக்கம் இருந்ததை உணர்த்துகிறது. மதுரை மாவட்டத்துச் சில இனத்தவரிடையே, “பட்டயம் கட்டுவது” என்ற முறையில் இவ்வழக்கம் இன்றும் இருக்கிறது. முழுக்க முழுக்க அதே வடிவிலான, பொன் முடிமாலை, கிரேக்க நாட்டின் கி.மு. 1100 ஆண்டில் சிறப்புற்று விளங்கிய, “மைசினே” (Mycenae) நகரத்திலும் கண்டெடுக்கப்பட்டது வியப்பிற்குரியது. (Ar.S.I.A.R. 1902-3. p. 120) (குறிப்பு:19) எகிப்து நாட்டுக்கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட அந்நாட்டு, 17வது அரச இனத்துப் பொன் கழுத்தனி மற்றும் அரைஞாண்களையும், மேற்கூறிய அணிவகையோடு இணைத்துக்கொள்க. இவை வெளிநாட்டு அணிகளாகவே, கருதப்பட்டன. யாழ் வில்லுக்கான, இந்திய மூலத்திற்கும் இந்திய உரிமை மேற்கொள்ளப்பட்டது. நம் தென்னிந்திய இளமகளிர்களும். ஏன்-சில வயது முதிர்ந்த மகளிர்களும் இன்றும் அணிந்துகொள்ளும் கால் சிலம்பும் அணியப்பட்டன. மோகன்லாதரோவில் கண்டெடுக்கப்பட்ட, களிமண்ணால் ஆன சிறு உருவச்சிலை மற்றும் சிறு வெண்கலச்சிலைகளிலிருந்து, சிந்து சமவெளிப்பகுதிகளிலும் சிலம்பு அணியப்பட்டதை அறிகிறோம். மிகவும் வியப்பிற்கு உரியது என்னவென்றால், கிரீட்டு நாட்டுத் தொல்பழம் நகரமாகிய “க்னோஸ்லோஸ்” (Knossos) நகரில் உள்ள சுவர் மற்றும் மேல்மண்டப ஓவியத்தில், மேலே கூறிய மாதிரியான காற்சிலம்பு காணப்படுவதுதான். மிகச் சிறந்த காப்பியமாகிய சிலப்பதிகாரம், ஒரு காற்சிலம்பை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டது.
தொல்பழங்காலத் தென் இந்தியாவுக்கும் மெஸ்படோமியாவுக்கும் இடையில் இருந்த தொடர்புக்கான நம்பத்தக்க காலக் கணிப்பை முறைப்படுத்தும் ஒரு வாயிலைச், சுமேரிய நாட்டில், குறிப்பாக, கிஷ் மற்றும் கஸா (kiss and Susa) பகுதியில், கி.மு. ஐந்து முதல் மூன்று வரையான ஆயிரத்தாண்டு காலத்தைச் சேர்ந்தனவாக அகழ்ந்து எடுக்கப்பட்டவை தந்து உதவுகின்றன. (குறிப்பு:20) அவை. அங்கு. இந்தியச் செய்பொருட்கள் இருந்தமையினை வெளிப்படுத்துகின்றன. வியப்பிற்குரிய சில பொருள்கள் வருமாறு:
1) இழவுவினைக்குரிய மண்பாண்டங்கள்.
2) நீள்வட்ட, குறுகிய கால்களைக் கொண்ட மெருகூட்டப் படாத மண்பாண்டம். 3) இந்தியாவில் மட்டுமே, பொதுவான கலைத் தொழிலுக்குரியதான, சிகப்பு பின்னணியில் வெள்ளை வண்ணக்கோடுகளால் அணிசெய்யப்பெற்ற, குஷ் (Kwsh) நகரத்தில் காணப்பட்ட மங்கிய சிவப்பு நிறம் வாய்ந்த, நேர்த்தியான மணிக்கல்லால் ஆன மாலைகள். இவை கிரீட் நகரிலும் காணப்பட்டன.
4) இந்தியப் படகாகிய, தோல் கொண்டு மூடப் பெற்ற கூடை வடிவிலான பரிசில்களை உபயோகித்தல்.
5) சிந்துவெளியில் உரியதான, எழுத்து மற்றும் காளயிைனைக் கொண்ட முத்திரையினை யொத்ததான, அழுக்குப்போக்கப் பயன்படுத்தப்படும் சவர்க்காரத்தால் ஆன முத்திரை, தொல்பழங்கால, சுமேரியாவைச் சேர்ந்த கிஷ் (Kish) நகரில் காணப்பட்டது.
6) மேற்கு இரான் நாட்டில் உள்ள அழிந்துபோன சுஸா (Susa) நகரில் சங்கும், தொல்பழம் லகேஷ் (Lagash) நாட்டு டெல்லோ (Tello) நகரில் சங்கு அணிகலன்களும் இந்தியாவில் தொல்பழம் காலம் முதல், சங்கு வளையல்களும், போர்க்களத்திலும், இழவுச் சடங்குகளிலும், கடவுள் வழிபாடுகளிலும், பயன்படுத்தப்பட்டன என்பதை இடையே குறிப்பிடுகின்றேன். சங்கைப் பயன்படுத்தும் கலை அறிவு, தென்இந்தியாவில் தொல்பழங்காலத்தில், இரும்பை அறுத்தல், உருக்கல் ஆகியவற்றைப் பயன்படுத்தும் நிலைக்குக் கொண்டு சென்றது.
7) தென் மேற்கு ஆசியாவில், யூபிரடஸ் ஆற்றினை ஒட்டிய சுமேரிய நாட்டுப் பீரிட்டிஷ் நிம்ராட் (Biritish Nimrod) நகரத்திலும், உர் (Ur) நகரத்திலும், தேக்குமரத்துண்டும். செவ்வகிலும் காணப்படுவது.
தொல் பழங்காலச் சமய சமுதாய முறைகளுக்குத் தென்னிந்தியா ஆற்றிய பங்கை ஆராயும் நிலையில், தெய்வவழிபாடு, உண்மையில், உலகெங்கும் நிறைந்த ஒன்று என்பதைக் காண்கிறோம்; தாய்த்தெய்வத்தைக் குறிப்பிடும் ‘அம்மா’ என்று சொல்வதாலும் குறிப்பிடத்தக்கது. எகிப்தில் “அம்மோன்” (Ammon) என்ற கோயிலைப் பெற்றிருக்கிறோம். கிரீட், நகரில் உள்ள தாய்க்கடவுளின் சுடுமண்ணால் செய்யப்பட்ட, உருவச் சிலை, மோகன்லாதரோவில் கண்டெடுக்கப்பட்டது போலவே இருக்கிறது. தென்னிந்தியப் பழங்குடியினரின் தொல்பழங்காலப் பெண் தெய்வம் “ஐயை” என்பதாம். (குறிப்பு: 22), அவள் இப்போது, காளியாகவும், பத்ரகாளியாகவும், கேரள நாட்டுப் பகவதியாகவும் மாறிவிட்டாள். தொல்பழங்காலக் கோயில் வழிபாட்டோடு தொடர்புடையது, பெண்களைக் கோயில்களுக்குப் பொட்டுக் கட்டி விடுதலாம். இவர்கள், நம் நாட்டில் “தேவரடியார்கள்” என அழைக்கப்படுவர். பரத்தையர், அல்லது ஆடல் மகளிரைக் குறிப்பிடும் சங்க இலக்கியங்கள். இவர்களைப் பற்றி, அரிதாகக் கூடக் குறிப்பிடவில்லை. கோயில்களுக்குப் பொட்டுக்கட்டி விடும் இவ்வழக்கம் வடஆப்பிரிக்கக் கடற்கரையில் சிக்கா (Sicca) வில் உள்ள பொயினிஷியக் குடியிருப்பு, சிரியா நாட்டு “ஹெலியோபோலிஷ்” (Helio Polis) மற்றும் அர்மீனியா, மேற்குச் சிற்றாசியாவில் உள்ள லிடியா (Lydia) மற்றும், கிரேக்கநாட்டின் தெற்கில் உள்ள கோழின்னித் (Cuzinth) நகரிலும் உள்ளது. (குறிப்பு: 23), சிற்றாசிரியாவில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வரை நிலைகொண்டிருந்தது. கடவுள் வழிபாட்டாளராகிய மகளிரை, அக்கடவுளுக்கே மணம் செய்து வைக்கும். தென்னிந்தியாவுக்கே உரியதும், கோயிலோடு தொடர்புடையது மான பிறிதொரு வழக்கம், மெஸ்படோமியாவில் பெரு வழக்காம். ஆனால், இப்பழக்கம் மெஸ்படோமியாவில், துரதிர்ஷ்டவசமாகத் தெய்வத்தன்மை வாய்ந்த பரத்தையர் ஒழுக்கத்திற்குக் கொண்டு சென்றுவிட்டது. பாபிலோனியப் பழங்கதைகளில் வரும் “மர்துக்” (Marduk) என்ற பழம்பெரும் கடவுள், மற்றும் “ஷமஷ்” (Shamash) என்ற ஞாயிற்றுக் கடவுள்கள், இம்மகளிர் வழிபாட்டாளரை மணந்து கொண்டனர்; ஆனால் மக்கள் குழந்தைகளையே பெற்றெடுத்தனர் எனக் கூறப்படுகிறது.
தலைமயிரைக் கடவுள்களுக்கு அர்ப்பணிக்கும் பிறிதொரு வழக்கத்தையும் ஈண்டு நினைவுகூரலாம். (குறிப்பு :24) கி.பி 290-ல் வாழ்ந்திருந்த, உரோம் நகரத்துச் சமயத்தலைவராம் “லுஷியன்” (Lucian) என்பவர், பொய்னிஷியாவில் “பைப்லஸ்” (Byblus) என்ற இடத்தில் உள்ள கோயிலில், ஒருபெண், தன் தலைமயிரை அறவே வழித்தெடுத்து, அக்கோயிலில் குடிகொண்டிருக்கும் கடவுளுக்கு அர்ப்பணித்ததைக் குறிப்பிட்டுள்ளார். அக்கோயில், இடுப்பிலிருந்து அடிப்பகுதி வரையான மீன் வடிவக் கடவுளுக்கு உரியதாக, வியத்தகு நிலையில் குறிப்பிடப்பட்டுளது. அக்கோயிலோடு மீன்கள் நிறைந்த தெய்வத்தன்மை வாய்ந்த குளம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. இது, மத்ஸாவதாரப் பழங்கதையை நினைவூட்டுகிறது (குறிப்பு : 25) மீன் ஒன்று குறிப்பிடப்படும் மெசபடோமிய வெள்ளப் பேரூழிப் பழங்கதை ஒன்றை இத்துடன் இணைத்துக் கொள்க. நான் முன்பே குறிப்பிட்ட, ஓனெஸ் (Oannes) என்ற மனித மீன் பற்றிய பழங்கதை ஒன்றை நம் நினைவுக்குக் கொண்டு வந்தால், இவை அனைத்தும், தொல்பழங்கால உலகத்துச் சமய முறைகளில் இந்தியச் செல்வாக்கு ஓங்கியிருந்ததை உணர்த்தும். மீன் வழிபாட்டு நெறி, இந்தியாவில் பெரு வழக்கில் இருந்தது. இந்திய நாட்டிலிருந்து வெளிநாடு சென்று குடியேறியவர்கள். இவ்வழிபாட்டு நெறியையும், தங்களோடு, அத்தொலை நாடுகளுக்குக் கொண்டு சென்றனர். நாம் எடுத்துக்கொண்ட பொருள் குறித்த ஆய்வுக்குத் திரும்பினால், கிரேக்க நாட்டுப் பழம்பெரும் நகரங்களில் ஒன்றான அக்ரோ நகரத்து, “அர்கிவ்” (Arigive) மகளிர் உரோமர்களின் அறிவு ஆற்றல் கடவுளாம் “ஏதெனெ” (Athene) என்ற கடவுளுக்குத் தம் திருமணத்திற்கு முன்னர்த் தம் தலைமயிரைத் தந்துள்ளனர். தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதற்காகத் தங்கள் தலைமயிரைத் தாங்கள் வழிபடும் கடவுள்களுக்குக் கொடுக்கும் வழக்கம், திருப்பதி, சுவாமிமலை, வைத்தீஸ்வரன் கோயில், மற்றும், பல இடங்களில் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மணமாகா மகளிர், மணமான மகளிர், ஆண்சிறார்கள், இவ்விரதத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
இன்றும், நம் வழக்கத்தில் உள்ளதாம். திரெளபதி அம்மனோடு, தடையின்றித் தொடர்புபடுத்தப்படுவதும், சிற்றாசியாவின் தெற்கில் உரோம் நாட்டுப் பழம்பெரும் நாடாம் “கப்படோகா” (Cappadacia) வில் உள்ள, திங்கள், மற்றும் கொடுவிலங்கு வேட்டைக் கடவுளாம் ‘ஆர்டெமீஸ்’ (Artemis) என்ற கடவுளின் வழிபாட்டுக்கு நிகரானதுமான நெருப்பு மிதித்தல் பற்றிக் காண்போம்.
அடுத்து, நாக வழிபாட்டை நாம் காண்கிறோம். அது. தொல்பழங்கால நாகர்களின் குலச்சின்னம். (குறிப்பு: 26) நாகத்தைச் சிவனோடும், கந்தனாம் முருகனோடும் தொடர்புப்டுத்துவது, நாகரீக முதிர்ச்சி அற்ற காலத்துச் சமய வழிபாடாம். பழைய செய்தியை நினைவூட்டுவதாம். தென்னிந்தியாவில், நாகக்கல் என்ற வடிவில் இன்றும் வழிபடுகிறோம். அவ்வழிபாட்டு நெறியில், பல்வேறு வகைகள் உள்ளன. சில கற்கள். ஒரே நாகம் நின்ற நிலையில் உள்ளன. மற்றவற்றில் இரு நாகங்கள் தமக்குள் பின்னிக் கொண்டிருக்கின்றன. ஒரு கோயிலில் அல்லது தெய்வத்தன்மை வாய்ந்ததாகக் கருதப்படும் மரம் பொதுவாக, அரசு அல்லது வேம்பு மரத்தடிகளில், கூட்டமான நாகக்கற்கள் காணப்படும். தென்னிந்தியாவில் இது பெருவழக்காம் என்றாலும், மலபாரில் அதனினும் பெரு வழக்காம். அது நிலத்தை வளப்படுத்தும் வழிபாட்டு நெறியோடு தொடர்பு படுத்தப்படுகிறது. நாகக் கடவுளை முறையாக வழிபட்டால், மகவீனாத மலடிப் பெண், வயிற்றில் குழந்தையோடு பெருத்து விடுவாள் என்ற நம்பிக்கை இன்னமும் இருக்கிறது. சிந்துவெளி நகரங்களில், வண்ணம் தீட்டப்பெற்ற மட்பாண்டங்கள், கல்வெட்டுப் பலகைகள், மற்றும், களிமண் தாயத்துகளிலும், ஊர்வனவாகிய பாம்பின் பிரதிநிதிகள் காணப்படுகின்றன. இந்நாக வழிபாடு, தொல் பழங்காலக் கிரீட் நாட்டில் பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட கடவுள் வழிபாட்டு நெறியாம். இது, இரட்டைக் கோடரிச் சின்னத்தோடு தொடர்புடையது.
தென்னிந்தியாவில் நிலவும், பிறிதொரு தொல்பழங்கால வழிபாட்டு நெறி, சிற்றாசியாவிலும் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியிலும் பெருமளவில் இருக்கும், திங்களை வழிபடுதலாம், (குறிப்பு: 57) இருக்குவேத சமயம், முக்கியமாக, இயற்கையை வழிபடுதலே எனினும், திங்கள் வழிபாடு, ஒரு வழிபாட்டு நெறியாக முக்கியத்துவம் தரப்படவில்லை. ஆனால், தென்னிந்தியாவின் வழிபாட்டுக் கொள்கை முற்றிலும் வேறுபட்டது. திங்கள் வழிபாடு, பழைய சங்க இலக்கியங்களில், சிறப்பான இடம் கொடுக்கப்பட்டிருப்பதோடு, சிலப்பதிகாரம், பின்வரும் தொடர்களிலேயே தொடங்குகிறது.
- “திங்களைப் போற்றுதும்; திங்களைப் போற்றுதும்;
- கொங்குஅலர்தார்ச் சென்னி, குளிர்வெண்குடை போன்று, இவ்
- அங்கண் உலகளித்தலான்”
தமிழ்நாட்டின் தலைநகர்கள் ஒவ்வொன்றிலும், திங்களுக்கென்றே தனிக்கோயில் (நிலாக்கோட்டம்) இருந்தது. திங்கள் வழிபாட்டு நெறியின், நினைவுச்சின்னம், வளமும் வன்மையும் கொடுப்பதாக நம்பி, மூன்றாம் பிறைத் திங்களைக் காணும் நிகழ்ச்சியில் இன்றும் இருக்கிறது. சோதிடம் மற்றும் வான்கோள் கணக்குகளும், இன்று. “சாந்திரமான” (Candramana) என அழைக்கப்படும் முறையிலேயே உளது. மேலும் வியப்பிற்கு உரியது என்னவென்றால் மாதம் என்பதன் பெயரே, சந்திரனைக் குறிக்கும், திங்கள் என்பதாம். பண்டைய தமிழ் நாகரீகத்தின் எழுத்தாளர்கள், திங்கள் கடவுளை வழிபட்டனர் என்றாலும், அவர்கள், சமஸ்கிருதப் பண்பாட்டோடு தொடர்பு கொள்ளும்வரை எகிப்தியர்களைப் போல, சந்திர கிரகணம் பற்றிய அறிவினையோ, அதை ஒரு நாளகக் கருதுவதையோ அறிந்திலர். பாபிலோனிய நாகரீகத்தில், ஞாயிற்றைக் காட்டிலும், திங்களுக்கே சிறப்பான இடம் அளிக்கப்பட்டது. (குறிப்பு : 28) பாபிலோனிய ஆண்டுக் கணக்கு, திங்கள் முறைக்கே உரியது. திங்களைக் குறிக்கும் ஆப்பு வடிவ குறி “30” என்பதாம். காளை வழிபாடு, பெண்களை அவர்களின் கற்பிற்காகப் பெருமை செய்தல், பெண்களைக் கோயில் பணிக்கென விடுவது போலும், பாபிலோனியப் பழக்க வழக்கம் மற்றும் சமயக் கோட்பாடுகளை இன்டயில் குறிப்பிடுகின்றேன். மேலே கூறியவற்றுள் பெரும்பாலன. இஸ்ரேல் நாட்டு மொழியாம் ஹீப்ரு இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன. பாபிலோனியப் பண்பாடு, இன்றைய இஸ்ரேல் நாடு எனக் கருதப்படும் ஜோர்டானுக்கு மேற்கிலும், சிரியாவுக்குக் கிழக்கிலும் இருந்த கேனானுக் (Canaan) குப் பரவியது; அல்லது இயூப்ரடஸ் ஆற்றங்கரையில் உள்ள சுமேரிய நாட்டுப்பழம்பெரும் நகரமாகிய “உர்” (Ur) நரகத்திலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவில், எகிப்துக்குத் தெற்கில் உள்ள எதோப்பிய நாட்டின்மேற்கில் உள்ள ஹாரன் (Haran) வழியாகக் கேனனுக்குக் குடி பெயர்ந்தது என நம்பப்படுகிறது. (குறிப்பு : 29) மேலும், கிரேக்க பழங்கதைகளோடு பெருத்த ஒருமைப்பாட்டினையும் நாம் காண்கிறோம். இந்நம்பிக்கைகள் எல்லாம், சிற்றாசியாவிலிருந்து வந்தன என்றும் நம்பப்படுகிறது. இவ்வகையில், இந்தியாவிலிருந்து பாபிலோனியாவுக்கும், பாபிலோனியாவிலிருந்து கிரேக்கத்திற்கும். கேனனுக்கும் மக்கள் குடிபெயர்ச்சி இருந்தது. இன்று அழிவுறாமல் நம்மோடு நிலைகொண்டிருக்கும். இவ்வழிபாட்டு நெறிகளுக்கெல்லாம், தென்னிந்தியாதான் தாயகம் என்பதையும், அவ்வகையில், இவை அடிப்படை ஒருமைப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்பதையும், தென்னிந்தியாவின் உயிரோட்டமான பண்பாடு என்பதையும் எடுத்துக்காட்ட விரும்புகின்றேன்.
தென் இந்தியாவிலும், ஏனைய பிற நாடுகளிலும், தொல்பழங்காலச் சமய நெறியில், காளை வழிபாட்டு நெறி சிறப்பான இடம்பெற்றுள்ளது. சிவனின் வானமாகக், காளை, காலமெல்லாம் வழிபடப்பட்டு வருகிறது. நம் விழாக்களில் ரிஷபவாகன விழாவைச் சிறப்புடையதாக இன்றும் கொண்டாடுகிறோம். மோகன்ஸாதரோவில் கண்டெடுக்கப்பட்ட இரு தாயத்துகளில் காளை உருவம் ஊர்வலமாக எடுத்துச் செல்வது காட்டப்படுள்ளது. இது பண்டைய எகிப்தில் சமயச்சார்பான ஊர்வலங்களில் விலங்குகளைத் தூக்கிச் செல்வதை நினைவுக்குக் கொண்டு வருகிறது. மக்கள் வழிபாடும் கடவுள் காளை. ஆகவே, சில விழாக்கள் காளையோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. கொல்லேறு தழுவுதல் அவற்றுள் ஒன்று. ஆயர்குலத்தவர். தம் மகளிர்க்கு, மணமகளைத் தேர்வுசெய்யும் ஒரு வழக்கத்தைச் சிலப்பதிகாரம், தனியே குறிப்பிடுகிறது. எவனொருவன் காளைமீது பாய்ந்து, அதை அடக்குகிறானோ அவனே அப்பெண்ணை மணம் கொள்வதில் வெற்றிகொண்டவன். மத்திய தரைக்கடல் தீவுகளில் ஒன்றாகிய கிரீட்டில் (Crete) உள்ள கிண்ணம் ஒன்றில், காளை ஏறுதல் காட்சி பொறிக்கப்பட்டுள்ளது. (குறிப்பு : 31), கிரீட்டன் தீவுப் பழக்க வழக்கங்களுக்கும், தென்னிந்தியப் பழக்க வழக்கங்களுக்கும் இடையில் உள்ள ஒருமைப்பாடு, கிரீட் மீது தென்னிந்தியா ஆக்கம் செலுத்தியது என்ற உண்மையிலிருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியாத அளவு நெருக்கமானதாகும். கிரீட்நாட்டு நாகரீகத்திற்குத் தென் இந்தியப் பழங்குடியினராகிய கிராதர் (Kirata) களே பொறுப்பாவர் எனப் பிறிதோர் இடத்தில் கருத்துத் தெரிவித்துள்ளேன். கிரீட் தன் பெயரை இவ்வினத்திலிருந்தே பெற்றுக் கொண்டது. (குறிப்பு : 32).
எகிப்திய சமய வழிபாட்டு நெறியாகவும் விளங்கிய காளை வழிபாட்டு நெறியோடு நெருங்கிய தொடர்புடையது. பேராற்றலின் படிவமாகக் கருதப்படும் இலிங்க வழிபாடு. (குறிப்பு : 33) மத்தியதரைக் கடல் இனத்தவரிடையே உள்ள பலகிளையினர், இலிங்க வழிபாட்டானராவர். (R.V. Sismadevas VII, 21-5., X 99-3) இலிங்க வடிவம், சிந்துவெளியில் பெருமளவில் கிடைக்கும் கல்லால் ஆன வட்டமும் உருளையும் கொண்டது. தொல்பழங்காலக் கிரீட் நாட்டின், ஆட்சி பூர்வ சமயம், ஒன்று, நிற்கும் நிலையில் உள்ள கற்கம்பம், அல்லது, செதுக்கிச் செய்யப்பட்ட தெய்வீக மரம் ஆகும். கிரீட்டன் மாநிலத்தின் கடவுள் வழிபாட்டு நிலையை இது பிரதிபலிக்கிறது. பண்டைத்தமிழரின் கடவுள், “ஐந்து” எனப்படும் கம்பமாம் என்பது குறிப்பிடத்தக்கது. கம்ப வழிபாடு, ஒரு காலத்தில், இந்தியா முழுவதும் இருந்த ஒன்று. அதனால்தான். பழம்பெருங்காலத்தில் வழிபாட்டு தெய்வமாகக் கருதப்பட்ட கற்கம்பங்கள் மீது, தன் கல்வெட்டுக்களைப் பொறித்தான் அசோகப் பேரரசன், இறந்தார் உடலைப் புதைக்கும் மேடுகளில் நடப்பட்ட புத்தஸ்தூபிகளும், இக்கற்கம்ப வழிபாட்டு நெறியிலேயே அமைக்கப்பட்டன. ஐந்து வடிவம், இலிங்க வடிவமாக, மாறிய பின்னர், பண்டைத் தமிழர், கோயில்களுக்கு முன்னர் த்வஜஸ்தம்பங்களை நட்டு விட்டனர். திருவிழா அல்லது திருமணப் பந்தல் தொடக்கமாக, மூங்கில் கொம்பு அல்லது வேறு மரக்கொம்பு ஒன்றை நட்டு அதற்கு வழிபாடு செய்யும் வழக்கத்தில், இந்த வழிபாடு பிறிதொரு வகையில் இன்னமும் இருப்பதைக் காணலாம். மாற்று வடிவில் செய்யப்பட்ட கொம்பு வழிபாடு, காளை வழிபாட்டை நினைவுபடுத்துகிறது. கிரீட்டில் வழக்காற்றில் உள்ள, கடவுள் அல்லாத அதன் பரிவாரங்களின் வழிபாடு, தென் இந்தியாவில், இன்றும் வழக்காற்றில் உள்ள வழிபாட்டு நெறிக்கு நிகரானதாம். சாம்பிராணி போலும் மணப்புகைகள் எழுப்பப்படும். சங்கு ஊதப்படும். யாழும், குழலும், தெய்வ இசையாக இசைக்கப்படும். மணப்பொருள் எரிக்கப்படும்போது, கைமணி அடிக்கப்படும். அதைத் தொடர்ந்து தாளத்திற்கேற்ப, தேவதாசிகள், அவ்விலிங்கத்தின் முன் ஆடல் புரிவர்.
தாய்த் தெய்வவழிப்பாட்டு நெறியாளரால் மேற்கொள்ளப்பட்ட தாய்வழி உரிமை முறை. பழம்பெறும் நாகரீகத்தின் பிறிதொரு கோட்பாடாம். (குறிப்பு : 34) அது. நாட்டின் ஏனைய பகுதிகளில் நிலவும் மக்கள்தாயம் என்பதற்கு எதிர்மறையானதும், மலபார் நாட்டில் நிலவுவதுமான மருமக்கள் தாயம் ஆகும். மருமக்கள் தாயம், ஒருகாலத்தில், தென்இந்தியா, தென்ஐரோப்பா, சிற்றாசியா, மெசபடோமியா மற்றும், எகிப்து நாடுகளில் இருந்தது. தென் இந்தியாவையும், உலகத்தின் தொல்பழங்கால ஏனைய பகுதிகளையும் இணைக்கும் இணைப்பாக இருந்தது இதுவும் ஒன்று. எகிப்தில் உள்ளது போலவே, கிரீட் நாட்டிலும், குடும்ப வாரிசு, பெண்வழியே ஆகும்.
எடுத்துக்கொண்ட ஆய்வுக்கு ஆன முடிவை உடை வகையில் காணமுற்படினும், இங்கும், மறுக்க இயலா ஒருமைப்பாட்டினைக் காணலாம். கிரீட் மற்றும் எகிப்து நாடுகளில், ஆடவர் இடுப்பு ஆடையை மட்டுமே உடுத்தியிருந்தனர். மேலும் அவர்கள். மிதியடி, மற்றும் மிதிகால் மறையும் அடிபுதை அரணங்களை அணிந்திருந்தனர். பொதுவாகத் தலையின் பின்பக்கமாக இடுப்புவரை தொங்கும் நீண்ட தலைமயிரைக் கொண்டிருந்தனர். தலைமயிரை ஒப்பனை செய்வதில், வியத்தகு முறை ஒன்று கிடைத்துள்ளது. ஒக்கூர்மாசாத்தியார் என்ற பெண்பாற் புலவர் ஒருவர், நாடாளும் அரசன் அழைக்கத் தன் மகனைப் போர்க்களத்துக்கு அனுப்புகிறாள். மகனின் நீண்ட தலைமயிரை, ஒப்பனை செய்யும்போது, அம்மயிரை ஒன்று திரட்டி, யூபிரடஸ் ஆற்றுப்பள்ளத்தாக்கு, தொல்பழம் நிலப்பகுதியாகிய “சுமர்” (Sumer) நாட்டு முறைப்படி, முடித்து அனுப்பி இருக்கிறாள். மோகன்லாதரோ, பல்வேறு வகையான தலைமயிர் ஒப்பனையைக் காட்டுகிறது. என்றாலும், அவை அனைத்தும் நீண்டு தொங்கும் மயிர் உடையனவே. புறநானூறு அளிக்கும் அகச்சான்று, கிரீட் மற்றும் எகிப்து நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதும், பண்டைத் தமிழர்களின் வழக்கத்தில் இருந்ததுமான, வெறுக்கப்பட்ட மயிர்முடியாகும் என்பதைக் காட்டுகிறது.
வகையால் எண்ணில் அடங்காதனவாகிய பழக்க வழக்கம் மற்று இன்பக் களியாட்டங்களில் இங்கு ஒன்று அல்லது இரண்டைக் குறிப்பிடுகின்றேன். பழக்கப்பட்ட உயிரினங்களில் தொல்பழங்காலத்தைச் சேர்ந்தது, முருகனின் கொடியாகிய மயில் ஆகும் (குறிப்பு: 36), கிரேக்கக் கடவுளாகிய அப்பாலோவின் சின்னமும் அதுவே. அப்பாலோவை முருகனாக அடையாளம் கானலாமா? தென்னிந்திய வரலாற்றாசிரியர் ஒருவர் இக்கருத்துடையவராவர். கிழக்கு ஆப்பிரிக்கா, மற்றும், தென்ஆப்பிரிக்கக் கிழக்குக் கரையை ஒட்டி உள்ள மடகாஸ்கரிலும், பழக்கப்பட்ட காட்டுக்கோழி காணப்படுகிறது. காட்டுக்கோழி பழக்கப்படுத்தப் பெற்ற காலமாம், பெருநிலப்பரப்பு கடலுள் ஆழ்ந்து போன, நிலஇயல் காலத்தை, நினைவூட்டுகிறது. இது, தமிழ்வேலன் குறித்த பழங்கதையில் சில அடிப்படையைக் கொண்டதாகும். (குறிப்பு:37),
இன்பக் களியாட்டங்கிளில், கோழிப்போர் தென்னிந்தியாவில் சிறப்பானது. மோகன்ஸாதரோவில் கண்டெடுக்கப்பட்ட தாயத்தின் மீதான முத்திரையில், இரு காட்டுக்கோழிகள் சண்டை இடுவதாகக் காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து, திருவாளர் மக்கே (Mackay) அவர்கள், சிந்துவெளி மக்களிடையே, கோழிச்சண்டை, ஒரு விளையாட்டாம் எனக்கூறுகிறார்.
மேலே எடுத்துக் கொள்ளப்பட்ட ஆய்வு, முறையற்றதாக, மனம்போன படியினதாக இருப்பினும், அது தன்னளவிலேயே தென்னிந்தியப்பண்பாட்டின் அடிப்படை ஒருமைப்பாட்டை நிலைநாட்டவல்ல நல்ல சான்று ஆகும். கால அளவை, இடையறவு படாமல், குறித்து வைக்கிறது. அது தொடர்புகொண்ட, வெளிநாட்டுப் பண்பாடுகளில் மிகச்சிறந்தனவற்றைத் தன்னியலதாக்கும் அதே நிலையில் அது, இன்னமும் உயிர் ஓட்டம் வாய்ந்த ஆற்றலாகவே திகழ்கிறது. தொல்பழங்கால, இடைக்கால, மற்றும் இன்றைய உலகில் அதன் இடம் ஒப்புயர்வற்றது. சில சமயம் உலகத்தவர் கருத்தைக் கவரக்கூடியது. அது, தன் சமய நெறியாலும், மொழியாலும், தொல்பழம் உலகத்தை, அதன் கலையைக் கலைத்தொழிலை நாகரீகம் உடையதாக்கி உளது. இடைக்காலத்தில், அது தான் பெற்ற வெற்றியோடு தன் பண்பாட்டுப் பேரொளியைப் பரப்பிற்று. இன்றும் கூடச் சென்னை வாசி, பணியாளனாயினும், அரசுப் பணியாளனாயினும், உலகெங்கும், தன்னிடம் உள்ள சிறந்தன அனைத்தையும், மக்கள் சமுதாயத்திற்கு வழங்குவோனாக உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றான். நல்லகாலமாக, இன்றும் அழியாது நம்மோடு இருக்கும் இப்பழம்பெரும் பண்பாடு, நாளுக்குநாள், மேலும் மேலும் வலுப்பெறுமாக!