உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சிறு பத்திரிகைகள்/இன்னும் சில பத்திரிகைகள்⁠

விக்கிமூலம் இலிருந்து

52. இன்னும் சில பத்திரிகைகள்


சிரமங்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரிட்டாலும் சிறு பத்திரிகைகள் ஆரம்பிக்கிறவர்கள் அங்கங்கே, அவ்வப்போது, உற்சாகமாகப் பத்திரிகைகளை ஆரம்பித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். உண்மையைத் தேடுவதும், உண்மை தெரிந்து சொல்வதும் இவர்களில் பலருடைய லட்சியமாக இருக்கிறது.

இந்த ரீதியில், ‘உண்மையே நமது தோழனும் கேடயமும் ஆகும்’ என்று அறிவித்தபடி ‘புதிய மனிதன்’ தோன்றி வளர்ந்து வருகிறது.

‘மூடிய சருகுகளைப் புறந்தள்ளிவிட்டு மண்ணில் ஒரு முளை, சூரியனுக்கு முகம் காட்டுகிறது’ என்று கூறிக்கொண்டு, புதிய மனிதன் 1985 மே மாதம் பிறந்தது. ஆசிரியர் சி. மதிவாணன். சிறப்பாசிரியர் கவிஞர் இன்குலாப்.

புதிய மனிதனுடைய ’கடமைகள் குறுகிய சுவர்களை உடைத்துப் பரந்த வெளி யில் தனது கரங்களை நீட்டுவது. ஒடுக்கப்பட்ட மானுடத்தை ஆரத் தழுவுவது...

ஒரு சிலருக்கு மட்டும் இனிக்கும் கேக்குத் துண்டுகளை வழங்கும் வேலையைப் புதிய மனிதன் செய்யமாட்டான். உழைக்கும் மக்களின் பண்பாட்டுப் பசி தீர்க்கும் சமையற்காரனாகப் புதிய மனிதன் பணிபுரிய முயல்வான்.

ஆலைச் சங்குகளின் அலறலில் மலினப்பட்ட மானுட ஓலத்தை இடிகளாய் நிமிர்த்தவும்,

களத்துமேடுகளில் சிந்தப்படும் கண்ணிர்த் துளிகளைத் தீப்பொறி களாய் உயர்த்தவும்,

இளைஞர் உதடுகளை ஆக்கிரமிக்கும் ஆபாசச் சீட்டிகளை எரிக்கும் உரிமைக் கொழுந்துகளை நிறுத்தவும்,

குடும்பச் சுவர்களுக்குள் புழுங்கும் பெண்மையின் முகங்களில் சமுதாய விடுதலைத் தென்றலை எழுதவும்,

புதிய மனிதன் முயற்சி செய்வான்.’

இப்படி நாவலித்தது அது தனது முதல் இதழில். மேலும் அது அறிவித்தது—

’இவனது இலக்கு—விடுதலை.

விடுதலைக்குப் போராட அனைத்து மக்களையும் புதிய மனிதன் அறைகூவுவான். விடுதலைக்கு வித்திடும் சிந்தனைகளை எல்லாம் திசைதோறும் கை நீட்டி புதிய மனிதன் வரவேற்கிறான்.

புதிய மனிதன் ஒரு கலை இலக்கியவாதி ஆகையால், வரும் சிந்தைனைகள் கலை இலக்கியமாக இருக்க வேண்டும் என்பதே இவனது விருப்பம்.

மக்களுக்காகப் படைப்பவர்களே ! நீங்கள் மக்கள் விரும்புகிற, மக்களுக்குப் புரிகிற கலை இலக்கியமாகப் படையுங்கள்’ என்று கூறியது.

புதிய மனிதன் ஒவ்வொரு இதழின் அட்டைச் சித்திரமும் அமைப்பும் கவிதை அழகோடு கருத்து நயம் செறிந்த ஓவியமாகத் திகழ்கிறது. இன்குலாப், இளவேனில், செ. கணேசலிங்கன், பாவண்ணன் கதைகள், கட்டுரைகள் வந்துள்ளன. பூமணி, ஆர். சூடாமணி கதைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. வண்ணச்சிறகு, தமிழன்பன், பாரதிவண்ணன், பாவண்ணன் கவிதைகள், எஸ். சண்முகம் மொழிபெயர்த்துத் தருகிற ‘கறுப்புக் கவிதைகள்’ இந்தப் பத்திரிகைக்கு உணர்வூட்டுகின்றன.

சிந்திக்கத் தூண்டுகிற மற்றும் பல விஷயங்களும் உண்டு.

உங்கள் நூலகம் : ஒரு வித்தியாசமான முயற்சி. புத்துலகம் காண நல்ல தரமான நூல்களை வெளியிட்டு வரும் நியூசெஞ்கரி புக் ஹவுஸ், ’நியூ செஞ்சுரி வாசகர் பேரவை’ அமைத்திருக்கிறது. அதன் சார்பில் உங்கள் நூலகம் என்ற இரு மாதங்களுக்கு ஒருமுறை வெளிவரும் இதழ் ஒன்றை அது பிரசுரிக்கிறது.

இதன் முதல் ஏடு 1985 ஏப்ரலில் வெளிவந்தது.

’ஷேக்ஸ்பியரும் ஷெல்லியும் விட்மனும் ஜாக் லண்டனும் கதேவும் டிரீசரும் தாந்தேவும் வி க் டர் ஹீகோவும். இப்சனும் டால்ஸ்டாயும் கார்க்கியும் தாகூரும் பாரதியும் பிரேம்சந்தும் சிறந்த குறிக்கோளுக்காகவும் உயர்ந்த பண்பாட்டுக்காகவும் பணியாற்றினார்கள். இலட்சிய நாட்டம், ஜனநாயகம், மனிதநேயம் என்னும் பண்பாடுகளை வளர்க்கும் சிறந்த மரபை உருவாக்கித் தந்துள்ளார்கள். இந்த மரபினை உங்கள் நூலகம் வளர்த்துச் செல்லும்' என்று அறிவித்த அவ் ஏடு தனது நோக்குகளையும் அச்சிட்டது.

அவை யாவன—

1. வாழும் சோஷலிச உலகத்தின் சாதனைகளை எடுத்தியம்பும் அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், விஞ்ஞானம் பற்றிய நூல்களை அறிமுகம் செய்தல், ஆய்தல்.

2. நியூ செஞ்சுரி நூல் வெளியீட்டக நூல்களையும் இந்திய நாட்டின் பல்வேறு பதிப்பகங்கள் வெளியிடும் நூல்களையும் அறிமுகம் செய்தல், சிறந்தவற்றைத் தக்காரைத் கொண்டு திறனாய்வு செய்தல்.

3. கலைஞர்கள், கவிஞர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், திறனாய்வாளர்கள் ஆகியோரை நேர் கண்டு உரையாடல், அவர்தம் நூல்களை அறிமுகம் செய்தல் ஆய்தல்.

4. வளரிளம் கலைஞர்களையும் படைப்பாளர்களையும் அறிமுகம் செய்தல், ஊக்குவித்தல்.

5. இலக்கியக் குறிப்புகள், விமர்சனக் குறிப்புகள், கட்டுரைகள் ஆகியவற்றைத் தக்காரையும் வல்லுநரையும் கொண்டு எழுத வைத்தல்.

6. நூலாய்வாளர்கள் திறனாய்வு நோக்குப் பெறவும், சொந்தமாக வீடுகளில் நூல் நிலையம் அமைக்கவும் உதவுதல்.

இதற்கேற்ப புத்தக உலகம் சம்பந்தமான தகவல்கள், கட்டுரைகள், புத்தக விமர்சனங்கள் முதலியவற்றை ’உங்கள் நூலகம்’ வெளியிட்டு வருகிறது.

ஆர்வத்தின், உற்சாகத்தின் செயல்பாடுகளாக அநேகம் சிறு பத்திரிகைகள் தோன்றியிருக்கின்றன. எழுத வேண்டும் என்ற உணர்வோடு கையெழுத்துப் பத்திரிகையாக ஆரம்பித்து, பின்னர் அச்சுப் பத்திரிகையாக மலரும் முயற்சிகள் பல உண்டு.

அவற்றிலே ஒன்று ’கவிக்குயில்’ என்ற மாத வெளியீடு.

கவிஞர் டாக்டர் ஆனைவாரி ஆனந்தன் முதலில் ’மகரந்தம்’ என்ற கையெழுத்துப் பத்திரிகை தொடங்கினார். ’சூல். 1. தாது-1’ என்று கணக்கிட்டு எழுதிய அவர் 1983 செப்டம்பரில் அதை ’தட்டச்சு உருட்டுப்படி’ (டைப்ட் சைக்ளோஸ்டைல் ) ஏடு ஆக மாற்றினார். அடுத்து அதன் பெயரை ’சுகந்தம்’ என்றாக்கி டைப் பத்திரிகையாக வெளியிட்டார். 1983 நவம்பரில் ‘ககந்தம்’ அச்சுப் பத்திரிகையாக வளர்ச்சி பெற்றது. ஆசிரியர் : சி. பன்னீர்செல்வம். சிறப்பாசிரியர் : கவிஞர் ஆணைவாரி ஆனந்தன்.

ஆரம்பம் முதலே இவர்களுடைய பத்திரிகையின் குறிக்கோள்

‘ஊழலிலா ஓர் புதிய
சமுதாயம் வேண்டும்,
உழைப்புக்கும் உண்மைக்கும்
மதிப்பிருக்க வேண்டும்;
நீதிமுறை நேர்மைக்கு
வாழ்வளிக்க வேண்டும்,
நிம்மதியே பெருஞ்செல்வம்
நிலைநாட்ட வேண்டும் !‘

‘சமுதாயத்திற்குப் பயன்படும், பாடம் புகட்டும், பண்பாடு காக்கும், தன்மானப் படைப்புகளை‘ சுகந்தம் விரும்பி வரவேற்றது. ‘சுகம்-1 மணம்-1‘ என்ற ரீதியில் எண்ணிக்கை வளர்த்த அது செய்திகள், சிந்தனைகள், துணுக்குகள், மாணவர் படைப்புகள், வாசகர் கடிதங்கள், கேள்வி- பதில் முதலியவற்றை வெளியிட்டது. ‘ஊர்ச்சூழல்‘ என்ற தலைப்பில் கிராமியப் பிரச்னைகளை அலசியது. அட்டைப்படமும் உண்டு.

இப் பத்திரிகை வெளியீட்டாளர்கள் மீண்டும் பெயர் மாற்றம் செய்தார்கள். 1984 டிசம்பர் முதல் இவர்களுடைய பத்திரிகை ‘கவிக்குயில்‘ என்ற பெயரைப் பெற்று, குயில்-1, கீதம்-1 என்று கணக் கிட்டு வளர்ந்து வருகிறது.

நடந்தவை, நடப்பவை என்று செய்திகள் இடம் பெறுகின்றன. ‘சமுதாய வீதியிலே ஊர்ப் பிரச்னைகள் கவனிக்கப்படுகின்றன. மகளிர் இயல் என்று பெண்கள் பகுதி, ‘நல்ல பெண்மணி‘ அறிமுகம், ‘நல்லவர் வல்லவர்‘ பற்றிய குறிப்பு, அறிவியல் சிந்தனைகள், ‘தத்துவப் பாதையில்‘ என்று சிந்தனைக் கட்டுரை, ‘கலைப்பூங்கா‘ வில் சினிமா விஷயங்கள், ‘நூல் மணம்‘ என்று புத்தக மதிப்புரை இப்படிப் பலப்பல பகுதிகள். கவிமலர்கள் என்ற தலைப்பில் புதுக் கவிதைகளும், ஆனைவாரி ஆனந்தன் எழுதும் கவிதைகளும் தொடர்கதையும், வேறு ஒரு தொடர்கதையும் சிறுகதையும் இதில் வருகின்றன. ‘உடல் நலம் காப்போம்‘ என்று ஆரோக்கியக் குறிப்புகளும் அவ்வப்போது இடம் பெறுகின்றன.

மு. விவேகானந்தன் என்ற எழுத்தாளர், ரசிகர், ‘கவிக்குயில்‘ வளர்ச்சிக்கு உதவி புரிந்து வருகிறார்.

‘வழக்கியல்‘ என்று சட்ட ஆலோசனைகள் கூறும் ஒரு பகுதியும், ‘நமக்குள்ளே‘ என்ற கேள்வி பதில் பகுதியும் கவிக்குயிலில் உள்ளன.

கறுப்பு மலர்- மாத இதழ். ‘சமூக மாற்றத்தில் கருத்தாய் இருக்கும் மலர். உழைக்கும் மக்களின் உறவு மலர். சமுதாயப் பிரச்னைகளை அலசுங்கள்‘ என்று அறிவித்தபடி வருகிற இச்சிறு பத்திரிகையின் பல இதழ்கள் ‘சுட்டி‘ பத்திரிகையின் அளவிலும் தன்மையிலுமே அமைந்துள்ளன.

கவிஞர் பாரதிப்ரியா, இளைஞர் இலக்கிய வட்டம் அமைப்புக்காகத் தயாரிக்கும் தனிச்சுற்றிதழ் ‘கறுப்பு மலர்‘. மக்களுக்கான மக்கள் இலக்கியம் படைப்பது இளம் எழுத்தாளர்களை, கவிஞர்களை ஊக்குவிப்பது மாதம் ஒரு கருத்தரங்கம், கவியரங்கம் நடத்துவது; சமூகப் பிரச்னைகளை ஆராய்வது—அவற்றுக்கான தீர்வை நோக்கி விவாதிப்பது, புதுப் படைப்பாளிகளை வரவேற்பது; அவர்கள் புதுமைப் படைப்புகளை படைக்கத் தூண்டுவது; மக்கள் மத்தியில் விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்துவது மக்கள் இலக்கியத்தின் அருமையை மக்களுக்கு உணர்த்துவது; சாதி மத அமைப்புகளைச் சாராதிருப்பது, மடமைகளை எதிர்ப்பது—

இவை இளைஞர் இலக்கிய வட்டத்தின் நோக்கங்கள். இம்முற்போக்குச் சிந்தனைகள் ‘கறுப்பு மலர்‘ பிரசுரிக்கும் கவிதைகளிலும் கதை கட்டுரைகளிலும் ஒலி செய்கின்றன. இச்சிற்றேடு 1983 மே முதல் வந்து கொண்டிருக்கிறது.

சமுதாயப் பார்வையுடன், முற்போக்குச் சிந்தனைகளையும் படைப்புகளையும் வரவேற்றுப் பரப்பும் நோக்குடன் தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் சிறுசிறு பத்திரிகைகளை உழைக்கும் தோழர்கள் உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறார்கள். இப்படிப்பட்ட முயற்சிகள் சில பொருளாதார பலம் இன்மையால் வெகுவிரைவிலேயே பாதிக்கப்படுகின்றன. நல்ல விஷயங்கள் கிடைக்காத காரணத்தால் சில பிரசுரத்தை நிறுத்திக் கொள்கின்றன. வேறு சிலவற்றில் இவ்விரு தடங்கல்கள் இல்லை என்றாலும்கூட, பத்திரிகை நடத்த முற்படுகிற தொழிலாளித் தோழர்கள், பணத்துக்காக உழைக்க வேண்டியிருக்கிற வேலைகளையும் பத்திரிகை பணியையும் தொடர்ந்து செய்வதில் மிகுந்த சிரமங்கள் இருப்பதை உணர்ந்து, பத்திரிகையை நிறுத்திவிடத் தீர்மானித்திருக்கிறார்கள்.

இவ்விதம் முடிவு கட்ட வேண்டிய அவசியத்துக்கு உள்ளானவர் களில் ‘வழிகள்‘ என்ற பத்திரிகை நடத்திய தோழர்களும் சேர்கிறார்கள்.

கோவை மாவட்டம், பல்லடம் அருகில் உள்ள வடுகபாளையம் என்ற ஊரிலிருந்து வந்தது ‘வழிகள்‘ முற்போக்குச் சிற்றிதழ். நவயுகனும் அவர் நண்பர்களும் சேர்ந்து நடத்திய இச்சிற்றேடு ஒன்பது இதழ்களோடு தனது சுற்றுலாவை முடித்துக்கொண்டது.

‘வாழ்க்கை என்பது சிறைச்சாலை. இதில் நமக்கு இன்பமளிக்கப் பாடிவரும் பறவைகள் புத்தகங்கள் என்ற கருத்துடன் அவர்கள் இப்பத்திரிகையை நடத்தி வந்தார்கள். ‘வழிகள்‘ தனது பயணத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு விடுத்துள்ள ஒன்பதாவது இதழில் காணப்படும் வரிகள் இவை :

‘சிறு பத்திரிகை நடத்தினால் நிறையப் பணம் இழக்கவேண்டும் என்பது நாங்கள் அறியாததல்ல. இழப்பதற்குத் தயாராக இருந்ததினாலேயே வழிகள் தொடர்ந்து வெளி வர முடிந்தது; வழிகள் நிறுத்தப்படுவதற்குக் காரணம் பொருளாதாரப் பிரச்னை இல்லை.

எங்களுக்கு இருக்கும் மிகக் குறைந்த ஓய்வு நேரத்தில் இரு மாதங்களுக்கு ஒரு முறை கூட இதழைச் சிறப்பாக வெளியிட முடியவில்லை. மனநிறைவு இலலாமல் கம்மா வெறுமனே இதழை வெளியிட்டுக் கொண்டிருக்க விருப்பமில்லை.

இத் தோழர்களின் சிந்தனைத் தெளிவும் தீர்க்கமான முடிவும் பாராட்டப்பட வேண்டியவை. ‘இதழைச் சிறப்பாக வெளியிட முடியவில்லை‘ என்று சுய விமர்சனம் செய்துகொண்டு பத்திரிகையை நிறுத்துவதற்கு ஒரு துணிவு வேண்டும். .

பத்திரிகை நடத்தும் ஆசையோடு முற்படுகிறவர்களுக்கு இப்படிப்பட்ட சிந்தனைத் தெளிவும் சுய விமர்சன நேர்மையும், மனத்துணிவும் இல்லாத காரணத்தினாலேயே பல சிற்றேடுகள் தரம் எதுவுமின்றி, வெகு சாதாரண ஏடுகளாகவும், வணிக நோக்குப் பத்திரிகைகளின் மசாலாத்தனங்களைக் காப்பி அடித்தபடி சாரமும் சத்தும் இல்லாத அச்சுத் தாள்களாகவும் வந்து கொண்டிருக்கின்றன. அந்த விதமான முயற்சிகளினால் யாருக்கும்- பத்திரிகை நடத்துகிறவர்களுக்கும், பத்திரிகை படிப்பவர்களுக்கும்தான், எந்தவிதமான பலனும் ஏற்படுவதில்லை. இதைச் சிறு பத்திரிகைகள் நடத்த முன்வருகிறவர்கள் கருத்தில் கொள்வது நல்லது.