தமிழில் சிறு பத்திரிகைகள்/கணையாழி⁠

விக்கிமூலம் இலிருந்து

53. கணையாழி


‘கணையாழி‘ 1965—ல் புதுடில்லியில் தோன்றியது. டில்லியிலிருந்து வெளிவரும் ஒரே தமிழ் இலக்கியப் பத்திரிகை என்ற தனிப் பெருமை அதற்கு வாய்த்தது.

டில்லியில் வசித்த தமிழ் எழுத்தாளர்கள் அதில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் அதிகமாக எழுதினார்கள். டில்லி நகரச் சூழலை, அங்கு வாழ்கிற மக்களின் போக்குகளை, அரசியல்வாதியின் தன்மைகளை விவரிக்கும் கதைகளும் தொடர்கதைகளும் கணையாழிக்கு ஒரு தனித்தன்மை சேர்த்தன. பிறகு அது சென்னைக்கு வந்தது.

1965லிருந்து கணையாழியின் வளர்ச்சியைக் கணித்து ஒரு வாசகர் எழுதிய விரிவான கடிதம் 1984 செப்டம்பர் மாதக் கணையாழியில் ‘கணையாழிக்கு 20‘ என்ற தலைப்பில் பிரசுரமாயிற்று. நேர்மையான அந்த மதிப்பீட்டை இங்கு எடுத்து எழுதுவது பொருத்தமாக இருக்கும்.

“65 லிருந்து 70வரை டெல்லி வட்டார அறிவுஜீவிகளுக்காக நடத்தப்பட்டு வந்த கணையாழி தமிழ்ப் பிராந்திய மக்களையும் எட்டும் அளவிற்கு 70களில் தன்னை மாற்றிக் கொண்டது...

கணையாழி தொடர்வதற்குக் காரணம், வெறுமனே அறிவுலக முகமூடியை அணிந்துகொண்டு பயமுறுத்தாமல் நவீன இலக்கியத்தில், சமூகத்தில், கலாச்சாரத்தில் தெளிவான பிரக்ஞையோடு வெளியாவது தான். முதல் ஐந்தாண்டுகளைத் தவிர்த்து அடுத்த ஐந்தாண்டுகளைப் (70-75) பார்த்தால், கணையாழியில் கஸ்தூரிரங்கன் அரசியல் கட்டுரைகள் எழுதி அகில உலக அரசியலை அலசி வாசகர்களுக்குக் கருத்து பரிமாறுவார். என். எஸ். ஜெகந்நாதன் ‘என்னைக் கேட்டால்’ என்று ஆரம்பித்து சமூக அரசியலைத் தெளிவுபடுத்துவார். ஸ்ரீரங்கம் எஸ். ஆர். விஷயங்களை விவாதப் பொருளாக்குவார். பெரியவர் க. நா. சு. கவிதையில் சுயசரிதை சொல்வார். வைதீஸ்வரனும், தி. சோ. வேணு கோபாலனும், பாலகுமாரனும், கல்யாண்ஜியும், சேவற்கொடியோனும் புரியும்படியான புதுக்கவிதை படைப்பார்கள். தி. ஜா. ரா., இ. பா. பிரச்னைக் கதைகளை எழுதி வாசகர்களைத் திணறடிப்பார்கள். ஆதவன், அசோகமித்திரன், அம்பை, வண்ணநிலவன், ராஜரங்கன், சிவசங்கரா, தி. சா. ராஜு அறிவும் உணர்வும் எதார்த்த சூழ்நிலையும் கலந்து கதை படைப்பார்கள், ஜெயந்தன், அம்ஷன்குமார் நாடகத்தில் புதுமுயற்சி செய்வார்கள். முஸ்தபா, காஸ்யபன் சீண்டி விளையாடுவார்கள். டென்னிஸ் வீரர் பற்றிய கட்டுரையென்ன, எம். ஜி. ஆர். பேட்டியென்ன, அனந்துவுடைய நாடக உலக அறிமுகம், விமர்சனம் என்ன—அந்தக் கணையாழிதான் எவ்வளவு ஆத்மார்த்தமானது எவ்வளவு இதமானது ! ‘சிலி‘யில் ஜனநாயகக் கொலை நடந்தால் கணையாழி கருத்து சொல்லும். இந்தியப் பாராளுமன்ற அரசியலமைப்பின் பலம், பலஹீனம் பற்றி அரசியல் கட்சி நிலவரங்களோடு சேர்ந்து புள்ளி விவரம் தரும். இரு தள உலகில் குறை போஷாக்குத் தன்மை, ஏர்முனை என விஞ்ஞான ஆய்வுகளைக் கட்டுரையாகக் கொடுக்கும். இத்துணை அளவிற்கு சமுகப் பொறுப்புணர்ச்சியோடு கருத்துப் பரிமாற்றம் செய்து ஆத்மார்த்தமான இலக்கியத் தேடலுக்கு, ரசனைக்கு அடியெடுத்துக் கொடுத்தது.

75 - 80 என்று பார்த்தால், இதற்கு முந்தைய ஐந்தாண்டுகளின் கனத்திற்குக் குறையாமல், புதிய சங்கதிகளும், புதிய எழுத்தாளர்களுமாய், மாதம் இருமுறை என சில காலம் வெளியாகி அறிவிற்கும் ஆத்ம தேடலுக்கும் பெருந்துணையாக விளங்கியது. ஞானி, கௌடில்யர், பரந்தாமன் வினையான அரசியலை விகட பாஷையில் சொல்ல, சுஜாதாவும் இ. பா , வும் சயன்ஸ் ஃபிக்ஷன் எழுத, நாஞ்சில்நாடன், எ எச். கே. கோரி, லட்சுமி கண்ணன் கதை எழுத, மாலனும் மலர்மன்னனும் துணுக்குத் தர, கணையாழிக்குப் புதிய உற்சாகம் பிறந்திருந்தது. கோஷ்டிச் சண்டைகள் பெருத்திருந்த அந்தக் காலகட்டத்திலும் தான் எதிலும் சிக்கிவிடாமல் ( சில சமயம், முஸ்தபா கோர்ட் மார்ஷல் தவிர்த்து) தனி முத்திரையுடன் பொலிந்த அக்காலமே கணையாழியின் பொற்காலம்.

80க்கு மேல் கணையாழிக்குத் திடீரென்று வயதேறிவிட்டது. அரசியலிலிருந்து சந்நியாசம் வாங்கிக் கொண்டது. துணுக்குக் கச்சேரியை நிறுத்திக்கொண்டது. செய்திக் கட்டுரைகளைத் தவிர்த்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வந்து கொண்டிருந்த வரைபடங்கள் முற்றிலும் காணாமல் போய்விட வெறும் எழுத்து... எழுத்து... எழுத்து.

80 லிருந்து இன்றை வரை கணையாழியைப் பொத்தாம் பொதுவாய்த் தேக்க காலம் எனப் பொதுவாய் சொல்லக் கூடாது என்றாலும், வெறுமனே கதைகள், கவிதைகள் எனப் பக்கங்களை நிரப்பிவிட்டு, வாசகனைப் பிரக்ஞையற்ற ஒருவித மாயைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது ( ஒருவேளை தீவிரமான இலக்கியப் பத்திரிகைக்கு இதுதான் அடையாளமோ ! ).

83-84-ல் பிரசுரமான போட்டிக்கான நெடுங்கதைகளான அ. நாகராசனின் ‘கொடுகொடியாட்டம்‘, ம. வே. சிவக்குமாரின் ‘கடைச்சங்கம்,‘ சார்வபௌமனின் ‘தோப்பில் தனிமரம்,‘ விட்டல்ராவின் நெடுங்கதை மற்றும் அநந்தநாராயணனின் ‘யக்ஞம்‘ என வெற்றிப்பட்டியலில் கடைசியாக 20 ஆண்டு நிறைவிதழில் தி. ஜா. ரா. நினைவார்த்த போட்டிக் கதையான விசாலாட்சியின் நெடுங்கதை அனைத்தும் பிராமண சமுதாயத்தின் கழிவிரக்கங்களை வெளிக்கொட்டும் ஒரு தொட்டியாய் கணையாழியை உபயோகப்படுத்திக் கொண்டுள்ளவைதான். காகுத்தன் எழுதியிருந்த ‘இப்படி‘ மரபுகளால் மன்னிக்க முடியாத—ஆனால் மரபிற்கெல்லாம் உயிர் கொடுக்க விரும்பாத எதார்த்தமான எதிர்மறைக் கருத்துக்களை வெளிப்படுத்தியதால் ஒரு அந்தஸ்து பெறுகிறது. யன்மே மாதா எழுதி மந்திரக்கோல் வீசிய ம. ந. ராமசாமியின் ‘மாதே ஸ்வதந்திர தேசம்‘ ஆக்க பூர்வமான சமகாலத்து எழுத்து என்ற வகையில் பாதுகாப்பாகப் படிக்க வேண்டியது. இளம் கம்யூனிஸ்டுகளுக்கு பூச்சாண்டி காட்டும் வேலையைச் சரியாகவே செய்துள்ளார்.

80க்கு மேல் வந்த கதைகளில் சமகால சமூக அரசியல் பிரக்ஞையைக் கதையின் பின்னணிக் கருவாகக் கொண்டு படைக்கப்பட்ட கணையாழி நாவல்கள் செ. யோகநாதன் எழுதிய ‘இரவல் தாய்நாடு‘, ரவீந்திரனின் ‘ரத்தம் ரத்தம் கொள்ளும்‘ இரண்டும் சிறப்பான முயற்சிகள்; அவ்வப்போது கணையாழி சிறப்பாக இருந்தாலும், தன்னை கதை, கவிதைகளுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் நெருப்புக் கோழித்தனம் கணையாழியின் அறிவார்த்தமான வாசகர்களுக்கு உடன்பாடானதாக இருக்காது.

கணையாழி கவிதைகள் (தற்சமயம்) பற்றிச் சொல்லுமிடத்திலும் கணையாழி அக்டோபர் 73 தலையங்கத்தை நினைவுகூர வேண்டியுள்ளது. கணையாழி அலுவலகத்தில் குப்பைக் கூடைகள் பெருகிவிட்டன. புதுக் கவிதை எப்படி இருக்கவேண்டும் என்று தெரியாமல் இருப்பதற்கு நியாயமே இல்லை (கணையாழிக்கு).

கடைசியாக ஒன்று, கணையாழியின் ஆரம்பகால முதல் இன்றைய வரை தொடர் வாசகர்களாய் இருக்கும் எங்களைப் போன்ற வாசகர்களை நடைபழக்கும் பெருமை கணையாழியைச் சாரும். தற்சமயம் ஏற்பட்டுள்ள தொய்வினை நீக்கி, கணையாழி வெறும் ‘பிராமணப் பொட்டைப் புலம்பல்‘ மட்டும் அல்ல. சகல தரப்பு அறிவுலக வாசகர்களுக்கும் பொறுப்பு என்று சொல்லக்கூடிய பொறுப்பு கணையாழிக்கு உண்டு— மேட்டுப் பாளையம் ஜெயச்சந்திரன்.”

கணையாழியில் வாசகர்கள் கடிதம் எப்பவுமே சுவாரஸ்யமான அம்சமாகும். அந்தப் பகுதியில் தென்படுகிற அபிப்பிராய சுதந்திரம் வெகுவாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. தரமான வாசகர்கள் தங்கள் சிந்தனைகளை தாராளமாகப் பரிமாறிக் கொள்கிறார்கள். எனவே இலக்கியம், சமூகம், அரசியல் முதலிய பல்வேறு விஷயங்கள் பற்றியும் சூடான, சுவையான, அறிவார்ந்த அபிப்பிராயங்களையும், சர்ச்சைகளையும் இந்தப் பகுதியில் காணமுடிகிறது. கடிதங்கள் பெரும்பாலும் விரிவாகவே எழுதப்படுகின்றன.

கணையாழியில் அவ்வப்போது சில தனிப்பகுதிகள் இடம் பெற்றிருக்கின்றன. அவை ‘இன்ட்ரஸ்டிங் அன்ட் இன்பர்மேட்டிவ்‘ என்ற தன்மையில், ரசமானவையாகவும் பலரகமான தகவல்களைத் தருவனவாகவும் அமைகின்றன. ஜன்னல்— சச்சிதானந்தன், சுகிர்தராஜாவின் ‘லண்டன் குறிப்புகள்‘, இந்திரா பார்த்தசாரதியின் ‘வார்ஸா டயரி‘, சுஜாதாவின் ‘கடைசிப் பக்கம்‘, டெக்ஸன் எழுதும் அமெரிக்கா பற்றிய தகவல்கள், அசோகமித்திரன் பக்கங்கள், ஆர். முஸ்தபாவின் ‘உள்ளது உள்ளபடி‘ ஆகியவை இவ் வகைப்பட்டவை.

க. நா. சுப்ரமண்யம் ஆங்கிலத்தில் எழுதி தேவகி குருநாத் தமிழாக்கிய ‘பத்து சிறந்த இந்திய நாவல்கள்‘ என்ற கட்டுரைத் தொடரும் குறிப்பிடத்தகுந்தது.

சிறிது காலம், நல்ல புத்தகங்கள் பற்றி அவற்றை ரசித்தவர்கள் விரிவாக எழுதிய கட்டுரைகளை கணையாழி பிரசுரித்து வந்தது. இலக்கிய வாசகர்களுக்கு உதவக்கூடிய கட்டுரைகளாக அவை அமைந்திருந்தன.

ராஜம் அய்யரின் ‘கமலாம்பாள் சரித்திரம்‘ நாவலை கணையாழி தொடர்கதையாகப் பிரசுரித்தது. தி. ஜானகிராமனின் மரணத்துக்குப் பின்னர், அவருடைய மிகப் பெரிய நாவலான ‘மோகமுள்‘ ளைத் தொடர்ந்து மறு பிரசுரம் செய்து வந்தது.

ஜானகிராமனின் ‘மரப்பசு‘, ‘நளபாகம்‘ நாவல்கள் கணையாழியில் தொடர்கதைகளாக எழுதப்பட்டவைதான்.

அசோமித்திரன் படைப்புகளும் தண்ணீர், பதினெட்டாவது அட்சக் கோடு முதலியவை—கணையாழியில் தொடர்ந்து பிரசுரம் பெற்றுள்ளன. இந்திரா பார்த்தசாரதி நாவல்களையும் அது வெளியிட்டது.

குறுநாவல் வளர்ச்சிக்குக் கணையாழி வெகுவாக சேவை செய்து வருகிறது. அது அளிக்கும் ஆதரவின் பலனாக பல நல்ல குறுநாவல்கள் ஆண்டுதோறும் வெளிவருகின்றன.

கணையாழி எழுத்தாளர்களின் பத்திரிகையாக வளர்ந்து வந்திருக்கிறது என்று சொல்லலாம். வளர்ந்து பெயர் பெற்றுள்ள எழுத்தாளர்களும், வளர்ந்து கொண்டிருக்கும் இளைய எழுத்தாளர்களும், வளர்ச்சி பெற விரும்புகிற புதிய எழுத்தாளர்களும் கணையாழியில் கதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதியிருக்கிறார்கள், எழுதி வருகிறார்கள்.

ஆகவே, பல்வேறு ரகமான எழுத்துக்கள் கணையாழியில் இடம் பெறுகின்றன. கலைத்தரமான படைப்புகளும், சோதனை ரீதியான எழுத்துக்களும் அதில் காணப்படுகின்றன.

கணையாழி ஆசிரியர் கி. கஸ்தூரிரங்கன் புதுக் கவிதை வளர்ச்சியில் அக்கறை உடைய ஒரு கவிஞராக இருப்பதால், கணையாழி கவிதை முயற்சிகளுக்கு ஆரம்பம் முதலே, ஊக்கமும் உற்சாகமும் காட்டி வருகிறது. ‘எழுத்து‘, ‘கசடதபற’ வழிப்பட்ட கவிதைகள்—தனி மனித உணர்வுகள், மனப்பதிவுகள், அக உளைச்சல்கள் முதலியவற்றை அடிப்படையாக்கிக் கவிதை படைக்க முயல்வோரின் எழுத்துக்கள், கணையாழியில் வருகின்றன.

அவ்வப்போது கணையாழி புதிய திசைகளில் தனது கவனத்தைச் செலுத்த ஆசைப்படுகிறது.

உதாரணமாக, ஒரு சமயம் அது இப்படி ஒரு சிந்தனையை எழுப்பியது. ‘விஞ்ஞானத்தின் தொழில்நுட்பம், நிர்வாக இயல், பொறிஇயல், கணிதம் போன்ற துறைகளிலும்தான் நூற்றுக்கணக்கான மேதைகள் நம் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள், தோன்றி வருகிறார்கள். ஆனால் இவர்கள் படிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கிற இலக்கியம், பார்க்கிற சினிமா, கேட்கிற இசை, இவற்றைக் காணும்போது, இவ்வளவு மேதையும் அறிவுப் பிரகாசமும், பாமர ரசிப்பும் எப்படி ஒரே உள்ளத்தில் சகவாழ்வு வாழ்கின்றன என்று பிரமிக்கத் தோன்றுகிறது. இதற்கு யார் பொறுப்பு ? இவர்களை உற்பத்தி செய்கிற பள்ளிக்கூடமா, கல்லூரியா, பல்கலைக்கழகமா, பெற்றோர்களா, சமூகச் சூழலா?

இந்தச் சிந்தனையின் பக்கம் வாசகர்களின் கவனத்தைத் திருப்பி, அவர்களைச் சிந்திக்கத் தூண்டியது. ‘விஞ்ஞான மேதைகள்—நிபுணர்கள் மாணவர்கள் பலர் பாமரமான இலக்கியம், இசை, சினிமா, நாடக, நடனங்களைத்தான் ரசிக்கிறார்களா? இது உண்மையா? உண்மையானால் காரணம் என்ன?’ என்று கேட்டு, விஞ்ஞானத்தையே தங்கள் வாழ்வின் முக்கிய சிந்தனை—தொழிலாகக் கொண்ட இளம் வாசகர்களிடம் அபிப்பிராயங்களை எழுதி அனுப்பும்படி கேட்டது.

இப்போது ‘ஸ்வச்சித் சிந்தனைகள்‘ என்ற இயக்கத்தில் கணையாழி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

‘நல்ல குடிமகனாக இருக்க விரும்பும் சிந்திக்கத் தெரிந்த தனி மனிதன், நால்வகைப் பிரச்னைகளின் விளிம்பில் வாழ்ந்து கொண்டு பெரும்பகுதி மக்கள் பசியிலும் அறியாமையிலும் பிணைபட்டுச் சமூகமே ஊழல் சக்தியாகச் சீரழிந்து வருவதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியாது.

நாட்டின் நால்வகைப் பிரச்னைகளும் தீரவேண்டுமென்றால், இப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியாமல் வளர்ந்து வரும் தற்போதைய அமைப்புகளை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி, ஏழை— பணக்காரர் வித்தியாசமின்றி எல்லோருக்கும் சமவாய்ப்பு, நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளைப் பெருக்கும் விதிமுறைகள், வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி, சாதிசமய இன வேறுபாடுகள் ஒழிந்த ஒருமித்த சமூகம், சுத்தமான காற்று, குடிநீர், போதிய உணவு, குடியிருப்பு முதலான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டம்—இவை எல்லாவற்றையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய இயக்கம் தேவை.

முதல் கட்டமாக ஒரு சிந்தனை இயக்கத்தைத் துவக்கி, ஊழல், பசி, அறியாமை, பிணி இந்நால்வகை அசுரப் பிரச்னைகளை எதிர்த்து போராடுவோமாக அதற்காக, சிந்திக்கத் தெரிந்தவர்களின் அணியை ஒன்று திரட்டும் முயற்சிக்குக் கணையாழி தீவிர ஒத்துழைப்புத் தர முன்வந்திருக்கிறது.